Tuesday, January 5, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 9

மாடிப்படியில் அமர்ந்திருந்த மான்சி காலி பாத்திரத்துடன் வந்த ராஜியைப் பார்த்து நிம்மதியாக மூச்சு விட.... ராஜி மான்சியை கையோடு இழுத்துச்சென்று டேபிளின் முன்பு சேரில் உட்கார வைத்து அவளே தட்டு வைத்து இட்லிகளை பறிமாறினாள்...

“ அய்யோ நீங்க ஏன்மா எனக்கு பறிமாறிக்கிட்டு... நானே சாப்பிடுறேன்” மான்சி சங்கடமாக கூறியதும்.....

அவளை பொய்யாக முறைத்த ராஜி “ இனிமே இந்த அம்மா ஐயா எல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா முறையோட கூப்பிடு” என்றவள் மான்சியை முதன்முதலாக பார்த்த நாளின் நினைவில் கண் கலங்கி “ அன்னைக்கு உன்னை முதன்முதலா பார்த்தப்பவே எனக்கு உள்ளுக்குள்ள தோனுச்சு மான்சி.... இவதான் வரம் தரப்போகும் தேவதைனு” என்று கூறி கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்....



மறுநாள் காலை மான்சி அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பூக்கைப் பறித்துக்கொண்டு பூஜையறைக்கு வந்தாள்... நான்கு நாட்களாக பூஜை செய்யாமல் நிறைய வேண்டுதல்கள் பாக்கி இருக்க... அதிக நேரமெடுத்து வழிப்பட்டாள்... சற்றுநேரத்தில் ராஜியும் வந்து மான்சியுடன் அமர்ந்து கொண்டாள்... பூஜை மணியின் ஓசை மாடியில் சத்யன் அறை வரைக்கும் கேட்டது....

மதுரையில் மிகப் பிரபலமான முதுகுத்தண்டு சிகிச்சை நிபுனர் வாரம் ஒருநாள் வந்து சத்யனைப் பார்த்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அன்று அவர்தான் வந்திருந்தார்.... சொக்கலிங்கத்தின் ஏற்பாட்டின் படி காலை ஒன்பது மணிக்கு வந்தவர் சத்யனின் உடலை பரிசோதித்து விட்டு சொக்கலிங்கத்தின் ஆபிஸ் அறைக்கு வந்தார்...

சற்றுநேரத்தில் மான்சி அங்கே வரவழைக்கப்பட்டாள்... வழக்கமான அறிமுகம் முடிந்து மான்சி டாக்டருக்கு வணக்கம் சொல்ல... பெண்களிடம் அறிதாகிப் போன வணக்கமான தோற்றத்தை மான்சியிடம் கண்டு புன்னகையுடன் தலையசைத்தார் டாக்டர்...

“ உன்னைப்பார்த்து சத்யன் பிடிவாதம் பிடித்ததில் வியப்பில்லை” என்று டாக்டர் சொன்னதும்...

மான்சியின் மனதில் முதல்நாள் சம்பவம் மனதில் ஓடியது.... அன்று எனக்காத்தான் பிடிவாதமாக கையைப்பிடித்து இழுத்தானோ?.....

மான்சிக்கு ஒரு இருக்கை போட்டப்பட்டது.... சொக்கலிங்கம் “ நான் கொஞ்சநேரம் வெளியே இருக்கேன் டாக்டர்” என்று வெளியே சென்றார்....

டாக்டர் புன்னகையுடன் மான்சியின் எதிரில் அமர்ந்து “ பெரியவர் எல்லா விஷயமும் சொன்னார்.... ஆனால் மான்சி சத்யன் இப்போ நார்மல் மனிதன் இல்லை... நான் வெளிப்படையா பேசனும்னா அவனால் உனக்கு எந்தவிதமான தாம்பத்திய சுகமும் கிடைக்காது... இப்போ அன்பின் அடிப்படையில் முடிவெடுத்துவிட்டு பிறகு வருந்தி பயனில்லை.... இதைப்பற்றி நல்லா யோசிச்சு முடிவு பண்ணனும் மான்சி... நீ ஒரு சராசரி பெண்... எல்லா உணர்வுகளும் உனக்கு உண்டு... ஆனால் சத்யன் அப்படியில்லை உணர்சிகள் உண்டு அதை உணரத்தான் முடியாது..... அதாவது அவனோட ஆண்மையின் உயிரணு உற்பத்தி விறைப்பு தன்மை என எல்லாமே சரியாக இருக்கும்... ஆனால் உறவுகொள்ள இடுப்பின் விசையும் கால்களின் அசைவும் வேண்டும்.. அது சத்யனிடத்தில் செயலற்றுப் போனது... இதுமட்டுமல்ல இப்போது ஆரோக்கியமாக தெரியும் சத்யனின் வாழ்நாள் திருப்திகரமாக உள்ளதுன்னு சொல்லமுடியாது... இதுபோல் இருக்கும் சத்யனை சேவை மனப்பான்மையோடு இன்று திருமணம் செய்துவிட்டு... பிற்காலத்தில் நீயும் வருந்தி அவனையும் வேதனைக்குள்ளாக்கினால் அது சத்யனின் வாழ்நாளையே பெருமளவு குறைத்துவிடும்... நீ திடமான முடிவு எடுத்தால் தான் பிற்காலத்தில் சங்கடங்களை தவிர்க்கலாம்.... இப்போ நல்லா யோசிச்சு சொல்லு மான்சி... நீ ரொம்ப சின்ன வயசுப்பொண்ணு.... உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஒரு சந்நியாசினியாக உன்னால் வாழமுடியுமா? சத்யனை திருமணம் செய்து அவன் குழந்தையை சுமக்க தயாரா இருக்கியா?” டாக்டரின் குரல் தீர்க்கமாக கேட்டது....


மான்சி அமைதியாக இருந்தாள்.... தாத்தா சொன்னதையே தான் டாக்டர் வேறு விதமாக சொல்கிறார்.... ஆகமொத்தம் தாம்பத்திய சுகத்தை மட்டுமே மையமா வச்சு பேசுறாங்க.... ஆனா சத்யனின் முகத்தை சில நிமிடங்கள் மட்டும் பார்த்துட்டு அவனையே நினைச்சு இந்த ஆறுமாசமா வாழுறேனே இதேபோல் கடைசிவரை வாழ என்னால் முடியாதா? இவங்களுக்கு அதெல்லாம் புரியப்போகிறது? மான்சியின் மனம் தெளிவாக இருந்தது...

அவளது அமைதி புன்னகையுடன் டாக்டரை ஏறிட்டவள் “ என்னோட மனசை வெளிப்படையா இப்போ சொல்ல முடியாது டாக்டர்... ஆனா அவருக்கு பொண்டாட்டியா படுக்கையில் இருக்கிறதைவிட ஒரு நல்ல தோழியா பக்கத்தில் இருப்பதைத்தான் நான் விரும்புறேன்.... நான் சின்னப்பொண்ணுனு சொன்னீங்க.... நான் இப்போ சொல்றதை கவனமா கேட்டுக்கங்க... அவர்தான் என் உயிர்னு நான் வாழ ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு... அதே ஆறுமாச வாழ்க்கையை அறுபது வருஷத்துக்கும் தொடர என்னால முடியும்... மணிக்கணக்கா இரண்டு உடல்கள் ஒன்று சேரும் சுகத்தை விட... இரு மனங்கள் உரசிக்கொள்ளும் நிமிட நேர *சிலிர்ப்புதான் எனக்கு ரொம்ப உயர்வா தெரியுது... இந்த பணம் சொத்து எதுவுமே எனக்கு வேண்டாம்... எங்க ரெண்டுபேரையும் ஒரு குடிசையில் கொண்டுபோய் வச்சா கூட அவரை நான் சந்தோஷமா பார்த்துக்குவேன்... அவர் என் உயிர் ... அந்த உயர் எப்போ போனாலும் அடுத்த விநாடி என்னோட உயிரும் போயிரும்... இந்த காலத்தில் போய் இப்படியெல்லாம் இருக்கமுடியாதுன்னு நீங்க நினைக்கலாம்... ஆனால் எத்தனை காலம் கடந்தாலும் நான் இப்படித்தான்... இதுக்குமேல நான் எதுவும் சொல்ல விரும்பலை டாக்டர்..” என்று கூறிவிட்டு மான்சி எழுந்துகொண்டாள்.....

டாக்டர் அவள் முகத்தையே உற்றுப்பார்த்து விட்டு “ நீ மட்டும் சத்யன் நல்ல நிலையில். இருக்கும்போது அவன் மனைவியாகியிருந்தால் அவன் வாழ்க்கை எவ்வளவு சிறப்பா இருந்திருக்கும்” என்றவர் ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டு “ எனிவே மான்சி உங்க கல்யாணத்துக்கு முதல் வாழ்த்து என்னோடதுதான்.... நீ சத்யனோட நீண்ட நாட்கள் சந்தோஷமா வாழனும்னு வாழ்த்துறேன் மான்சி” டாக்டர் சொன்ன அடுத்த நொடி

மான்சியின் முகம் குங்குமமாய் சிவக்க... மாலை நேரத்து ரோஜாவாக தலை கவிழ்ந்து “ தாங்க்ஸ் டாக்டர் ” என்று கூறிவிட்டு வெளியேறினாள்....

அதன்பிறகு சொக்கலிங்கம் அறைக்குள் வந்ததும் டாக்டர் எல்லாவற்றையும் கூறிவிட்டு “ நீங்க தாராளமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ங்க சொக்கலிங்கம்... அந்தப் பொண்ணு நல்ல தெளிவா இருக்கா... அவள் தரப்பில் ஒரு பிரச்சனையும் இல்லை... இனிமேல் நாம செய்யவேண்டியது என்னன்னா.... ஏதாவது அதிசயம் நடந்து சத்யன் பூரணமா குணமடைந்து இவங்க ரெண்டு பேரும் நார்மலான தம்பதிகளா சேர்ந்து வாழனும்னு கடவுளை வேண்டுறது தான் நம்ம வேலை” என்றார்...

டாக்டர் சென்றதும் மகனையும் மருமகளையும் தனது அறைக்கு அழைத்து சிறிதுநேர ஆலோசனைக்குப் பிறகு தங்களது குடும்ப வக்கீலுக்கு போன் செய்தார் பெரியவர்...

பகல் பணிரெண்டு மணிக்கு குடும்ப வக்கீல் சில டாக்குமெண்ட்களுடன் வீட்டுக்கு வந்த அதேநேரம்.... தண்டபாணியும் டெல்லியில் இருந்து தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்...




“ பெண் ஒரு அசுர சக்தி.....

“ அவளால் ஒருவனை மிருகமாக...

“ மாற்றவும் முடியும்

“ அதே மனிதனை தெய்வமாக....

“ போற்றவும் முடியும்


“ பெண் ஒரு அசுர சக்தி.....

“ அவளால் கண்களால் காதலை

“ பேசவும் முடியும்

“ அதே கண்களில் நகங்களையும்

“ வளர்க்கவும் முடியும்.....


“ பெண் ஒரு அசுர சக்தி.....

“ அவளால் ஒரு காதலை மாலையாக

“ மாற்றவும் முடியும்....

“ அதே காதலை மலர்வளையமாக

“ வைக்கவும் முடியும்

அன்று காலை சொக்கலிங்கம் ராஜா இருவரும் கம்பெனிக்கு செல்லாமல் லாயரின் வருகைக்காக காத்திருந்தனர்..... மான்சியும் ராஜியும் பூஜையை முடித்துவிட்டு வெளியே வரும்போதுதான் லாயர் வீட்டுக்குள் நுழைந்தார்... சொக்கலிங்கம் வெளியே வந்து லாயரின் கைப்பற்றி தனது அறைக்கு அழைத்துச்சென்றார் ... அவர்கள் பின்னாலேயே ராஜாவும் அறைக்குள் சென்றார்....

அவர்கள் சென்ற சிறிதுநேரத்தில் சற்றுநேரத்தில் இன்டர்காமில் ராஜிக்கு அழைப்பு வர... ராஜி பேசி வைத்துவிட்டு.... வா மான்சி உன்னையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்றவள் சமையலறையின் வாசலில் நின்றிருந்த மரகதத்தைப் பார்த்து “ மரகதம்மா உங்களையும் பெரியவர் வரச்சொன்னார் ... வாங்க” என்று சொல்லிவிட்டு மான்சியுடன் பெரியவர் அறைக்குள் சென்றாள் ராஜி ......

மரகதமும் அவர்களின் பின்னாலேயே நுழைய... அறைக்குள் ஏற்கனவே சாமிக்கண்ணு இருந்தார்.... சொக்கலிங்கம் சிறு புன்னகையுடன் மரகதத்தைப் பார்த்து “ என்ன மரகதம்? இனிமே நீ எனக்கு சம்மந்தியம்மாவாயிட்ட..” என்று கூற...

“ஐயா?” என்று கேள்வி கலந்த குழப்பத்தோடு மரகதம் தன் கணவரையும் பெரியவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்...

“ பதட்டப்படாத மரகதம்” என்ற பெரியவர் சத்யன் சாப்பிடாததற்கு காரணம் என்ன என்று ஆரம்பித்து அவன் மான்சியை திருமணம் செய்துகொள்ள விரும்பியது வரை எல்லாவற்றையும் சொன்னவர்... மான்சியை அழைத்து பேசி அவள் சம்மதம் கூறியது வரை விளக்கமாக கூறினார்..

“ இப்போ நீயும் சாமிக்கண்ணும் தான் முடிவு சொல்லனும் மரகதம்... மான்சி அவ வீட்டுக்கு இப்போ விஷயம் தெரியவேண்டாம்னு சொல்றா... கல்யாணம் முடிந்ததும் நாம எல்லாருமா சேர்ந்து அவங்களுக்கு சொல்லி புரியவைக்கலாம் மரகதம்... இப்போ நீ என்ன நினைக்குறேன்னு சொல்லு... எதுவாயிருந்தாலும் மனசுவிட்டு சொல்லிடு... ஏன்னா இப்போ வக்கீல் வந்திருக்கறது கூட பிற்காலத்தில் மான்சியோட பாதுகாப்புக்கு சில சொத்துக்களை அவள் பெயருக்கு மாற்றத்தான்.... அதனால மான்சியைப் பத்தி நீயும் சாமியும் பயப்படவேண்டாம்.. இனிமேல் அவதான் இந்த வீட்டு இளையராணி” என்று மரகதத்துக்கு புரியும் விதமாக பெரியவர் தெளிவுப் படுத்த.... எல்லோரும் மரகதத்தின் பதிலுக்காக அவள் முகத்தையேப் பார்த்தனர்...

மரகதத்தின் காதுகளில் விழுந்த வார்த்தைகள் வெகு சீக்கிரத்திலேயே மூளையைச் சென்றடைய அதன் கேள்விகளும் உடனே வந்தது.... “ என் பேத்தியா இளையராணி?” என்றவள் சட்டென்று திரும்பி பேத்தியின் முகத்தை திரும்பி பார்த்தாள்... அந்த அழகு முகத்தில் வெட்கம் சிவப்பு கவிதையாய் ஒளிர்ந்தது.... கீழுதட்டை பற்களால் கவ்வி யாரையும் பார்க்காமல் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தாள்...



மரகதம் மீண்டும் பெரியவர் பக்கம் திரும்பி “ ஐயா சின்னராசாவுக்கு என் பேத்திய கட்டி வைக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தானுங்க... சின்னராசு நான் தூக்கி வளர்த்த புள்ள.... அதோட என் பேத்தியும் இம்பூட்டு பெரிய வீட்டுல வாக்கப்படுறது எனக்கு சந்தோஷம் தானுங்க... ஆனாக்க இந்த கல்யாணத்தால என்னங்கயா பிரயோசனம்?... சின்னய்யாவை பக்கத்துலேருந்து பாத்துக்க ஒரு பொஞ்சாதி கிடைப்பா... உங்களுக்கு வாரிசு கிடைக்கும்... இந்த சின்னபுள்ளையோட வாழ்க்கை என்னாகும்ங்க ஐயா? வாழாமலேயே என் பேத்தியோட வாழ்க்கை முடியனுமா? அதுக்கு என்னங்க ஐயா தெரியும்? நாம பெரியவங்கதான் நாலும் யோசிச்சு செய்யனும்..... சின்னராசாவால குடும்ப வாழ்க்கை வாழ முடியாதுன்னு சொல்றப்ப... அவரு புள்ளைய சுமக்க வேற யாராவது ஏற்பாடு பண்ணலாமே ஐயா? ... மான்சி சின்னப் பொண்ணுங்கய்யா... பாவம் அது வேனாம்ங்க ” என்ற மரகதத்தின் வாதத்தில் அனைவரும் வாயடைத்துப் போனார்கள்...

சொக்கலிங்கம் மரகதத்தை பெருமையோடுப் பார்த்து “ இதுதான் மரகதம் உன்கிட்ட பிடிச்ச விஷயம்.... இவ்வளவு பணமும் சொத்துகளும் இருந்தும்... இதெல்லாம் வேண்டாம் என் பேத்தியோட வாழ்க்கைதான் முக்கியம்னு சொல்ற பாரு? இதுதான் மரகதம்.... ஆனா மரகதம் இதுல நீயும் நானும் பேசுறதைவிட மான்சியோட முடிவுதான் ரொம்ப முக்கியம்... நீ அவகிட்டயேப் பேசிப்பாரு மரகதம்” என்றார்..

மரகதம் பேசுவதற்கு முன்பே அவளை நெருங்கிய மான்சி “ ஏன் அம்மாச்சி எனக்கும் சின்னய்யாவுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் அவருக்கு இந்த விபத்து நடந்திருந்தா.... இப்படி இருக்குற புருஷன் உனக்கு வேண்டாம் அவரை விட்டுட்டு வாழாவெட்டியா வீட்டுக்கு வந்துன்னு சொல்லுவியா அம்மாச்சி?” என்று கேட்க...

இதுபோன்ற கேள்விக்கு யாரால்தான் பதில் சொல்லமுடியும்? விபத்தும் காதலும் எப்போ எப்படி எங்கே வரும் என்று யாராலுமே சொல்லமுடியாதே? இதுபோன்ற விபத்து திருமணத்திற்குப் பிறகு நடந்திருந்தால் யாரால் தடுக்க முடியும்... விதியின் போக்கில் தான் போயிருக்க முடியும்...

மான்சி பாட்டியை நெருங்கி அவர் கைகளைப் பற்றிக்கொண்டு “ அம்மாச்சி நீ என்னோட வாழ்க்கைனு சொன்னியே அது என்னன்னு எனக்கும் தெரியும் அம்மாச்சி... நான் ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லையே? எனக்கு இருபத்தியொரு வயசாச்சு அம்மாச்சி... நீ சொன்ன அந்த வாழ்க்கையையும் மீறிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு அம்மாச்சி... நீயும் தாத்தாவும் அம்பது வருஷமா வாழுறீங்க... இனிமேல் அந்த சுகமில்லைனு நீங்க ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் பிரிஞ்சா போய்ட்டீங்க? இப்போதானே ஒருத்தருக்கொருத்தர் தேவைகள் அதிகமா இருக்கு? அதுபோல தான் இதுவும்... ஐம்பது வருஷம் கழிச்சு வாழவேண்டிய வாழ்க்கையை இப்பவே வாழப்போறோம் அவ்வளவுதான் அம்மாச்சி... என்னோட இளமை அதுக்கு ஒத்துழைக்காதுன்னு நீங்க நெனைக்கிறீங்க..... அவர் பக்கத்துல இருக்கிறதே என் இளமைக்கு வடிகாலா நான் நினைக்கிறேன் அம்மாச்சி..” என்ற மான்சி சட்டென்று கண்ணீரில் குலுங்கி .... “ அம்மாச்சி அவரு இப்படி ஆனதுக்கு நானும் ஒரு வகையில் காரணம் தான்” என்றவள் அன்று சத்யன் தன் கையைப் பற்றியதையும் அதற்கு சத்யன் கழுத்தில் பரசு கத்தி வைத்ததையும் சொல்லிவிட்டு “ அன்னிக்கு மட்டும் என் விஷயத்தில் அவரோ கவனம் சிதராமல் இருந்திருந்தா இந்த விபத்தே நடந்திருக்காது அம்மாச்சி... அதனால நான் தியாகம் பண்றதாகவும் யாரும் பரிதாபப்பட வேண்டாம்... நானும்தான் ஆறு மாசமா அவரை என் மனசுக்குள்ள வச்சுகிட்டு தவியா தவிச்சேன்... இப்போ என் தவிப்பு தீரப் போகுது... யாரும் மறுக்காம இந்த கல்யாணத்தை நடந்துங்களேன் ப்ளீஸ்” என்று கெஞ்சலில் முடிந்தது மான்சியின் தன்னிலை விளக்கம்....
எல்லோரும் அமைதியானார்கள்... ராஜா ராஜி இருவரின் மனதிலும் ஒரே விஷயம் தான் ஓடியது... இதுதான் கடவுள் போட்ட முடிச்சு என்பதா? எங்கோயிருந்தவளை சத்யனை அனுப்பி சந்திக்க வைத்து... அந்த சந்திப்பை முரணாக முடித்து.. சத்யனுக்கு கடுமையான விபத்தை ஏற்படுத்தி.... அதற்கு மருந்தாக மான்சியையே அனுப்பி வைத்த அந்த ஆண்டவனின் விளையாட்டை என்னவென்று சொல்வது?.....

பலநாள் பார்த்து பேசி தொட்டுத் தடவி கலந்து பழகியும் ஒருவரையொருவர் சரியாக புரிந்துகொள்ள முடியாமல் பிரிந்து செல்லும் காதலர்கள் மத்தியில்... வெறும் பார்வைக்கு மட்டுமே தன்னை பறிகொடுத்து இந்த ஆறுமாதமாக மனதுக்குள் காதலைப் புதைத்துக்கொண்டு வாழும் மான்சி போன்ற பெண்களால் தான் இன்னும் காதல் என்ற ஒற்றை வார்த்தையை கேட்டதுமே உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது போல........

மரகதம் தன் பேத்தியின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு “ கண்ணு நீ பொண்ணா? சாமியா? உனக்கும் எவ்வளவு பெரிய மனசு கண்ணு... உன்ன கல்யாணம் பண்ணிகிட்டா சின்னராசாவுக்கு நல்லாயிடும்னு இப்போ தோனுது கண்ணு” என்றவள் பெரியவர் பக்கம் திரும்பி “ ஐயா இது சாமி போட்ட முடிச்சு... அதை யாராலயும் மாத்த முடியாது.... நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கய்யா” என்று தனது சம்மதத்தை சொல்ல...

பெரியவரின் முகத்தில் திருப்தியான சந்தோஷம் நிலவ “ ரொம்ப சந்தோஷம் மரகதம்....... வக்கீலோட வேலை முடிஞ்சா கல்யாணத்துக்கு தேதி வச்சுடலாம்” என்று கூறயதும்...

மான்சி பெரியவர் அருகில் வந்து “ தாத்தா நீங்க சொத்தையும் பணத்தையும் கொடுத்து என்னோட நேசத்தை வியாபாரமாக்குறீங்க?” என்றாள் குற்றம்சாட்டும் குரலில்...

முதல்முறையாக பெரியவர் மான்சியின் அருகில் வந்து கூந்தலை வருடி “ இல்லடா கண்ணம்மா..... இது இந்த வீட்டு மருமகளுக்கு நாங்க தர்ற மரியாதை... உன் அத்தை ராஜேஸ்வரியை நிச்சயம் பண்ணும்போது கூட சில சொத்துக்களை நிச்சய தாம்பூலம் தட்டுல வச்சுதான் பரிசம் போட்டோம... அந்த முறையை மாத்த முடியுமா?” என்று சிரிப்புடன் சொல்ல...

பெரியவரின் அருகில் வந்த ராஜா “ ஆமா மான்சி இது நம்ம குடும்ப சம்பிரதாயம் தான்” என்று அப்பாவுக்கு ஒத்தூதினார்...

மான்சி இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு “ குடும்ப சம்பிரதாயம்.. பரம்பரை வழக்கம்னு சொல்றீங்க சரிதான்... ஆனா இதனால என்னைக்காவது என் காதலுக்கும் கற்புக்கும் கலங்கம் வரும்னு என் மனசு சொல்லுது..... இதையெல்லாம் நிச்சயம் எனக்கு பயன்படப் போறதுமில்லை... என்றைக்குமே நான் பயன் படுத்தப் போறதும் இல்லை.... சரி அது உங்களுக்குப் புரியும் போது பார்க்கலாம் இப்போ உங்க இஷ்டப்படி செய்ங்க” என்று கூறிவிட்டு வெளியே செல்ல திரும்பியவள் மீண்டும் வந்து ...

. “ இங்க இருக்குற எல்லாருக்கும் ஒரு வேண்கோள்... நான் ஆறு மாசமா அவரை நெனைச்சுதான் வாழ்ந்தேன்.. என் மனசுல அவர்தான் இருக்கார் அப்படிங்கற விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்.... அவருக்கு இப்போ தெரியவேண்டாம்.... அவரா அதை புரிஞ்சுக்கனும்... அதுக்கு முன்னாடி இப்பவே தெரிஞ்சா... இதோ நீங்க தர்றதா சொன்னீங்களே இந்த சொத்து..... இதுக்காகத்தான் நான் காதல் நேசம்னு வேஷம் போடுறதா அவருக்கு தோனலாம்.. ஏன் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சதுக்கு கூட பணம்தான் காரணம்னு அவர் நினைக்க வாய்ப்பிருக்கு... ஆரம்பமே பலமற்ற அஸ்திவாரத்தோட ஆரம்பிக்க வேண்டாம்... அதனால அவரா புரிஞ்சுக்குற வரைக்கும் தயவுசெஞ்சு யாரும் இதைப்பற்றி அவர்கிட்ட சொல்லக்கூடாது” என்று முடிவாக கூறினாள்..

அவள் சொல்வது ரொம்ப சரியென்று தான் எல்லோருக்கும் தோன்றியது.... சத்யன் தற்போது இருக்கும் மனநிலையில் மான்சி கல்யாணத்துக்கு சம்மதித்ததே சொத்துக்காக என்றுதான் எண்ணுவான்... அதனுடன் மான்சி அவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தால் நிச்சயம் கேலியாக சிரிக்கத்தான் செய்வான்... அனைவரின் சார்பாக பெரியவர் ஒப்புதலாக தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்....

“ சரி தாத்தா நான் வெளியேப் போறேன்” என்று கூறிவிட்டு மான்சி வெளியே வந்தாள் 

அப்போது அங்கே ஹாலில் ஒரு பெண் சோபா முழுவதும் நிரம்பி வழியும் படி அலுப்பாக அமர்ந்திருக்க... அவளுக்குப் பக்கத்தில் அந்தப்பெண்ணுக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் கொஞ்சம் ஒல்லியாக ஆனால் பார்வையில் ஒரு அலசலுடன் அமர்ந்திருந்தார் ஒருவர்...

மான்சியைத் தொடர்ந்து “ ராமசாமி வா ஹால்ல போய் பேசுவோம் .. சத்யனையும் வரச் சொல்லலாம்” என்று வக்கீலை அழைத்துக்கொண்டு சொக்கலிங்கமும் ஹாலுக்கு வந்தார்...

பெரியவரைப் பார்த்தும் மரியாதைக்காக கூட எழுந்து நிற்க்கவில்லை அந்தப் பெண்ணும் மனிதரும் அந்த.... அந்தாள் மட்டும் ராஜியை கண்டதும் காதுவரை இழித்து “ ராஜிம்ம நல்லாருக்கியாடா? இந்த பனிரெண்டு நாள்ல துரும்பா இழைச்சு போயிட்டியேம்மா?” என்று வருத்தத்துடன் கூறினாலும்.. அந்த வார்த்தைகளில் என்பது சதவிகித போலித்தனமே இருந்தது...

ராஜியின் முகமும் பட்டென்று மலர வேகமாக அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு “ அண்ணா வந்துட்டியா? நானே உனக்கு கால் பண்ணனும்னு நெனைச்சேன் அண்ணா... நம்ம சத்யனுக்கு மேரேஜ் வச்சிருக்கோம் அண்ணா... இதோ இந்த மான்சிதான் கல்யாணப் பொண்ணு” என்று தன் அருகில் நின்றிருந்த மான்சியை இழுத்து அவர்களுக்கு சந்தோஷமாக அறிமுகம் செய்து வைத்தாள் ராஜி ...

தண்டபாணியும் அவன் மனைவி கோமதியும் மான்சியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “ இதுவா பொண்ணு? ஆனா தங்கச்சி சத்யனுக்கு எதுக்கு கல்யாணம்? அவனாலதான் எதுவும் முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே... அப்புறம் எதுக்கு வீனா கல்யாணத்தைப் பண்ணிகிட்டு?.” இது தண்டபாணி

.” அவனால எந்த சுகமும் தர முடியாதுன்னு தெரிஞ்சும் எதுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிகிட்டு?... அப்புறம் இந்த குட்டி கிடைச்சதை சுருட்டிக்கிட்டு சுகம் எங்க கிடைக்குதோன்னு ஓடிப்போயிடப் போறா” நக்கலாய் வந்தது கோமதியின் குரல்..

“ சரியாச் சொன்ன கோமு” என்று அசிங்கமாய் மனைவியின் தொடையைத் தட்டி சிரித்தான் தண்டபாணி...

மான்சிக்கு அன்று சத்யன் அவள் கையைப்பிடித்த போது அவளை சுற்றி மட்டுமே தீப்பற்றிக் கொண்டது போல தகித்தாளே அதேபோல் இன்றும் தீ பற்றிக்கொண்டது... அந்த தீயின் ஜுவாலைகள் விழிகளில் மின்ன ஆத்திரமாய் விழித்தவளை முதலில் கவனித்தது சொக்கலிங்கம் தான்... நெருப்பை கக்கும் அந்த விழிகளை கண்டு அவரே மிரண்டுபோனார்.... காளியை கண்முன்னே காண்பது போல் இருந்தது....

சொக்கலிங்கம் சாமிக்கண்ணுவிடம் பார்வையால் ஏதோ சொல்ல அவர் மான்சியை நெருங்கி கையைப்பிடித்து “ வா கண்ணு தோட்டத்துக்குப் போய் பேசிகிட்டு இருக்கலாம்” என்று அவசரமாய் அழைத்துச்சென்றார்....

ஆனால் மரகதம் விட வில்லை கணவரின் கையை தடுத்தவள் “ எதுக்கு கூட்டிப் போறீக? அதான் வக்கீலய்யாவை வச்சு ஏதோ பேசனும்னு பெரியய்யா சொன்னாகளே? அது தெரியாம ஏன் மான்சி கண்ணை கூட்டிப் போறீக?” என்று கடுமையான குரலில் எச்சரித்தாள்...

இந்த எச்சரிக்கை சாமிக்கண்ணுக்கு அல்ல என்று பெரியவருக்கு புரிந்து போனது... என் பேத்திக்கான உரிமையை உன் வாயால் சொல் என்று அவருக்கு இடப்பட்ட உத்தரவு இது.

வக்கீலை சோபாவில் அமர வைத்த பெரியவர் “ ஆமா தண்டபாணி ராஜி சொல்றது உண்மைதான்... சத்யனுக்கும் மான்சிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிருக்கோம்... அதுமட்டுமல்ல செயற்கை முறையில் சத்யனின் உயிரணுவை சேகரித்து மான்சி மூலமா இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை உருவாக்கவும் முடிவு பண்ணிருக்கோம்...” என்று தெளிவாக பெரியவர் கூற...

தண்டபாணியின் முகத்தில் பலத்த அதிர்ச்சியின் ரேகைகள்.... “ மாமா என்ன இது? நம்ம பரம்பரையில நடக்காத ஒன்ன சொல்றீங்க.?.. இதெல்லாம் வெளியே தெரிஞ்சா அசிங்கம் மாமா... கேட்குறவங்க பார்க்குறவங்க சத்யனோட குழந்தைதான்னு நம்புவாங்களா? அவனாலதான் ஒன்னுமே முடியாதே இது யார் குழந்தையோன்னு தப்பாத்தான் பேசுவாங்க மாமா” என்றான் அவனைப் போலவே எல்லோரையும் வக்கிரமாக எண்ணிக்கொண்டு...

சொக்கலிங்கம் அமைதியாக ஆனால் யாராவது தண்டபாணிக்கு பதில் சொல்வார்களா என்பதுபோல் எதிர்பார்ப்புடன் நிற்க்க ... “ மச்சான் வார்த்தையை அளந்து பேசுங்க” ஆத்திரமாய் கர்ஜித்தார் ராஜா

“ அண்ணா என்னண்ணா இப்படியெல்லாம் சொல்ற? நாங்க எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம் தெரியுமா? யார் என்ன சொன்னா நமக்கு என்ன கவலை... நம்ம வீட்டுக்கு வரப்போற வாரிசு சத்யனோடது தான்னு நாம நம்பினா போதும்... இனிமேல் மான்சியைப் பத்தி தவறா பேசாதே அண்ணா.. அவ தேவதை மாதிரி.... நம்ம வீட்டுக்கு அவ வந்ததும் தான் எல்லா நல்லதும் நடக்குது” என்று தன் சகோதரனிடன் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ராஜி....

தண்டபாணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மான்சியின் இதயத்தை குத்தி கிழித்தது... இந்த உலகத்தில் நடக்கும் அத்தனையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல... அங்கே நேசம் என்ற ஒரு புனிதமான விஷயமும் உண்டு என்று இதுபோன்ற ஜென்மங்களுக்கு புரியுமா? ம்ஹூம் பணத்தையே உண்டு வாழும் பிறவிகளுக்கு எதைச் சொன்னாலும் புரியாது... எதிராளியை அடிக்கும் அடி திரும்ப இவர்களின் வாழ்க்கையில் விழும்போது தான் மற்றவர்களின் வலி இவர்களுக்குப் புரியும்... நெருப்பின் மீது நிற்ப்பவள் போல் நின்றிருந்தாள் மான்சி

சொக்கலிங்கம் எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நிமிர்வுடன் “ ராமு நேத்து நைட் நான் சொன்ன டாக்குமெண்டை எல்லாம் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்துருக்கியா?” என்று கேட்க.....

“ எல்லாம் ரெடியா இருக்குங்கய்யா.... நீங்க ஒரு பார்வைப் பார்த்துட்டா... யார் யார்கிட்ட சைன் வாங்கனுமோ வாங்கிடுவேன்” என்றார் வக்கீல் ராமசாமி...

பெரியவர் மகனிடம் திரும்பி “ ராஜா சத்யனைப் போய் கூட்டிட்டு வா” என்று உத்தரவிட... “ சரிங்கப்பா” என்று கூறிவிட்டு அவசரமாக மாடியேறினார் ராஜா...

மருமகளைப் பார்த்து “ ராஜி மான்சியை கூட்டிட்டு வந்து இந்த சோபாவில உட்காரு” என்றதும் “ இதோ மாமா” என்ற ராஜி மான்சியின் கையைப் பிடித்து அழைத்து வந்து பெரியவர் காட்டிய சோபாவில் அமர்ந்து தன்னருகில் மான்சியை அமர்த்திக்கொண்டாள்

“ மரகதம் எல்லாருக்கும் குடிக்க ஏதாவது எடுத்து வரச்சொல்லு” என்று மரகதத்துக்கு உத்தரவிட்டவர் “ சாமி நீ போய் எல்லா வேலைக்காரங்களையும் இங்கே வரச்சொல்லு” என்று சாமிக்கண்ணை அனுப்பினார்...

சற்றுநேரத்தில் பங்களாவின் உள் புறத்தில் இருந்த லிப்ட் வழியாக சத்யன் அழைத்துவரப்பட்டான்.... வேலு வீல்சேரை தள்ளிக்கொண்டு வர... ராஜா மகனுக்கு அருகில் வந்தார்...

அந்த வீல்சேரில் கூட கம்பீரம் குலையாமல் அமர்ந்து வந்த சத்யனை நேர்விழி கொண்டு நோக்கினாள் மான்சி... ஏனோ அந்த வீல்சேர் அவள் கண்களுக்கு சிம்மாசனம் போல் தெரிந்தது... ராஜிப் பற்றியிருந்த தனது கைகளை விடுவித்துக்கொண்டு மான்சி எழுந்து நின்றாள்...

சத்யனின் பார்வையும் எல்லோரையும் தொட்டு தொட்டு உடனே விலகி மான்சியிடம் வந்தது... ஆனால் அவளைத் தொட்டப் பார்வை விலகாமல் அங்கேயே நிலைத்தது.... மான்சியைப் பார்த்தபடியே கையால் ஜாடை செய்ய வேலு சத்யன் அருகே குனிந்தான்... சத்யன் ஏதோ கூறியதும் வேலு வீல்சேரை தள்ளிக்கொண்டு சோபாக்களிடையே புகுந்து மான்சியும் ராஜியும் அமர்ந்திருந்த சோபாவின் அருகில் வந்து நிறுத்தினான்...

மகனைப் பார்த்து புன்னகைத்த ராஜி “ வந்துட்டியா அப்பு” என்றவள் மான்சியின் கையைப்பற்றி மறுபடியும் இழுத்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டாள்...

இப்போது சத்யனும் மான்சியும் அருகருகில் அமர்ந்திருக்க.. மான்சி முகம் சூடாகி சிவந்துபோக தலையை குனிந்துகொண்டாள்.... சத்யன் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து லஜ்ஜையின் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்...

சொக்கலிங்கத்தின் உத்தரவால் சற்று தனிந்து போயிருந்த தண்டபாணியும் கோமதியும் சத்யன் மான்சியின் அருகாமையை ஏளனமாகப் பார்த்தனர்... ஆனாலும் பெரியவர் எதற்காக வக்கீலை வரச்சொல்லியிருக்கிறார் என்று ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தனர்...

சொக்கலிங்கம் சோபாவிலிருந்து எழுந்து வக்கீல் கொடுத்த சில பேப்பர்களை வாங்கிப் பார்த்துவிட்டு மகன் ராஜாவின் பக்கம் திரும்பினார்.... “ ராஜா . நம்ம சத்யனுக்காக மான்சி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும்... அவளோட பிற்காலம் கேள்விக்குறியாக ஆகக்கூடாதுனு தான் இந்த ஏற்பாடுகள்... அதாவது நாளைக்கு சத்யனுக்கே உடம்பு சரியாகி இவள் எனக்கு வேண்டான்னு நினைக்கலாம்... அப்புறம் நாளைக்கு நமக்கே மனசு மாறி குழந்தை வந்ததும் மான்சி இனி எதுக்குன்னு நினைக்கலாம்... ஏன்னா நாமெல்லாம் மனுஷங்க தானே? எப்ப வேணும்னாலும் நமக்கு தகுந்தபடி மாத்திப் பேசக்கூடியவங்க... அதான் மாத்தமுடியாத ஏற்பாட்டை மான்சிக்கு செய்யனும்னு நினைச்சு உங்களை எல்லாம் கலந்துகொள்ளாமல் இந்த ஏற்பாடுகளை செய்திருக்கேன்..” என்று பெரியவர் சொல்ல...

டாக்குமெண்ட் வாசிக்கப்படும் முன்பே “ நீங்க எது செய்தாலும் எனக்கு ஓகேப்பா” என்று ராஜா தனது ஒப்புதலை கூறினார்....

மகனைப் பார்த்து தலையசைத்தவர் “ என்னோட பூர்வீக சொத்துகள் .. எனது காலத்தில் நான் சம்பாதிச்சு வாங்கியது என எல்லாத்தையும் மான்சியின் பெயரில் எழுதியிருக்கேன்... இப்போ ராஜா நடத்துற பாக்டரி அப்புறம் இந்த பங்களா.. மதுரையில் இருக்கும் இன்னும் சில வீடுகள்.... கொடைக்கானல் எஸ்டேட்... ஊட்டி கெஸ்டவுஸ்..... இதெல் ராஜா ராஜி சத்யன் பெயரில் இருக்கு... அதையெல்லாம் அவங்க அவங்க விருப்பப்படி என்ன வேனாலும் பண்ணிக்கட்டும்... அவங்க பெயரில் இருப்பவற்றை மான்சியோட பெயருக்கு மாற்றனும்னு நான் வற்புறுத்த மாட்டேன்.. அது அவரவர் விருப்பம்... ஆனால் பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கும் உரிமையுண்டு என்பதால் நீங்க மூன்று பேரும் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிச்சு கையெழுத்துப் போட்டுத் தரனும்னு மட்டும் கேட்டுக்கிறேன்.... அப்புறம் ஒரு விஷயம்.... இந்த சொத்துக்களை இப்போ எழுதினாலும் சத்யன் மான்சி திருமணம் முடிந்து பதிவு செய்தபிறகுதான் அமுலுக்கு வரும்... ” என்ற பெரியவர் தனது முடிவை சொல்லிவிட்டு மகனைப் பார்க்க...

ராஜா வேகமாக முன் வந்து கையெழுத்துப்போட தனது பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்தார்... தண்டபாணி வேகமாக எழுந்து வந்து பேனாவை பிடுங்கிக்கொண்டு “ என்ன மாப்ள உங்களுக்கெல்லாம் புத்தி கித்தி கெட்டு போச்சா? எவளோ வந்து முடமானவன கல்யாணம் பண்ணி புள்ளைப் பெத்து தர்றேன்னு சொன்னாளாம்........ அவளுக்கு இவங்க மொத்த சொத்தையும் எழுதி வைக்கிறாங்களாம்... யார்ட்டயாது சொல்லிப்பாருங்க சிரிப்பாங்க” என்று ஆத்திரமாய் கத்தினான்....

“ நீங்க ஏன் மச்சான் கோவப்படுறீங்க? எப்படியிருந்தாலும் இந்த சொத்து முழுக்க எங்களுக்குப் பிறகு வர்ற மருமகளுக்கும் அவ குழந்தைக்கும் தானே? அதை எப்ப குடுத்தா என்ன... முதல்கட்டமா அப்பாவோட சொத்துக்களை மாத்தி எழுதினோம்... அடுத்ததா கொஞ்சம் கொஞ்சமா எங்க பேர்ல இருக்குறதையும் மான்சி பேர்லயும் அவளுக்கு பொறக்க போற வாரிசு மேலயும் எழுதிடுவோம்... இதுல புத்திகெட்டத்தனம் எதுவும் இல்லை.. நாங்க எல்லாரும் தெளிவாத்தான் இருக்கோம்” என்று ராஜா தனது மச்சானுக்கு தெளிவாக சொல்லிவிட்டு வக்கீலிடமிருந்து பேனாவை வாங்கி கையெழுத்துப் போட குனிந்தார்...

தண்டபாணி ஒரு முடிவுடன் பெரியவரைப் பார்த்து “ மாமா மொதல்ல இந்த ஏற்பாட்ட நிறுத்துங்க.... உங்களுக்கென்ன சத்யன் குழந்தையைப் பெத்துத் தர ஒரு பொண்ணு தானே வேனும்.... நாம முன்னாடி பேசினது மாதிரி என் மக அனுவை சத்யனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்.... எவளுக்கோ எழுதி வைக்கும் சொத்துக்களை என் மகளுக்கு எழுதி குடுங்க.... அவ பெத்துக் குடுப்பா உங்க குடும்பத்துக்கு வாரிசை” தண்டபாணி பணத்துக்காக தாம் எவ்வளவு தாழ்ந்து விட்டோம் என்று புரிந்தோ புரியாமலேயோ பேசிக்கொண்டிருக்க...

சத்யன் தனது தாய்மாமனை ஏளனமாக பார்த்தான்... பிறகு மான்சியை திரும்பி பார்த்தான்... மான்சி உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி விம்மலை விழுங்கிக்கொண்டிருந்தாள்... சத்யன் யோசிக்கவேயில்லை...

பட்டென்று அவள் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்.... மான்சி திடுக்கிடலோடு கையை உருவிக்கொள்ள முயன்றாள்... ஆனால் சத்யனின் பிடி வலுவாக இருந்தது....

சத்யன் தண்டபாணியை பார்த்து “ ஆனா மாமா எனக்கு உங்க மகளை பிடிக்கவே இல்லையே.... நீங்க சொன்னீங்களே எவளோ......... இந்த எவளையோதான் எனக்கு பிடிச்சிருக்கு... அதனால இந்த வீன் டயலாக்கை எல்லாம் விட்டுட்டு உங்க வேலையைப் போய் பாருங்க ” என்று சத்யன் அதட்டியதும்...

எங்கிருந்துதான் வந்தாள் என்று தெரியாமல் அங்கே வந்த அனுரேகா “ ச்சீ உன்னைப் போய் யார் கல்யாணம் பண்ணிகிட்டு காலம் பூராவும் வீல்சேரில் வச்சு தள்ளிக்கிட்டு சுத்த முடியும்..” என்று சத்யனைப் பார்த்து ஏளனமாக கூறியவள் “விடுங்க டாடி அவங்க என்னன்னா பண்ணிக்கட்டும்.... சத்யாவை இந்த பிச்சைக்காரியே கல்யாணம் பண்ணிகிட்டு காலம் பூராவும் வீல்சேர் கூட குடும்பம் நடத்தட்டும்... கோடிகோடியா குடுத்தாலும் இந்த பாதி மனுஷன் எனக்கு வேண்டாம்” அனுரேகா ஏளனத்துடன் சொல்லச்சொல்ல சத்யனின் உடல் இறுகுவதை அவன் பிடியிலிருந்து மான்சியால் உணரமுடிந்தது... 


No comments:

Post a Comment