Saturday, October 10, 2015

மைதிலி - அத்தியாயம் - 12

ஜனவரி 30, 2012

மைதிலி எனக்கு மனதுக்குள் விண்ணப்பித்த படி, அன்றில் இருந்து அவளில்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினேன்.

நான் இதுவரை செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று இருந்து, பிறகு செய்யாமல் விட்டவற்றை பட்டியலிட்டேன். ஒரு பக்க அளவுக்கு நீண்ட பட்டியலைக் கண்டு எனக்கே வியப்பாக இருந்தது.

உதாரணத்துக்குச் சில:

பல தர்ம காரியங்களுக்கு நன்கொடை கொடுத்து வந்தாலும், ஒரு அனாதை இல்லத்துடன் இணைந்த முதியோர் இல்லத்தை உறுவாக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் மைதிலிக்கும் இருந்தது. அதற்காக ஒரு பெரிய இடமும் வாங்கி இருந்தோம். ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. இது போல மிகச் சிறு தொழில்களுக்கும், வாழ்க்கையில் முன்னுக்கு வர முயலும் ஏழைத் வியாபாரிகளுக்கும் உதவக்கூடிய ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனி தொடங்கி என் நிர்வாகத் திறமையினால் மிகப் பெரிய அளவுக்கு அதை கொண்டு செல்ல வேண்டும் என்பதும் என் நிறைவேராத ஆசைகளில் ஒன்று.

தனிப்பட்ட முறையிலும் படிக்க வேண்டும் என்று இருந்து படிக்காமல் விடப் பட்ட புத்தகங்கள், போக வேண்டும் என்று இருந்து போகாமல் விடப் பட்ட இடங்கள், எனவும் பல அப்பட்டியலில் இருந்தன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பேரக் குழந்தைகளுடனும் குழந்தைகளுடனும் இருக்க வேண்டும் என்றதும் என் மனதில் இருந்தது. மைதிலிக்கு முதன் முதலில் உடல் நலை சரியில்லாமல் போனதில் இருந்து மகிழ்ச்சியாக அவர்களுடன் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவைகளுக்கு எல்லாம் என் மனத்தில் செயலுருவம் கொடுக்கத் தொடங்கினேன்




1981 (தொடர்கிறது)

கணவனின் மறைவு, அதனால் நேர்ந்த விதவைக் கோலம், எதிர்காலத்தைப் பற்றிய பல கேள்விகள், தன் பெற்றோருக்கு ஒரு சுமையாக காலத்தைக் கடத்துவது, இவையனைத்தும் அவள் மனத்தை வதைத்துக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன். எதோ ஒரு விதத்தில் அவள் இன்னும் என்னை மணப்பதை அவள் கணவனுக்கு செய்யும் துரோகமாகக் கருதினாள். அவனை மணந்தபோது என்னை மறந்துவிடுவதாக அவள் எடுத்த உறுதி மொழியை மீறுவதாகக் கருதினாள்.

அதற்குப் பிறகு அவளிடம் நான் அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை.

சிவராமனின் மறைவுக்கு முன்னால் இருந்ததுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினேன். அமெரிக்காவில் எனக்கு சில வேலைகள் இருந்தன. இருப்பினும் அடுத்த சில மாதங்களுக்கு முடிந்த வரை இந்தியாவில் இருக்க அனுமதி கோரினேன். மலேஷியாவிலும் ஓசூரிலும் இருந்த தொழிற்சாலைகளை மேற்பார்வையிடும் பணிகளையும் எங்களுக்குத் தேவையான சில உபரி பாகங்களை தைவானில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ஏற்பாடுகள் செய்வதையும் மட்டும் மேற்கொண்டேன். இதனால் என்னால் அடிக்கடி சென்னை வந்து போக இயன்றது.

ஒரு முறை சென்னை வந்த போது ஷண்முகத்தின் மனைவிக்கு மாதா மாதம் ஒரு கணிசமான தொகை வரும்படி நான் சில முதலீடுகளைச் செய்து அதன் மேற்பார்வையை அவனது தந்தையிடம் ஒப்படைத்தேன். ஏன் என்று கேட்டவரிடம், "சிவராமன் உயிரோடு ஒரு நல்ல நிலைமையில் இருந்து இருந்தா இதைத்தான் மைதிலி செஞ்சு இருப்பா. என்னால் இது சுலபமா முடியுது. அவளுக்கு பதிலா நான் செய்யறேன்" என்றதற்கு மனம் நெகிழ்ந்தார். சிவராமனின் தாயும் என்னை எதிரியாகப் பார்ப்பதை விடுத்து இருந்தார்.

நான் சென்னை செல்லும் போதெல்லாம் மைதிலியையும் அமுதாவையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்வதும். மைதிலியுடன் சேர்ந்து அமுதாவிடம் விளையாடிக் கொண்டு இருப்பதும் வழக்கமானது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் மைதிலியையும் அமுதாவையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். அமுதாவின் கையைப் பிடுத்துக் கொண்டு கடலோரம் அழைத்துச் சென்றேன். அமுதா கடலலைகள் அருகே ஓடுவதும் அலைகள் வரும்போது ஓடி வந்து என் கால்களைக் கட்டிப் பிடிப்பதுமாக விளையாடிக் கொண்டு இருந்தாள். மைதிலி சற்று தூரத்தில் அமர்ந்து கடலைப் பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தாள்.

அப்போது சென்னைக் கடற்கரையில் எப்போதும் திரியும் ரௌடிகள் இருவர் மைதிலியின் அருகில் வந்து அமர்ந்து அவளிடம் ஏதோ கிண்டலாகப் பேசுவதையும் மைதிலி அவர்களை உதாசினப் படுத்துவதையும் கண்டேன். அவர்கள் அருகில் வந்த நான் கட்டுக் கடங்காத ஆவேசத்தில் அவன் முகத்தில் உதைத்துத் தள்ளினேன். மைதிலியின் கரம் பற்றி அவளை எழுப்பி அமுதாவை அவளிடம் கொடுத்து எனக்குப் பின்னால் தள்ளுவதற்குள் அடுத்தவன் ஒரு கத்தியை எடுத்து என்னை தாக்க வந்தான். மைதிலியின் அலறல் என்னைக் காப்பாற்றியது. இருப்பினும் அவனது கத்தி என் இடது புஜத்தைப் பதம் பார்த்தது. அதற்குள் சுற்றியிருந்தவர் உதவிக்கு வர இருவரும் தப்பி ஓடினர்.

என் கையில் வழிந்த இரத்தப் போக்கைக் கண்டு மைதிலி கண் கலங்கினாலும் பதறாமல் தன் தோள் பையில் இருந்த ஒரு டவலை எடுத்து என் புஜத்தைச் சுற்றிக் கட்டினாள்.

"வாங்க வசி கிளினிக்குக்குப் போகலாம். கார் ஓட்ட முடியுமா?"

"கொஞ்சம் வலிக்குது. ஆனா பெரிய காயம் இல்லை. கார் ஓட்ட முடியும் வா போகலாம்"

வசி-சத்யாவின் கிளினிக்கை அடைந்தோம்.

கிளினிக்கில் என் கையில் இருந்த காயத்துக்கு சிகிச்சை செய்து கொண்டபின் வசியின் அறைக்குச் சென்றேன். அறைக்குள் மைதிலி வசியிடம் என்னைப் பற்றி முறையிட்டு அழுது குலுங்குவது கேட்டது

"ஏன் இந்த மனுஷனுக்கு அவ்வளவு கோவம். எவனோ ரோடில் போறவன் என் பக்கத்தில் உக்காந்து கிண்டலடிச்சான். மேல எதாவுது செஞ்சு இருந்தா நானே கூச்சல் போட்டு இருப்பேன். சுத்தி இருக்கறவங்க உதவிக்கு வந்து இருப்பாங்க. அவனுக ரெண்டு பேரும் ஓடிப் போய் இருப்பாங்க. அதுக்குள்ள இவரு அவனை எதுக்கு அப்படி உதைக்கணும். முரளி மூஞ்சியில் இருந்த வெறியைப் பாத்து ரொம்ப பயந்துட்டேன் வசி. ஏன் இப்படி இருக்கார்?"

வசி, "இன்னைக்கு நேத்து இல்லை மைதிலி. எப்ப உனக்கு கல்யாணம் ஆச்சோ அப்ப இருந்தே அண்ணன் இப்படித்தான் இருக்குது. இப்பவாவுது கொஞ்சம் பரவால்லை. முன்னாடி எல்லாம் ரொம்ப சினிக்கலா இருக்கும். நிறைய சமயம் பார்க்க சாதாரணமா இருந்தாலும் கோபமும் வெறியும் இன்னும் அண்ணன் மனசுக்குள்ள புகைஞ்சுட்டு இருக்கு"

மைதிலி, "ரொம்ப பயமா இருக்கு வசி"

வசி, "அதுக்கு என்ன மருந்துன்னு உனக்கு தெரியாதா?"

மைதிலி அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனம் காத்தாள்.

அறைக்குள் சென்றேன்.

வசி, "என்னண்ணா? ஸியூச்சர் போட்டது வலிச்சுதா?"

நான், "இல்லை. அதுதான் லோக்கல் அனஸ்தீஸியா கொடுத்தாங்களே. கை மறத்துப் போயிருக்கு. உன் ட்ரைவரை கொஞ்ச நேரம் அனுப்பு. வண்டியை இப்ப ஓட்ட முடியாது. மைதிலியையும் அமுதாவையும் அவங்க வீட்டில் ட்ராப் பண்ணிட்டு என்னை உன் வீட்டில் கொண்டு விடட்டும்"

வசிக்கு எதிரில் அமர்ந்து இருந்த மைதிலி கண்களைத் துடைத்த வண்ணம் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

காரில் பின் சீட்டில் இருவரும் அமர்ந்தோம். நன்றாக விளையாடிய களைப்பில் அமுதா மைதிலின் மடியில் படுத்துத் தூங்கத் தொடங்கினாள். மௌனமாக வெளியில் வெறித்தபடி இருந்த நான் திரும்பி மைதிலியைப் பார்க்க, அவள் கண்களில் நீர் வழிய என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள். என்னையறியாமல் என் கண்களும் குளமாகின. மைதிலி என் அருகில் நெருங்கி அமர்ந்து என் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

எனது நேசம் மூடியிருந்த அவள் மனக் கதவுகளை மெதுவாகத் திறப்பதை உணர்ந்தேன். வசியும் மைதிலியின் தங்கை ப்ரேமாவும் அதற்கு உதவினர். எனது பெற்றோரும் அவளது பெற்றோரிடம் பேசி இருந்தனர். தவிற, சிவராமனின் தந்தையும் அவளிடத்தில் நடந்ததை எண்ணி காலம் முழுவதும் தன்னை அவள் வறுத்திக் கொள்வது சரியல்ல என்று அறிவுரைத்து இருந்தார்.

பொதுவாக வீட்டில் ஒரு இறப்பு நேர்ந்தால் ஒரு வருடத்துக்கு பண்டிகைகள் கொண்டாடுவதை தவிர்ப்பது வழக்கம். அந்த வருடத்தில் வீட்டில் எந்த விசேஷங்களும் இருக்காது. ஆனால் மைதிலியின் தந்தை அதைப் பொருட்படுத்தாமல் தன் தமக்கையிடமும் சிவராமனின் தந்தையிடமும் மைதிலிக்கு மறுமணம் முடிக்க ஏற்பாடு செய்வதைப் பற்றிப் பேசி இருக்கிறார். சிவராமனின் தாய் அதற்கு முழு ஆதரவு கொடுக்காவிட்டாலும் அவன் தந்தை, "அவன் தலைவிதி என் மகன் போயிட்டான். இப்ப மைதிலி மறுபடி உங்க வீட்டுப் பொண்ணு. பாவம் அந்தத் தம்பியும் கல்யாணமே வேண்டாம்ன்னு இத்தனை நாளா இருந்து இருக்கான். இனியாவுது அந்த ரெண்டு ஜீவனும் சந்தோஷமா இருக்கட்டும். நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்."

நான் வசியிடம் பேசிய போது

வசி, "அவளுக்கு ஓ.கேதாண்ணா. ஆனா இன்னும் கொஞ்சம் கில்டியா ஃபீல் பண்ணறா. கொஞ்ச நாள் போனா சரியாப் போயிடும்"

நான், "அப்படின்னா அவளுக்கு முழு சம்மதம் இல்லையா?"

வசி, "அவளைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? எதையும் எடுத்தான்னா அதில் முழுசா இன்வால்வ் ஆயிடுவா. அந்த மாதிரித்தான் அவளோட பாஸ்ட் மாரீட் லைஃப்ஃபும். முட்டி மோதி அந்த ஆளை சரி செய்யலாம்ன்னு பாத்தா. முடியலைன்னாலும் இனி அதுதான் தன் வாழ்க்கைன்னு அவர்கூட குடும்பம் நடத்திட்டு இருந்தா. She thinks his death as her failure. வேற வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துக்க அவ மனசில் தயக்கம் இருக்கு"

இவையெல்லாம் நடப்பதற்கு மேலும் ஒரு மாதம் ஆகி இருந்தது. எனக்கு அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும்படி அழைப்பு வந்தபடி இருந்தது.

நான் அடுத்த முறை சென்னை வந்தடைந்தேன்.

மைதிலி என்னை தொலைபேசியில் அழைத்து மதியம் தன் அலுவலகத்துக்கு வரச் சொன்னாள். நான் அங்கு சென்றபோது அலுவலகத்தில் வெளியே காத்து இருந்தாள். அருகில் சென்றதும் ஸுவாதீனமாக காரில் ஏறி அமர்ந்தாள். ஒன்றும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு ட்ரைவ் இன் உணவகத்தை அடைந்தேன்.

நான், "எப்படியும் சாயங்காலம் உன் வீட்டுக்கு வர்றதாத்தான் இருந்தேன்.எதுக்கு இப்ப வரச் சொன்னே?"

மைதிலி, "கொஞ்சம் பேசணும்ன்னு. சாரி, எதாவுது வேலையா இருந்தீங்களா?"

நான், "நத்திங்க் ஸீரியஸ் ... சொல்லு"

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு மைதிலி, "எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க"

நான், "யாரை?"

பல மாதங்களாக பார்க்காத குறும்புச் சிரிப்பு அவள் முகத்தில் ஒரு கணம் தோன்ற, "ம்ம்ம்... யாரையாவுது"

நான், "ஆனா உனக்கு சம்மதம் இல்லை. அப்படித்தானே?"

மைதிலி, "அப்படி இல்லை ... " என்று இழுத்தாள்

நான், "வேற எப்படி?"

மைதிலி, "அதுதான் என் தலைவிதின்னு வாழ்ந்துட்டு இருந்தேன்"

என்னால் என் கோபத்தை அடக்க முடியவில்லை

நான், "ஒண்ணு புரிஞ்சுகிட்டேன். உனக்கு அமுதாவோட எதிர்காலத்தைப் பத்தியோ என்னோட எதிர்காலத்தைப் பத்தியோ, ஏன், உன் எதிர்காலத்தைப் பத்திக் கூட கவலை இல்லை. நீ செய்யணும்ன்னு நினைச்சதை செய்ய முடியாமப் போச்சுங்கற பிடிவாதம் மட்டும்தான் உனக்கு முக்கியம். இல்லையா?"

மைதிலி, "அப்படி இல்லைப்பா?" என்றபடி கண் கலங்கினாள்.

நான், "பின்னே எப்படி? உனக்கு வேணுங்கற மாதிரி வந்தாத்தான் அந்த சந்தோஷத்தை ஏத்துக்குவே. அதுவா வந்தா அதில் உனக்கு இஷ்டம் இருக்காது"

மைதிலி, "எனக்கு கில்டியா இருக்கு" என்றபடி உதடுகள் பிதுங்க அழுகையில் வெடித்தாள். இழுத்து அவளை என் மார்போடு அணைத்துக் கொண்டேன். என் தோளில் சாய்ந்து அழுதாள். மெதுவாக அவளது அழுகை நின்றது. நிமிர்ந்து கண்களைத் துடைத்தவள் என்னைப் பார்த்து, "சரி. பண்ணிக்கலாம்"

நான், "ஸீரியஸ்?"

மைதிலி, "ம்ம்ம் .. ஆனா .. "

நான், "ஆனா?"

மைதிலி, "ரொம்ப தடபுடலா வேண்டாம்"

நான், "சரி. எப்ப அன்னவுன்ஸ் பண்ணலாம்?"

மைதிலி, "உங்க இஷ்டம் .. "

நான் "இன்னும் ரெண்டு நாளில் நியூ இயர் .. அப்பா அம்மாவை இங்கே வரச் சொல்லறேன். நம்ம ரெண்டு ஃபாமிலிக்கு மட்டும் ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணறேன். அப்ப அன்னௌன்ஸ் பண்ணலாம். ஓ.கே?"

இரண்டாம் நாள் மாலை மைதிலியின் குடும்பத்தை அழைத்து வர ஒரு கார் அனுப்பி இருந்தேன். வசி, சத்யாவுடன் என் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு நான் ஒரு காரில் அந்த உணவகத்தை அடைந்தேன்.

பல மாதங்களுக்குப் பிறகு அவள் நெற்றியில் ஒரு சிறு பொட்டு. கழுத்தில் ஒற்றைச் சங்கிலி. ஒரு கையில் இரண்டு வளையல்கள. மற்ற கையில் எப்போதும் அணியும் வாட்ச். அந்த எளிமையான தோற்றத்திலும் என் மைதிலி ஜொலித்தாள்.

அடுத்த சில நாட்களில் என் வேண்டுகோளுக்கு இணங்கி மைதிலி விரும்பியது போல் எங்கள் திருமணத்தை எளிமையான முறையில் நடத்த, வேண்டிய ஏற்பாடுகளில் என் பெற்றோர் முனைந்தனர். மலேஷியாவிலும் ஓசூரிலும் இருந்த எனது பொறுப்புக்களை எல்லாம் மற்றவருக்கு ஒப்படைக்கும் வேலைகளை நான் விரைவில் முடித்தேன்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்த டைரியை எடுக்க கை நீட்டினேன். ஏற்கனவே படித்தது என்பதை உணர்ந்தேன்.

1982ம் வருடம் ஜனவரி 18ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது.


1987 (தொடர்கிறது)
நான், "என்ன சொல்றே? எதுக்கு மன்னிப்பு?"

மைதிலி, "நீங்க செஞ்ச கொலைகளுக்கு" என்றவள் கண்கள் சிவக்க (அவள் அப்படிக் கோபப் பட்டு நான் பார்த்தே இல்லை) தொடர்ந்து, "நீங்க எப்படி செஞ்சீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா சிவராமனும் ஷண்முகமும் போனதுக்கு நீங்கதான் காரணம்ன்னு எனக்குத் தெரியும்"

நான் ஸ்தம்பித்துப் போனேன். அவள் கண்களில் ஆறாக கண்ணீர் வழிந்தோடியது. சிவராமனின் மறைவுக்கு முன்னால் நடந்தவை என் மனக் கண்முன் வந்தது

~~~~~~~~~~~~~~~~~~~~~
அந்த விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு தொலைபேசி உரையாடல்.

எதிர்முனை, "சார், முத்தப்பா ராய் சொன்னாரு"

நான், "ம்ம்ம்.. சொல்லுங்க"

எதிர்முனை, "இன்னைக்கு நைட்டு ஷ்யூரா சார்?"

நான், "ஆமா .. எப்படி இருக்கணும்ன்னு சொன்னாரா"

எதிர்முனை, "ஆக்ஸிடெண்ட் மாதிரி இருக்கணும்ன்னு சொன்னாரு. இல்லை வேற எந்த மாதிரி வேணும்னாலும் செய்யலாம். சொல்லுங்க"

நான், "மூஞ்சி சிதையற மாதிரி செஞ்சுடாதீங்க. ஈஸியா அடையாளம் தெரியற மாதிரி இருக்கணும்"

எதிர்முனை, "ஆக்ஸிடெண்ட்ன்னா நாங்க எப்பவும் அப்படித்தான் சார் செய்வோம். அப்பறம் எங்களுக்கு யாராவுது நேரில் அடையாளம் காட்டுவாங்களா இல்லை நீங்க சொன்ன பைக் நம்பரை வெச்சுட்டு அதில் வர்றவங்களை ..."

நான் அவனை மேலும் பேச விடாமல், "அந்த பாருக்கு முன்னால் வெயிட் பண்ணிட்டு இருங்க. நான் என் ட்ரைவரோட பாருக்கு வருவேன். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் அவனை உள்ளே விட்டுட்டு நான் மட்டும் காரை எடுத்துட்டு போவேன். அப்பறம் என் ட்ரைவர் அந்த ரெண்டு பேர்கூட வெளியே வருவான். அவங்க ரெண்டு பேரையும் பைக்கில் ஏத்தி வழியனுப்பி வெச்சுட்டுத்தான் அவன் போவான். நீங்க அதுக்கு அப்பறம் அவங்களை பாத்துக்குங்க ... "

எதிர்முனை, "அதுக்கு அப்பறம் நாங்க வழியனுப்பி வெச்சுடறோம்" என்று ஜோக் அடித்து விடைபெற்றான்.

அன்று இரவு பாரில் இருந்து புறப்பட்டு வெளியில் வந்த போது உடன் வந்த ட்ரைவர் சுந்தரத்திடம் நான், "சுந்தரம், ரெண்டு பேரையும் ரொம்ப குடிக்க விடாதே. பத்திரமா பைக் ஓட்டிட்டுப் வீடு போய்ச் சேரணும். அவங்க்ளுக்கு இங்கே இருந்து எந்த ரோடில் போறதுன்னு தெரியுமான்னு தெரியலை. நீ அவங்க கூட வெளியே வந்து பைக்கில் நிதானமா போறாங்களான்னு பாத்துட்டுப் போ"

~~~~~~~~~~~~~~~~~~~~~

மகா பாவத்தைச் செய்த குற்ற உணற்சியினால் பல இரவுகள் தூக்கம் கெட்டு இருந்தாலும் நான் உயிராக நேசிப்பவளின் நலனுக்காகச் செய்தேன் என்று இருந்த என் மன ஆறுதலும் அன்று தொலைந்தது.

கண் கலங்கிய நான், "அன்னைக்கி நீ சொன்ன மாதிரி உனக்கு ஒண்ணு ஆகி இருந்தா என் கையாலயே அவங்களை கொன்னுட்டு நானும் செத்து இருப்பேன். உனக்கு அந்த மாதிரி எதுவும் ஆகக் கூடாதுன்னுதான் நான் ஆளை வெச்சு அவங்களை போடச் சொன்னேன். உனக்கு ஒண்ணுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாது. புரிஞ்சுக்கோ"

என்னை கட்டி அணைத்துக் கொண்டு என் மார்பில் முகம் புதைத்துக் கதறினாள்.

நான், "ஆனா அதுக்கு அப்பறம்தான் நீ எந்த அளவுக்கு அவனை நேசிச்சு இருக்கேன்னு தெரிஞ்சுது. எனக்கு ரொம்ப நாள் தூக்கமே வரலை. ஒவ்வொரு சமயம் நான் செஞ்சதை உனக்குச் சொல்லி உன்னை வேற யாராவுது ஒரு நல்லவனுக்குக் கல்யாணம் செஞ்சு வெக்கலாம்ன்னு தோணும்"

விசும்பல்களுக்கிடையே மைதிலி, "சத்தியமா சொல்றேன். நான் சிவராமனை எப்பவும் உங்களை நேசிச்ச மாதிரி நேசிக்கலை. ஆனா அவர்கூட இருந்த அத்தனை வருஷமும் ஒரு நாளும் அவருக்கு துரோகம் செய்யணும்ன்னும் நினைச்சது இல்லை. அவர் கட்டிய தாலிக்கு உண்மையா நடந்துட்டேன்"

நான், "உனக்கு ஏற்கனவே தெரியும்ன்னா என்னைக் கல்யாணம் செஞ்சுக்க உனக்கு எப்படி மனசு வந்துது?"

மைதிலி, "நீங்க என் மேல உயிரையே வெச்சு இருக்கீங்கன்னும் எனக்கு நல்லாத் தெரியும். யோசிச்சுப் பாத்தப்ப ஒரு வேளை உங்க நிலமையில் நான் இருந்து இருந்தா நானும் அவங்களைக் கொலை செஞ்சு இருப்பேனோன்னு தோணுச்சு ... ரொம்பக் குழம்பிப் போயிருந்தேன்"

நான், "அப்பறம் எப்படி முடிவு எடுத்தே?"

மைதிலி, "நான் கல்யாணத்துக்கு ஒத்துக்காட்டா நீங்க வேற யாரையும் கல்யாணம் செஞ்சு இருக்க மாட்டீங்க. நீங்க எனக்காக தவிச்சு ஏங்கிட்டு இருக்கறதை என்னால சகிக்க முடியலை"

நான், "ஸோ, பரிதாபப் பட்டுத்தான் கல்யாணம் செஞ்சுக்க ஒத்துகிட்டயா?"

மைதிலி, "உங்க மேல பரிதாபம் எல்லாம் இல்லை. உங்களை என் கணவனாப் பாக்கலைன்னாலும் உங்களை நேசிக்கற அளவுக்கு இந்த உலகத்தில் நான் யாரையும் நேசிச்சது கிடையாது. உங்களை மாதிரி நானும் உங்க மேல உயிரையே வெச்சு இருந்தேன். ஒரு விதத்தில் ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன். அடிக்கடி உங்களை கல்யாணம் செஞ்சுக்குங்கன்னு சொல்லுவேன். ஒரு வேளை நீங்க வேற ஒருத்தியை கல்யாணம் செஞ்சு இருந்தா நான் செத்தே போயிருப்பேன்"

நான், "ஆனா நீ கொடுக்கும் மரியாதைக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவண்டா. ஓ காட்! ஐ ஆம் ஸோ சாரி" என்றவாறு அவளுடன் சேர்ந்து நானும் குலுங்கியழுதேன்.

நான் அழத் தொடங்கியதும் அவளது அழுகை அடங்கத் தொடங்கினாலும் இருவரின் கண்ணீரும் கலந்து என் சட்டை நனைந்தது.

சற்று நேரத்துக்குப் பிறகு தலையை நிமிர்த்தியவள் என் கண்களைத் துடைத்து என் முகத்தைக் கையில் ஏந்தி வருடியவாறு இருந்தாள்.

மைதிலி, "ஆனா, ஒண்ணு சொல்றேன். ஷண்முகத்தின் மனைவிக்கும் மகனுக்கும் அவன் செத்ததுக்கு அப்பறம்தான் விடிவு காலம் பொறந்தது. அதுவும் உங்களால. நீங்க கொடுத்த சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் அவங்க ரெண்டு பேரும் உயிரோடு இருந்து இருந்தா அவங்களால் கொடுத்து இருக்க முடியாது. அதை நினைச்சு நான் ஒவ்வொரு நாளும் பெருமைப் படறேங்க ... உங்கமேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் இது வரைக்கும் அதிகமாகி இருக்கே தவிற துளிகூட குறையலைப்பா. நான் மட்டும் இல்லை. நம் சொந்தக் காரங்க எல்லாம் உங்கபேர்ல அளவு கடந்த மரியாதை வெச்சு இருக்காங்க. இங்ககூட உங்க கம்பெனியில் வேலை செய்யறவங்க மத்தியில் உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் வேற யாருக்கும் இல்லை. அந்த மதிப்பும் மரியாதையும் துளிகூடக் குறையக் கூடாது"

நான், "சரி "

மைதிலி, "அதுமட்டும் இல்லைப்பா. சிவராமன் போனதுக்கு அப்பறம் கொஞ்ச நாள் நான் மாமா அத்தைகூடத்தான் இருந்தேன். தினமும் எங்க அத்தை உங்களை சபிச்சுட்டே இருந்தாங்க. அது தாங்க முடியாமத்தான் நான் எங்க அப்பா அம்மா வீட்டுக்குப் போனேன். மறுபடி உங்களை யாராவுது சபிச்சா என்னால் பொறுக்க முடியாதுப்பா"

நான், "சரி, என்ன செய்யணும் சொல்லு"

மைதிலி, "யாருக்கும் வேலை போகக் கூடாது. வேணும்ன்னா உங்களை வெளியே போகவெச்ச மாதிரியே நீங்க அந்த எரிக்கை வெளியே துரத்துங்க"

நான், "சரி"





No comments:

Post a Comment