Thursday, October 15, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 6

மான்சிக்கு அன்று காலையிலிருந்து நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்து துக்கத்தை அதிகப்படுத்தியது, தன் காதல் பொய்த்துப் போனதை எண்ணி அவள் உள்ளம் பெருங்குரலெடுத்து கதறியது, பொய்யாய் வேடமிட்டு தன்னை ஏமாற்றிய சத்யனை கொல்லாமல் வந்ததை நினைத்து தன்மீதே கோபம் வந்தது மான்சிக்கு

அந்த டாக்டரும் சத்யனும் பேசிக்கொண்டதை வைத்து அவனுடைய கேவலமான நடத்தை மான்சிக்கு வெட்டவெளிச்சமானது, இவளைப் போல பலபெண்களை அந்த மருத்துவமனைக்கு அபார்ஷன் செய்வதற்காக அவன் அழைத்து வந்தான் என்றே நினைப்பே மான்சிக்கு அடிவயிறு வரை குமட்டியது, இப்படிப்பட்ட கேவலமான ஒருவனுக்காக ஏங்கி தவித்து தன் உடலையே அவன் காலடியில் வைத்த தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும் என்று ஆத்திரமாக நினைத்தாள்

ஆத்திரத்துடன் கம்பியில் குத்திய மான்சி, ம்ஹூம் என் அம்மா செய்த அதே கேவலத்தை நானும் செய்யமாட்டேன், மாணிக்கத்தோட மகள் மானமுள்ளவன்னு ஊர் சொல்லனும், நிச்சயம் என் உயிரைவிட்டு என் அப்பாவோட மானத்தை காப்பாத்துவேன், என்று மனதுக்குள் சபதமெடுத்தாள் மான்சி



கம்பியில் கவிழ்ந்திருந்த மான்சியின் தலையை யாரோ தொடுவதுபோல் இருக்க திகைப்புடன் சராலென நிமிர்ந்தாள் மான்சி,

அந்தப்பெண் தான் , கையில் தண்ணீர் பாட்டிலும் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுமாக நின்றிருந்தாள், “ நான்தான் பாப்பா பயந்துட்டியா? இந்த பிஸ்கட்டையாவது தின்னு தண்ணி குடி தாயி, உன்னைவிட்டுட்டு சாப்பிட எனக்கு மனசே வரலை தாயி அதான் வாங்கியாந்தேன்” என்று அந்தப்பெண் கெஞ்சினாள்

மான்சி அவள் முகத்தையேப் பார்த்துவிட்டு “ எனக்கு பிஸ்கட் வேனாம், தண்ணி மட்டும் போதும்” என்று தண்ணீர் பாட்டிலை வாங்கி திறந்து மடமடவென குடித்தாள்,

இதையாவது வாங்கிக்கொண்டாளே என்ற நிம்மதியுடன் அந்தப்பெண் நிம்மதியாக மூச்சுவிட்டு மான்சியின் பக்கத்தில் அமர்ந்தாள், சற்றுநேரத்தில் சாப்பிட போனவர்கள் அனைவரும் வர பஸ் கிளம்பியது

“ என் பேரு ராகினி, முன்னாடி என் பேரு துரைராசு, எனக்கு பழைய நடிகை ராகினிய ரொம்ப பிடிக்கும், அதான் இந்த பேர்,, உன் பேர் என்னப் பாப்பா?”என்று ராகினி கேட்க

“ மான்சி” என்றுமட்டும் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் மான்சி, பஸ் சீரான வேகத்தில் செல்ல களைப்பினால் மான்சிக்கு உறக்கம் வந்தது, தூங்கியபடி பக்கவாட்டில் சரிந்தவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள் ராகினி,

பஸ் பழனியை நெருங்கும் போது டமால் என்ற சத்தத்துடன் டயர் வெடிக்க, பஸ் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது, பயணிகள் அனைவரும் இறங்கிவிட, பஸ் நின்றதுமே தூக்கம் கலைந்த மான்சி, ராகினி டயர் வெடித்த விபரம் சொன்னதும் தன் பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள், சற்றுத்தள்ளி இருந்த ஆலமரத்தடியின் வேரில் சென்று அமர்ந்து மடியில் பேக்கை வைத்து அதில் கவிழ்ந்து, அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாள்

பயணிகள் அனைவரும் டிக்கெட்டை கொடுத்து மீதி பணத்தை வாங்கிக்கொண்டு வேறு வேறு பஸ்களை நிறுத்தி ஏறிக்கொண்டு கிளம்ப, ராகினி மட்டும் மான்சியைப் பார்த்தபடி தயங்கி ஓரமாக நின்றாள்,

ஒரு முடிவுடன் எழுந்த மான்சி அங்கிருந்து எதிர்திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் , அவள் போன திசையில் ரயில் தண்டவாளம் தெரிய ரோட்டைவிட்டு இறங்கி முள் புதர்களில் நடந்து தண்டவாளத்தில் ஏறினாள்,, ஏறியவள் தண்டவாளத்தின் நடுவே விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள், அவளைத் தடுக்க அக்கம்பக்கம் யாருமில்லை, அப்போது அவளுக்குப் பின்னேயிருந்து ரயில் வரும் ஓசை கேட்க, சட்டென்று நின்று வரும் ரயிலை எதிர்கொள்வது போல திரும்பி கண்மூடி நின்றாள் 


ரயில் இவளை நெருங்க இன்னும் சில அடி தூரமே எனும்போது, ஒரு முரட்டுக் கரம் அவளை இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த புதரில் சரிந்தது, மான்சி சுதாரித்துக்கொண்டு எழுவதற்குள் ரயில் அவர்களை கடந்து போய்விட்டிருந்தது, யார் தன் மரணத்தை தடுத்தது என்று ஆத்திரத்துடன் திரும்பி மான்சி அங்கே ராகினியைப் பார்த்து “ ஏங்க என் பின்னாடியே வர்றீங்க?, என்னை நிம்மதியா சாக விடமாட்டீகளா?” என்று கேட்க

“ ஏன் பாப்பா ஆத்தா அப்பன், கூடப் பொறந்தவக எல்லாரும் ஒதுக்கி வச்ச நானே தன்மானத்தோட உழைச்சி வாழுறப்ப, நல்ல நிலையில இருக்குற நீ ஏன் பாப்பா சாகனும், ஆரம்பத்துல இருந்தே எனக்கு உன்மேல சந்தேகம், அதான் பின்னாலேயே வந்தேன், கொஞ்சநேரத்துல என்ன காரியம் பண்ணிருப்ப பாப்பா” என்று வருத்தமாக ராகினி கூற

மான்சி முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள், அவளை நெருங்கிய ராகினி “ பாப்பா மொதல்ல இங்கருந்து போயிடனும், இல்லேன்னா ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிஞ்சு தேடி வருவாங்க, வா பாப்பா அந்த பக்கமா போய் பேசலாம்” என்று மான்சியின் தோளில் கைவைதது தள்ளியபடி , கீழே கிடந்த மான்சியின் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் ராகினி

கொஞ்சதூரம் போனதும் ஒரு ஓடையின் அருகே இருந்த மரத்தடியில் அமர்ந்து “ இப்ப சொல்லு பாப்பா என்ன நடந்தது, ஏன் இந்த முடிவுக்குப் போன,, நீ சொல்லலேன்னா நான் உன்னையவிட்டு எங்கயும் போகமாட்டேன், உனக்கு காவலா இங்கயே உட்கார்ந்திருப்பேன்” என்று கூறிவிட்டு சம்மனமிட்டு அமர்ந்துகொண்டாள் ராகினி

சிறிதுநேரம் அமைதியாக இருந்த மான்சி பிறகு மடைதிறந்த வெள்ளமாக தன்னைப்பற்றிய சகலத்தையும் சொல்லிவிட்டு கதறலுடன் முகத்தை மூடிக்கொள்ள.. மான்சியின் கதை கேட்டு ராகினியும் அழுதாள், சத்யனை கேவலமான வார்த்தைகளால் திட்டி “ சனியன் புடிச்சவன் நல்லகதிக்கே போகமாட்டான்” என்று சாபமும் வழங்கினாள்

பிறகு ஒரு தீர்மானத்தோடு எழுந்த ராகினி “ இதோபார் தாயி என் கூட என் வீட்டுக்கு வா, உன்னை தங்கமா வச்சு நான் காப்பாத்துறேன், நான் தனிக்கட்டை தான் எனக்குன்னு யாருமில்லை, நேத்து மாசானியம்மன் கோயிலுக்கு போய்ட்டு இன்னிக்கு பஸ்ல வரும்போது நீ எனக்கு கிடைச்ச, இது அந்த சாமி பண்ண ஏற்பாடு மாதிரிதான் எனக்கு தோனுது, என் கூட வா தாயி, நான் உழைச்சு உன்னையும் உன் வயித்துல இருக்குற புள்ளையையும் காப்பாத்துறேன்” என்று குரலில் உறுதியுடன் ராகினி மான்சியை கைநீட்டி அழைக்க

மான்சி அழுகையை நிறுத்திவிட்டு விழிகளில் வியப்புடன் ராகினியையே பார்த்தாள் ..

“ என்ன தாயி அப்படி பார்க்கிற, நாங்கல்லாம் கடவுளோட அவதாரம், அர்த்தநாரீஸ்வரர் அவதாரம், எங்களால எதுவும் முடியும், என்னை நம்பி வா தாயி இனி உன் வாழ்கையில நல்லதே நடக்கும், இனிமே உனக்கு ஆயி அப்பன், அக்கா தங்கச்சின்னு அத்தனை உறவும் நான்தான் எதுக்காகவும் கலங்காத தாயி, எங்கள மாதிரி பிறவிங்க பொண்ணா வேஷம் போட முடியுமே தவிர ஒரு பொம்பளையா புள்ளைப் பெத்துக்க முடியாது, நீ எனக்கு அந்த மாசானித் தாய் குடுத்த மகளா நெனைச்சுக்கிறேன், என்கூட தைரியமா வா தாயி” என்று ராகினி இருகரங்களையும் மான்சியை நோக்கி நீட்ட ,

மான்சி விழிகளில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்துவிட்டு “ நான் உங்ககூட வர்றேன் அம்மா, இவ்வளவு நாளா ஒரு கேவலமானவளுக்கு மகளா இருந்தேன், இனிமேல் உங்களைப் போல ஒரு உன்னதமான பிறவிக்கு மகளா இருக்கேன்” என்றபடி ராகினியின் கையைப்பற்றிக்கொண்டு எழுந்தாள் மான்சி

வயிற்றுப் பிள்ளையின் உபாதையால் மான்சிக்கு லேசாக தலைச் சுற்ற, ராகினி அவளை தன் தோளில் தாங்கிக்கொண்டு நடத்திச்சென்றாள், கீழ்வானில் சூரியனை மறைத்த மேகங்கள் விலகி சூரியன் சுள்ளென்று காய,மான்சியின் மீது வெயில் படாமல் தன் முந்தானையால் அவள்தலையை மூடி நிழல் தேடி அழைத்துப்போனாள் ராகினி 



மான்சியுடன் மெயின் ரோட்டுக்கு வந்த ராகினி அந்த வழியே வந்த ஒரு மினி பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி மான்சியுடன் ஏறிக்கொண்டாள், அந்த பஸ் பழனி பஸ்ஸ்டாண்டு வரை செல்லும் என்பதால், பழனி பஸ்ஸ்டாண்ட்க்கு இரண்டு டிக்கெட் வாங்கினாள் இருவரும் பஸ்ஸ்டான்டில் இறங்கி அங்கிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் பஸ்ஸில் ஏறி, ஒட்டன்சத்திரம் வந்தனர், அங்கே ஒரு ஆட்டோ பிடித்து கோடாங்கிபட்டி வந்தனர்,

கோடாங்கிபட்டியி்ல் அரசாங்கம் கட்டிக்கொடுத்த இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு ராகினியின் வீடு , தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்த ராகினி, மான்சியின் கையைப்பிடித்து “ சங்கடப்படாம உள்ள வா தாயி ” என்று அழைக்க,

மான்சி மெலிந்த புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள், இரவாகியிருந்ததால் உள்ளே நுழைந்ததும் லைட்டை போட்டுவிட்டு, மான்சிக்கு ஒரு பாயை எடுத்துப்போட்டு “ இதுல உட்காரம்மா” என்று கூறிவிட்டு மான்சியின் காலேஜ் பேக்கை ஒரு ஓரமாக வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த தடுப்பை நீக்கி உள்ளே போய் ஒரு சில்வர் பாத்திரத்தை எடுத்து வந்த ராகினி “ கண்ணு இதுக்கு மேல நாம சாப்பிட எதுவும் செய்யமுடியாது, சித்த நேரம் இரு பக்கத்துல ஒரு ஆச்சி இட்லி விக்குது அங்க போய் இட்லி வாங்கிட்டு வர்றேன், நீ பயப்படாம இரு , என் வீட்டுக்குள்ள எவனும் நுழைய மாட்டான்” என்று உறுதியாக கூறிவிட்டு மான்சியின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ஓடினாள் ராகினி

அதிகமான பஸ் பயணத்தில் ரொம்ப களைத்துப்போன மான்சி அந்த பாயிலேயே படுத்துக்கொண்டாள், சற்று நேரத்தில் கண்ணயர்ந்தவளை ராகினி வந்து எழுப்ப மெதுவாக எழுந்து அமர்ந்தாள்

“ தாயி அந்த கதவை திறந்தா பின்னாடி தோட்டமும் பாத்ரூமும் இருக்கு, நீ போய் முகம் கழுவிட்டு வாம்மா, நான் இட்லியை எடுத்து வைக்கிறேன், சாப்பிட்டு உடனே படுத்துக்கோ” என்று ராகினி ஒரு தாயின் கருணையோடு கூற

அந்த கருணையும் மான்சியின் நெஞ்சை கனக்க வைத்தது, சரி என்று தலையசைத்து விட்டு எழுந்து கதவை திறந்து தோட்டத்திற்கு போனாள், ஓணான் கொம்பில் வேலியிட்டு, ஒரு எலுமிச்சை மரம், இரண்டு வாழைமரம், வேலியோரம் குட்டையான இரண்டு தென்னைமரம், ஒரு செம்பருத்தி செடி, இரண்டு ரோஜா தொட்டி, இவற்றுக்கு நடுவே பெரிய தண்ணீர் தொட்டி, என மிகச் சிறிய தோட்டம், வீட்டை ஒட்டி இரும்பு கதவு போட்ட ஒரு பாத்ரூம், மான்சி அந்த கதவை திறந்து உள்ளே போனாள், அரசாங்கம் கட்டிக்கொடுத்த டாய்லெட்டுன் கூடிய பாத்ரூம், மிக சுத்தமாக இருந்தது , மான்சி பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு உள்ளே வந்தபோது தட்டில் சூடான இட்லியை வைத்துவிட்டு காத்திருந்தாள் ராகினி

“ வா தாயி சூடு ஆறுரதுக்குள்ள சாப்புடு, உன் வாய்க்கு நல்லாருக்கும்னு மொளாகாச் சட்னி வாங்கிட்டு வந்தேன்” என்று ராகினி கூற,

எங்கே உணவு இறங்கப் போகிறது என்று மான்சி வேண்டா வெறுப்பாகத்தான் அமர்ந்தாள், ஆனால் மிருதுவான இட்லியும், காரமான மிளகாய்ச் சட்னியும் எப்போதும் மூன்று இட்லி சாப்பிடும் மான்சியை ஐந்து இட்லியாக விழுங்க வைத்தது,

சாப்பிட்டு முடித்தவளை பார்த்து “ நீ தட்டுலயே கை கழுவிட்டு படுத்துக்க தாயி, தட்டை நான் கழுவிக்கிறேன், ஆனா இன்னிக்கு மட்டும் தான் சாப்புட்டதும் தூங்கவிடுவேன், நாளையிலேருந்து சாப்பிட்டு கொஞ்சநேரம் நடக்கனும், அப்புறமா தான் தூங்கனும், என்னடா கண்ணு பாக்குற, புள்ளத்தாச்சி பொண்ணு சாப்புட்டதும் தூங்குனா சீரனமாகாது கண்ணு அதேன் சொல்லுதேன்” என்று ராகினி சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்க,

மான்சி ராகினி பார்க்க முதன்முறையாக மனநிறைவோடு புன்னகை செய்து “ சரிக்கா, இனி நீங்க சொன்னது மாதிரியே செய்றேன்” என்றாள்


ராகினியும் சாப்பிட்டு முடித்து அந்த அறையின் மற்றொரு மூலையில் பாயை விரித்து படுத்துக் கொண்டாள், ஆனால் வரும்போது பஸ்ஸில் உறங்கியதாலோ என்னவோ இருவருக்கும் அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வரவில்லை
ராகினியின் பக்கம் திரும்பி படுத்த மான்சி “ அக்கா என்னையப் பத்தி எல்லாமே சொல்லிட்டேன், நீங்க உங்களைப்பத்தி எதுவுமே சொல்லலை, இதுதான் உங்க சொந்த ஊரா?” என்று கேட்க

பாயிலிருந்து எழுந்து அமர்ந்த ராகினி “ இல்ல கண்ணு எனக்கு சொந்த ஊரு மானாமதுரை, அப்பா அம்மா கூடப்பிறந்தவக நாலுபேர்னு பெரிய குடும்பம், சின்ன வயசுலேயே நான் இந்த மாதிரி மாறுனதும் என்வீட்டுல என்னைய ரொம்ப கேவலமா பார்க்க ஆரம்பிச்சாக, வெளிய விடாம வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சாங்க, நான் எப்படியோ தப்பிச்சு திருட்டு ரயிலேறி திண்டுக்கல் வந்தேன், அங்கருந்து பஸ்ல ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வந்து வேலை கேட்டேன், அங்க காய்கறிக் கடை வச்சிருந்த ஒரு பாய் என்மேல எரக்கப் பட்டு காய்கறி மூட்டை தூக்குற வேலை குடுத்தாரு, நாலு வருஷம் அங்கயே இருந்தேன், எல்லாரும் மொதல்ல என்னை பாத்து கிண்டல் பண்ணாக, அப்பறம் போகப்போக பழகி போச்சு, மார்கட்டுக்கு வெளிய சோத்து கடை வச்சிருந்த ஒரு பாட்டிகிட்ட காசு குடுத்து சாப்பிட்டு கிட்டு இருந்தேன், அந்த பாட்டியோட ஊர்தான் இந்த கோடாங்கிபட்டி, ஒருநா பாட்டிக்கு மேலுக்கு முடியாம போச்சு, சொந்த ஊருக்கு போறேன்னு சொல்லி எல்லாத்தையும் அள்ளிகிட்டு இங்க வந்துருச்சு,

"அப்புறம் இங்க வந்து நாலஞ்சு வரும் இட்லி கடை போட்டுகிட்டு உசிரோட தான இருந்துச்சு, நானும் அது கூடவே இருந்து கடை வேலையெல்லாம் பாத்துக்குவேன், பொறவு ஒரு நா பாட்டி செத்து போச்சு, சாவுறதுக்கு முன்னால இந்த இடத்தை என்பேர்ல எழுதி வச்சுட்டு போயிருச்சு, அப்புறம் நானும் இந்த ஊரைவிட்டு போகலை, பாட்டிகிட்ட கத்துகிட்ட சமையல் வேலை எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு, இந்த ஊர் சனம் எந்த நல்லது கெட்டதுக்கும் என்னை ஒதுக்கி வைக்கலை, பொண்ணுக சமைஞ்சாலும் சரி, கல்யாணம் பண்ணாலும் சரி எல்லாத்துக்கும் என்னைய கூப்பிடுவாக, வளைகாப்பு, பிரசவம்னு எதுவும் நானில்லாத நடக்காது, இந்த ஊரு பஞ்சாயத்து தலைவர் என்மேல இரக்கப்பட்டு அரசாங்க வீடு கட்டி குடுத்தாரு, ஊர்ல ஏதாவது விசேஷம்னா சாப்பாடு செய்ய போவேன், இல்லேன்னா கிராமத்து வேலைகள் செய்வேன், எனக்கு என்னைப்போல இருக்குறவக மாதிரி ரயில்ல பஸ்ல கைதட்டி பிச்சை எடுக்க தெரியாது, வேற எந்த அசிங்கத்தையும் செய்யத் தெரியாது, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நல்லா உழைக்கனும் சாப்பிடனும், கோயில் குளம்னு சுத்தனும் அம்புட்டுதான், ஆண்டவன் புண்ணியத்தால இன்னிய வரைக்கும் வயித்து பொழப்புக்கு எந்த கொறையும் இல்ல தாயி, இனிமேலும் வராம அந்த பழனி முருகன் என்னைய காப்பாத்துவான், இனி என்னோட சேத்து உன்னையும் அந்த பழனி முருகன்தான் காப்பாத்தனும்” என்ற ராகினி இருந்த இடத்தில் இருந்தே பழனி இருக்கும் திசையை நோக்கி பெரிதாக ஒரு கும்பிடு போட்டாள்..

ராகினியின் கதையை கேட்டு மான்சிக்கு வருத்தமாக இருந்தது, பெத்தவங்களுக்கு எப்படிதான் மனசு வந்தது இவங்களை வெறுத்து ஒதுக்கினாங்களோ? என்று மான்சி நினைக்கும்போதே ‘ ஏன் உன் தாயில்லையா?’ என்று அவள் மனம் அவளை கேள்வி கேட்டது,


மான்சியின் முகம் வாடுவதை கண்டு, “ ஏன் கண்ணு நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்காத, இந்த ஊர் தலைவரு ரொம்ப நல்லவரு, எனக்குன்னு கேட்டா எதாவது செய்வாரு, அவர்கிட்ட சொல்லி அந்த பயமேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்து இழுத்துட்டு வந்து உன் கழுத்துல தாலி கட்ட வைக்கலாமா?” என்று ராகினி கேட்க

மான்சி சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு “ இல்லக்கா வேண்டாம், தப்பு என்மேலதான், அவன் ஈனபுத்தியை கண்டுபிடிக்க தெரியாம போய் மாட்டுனது நானு, ஒருநாளும் அவனா என்னை தேடி வரலை, அவனைத்தேடி என்னை தான் வரவழைச்சான், அதோட எப்போ அவன் என்னைய கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லேன்னு சொன்னானோ, அப்பவே நான் அவனை மனசார வெறுத்துட்டேன், இனிமேல் அவன்கூட எனக்கு வாழ்க்கை வேனாம், அவன்கூட படுக்குற பொண்ணுக்கெல்லாம் இவனோட குழந்தை பிறந்திட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்துருக்கான், ஆனா நான் எப்படியாவது என் வயித்துல இருக்குற புள்ளை நல்லபடியா பொத்து அந்த கோடீஸ்வரன் வீட்டு மொத வாரிசை எங்கயாவது அப்பன் பேர் தெரியாத அனாதையா வளர விடனும், அதுதான் நான் அவனுக்கு குடுக்குற தண்டனை, அந்த பணக்காரனை எதிர்த்து என்னால ஜெயிக்க முடியாது அக்கா, இதுதான் எனக்கு தெரிஞ்ச வழி, நாளையிலேருந்து நீங்க போற வேலைக்கே என்னையும் கூட்டிட்டுப் போங்க, நானும் உழைக்கிறேன்” என்று மான்சி உறுதியாக கூறினாள்

“ ஆமா வயித்துல புள்ளைய வச்சுகிட்டு போய் உழைக்கப் போறாளாம், அட நீவேற போம்மா” என்ற ராகினி மறுபடியும் பாயில் படுத்துக்கொண்டு “ கண்ணு என் உடம்புல வலு இருக்கு உழைச்சு உனக்கும் உன் பிள்ளைக்கும் கஞ்சி ஊத்துறேன், என்னிக்காவது என்னால முடியலைன்னு என் தலை சாஞ்சா அன்னிக்கு நீ வேலைக்கு போ,, அப்புறம் காலையில ஊருசனம் உன்னைய பாத்து யாருன்னு கேட்டா, என் அக்கா மக, ஊருக்குப் போய் கூட்டியாந்தேன்னு சொல்லுறேன், உன்னைய கேட்டா நீயும் அதையே சொல்லு, இப்போ படுத்து தூங்கு பாப்பா” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடினாள் ராகினி

மான்சிக்கு தான் அவ்வளவு சீக்கிரமாக தூக்கம் வரவில்லை, இந்த மூன்று மாத கால வாழ்க்கை நெஞ்சில் மௌனப் படமாக ஓடியது, அன்று புரியாத பல அர்த்தங்கள் இன்று புரிந்தது, சத்யனின் பார்வைக்கான அர்த்தங்கள் புரிந்தது,, பிறகு அவன் விலகியிருந்து நடித்து தன்னை வரவழைத்து கட்டிலில் வீழ்த்தியதன் அர்த்தம் புரிந்தது, ஒரு கட்டத்தில் அவனே கதியென்று தன்னை மாற்றிய அவன் செயல்களின் அர்த்தமும் புரிந்தது, இறுதியாக இன்று காலையில் பிள்ளைக்கறி தின்னும் மருத்தவமனையில் நடந்த சம்பவங்களை நினைத்ததும் மான்சிக்கு ஃபேன் காற்றிலும் வியர்த்து கொட்டியது, தன்னைத் தேடியிருப்பானா? அல்லது சனியன் ஒளிந்தது என்று அந்த ஏமாளியை தேடி போயிருப்பானா?


தான் எவ்வளவு கேவலமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று மான்சிக்கு இப்போது புரிந்தபோது அந்த வேதனையின் தாக்கம் அதிகமாகவே அவளை பாதித்தது, அவன் எத்தனையோ நாள் மான்சியின் மடி சாய்ந்து உறங்கிய போதெல்லாம், ‘இவனால் இவன் வாழ்வில் நான் இல்லாமல் இருக்கமுடியாது’ என்று எவ்வளவு கர்வமாக எண்ணியிருப்பேன், இப்போ அத்தனையுமே பொய்யாப் போச்சே, என்று மனம் நொந்து அது மெல்லிய அழுகையாய் வெடித்தது.


நடு இரவில் மான்சியின் விசும்பல் ஒலி கேட்டு கண்விழித்த ராகினி பதறி எழுந்து மான்சியின் அருகில் வந்து அமர்ந்து “ அய்யோ கண்ணூ என்னம்மா இது நடு சாமத்துல அழுதுகிட்டு இருக்க?” என்ற ராகினி சமையல் தடுப்புக்குள் போய் சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து “ராசாத்தி எழுந்து கொஞ்சம் தண்ணி குடிம்மா? ” என்று மான்சியின் தோள் பற்றி எழுப்பி தண்ணீரை பருக வைத்தாள்

தண்ணீர் குடித்ததும் அழுகை அடங்க “ அக்கா உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேனா? என்னை ஏதாவது அனாதை விடுதியில கொண்டுபோய் சேர்த்துடுங்க அக்கா” என்று மான்சி விசும்பிக் கொண்டே சொல்ல ..

“ என்னா பாப்பா இப்புடி சொல்லிட்ட, உன்னைய எனக்கு கடவுள் குடுத்த மகளா நெனைக்கிறேன் பாப்பா, இன்னொரு வாட்டி அப்படியெல்லாம் பேசாத பாப்பா” என்ற ராகினிக்கும் இப்போது அழுகை வந்தது

“ இல்லக்கா அவனை நான் ரொம்ப விரும்பினேன், அவன் என்னை நல்லா ஏமாத்திருக்கான், ஆனா அதையெல்லாம் அப்போ கண்டுபிடிக்க தெரியாம மயங்கி கெடந்திருக்கேன், இப்போ அவன் சுயரூபம் தெரியும்போது என்மேல எனக்கே அருவருப்பா இருக்கு அக்கா, என் அம்மாவோட புத்திதான் எனக்கும் இருந்திருக்குன்னு நெனைக்கும் போது பட்ட அவமானம் இரண்டு பங்கா தெரியுது” என்று மான்சி தன்னையே வெறுத்து பேச..

மான்சியை தன் தோளில் சாய்த்த ராகினி “ அப்படியெல்லாம் பேசாத தாயி, நீ மனசுக்கு பிடிச்சவனுக்கு முந்தானை விரிச்ச அவனையே நெனைச்சு வாழ்றதுக்கும், பிடிக்காதவன் பிள்ளையா இருந்தாலும் அதை காப்பாத்த ஊரைவிட்டு ஓடிவந்த உனக்கும்,, புருஷன் செத்ததும் உடம்பு சுகத்தை தேடி பெத்த மகளை கூட மறந்து ஓடின உன் ஆத்தாளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது கண்ணு, நீ மனசை போட்டு குழப்பிக்காம படு, அந்த பழனி ஆண்டவன் நல்லதா ஒரு வழி காட்டுவான்” என்ற ராகினி மான்சியை படுக்கையில் கிடத்தி மெதுவாக தலையை வருட மான்சி சற்று நேரத்தில் உறங்கி போனாள்

ஆனால் ராகினி உறங்கவில்லை, இந்த புள்ளைக்கு ஏதாவது நல்ல வழி உண்டாக்கனுமே என்ற நினைப்போடு விழித்துக் கிடந்தாள்,

மறுநாள் காலையும் ராகினி அதே நினைப்புடனேயே எல்லா வேலையையும் முடித்துவிட்டு “ கண்ணு நீ சாப்புட்டு டிவியை வச்சு பாத்துகிட்டு இரு, நான் டவுனுக்கு போய் உனக்கு தேவையான உடுப்பெல்லாம் வாங்கிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு மறக்காமல் மான்சியின் உடை அளவுகளை குறித்து வாங்கிக்கொண்டு போனாள் ராகினி

அடுத்த இரண்டு மணிநேரத்தில் வீடு திரும்பிய ராகினி மான்சிக்கு இரண்டு சுடிதாரும், மூன்று நைட்டியும் சில உள்ளாடைகளும் வாங்கி வந்தாள் “ கண்ணு இப்போதைக்கு இதை போட்டுக்க பொறவு நெறைய துணிமணி வாங்கித் தாறேன்” என்று ஒரு தாயைப்போல் கரிசனையுடன் ராகினி கூற, மான்சி குழந்தை போல் சரியென்று தலையாட்டினாள்

மான்சி குளித்து உடை மாற்றிவிட்டு வரும்வரை காத்திருந்த ராகினி “ ஏன் பாப்பா நீ பனிரெண்டாவது படிச்சேன்னு சொன்ன, மேல காலேசுக்கு போய் ஒரு வாரம் தான் ஆச்சுன்னு சொன்ன, இப்போ நீ மேல படிக்க முடியுமா? ” என்று கேட்க..


ராகினியை ஆச்சர்யமாக பார்த்த மான்சி “ முடியும்க்கா, நான் ஜெராக்ஸ் சர்டிபிகேட் தான் அந்த காலேஜ்ல குடுத்தேன், ஒரிஜினல் எடுத்துட்டு வரச் சொன்னாங்க, அதுக்காக நேத்து காலையில என் பேக்குல ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு தான் வந்தேன், இப்போ என்கிட்ட தான் இருக்கு” என்று மான்சி கூறியதும்

“ சரி பாப்பா நீ இரு, நா போய் இந்த ஊரு தலைவரை பார்த்து ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன், அவரு நிறைய படிச்சவரு, ஏதாவது யோசனை சொல்வாரு அவருக்கு உன்னை மாதிரி ரெண்டு மக இருக்கு” என்று கூறிவிட்டு ராகினி மறுபடியும் வெளியே கிளம்பினாள்

அதன்பிறகு ஊர் தலைவரின் ஆலோசனைப் படி மான்சி கர்ப்பிணி என்பதால், வீட்டில் இருந்த படியே தபால் மூலமாக பட்டப் படிப்பு படிக்கட்டும், குழந்தை பிறந்து பெரிதான பிறகு சிறிது நாள் கழித்து மேல் படிப்புக்கு கல்லூரிக்கு சென்று வரலாம் என்று முடிவானது,

அவரே மான்சி படிக்க ஏற்பாடு செய்தார், அது மட்டுமின்றி மான்சிக்கு மாலை நேரங்களில் கிராம நூல் நிலையத்தில் லைப்ரரியன் வேலையும் போட்டு கொடுத்தார், முதலில் மான்சியையும் அவள் வயிற்றையும் ஒரு மாதிரியாக பார்த்த கிராம மக்கள், அதன்பிறகு மான்சியின் பரிதாப நிலைக்கு வருந்தி சகஜமாக பழக ஆரம்பித்தனர்,

ராகினி மான்சிக்கு பெரும் பாதுகாப்பாக விளங்கினாள், யாராவது இளவட்டங்கள் மான்சியை ஏளனமாக பார்த்து குறும்பு செய்தால் உதடு கிழிந்து ரத்தம் வருமளவுக்கு ஒரு அறைவிட்டு எவனும் மான்சியை நெருங்கா வண்ணம் பார்த்துக்கொண்டாள், மான்சி கர்ப்பத்தின் உபாதையால் கண்ணீர் விடும்போது, அவளை மடியில் சாய்த்து தாயானாள்,, அவளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றும் போது தோழியானாள்,, அவளை துரும்பும் தீண்டாமல் கவணிக்கும் விதத்தில் சகோதரியானாள், ஈனர்களின் பார்வையிலிருந்து மான்சியை காப்பதில் சகோதரனானாள், மான்சி தன் அனாதை அல்ல என்பதற்காக கடவுள் கொடுத்த உறவாக எண்ணினாள் ராகினி, மான்சியோ மொத்தத்தில் மான்சி செய்த முப்பிறவியின் பலன்தான் ராகினி இப்பிறவியில் மான்சிக்கு கிடைத்தது

மான்சி தனது கடந்த கால கசப்புகளை மறந்து, படிப்பில் கவனம் செலுத்தினாள், மாலை நேரங்களில் லைப்ரரியில் பிள்ளைகளோடு நிறைய புத்தங்களை படித்து உலக அறிவை வளர்த்துக்கொண்டாள், இரவுநேரங்களில் எழும் சத்யனின் நினைவுகளை அவன் துரோகத்தை மனதில் நிறுத்தி விரட்டினாள், முடிந்த அளவு அதில் வெற்றியும் கண்டாள்,

ஆனால் பிரசவநாள் நெருங்க நெருங்க ராகினி பெரும்பாலும் மான்சியை விட்டு நகராமல் அருகிலேயே இருந்தாள், கிராமத்து பெண்கள் சொன்ன கசாயங்களை வைத்து மான்சியை குடிக்க வைப்பதும், லைப்ரரி வரும் சிறு பிள்ளைகளுடன் அவளை நடைபயிற்சி செய்ய வைப்பதும் ராகினியின் அன்றாட வேலையானது,



ஒரு புதன்கிழமை நல்லிரவில் கொட்டும் மழையில் அந்த ஊரின் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மான்சியின் தவப்புதல்வன் , சத்யனின் வேண்டாத மகன், அழகான விக்ரகம் போல் வந்து பிறந்தான்,

மயக்கம் தெளிந்து பக்கத்தில் கிடந்த தன் மகனை கண்ட மாத்திரத்தில் மான்சிக்கு முதலில் நினைவுக்கு வந்தது சத்யன் தான், ‘ அடப்பாவி இந்த ரோஜாப்பூவையா மொட்டிலேயே கருக்கி நசுக்கப் பார்த்த’ என்று நெஞ்சு கொதித்தது,

மகனைப் பார்க்கப் பார்க்க மான்சியின் வைராக்கியம் உரமேறியது, வாழ்க்கையில் எதிர் நீச்சலிட்டு வென்று காட்டும் வைராக்கியம் ஆலம் விருட்சமாக வேரூன்றியது

ராகினியோ தனக்கு கிடைத்த இரட்டை பொக்கிஷமாக மான்சியையும் அவன் பெற்ற மகனையும் கொண்டாடினாள், பிறந்த குழந்தைக்காகவும் சேர்த்து உழைக்க ஆரம்பித்தாள்,

மான்சியின் செல்வனோ அந்த சின்னஞ்சிறு வீட்டை தெய்வலோகமாக மாற்றினான், தனக்கு பாலூட்ட ஒருத் தாய், சீராட்ட ஒருத் தாய் என இரண்டு தாய்களின் கவனிப்பில் செல்லவச் சீமானாக வளர்ந்தான்

சத்யனை விட்டுப் பிரிந்த மான்சியின் வாழ்க்கை பூந்தோட்டமானது!

மான்சியை பிரிந்த சத்யனின் வாழ்க்கை??????????? 




No comments:

Post a Comment