Wednesday, January 6, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 11

தண்டபாணி மான்சியின் ஊரை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை... சாமிக்கண்ணுவின் சொந்த ஊரில் சென்று மான்சி என்ற பெயர் சொல்லி விசாரித்தபோது அப்படி யாரும் இங்கு இல்லை என்ற தகவலே கிடைத்தது..... அங்கிருப்பவர்கள் கொடுத்த சாமியின் சொந்தக்காரர்கள் முகவரிகளில் சென்று விசாரித்தும் ஏமாற்றமே மிஞ்சியது...

நாளை விடிந்தால் திருமணம் எனும்போது தண்டபாணியின் தேடல் தீவிரமானது... இறுதியாக ஒருவர் மரகதத்தின் சகோதரி வேப்பூரில் இருப்பதாக சொல்ல... அன்று இரவு வேப்பூர் வந்தான் தண்டபாணி......

பக்கத்து கிராமங்களில் விசாரித்து மான்சியின் முகவரியை கண்டுபிடித்து அவள் வீட்டை அடையும்போது அதிகாலை இரண்டு மணி...
இந்த நேரத்தில் கதவை தட்டுவது யாராக இருக்கும் என்று எண்ணியபடி இடப்பு வேட்டியை இழுத்துக் கட்டியபடி எழுந்து வந்து கதவைத் திறந்த பரசுராமன் வெளியே நின்றிருந்த தண்டபாணியை குழப்பத்துடன் பார்த்து “ யாருங்க நீங்க? யார் வேனும்?” என்று கேட்க....



தண்டபாணி உதட்டில் செயற்கையாய் ஒரு புன்னகையை பூசிக்கொண்டு “ இது மான்சி வீடு தானே? நீ மான்சி தம்பி பரசுராமன் தானே?” என்று கேட்டான்...

அக்காவின் பெயரை கேட்டதும் சட்டென்று நகர்ந வழிவிட்டு “ உள்ளார வாங்க” என்று அழைத்தவன் அங்கிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு “ உட்காருங்கய்யா” என்றான் பரசு... அதற்குள் பாட்டியும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து விட்டாள்

“ நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கீங்களா தம்பி” என்று சம்பிரதாயமாக ஆரம்பித்தான் தண்டபாணி....

“ ஆமாங்க... அக்கா எங்க சின்ன அம்மாச்சி கூட மதுரையில வேலை செய்யுது.... ஆமா நீங்க யாருங்க?” என்று கேட்ட பரசுவை ஏற இறங்க பார்த்த தண்டபாணி

“ என்ன தம்பி காலையில உன் அக்காவுக்கு கல்யாணம்.... நீ என்னடான்னா இன்னும் இங்கயே இருக்க? ” ரொம்பவே நல்லவன் போல அன்பாக கேட்டான் தண்டபாணி

பரசுவால் அந்த அதிகாலையில் அவ்வளவு பெரிய அதிர்ச்சியை தாங்க முடிந்தது பெரிய அதிசயம் தான்.... அவன் அப்படியே நிற்க்க... பாட்டிதான் வேகமாக எழுந்து வந்து “ என்னாங்கய்யா சொல்றீங்க? என் பேத்திக்கு கல்யாணமா? நேத்து ராவு கூட போன் பண்ணி என்கிட்ட பேசுச்சே... நீங்க ஆள் தெரியாம பேசுறீகண்டு பார்க்குறேன்” என பொறிந்து தள்ளியவளை வியப்புடன் பார்த்தான் தண்டபாணி...

“ அய்யய்யோ அப்போ உஙகளுக்கு விஷயமே தெரியாதா?” என்றவன்... மான்சி மரகத்துடன் வேலைக்கு வந்தது .. அந்த வீட்டில் சத்யன் கால்கள் செயலிழந்து படுத்துக் கிடப்பது.. சத்யன் மான்சியை திருமணம் செய்துகொள்ள கேட்டது.. அவனுக்கும் மான்சிக்கும் திருமணம் செய்து அவனுடைய குழந்தையை செயற்கை முறையில் மான்சி பெற்றெடுப்பது... என பெரியவர்கள் சேர்ந்து முடிவு செய்தது.. அதற்கு மான்சி முழு மனதோடு சம்மதித்தது’ என எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்ன தண்டபாணி “ நான் சத்யனோட தாய்மாமன் தான்... ஆனாலும் ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கை இப்படி வீனாப் போகுதே என்ற ஆதங்கத்தில் தான் உன்னைத் தேடி வந்தேன்.. இப்பப்பார்த்தா உனக்கே விஷயம் தெரியாது போலருக்கே... ஆனா உன்கிட்ட ஏன் மறைக்கனும்? ” என்று ஒன்றும் தெரியாதவன் போல கூறினான் தண்டபாணி...

பரசு விக்கித்துப்போய் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தான்... எனக்கு தெரிவிக்காமல் என் அக்காவுக்கு கல்யாணமா? ஏன் இந்த திருட்டு கல்யாணம்? அதுவும் ஒரு முடமானவன் கூடபோய் என் அக்கா வாழ்றதா? விபத்துக்குப்பின் பரசுவின் உடலில் புதிதாக ஊறியிருந்த ரத்தம் கொதித்தது...

“ சார் எங்களுக்கு எதுவுமே தெரியாது.... என் அக்காவை அந்த பணக்கார நரிகள் தந்திரமா ஏமாத்திட்டாங்க... ஆனா இந்த கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன்... கையாலாகாத ஒருத்தனுக்கு என் அக்கா மனைவியா? ம்ஹூம் நடக்கவே நடக்காது சார்” என்று கர்ஜித்தவனின் கண் சிவப்பு மெல்லிய இருட்டில் பளபளத்தது....

“ காலையில ஏழு மணிக்கு முகூர்த்தம் தம்பி.... இப்போ நான் தேடி வந்ததுக்கு காரணம் கூட.. ஒரு நல்ல பொண்ணை இப்படி ஏமாத்துறாங்களே... அதுவும் அவ குடும்பத்துக்கு கூட தெரியாமல்னு வேதனையால் தான் வந்தேன் தம்பி... நீ இப்போ கிளம்பினாத்தான் முகூர்த்தத்துக்கு முன்னாடியே போய் சேர முடியும்... சீக்கிரம் வா தம்பி ” என்று தண்டபாணி குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் கூற...

பரசு அவனை கையெடுத்துக் கும்பிட்டு “ வாங்க சார் போகலாம்” என்றான்...
பரசு தனது சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு உள் அறையிலிருந்த பீரோவில் பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்... “ அம்மாச்சி பத்திரமா இரு... நான் அக்காவை கையோட கூட்டிக்கிட்டு வந்துடுறேன்” என்றவன் பாட்டி ஏதோ சொல்ல வருமுன் வெளியேறியிருந்தான்...

காரை தண்டபாணி மட்டுமே ஓட்டிக்கொண்டு வந்திருக்க... அவருக்கு பக்கத்தில் ஏறியமர்ந்தான் பரசு... கார் எடுத்த எடுப்பிலேயே வேகமெடுத்து மதுரை செல்லும் பைபாஸ் ரோட்டில் சீறியது...

“ தம்பி நாம ஒன்னா சேர்ந்து போக முடியாது... நான் உன்னை மதுரைலருந்து திருமங்கலம் போற பைபாஸ்ல இறக்கிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏத்தி அட்ரஸ் சொல்லி அனுப்புறேன்.. நான் கொஞ்சம் நேரங்கழிச்சு வர்றேன்... நாம ஒன்னா போனா சந்தேகம் வரும்... நீ போனதும் எதுவுமே பேசாத உன் அக்காவை கையைப்பிடிச்சு இழுத்துட்டு வர்றதை மட்டும் பாரு” என்று பரசுவுக்கு க்ளாஸ் எடுத்தபடி வந்தான் தண்டபாணி..
கார் திருச்சியை தாண்டும்போது சத்யனுக்கு அடிப்பட்ட கதையை விலாவாரியாக சொன்னார் தண்டபாணி... அவர் சத்யனைப் பற்றி சொல்லும்போது ஏனோ பரசுவிற்கு அன்று தன் சகோதரியின் கையைப்பிடித்து இழுத்த குடிகாரனின் ஞாபகம் தான் வந்தது... ராஸ்கல் என் அக்கா கையைப்பிடித்து இழுத்த அவனும் இதுபோல எங்கயாவது அடிபடுவான்’ என்று உள்ளுக்குள் கருவினான்...

இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் ஒருத்தனுக்கு தனது அக்காவை திருமணம் செய்து வைக்கிறாங்களே அவங்களுக்கு பைத்தியமா? அக்கா கூடத்தான் இதுக்கு எப்படி சம்மதிச்சா? மான்சி இயல்பிலேயே இரக்க குணம் அதிகம் என்று பரசுவுக்கு தெரியும்.... ஆனா அதுக்காக தனது வாழ்க்கையையா பணயம் வைக்கிறது? இந்த அக்காவுக்கும் லூசு பிடிச்சிருச்சு போல... பல எண்ணங்களின் தாக்கத்தில் பரசுவின் மனம் கருவாய் கறைந்தது....

காலை மணி ஐந்து நாற்பது... மதுரை மேலூரில் ஒரு டீக்கடை அருகில் கார் நின்றது... “ ரொம்ப நேரம் கார் ஓட்டினது டயர்டா இருக்கு தம்பி... ஒரு டீ குடிச்சிட்டுப் போகலாம்” என்றபடி இறங்கினார் தண்டபாணி... அவரைத் தொடர்ந்து பரசுவும் இறங்கி டீக்கடை அருகில் சென்று டீ சொல்லிவிட்டு காத்திருந்தனர்

பக்கத்தில் இருவர் அன்றைய பேப்பரை படித்துக்கொண்டிருந்தனர் “ பாருப்பா இத? நம்ம RR கிரானைட்ஸ் ஒனர் மகனுக்கு கல்யாணமாம்.. பொதுவா அறிவிப்பு குடுத்திருக்காங்க... ஆனா அறிவிப்புல யாருக்கும் அழைப்பு இல்லைபா..கொஞ்சநாள் முன்னாடி ஆக்ஸிடெண்ட் நடந்து நடக்க முடியாமப் போனான்னு நியூஸ் வந்ததே அவனுக்குத்தான்பா.. இவனுக்கு போய் யார் பொண்ணு தர்றாங்க? பொண்ணு சூப்பரா இருக்குப்பா ” என்றான் ஒருவன்

நியூஸ் பேப்பரை எட்டிப்பார்த்த மற்றொருவன் “ ம் மணமகன் சத்யமூர்த்தி... மணமகள் மான்சி... பொண்ணு அழகாத்தான் இருக்கு மாப்ள” என்றான்




பரசுவுக்கு சட்டென்று மின்னலடிக்க அவர்களிடம் இருந்து செய்தித்தாளை அவசரமாக பிடுங்கி பிரித்துப் பார்த்தான்.... முதல் பக்கம் முழுவதும் சத்யன் மான்சி படத்தைப் போட்டு ஏகப்பட்ட வாழ்த்து மடல்கள்.. சில தொழிலதிபர்களின் புகைப்படங்கள் போட்டு அவர்களும் மணமக்களை வாழ்த்தியிருந்தனர்... ராஜாவின் கம்பெனி ஊழியர்கள் வேறு மணமக்களின் படத்தை பெரிதாகப் போட்டு வாழ்த்துக் கூறியிருந்தார்கள்...

பரசுவின் ரத்தம் கொதித்தது... சத்யன் படத்தை விட்டு பார்வை அகலவில்லை.... இவனா மாப்பிள்ளை? இந்த கேடுகெட்டவனையா என் அக்கா கல்யாணம் செய்துக்க முடிவுப் பண்ணா? குத்துவிளக்குக்குப் போய் மது பாட்டிலை ஜோடி சேர்த்திருக்காங்களே இந்த பாவிங்க? பரசுவின் கையிலிருந்த பேப்பர் நழுவி கீழே விழ அய்யோ என்று தலையில் அடித்துக்கொண்டான்...

அப்போதுதான் தண்டபாணி அவனை பார்த்துவிட்டு “ என்னாச்சு தம்பி” என்று கேட்க.

பரசு தண்டபாணியின் கையைப் பற்றிக்கொண்டான் “ சார் இந்த கேடு கெட்டவனை எனக்கு முன்னமே தெரியும் சார்... போயும் போயும் இவனா சார் அக்காவுக்கு மாப்பிள்ளை? அந்த தகுதியே இவனுக்கு இல்லையே சார்... தயவுசெஞ்சு சீக்கிரம் என்னை அங்க கூட்டிப் போங்களேன் சார்” என்று கெஞ்சினான்... அவன் கண்கள் கலங்கிப் போயிருந்தது

ஆர்டர் செய்த டீயை குடிக்காமலேயே இருவரும் கிளம்பினார்கள்... பரசுவின் உள்ளக் கொதிப்பு கண்ணீராக வர... வழிநெடுகிலும் அழுதபடியே வந்தான்... தண்டபாணிக்கு வேலை சுலபமாக முடியப்போகும் சந்தோஷம்... அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் பரசுவுக்காக பரிதாபப்படுவது போல் நடித்தபடி வந்தார்...

காலை மணி ஆறு ஐம்பது... மதுரையை கடந்து கல்லுப்பட்டி பைபாஸில் கார் திரும்பியது... காரை ஓரமாக நிறுத்திய தண்டபாணி “ தம்பி இங்கிருந்து நாற்பது நிமிஷத்தில் உன் அக்கா வேலை செய்யும் பங்களாவுக்கு போயிடலாம்” என்றபடி கார் கதவை திறந்து இறங்க.. பரசுவும் இறங்கினான்..

ஆட்டோவிற்காக காத்திருக்கும் நேரத்தில் இருவரின் பிரஸரும் தாறுமாறாக ஏறியது... முகூர்த்தம் நேரம் ஏழரை ஒன்பது..... அதற்குள் போய் சேரவேண்டுமே? அந்த காலை வேலையில் ஒரு ஆட்டோ கூட வரவில்லை... வந்த ஒன்றிரண்டும் நிற்காமல் போனது.. சரியாக ஏழு பத்துக்கு ஆட்டோ ஒன்று வர இருவரும் ரோட்டுக்கு குறுக்கே நின்று ஆட்டோவை நிறுத்தினார்கள்...

தண்டபாணி ஆட்டோ டிரைவரிடம் சத்யன் பங்களாவின் முகவரி சொல்லி ஒரு நூறுரூபாய் நோட்டை கொடுத்தார் தண்டபாணி... ஆட்டோ பரசுவை ஏற்றிக்கொண்டு சத்யனின் வீட்டு நோக்கிப் புறப்பட்டது....


“ விதி...........

“ உயிரற்ற.... உருவமற்ற.. இதுதான்....

“ உயிருள்ள பலரை ஒன்றுமில்லாமல் செய்கிறது...



“ விதி.........

“ இதன் முன்பு அரசன் கூட மண்டியிடுவான்...

“ ஆனால் வாதிடமுடியாது!



“ விதி.............

“ இதற்கு முன் வலியோருமில்லை எளியோருமில்லை...

“ அனைவரும் சமம்!



“ விதி.........

“ இதன் ரூபத்தை அறிந்தவன் யாருமில்லை!


அதிகாலை ஐந்து மணி... சத்யனின் பங்களா சொர்க்கலோகமாக ஜொலித்தது... அலங்கார விளக்குகளும்.... சீருடையில் சுற்றிவரும் ஏவலர்களும்... வாழைமரங்களும்... குறுத்தோலை மாவிலை தோரணங்களும்... தோட்டத்து மூலையில் பிரமாண்டமான பாத்திரங்களில் செய்யபடும் சமையல்கள் என ஒரு அரண்மனையின் தோற்றத்தை கொடுத்தது அந்த பங்களாவுக்கு

பட்டாடைகள் உடுத்தி சுமக்க முடியாத நகைகளை சுமந்துகொண்டு கதை பேசும் பெண்களில் ஒரு தரப்பு.... இப்படியிருக்கும் சத்யனுக்கு ஏன் திருமணம்? என்றும்... பரவாயில்லை அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைந்ததே.. எப்படயோ நல்லாருந்தா சரி.... என்று மறு தரப்பும் முக்கிய விவாதத்தில் ஈடு பட்டிருக்க... இது எதிலுமே தலையிடாமல் மணமக்களை வாழ்த்த மட்டும் வந்திருக்கும் ஒரு கூட்டம் திருமண பந்தல் அருகே நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தது...

பாத்ரூமில் இருக்கும் சேரில் வேலுவும் வரதனும் சத்யனைத் தூக்கிச் சென்று உட்கார வைத்தார்கள்... வரதன் வெளியே வந்து விட்டான்.. வேலு சத்யனை வெண்ணீரில் குளிக்க வைக்க... ராஜா மகனுக்கு எடுத்திருந்த திருமண உடைகளை எடுத்துக்கொண்டு வந்து காத்திருந்தார் ..

சத்யன் குளித்துவிட்டு வந்ததும் ராஜாவும் வேலுவும் சத்யனுக்கு பட்டு வேட்டி பட்டு சட்டையை போட்டுவிட்டு வீல்சேரில் உட்காரவைத்து டிரஸிங் டேபிள் கண்ணாடியின் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள் ...

பல மாதங்களுக்குப் பிறகு சத்யன் இன்றுதான் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கிறான்..... அவன் முகம் அவனுக்கே மறந்து போயிருக்க.. வெகுநேரம் உற்றுப் பார்த்தான்... தலைமுடி மீசை தாடி எதிலும் எந்தவித ஸ்டைலும் இல்லாமல் இருக்கும் இந்த சத்யன் இவனுக்கு புதியவன்.. ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டான்
தலையை அழகாக படிய வாரிக்கொண்டிருந்தவனை குனிந்து அணைத்துக்கொண்டார் ராஜா... “ இந்த வேட்டி சட்டையில் ரொம்ப அழகா இருக்கடா மகனே” என்றவரின் குரல் கரகரத்தது...

அப்பாவின் இந்த உணர்ச்சிவசப்படும் அன்பு கூட சத்யனுக்குப் பழக்கமற்றது... ஆச்சர்யத்தை மறைத்து “ தாங்க்ஸ் டாடி” என்றான்

“ ம்ம்ம் இந்த இளவரசனை ரெடி பண்ண நாங்க ரெண்டு பேர்தான்... ஆனா இளவரசியை ரெடி பண்ண கிட்டத்தட்ட பத்துபேர் சுத்திச்சுத்தி நிக்கிறாங்க.. உன் மம்மி மூனு மணிக்கு எழுந்திரிச்சு மருமகள் ரூமுக்குப் போனாடா சத்யா... மறுபடியும் வெளிய வரவேயில்லை... பாவம் உன் தாத்தா லாக்கரைத் திறந்து எல்லா நகையையும் எடுத்துக் குடுத்துட்டார்.. ஆனாலும் உன் மம்மிக்கு திருப்தியாவே இல்லை... எல்லாம் பழசா இருக்குன்னு கத்துறா சத்யா... இந்த நேரத்துல புது நகைக்கு எங்கப் போறது? தாத்தா எப்படியோ மம்மியை சமாதானம் செய்து மான்சிக்கு பழைய நகைகளை போடச் சொல்லிருக்கார் சத்யா ” என்று கீழே நடக்கும் சந்தோஷக் கலவரத்தைப் பற்றி ராஜா மகிழ்ச்சியுடன் கூற... சத்யனின் முகத்திலும் சந்தோஷத்தின் சாயல்...

கண்ணாடிப் பார்த்தவனின் கண்களில் கழுத்தில் இருந்த தழும்பு தட்டுப்பட்டது... ஏதோ நினைவு வந்தவனாக “ மான்சி பாமிலில எல்லாரும் வந்தாச்சா டாடி” என்று கேட்க..

“ இல்ல சத்யா.... மான்சி தரப்பில் சாமிக்கண்ணு மரகதம் மட்டும் தான்... அவ பேமிலிக்கு சொல்லலை... அவங்களுக்குத் தெரிஞ்சா கல்யாணம் நடக்காதுன்னு மான்சி பீல் பண்ணதால... தாத்தா சொல்லலை.. மேரேஜ் முடிஞ்சதும் அவங்களை வரவழைச்சு சொல்லலாம்னு இருக்கோம் சத்யா” என்று ராஜா நிதானமாக மகனுக்கு எடுத்துக் கூற...

“ ஓ.... ஷிட்” என்று வீல்சேரின் கைப்பிடியில் ஓங்கி குத்திய சத்யன்... “ ஏன் டாடி சொல்லலை... இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை” என்று ஆத்திரமாக கத்தியவனின் வாயை தன் விரல்களால் பொத்திய ராஜா..

“ சத்யா மேரேஜ்க்கு வந்த கெஸ்ட் வீடு முழுக்க இருக்காங்க... மான்சி வீட்டுல இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா சத்யா? ஏன்னா நீயும் மான்சியும் முதலில் சந்தித்த சூழ்நிலை அப்படி... இதுல மான்சி மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... அவ வீட்டுலயும் சம்மதிக்கனும்னு நினைக்குறது ரொம்ப அதிகப்படியான ஆசை சத்யா” ராஜா மகனுக்கு சூழ்நிலையை எடுத்துச்செல்ல...


சத்யன் உள்ளுக்குள் குமுறினான்.... மான்சியை விரலால் தீண்டவே தனக்கு தகுதியில்லை என்று கூறிய மான்சியின் தம்பியின் முன்பு மான்சி கழுத்தில் தாலிகட்டி அவளை மனைவியாக்கிக்கொண்டு பரசுவின் முகத்தில் கறியைப் பூச நினைத்த தனது ஆசையில் மண்விழுந்ததை எண்ணி சத்யனுக்கு ஆத்திரம் தான் வந்தது...


“ சரி வா கீழே போகலாம் சத்யா ” என்று ராஜா சொன்னதும் வேலு வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்து லிப்ட் நோக்கி சென்றான்... சத்யன் கடுமையான தனது முகத்தை மாற்றிக்கொள்ள முயன்று தோற்றுப் போனான்...


முகம் இறுக மகன் வருவதை கவனித்த ராஜா... எல்லாம் கீழே வந்து மான்சியைப் பார்க்கும் வரைதான் என்று எண்ணிக்கொண்டார்...
சத்யன் கீழே ஹாலுக்கு அழைத்து வரப்பட்டான்... அத்தனைப் பேரின் பார்வையும் விதவிதமாக சத்யனை மொய்க்க... “ மான்சி இருக்குற ரூமுக்குப் போகலாம்” என்று சத்யன் சொல்ல... வீல்சேர் திருப்பப்பட்டு தாத்தாவின் அறைக்கு அருகில் மான்சி இருந்த அறைக்கு சென்றது..

கதவை ராஜா திறந்துவிட வேலு உள்ளே சத்யனை விட்டுவிட்டு வெளியே வந்தான்... மான்சியின் அறையில் நான்கைந்து பெண்கள் இருக்க... ராஜி அவர்களிடம் “ எல்லாம் முடிஞ்சதுல்ல.. நீங்கல்லாம் கொஞ்சம் வெளியே இருங்க” என்று சொல்ல... அனைவரும் வெளியேறினார்கள்...



சத்யனுக்கு முதுகாட்டிய வாறு ஒரு சேரில் அமர்ந்திருந்தாள் மான்சி... ராஜா மகனின் வீல்சேரை மான்சியின் அருகில் தள்ளிக்கொண்டுப் போனார்... சத்யன் அருகில் வந்ததும் மான்சி எழுந்து நின்றாள்...

“ ராஜி வா நாம கல்யாண வேலையை கவனிப்போம்.. ஐயர் கூப்பிடும் போது வந்து இவங்களை கூட்டிட்டுப் போகலாம்” என்று கூறி மனைவிக்கு கண் ஜாடை செய்தார் ராஜா... சத்யனின் கோபத்தை தனிக்கும் சக்தி மான்சியிடம் தான் இருக்கிறது என்பது ராஜாவின் கனிப்பு.... இருவரும் வெளியேறினார்கள்..

சத்யன் தானாக வீல்சேரை உருட்டிக்கொண்டு மான்சியை நெருங்கி திரும்பினான்.... நின்றிருந்த மான்சியை நிமிர்ந்து பார்த்தான்... இமைக்க மறந்தான்... நிலைவை பிடித்து ஒரு பெண் சிலையாக செதுக்கி... அந்த சிலைக்கு நட்சத்திரங்களை ஆபரணங்களாகவும் சூரியனின் ஒளியை ஆடையாகவும் அணிவித்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தாள் மான்சி... அவள் முகத்தின் பளபளப்புடன் அணிந்திருந்த வைர நகைகள் போட்டிப் போட முயன்று தோற்றுப் போயிருந்தன...



No comments:

Post a Comment