Monday, January 4, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 6

சத்யனை தூக்கி சாய்த்து உட்கார வைத்த வேலு ஒரு சிறிய டெஸ்க்கை எடுத்து வந்து சத்யனின் மடியில் கால்கள் நடுவே இருப்பது போல் வைத்தான்... சேவ்லான் கலந்த நீரில் கையை நன்றாக கழுவிவிட்டு அந்த டெஸ்க்கில் சாப்பாட்டுத் தட்டை வைத்து உணவு பரிமாறினான்... சத்யன் சாப்பிட வசதியாக இருக்க... சாதத்தை பிசைந்து அள்ளி வாயில் வைத்தவன்.... “ நீ இன்னும் அந்த பொண்ணு யாருன்னே சொல்லலை வேலு” என்று கோபமாக கேட்டான்...



அறைக்குள் வந்ததுமே ஊரப்பட்ட அர்ச்சனைகளை வாங்கிக்கொண்டு வேலு அமைதியாக இருந்தான்.... பிறகு பதில் தெரியாமல் சத்யன் சாப்பிட மாட்டான் என்று தெரியும் “ அதான் அன்னிக்கு சொன்னேனே... புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு வந்திருக்கு... அது வந்து வீட்டையே தலைகீழா மாத்திருச்சுன்னு... அந்த பொண்ணுதான் வந்து போயிருக்கு சின்னய்யா.... ஆனா நீங்க தூங்குனேன்னு சொல்றீங்க.... அப்ப ஏன் அந்தப் பொண்ணு அழுதுகிட்டு போகனும்? ” என்று குழப்பமாக சத்யனிடமே கேட்டான் வேலு ...
அவனுக்குப் பிடிக்காத கீரைக் கூட்டைப் போட்டு சாதத்தோடு சேர்த்து பிசைந்த சத்யன் “ ஆமாம் வேலு எனக்கும் அதுதான் புரியலை? யாருன்னே தெரியலை ... ஆனா ஏன் அழுதுகிட்டே ஓடுனா?” சத்யனின் குரலிலும் குழப்பம்...

“ எது எப்படியோ சின்னய்யா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு... யாருமே கோபப்பட முடியாத குணம்.... என்னாமா பாடுது தெரியுமா? சாமி பாட்டெல்லாம் பாடும் போது நம்மலையும் அறியாம கையெடுத்துக் கும்பிடனும்னு தோனுது சின்னய்யா... காலையில குளிச்சு முடிச்சி அந்த பொண்ணு பூஜை பண்ணிட்டு தீபத் தட்டோட நம்ம முன்னாடி வந்தா அப்படியே அம்மனை பார்க்குற மாதிரி ஒரு பரவசம் வருதுங்க சின்னய்யா.... நானே இப்பல்லாம் காலங்கார்த்தால எழுந்து குளிச்சுட்டு பூஜைரூம் வாசல்ல போய் நின்னுடுறேன்...காலையில அந்த தெய்வீக குரலை கேட்கவும் கலையான முகத்தைப் பார்க்கவும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு... நம்ம அம்மாவுக்கே ரொம்ப பிடிச்சு போச்சு.... கூடவே பூஜை ரூம்ல உக்காந்து பூஜையெல்லாம் செய்து மந்திரமெல்லாம் சொல்றாங்க... ராசய்யா கூட காலையில சாமி கும்பிட்டுதான் கம்பெனிக்கே போராரு... மொத்தத்துல எல்லாரும் காலையில ஆறு மணிக்கே குளிச்சிடுறாங்க” என்று சாப்பாட்டை பரிமாறிக்கொண்டே மான்சியின் புகழ் பாடினான்... சத்யன் திட்டுவான் என்று தெரியும்... ஆனாலும் அவனால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.... ஏனோ சத்யன் திட்டவில்லை... மவுனமாக சாப்பிட்டபடி வேலு சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான்....

வேலு வெகுநேரம் நின்றதில் கால் கடுக்க சத்யனின் கட்டிலில் அருகே தரையில் அமர்ந்தான்.... அப்போதுதான் கீழேயிருந்த புகைப்படத்தை கவனித்தான்... மான்சி அழுதுகொண்டே விட்டுச்சென்ற சத்யனின் பழைய புகைப்படம் தான் அது.... திகைப்புடன் அதை எடுத்த வேலு “ சின்னய்யா இதைப் பாருங்களேன்”என்று சத்யனிடம் காட்ட...

“ இது எப்புடிடா இங்க வந்தது?....” சத்யனின் குரலிலும் திகைப்பு...

“ தெரியலைங்க.... ஒருவேளை அந்தப் பொண்ணு எடுத்துப் பார்த்துட்டுதான் அழுதுகிட்டு போயிருக்குமோ?” என்று வேலு சொன்னதும்...

“ எனகென்னடா தெரியும்... நான் அவ மூஞ்சியக் கூடப் பார்க்கலை” என்று எரிந்து விழுந்த சத்யன்... “ மொதல்ல அந்த போட்டோவை எடுத்துட்டுப் போய் வை” என்று கத்தினான்...

வேலு அமைதியாக புகைப்படத்தை ஷோகேஸில் வைத்துவிட்டு வந்து சத்யன் சாப்பிட்டு முடித்ததை அப்புறப்படுத்தினான்...

சற்றுநேரம் சாய்ந்துஅமர்ந்தவாறு டிவிப் பார்த்த சத்யனுக்கு திரையில் ஓடியது மனதில் பதியவில்லை... அந்த பொண்ணு ஏன் அழுதுகிட்டே ஓடினாள்?... இந்த கேள்விதான் குடைந்தது...





“ நானும் வீரன் தான்....

“ உனது கண்ணீர் ததும்பும்...

“ விழிகளை காணும் வரை!

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த சொக்கலிங்கம்... சாப்பிட்டு முடித்து தனது அறைக்குச் சென்றவரின் பின்னாலேயே வந்த சபாபதி.... சற்றுமுன் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் பெரியவரிடம் கூற.... அவர் சொல்வதை உண்ணிப்பாக கவனித்த பெரியவருக்கும் குழப்பமாகத்தான் இருந்தது...

“ சத்யன் தூங்கிகிட்டு தான் இருந்தான்னு சொல்ற... அப்புறம் ஏன் சபா மான்சி அழுதுகிட்டு வரனும்?” என்று அவரிடமே திருப்பி கேட்டார்...

“ அதாங்கய்யா எனக்கும் புரியலை... அழுகைனாலும் அப்படியொரு அழுகை... பூஜையறை வாசல்ல அப்படியே விழுந்து கதறுச்சுங்க... அப்புறமா சத்யன் தம்பி வேலுவை கூப்பிட்டு கத்தினதும் அது துடிச்சத் துடிப்பு... பாவம்ங்க என்னாலேயே பாக்க முடியலை... இளகின மனசா? ... இல்லை நம்ம குடும்பத்துமேல உள்ள அன்பா?... எனக்கு ஒன்னும் புரியலைங்க.... பாவம் எதுவுமே சாப்பிடாம போயிருச்சு” என்றார் சபாபதி...

சொக்கலிங்கம் சிறிதுநேரம் யோசனையாக இருந்துவிட்டு “ சரி நீ போ சபாபதி” என்று அனுப்பி வைத்தார்....

சற்றுநேரம் கழித்து தோட்டத்தில் இருந்த மான்சியை அழைத்துவரச்சொல்லி ஒருவரை அனுப்ப... அடுத்த இரண்டு நிமிடத்தில் மான்சி அவரெதிரே பணிவுடன் நின்றிருந்தாள்...

சோபாவில் அமர்ந்திருந்தவரின் பார்வை மான்சியின் முகத்தை ஆராய்ந்தது.... “ என்னம்மா நிறைய அழுதிருக்க போலருக்கு?” என்று அவர் கேட்க...

அந்த வார்த்தைக்கே மான்சியின் கண்கள் மீண்டும் கசிந்தது... அமைதியாக நின்றிருந்தவவளை ஆராச்சி கண்களோடு பார்த்தவர்...

“ உனக்கு சத்யனை முன்னாடியே தெரியுமா?” நேரடியாக விஷயத்துக்கு வந்தார்....

மான்சி பட்டென்று நிமிர்ந்து கண்ணீர் மறைத்த கலங்கிய விழிகளோடு அவரைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையை குனிந்து ஆமாம் என்பதுபோல் தலையசைக்க....

“ எப்போ எங்கே பார்த்தம்மா” தாத்தாவின் குரலில் அளவுகடந்த அன்பு...

மான்சிக்கு பொய் சொல்லி பழக்கமில்லை.... அதுவுமில்லாமல் இது நேரடியான கேள்வி.... எதை சொல்லியும் சமாளிக்கவும் முடியாது.... மெல்லிய குரலில் அன்று நடந்ததை ஒன்றுவிடாமல் கூறியவள் முடிக்கும்போது தரையில் மண்டியிட்டு அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்...

அழும் அவளையே தாத்தா உற்றுப் பார்த்துவிட்டு.... “அன்னிக்கு சத்யன் உன்கிட்ட நடந்துகிட்ட முறைக்கு நியாயப்படி நீ இப்போ சத்யன் இருக்குற நிலைமைக்கு சந்தோஷப்படனும் அல்லவா?.... ஆனா இவ்வளவு கண்ணீர் ஏனம்மா?” வார்த்தைகள் கூர்மையுடன் வந்தது...

மான்சி தவிப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்... அவளால் எதையும் வாய்விட்டு சொல்லமுடியவில்லை.... மெல்ல தன்னை சமாளித்து “ அன்னிக்குத்தான் இவருக்கு விபத்து நடந்ததுன்னு சபாபதி அங்கிள் சொன்னாரு.... அதான் என்னாலதான் அப்படின்னு ஒரு குற்றவுணர்வு வந்திருச்சு ஐயா ” என்றவளை நம்பாமல் பார்த்தவர்...

“ இல்லம்மா நீ சத்யன் ரூம்ல இருந்து வரும்போதே அழுதுகிட்டு வந்திருக்க.... சபாபதி சத்யனுக்கு விபத்து நடந்த தேதியை அதுக்கப்புறம் தான் சொல்லிருக்கான்... நீ மொதல்லேருந்தே அழுதுகிட்டு தான் இருந்திருக்க மான்சி” பெரியவரின் குரலில் இருந்த அழுத்தம் மான்சியை மேலும் கலங்கி கண்ணீர் விட வைத்தது...

எழுந்து நின்றவள் கண்ணீருடன் அவரைப் பார்த்து கைகூப்பி “ தயவுசெய்து இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க ஐயா” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே ஓடினாள்.....


“ உனக்காக ஒரு கவிதை.....

“ காதலின் வலி இதயத்தை நசுக்க...

“ கண்ணீரால் எழுதினேன் கவிதையை...

“ வரிகளே இல்லாத இந்த கவிதை....

“ என் வலிகளை சொல்ல....

“ வந்து சேருமா உன்னிடம் ?...



சத்யன் அமைதியற்ற மனநிலையோடு படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்க... பிஸியோதெரபிஸ்ட் வந்து கால்களுக்கு மூலிகை எண்ணை விட்டு மசாஜ் செய்துவிட்டு சென்றதும் வழக்கம் போல வேலு வீல் சேரை எடுத்து வந்து கட்டிலருகே வைத்துவிட்டு சத்யனின் அக்குளில் கைவிட்டு தூக்கி சேரில் அமர்த்திவிட்டு கட்டிலில் கிடந்த கால்களை எடுத்து வீல் சேரில் கால்கள் வைக்குமிடத்தில் வைத்தான்... பிறகு மெதுவாக தள்ளிக்கொண்டு அந்த பெரிய அறையை சுற்றி வந்தான்....

எப்போதும் ஏதாவது பேசியபடி வரும் சத்யன் இன்று அமைதியாக இருக்க... எப்போதும் அவன் மனதை துள்ளியமாக கனிக்கும் வேலு சத்யனின் காதருகே குனிந்து “ என்ன சின்னய்யா அந்த பொண்ணைப் பார்க்கனுமா?” என்று கேட்க...

அன்னாந்து பார்த்து வேலுவை முறைத்த சத்யன் அமைதியாகிவிட... வேலுவும் வேறு எதுவும் பேசாமல் சத்யனின் கம்பியூட்டர் டேபிள் அருகே வீல்சேரை தள்ளிக்கொண்டு போனான்...

சத்யன் அமைதியாகவே இருந்துவிட்டு “ இப்போ எங்க இருப்பா?” என்று மட்டும் கேட்டான்...

“ இருங்க இப்பவே பார்க்கலாம்” என்று உற்சாகமாக கூறிய வேலு ஓடிச்சென்று பால்கனியின் கதவை திறந்துவிட்டு மறுபடியும் வந்து சத்யனை வீல்சேரோடு அழைத்துச்சென்று பால்கனியில் நிறுத்தி “ அதோ அந்த மஞ்ச ரோஜா செடிகிட்ட உட்கார்ந்து செடிக்கு மண் அனைக்குறாங்க பாருங்க.... அதுதான் புதுசா வந்த பொண்ணு” என்றான்’

சத்யன்ப் பார்த்தான்... முகம் தெரியவில்லை... தலை குனிந்து செடிக்கு மண்சேர்த்தாள்... சத்யன் பார்வையை அகற்றாமல் பார்த்தான்.... எழுந்த மான்சி திரும்பி நின்று நெற்றிக் கூந்தலை.. உள்ளங்கையில் மண்ணாக இருந்தததால் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டாள்...

அவள் நிமிர்ந்த அந்த நேரத்தில் சத்யன் பார்த்துவிட்டான்... இவளா? இதயம் தனது துடிப்பை சில நிமிடங்கள் மறந்துவிட்டது... மீண்டும் துடிக்க ஆரம்பித்ததும்... இவள் எப்படி இங்கே? என் வீடுதான்னு தெரிஞ்சே வேலைக்கு வந்தாளா? அன்னைக்கு நான் நடந்துகொண்ட முறைக்கு இன்னைக்கு என் நிலைமையைப் பார்த்து சந்தோஷப்பட்டாளா?.... இல்லை இல்லை சந்தோஷப்படுபவள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? சத்யனின் பார்வையை இம்மிகூட அசையவில்லை...அவள் முன்பு தனது செயலிழந்து நிலையை எண்ணி குமுறியது அவன் மனம்

“ என் அக்கா சாமிடா.... அவளைத் தொடுறவனும் சாமியாத்தான் இருக்கனும்” என்ற இவள் தம்பியின் வார்த்தைகள் சத்யனின் காதுகளில் சண்ட மாருதமாக கணீரென்று சத்தமாக ஒலிக்க... அவன் விரல்கள் தன்னிச்சையாக கழுத்தில் இருந்த மெல்லிய வடுவை வருடிப் பார்த்தது...

“ வேலு என்னை கட்டிலுக்குக் கூட்டிப்போ” என்று சத்யன் சொன்னதும் வேலு வீல்சேரை கட்டிலருகே தள்ளிவந்து சத்யனைத் தூக்கி கட்டிலில் கிடத்தினான்... சத்யனின் முகம் பாறையாக இறுகிப் போயிருக்க... அமைதியாக இருந்தான் வெகுநேரம் வரை...

இரவு எட்டு மணிக்கு சத்யனுக்கான உணவை மரகதம் எடுத்து வர... அப்போதும் அமைதியுடன் சாப்பிட்டான்... மரகதம் சத்யன் கோபமாக இருக்கிறானோ என்று எண்ணிக்கொண்டு எதுவும் பேசாமல் போய்விட...

சத்யன் வேலுவை அழைத்தான்.... “ வேலு கீழே போய் தாத்தாவை நான் பார்க்கனும்னு சொன்னேன்னு சொல்லி கூட்டிட்டு வா” என்று கூற...
“ சரிங்க என்று போன வேலு திரும்பி வரும்போது தாத்தாவை கையோடு அழைத்து வந்திருந்தான்....

பேரனின் கட்டில் அருகே சேரைப் போட்டு அமர்ந்த பெரியவர் “ என்ன கண்ணா வரச்சொன்னயாமே?” என்று அமைதியாக கேட்டார்....
தாத்தாவை நிமிர்ந்து நோக்கினான் சத்யன் “ தாத்தா அன்னிக்கு டாக்டர் ஒரு யோசனை சொன்னாருன்னு சொல்லி என்னோட சம்மதம் கேட்டீங்களே?” என்று சத்யன் நிறுத்த...

“ ஆமாம் சத்யா.... நீதான் ஒத்துக்கவே இல்லையே.... நமக்கு வாரிசு வேனும்னு தானே டாக்டர் அந்த யோசனையை சொன்னார்... நீ அவரையே திட்டிட்ட....” என்று குறையாக சொன்னார் தாத்தா...

“ இப்போ நான் அதுக்கு சம்மதிக்கிறேன் தாத்தா.... ஆனா ஒரு கண்டிஷன்” என்ற சதயன் தாத்தாவை நேராகப் பார்த்து “ புதுசா வேலைக்கு வந்திருக்கே ஒரு பொண்ணு.... அவளைத்தான் ஏற்ப்பாடு பண்ணனும்... அதுவும் எனக்கும் அவளுக்கும் முறைப்படி கல்யாணம் பண்ணி அதுக்கப்புறம் டாக்டர் சொன்ன ஏற்பாட்டை பண்ணுங்க” என்று சத்யன் தீர்கமாக கூற....

சொக்கலிங்கம் அதிர்ந்து போய் எழுந்து நின்று விட்டார்... அவர் காதுகளில் விழுந்த செய்தியை நம்ப முடியாதவர் போல “ என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியுடன் கேட்க....

“ நான் சரியாத்தான் சொன்னேன் தாத்தா.... என்னோட கண்டிஷனுக்கு நீங்க ஒகே சொன்னா.... உங்களோட கோரிக்கையை நான் ஏத்துக்குவேன்.... இல்லேன்னா எதுவே நடக்காது” என்றான்...

சொக்கலிங்கத்துக்கு ஆத்திரமாக வர “ மடையன் மாதிரி பேசாத.... அது வாழவேண்டிய பொண்ணு... இதுக்கு அவளே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்” என்றவர் எழுந்து விடுவிடுவென கதவை நோக்கி நடக்க...



“ தாத்தா ஒரு நிமிஷம் இருங்க....” என்றவன் அவர் நின்றதும்.... “ நான் சொன்னது மட்டும் நடக்கலைனா... நாளையிலேருந்து பச்சைத்தண்ணி கூட குடிக்க மாட்டேன்” என்று சத்யன் உறுதியுடன் கூற... தாத்தா அவனை எரித்துவிடுபவர் போல் முறைத்துவிட்டு வெளியேறினார்....

வேலு சத்யனை வியப்புடன் பார்க்க.... சத்யன் அவனை கேலியுடன் பார்த்து “ என்னடா எல்லாரும் அவளை தெய்வம் மாதிரி புகழ்ந்து தள்றீங்க.... இனிமேல் பாரு என்ன நடக்குதுன்னு” என்றான் சத்யன்....

அவன் முகத்தில் கர்வமும் ஆத்திரமும் சம அளவில் கலந்து ஜொலித்தது...


" ஒரு பெண்ணின் கண்ணீருக்கு....

" சூரியனை அணைக்கும் சக்தியும் உண்டு....

" பூமியை எரிக்கும் சக்தியும் உண்டு.....

No comments:

Post a Comment