Wednesday, January 27, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 10


மான்சி பஸ்ஸில் வந்த எதிர்காற்றில் குழந்தையை அணைத்தபடி சுகமாக உறங்கிவிட ... இறங்க வேண்டிய இடம் வந்து பஸ் நின்றதும் நடத்துனர் வந்து " ஏம்மா ஊர் வந்தாச்சு இறங்குமா" என்று குரல் கொடுத்ததும் அவசரமாக இறங்கினாள் மான்சி....

மாமியார் வீட்டுக்கு செல்ல கையில் பணம் இல்லை.... அதிகமாக டவுனுக்கு வந்து பழக்கமில்லாததால் அங்கே யாரையுமே தெரியவில்லை,, அத்தனை கிராமங்களுக்கும் மத்தியிலிருக்கும் டவுன் என்பதால் எங்கு பார்த்தாலும் கூட்ட நெரிசலாக இருந்தது..

எல்லாமே அறிமுகம் இல்லாத முகங்கள்... யாரிடம் போய் உதவி கேட்பது? பஸ் ஸ்டான்டில் அமர்ந்து பிச்சை எடுப்பவன் தட்டில் கூட ரூபாய் நோட்டுகள் கிடந்தன்.... அவனிலும் கேடாக நிற்பதை எண்ணி கண்ணீர் முட்டியது.... கூந்தலை கூட சேர்த்து கட்டாமல் பரக்கப் பரக்க விழத்தபடி நின்றிருந்தவளை சிலர் பார்த்துகொண்டே போக....

மான்சிக்கு கோபால் மேல் கோபம் வந்தது... ஊருக்குப் போற மனுசன் என் ஊர்ல எறங்கி என்னையும் கூட்டிப் போறது தான? பச்சப் புள்ளக்காரினு கூட யோசிக்காம போயிட்டாரே? ' மனதுக்குள் புலம்பியபடி குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தபடி நின்றிருந்தாள்...

சுற்றிலும் பார்த்தவளின் கண்ணில் பட்டது “ அம்மா” இனிப்பு கடை .. அவள் ஊரைச் சேர்ந்த பையன் ஒருவன் அங்கே வேலை செய்வது அப்போதுதான் ஞாபகம் வர... கண்முன் கடவுளே தோன்றியது போல் ஒரு நிம்மதியுடன் வேகமாக அந்த கடையை நெருங்கினாள்....

அங்கும் கூட்டமாக இருந்தது,, கூட்டம் சற்று குறையும் வரை காத்திருந்து பிறகு கடையின் கல்லாவில் முதலாளி போல் அமர்ந்திருந்தவரிடம் சென்று " சார்,, மஞ்சப்புத்தூர்லருந்து ஏழுமலைனு ஒருத்தர் இங்க வேலை செய்றாரே அவுரு இருக்காரா?" என்று கேட்க....

அந்த மனிதர் ஏதோ சொல்ல வந்து பிறகு தாமதித்து ,, " நீ எந்த ஊரு? உன் பேரு என்னம்மா ? " என கேட்டார்

" என் பேரு மான்சிங்க... நானும் மஞ்சப்புத்தூர் தான்.... ஏழுமலை இல்லைங்களா?" என்று கேட்டாள்.....

" இங்கதான்மா வேலை செய்றான்.... கொஞ்சம் முன்னாடி தான் உன் ஊர் ஆளுங்க வந்து கூட்டி போனாங்க,, என்றதும் ..

மான்சியின் முகம் வாட " அவனும் இல்லையா?" என்றாள் சலிப்புடன்

அவர் எதுவும் பேசாமல் கல்லாவை விட்டு எழுந்து வெளியே வந்து அங்கிருந்த பிரிட்ஜை திறந்து ஒரு கூல்டிரிங்க் பாட்டிலை எடுத்து அவர் கையாலயே திறந்து மான்சியிடம் கொடுத்து " மொதல்ல இதை குடிம்மா.... காலையிலருந்து சாப்பிடலைனு நினைக்கிறேன்?" என்றார்

மான்சி சங்கடத்துடன் தலையசைத்து " அய்யோ வேணாங்க" என்று மறுக்க.... " பரவாயில்ல குடிம்மா" என்று வற்புறுத்து அந்த குளிர்பானத்தை குடிக்க வைத்தார்....

பிறகு கடை பையனை அழைத்து ஒரு ஆட்டோ அழைத்துவரும்படி கூற .. ஆட்டோ தனக்குத்தான் என்று மான்சிக்குப் புரிய " இல்லைங்க நான் என் மாமியார் வீட்டுக்கு போகனும்.... எனக்கு ஆட்டோ வேணாம்... கையில காசில்லை... பத்துரூபா மட்டும் குடுத்தீங்கன்னா பஸ்லயே போய்டுவேன்" என்றாள்

" பரவால்லம்மா... கை கொழந்தைய வச்சுகிட்டு பஸ்ல போக வேணாம்... இன்னைக்கு முகூர்த்த நாள்.. பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கும்.... நீ ஆட்டோவுலயே போ... நான் ஏழுமலை கிட்ட காசு வாங்கிக்கிறேன்" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோ வந்துவிட " சரி கிளம்பும்மா" என்றவர் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து கடைப் பையனையும் உடன் அனுப்பி வைத்தார்....

மான்சி கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினாள்.... பார்த்தறியாத தனக்கு உதவிய அந்த மனிதரை நினைத்து மனம் நெகிழ்ந்தது...

இன்னும் அரை மணிநேரத்தில் கணவனை சந்திக்கப்போகும் சந்தோஷத்தில் மனம் திளைக்க,, மகனை கொஞ்சியபடி வந்தவளை அந்த கடை பையன் பரிதாபமாக பார்த்தானேத் தவிர எதுவும் பேசவில்லை... மான்சிக்கு குழப்பமாக இருந்தது... ' ஏன் இந்த பையன் அழுவுற மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு வர்றான்? .... ஆமா வேலையில இருந்த ஏழுமலையை ஏன் ஊர் ஆளுங்க கூட்டிப் போனாங்க? ' பதில் தெரியாத குழப்பம் நெஞ்சில் உறுத்தலாய் மாற நடந்த விஷயங்கள் அத்தனைக்கும் முடிச்சிட்டுப் பார்த்தது மனது....

ஊருக்குள் ஆட்டோ நுழையும் போதே ஆங்காங்கே கூடியிருந்த மக்கள் ஆட்டோவைப் பார்த்துவிட்டு பரபரபப்பாய் பேசிக்கொள்ள.... திருமணம் ஆன பிறகு இரண்டாவது முறையாக இப்போதுதான் அந்த ஊருக்குள் நுழைகிறாள்... ஆனாலும் தெருக்களையும் வீடுகளையும் அடையாளம் தெரிந்தது... இந்த தெரு திரும்பி கடைசிலதான அவர் வீடு என்று மனசுக்குள் அடையாளம் சொல்லிக்கொண்டாள்....

தெரு திரும்பும் போது இருந்த டீக்கடையில் ஏழுமலையும் இன்னும் ஊர்காரர்கள் சிலரும் நிற்க,, மான்சியின் இதயம் உலர்ந்து போனது.... இவங்கல்லாம் இங்க என்ன பண்றாங்க?" குழப்பத்துடன் மான்சி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தெருவின் கடைசியில் இருந்த கோபாலின் வீடைப் பார்க்க......

அங்கே வாசலில் பெரிய ஷியாமியானா பந்தல் போடப்பட்டிருக்க நடுவே ஒரு பெஞ்ச் போடப்பட்டு அதன் மீது யாரையோ மாலைப் போட்டு படுக்க வைக்கப்பட்டிருந்தது.....

ஒன்றோடு ஒன்று கோர்வையாகி பல செய்திகள் சொல்ல மான்சிக்குத் தெளிவாக புரிந்துபோனது... ஆட்டோ நெருங்க நெருங்க அவள் இதயம் நொருங்க ஆரம்பித்தது,, படுக்க வைக்கப்பட்டிருப்பது கோபால் என்று புலனாக .. " என்னாங்க" என்று அலறியவளின் மடியிலிருந்த குழந்தையை அவசரமாக கடைப் பையன் தூக்கிக்கொள்ள, மான்சி,, ஓடுகின்ற ஆட்டோ நிற்கும் முன் ஒன்றுமே புரியாமல் வெளியே குதித்தாள்....


தெருவில் விழுந்தவளை கண்டு மான்சியின் ஊர் ஆட்கள் கதறியபடி ஓடிவர.... விழுந்தவள் தானாகவே எழுந்தாள்.... வலது கனுக்காலின் கீழ் சதை கல்லில் பட்டு சக்கையாக பெயர்ந்து ரத்தம் வழிய ..... அதோடு கோபாலிடம் ஓடினாள்......

எதிரில் வந்தவர்கள் அவளை தடுத்து அணைக்க முயல்... அவர்களை ஆவேசமாக உதறிவிட்டு ஓடிப்போய் நின்றவள்.... வாடாத முகத்துடன் தனது கம்பீரம் குலையாமல் தூங்குவது போல் படுத்திருந்த கணவனையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தாள்... நிலவரம் நெஞ்சியில் உரைக்க அடித் தொண்டையிலிருந்து குரலெடுத்து " இல்ல இல்ல அவருக்கு ஒன்னுமில்ல" என்றபடி ஆவேசத்துடன் கோபாலின் கழுத்திலிருந்த மாலையை எடுத்து வீச முயன்றாள்

மான்சியின் அம்மாவும் இன்னும் சில ஊர்ப் பெண்களும் மான்சியை இழுத்துப் பிடித்துக் கொண்டனர்... மான்சி அவர்களிடமிருந்து விடுபட போராடியபடி கதறினாள்.... கொஞ்ச நேரத்தில் கூச்சலும் கதறலுமாக போர்க்களம் போல் ஆனது அந்த இடம்....

ஐயா,, ஊரோ ரெண்டாச்சு......

அதன் ஊடே கடலாச்சு.....

ஐயா,, நாடோ ரெண்டாச்சு...

அதன் நடுவே கடலாச்சு....

ஐயா,, ஓடுகின்ற தண்ணியில..

ஓலை நீ விட்டிருந்தா....

ஐயா,, ஓடி நான் வந்திருப்பேன்

ஓன்னோட கூடி நான் கலந்திருப்பேனே!!


வெகுநேரம் வரை மான்சியின் மனது நடப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தது.... அழுதவள் திடீரென்று ஆவேசமாக கண்களை துடைத்துகொண்டு எழுந்து கோபாலின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் மநெஞ்சின் மீதே படுத்துக் கொள்வாள்.... அதன்பின் அவளை அகற்றுவது பெரும் போராட்டமானது...




சென்னையில் அவள் வசித்த இடத்திலிருந்த அத்தனை பேரும் வேனில் வந்திருந்தனர்... சரஸ்வதியும் அவள் கணவனும் கோபாலை ஏற்றி வந்த காரிலேயே வந்துவிட்டிருந்தனர்.... சரஸ்வதி தான் மான்சியை தடுத்து தூக்கி " அடிப்பாவி மகளே அந்த மனுசன் உன்னைய விட்டு போய் ரொம்ப நேரமாச்சுடி.... கடைசி நிமிஷம் வரைக்கும் மான்சி மான்சினு சொல்லிக்கிட்டே இருந்தாரு... இவ்வளவு அன்பு வச்சிருந்த ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ கொடுத்து வைக்கலையே" என்று மான்சியை அணைத்துக்கொண்டு கதறினாள்

ஒரு கட்டத்தில் மான்சியால் நிற்ககூட முடியாமல் மயங்கி சரிய... அந்த வீட்டு திண்ணையில் தூக்கிச்சென்று கிடத்தினார்கள்.... சரஸ்வதி ஓடி வந்து ஈரத்துணியால் ரத்தம் வழியும் மான்சியின் காலில் கட்டுப் போட்டாள்....

யாரோ ஒருவர் " அந்த பொண்ண இப்ப எழுப்பாதீங்கம்மா.... அழுது ஆர்பாட்டம் செய்யும்... தூக்கும் போது எழுப்பினா கடைசி சடங்கெல்லாம் செய்ய சரியா இருக்கும் " என்று சொல்ல....

அவ்வளவு நேரமாக எங்கோ மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த சுகுனா ஆத்திரத்துடன் அங்கே வந்து " ஏன்யா அந்த பொண்ண எழுப்பகூடாது? இனி எப்ப அவ புருஷனைப் பார்க்கப் போறா? அழுவட்டும் விடுங்க " என்றவள் மான்சியின் தலையைத்தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து " எழுந்திரு மான்சி" என்று கன்னத்தில் தட்டித் தட்டி அடுத்தடுத்து குரல் கொடுத்ததும் மான்சி மெல்ல கண்விழிக்க....

" எழுந்திரும்மா கண்ணு,, இன்னும் கொஞ்சநேரம் அந்தாளு பக்கத்துல இறேன்,, ஒன் நெனைப்போட தான்டி உசுரேப் போச்சு,, கடைசி நிமிஷம் வரைக்கும் ஒன் பேரைத்தான் சொல்லுச்சு புள்ள,, வா வந்து அந்தாள கட்டிகிட்டு அழு மான்சி" என்று கண்ணீரும் கதறலுமாய் கத்திய சுகுனா மான்சியை தூக்கி நிறுத்தி தன் தோளில் சாய்த்து இழுத்தபடி சென்று கோபால் கிடத்தப்பட்டிருந்த பெஞ்சின் அருகே சென்று... " யாராவது ஒரு சேர் எடுத்துட்டு வாங்கப்பா" என்று அதட்ட.... அடுத்த நிமிடம் ஒரு சேர் கொண்டு வந்து பெஞ்சின் அருகில் போடப்பட்டது...

மான்சியை அந்த சேரில் அமர வைத்த சுகுனா " உன் புருஷன இன்னும் கொஞ்சநேரம்தான் பாக்க முடியும்... அந்தாள மேல விழுந்து பொரண்டு அழுடி,, நல்லா அழு... போகும் போதாவது நிம்மதியா ஆத்மா சாந்தி அடையட்டும்" என்றவளின் குரலும் கதறலாய் ஒலிக்க ....

சுகுனாவையேப் பார்த்த மான்சி கணவனை விட்டு சுகுனாவை தாவியணைத்து ... " அக்கா,, என் பொழப்பு இப்புடி நடுத்தெருவுக்கு வந்துருச்சே? இனி இவரு இல்லாம என்னால வாழ முடியாதேக்கா? என்னையும் என் புள்ளையையும் நடுத்தெருவுல விட்டுட்டு போயிட்டாரே" என்று ஓங்கி குரலெடுத்து தொண்டை கிழிவது போல் கதறயழ.....


சுகுனாவாலும் தாங்க முடியாமல் மான்சியை அணைத்தபடி கோபாலின் நெஞ்சில் விழுந்து " என் பொண்டாட்டிக்கு உலகம் தெரியாதே,, நான் போனதும் அவ எப்புடி தனியா இருப்பா ,, மான்சி மான்சினு,, பொலம்பிகிட்டே உசுர விட்டயே என் ராசா,, இந்த உன் பொண்டாட்டி அழுவுறாய்யா,, அவளுக்கு ஆறுதல் சொல்லவாவது வாயேன் என் ராசா" என்று தன் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுதவளை சரஸ்வதி வந்து தடுத்து " யக்கா நெஞ்சுல அடிச்சுக்காம அழுவுக்கா..." என்று கெஞ்சலாக கூறினாள்......

அந்த இரண்டு பெண்களின் கதறல் கேட்டு ஆண் பெண் என்ற பேதமின்றி அத்தனை பேரும் கண்ணீர் சிந்தினார்கள்..... சுகுனா மான்சியை அணைத்துக்கொண்டு பாட்டுப்பாடி அழுதாள்.... ஒப்பாரிப் பாட்டின் ஒவ்வொரு வரியும் நெஞ்சை குத்தி கிழிப்பது போல் இருந்தது

முத்து பதித்த முகம்

முதலிமார் மதித்த முகம்

தங்கம் பதித்த முகம்

தரணிமார் மதித்த முகம்...


ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு

நான் ஒய்யாரமா உன் கூட வந்தேனே

இப்ப நீ பட்ட மரம்போல படக்குன்னு சாய

நானும் பட்டு போயிட்டேனே என் ராசா,,


பொட்டு இல்ல பூவில்லை

பூச இனி மஞ்சளும் இல்ல

தங்கத்துல தாலி செஞ்சு

என்ன தாரமாகின என் ராசாவே

என்ன விட்டுத்தான் போனீங்களே...


இனி பட்டு இல்லை தங்கம் இல்லை

ஐயா, பரிமார பந்தல் இல்ல

தேசிங்கு போல படையெடுத்து வந்த ராசா

இப்படி பாதியியில போறீங்க்களே ஐயா?....


நான் முன்னே போறேன்

நீ பின்னே வாருங்கோனு சொல்லிட்டு

எனக்கு இடம்பிடிக்கப் போறீங்களா என் ராசாவே?.

என்னை ஆளவந்த ராசாவே


என் வாழ்க்கை முடிந்ததைய்யா

வாழுகிறேன் உம்மை நினைத்து

ஆலமரம் வேரறுந்து அடியோடு சாய்ந்ததனால்

பாதிவழி வாழ்க்கையில் நின்று

பாவி நான் தவிக்கிறேனே என் ராசாவே


ஊர் கூடி ஒப்பாரி வைக்க...

நான் ஒன் நெனப்புல கத்துறனே ஐயா ,

உங்க காதுக்கு கேக்கலையா என் ராசாவே?

உங்களுக்கு காதும் கேக்கலையா என் ராசாவே.




மான்சியோ கத்திக் கத்தி இறுதியில் கோபாலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சிலேயே சாய்ந்துவிட்டாள்.... சுகுனா மான்சியை விட்டு நகராமல் செத்தவனுக்காகவும்.... அடுத்து என்ன என்று புரியாமல் துவண்டு கிடக்கும் மான்சிக்காவும் விடாமல் அழுதாள்...



No comments:

Post a Comment