Monday, January 11, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 22

மான்சியின் ஐந்தாம் மாத விழா இனிதே முடிந்ததும் வந்த விருந்தினர்கள் அனைவரும் கலைந்தனர்.... அனைவரும் சென்றதும் மான்சிக்கு திருஷ்டி சுற்றிவிட்டு அறைக்குள் அழைத்துச் சென்றாள் ராஜி...

சத்யன் மான்சியின் கையை விடாமல் பற்றிக்கொண்டிருக்க... அந்த இளம் ஐோடிகளின் அன்பையும் காதலையையும் பார்க்கப் பார்க்க பரசுவுக்கு மனதிலிருக்கும் சந்தோஷம் புன்னகையாய் மலர்ந்தது... சிரிப்புடன் அவர்களையே சுற்றி சுற்றி வந்தான்.. காலையில் அந்த பங்களாவுக்குள் நுழையும்போது இருந்த மனநிலை இப்போது அவனிடம் இல்லை... உள்ளுக்குள் இருந்த துவேஷம் மறைந்து சலவை செய்யப்பட்ட வெண்பட்டு போல் மாறியிருந்தது அவன் மனம்...

மான்சியின் முகத்தில் இருந்த மினுமினுப்பும்,, பூரிப்பும்... அவளின் சந்தோஷமான வாழ்க்கையை சொல்ல... அக்காவின் சந்தோஷத்தில் தானும் முழுதாக பங்கெடுத்துக்கொள்ள முடிவெடுத்தான் பரசு..



சற்றுநேர ஓய்வுக்குப் பிறகு சத்யன் படுத்திருக்க... மான்சி பரசுவ*ை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்... வரதன் தினக்கூலி ஆட்களை வைத்து தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருக்க... இவர்களைப் பார்த்துவிட்டு செய்யும் வேலையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டு கையை கழுவிக்கொண்டு வந்தான் வரதன்..

பரசுவின் கையைப்பிடித்து “ நல்லாருக்கியா தம்பி?” என்று அன்பாய் விசாரித்தவன் மான்சியையும் பரசுவையும் அங்கிருந்த சிமிண்ட் இருக்கையில் அமரச்சொல்ல. இருவரும் அமர்ந்தனர்

“ பரசு இவர்தான் வரதராஜ்... என்னோட அன்பு அண்ணன்... நீ எப்படியோ அதே போல இவரும் என்மேல் ரொம்ப பாசம்.... இவர்தான் இந்த தோட்டம் முழுக்க இன்சார்ஜ்...” என்று சந்தோஷமாக சொல்ல...

பரசு வரதனின் கையைப் பற்றிக்கொண்டு “ பாட்டி எப்பவாச்சும் உங்களைப் பத்தியும் போன்ல சொல்லும் அண்ணே... நான் அக்கா பக்கத்துல இல்லாத குறைக்கு நீங்கதான்னு சொல்லும்... உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்ண்ணே” என்றான்..

“ எனக்குன்னு யாரும் நெருங்கின சொந்தக்காரங்க இல்ல பரசு... எனக்கு தங்கச்சியா மான்சி வந்துச்சு.. இப்போ தம்பியா நீ வந்திருக்க... நான் உன்னைப் பார்க்கலையேத் தவிர... மான்சிகூட அதிகமா உன்னைப் பத்தி தான் பேசுவேன்... மான்சிக்கும் உன்னைப் பத்தி பேசுறதுன்னா ரொம்ப இஷ்டம்... சின்ன வயசு கதையெல்லாம் சொல்லும்... உனக்கு நடந்த விபத்து பத்தி சொன்னப்ப கலங்கி போனேன் பரசு... இப்போ உனக்கு உடம்புக்கு பரவாயில்லையா தம்பி? ” என வரதன் அக்கறையாக கேட்க....

“ நான் நல்லாருக்கேன் அண்ணே.... அக்கா மச்சான் பத்திதான் கவலையா இருந்துச்சு... இப்போ அதுவும் தீர்ந்து போச்சு... இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” பரசுவின் வார்த்தைகள் உண்மையாக வந்தது...

வரதன் சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக “ கொஞ்சம் இரும்மா இதோ வர்றேன்” என்று மான்சியிடம் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றான்....

சற்றுநேரத்தில் வந்தவனின் கையில் ஒரு பார்ஸல்.... மான்சியின் அருகில் வந்தவன் அதை பிரித்து அதிலிருந்து ஐநூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு புடவையும் கொஞ்சம் கண்ணாடி வளையல்களும் இருந்தது... வரதன் புடவையின் அட்டைப் பெட்டியில் அவற்றை வைத்து “ இந்த அண்ணனோட சின்ன பரிசு... பங்ஷன் நடக்கும் போதுதான் குடுக்க நினைச்சேன்... அங்க எல்லாரும் விலைமதிப்பான பரிசுகள் குடுத்தாங்க... அதான் குடுக்கலை .... இப்போ வாங்கிக்கம்மா” என்று கூறி மான்சியிடம் அவற்றைக் கொடுத்தான்... பிறகு ஏதோ நினைவு வந்தவனாக “ கொஞ்சம் இரும்மா சுமங்கலிக்கு பூ இல்லாம புடவை வளையல் குடுக்க கூடாதுன்னு சொல்வாங்க...” என்றவன் வேகமாக சென்று ஒரு கொத்து மல்லிகையை செடியிலிருந்து கிள்ளியெடுத்து புடவையின் மீது வைத்து கொடுத்தான்....


“ கொஞ்சம் இரு அண்ணா” என்ற மான்சி பட்டென்று வரதனின் காலில் விழுந்து “ என்னை ஆசிர்வாதம் பண்ணுண்ணா” என்றாள்....

மான்சியின் இந்த திடீர் நடவடிக்கையால் வரதன் வெலவெலத்துப் போனான்... “ அய்யோ என்னம்மா இது? வேலைக்காரன் கால்லப் போய் விழுற” என்று பதறியபடி திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான் .....

அவர்களையேப் பார்த்துக்கொண்டிருந்த பரசு “ பின்ன அண்ணன் கிட்ட சும்மா எப்படி வாங்கமுடியும்... ஆசிர்வாதம் பண்ணுங்கண்ணே” என்று பரசுவும் அதட்டியதும்..

“ நீ என்னைக்குமே இதே போல தீர்க்க சுமங்கலியா இருக்கனும் தங்கச்சி...” என்று கண்கலங்க மனநிறைவுடன் வரதன் வாழ்த்தியதும் தான் மான்சி எழுந்தாள்..

சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து அங்கேயே அந்த கண்ணாடி வளையல்களை கையில் மாட்டிக்கொண்டாள்... “ சேலைய நாளைக்கு கட்டிக்கிட்டு வந்து காட்டுறேன்ண்ணா” என்று கூறினாள்..

அதன்பின் மூவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.... அப்போதுதான் நினைவு வந்தவள் போல் “ ஏன் பரசு இன்னைக்கு நீ கொண்டு வந்த நகை பணம் இதுக்கெல்லாம் பணம் எங்கருந்து வந்தது? ... நான் வரும்போதே நம்ம வீட்டுல ஒரு நகை கூட இல்லையே பரசு... அப்புறம் இதுக்கெல்லாம் பணம் எப்படி வந்துச்சு?” என்று புருவம் சுருங்க மான்சி கேட்க...

வரதனும் பரசுவை கேள்வியாக நோக்கினான்... “ இவ்வளவு பணத்துக்கு என்ன பண்ண பரசு... அதுவும் நீ வர்றேன்னு போன் பண்ணி ரெண்டு நாள் தான் ஆச்சு.. அதுக்குள்ள எப்படி இவ்வளவு பணம் திரட்டுன?” வரதன் கேட்க..

இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்த பரசு “ நான் இதெல்லாம் வாங்கி வச்சு மூனு மாசம் ஆகுது... அக்காவுக்கு குழந்தை உண்டாயிருச்சுன்னு அம்மாச்சி சொன்னதுமே எல்லாத்தையும் வாங்கிட்டேன்” என்றான்...

“ அதான் பணம் ஏதுடா பரசு?” மான்சி கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்..

“ இருக்கா சொல்றேன்.... நானும் பாட்டியும் நம்ம வீட்டை வித்துட்டோம்ககா... வீடும் அடமானம்.. தோப்பும் அடமானத்துல இருந்துச்சு.. ஏதாவது ஒன்னை வித்துடலாம்னு முடிவு பண்ணப்ப தொழில் செய்ய தோப்பு அவசியம் வேனும்னு தோனுச்சு... அதான் வீட்டை ஒன்பது லட்சத்துக்கு வித்து தோப்பை அடமானத்துலருந்து மீட்டுட்டேன்... அதுக்கு ரெண்டு லட்சம் ஆச்சு... தோப்புலயே சின்னதா ஒரு குடிசை போட்டுகிட்டு நானும் பாட்டியும் அங்கயே வந்துட்டோம்.... சிமிண்ட் சீட் சின்னதா ஒரு கடையும் கட்டி அதுல இளநீரோட சேர்த்து அந்த வழியா போறவங்களுக்கு தண்ணீர் பாட்டில் கூல்டிரிங்ஸ்... ஸ்நாக்ஸ் அப்படின்னு எல்லாமே வாங்கிப் போட்டு விக்கிறேன்... கடை நல்லா போகுதுக்கா.. செலவெல்லாம் போக ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் நிக்கிது... அப்புறம் மிச்சம் இருந்த ஏழு லட்சத்துல தான் உனக்கு நகையெல்லாம் வாங்கினேன்.. இன்னும் ரெண்டு லட்சம் பேங்கில போட்டு வச்சிருக்கேன்க்கா” பரசு நடந்தவற்றை விளக்கமாக சொல்ல....

மான்சி திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.... “ என்னடா தம்பி... நம்ம தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டை வித்துட்டயே?” கவலையுடன் கூறினாள் ..




“ தாத்தா பாட்டி வாழ்ந்த வீடுதான்... ஆனா ரெண்டுமே அடமானத்தில் மூழ்கிப்போகாம ஒன்னையாவது திருப்பி வைக்கனும்னு தான் அப்படி பண்ணேன்... நானும் பாட்டியும் தானக்கா... தோப்புல கட்டிருக்கும் வீடும் நல்லாருக்கும்.. நீ வரும்போது பாறேன்... சீக்கிரம் சம்பாதிச்சு அதேபோல வீடு தோப்புக்கு நடுவுல கட்டிடுவேன்... நீ என்மேல நம்பிக்கை வை அக்கா” பரசுவின் குரல் கெஞ்சியது...

“ அவன் சொல்றதும் சரிதான்ம்மா... ரெண்டும் அடமானத்தில் மூழ்கிபோறத விட ஒன்னாவது கைக்கு வர்றது நல்லது தானே... அதுவுமில்லாம உனக்கும் திருப்தியா சீர் செய்துட்டானே...இதுவும்முக்கியம் தானேம்மா?” வரதன் மான்சியை சமாதானம் செய்தான்

அவர்களின் பேச்சில் இருந்த நியாயம் புரிய மான்சி மெதுவாக தலையசைத்தாள்... “ இப்போ மறுபடியும் நீ மரம் ஏறுறியா பரசு?” கவலையுடன் கேட்ட மான்சியின் கையைப் பற்றிக்கொண்ட பரசு “ இல்லக்கா... அம்மாச்சி மரமே ஏறக்கூடாதுன்னு சொல்லிடுச்சு... ஆள் வச்சு தான் இளநீ அறுக்குறேன்...எனக்கு கடையைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்குகா...” என்று அக்காவை சமாதானம் செய்தான்...

பேச்சுவாக்கில் நேரமாகி விட்டதை உணர்ந்து வரதனிடம் இருவரும் விடை பெற்றுக்கொண்டு மதிய உணவிற்காக வீட்டுக்குள் சென்றனர்...

மதிய உணவுக்குப்பின் சத்யன் ஆபிஸ் போய்விட்டு வருவதாக சொன்னதும் பரசுவும் சிறுபையன் போல் “ நானும் உங்ககூட வர்றேன் மச்சான்” என்று கேட்க... சத்யன் பரசுவையும் அழைத்துக்கொண்டு பேக்டரிக்கு கிளம்பினான்...

அவ்வளவு பெரிய கம்பெனியில் சத்யன் இருந்த இடத்திலிருந்து எவ்வளவு கம்பீரமாக வேலை செய்கிறான் என்று சில மணிநேரத்திலேயே பரசுவுக்கு புரிந்துபோனது.... தன் மச்சானை பெருமையுடன் பார்த்தான்... தனது வேலைகள் முடிந்ததும் சத்யன் பரசுவை அழைத்துக்கொண்டு கம்பெனியை சுற்றிக்காட்டினான்... பரசு சத்யனின் மைத்துனன் என்றதும் பரசுவுக்கு தொழிலாளர்களிடம் ஏகப்பட்ட மரியாதை.. பரசு சங்கடமாக நெளிந்தபடி சத்யனுடன் ஒட்டிக்கொண்டான்..

மாலை ஐந்து மணிக்கு இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பும் போது “ நீ வர்றதுக்கு முன்னாடி நான் மான்சிகிட்ட உன்னைப் பத்தி பேசும்போது.... எனக்கு நல்லாகிற வரைக்கும் நான் உன்கிட்ட அளவோடதான் வச்சிக்கனும்... அதிகமா பேசக்கூடாதுன்னு சொன்னேன்... ஆனா இப்போ உன்கிட்ட பேசாம இருக்கமுடியலை பரசு” என்று சத்யன் மனந்திறந்தான்....

“ ஏன் மச்சான் அப்படி நெனைச்சீங்க? ” பரசுவுக்கு குழப்பம்..

“ இல்ல பரசு.. நீ என்னதான் உறவு முறைக்காக என்னை ஏத்துகிட்டாலும்.. என்னை பார்க்கும்போதெல்லாம் அக்கா புருஷன் இப்படி முடமா இருக்கானேன்னு நெஞ்சுக்குள்ள வேதனைப் படுவ.. அதை யோசிச்சுதான் உன்னைவிட்டு கொஞ்சம் தள்ளியே இருக்குறதுன்னு முடிவு பண்ணேன்... ஆனா உன்னோட அன்பு என்னை கவுத்துடுச்சு... உங்க ரெண்டுபேர் விஷயத்திலயும் நான் நெனைச்சதை செய்ய விடாம இந்த அன்பும் காதலும் குறுக்கே வந்துடுது” என்று கூறிவிட்டு சத்யன் சிரிக்க...



பரசு சற்றுநேரம் சத்யனைப் பார்த்துவிட்டு “ நீங்க சொல்ற உணர்வு எனக்கு இப்பயும் இருக்கு மச்சான்... ஆனா நீங்க நினைச்ச மாதிரி இல்லை... என் அக்காவோட புருஷன் இப்படி இருக்காரேன்னு எனக்கு தோனலை.... என் மச்சானுக்கு சீக்கிரம் நல்லாகனும்ங்கற வேண்டுதல் தான் இருக்கு.... எல்லாத்தையும் இவ்வளவு கம்பீரமா செயல்படுத்துற நீங்க.... எழுந்து நடமாடி இன்னும் நிறைய ஜெயிக்கனும்.. அதை நான் பார்க்கனும்னு ஆசையாயிருக்கு மச்சான்... மத்தபடி அக்கா வாழ்க்கை போச்சேன்னு நான் நெனைச்சது எல்லாம் போய் ரொம்ப நேரமாச்சு... மச்சான் ” என்று பரசு சொன்னதும் சத்யன் அவனை தன் தோளோடு அணைத்துக்கொண்டான்

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்... பரசு அன்று இரவே ஊருக்குப் போகவேண்டும் என்று கூறிவிட்டு பிடிவாதமாக கிளம்பினான்... கடையில் வியாபாரம் போய்விடும் என்ற காரணத்தால் மான்சியும் மறுப்பேதும் சொல்லாமல் தம்பியை அனுப்பி வைத்தாள்...

அதன்பின் பரசு நேரம் கிடைத்த போதெல்லாம் அக்காவையும் மச்சானையும் பார்க்க ஓடிவந்தான்.... அவன் வரும் நாட்களில் சத்யனும் கம்பெனிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தான் ... மூவருமாக கோயில்களுக்கு சென்றுவருவார்கள்...

சத்யனின் திறமையால் கம்பெனியில் நல்ல முன்னேற்றம்... கிரானைட்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் நிறை வந்தது...அது சம்மந்தமாக ராஜா அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வர ஆரம்பித்தார்....

ஜாமினில் வெளியே வந்த தண்டபாணி சொந்த கிராமத்தில் சிலகாலம் இருந்துவிட்டு வருவதாக கூறி மகள் மனைவியுடன் கிளம்பினான்....

தினமும் மாலை ஐந்தானதும் சத்யனுக்கு மான்சியிடம் சென்றுவிட வேண்டும்... தோட்டத்தில் வாக்கிங் செல்லும் மனைவியுடன் எதையாவது பேசிக்கொண்டே இவனும் வீல்சேரில் சுற்றி வருவான்.... மான்சியின் வயிறு வளர வளர சத்யனின் ஆசையும் நேசமும் பலமடங்கு அதிகரித்தது...

மான்சி சத்யனைப் பார்த்துக்கொண்ட காலம் போய்... அவன் இவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்... அவளின் ஒவ்வொரு அசைவும் சத்யனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது... நாளாக நாளாக இரவில் மனைவியை அணைத்து அவள் உறங்கும்போது கூட அவள் வயிற்றினில் தன் பிள்ளை அசைவை துள்ளியமாக கண்டுகொள்ள ஆரம்பித்தான்...

மான்சிக்கு ஏழாவது மாதம் முடிந்த போது ஒருநாள் சத்யனின் டாக்டர் அவரது மருத்துவமனைக்கு சத்யனையும் ராஜா மற்றும் பெரியவரையும் அழைத்தார்.. என்ன விஷயமாக இருக்கும் என்ற குழப்பத்துடனேயே மூவரும் மருத்துவமனைக்கு சென்றனர்... டாக்டர் வந்து அவர்களை தனது அறைக்கு அழைத்து சென்றார்...

பெரியவர்தான் முதலில் ஆரம்பித்தார் .." என்ன ராகவா ... இவ்வளவு அவசரமா எதுக்கு வரசொன்ன? " என்று உரிமையோடு அழைத்தவரின் குரலில் பலநாள் நட்பின் முதிர்சி தெரிந்தது ..

தேவையின்றி தனது மேசையில் இருந்தவற்றை மாற்றி வைத்த டாக்டரின் செய்கையில் சொல்ல வரும் விஷயம் பெரிசு என்று புரிந்தது ..

" என்ன விஷயம் டாக்டர்? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க ?" ராஜா டாக்டரை அவசரப்படுத்தினார்...


நிமிர்ந்து எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த ராகவன் " இந்த விஷத்தை சொல்ல வேண்டாம்னு தான் நானே முடிவு பண்ணேன் ... ஆனா அதையே நீங்களும் சொல்லிட்டா எனக்கு திருப்தியா இருக்கும்.. அதுக்குதான் உங்க மூனுபேரையும் வரச்சொன்னேன் " என்று டாக்டர் பலத்த பீடிகையுடன் ஆரம்பிக்க ..

" அவ்வளவு ரிஸ்க்கான விஷயம் என்ன அங்கிள்?" என்று சத்யன் புன்னகையுடன் கேட்டான்...

அவனையே சில நிமிடங்கள் பார்த்த ராகவன் .. " உன் விஷயம் தான் சத்யா.... லண்டன்ல உன் போல் பாதிப்பு உள்ளவங்களுக்கு பைனல்கார்டுல ஒரு மேஜர் ஆப்ரேஷன் பண்ணிருக்காங் .. நாலு பேருக்கு இந்த ஆப்ரேஷன் நடந்திருக்கு ... அது சம்மந்தமான தகவல் எனக்கு கிடைச்சு ஒரு வாரம் ஆகுது" என்று டாக்டர் சொன்னதும்... மூவரின் முகமும் மலர்ந்தது..

" என்ன ராகவா எவ்வளவு சந்தோஷமான விஷயம்.. இதைப் போய் ஒரு வாரம் தாமதமா இதை சொல்றயே?" என பெரியவர் வருத்தமாக கூற ..

" இல்ல லிங்கம் ... இதுல இருக்குற பிரச்சனைகள் தான் என்னை சொல்லவிடாம தடுத்தது.." டாக்டரின் குரலில் அவ்வளவாக ஆர்வமில்லாததை கண்டு மூவரும் அவரை குழப்பத்தோடு நோக்கினார்கள் ..

" ஆமாம் லிங்கம்... இந்த ஆப்ரேஷன் ரொம்ப சிக்கலானது.... முதல்ல தண்டுவடத்தில் சசின்ன சின்னதா சில ஆப்ரேஷன்கள் செய்து மேஜர் ஆப்ரேஷனுக்கு தயார் செய்யனும்... அதன் பிறகு நாலு வாரம் காத்திருந்து மேஜர் ஆப்ரேஷன் செய்யனும்... ரொம்ப பெரிய ஆப்ரேஷன் இது ... கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் நடக்ககூடிய அறுவை சிக்கிச்சை ... இதை தாங்க மூன்று மாசத்துக்கு முன்னாடி இருந்து பேஷண்ட்டோட உடம்பை தயார் செய்யனும் .. ரொம்ப ரிஸ்கான ஆப்ரேஷன்.... சில கோடிகள் வரை செலவாகும் " என்றவர் மீண்டும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து " அதுமட்டுமில்ல இந்த ஆப்ரேஷன் செய்த நாலு பேர்ல ஒருத்தருக்கு தான் சக்ஸஸ் ஆகியிருக்கு ... இரண்டுபேர் ஆப்ரேஷன் செய்யும் போதே இறந்து போய்ட்டாங்க... ஒரு நபர் ஆப்ரேஷன் முடிஞ்சு மயக்கம் தெளியாமலேயே நிரந்தரமா கோமாவுக்குப் போய்ட்டார்... இதையெல்லாம் கேள்விப்பட்டுதான் இதைப் பத்தி உங்கிகிட்ட பேசலை... ஆனா நீங்க யார் மூலமாவது இந்த ஆப்ரேஷன் பற்றி கேள்விப்பட்டு என்னை தவரா நினைக்க கூடாதே ... அதனால தான் உங்ககிட்ட சொல்லிவிடுவதுனு முடிவு பண்ணேன்" என்று டாக்டர் தனது உரையை முடித்துக் கொண்டு டேபிளில் கண்ணாடி டம்ளரில் இருந்த நீரை எடுத்து மடமடவென குடித்தார்...

சற்று நேரம் வரை மூவரிடமும் பெரும் அமைதி .... முதலில் சத்யன் தான் பேசினான்... " ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆன ஆள் இப்போ நல்லாருக்காரா அங்கிள்?" என்று ஆர்வமாக கேட்டான்..

அவனை பார்த்த ராகவன் .. " ம்ம் நல்லாருகார் சத்யா... 28 வயசு ஆள்தான் ஆனால் முழுசா சரியாகி அவரே நடந்து மருத்துவமனையை விட்டு போக கிட்டத்தட்ட 6 மாதம் வரை ஆகும் சத்யா.. " என்றார் டாக்டர்...

" அப்படின்னா எனக்கும் அந்த ஆப்ரேஷன் நடக்க ஏற்பாடு பண்ணுங்க அங்கிள்" என்று சத்யன் உறுதியாக கூறினான் ...

கோபமாய் திரும்பிய ராஜா " சத்யா என்ன இது? ... விளையாட்டு சமாச்சாரம் மாதிரி பேசுற? உயிர் பிரச்சனை" என்று மகனை அதட்டியவர்... டாக்டரிடம் திரும்பி " இதை நீங்க எங்ககிட்ட கேட்காமலேயே முடிவு செய்திருக்கலாம் டாக்டர்... இதுபோல உயிரை பணயம் வைக்கும் சிகிச்சை சத்யனுக்கு வேண்டாம் டாக்டர்" என்று தனது முடிவை சொல்லிவிட்டு தனது அப்பாவிடம் திரும்பி ... " அப்பா நான் சொன்னது சரிதானே?" என்று அபிப்ராயம் கேட்க...


அவர் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு " ஹண்ரட் பர்ஸன்ட் கரெக்ட ராஜா... " என்று மகனிடம் சொல்லிவிட்டு .. " ராகவா இது வேண்டாம் ராகவா.. நாங்க கிளம்புறோம் " என்று எழுந்துகொண்டார் ..

சத்யன் அவரை கையசைத்து அமரச் சொல்லி “ நீங்க ஏன் தாத்தா ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகாத மத்த மூனு பேரை பார்க்குறீங்க?.... ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆன அந்த ஒரு ஆளை மட்டும் பாருங்க தாத்தா.... எனக்கு ஆப்ரேஸன் செய்தா சக்ஸஸ் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... அதே நம்பிக்கையோட நீங்களும் இதுக்கு சம்மதிக்கனும் தாத்தா.. ” என்ற சத்யனின் குரலில் இருந்த உறுதி மற்றவர்களை உலுக்கியெடுத்தது...

டாக்டர் முதற்கொண்டு யாருமே சத்யனின் கூற்றை ஒத்துக்கொள்ள வில்லை.. நீண்ட நேரம் விவாதம் நடந்தது... டாக்டர் ஆப்ரேஷன் சம்மந்தமாக தனக்கு வந்த மெயில்களை சத்யனிடம் காட்டினார்... அதிலிருந்த சில வீடியோ ஆதாரங்களையும் காட்டி விளக்கினார்...

ஆனால் சத்யன் பிடிவாதமாக இருந்தான்.... அறுவை சிகிச்சை வெற்றிபெற்றவனைப் பற்றி மட்டுமே யோசிக்குமாறு அவர்களிடம் வாதிட்டான்..... இறுதியாக வீட்டுக்கு சென்று மான்சியிடமும் ராஜியிடமும் பேசி முடிவு செய்த பிறகே முடிவு செய்யபடும் என்று பெரியவர் உறுதியாக கூறிவிட... மூவரும் டாக்டரிடம் விடைபெற்று வீட்டுக்கு வந்தனர்...

வீட்டில் அதைவிட பெரிய கலவரமாக இருந்தது... ஆப்ரேஷனில் இருக்கும் ஆபத்தைப் பற்றி ராஜா விளக்கிச் சொன்னதும்... மான்சி மயங்கிய விழுந்துவிட்டாள்... அவளை தூக்கி சோபாவில் கிடத்தி மயக்கத்தை தெளிவித்தனர்.... ராஜியோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள்...

வேலு சபாபதி சாமிக்கண்ணு மரகதம் வரதன் என எல்லோரும் சத்யனின் காலைப்பிடித்து கெஞ்சாத குறையாக இந்த ஆப்பரேஷன் வேண்டாம் என்று மன்றாடினார்கள்...

ஆனால் யாருடைய கெஞ்சலும் சத்யனிடம் பலிக்கவில்லை... தன் முடிவில் உறுதியாக இருந்தான்.... மான்சியால் எதுவுமே பேசமுடியாமல் மாமனார் கூறிய பயங்கரம் கண்ணெதிரே தோன்றி பயமுறுத்த... கண்ணீருடன் சோபாவில் சரிந்துகிடந்தாள்....



அன்றைய இரவு உணவு அனைவருக்கும் விஷம்போல் இறங்கியது... மான்சியை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் அனைவரும் தவிக்க.... ராஜா பரசுவுக்கு போன் செய்து நிலைமையை விவரித்து உடனே கிளம்பி வரும்படி கூறினார்... உடனே கிளம்பி மறுநாள் காலையில் வருவதாக பரசு கூறினான்..

அன்று இரவு மான்சி சத்யனின் அணைப்பில் சிறு பறவை குஞ்சாக சுருண்டு போய் கிடந்தாள்... சத்யனால் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் மென்மையாக கூந்தலை வருடியபடி படுத்திருந்தான்..
மான்சிக்கு கண்ணீர் விடுவதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை ... எதையோ நினைத்து மீண்டும் விசும்ப ஆரம்பித்தவளின் மரகத்தை நிமிர்த்திய சத்யன் " என்ன மான்சி? நீயும் என்னை புரிஞ்சுக்கலைனா எப்படி ?" என்று கேட்க...

தேங்கிய விழிகளும் கலங்கிய இதயமுமாக அவனை ஏறிட்டு நேக்கிய மான்சி.... " எதைங்க நான் புரிஞ்சுக்கனும்? ஆப்ரேஷன்ற பேர்ல என் உயிருக்கே உலை வைக்கிறீங்களே அதையா புரிஞ்சுக்கனும்? ... உயிரைப் பணையம் வச்சு யாருக்காக இந்த ஆப்ரேஷன்? வேண்டாம்ங்க .. நீங்க இப்படியே என்கூட இருந்திடுங்களேன்" என்றவளின் குரல் சட்டென்று மாற.. " நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்" என்று அலறியபடி சத்யனை இறுக அணைத்துக்கொண்டாள்...



No comments:

Post a Comment