Thursday, October 8, 2015

மைதிலி - அத்தியாயம் - 9

ஜனவரி 25 (தொடர்கிறது)

ஐந்தாம் நாளும் ஒரு பூஜை.

மறுபடி மாலை அணிவித்து காலடியில் மலர்கள் தூவிய என் மைதிலியின் படத்தின் முன்னால் நின்றேன்.

மனதுக்குள் என் மனசாட்சி மூலம் அவள் என்னுடன் உரையாடினாள்.

நான், "இன்னும் ஆறு நாள் பொறுத்துக்கடா. நானும் வந்துடறேன்"

மைதிலி, "சீ .. அறுபத்தி ரெண்டே வயசான பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட் பேசற பேச்சா இது? நீங்க இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு?"

நான், "நான் சாதிச்சது போதும். இனி நம்ம மக, மருமகன், மகன் எல்லாம் சேந்து சாதிக்கட்டும்"

மைதிலி, "ஏம்பா, நம்ம அஷோக் பிறந்த சமயம் ஞாபகம் இருக்கா? என் டெலிவரியின் போது உங்க அம்மாவும் அப்பாவும் வந்து கூட இருந்தது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துது? அதே மாதிரித்தானே கீதா டெலிவரியப்ப அஷோக்கும் ஃபீல் பண்ணுவான்?

என் ஆசையை புரிஞ்சுட்டு நீங்க சொன்னாலும் கேட்காம ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கீதாவை அல்ட்ரா ஸ்கேனுக்குக் கூட்டிட்டுப் போய் பிறக்கப் போறது ஆண் குழந்தைன்னு தெரிஞ்சுட்டு வந்து சொன்னான். என் பேரன் பிறக்கும்போது நீங்களாவுது அங்கே இருக்க வேண்டாமா?"

நான், "என்னால தனியா ஒண்ணும் செய்ய முடிய மாட்டேங்குது. I just can't manage without you"

மைதிலி, "பொய் சொல்லாதீங்க. இந்த ஒரு வருஷமா நான் உங்களுக்கு என்ன செஞ்சேன்? நீங்கதான் எனக்கு பாத்துப் பாத்து எல்லாம் செஞ்சுட்டு இருந்தீங்க. உங்களால் தனியா என்ன வேணும்னாலுன் செய்ய முடியும்"

நான், "காலையில் எந்திரிச்சதில் இருந்து உன் நினைப்பாவே இருக்குடா"

மைதிலி, "ஆமா. பின்னே? பன்னெண்டு வருஷம் காதலிச்சு இருவத்தி ஒம்பது வருஷம் குடும்பம் நடத்தின பொண்டாட்டி நினைப்பு இல்லாம இருக்குமா?"

நான், "எனக்கு நீ இல்லாம இருக்கப் பிடிக்கலம்மா"

மைதிலி, "நான் எங்கேயும் போயிட மாட்டேன். நான் எப்பவும் உங்க மனசில் இருந்துட்டேதான் இருப்பேன். நீங்க கடைசியா பாத்த மாதிரி இல்லை. முன்னே இருந்த மாதிரி. நீ புடவையில் வந்தா எனக்கு முறுக்கேறுதுடான்னு சொல்லுவீங்களே? அந்த மாதிரி இருப்பேன்"

நான், "நான் என்னதான் செய்யறது சொல்லு"

மைதிலி, "நீங்க உக்காந்து மறுபடி ஒரு லாங்க் டெர்ம் ப்ளான் போடுங்க. நீங்க செய்யணும்ன்னு நினைச்சு செய்ய முடியாம போனது நிச்சயம் நிறைய இருக்கும். அப்படி இல்லைன்னாலும் புதுசா என்ன செய்யலாம்ன்னு யோசிங்க. நம்ம மககூட, மருமகன்கூட, மகன்கூட, மருமககூட, பேத்திகூட, பொறக்கப் போற பேரன்கூட எல்லாம் இருங்க. அவங்க எல்லாரும் நீங்க கூட இருந்தா ரொம்ப சந்தோஷப் படுவாங்க"

நான், "சரி. யோசிக்கறேன் .. "

மைதிலி, "நல்லா யோசிங்க. நான் கூடவே இருக்கேன்"

அன்று தொடங்கிய அந்த உரையாடல் அடுத்த சில நாட்களும் இதே தொனியில் தொடர்ந்தது .. 


1981 (தொடர்கிறது)

சென்னையில் இருந்து நாங்கள் புறப்பட்டு வருவதற்குள் மைதிலியின் பெற்றோர் மற்றும் மாமனாரின் குடும்பங்களும் பெங்களூரை அடைந்து இருந்தனர்.

மைதிலியின் முகத்தில் இனம் புரியாத சோகமும் பயமும் கலந்து இருந்தன. சிவராமன், ஷண்முகம் இருவரின் சடலங்களும் போலீஸின் வசம் இருந்தன. போஸ்ட்மார்டம் முடிந்த பிறகே கொடுக்கப் படும் என்று அறிவித்து இருந்தனர். எனக்குத் தெரிந்த போலீஸ் டி.ஸி.பி ரெட்டி அவர்களின் மூலம் போஸ்ட்மார்டத்தை விரைவில் முடித்து சடலங்கங்களை விடுவிக்க ஏற்பாடு செய்தேன்.

போஸ்ட்மார்டம் முடித்து போலீஸ் சடலங்களை கொடுத்தபோது முன்னிரவை எட்டி இருந்தது. வீட்டுக்கு எடுத்துவந்து செய்வதற்கு பதிலாக அங்கேயே தேவையான சில சடங்குகளை முடித்து வில்ஸன் கார்டன் மின்சார இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அங்கு இறுதிச் சடங்குகளை முடித்தபின் மின்சாரச் சுடலையில் இட முடிவெடுத்தனர்.

ஓட்டையிட்ட சட்டியில் நீரைத் தோளில் ஏந்தி தந்தையின் உடலைச் சுற்றி வந்த ஷண்முகத்தின் ஆறு வயது மகனையும் ஒரு மூலையில் தேம்பிக் கொண்டு இருந்த அவனது அப்பாவி மனைவியையும் பாத்து போது என் மனம் அவர்களின் எதிர்காலத்தை எண்ணி கனத்தது.

அந்தத் துயரமான வேளையிலும் சிவராமனின் தாய் என்னை வெறுப்போடு பார்த்துப் பொறுமியது எனக்கு எரிச்சல் மூட்டியது.

ஈமக் கிரியை முடிந்து எல்லோரும் செல்லவிருக்கும் போது சிவராமனின் தந்தை என்னிடம் வந்து,

"தம்பி, நாளைக்கு வந்து அஸ்தியை வாங்கறதுக்கு கொஞ்சம் உதவி செய்வீங்களா?"

"நீங்க அதைப் பத்திக் கவலைப் படாதீங்க சார். நான் அதுக்கு ஏற்கனவே ஏற்பாடு செஞ்சாச்சு"

அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது வாசலில் ஒரு போலீஸ் ஜீப் நின்று இருந்தது.

உள்ளே செல்ல இருந்த என்னை தடுத்த இன்ஸ்பெக்டர், "சார், செத்துப் போனவங்களோட பேரண்ட்ஸ் வந்து அஸ்தியை வாங்கிட்டு போயிட்டாங்க. நீங்க எங்ககூட கொஞ்சம் வரீங்களா?"

"எதுக்கு? என்ன விஷயம்?"

"ஒரு கம்ப்ளெயிண்ட் வந்து இருக்கு. கொஞ்சம் விசாரிக்கணும்"

"என்ன விசாரணை?"

"இங்கே வெச்சு வேண்டாம் சார். எங்க கூட கொஞ்சம் வாங்க"

"எங்கே ஸ்டேஷனுக்கா? நான் வரமுடியாது. முதல்ல உங்க வயர்லெஸ்ஸில் உங்க டி.ஸி.பி ரெட்டியை கூப்பிடுங்க நான் அவர்கூட பேசணும்"

"சார், ரெட்டி சார்தான்சார் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கார். ஸ்டேஷனுக்கு இல்லை. செத்துப் போனவரோட வீட்டுக்கு. சார் அங்கே தான் இருக்கார்"

"சரி, வாங்க என் வண்டியில் போலாம்"

எனது காருக்கு அருகே வந்தவன் எனது விசுவாசமான ட்ரைவர் சுந்தரத்தின் முகத்தில் தெரிந்த பயத்தை இன்ஸ்பெக்டர் பார்ப்பதற்கு முன் அவனிடம், "சுந்தரம், நீ ஃப்ளாட்டில் இருக்கற பெரிய வண்டியை எடுத்துட்டு ஃபாக்டரிக்குப் போ. இன்னைக்கு விஸிட்டர்ஸ் வந்தாலும் வரலாம். அங்கே தேவைப் படும்" என்று அவன் மேலும் எதுவும் சொல்வதற்கு முன் அவனை அனுப்பி வைத்தேன்.

அருகில் இன்ஸ்பெக்டரை அமர்த்தி காரை நான் ஓட்டிச் சென்று மைதிலியின் வீட்டை அடைந்தேன். வீட்டெதிரில் டி.ஸி.பி ரெட்டியின் வெள்ளை அம்பாஸிடரைத் தவிற இன்னும் சில போலீஸ் வாகனங்கள் நின்று இருந்தன.

டி.ஸி.பி ரெட்டி என்னைப் பார்த்ததும் வெளியில் வந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றார்.


"என்ன விஷயம் மிஸ்டர் ரெட்டி?"

"செத்துப் போன சிவராமன் ஷண்முகத்தோட அம்மா இது ஆக்ஸிடெண்ட் இல்லை ஒரு மர்டர்ன்னு நேரா கமிஷனர்கிட்ட போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்காங்க. உங்களை அக்யூஸ் பண்ணி இருக்காங்க. அதுக்குத் தகுந்த மாதிரி நேத்து நீங்க சொன்னதுனால் நான் பாடியை சீக்கரம் ரிலீஸ் பண்ணச் சொன்னேன். இப்போ ஃபொரென்ஸிக் வெரிஃபிகேஷன் செய்யறதுக்கு பாடியும் இல்லை. அதுவும் கிரிமேட் செஞ்சு இருக்கு. கமிஷனர் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கார். எனக்கு முதல்ல நீங்க ஒண்ணு சொல்லுங்க. நீங்க அவங்க ரெண்டு பேர்கூடவும் ஆக்ஸிடெண்ட் ஆன அன்னைக்கு சாயங்காலம் இருந்தீங்களா?"

"ஆமா இருந்தேன். அன்னைக்கு சாயங்காலம் ஒரு பாரில் ரெண்டு பேரையும் சந்திச்சேன். அவங்ககூட கொஞ்ச நேரம் இருந்துட்டு நான் கிளம்பிட்டேன். என் ட்ரைவர் சுந்தரம் என்னை ஸ்டேஷனில் கொண்டு விட்டான். நான் மெட்ராஸ் மெயில் ஏறி சென்னை போயிட்டேன்"

"எதுக்கு அவங்களை மீட் பண்ணீங்க?"



"மைதிலியும் அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு சிவராமனும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி மீட் பண்ணுவோம். அவ குழந்தை அமுதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அடுத்த ரெண்டு மாசம் பெங்களூரில் இருக்கப் போறதில்லைன்னு அவங்களை எல்லாம் பாத்து சொல்லிட்டு வரலாம்ன்னு அன்னைக்கு சாயங்காலம் அவங்க வீட்டுக்குப் போனேன். அப்ப மைதிலி ஷண்முகம் சென்னையில் இருந்து வந்து இருக்கார். சிவராமன் அவர்கூட சாயங்காலம் வெளியே போயிட்டு வீட்டுக்கு வர லேட்டாகும்ன்னு சொன்னா. எப்படியும் எங்கேயாவுது பாருக்குப் போவாங்க அங்கே பாக்கலாம்ன்னு சிவராமனைக் கான்டாக்ட் பண்ணினேன். அவர் பாருக்கு போறதா சொன்னாங்க. நானும் போய் அவங்களோட ஜாயின் பண்ணிட்டேன்"

"மெட்ராஸுக்கு ரிஸர்வ் செஞ்சுட்டுத்தானே போனீங்க?"

"அஃப் கோர்ஸ். இன் ஃபாக்ட் டிக்கெட் கூட எங்கிட்ட இருக்கு"

"டிக்கெட் எப்படி உங்ககிட்ட இருக்க முடியும். ஸ்டேஷனலில் வாங்கிப்பாங்களே?"

சிரித்த நான், "உங்களுக்கு மெட்ராஸ் சென்ட்ரல் பத்தி தெரியாதுன்னு நினைக்கறேன். முதல் ப்ளாட்ஃபாரத்தில் இருந்து நேரா வெளியே போகலாம். வழியில் டிக்கட் எக்ஸாமினர்ஸ் இருக்க மாட்டாங்க. எனி ஹவ், ட்ரெயினில் டி.டி வந்து வெரிஃபை செஞ்ச டிக் மார்க் அந்த டிக்கெட்டில் இருக்கு. You can always cross verify with Railways whether I really travelled that day from their records"

"சாரி மிஸ்டர் முரளி. உங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஸ்டில் அவங்களுக்கு ஒரு சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கணும் இல்லையா? அதனால்தான் கேட்டேன்"

"நோ ப்ராப்ளம். சாவுக்கு காரணம் என்னன்னு உங்க எஃப்.ஐ.ஆர்ல இருக்கு?"

"இது ஒரு ஹிட் அண்ட் ரன் கேஸ் ஸார். ரெண்டு பேரும் குடிச்சுட்டு வந்து இருக்காங்க. சிவராமன் வண்டியை ஓட்டிட்டு வந்து இருக்கான். சைட்டில் இருந்து வந்த ஒரு பெரிய வேன் அல்லது சின்ன லாரி மோதி இருக்கு. அடிச்ச வேகத்தில் பில்லியனில் இருந்த ஷண்முகம் எகிறிப் போய் ரோட் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய கல் மேல விழுந்து இருக்கான். ஸ்பைனல் கார்ட் ஒடைஞ்சதனால் உயிர் போயிருக்கு. சிவராமன் வண்டிக்கு அடியில் மாட்டி செத்து இருக்கான்"

"அடிச்சுட்டுப் போன வேன் அல்லது லாரியைப் பத்தி தகவல் எதாவது தெரிஞ்சுதா?"

"ஆக்ஸிடெண்ட் நடந்தது ஒரு மணி வாக்கில். கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியா. மூணு மணிக்குத்தான் எங்களுக்கு கம்ப்ளெயிண்ட் வந்து இருக்கு. அடிச்சது என்ன வண்டின்னே எங்களுக்கு தோராயமாத்தான் சொல்ல முடியும். அந்த நேரத்தில் நிறைய வண்டிங்க வெளியூரில் இருந்து கொண்டு வந்த வெஜிடபிள் லோடை ஸிடி மார்கெட்டில் இறக்கிட்டு திரும்பிப் போயிட்டு இருக்கும். வேன் ட்ரைவரும் குடிச்சு இருந்து இருக்கலாம். குடிச்சு இருந்தான்னா நிச்சயம் உடனே அந்த இடத்தில் இருந்து பிச்சுட்டு போயிருப்பான்"

"எதை வெச்சு அவங்க என்னை அக்யூஸ் பண்ணி இருக்காங்க?"

"நீங்களே கெஸ் பண்ணி இருப்பீங்களே" என்று பீடிகை போட்டார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யூகித்த நான், "அபத்தம். உள்ளே வாங்க எல்லார் முன்னாடியும் சொல்றேன்" என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றேன்.

ஹாலில் கமிஷனர் அமர்ந்து இருந்தார்.

நான் ஒரு அக்யூஸ்ட் என்றாலும் வெளிநாட்டில் இருந்து வந்த முதலீட்டில் பெங்களூரில் ஒரு பெரிய அலுவலகமும் ஓசூரில் ஒரு பெரிய தொழிற்சாலையும் உருவாக்கிய தொழிலதிபர் என்பதால் சற்று மரியாதையுடன், "வாங்க மிஸ்டர் முரளீதரன். இவங்க கம்ப்ளெயிண்ட் கொடுத்தாங்க. இது ஒரு சென்ஸிடிவான சமாச்சாரம். நான் உங்ககிட்ட இவங்க முன்னாடியே பேசிட்டு அதுக்கு அப்பறமும் அவங்களுக்கு சந்தேகமா இருந்தா மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கறதா சொன்னேன். அவங்களும் அதுக்கு ஒத்துகிட்டாங்க. அதனால் தான் உங்களை இங்கே வர வெச்சு இருக்கேன்"

"இட்ஸ் ஓ.கே. சார். எதுவா இருந்தாலும் நான் கோ-ஆபரேட் பண்ணறேன்"

"உங்களுக்கும் மைதிலிக்கும் தொடர்பு இருந்ததாம். அதுக்கு தடையா இருந்த சிவராமனை நீங்க ஆள் வெச்சு கொன்னு இருக்கீங்கன்னு கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்காங்க"

சுற்றும் முற்றும் பார்த்தேன். மைதிலியும் அமுதாவும் அங்கு காணவில்லை.

"மைதிலி எங்கே?"

"அவங்க அப்பா அம்மா கூட லாட்ஜில் தங்கி இருக்காங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துடுவாங்க"

சில கணங்கள் மௌனமாக நான் பேச வேண்டியதை மனதில் தெளிவு படுத்திக் கொண்டு தொடர்ந்தேன்,

"மைதிலிக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நான் அவளை காதலிச்சேன். ஆனா அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு பிறகு நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ் அவ்வளவுதான். வேற எந்த தொடர்பும் இல்லை"


நான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது மைதிலியும் அவளது பெற்றோரும் உள்ளே நுழைந்தனர். எனது ட்ரைவர் சுந்தரம் சொல்லி இருக்க வேண்டும், என் ஃப்ளாட்டில் தங்கி இருந்த வசியும் சத்யாவும் அச்சமயம் வந்து சேர்ந்தனர்.

கமிஷனர் என்னிடம் சொன்னதையே மைதிலியிடம் சொன்னார்.

அதுவரை சோகத்தில் இருந்த அவள் முகம் கடும் கோபத்தில் சிவந்தது.

"இவருக்கும் எனக்கு தொடர்பு இருந்தது உண்மை. ஆனா என்ன மாதிரி தொடர்புன்னு விளக்கி சொல்றேன் அதுக்கு அப்பறம் பேசுங்க" என்றவாறு அறைக்குள் சென்றாள்.

உள்ளே காட்ரேஜ் அலமாரி திறக்கும் சத்தம் கேட்டது.

ஒரு பெரிய கவரைக் கையில் ஏந்தியபடி வந்தாள். அதில் விஜயா ஹாஸ்பிடல் மெடிகல் ரிப்போர்ட்டுகள் இருப்பதை யூகித்த நான்,

"மைதிலி, இது ஒரு பேஸ்லெஸ் அக்யூசேஷன். நீ வேண்டாததை எல்லாம் இப்ப எடுக்காதே"

"இல்லை முரளி. இத்தனை நாளும் குடும்ப மானம் போயிடும்ன்னு நான் எதுவும் பேசாம பொறுத்துட்டு இருந்தேன். எப்ப உங்களுக்கு இந்த நிலமை வந்துதோ, எனக்கு எதுவும் பெருசு இல்லை" என்றவாறு சிவராமனின் வரலாற்றை எல்லோர் முன்னாலும் போட்டு உடைத்தாள். மேலும் உடலுறவு கொள்ள கணவனே வாய்ப்புக் கொடுத்தும் அதைத் தவிர்த்து செயற்கை முறையில் அவளை கருத்தரிக்க வைத்ததையும் சொன்னாள். எல்லோரும் வாயடைத்துப் போயினர்.

பிறகு என் மேல் எழுந்த சந்தேகத்துக்கு இடம் கொடுக்காமல் இருக்க மேலும் தொடர்ந்தாள்,

"கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு பைக் ஓட்டிட்டு வர்றது என் புருஷனுக்கு ஒண்ணும் புதுசு இல்லை. போன மாசம் கூட ஒரு தடவை குடிச்சுட்டு பைக்கில் வரும்போது கீழே விழுந்து அடிபட்டுது. இந்த வீதியில் பக்கத்தில் இருக்கறவங்க அவரையும் அவர் பைக்கையும் வீடு கொண்டு வந்து சேர்த்தாங்க. எத்தனையோ தடவை சொல்லி எனக்கு அலுத்துப் போயிடுச்சு. அது மட்டும் இல்லை அவரோட அண்ணன் மாசத்துக்கு ரெண்டு தடவையாவுது இங்கே வருவார். ரெண்டு பேரும் சேந்து கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு வருவாங்க. அதுவும் இந்த வீதியில் இருக்கற எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்"

சிவராமனின் தாய் அதற்கு, "ஏண்டி, நீயே உன் புருஷன் எப்ப சாவன்னு காத்துட்டு இருந்தியா? இப்படி உன் காதலனுக்கு வக்காலத்து வாங்கறே" என்றதும் மைதிலி விக்கித்துப் போனாள்.

சில கணங்களுக்குப் பிறகு தன் மாமனாரின் முன் மண்டியிட்டு , "மாமா, எங்க அப்பா சொன்னாருங்கறதுக்காக என் காதலை மறந்துட்டு கல்யாணம் செஞ்சுட்டேன். அப்பா சொல்லி கல்யாணம் செஞ்சுட்டாலும் உண்மையா என் புருஷனை நேசிச்சேன். அவர் செத்ததில் உங்களுக்கு இருக்கற அளவுக்கு எனக்கும் துக்கம் தொண்டையை அடைக்குது மாமா. அவரோட குறையை எப்பவும் நான் பெருசா நினைச்சதே இல்லை. அத்தையும் அவரும் வற்புறுத்தினதாலதான் குழந்தை பெத்துக்க சம்மதிச்சேன். நான் முரளிக்கு செஞ்ச துரோகத்துக்கு ஒரு பரிகாரமாவும் இருக்கட்டும்ன்னு குழந்தை பெத்துக்கறதுக்காக அவர்கிட்ட என்னைக் எடுத்துக்கச் சொன்னேன். ஆனா முரளி, என் பேருக்கு எந்த மான பங்கமும் வரக்கூடாதுன்னு ஆர்டிஃபீஷியல் இன்ஸெமெனேஷன் மூலம் எனக்கு கருத்தரிக்க ஏற்பாடு செஞ்சப்ப அவரை கையெடுத்துக் கும்பிட்டேன். உண்மையான ஒரு ஃப்ரெண்டாத்தான் அன்னையில் இருந்து இன்னைக்கு வரைக்கும் பாத்துட்டு இருக்கேன். அவர் மேல் அனியாயமா பழி போடறதை பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. அதனாலதான் நான் இதை எல்லாம் சொன்னேன். என்னை நம்புங்க மாமா" என்று கதறி அழுதாள்.

மைதிலியின் பேற்றோர் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் கங்கையாக வழிந்து கொண்டு இருந்தது.

சிவராமனின் தந்தை கமிஷனரிடம் வந்து, "சார், என் மனைவி கொடுத்த கம்ப்ளெயிண்ட்டை நான் வாபஸ் வாங்கிக்கறேன்"

அவர் மனைவி, "என்னங்க நீங்க. அவனைப் போட்டுத் தள்ளிட்டு இவளை வெச்சுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணி இருக்கான். உங்களுக்கு இது கூட தெரியலையா?"

அவர், "கொஞ்சம் சும்மா இருக்கியா? போதும் அந்தப் பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கினது"

தன் மகன்கள் இருவரின் இறப்பில் இருந்த சோகத்துக்கும் மீறி அவர் காட்டிய அன்பில் என் மனம் நெகிழ்ந்தது.

கமிஷனர் சிவராமனின் தாயிடம், "நீங்க கொடுத்த கம்ப்ளெயிண்ட்டை மட்டும் வெச்சுட்டு இவ்வளவு கண்ணியமா நடந்துகிட்ட ஒருத்தர் மேல நாங்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதும்மா. இருந்தாலும், ஹிட் அண்ட் ரன் கேஸ் அப்படிங்கறது ஒரு கொலை மாதிரித்தான். அடிச்சுட்டுப் போன வண்டியையும் தேடிட்டுத்தான் இருப்போம். கிடைச்சதும் நிச்சயம் ஆக்ஷன் எடுப்போம்மா" என்று ஆறுதல் சொல்லியவாறு விடைபெற்றுச் சென்றார்.

டி.ஸி.பி ரெட்டி என்னிடம் தனிப் பட்ட முறையில் , "சாரி ஃபார் த ட்ரபிள் மிஸ்டர் முரளி"

"இட்ஸ் ஆல்ரைட் மிஸ்டர் ரெட்டி. இது எல்லாம் செட்டில் ஆனதுக்கு பிறகு உங்களை க்ளப்பில் சந்திக்கறேன்" என்று விடை கொடுத்தேன்.



தேவைப் பட்டால் ஒரு சிறந்த கிரிமினல் லாயரை அழைக்க வேண்டும் என்று என் அலுவலகத்தின் லீகல் அட்வைஸரிடம் சொல்லி வைத்து இருந்த எனக்கு என் மைதிலி என்மேல் நம்பிக்கை வைத்து இருந்த நம்பிக்கை என்னை வெட்கித் தலை குனிய வைத்தது.


சென்னையில் சிவராமனின் பெற்றோர் வீட்டில் நடந்த பதினோறாம் நாள் பூஜைக்குச் கோவையில் இருந்து வந்து இருந்த என் பெற்றோரையும் அழைத்துச் சென்று இருந்தேன்.

உடனே அவளை என் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தாலும் மைதிலியின் மனத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. மேலும் அவள் கணவன் இறந்த சில நாட்களுக்குள் அந்தப் பேச்சை எடுப்பது உசிதம் அல்ல என்று என் வேலைகளை கவனிக்க மலேஷியா சென்றேன்.



No comments:

Post a Comment