Monday, January 4, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 4

காலை மணி ஏழரைக்கு பஸ் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டை சென்றடைய... மான்சியின் மனதுக்குள் சிறு உதறலோடுதான் மதுரை மண்ணில் கால் வைத்தாள்.... அவள் பதட்டம் புரிந்து மான்சியின் கையைப்பற்றிய மரகதம் “ அந்த வீட்டுல உனக்கு ஒரு குறையும் வராது கண்ணு... கவலைப்படாத நாங்க இருக்கோம்” என்றாள் ஆறுதலாக...

மான்சி ஒன்றும் பேசாமல் சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்... மூவரும் திருமங்கலம் பேருந்தில் ஏறினர்.... திருமங்கலத்தில் இறங்கி சத்யன் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியதும் மான்சி அந்த வீட்டை வெளிப்புறமாக பார்த்தே நடுங்கிப் போனாள்...



இது வீடா அரண்மனையா? இந்த வீட்டுலயா வேலை செய்யனும்? நடுக்கத்துடன் “ அம்மாச்சி” என்றபடி மரகதத்தின் கையைப்பிடித்துக் கொண்டாள்..

கேட்டைத் தட்டியதும் வாட்ச்மேன் சிறிய கதவை திறந்துவிட “ நீ எதையும் யோசிக்காம வா கண்ணு” என்றபடி சாமி முன்னால் போக... மரகதம் பேத்தியுடன் உள்ளே கால் வைத்தாள்...

மான்சி பிரமிப்பு மறையாத முகத்தோடு முகப்பை கடந்து ஹாலுக்கு சென்றாள்.... ஹாலில் யார் யாரோ நடமாடிக்கொண்டிருந்தனர் .. மரகதம் மான்சியின் கையைப் பிடித்து அழைத்துச்சென்று சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த தாத்தாவின் முன்னால் நிறுத்திவிட்டு “ ஐயா நான் சொன்ன பொண்ணு இவதானுங்க” என்று சொல்ல...

அந்த கால மகாராஜாக்கள் எல்லாம் இப்படித்தான் இருந்தார்களோ என்ற பாவனையுடன் நிமிர்ந்த சொக்கலிங்கம் மான்சியைப் பார்த்தார்... மான்சி தனது வழக்கமான அதே அமைதி புன்னகையை தாத்தாவை நோக்கி வீச.... அவள் முகத்தில் இருந்த அமைதியும் அதையும் மீறித் தெரிந்த நிமிர்வும் சொக்கலிங்கத்தை பெரிதும் ஈர்த்தது “ உன் பெயர் என்னம்மா? என்ன படிச்சிருக்க?” என்று கேட்டார்....

“ பெயர் மான்சி... ப்ளஸ்டூ படிச்சிருக்கேன் ஐயா ” என்றாள் மான்சி....

அந்த குரலும் கூட ஈர்த்தது “ மேலே ஏன் படிக்கலைம்மா?”

“ திருச்சி போய் படிக்கனும்னு எங்க பாட்டி வேனாம்னு சொல்லிட்டாங்க ஐயா” என்று மான்சி சொல்ல....

சிறிதுநேரம் மான்சியின் முகத்தையே பார்த்தவர் மரகதம் பக்கம் திரும்பி “ சரி மரகதம் கைகால் கழுவிட்டு பூஜை ரூம் கூட்டிட்டுப் போய் நம்ம பழக்க வழக்கமெல்லாம் சொல்லிகுடுத்து உனக்கு உதவியா வச்சுக்க... சம்பளம் வழக்கமா எல்லாருக்கும் தர்றதே குடுக்கலாம்னு சொல்லிடு” என்றவர் மீண்டும் பேப்பரில் மூழ்கினார்...

மரகதம் மான்சியை தோட்டத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றாள்... அழகான தோட்டத்தை ஒட்டியிருந்த சிறு சிறு குடில்கள்..... மான்சியின் மனதை இத்தனை நாட்களாக சூழ்ந்திருந்த ஒருவித வெறுமை விலகி புதிதாய் பூத்த மலர் போல முகம் மலர்ந்தாள் ... இந்த தோட்டம் ஒன்றே போதுமே... பசிகூட எடுக்காது.....

காலடியில் உதிர்ந்து கிடந்த மலர்களை கூட மிதித்துவிடாமல் கவனமாக நடந்தவளைப் பார்த்து சிரித்த மரகதம் “ இன்னும் கொஞ்சநேரத்தில எல்லாத்தையும் கூட்டி குப்பையில அள்ளிப் போட்டுருவாங்க கண்ணு” என்று சொல்ல...

மான்சியின் முகம் பட்டென்று வாடியது.... பலவண்ணப் பட்டாடைகளை விரித்தது போல் கொட்டிக்கிடந்த மலர்களை குப்பையில் கொட்டிவிடுவார்களா? ம்ஹ்ம் .... உதிர்ந்த மலர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துவிட்டு மரகதத்தின் வீட்டுக்குள் சென்றாள் 


மான்சியின் பெட்டியை வாங்கி வைத்துவிட்டு “ பின்னாடி குழாய் இருக்குப் பாரு கண்ணு... போய் முகம் கைகால் கழுவிட்டு வா... நான் போய் உனக்கு குடிக்க காபி எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு மரகதம் தோட்டத்து வாசற்படி வழியாக பங்களாவுக்குள் நுழைந்தாள்....

மான்சி தனது பெட்டியைத் திறந்து டவலை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் பின்னால் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கழுவிவிட்டு டவலால் துடைத்தபடி வீட்டைச் சுற்றிக்கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்...

அந்த வீட்டின் பிரமாண்டமான கட்டிடத்தை விட..... மலர்களும் கொடிகளும் மரங்களும் சூழப்பட்ட தோட்டம் அவளை பெரிதும் கவர்ந்திருந்தது.... ரசனையோடு வேலைகளை செய்ய முதல் வித்தாக அந்த தோட்டம் அவளுக்கு புத்துணர்ச்சியைத் தர.... அங்கிருந்தபடியே அந்த கம்பீரமான பங்களாவை நிமிர்ந்துப் பார்த்தாள்...

முக்கால்வாசி கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்தன பங்களா சுவர்கள்.... ஆனால் அத்தனையும் கறுப்பு கண்ணாடிகள் .... ஒன்றுகூட திறந்து வைக்கப்படவில்லை.... அடைத்து கிடந்தன ஜன்னல்கள்.... ஏன் இந்த கறுப்பு? உள்ளே நடப்பதை வெளியேப் பார்க்கக்கூடாது என்பதற்காகவா? வெளியே நடப்பதை உள்ளே இருப்பவர்கள் கண்டுகொள்ள கூடாது என்பதற்காகவா? ஏதோவொன்று.... ஆனால் இவ்வளவு அழகான தோட்டத்தை அமைத்து அதைப் பார்க்காமல் மூடிக்கொண்டு வசிக்கு அந்த பங்களா வாசிகளின் ரசனையை எண்ணி மான்சிக்கு சிரிப்புதான் வந்தது....

மான்சி ஒரு வெள்ளை ரோஜா செடியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்... பூத்துக்குலுங்கிய ரோஜா. மலர்களை இரு கைகளில் ஏந்தி “ அவர்கள் ரசிக்காவிட்டால் போகட்டும்.... இனி தினமும் நான் ரசிக்கிறேன் உங்களையெல்லாம்” என்று ஆறுதல் சொன்னாள்

அவள் சொல்லிமுடித்ததும் அந்த மலர்களின் மலர்ச்சி அதிகமானது போல் இருந்ததது.... சில மலர்கள் தலையைக் கூட அசைத்தது போலிருந்தது.... தங்களுக்கு ஒரு இளவரசியின் அங்கீகாரம் கிடைத்த சந்தோஷம் அவைகளுக்கு

“ என்னா கண்ணு பூக்கூட பேசிக்கினு இருக்கியா?” என்ற மரகதத்தின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த மான்சி புன்னகை மாறா முகத்துடன் பாட்டிக் கொடுத்த காபியை வாங்கிக்கொண்டாள்...

“ உனக்குத்தான் சின்ன வயசுலருந்தே செடி வளர்க்க பிடிக்குமே கண்ணு.... நீ பூஜை வேலையெல்லாம் முடிஞ்சதும் இந்த தோட்டவேலை செய்மா... தோட்டக்காரன் வரதன்கிட்ட நான் சொல்லி வைக்கிறேன்” என்று மரகதம் சொன்னதும்...

மான்சி சந்தோஷமாக தலையசைத்தாள்... இருவரும் காபி குடித்து முடித்ததும் மான்சியை அழைத்துக்கொண்டு பங்களாவுக்குள் வந்த மரகதம் பூஜையறையின் கதவை திறந்து உள்ளே அழைத்துச்சென்றாள்...

அந்த அறையைப் பார்த்து மான்சி பிரமித்துப்போனாள்.... சிறு கோயில் போல் தெய்வீகத்துடன் இருந்தது..... சில ஐம்பொன் தெய்வ விக்ரகங்களும்... விநாயகரும் முருகனும் மட்டும் வெள்ளியிலும் இருந்தது.... சுவரெங்கும் நிறைய சுவாமி பெயிண்டிங்குகளும்... பழங்கால ஓவியங்களுமாக பார்க்கவே உடலில் ஒரு புல்லரிப்பு வந்தது...

“ சாமி செலை எல்லாம் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் தான் தேய்ச்சு அபிசேகம் பண்ணனும் கண்ணு... மத்தபடி தினமும் பூவைக் கட்டி மாலையாப் போட்டா போதும்... ஆனா பூஜை பாத்திரங்களை மட்டும் தினமும் தேய்க்கனும்... சாயங்காலம் தேய்ச்சு வச்சுட்டா காலையில எழுந்ததும் பூஜை பண்ண வசதியா இருக்கும்....” என்ற மரகதம் பூஜை செய்யும் முறைகளையும் மான்சிக்கு சொல்லிக் கொடுத்தாள்... மான்சி கவனமாக கேட்டுக்கொண்டாள் 




“ பெரியம்மா உசுரோட இருந்தப்ப என்னை கூடவே வச்சுகிட்டு பூசை பண்ணுவாங்க... அவுகப் போனதுக்கப்புறம் வீட்டுக்கு வந்த மருமக பூஜை பண்ணத் தெரியாதுன்னு சொல்லிட்டதால பெரியவரு என் பொருப்புல ஒப்படைசாரு... இந்த வீட்டு சின்னராசாவுக்கு கல்யாணம் ஆகி அவரு சம்சாரத்துகிட்ட பூஜைரூம் பொருப்பை கொடுத்துட்டு தான் நான் ஓய்வெடுக்கனும் நெனைச்சேன்.... ஆனா ஆண்டவன் நெனைப்பு வேறய இருக்கு” என்று நீண்ட பெருமூச்சுடன் கூறிவிட்டு “ சரி கண்ணு நீ வா மத்த வேலைக்காரங்களையும் அறிமுகம் பண்ணி வைக்கிறேன்” என்று வெளியே அழைத்து வந்தாள்....

அந்த பங்களாவில் இரண்டு சமையலறை இருந்தது... ஒன்று நவீனமாக வீட்டு உறுப்பினர்களுக்கு மட்டும் சமையல் செய்ய.... மற்றொன்று மொத்த வேலைக்காரர்களுக்கும் ஒட்டு மொத்தமாக சமையல் செய்ய பழைய சமையலறை ...

. எப்போதும் வீட்டிலேயே இருக்கும் சபாபதி என்ற ஐம்பத்தைந்து வயது காரியதரிசி ஒருவர்.... இவரின் மேற்பார்வையில் தான் அந்த வீட்டு வேலைக்காரர்களின் நடவடிக்கைகள் இருக்கும்...

மான்சியை அழைத்துச்சென்று முதலில் சபாபதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மரகதம் பாட்டி.... மான்சியை ஏறஇறங்க பார்த்தவர் மனதில் ஓடியது என்னவென்றால் ‘ இவ்வளவு அழகானப் பொண்ணு நல்லவேளை சத்யன் படுத்தப்படுக்கையா ஆனதும் வேலைக்கு வந்திருக்கு... இல்லேன்னா இந்த பொண்ணோட கதி?’

மான்சி தனது வழக்கமான புன்னகையுடன் அவரை நோக்கி கைகூப்ப ... “ நல்லதும்மா ரொம்ப அடக்கமானப் பொண்ணா தெரியுற.... பொருப்பா வேலைகளை பாரும்மா அது போதும்” என்றார்....

மான்சி தலையசைத்து ஒப்புதல் கூறிவிட்டு அங்கிருந்து நகர.... ஊழியர்களின் சமையலறைக்குச் சென்று அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டாள் மான்சி...

அங்கிருந்த ஒருப் பெண் அதிசயமாக மான்சியைப் பார்த்து “ இதென்ன இந்த புள்ள இம்பூட்டு அழகா இருக்கு... இதுக்கென்ன வீட்டு வேலை செய்யனும்னு தலையெழுத்தா? சினிமாவுல் போய் நடிக்கலாமே?” என்று சொல்ல மான்சி அதற்கும் அமைதியாக புன்னகைத்தாள்....

இறுதியாக தோட்டக்காரன் வரதனிடம் மான்சியை அறிமுகம் செய்துவிட்டு “ வரதா இவ என் பேத்தி.... தோட்டம் வைக்கிறதுன்னா இவளுக்கு ரொம்ப இஷ்டம்... வீட்டுல வேலை இல்லாத சமயத்துல இங்க வந்தா கொஞ்சம் பார்த்துக்க வரதா.... உனக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்று மரகதம் சொல்லிவிட்டு.... “ கண்ணு எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நீ இங்கேயே இரு நான் இதோ வர்றேன்” என்று கூறி சத்யனுக்கு மதிய உணவு எடுத்துச்செல்ல அவசரமாக அங்கிருந்து சென்றாள் மரகதம்

வரதனுக்கு முப்பது வயதுக்குள் இருக்கலாம்.... உழைப்பின் வீரியம் உருவத்தில் தெரிந்தது... இவ்வளவு பெரிய தோட்டத்தை இவன் ஒருவனே பராமரித்து வருகிறான்.... எவ்வளவுதான் ஆர்வமும் ஆசையுமாக தோட்டங்களை அமைத்தாலும் அதை ரசிக்க அந்த வீட்டில் ஆளில்லையே என்ற ஆதங்கம் எப்போதுமே வரதனுக்கு உண்டு....

வேலைக்கு வந்தவள் தானே என்று எண்ணாமல் மான்சியின் தோற்றம் மரியாதையை தர... கைகூப்பி “ வணக்கம்மா.... காலையில நீங்க வந்தப்பவே பார்த்தேன் கொட்டிக்கிடந்த பூக்களை மிதிக்காம கவணமா போனீங்க.... என்னோட வளர்ப்புகளை ரசிக்க ஆள் வந்தாச்சுன்னு மனசுக்குள்ள சந்தோஷமா இருந்துச்சும்மா.... இந்த தோட்டத்துல அறியவகை மலர்கள் எல்லாம் இருக்கும்மா.... உங்களுக்கு எப்போ சமயம் கிடைக்குதோ அப்போ வாங்கம்மா நான் தோட்டத்தை சுத்தி காட்டுறேன்” என்று ரொம்பவும் மரியாதையாக பேசினான்


மான்சிக்கு மலர்களிடம் கூட மனிதநேயமிக்க அந்த இளைஞனை பிடித்துவிட “ என் பெயர் மான்சி... நான் உங்களைவிட ரொம்ப சின்னவளாதான் இருப்பேன்... அதனால வா போன்னே கூப்பிடுங்க” என்று சொல்ல...

“ இல்லம்மா இந்த பூக்களுக்கு நடுவுலே உங்களைப் பார்க்கும்போது அம்மன் சாமிய பூ அலங்காரத்தோட பார்க்குற மாதிரி ஒரு சிலிர்ப்பு வருதும்மா.... என் தோட்டத்துக்கு புதுசா வந்த தேவதையை நான் மரியாதையோடயே கூப்பிடுறேன்” என்றான்.....

மான்சி எதுவும் பேசவில்லை... இதேபோல் அன்று பரசு இவளை சாமியுடன் ஒப்பிட்டு பேசியது ஞாபகம் வர... அதன் தொடர்ச்சியாக நீண்ட கேசம் வளர்த்த அந்த இளைஞனும் ஞாபகத்துக்கு வந்தான்... இறுதியாக அவன் பார்த்துவிட்டு சென்றது ஞாபகத்துக்கு வந்ததும்... அந்த பார்வையை நினைத்து இப்போதும் கூட மான்சிக்கு வியர்த்துப் போனது... ஏனோ தெரியவில்லை இந்த மலர்த் தோட்டத்தை கண்டதும் அவனது ஞாபகமும் அதிகமாக வருவது போல் இருக்க... அவனை மறுபடியும் காணமுடியுமா? என்று கிளர்ந்த நீண்டதொரு பெருமூச்சை தன் நெஞ்சுக்குள்ளேயே அடக்கினாள்

“ சரி அண்ணா நான் நேரம் கிடைக்கும் போது வர்றேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகன்று மீண்டும் தோட்டத்து வாசல் வழியாக பங்களாவுக்குள் நுழைந்தாள்....

மரகதம் உணவு பாத்திரங்களை கையில் ஏந்தியபடி மாடிப்படிகளில் ஏற கூடவே இன்னொரு பெண் தண்ணீர் கூஜா தட்டு முதலியவற்றை எடுத்துக்கொண்டு சென்றாள்... மாடியின் திருப்பத்தில் இருந்த வேலைபாடுகள் நிறைந்த பிரமாண்டமான கதவை திறந்துகொண்டு மரகதம் உள்ளே சென்று கையிலிருதவற்றை வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த பெண்ணிடம் இருந்தவற்றையும் வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை கீழே அனுப்பிவிட்டு உள்ளே சென்று கதவை மூடிவிட்டாள் ...

கீழேயிருந்து இதையெல்லாம் பார்த்த மான்சிக்கு வியப்பாக இருந்தது.... அம்மாச்சி மட்டும் தான் அந்த ரூமுக்குள்ள போகனுமா? அப்படியாரு அங்கே இருக்காங்க? இந்த கேள்வியை யாரிடமும் கேட்டு பதில் பெற விரும்பவில்லை மான்சி அவளுக்குத் தெரியும் சொல்லக்கூடிய விஷயம் என்றாள் அம்மாச்சியே சொல்லுவாங்க என்று....

அம்மாச்சி வர்றவரைக்கும் என்ன செய்வது என்ற யோசனையுடன் அந்த பெரிய ஹாலை தனது பார்வையால் அளந்தாள்.... எல்லாமே நேர்த்தியாக இருந்தது..... ஆனாலும் அவளுக்குள் இருந்த கலையார்வம் சிலவற்றை மாற்றியமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது

பிரமாண்டமான பெரிய சோபாக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க... அதை ஒருவன் துணியால் துடைத்துக்கொண்டிருந்தான்..... அவனை நெருங்கிய மான்சி “ அண்ணா இந்த பெரிய சோபாவை எல்லாம் சுவர் ஓரமாப் போட்டுட்டு இரண்டு பேர் உட்கார்ர இந்த சோபாவையெல்லாம் ஹால் நடுவுல மூன்று மூன்றா முக்கோணம் மாதிரி போட்ட நல்லாருக்குமோ?” என்று சொன்னதும்.....

அவன் துடைப்பதை விட்டுவிட்டு இவளை ஆச்சர்யமாகப் பார்த்து “ அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் எங்க சின்னராசாவும் அவுக பிரண்ட்ஸ் எல்லாம் ஒருநாளைக்கு வருவாகன்னு இப்படித்தான் மாத்திப் போடச் சொன்னாக... இப்ப நீங்களும் அதையேதான் சொல்றீக” என்றான் வியப்புடன்...


ஓஓஓ அந்த சின்னராசாவும் ரசனையுள்ள ஆளாகத்தான் இருக்கனும் என்று எண்ணிய மான்சி “ சரி வாங்க நீங்க ஒருபக்கம் பிடிங்க நான் ஒருபக்கம் பிடிக்கிறேன் எல்லாத்தையும் மாத்திப் போடலாம்” என்றதும் அவனும் ஆர்வமாக வந்தான்...

நீண்ட இருக்கைகள் கொண்ட சோபாக்கள் எல்லாம் சுவர் ஓரம் நகர்த்தப்பட்டு.... சிறிய சோபாக்கள் ஒரே கலரில் செட் செட்டாக ஹாலின் நடுவே போடப்பட்டது.... அவற்றின் நடுவே அழகிய வேலைபாடுகள் நிறைந்த டீபாய்கள் போடப் பட்டது.... அந்தந்த சோபாக்களின் நிறத்திற்கு ஏற்றவாறு மலர்கொத்துகள் வைக்கப்பட்ட ஜாடிகளை டீபாயின் மேல் வைத்தாள்..... சற்று நேரத்தில் வேலை முடிந்தது,,, இப்போது அந்த ஹாலைப் பார்த்தால் நட்சத்திர ஹோட்டலின் ரிசப்ஷன் போல் பளிச்சென்று இருந்தது.....

ஆபிஸ் அறையில் அமர்ந்தபடி காரியதரிசி சபாபதி இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்..... இவ்வளவு நாட்களாக இல்லாத மாற்றம் என்பதால் அந்த ஹாலே இப்போது அழகாகிவிட்டது போல் இருந்தது....

மாடிப்படிகளின் முகப்பில் இருந்த ஆளுயர குத்துவிளக்குகள் நிறம் மங்கித் தெரிய.... பிராஸ் பவுடரை கொண்டு பளபளப்பு ஏற்ற ஆரம்பித்தவளைப் பார்த்து மற்றொரு பெண்ணும் அவசரமாக அவளுக்கு உதவியாக வந்தாள்... கொஞ்சநேரத்தில் அந்த வெண்கல விளக்கு ஜொலித்தது....

மான்சி சென்று கைகழுவிவிட்டு வருவதற்கும் மரகதம் வருவதற்கும் சரியாக இருக்க.... வேலைக்காரர்கள் எல்லோரும் மரகதத்தை சுற்றிக்கொண்டு “ எங்கருந்தும்மா இந்த புள்ளைய கூட்டியாந்த? என்னா சுறுசுறுப்பு.... சிட்டு மாதிரி வேலை செய்யுது” என்று புகழ்ந்தனர்...

மரகதம் பெருமையாக தன் பேத்தியைப் பார்க்க .... “ மொதல்ல மான்சிக்கு சாப்பாடு குடுங்க” என்று அதட்டிய சபாபதி ... மான்சியிடம் திரும்பி “ இதுபோல் முதலாளி குடுக்குற சம்பளத்துக்கு உண்மையா உழைக்க நினைக்கிற உன்னைப் போல சிலர் இருக்குறதால தான் நாட்டுல மழை பெய்யுது.... நீ சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து சாயங்காலமா பூஜை ரூம் வேலையைப் பாரும்மா.... நாளைக்கு வெள்ளிக்கிழமை” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகன்றார்....

மான்சி வேலைக்காரர்களுடன் அமர்ந்து சிரித்து பேசியபடி சாப்பிட்டாள்..... அங்கிருந்த அத்தனைப் பேருக்கும் மான்சியை பிடித்துப் போனது.... மான்சிக்கும் அந்த இடமும் மனிதர்களும் ரொம்ப பிடித்துப்போனது.... ஆனால் தாத்தாவைத் தவிர வீட்டின் மற்ற உறுப்பினர்கள் யாரையும் இவ்வளவு நேரத்துக்கு மான்சி சந்திக்கவில்லை...

சாப்பிட்டு விட்டு மரகதத்தின் வீட்டிற்கு சென்று சிறிது ஓய்வெடுத்தவள் சரியாக நாலரை மணிக்கு எழுந்து முகம் கழுவி தலைவாரி பொட்டிட்டு பங்களாவுக்குள் இருக்கும் பூஜையறைக்கு வந்தாள்...

அவளுடன் மரகதமும் வந்து எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்ல.... மான்சி விக்ரகங்களை பிராஸ் பவுடரில் தேய்த்து ஒரு துணியால் துடைத்து விட்டு பூஜை பாத்திரங்களை பளபளவென்று துலக்கி துடைத்து வைத்தாள்.... பூஜை செய்வது அவளுக்குப் பிடித்தமான ஒன்று என்பதால் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தாள்....

காலையில் பூஜைக்கு தயாராக எல்லாவற்றையும் வைத்துவிட்டு மான்சி அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது இரவு எட்டரை ஆகியிருந்தது.... நெற்றி வியர்வையை புடவை முந்தானையால் துடைத்தபடி சென்றவளை தாத்தாவின் குரல் அழைக்க... வேகமாக அவரருகே வந்து பணிவுடன் நின்றாள்....


சோபாவில் அமர்ந்து பைலைப் புரட்டிக்கொண்டிருந்த தாத்தா.. அவளது முகத்தைப் பார்த்துவிட்டு “ என்னம்மா வேலை ரொம்ப கஷ்டமாயிருக்கா?” என்று கருணையுடன் கேட்க....

அந்த குரலிலேயே அவ்வளவு நேரம் செய்த வேலையின் களைப்பு பறந்துவிட்டது மான்சிக்கு.... பளிச்சிடும் புன்னகையோடு “ இல்லைங்கய்யா எனக்கு சாமி கும்பிடுறதுன்னா ரொம்ப பிடிக்கும்..... செய்யும் வேலையில அதனால கஷ்டம் தெரியலை” என்றாள்...

“ இந்த சோபாவையெல்லாம் நீதான் மாத்தினயா? சபாபதி சொன்னான்... இப்போ பார்க்க நல்லாருக்கு” என்று பாராட்டியவர்.... எதிர் சோபாவில் அமர்ந்து பைலுக்குள் மூழ்கியிருந்த மகனை பார்த்து “ ராஜா இந்த பொண்ணுதான் புதுசா வேலைக்கு வந்திருக்கா.. பெயர் மான்சி... நம்ம மரகதத்தோட பேத்தி” என்றவர் மான்சியிடம் “ இவன் என்னோட ஒரே மகன் ராஜலிங்கம்” என்று சொல்ல....

ராஜா தனது அப்பாவை ஆச்சர்யமாக பார்த்தார்.... வேலைக்காரர்களை நியமிப்பதும் விலக்குவதும் அவர்களின் கணக்கு வழக்குகளும் சொக்கலிங்கம் சபாபதி இவர்களோடு முடிந்துவிடும்... சொக்கலிங்கம் மகன் ராஜாவிடம் யாரையும் இதுவரை அறிமுகம் செய்ததில்லை... இன்னும் கேட்டால் எத்தனை வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் யார் யார் என்று கூட ராஜாவுக்கு தெரியாது... அப்படிப்பட்ட அப்பா இன்று புதிதாய் சேர்ந்த ஒரு பெண்ணை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் தன்னையும் அவளுக்கு அறிமுகம் செய்தது ஆச்சரியமாகத் தான் இருந்தது

அந்தப் பெண்ணின் முக்கியத்துவம் வியப்பளித்தாலும் திரும்பி மான்சியைப் பார்த்து புன்னகைத்து “ வெல்கம் மை பேலஸ் ” என்றதும் மான்சி முதலாளி ஆயிற்றே என்று வளைந்து குழையாமல் கைகூப்பி புன்னகையுடன் தலையசைத்தாள்....

அந்த புன்னகையில் இருந்த அமைதி ராஜாவையும் வீழ்த்தியது.... சற்றுமுன் செயற்கையாக ஆங்கிலத்தில் வரவேற்றவர் இப்போது “ என்ன வேலைக்காக உன்னை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிருக்காங்க?.... வேலை பிடிச்சிருக்கா? ” என்று அக்கரையுடன் விசாரித்தார்...

மான்சி தனது வேலைப் பற்றிய விபரங்களை சொல்லிவிட்டு “ செய்ற வேலை தெய்வத்துக்குங்கறதால ரொம்ப பிடிச்சிருக்குங்கய்யா” என்று கூறியதும்...

ராஜா ஒப்புதலாக தலையசைக்க.... “ சரி மான்சி நீபோய் சாப்பிட்டு தூங்கு” என்றார் தாத்தா... மான்சி சரியென்று தலையசைத்து நகர்ந்ததும் “ இந்த பைல்ல மார்க் பண்ண இடத்துல ராஜிய சைன் போடச்சொல்லி காலையில ஆடிட்டர் கிட்ட குடுத்துடு ராஜா” என்று கூறிவிட்டு பெரியவரும் தனது அறைக்குக்கு எழுந்து சென்றார்...

மான்சி மதியம் போலவே ஊழியர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சிறிதுநேரம் தோட்டத்தில் உலாவினாள்... நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் தேவலோகமாய் ஜொலித்தது தோட்டம்.... விட்டால் இரவு முழுவதும் அங்கேயே சுற்றுவாள் போல் இருக்கும்போது மரகதம் வந்து மான்சியை அழைத்துச் சென்றாள்

வீட்டுக்குப் போய் பாயை விரித்துப் படுத்துக்கொண்ட மான்சி.... “ நீ மட்டும் ஏன் அம்மாச்சி எல்லார் கூடயும் சாப்பிட வரலை?” என்று கேட்க...


பேத்தியின் அருகில் பாயைப் போட்டு படுத்த மரகதம் “ நானும் முன்னாடியெல்லாம் இவங்க கூடத்தான் சாப்பிடுவேன் கண்ணு... இப்ப கொஞ்சநாளா சின்னராசாவை சாப்பிட வச்சிட்டு நான் வந்து சாப்பிட தாமதமாகுது... எனக்காக யாரும் காத்திருக்க வேனாம்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றாள்....

சின்னராசா என்றதுமே மான்சிக்கு புரிந்து போனது அவன் ராஜாவின் மகன் என்று..... ராஜாவின் வயதை நிர்ணயிக்க முடியாத மான்சி ‘ அவரோட மகன்னா அவனுக்கு எத்தனை வயசு இருக்கும்... ஒரு பத்துக்குள்ள இருக்குமா? என்று எண்ணியவள் “ ஏன் அம்மாச்சி அந்த பையன் தானா சாப்பிட மாட்டானா?” என்று கேட்டேவிட்டாள்...

மரகதம் வாரிச் சுருட்டி எழுந்து அமர்ந்தாள்... தனது பேத்தியின் கையைப் பற்றி “ அய்யோ கண்ணு அவரு உன்னைவிட பெரியவரா இருப்பாரு... இப்படி பையன்னு சொல்லாத கண்ணு... யார் காதுலயாவது விழுந்தா பொல்லாப்பா போயிடும் ” என்று பதட்டமாக கூறியதும் ..

மான்சியும் எழுந்து அமர்ந்து “ அய்யோ மன்னிச்சுடு அம்மாச்சி... நான் பத்து வயசு பையன்னு நெனைச்சு சொல்லிட்டேன்” என்றதும்.... மரகதம் ஒரு நீண்ட பெருமூச்சுடன் “ நீ சொன்னதுல தப்பில்ல கண்ணு... அவ்வளவு பெரிய புள்ள இப்போ பொறந்த கொழந்தையாட்டம் படுத்து கிடக்கு” என்றபடி தனது கண்ணீரைத் துடைக்க...

மான்சியின் பார்வையிலும் வார்த்தையிலும் கூர்மை ஏறியது “ என்னாச்சு பாட்டி அவருக்கு?”

மரகதம் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு சத்யனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.... அவனின் பிறப்பிலிருந்து நேற்றுவரை நடந்தவை அத்தனையையும் சொல்லிவிட்டு “ ராசக்குமாரன் மாதிரி துள்ளி திரிஞ்ச புள்ள இப்போ படுத்த படுக்கையா கெடக்குது.... அவரோட நிலைமையை அவராலேயே பார்க்க முடியாம ஒருஒரு நேரம் வெறி பிடிச்ச மாதிரி கத்துது... யாரையுமே அவரோட ரூமுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிடுச்சு... நான் மட்டும் தான் போவேன்.. அப்புறம் வேலுன்னு ஒருத்தன் சின்னராசா கூடவே இருக்கான்... மத்தபடி அவரோட அப்பா அம்மா கூட உள்ள வந்து இவரைப் பார்த்து அழுவுறதை சின்னராசா விரும்பலை... பார்க்கவே கொடுமையா இருக்கு.... இப்பல்லாம் நான் அழுவாத நாளே இல்லை” என்றபடி முந்தானையால் கண்ணீரை துடைத்த மரகதத்தை அணைத்துக்கொண்டு மான்சி....

“ அம்மாச்சி மருத்துவத்தையும் மிஞ்சிய சக்தி ஒன்னு இருக்கு .... அந்த சக்தி நிச்சயம் நம்ம சின்னய்யாவை நல்லபடியா எழுந்து நடக்கவைக்கும்... உங்களைப்போல இருக்குறவங்களோட பிரார்த்தனை அவர்கூடவே இருக்கும் அம்மாச்சி” என்று ஆறுதலாக மட்டுமல்ல நம்பிக்கையாகவும் கூறினாள் மான்சி...



அதன்பின் தண்டபாணி குடும்பத்தைப் பற்றி கூறிய மரகதம்..... “ மூனுபேரும் சொந்தகாரங்க வீட்டு விசேசத்துக்கு டில்லிக்கு போயிருக்காங்க... ஒருவாரம் பத்துநாள் கழிச்சு தான் வருவாங்க கண்ணு... அவங்க கிட்ட மட்டும் அதிகமா பேச்சு குடுக்காத... மோசமான ஆளுக.. நீ ஒதுங்கியே இரு கண்ணு” என்று கூறிவிட்டு சத்யனுக்கான பிரார்த்தனையுடன் உறங்க ஆரம்பித்தாள் பாட்டி....

மான்சிக்கு உறக்கம் வரவில்லை... முகம் அறியாத அந்த சத்யனுக்காக உள்ளம் உருகியது.... நன்றாக நடமாடியவன் இன்று முடமாகி படுக்கையில் கிடப்பதென்றால் எப்படியிருக்கும்.. மான்சியால் அவன் உணர்வினை புரிந்துகொள்ள முடிந்தது.... அவனுக்காக கண்மூடி அமர்ந்து பிராத்தனை செய்தாள்....

மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்தவள் குளித்து முடித்து பாட்டி கொடுத்த மூங்கில் கூடையில் தோட்டத்துப் பூக்களை பரித்துக்கொண்டு பூஜையறைக்குச் சென்று பூவைக் கட்டி சாமி படங்களுக்கு போட்டாள்... விக்ரகங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டிருந்த மாலைகள் பூக்கடையில் இருந்து வந்துவிட அதை வாங்கி வந்து சுவாமி விக்ரகங்களுக்குப் போட்டுவிட்டு பூஜை செய்ய தயாரானாள்...


No comments:

Post a Comment