Monday, January 25, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 7

ஆட்டோ ஒரு தனியார் மருத்துவமனை சென்றடைந்தது... கோபால் வேகமாக இறங்கி... மான்சியை தூக்க முயன்றான்.... அவன் கையை விலக்கிய மான்சி " நானே நடந்து வருவேன்" என்று கூற... அரை மனதோடு அவளை தோளோடு அணைத்தபடி உள்ளே சென்றான்...

மான்சியை சேரில் உட்கார வைத்துவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடி விபரம் சொன்னதும்,, ஓ பி சீட்டு வாங்கிகிட்ட உடனே அழைத்து வரும்படி கூறினாள் நர்ஸ் ...



சற்று நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் மான்சிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.... பெரிய காயம் எதுவுமில்லை என்றாலும் வயிற்று குழந்தைக்கு ஆபத்து எதுவுமில்லை என்பதை கண்டறிய ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர்... குழந்தை நன்றாகஇருக்கின்றது என்றதும் சில மருந்துகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்....

ஆனால் வீட்டுக்கு வரும் முன் மூத்த நர்ஸ் ஒருவர் கோபாலை அழைத்து " பொண்ட்டாட்டி கூட படுத்து புள்ளைய குடுத்தா மட்டும் போதாது தம்பி,,, அதுக்கப்புறம் தான் அவள அக்கறையா பாத்துக்கனும்... இருட்டுல போய் இருண்டு விழுந்திருக்கா இந்த பொண்ணு... அது வரைக்கும் நீ என்ன பண்ணிகிட்டு இருந்த?... இந்த பொண்ணுக்கும் அவ குழந்தைக்கும் ஏதாவது ஆகிருந்தா என்ன பண்ணுவ? நல்லவேளை பெரிசா எதுவும் ஆகாம அந்த கடவுள் தான் காப்பாத்துனாரு.... ரொம்ப பலகீனமா இருக்கா.... இனியாவது கவனமா பாத்துக்க" அட்வைஸ் என்ற பெயரில் கோபாலை காய்ச்சி எடுத்தாள் நர்ஸ் ....

கோபால் தலையை சொரிந்தபடி தர்மசங்கடத்துடன் வாங்கிக்கொண்டிருக்க..... மான்சி அவன் நிலையைக் கண்டு வாய்ப் பொத்தி சிரித்தாள்.....

மறுபடியும் மூவரும் வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பனிரெண்டை கடந்திருந்தது.... சரஸ்வதி மான்சிக்கு துணையாக இருப்பதாக கூற.... " வேனாம்மா நீ போ.. நான் பார்த்துக்கிறேன்" என்று சரஸ்வதியை அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்

மான்சி படுத்துக்கொள்ள உதவியவன் அதே பாயில் அவள் அருகிலேயே படுத்துக்கொண்டான்.... மான்சி கேள்வியாக அவனைப் பார்க்க.... " பேசாம படு,, நான் ஒன்னும் பண்ணலை ,, எங்க போனும்னாலும் என்னைய எழுப்பாம போகாதே" என்றவன் மான்சிக்குப் பக்கத்தில் நெருக்கமாகப் படுத்துக் கொண்டான்...

மான்சிக்கு கோபாலின் இந்த அக்கரையும் அன்பும் நிரந்தரமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனது ஏங்க ஆரம்பித்தது,, கோபாலின் கை மென்மையாக மான்சியின் இடை மீது கிடந்தது... இத்தனை நாட்களாக உதறி வீசியது போல் இன்று முடியவில்லை.. இந்த இதமும் சுகமும் தேவை என்பது போல் அமைதியாக இருந்தாள்...

மருந்துகளின் தாக்கத்தில் கூட உறக்கம் வரவில்லை... கோபாலின் கலக்கம் நிறைந்த முகமும் கண்ணீர் சுரந்த கண்களும் தான் அடிக்கடி வந்து போனது...

" இன்னாமே தூக்கம் வரலயா?" என கோபால் கேட்க.... மான்சி இல்லையென்று தலையசைத்தாள்.... இன்னும் சற்று நெருங்கி அவளுடைய முகத்தை இழுத்து தன் மார்பில் அணைத்து "எதையும் நெனைச்சு மனச குழப்பிக்காத புள்ள.. எல்லாம் சரியாயிடும்" என்றான்...


' எதை சரியாகும்னு சொல்றாரு?' முன்னாடி மன்னிப்பு கூட கேட்டாரே? எதுக்கு?' மான்சியின் மனதில் ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகள்......

மான்சியின் உச்சந்தலையில் தனது முகவாய் வைத்து அழுத்திக்கொண்ட கோபால்... " மான்சி உன்னைய புடிக்காம தான் கட்டிக்கினேன்,, ஆனா இப்ப உன்னையப் பாக்காம இருக்க முடியல புள்ள,, நீ உழுந்துட்டேனு தெரிஞ்சதும் என் ஈரக்கொளையே ஆடிப் போச்சு புள்ள,, எல்லா விஷயத்துலயும் நீ ரொம்ப உசரத்துல இருக்க.... ஆனா நா ரொம்ப கீழ இருக்கேன் புள்ள.... நீ வேற எவனாவது நல்லவனைப் பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கலாம்... நான் எதுலயும் உனக்கு பொருத்தமில்லாதவனாப் போயிட்டேன்.... இப்ப உன்னையும் விட்டுட்டு இருக்க முடியலை... சகுனாவையும் விட்டுட்டு வரமுடியலை.... ஒன்னுமேப் புரியலை புள்ள உன்னைய பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஏன் பாக்கலைனு ஏக்கமா இருக்கு புள்ள... நீ வேலைக்குப் போய்ட்டு வீடு வர்ற வரைக்கும் என் உசுரு என்கிட்ட இருக்கமாட்டேங்குது,, அதுக்காகவே சீக்கிரமா ஒரு முடிவெடுக்கனும்னு நெனைக்கிறேன் இதுக்கு மேலயும் உன்னைய வேலைக்கு அனுப்பிட்டு என்னால இருக்க முடியாது " என முதன்முறையாக தன் மனதை திறந்தான் கோபால்....

மான்சிக்கு அவன் நிலைமை புரிந்தது ,, மனதும் தெளிந்தது,, சுகுனா சொன்னது போல் பத்து வருடத்துக்கும் மேலான உறவு..... அவ்வளவு சீக்கிரம் உதறிவிட முடியாது தான்.... ஆனாலும் எனக்கு ஆதரவு? மான்சியின் மவுனம் கோபாலை உலுக்கியது போல........

" மான்சி நான் கெஞ்சி கேட்குறேன்... இனி வேலைக்குப் போகாத ," என கெஞ்சலாக கூற....

மான்சி மீண்டும் மவுனத்தையே தனது மொழியாக கொண்டாள்....,கோபால் கொஞ்சம் விலகி அமர்ந்து மான்சியின் கைகளை பற்றிக்கொண்டு " இங்க பாருமே..... நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் கெஞ்சுனதே இல்ல... அடிச்சு காரியம் சாதிக்கிறவன் நான்... ஆனா உன்மேல எனக்கு கோவமே வரமாட்டேங்குது,, அதனாலதான் இப்புடி கெஞ்சுறதா இருக்கு.... நா சொல்லுறத கேளு.... எப்புடியும் உன் புடிவாதம் தான் ஜெயிக்கப் போகுது.. அப்போ நான் சொல்ற இதை மட்டுமாவது கேளு .... நீ சம்பாதிச்சு தான் சாப்பிடனும்னா அவ்வளவு தூரம் வேலைக்குப் போய்தான் சாப்பிடனும்னு இல்ல.... வீட்டுலருந்தே உன்னால முடிஞ்சத செய் மான்சி" கோபால் வற்புறுத்தலாக கூறினான்....

கோபாலின் கெஞ்சுதல் நெஞ்சுக்குள்என்னவோ செய்ய மான்சியால் மேலும் மவுனம் சாதிக்க முடியவில்லை... " வீட்டுலருந்து என்னா வேலை செய்றது?" என்று மெல்லக் கேட்டாள்....

கொஞ்சம் தெம்பாக நிமிர்ந்து அமர்ந்த கோபால் " இங்க இருக்குற முக்காவாசி பொம்பளைக எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு போறாங்கல்ல... அங்கருந்து வரும் போது குல்டிங் பண்ற பீஸ் எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து வேலை செய்து எடுத்துட்டு போவாங்க,, அதுபோல உனக்கும் கொண்டு வந்து போடச்சொல்றேன் " என கோபால் சொல்லும் போதே மறித்த மான்சி ." அய்ய எனக்கு தைக்க தெரியாதே" என்று கையை விரித்தாள்....

" அது தைக்கிற துணி இல்ல மான்சி.... வெளிநாட்டுல குளிருக்கு போத்திக்குவாங்களே பஞ்சு உள்ள வச்சு தைச்ச போர்வை... அதை நம்ம ஜாக்கெட்டுக்கு எம்மிங் பண்ற மாதிரி பண்ணனும்... ரொம்ப கஷ்டம் கிடையாது மான்சி" என்று விளக்கமாக கூற... மான்சி அரை மனதோடு சம்மதித்தாள்...


மறுநாள் வேலைக்கு வரவேண்டாம் லீவு சொல்லிவிடுவதாக சொல்லிவிட்டு சரஸ்வதி வேலைக்குப் போய்விட... மான்சியை எழக்கூட விடாமல் கோபால் வீட்டில் சகல வேலைகளையும் பார்த்தான் குழாயில் தண்ணீர் எடுத்து வந்து வைத்துவிட்டு மான்சியின் உடைகளை அவனே துவைத்து காய வைத்தப் போது மான்சி சங்கடமாக சிரித்தாளே தவிர அவனை தடுக்கவில்லை... கணவன் தனக்காக செய்வதும் மாற்றத்தின் அறிகுறியாக நினைத்தாள்....

மறுநாள் கோபால் சொன்ன வெளிநாட்டு பெட்சீட் தைக்கும் வேலை வீடுதேடி வந்தது .. பெரிய ரக்கின் ஓரங்களை நேக்காக மடித்து ஊசி கொண்டு தைக்க வேண்டும்... எடுத்து வந்த பெண் மன்சிக்கு கற்று கொடுக்க... கால்களை நீட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி தைப்பதற்கு ரொம்ப ஈசியாக இருந்தது..... சுலபமாக கற்றுக்கொண்டாள்....

அதன்பின் தினமும் பொழுது ஈசியாக போனது... கோபாலே தண்ணீர் பிடித்து வைத்துவிடுவான்... துணிகளை கூட அவனே துவைத்து விடுவான்..... எதற்காகவும் மான்சியை வெளியே அனுப்புவதில்லை... தன்னால் முடிந்தவரை சீக்கிரமாக வீட்டுக்குவந்துவிடுவான்.... மான்சிடம் சிரித்து பேச ஆரம்பித்தான்.... மாத செக்கப்புக்கு தனது ஆட்டோவிலேயே அலுங்காமல் குலுங்காமல் அழைத்து சென்றான்...

ஆனால் ஒருசில நாட்கள் அமைதியாக வந்து மான்சியின் முகத்தைப் பார்க்க கூட கூசி படுத்துக்கொள்வான்..... முதலில் மான்சிக்கு புரியவில்லை ,, ஏன் என்னாச்சு என்று குழம்பி தவித்தவளுக்கு அதற்கான விடை தெரிந்த போது கோபாலின் மீது பரிதாபம் தான் வந்தது,,,

தன் முகத்தைப் பார்க்க கூட கூசும் போது அன்று சுகுனாவிடம் போய் வருகிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது... ... அதனால் தான் முகத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கின்றான் எனும்போது அது மனைவி என்ற பதவிக்கான மரியாதை என்று நினைத்தாள்....

மான்சி எதுவும் கேட்காமல் அலட்சியமாக இருக்கவும் அதுவே கோபாலுக்கு பெரிய உறுத்தலாக இருக்க... சுகுனாவின் வீட்டுக்குப் போவதை பாதிக்குப் பாதி குறைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.....

கோபாலின் அம்மா அப்பா ஒருமுறை வந்து பார்துவிட்டு சென்றனர்... பேரக்குழந்தையை சுமக்கின்றாள் என்ற அக்கரை கூட இல்லாமல் ஒப்புக்கு வந்தது போல் இருந்தது... ஒருவேளை மகோபாலை சுகுனாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்ற வீம்பில் தன்னை கோபாலுக்கு மணமுடித்தார்களோ? என்று எண்ணினாள் மான்சி...

மான்சியின் அம்மா அப்பா கூட வந்தார்கள்... மகளுக்கு வளைக்காப்பு சீரை கூட செய்ய முடியாது கண்ணீருடன் வந்தார்கள்.... ஆனால் சுகுனாவின் ஏற்பாட்டில் அந்த ஏரியாவாசிகள் அனைவரையும் அழைத்து மான்சிக்கு வெகு சிறப்பாக வளைகாப்பு செய்தான் கோபால்...

மான்சி மறுத்து கூறும் போது " உன் வயித்துல இருக்குறது என் புள்ளை... அதுக்கு தேவையானதை தான் செய்றேன்... உனக்குப்பிடிக்கலைனா வழக்கம் போல உன் காசை உன் சாப்பாட்டுக்கு குடுத்துடு" என கராராக கோபால் பேசியதும் மான்சிசிரித்தேவிட்டாள்.....




ஆனாலும் மான்சிக்கு ,, தனது அண்ணன் அண்ணி முன்பு சகல அலங்காரத்துடன் நின்றபோது கொஞ்சம் கர்வமாகத்தான் இருந்தது... கோபாலும் அவளை விட்டு நகராமல் இருந்து சகலத்தையும் செய்யவும் மஞ்சுளா பொறாமையில் புகைந்தே விட்டாள்......

மான்சியின் பிரசவ நாள் நெருங்க நெருங்க கோபாலிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்... சுகுனா வீடு செல்வது முற்றிலும் நின்று போனது... சுகுனா மான்சியைப் பார்க்க வரும் நேரத்தில் தலை குனிந்தபடி வெளியே செல்ல ஆரம்பித்தான்....

சுகுனாவின் முகத்தில் வேதனையின் சாயல் தெரிந்தாலும் மான்சியின் கையைப் பற்றிக்கொண்டு உண்மையான சந்தோசத்துடன் " நல்லாருக்கியா மான்சி? நல்லா வச்சிருக்கு தான?" என்று கேட்பாள் ...

இப்போதெல்லாம் இருவரின் மீதும் கோபம் வருவதற்கு பதிலாக இரக்கமே வந்தது... நாங்க இப்படித்தான் உன்னால் முடிந்ததைப் பாருனு சொல்லியிருந்தா மான்சியால் என்ன செய்திருக்க முடியும்? அதுவும் தாய் வீட்டின் ஆதரவு கூட இல்லாமல் வாழும் பட்சத்தில் மான்சி கண்ணீரில் தான் கரைந்திருக்க வேண்டும்.... தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து விலகி நிற்கும் இருவரும் தனது அண்ணன் பன்னீர் அண்ணி மஞ்சுளாவை விட பல ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் தான்...

மான்சியை பிரசவத்துக்கு கூட தாய் வீடு அனுப்ப மறுத்து விட்டான் கோபால்.... " உன் அப்பா அம்மா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... ஆனா என் தங்கச்சி மஞ்சுளா மேலதான் நம்பிக்கையில்ல.... நீ இங்கயே பெத்துக்க மான்சி நானேப் பாத்துக்கிறேன்,, என்று கூறிவிட்டான்.....

மான்சிக்கு நடு இரவில் வலி வந்தபோது தான் " அய்யோ ஊருக்கே இட்டுகினு போயிருக்கலாமே... புள்ளை பொறக்க இப்படியா நேவும்?" பயத்துடன் வாய்விட்டு புலம்பியே விட்டான்......

சென்னை ஜிகெச்சுக்கு போகலாம் என எல்லோரும் செல்ல.... பிடிவாதமாக பிரபல தனியார் மருத்துவமனைக்கு மான்சியை அழைத்து சென்றான்... மான்சி மறுத்தும் கூட கேட்கவில்லை கோபால்....

நவீன மருத்துவ மனையின் சிறப்பான கவனிப்பில் அதிகாலை நான்கு மணிக்கு மான்சிக்கு ஆண் குழந்தைப் பிறக்க கோபால் குழந்தையைக் கூடப் பார்க்காமல் மயக்கமாக கிடந்த மான்சியின் கையைப் பற்றயபடி கலங்கிப் போனான்...

ஐந்தாம் நாள் மான்சியை அழைத்து செல்லலாம் என்றதும் மருத்துவமனையின் பில் அதிகமாக இருந்தது... கோபால் கடன் வாங்கி பில்லை கட்டிவிட்டு மனைவி குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தான்...

மான்சியைப் போலவே வெள்ளையாக அழகாக இருந்த மகனை பக்கத்தில் அமர்ந்து ரசித்தான்..... கோபால் முற்றிலும் மாறிவிட்டாள் என்று மான்சிக்குத் தெரியும் .... கணவனுடன் அமர்ந்து குழந்தையை ரசித்தாள்.....


குழந்தைப் பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் கூவத்தின் ஓரத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஏதோவொரு வைரஸ் காய்ச்சல் பரவ ஆரம்பிக்க.... மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன...

தனது மனைவியையும் குழந்தையும் எப்படி பாதுகாப்பது என்று புரியாமல் தவித்த கோபால் வேறு வழியின்றி மான்சியை அவளது ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தான்...

மான்சி மறுக்கவில்லை... முன்பு போல் ஊர் என்றதும் அடி வயிற்றில் நெருப்பு பற்றிக்கொள்ள வில்லை... இப்போது அவளது கணவன் அவள் பக்கம் ஆயிற்றே?... ஒருவித கர்வத்துடன் ஊருக்கு போக நினைத்தாள்..

ஆனால் கோபாலை விட்டுத்தான் போக மனமில்லை .... தன்னருகே அமர்ந்து குழந்தையை கொஞ்சிய அவன் சட்டைக் காலரைப் பற்றிக்கொண்டு " நான் மட்டும் போகமாட்டேன்... நீங்களும் வா" என்று சினுங்கியவளை ஆசையோடுப் பார்த்தான் கோபால்

" எனக்கு மட்டும் உன்னைய விட்டுட்டு இருக்க ஆசையா மான்சி? உனக்கேத் தெரியும் உன் சீமந்தத்துக்கும் கொழந்த பொறக்கவும் நிறைய கடன் வாங்கிப்புட்டேன்... இங்கருந்து வண்டி ஓட்டி சம்பாதிச்சா தான் கடனை அடைக்க முடியும்..... ஆனா அடிக்கடி வந்து பாக்குறேன் மான்சி... மூனாவது மாசமே கூட்டிட்டு வந்துடலாம்னு சரஸ்வதி சொல்லுச்சு... எங்க வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தா எங்கம்மா உன்னைய வேலை வாங்கியே நாசமாக்கிப்புடும் ... அதுக்குதான் உன் ஊருக்கு அனுப்புறேன்... மஞ்சுளா எனக்குப் பயப்படும் ... அதுனால பிரச்சனையில்ல.. நீ கவலைப்படாம போ மான்சி" சிறு குழந்தைக்கு சொல்வது போல் மான்சிக்கு சொன்னான் .....

மான்சிக்கும் தெரியும்... கோபாலின் சக்திக்கு மீறிய மருத்துவமனையில் பிரசவம் ஆனது கடன் வாங்கித்தான் என்று.... அரை மனதாக தலையசைத்தவளை அணைத்துக்கொண்டான் கோபால்.

மறுநாள் மான்சியின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தனர் மான்சியை அழைத்துப் போக.... கோபால் மான்சியையும் குழந்தையையும் பிரியமுடியாமல் தவிப்பதை கான கான மான்சிக்கு சந்தோசத்தில் சிரிப்புதான் வந்தது.....

மனைவி சிரிப்பதை பார்த்து கடுப்பாகிப்போன கோபால் .... " என்ன என்னையப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா? போடி போ... சீக்கிரமா வந்து உன்னைய இங்க இழுத்துட்டு வந்து அப்புறமா நான் யாருன்னு காட்டுறேன்" என்று மாமியாரின் காதில் விழாமல் ரகசியமாக சொல்லி மான்சியை வெட்கப்பட வைத்து ரசித்தான்

மான்சி பிடிவாதமாக அவனையே கொண்டு வந்து விடும்படி சொன்னாள் " இதப்பாரு அது கிராமம்... நானும் தாலிகட்டி வந்த பொறவு இப்பதான் எங்கஊருக்குப் போறேன்... மொத மொதப் போகும் போது புருஷன் இல்லாம தனியாப் போனா நல்லாருக்குமா? நீங்களே சொல்லுங்க?" என்று சினுங்கியவளை சமாதானம் செய்து ... " சரி வா நானே வந்து விட்டுட்டு வர்றேன்" என்று சிரித்தான் கோபால்...


இருவரும் குழந்தையுடன் கிளம்பியபோது சுகுனா வந்து மனநிறைவோடு அனுப்பி வைத்தாள்... மூன்று மாதத்திற்கு மகனுக்கும் மான்சிக்கும் தேவையான சோப் பவுடர் டவல்.. நாப்கின் பொருட்களை வாங்கி கொடுத்தான்....

கோபால் பஸ்ஸில் மனைவியுடன் அமர்ந்தபோது அவன் மனம் இந்த உலகில் இல்லை... வயது வித்தியாசம் பாராமல் தன்னை அங்கீகரித்த மான்சி அவனுக்கு தேவதையாக தோன்றினாள்....

துணியால் சுற்றியிருந்த தனது சின்னஞ்சிறிய மகனை மான்சியிடமிருந்து வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டு அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்...

இருவரும் மான்சியின் பெற்றோருடன் மஞ்சப்புத்தூர் வந்து சேர்ந்தனர்.... கோபால் சொல்வது உண்மைதான் என்பது போல் மஞ்சுளா ஆரத்தியுடன் வாசலில் தயாராக நின்றிருந்தாள்..... புதிய குழந்தைக்கும் அதன் தாய்க்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்....

மான்சி வந்திருப்பதை அறிந்து ஊரில் உள்ள பலர் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு சென்றனர்.... அன்று முழுவதும் இருந்து விட்டு மறுநாள் காலை கோபால் சென்னைக்குப் புறப்பட்டான்....

மான்சி வாசல் வரை வந்து வழியனுப்ப... கோபால் மஞ்சுளாவை கிட்டத்தட்ட மிரட்டிவிட்டுதான் சென்றான்.... " மான்சிக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கனும் அவங்க ரெண்டு பேருக்கும் தேவையான பணத்தை நான் அனுப்பி வச்சிடுறேன்" என்று பல முறை கூறிவிட்டுதான் கிளம்பினான்..

மான்சி வந்த மறுநாளே சத்யனுக்கும் தெரிய வந்தது ..... நெஞ்சு முழுவதும் காதலை சுமந்து கொண்டு மான்சியையும் அவள் குழந்தையையும் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை.... அவன் காதலி அவன் நெஞ்சுக்குள்ளயே இருந்தாள்... அவள் அவனுக்கு மட்டும் தான்... யாரும் எடுத்துச் செல்ல முடியாது.... கன்ட நேரத்தில் கண்மூடி கனவு கன்டாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்...

ஆனாலும் உள்ளுக்குள் சில்லென்ற தொரு உணர்வு.... மான்சி வந்திருக்கிறாள்... இதே ஊருக்கு... இதோ பக்கத்தில் உள்ள தெருவுக்கு...மனதுக்குள் குயில்கள் கூவின.... ரோஜாக்கள் எல்லாம் இவனுக்காக ரகசியமாக பூத்தன... அவனை சுற்றியிருக்கும் அத்தனையையும் ரசித்தான்....

ஒருபுறம் எப்போதாவது மான்சி எதிர்படுவாளா என்று காத்திருந்தான்.. மறுபுறம் அவளை சந்தித்துவிடக் கூடாதே என்று பயந்து பதுங்கினான்..

சண்முகத்துக்கு அன்பரசி மூலமாக சத்யனின் காதல் தெரிந்தது .... மான்சி திருமணமாகி போய்விட்டதும் தெரியும் என்பதால் தன் மச்சானுக்கு நல்லப் பெண்ணாக பார்த்து மணமுடிக்க காத்திருந்தான்...


இருதலைக்கொள்ளி எறுமாபாக தவித்தவனுக்கு தமிழரசியின் திருமணம் ஒரு வடிகாலாக அமைந்தது... ஒருமாதத்திற்கு முன்பே மிலிட்டரியில் வேலை செய்யும் கிருஷ்ணன் என்பவன் தமிழரசியைப் பெண் பார்த்து பிடித்துபோய் நிச்சயமும் செய்துவிட்டார்கள்...

மிலிட்ரி மாப்பிள்ளை.. சம்பளம் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் என்றதும் என்றதும் பூமாத்தாளை கையில் பிடிக்க முடியவில்லை.. அன்பரசிக்கு திருமணம் முடிந்து ஆறுமாதமே ஆன நிலையில் உடனே தமிழுக்கும் திருமணம் என்றால் மகன் எப்படி சமாளிப்பான் என்று கூட யோசிக்காமல் சம்மதம் சொல்லியனுப்பி விட்டாள்....

ஆனாலும் சண்முகம் கொஞ்சம் உதவ தமிழரசியின் திருமணத்தை சமாளிக்கும் தைரியம் வந்தது சத்யனுக்கு... ஆனால் மாப்பிள்ளை வீட்டார் சண்முகத்தைப் போல எந்த சலுகையும் காட்டாமல் கராராக இருந்தனர்.... கடன் வாங்கி கல்யாணத்தை செய்ய வேண்டிய நிலை சத்யனுக்கு....

கல்யாண வேலைகளில் சண்முகம் ரொம்ப உதவியாக இருந்தான்.... ஒரு மைத்துனநாக அல்லாமல் சகோதரனாக சத்யனுக்கு துணை நின்றான் சண்முகம்... மாப்பிள்ளைக்கு லீவு இல்லை என்று திருமணத்தை மிக நெருக்கத்திலேயே வைத்தார்கள்....

மான்சியின் காதுகளுக்கு சத்யனின் குடும்பம் சம்மந்தப்பட்ட செய்திகள் விழுந்தாலும் .. அவ்வளவாக அக்கறை காட்டிக்கொள்ளவில்லை.... தமிழரசி மான்சியின் செட் என்பதால் ஒருநாள் கிணற்றடியில் சந்தித்தபோது கல்யாணத்தைப் பற்றி விசாரித்து வாழ்த்து மட்டும் சொன்னாள் மான்சி....

மான்சியை பிடிக்கும் என்றாலும் ... அம்மாவுக்கு மான்சியைப் பிடிக்காது என்பதால் இரண்டு வார்த்தைக்கு மேல பேச முடியாமல் வேகமாக நகர்ந்து விட்டாள் தமிழரசி

மான்சி வந்த பதினைந்தாவது நாள் கோபால் ஓடி வந்தான் மனைவி குழந்தையை பார்க்க... ஆர்வத்துடன் மனைவியை அணைத்துக்கொண்டான்...

கணவனுக்கு விருந்து சமைத்துப் போட்டாள் மான்சி " சாப்பாடுக்கு என்ன செய்றீங்க?" என்று கேட்டாள்...

கோபால் சாதத்தை பிசைந்தபடி " நீ வந்த நாலுநாள் சுகுனா ஆக்கி கொண்டு வந்து வச்சிட்டுப் போச்சு.... அப்புறம் நான் வேணாம்னு சொல்லிட்டேன்... நானே வீட்டுல சமைச்சுக்கிறேன் மான்சி ... முடியாதப்ப ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்கறேன்" என்றவன் நிமிர்ந்து மான்சியின் முகத்தையே சிறிதுநேரம் பார்த்திருந்துவிட்டு பிறகு தலை கவிழ்ந்து " நான் சுகுனா வீட்டுக்குப் போய் ஒரு மாசம் ஆகுது மான்சி இப்பல்லாம் எதுவுமில்லை" என்று அவளுக்கு மெல்லிய குரலில் தகவல் சொன்னான்

அவன் என்ன கேட்கிறான் என்று மான்சிக்குப் புரியாமல் இல்லை... முகம் முழுவதும் புன்னகையோடு " அய்யா நிமிராம பேசுறப்பவே புரியுது... ம்ம் இப்ப என்ன பண்ணலாம்? நானும் இப்ப உங்ககூடவே வந்துடவா?" என்று மான்சி ஆர்வமாக கேட்க...


கோபால் சாப்பாட்டு கையோடு மான்சியை இழுத்து அணைத்துக்கொண்டான்... அவனுக்கு மான்சி பச்சைக் கொடி காட்டியதில் ரொம்ப சந்தோஷம்... மான்சி அவனிடமிருந்து வெட்கத்துடன் விலகி அமர " இல்ல இப்ப வேணாம் மான்சி... இப்பதான் எல்லாருக்கும் தடுப்பூசிலாம் போட்டு ஜூரம் போயிருக்கு .. நீ இன்னும் கொஞ்ச நாள் ஆனதுமே வா மான்சி.... அதுக்குள்ள உனக்கும் உடம்பு தேறிடும்ல" என்று கூறி கோபால் கண் சிமிட்ட... மான்சி வெட்கிப்போனாள்....

கோபால் கிளம்பும் போது மான்சியிடம் ஒரு மொபைல் போனை கொடுத்து " இதுல ஒன்னு அழுத்துனா என் நம்பர் வரும் ,,நீ ஒரு மிஸ்கால் குடுத்தா நான் உடனே போன் பண்றேன் " என்று சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றான்....

மான்சி தன் இருண்ட வாழ்க்கையில் சூரியோதயம் வந்துவிட்டதாக எண்ணி சந்தோஷப்பட்டாள்... மஞ்சுளா கூட மான்சியை தாங்கினாள்... ஏன்னென்றால் மான்சியை சாக்கு வைத்து கோபால் கொடுக்கும் பணத்திலும் பொருளிலும் இவர்களின் வயிறும் தாராளமாக நிறைந்தது...

தமிழரசியின் கல்யாணம் நாளை மறுநாள் என்றதும் என்றதும் சத்யன் ஊர்ப் பத்திரிக்கை வைத்துக் கொண்டு வந்தான் ... வரிசையாக எல்லா வீடுகளுக்கும் வைத்தவனின் கால்கள் மான்சியின் வீட்டருகில் வந்து தயங்கி நின்றது... எல்லோருக்கும் வைத்துவிட்டு மான்சி வீட்டுக்கு வைக்காமல் போனால் ஊரின் தேவையற்ற பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்பதால் ஒருக்களித்து மூடியிருந்த கதவை தட்டி " வீட்டுல யாருங்க" என்று குரல் கொடுத்தான்....

குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மான்சியால் அந்த குரலை அடையாளம் கான முடிந்தது.... வெடுக்கென்று முதுகு நிமிர எழுந்தவள் குழந்தையை தொட்டிலில் கிடத்தி விட்டு அறையிலிருந்து வெளியே வந்து தெருக்கதவை திறக்க...சத்யன் கையில் பத்திரிக்கைகளுடன் நின்றிருந்தான்....

தாய்மையின் பூரிப்பில் நின்றிருந்த மான்சியின் அழகு அவனை வியக்க வைத்தது.... நிமிட நேரம் கூர்ந்தவன் தனது அனாகரீகத்தை உணர்ந்து கையிலிருந்த பத்திரிக்கையில் ஒன்றை உருவி " உன் அண்ணன் வந்தா குடுத்துடு" என்றான்... இந்த இரண்டு வார்த்தைக்கு அவன் நெஞ்சு வரண்டு போனது....

மான்சி மட்டும் தலை குனியவேயில்லை கர்வத்துடன் நிமிர்ந்தபடியே பத்திரிக்கையை வாங்கிக்கொண்டாள்.... ஒரு பெயருக்கு கூட அவனை அழைக்காமல் வெடுக்கென திரும்பி வீட்டுக்குள் போனாள்.... " இவன் இருக்குற ஊர்ல வந்து நாமலும் இருக்க வேண்டியிருக்குப் பாரு? எல்லாம் நேரம்டா செல்லக் குட்டி" என்றபடி குழந்தையை தூக்கிக் கொண்டாள்...

அவளின் அமில வார்த்தைகள் சத்யனின் காதில் அப்பட்டமாக விழுந்தது ,.. இதயம் வெடிக்கவில்லையே என்ற வேதனையோடு அங்கிருந்து அகன்றான்....








காதல்,,

அது உணரப்படவும், உரிமைப்படுத்தவும் வேண்டியது !

உரைக்கப்பட வேண்டியதல்ல !

காதலுக்காக உன்னை கொஞ்சவும் போவதில்லை !

கெஞ்சவும் போவதில்லை !

என் உயிரை வதைத்துக்கொண்டு காத்திருப்பேன் !

என்றாவது என் காதலை நீ உணர்வாய் என்று!!!





No comments:

Post a Comment