Thursday, January 14, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 28


கோர்ட் வரதனுக்கு ஜாமீன் வழங்கியதும் இயலாமை கொடுத்த கோபத்தோடு வீட்டுக்கு வந்த தண்டபாணியை முதலில் எதிர்கொண்டது கோமதிதான் “ என்ன அந்த நாயை ரிமாண்ட் பண்ணிட்டாஙகளா?” என்று ஏளனமாக கேட்க ...

“ இல்ல ... அவனுககு பணம் கட்டி ரொக்க ஜாமீன்ல எடுத்துட்டாங்க” வெறுமையான குரலில் சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தவரின் பின்னாலேயே ஓடியே கோமதி “ அந்த நாய்க்கு தான் யாருமில்லையே? அப்புறம் யாரு ஜாமீன்ல எடுத்தது” என்று குழப்பத்துடன் கேட்க....

நிதானமாக தனது உடைகளை மாற்றியவர் “ மான்சியோட தம்பி பரசுராமன் தான் ஜாமீன்ல எடுத்தான் .. சும்மா இல்ல இரண்டு லட்சம் பணம் கட்டி எடுத்துருக்கான்” என்று தெளிவாக கூறிய அடுத்த நொடி கோமதியின் முகம் கறுத்துப் போனது...

ஆத்திரத்துடன் “ ஓ......... அந்த பரதேசி பயலுக்கு அவ்வளவு துணிச்சலா?

எல்லாம் அவன் அக்காகாரி இங்க வாழுற தைரியம்தான்... இருக்கட்டும் பேசிக்கிறேன்” என்றபடி பூமி அதிர அறையிலிருந்து வெளியே வந்தவள் ஹாலில் நின்றபடி “ ஏய் மான்சி..... ஏய் மான்சி வெளிய வாடி” என தெருச் சண்டைக்காரியைப் போல் உரத்த குரலில் கத்த...

அந்த குரலின் கொடூரத்தில் பதறி வீட்டிலிருந்த மொத்த பேரும் ஹாலுக்கு வர.... குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருந்த மான்சி திகைப்புடன் குழந்தையை படுக்கையில் கிடத்திவிட்டு எழுந்து வெளியே வந்தாள்....


மான்சியைப் பார்த்ததும் கோமதியின் முகம் இன்னும் கொடூரமாக மாற “ ஏன்டி உன் தம்பிக்கு எவ்வளவு திமிர் இருந்தா அந்த பொறுக்கி நாயை ஜாமீன்ல எடுத்திருப்பான்?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்..

மான்சிக்கு ஒன்றும் புரியவில்லை “ என்ன சித்தி சொல்றீங்க?” என்று கேட்க...

“ என்னடி ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற? ஓ இப்பதான் புரியுது நீங்க எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி என் மகளை அவனை வச்சு நாசம் பண்ணிட்டு அப்புறம் நீங்களே அவனை ஜாமீன்ல எடுத்திருக்கீங்க.... என்ன அநியாயம்டி இது... அப்படியே ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறயே? இந்த வீட்டுல எல்லாரையும் ஏமாத்தலாம்... ஆனா நான் கண்டுபிடிச்சிட்டேன் பாரு உன் நடிப்பை” என ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டினாள் கோமதி

அத்தனை வேலைக்காரர்கள் முன்பும் கோமதி கூறிய வார்த்தைகள் மான்சிக்கு அழுகையை தான் வரவழைத்தது “ அய்யோ சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சித்தி... என் தம்பி என்னை கேட்காம அப்படியெல்லாம் செய்யமாட்டான்” மன்றாடினாள் மான்சி

“ ஏன்டி செய்யமாட்டான்? அதுகூட சும்மா ஜாமீன்ல எடுக்கலை ரெண்டு லட்சம் பணம் கட்டி ஜாமீன்ல எடுத்திருக்கான்” என்ற தகவலை நெருப்பாக மான்சியின் மீது வீசியதும் “ என்னது? என் தம்பியா?” என்றபடி திகைப்புடன் சோபாவில் அமர்ந்தாள் மான்சி...

அதன்பின் கோமதியின் வாயில் வந்த வசைகள் ஒன்றுகூட மான்சியின் காதுகளில் விழவில்லை... ‘ பரசுவா வரதன்ண்ணாவை ஜாமீன்ல எடுத்தான்? என்கிட்ட ஏன் சொல்லலை? என்று வருந்தியவளுக்கு சட்டென்று சத்யனின் ஞாபகம் வந்தது.. ‘ இது அவருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகுமே? தலையை கைகளில் தாங்கிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்... கோமதியின் கத்தல் ஒலித்துக்கொண்டே இருந்தது,,

சபாபதி போன் செய்து விஷயத்தை கூறியதால் கம்பெனியில் இருந்து பெரியவர் அவசரமாக கிளம்பி வரும்போது மான்சி கண்ணீருடன் சோபாவில் அமர்ந்திருக்க.. கோமதி வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டிருந்தாள்... 


பெரியவரை கண்டதும் “ தாத்தா என்றபடி மான்சி அவரிடம் செல்ல... அவர் எதுவுமே பேசாமல் மான்சியை தோளோடு சேர்த்துப் பிடித்து அவள் அறையில் கொண்டு போய் விட்டுவிட்டு “ அவங்க பேசுறாங்கன்னு நீ மனசை போட்டு குழப்பிக்காத மான்சி... வரதனை ஜாமீன்ல எடுக்க நான்தான் வக்கீலை ஏற்பாடு செய்து கொடுத்தேன்... பரசு சின்னப்பையன் சரி.... ஆனா நான் தவறு செய்வேனா? அதனால நீ எதையும் நினைக்காம இங்கேயே இரு நான் அந்த கோமதிக்கு பதில் சொல்லிட்டு வர்றேன்” என்று திரும்பியவரை தடுத்த மான்சி ..

“ பரசுவானாலும் நீங்களானாலும் வரதன்ண்ணாவை ஜாமீன்ல எடுத்தது தப்புதான் தாத்தா.... அனு கொலை குற்றமே செய்திருந்தாலும் கூட பரவாயில்லை... அவளுக்கு இந்த தண்டனை ரொம்ப அதிகம்தான்... மகளை இந்த நிலையில பார்க்கிற பெத்தவங்க வயிறு எரியத்தான் செய்யும்... இப்போ அந்த வயித்தெரிச்சலுக்கு நீங்களும் பரசுவும் காரணமாயிட்டீங்களே” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்

பெரியவருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை... அனு தனக்கே துரோகம் செய்துவிட்டாள் என்ற உண்மை மான்சிக்கு தெரிஞ்சாக் கூட மான்சியின் வார்த்தைகள் இதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு புரிய அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மான்சியை நினைத்து அவருக்கு பெருமையாக இருந்தது...

தாயும் தகப்பனும் இருந்து செல்வம் செல்வாக்கோடு வளர்த்த அனுவின் துர்புத்திக்கும்... தாயின்றி தந்தையின்றி வளர்ந்த மான்சியின் உயர்ந்த குணத்திற்கும் வித்தியாசம் இமயம் அளவு உயர்ந்து தெரிந்தது...பிறப்பிற்கும் குணத்திற்கும் சம்மந்தமே இல்லை..வளர்பிற்கும் குணத்திற்கும் நிறைய சம்மந்தம் உண்டு என்பது இருவரின் விஷயத்தில் உண்மையானது

“ சரிம்மா நாங்கள் செய்தது தப்பாவே இருக்கட்டும்.. அதுக்கான காரணம் உனக்கு தெரியவரும் போது இதைப் பத்தி விரிவா பேசலாம்... இப்போ நான் போய் அவங்க வாயை அடைச்சிட்டு வர்றேன் ” என்றவர் வேகமாக அறையிலிருந்து வெளியேறி ஹாலுக்கு வந்தபோது கோமதி அங்கே இல்லை...


அனுவின் அறையில் பேச்சுக்குரல் கேட்டு கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் பெரியவர்.... மூவருமே பெரியவரை திகைத்து நோக்க.. ஆத்திரமாய் தண்டபாணியிடம் திரும்பியவர் “ என்ன தண்டபாணி இவ்வளவு பட்டும் உன் பொண்டாட்டிக்கு புத்தி வரலையா? பெத்த பொண்ணு இப்படி கிடக்காளேனு வருத்தமில்லாம மூனு வேளையும் சாப்பிட்டு கத்திகிட்டே இருக்காளே அவளை அடக்க உனக்கு துப்பில்லையா?” என்று அடக்கி வைத்த கோபத்தையெல்லாம் வார்த்தைகளாக கொட்டினார் பெரியவர்..

தண்டபாணி பெரியவரின் கோபம் கண்டு திகைத்து தலைகுனிய... மீண்டும் கோமதிதான் ஆத்திரத்துடன் முன்னால் வந்து “ பேசமாட்டீங்களா பின்ன? நீங்க நெனைச்சதுதான் நடந்து போச்சே?... என் நாத்தனார் இல்லாத சமயம் பார்த்து எங்களை இந்த வீட்டை விட்டு விரட்டனும்னு ப்ளான் போட்டு அந்த தோட்டக்கார நாயை வச்சு எல்லாம் செய்துட்டீங்க?.... இப்போ நீங்களே ஒன்னும் தெரியாத மாதிரி போய் ஜாமீன்ல எடுத்திருக்கீங்க?... இல்லேன்னா அந்த பிச்சைக்காரப் பய பரசுவுக்கு ஏது இவ்வளவு பணம்?” என்று அவள் கத்த கத்த பெரியவரின் கோபம் பன்மடங்கானது...

“ ஏய் ச்சீ மூடு வாயை? உன் தரத்துக்கு இறங்கி வந்து பேசக்கூடாதுன்னு தான் இத்தனை நாளா பொருத்திருந்தேன்... இனிமேல் உன் வேலையெல்லாம் இங்கே பலிக்காது... என்ன சொன்ன? நாங்க ப்ளான் பண்ணோமா? நீங்க மூனுபேரும் என்னனென்ன செஞ்சீங்கன்னு வெட்டவெளிச்சம் ஆகி மூனு நாள் ஆச்சு... சரி குடும்பத்துக்குள்ள நடந்ததது வெளியே தெரியவேண்டாம்... என் மகன் மருமக பேரன் வரவும் உங்களை என்ன பண்றதுன்னு எல்லாம் பேசி முடிவு செய்யலாம்னு தான் நான் வரதனை மட்டும் வேலையை விட்டு நிறுத்தினேன் .. ஆனா நீங்கதான் அந்த கேவலத்தை செய்தது நீங்கதான்னு நான் அவன்கிட்ட சொல்லவே இல்லை... காரணமில்லாம நம்மளை வேலையை விட்டு நிறுத்திட்டாங்கன்னு வரதன் அழுததும் என்ன நடந்ததுன்னு மட்டும் தான் சொன்னேன்.. ஆனா நடந்ததுக்கு காரணம் நீங்க மூனு பேரும்னு சொல்லவே இல்லை... அவனா கண்டுபிடிச்சு உன் மகளோட ரூமுக்கு வந்திருக்கான்...” பெரியவர் சொல்லும்போதே இடைமறித்த கோமதி

“ நாங்க ஒன்னும் எந்த கேவலத்தையும் செய்யலை... நடந்த கேவலத்தை தான் என் நாத்தனார்க்கு அனுப்பினோம்.... இந்த வீட்டுக்கு வந்திருக்க மருமகளும் தோட்டக்காரனும் அடிச்ச கூத்தை தான் படம் எடுத்த அனுப்பி வச்சோம்” கோமதி முடிக்கவில்லை... பெரியவருக்கு ஆத்திரம் கண்மண் தெரியாமல் வர “ ஏய்......” கையை ஓங்கிக்கொண்டு கோமதியின் பக்கம் திரும்பியவர் ஏதோ நினைத்து ச்சே என்று கையை உதறிக்கொண்டார்




“ உன்னை அடிச்சா அது எனக்கு தான் கேவலம்.... ஒரு சகோதர உறவையே கொச்சைப் படுத்தினது தெரியாம உன் மகளுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு அங்க ஒரு பொண்ணு கதறி அழுவுறா பாரு அவளைப் போய் பார்த்து தெரிஞ்சுக்கங்க பெண்மைனா என்னன்னு?” என்றவர் தண்டபாணியின் பக்கம் திரும்பி “ இதோபார் தண்டபாணி இதுவரைக்கும் நீ எவ்வளவோ செய்திருக்க... நாங்களும் பொறுத்துப் போயிருக்கோம்... ஆனா இது என் குடும்பம் மொத்தத்தையும் பாதிக்கும் விஷயம்... இந்த விஷயத்துல நான் அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைக்காத? உன் மகளுக்கு நடந்ததுக்கு நாங்க மட்டுமில்லை வரதனும் கூட பொருப்பில்லை.. தினை விதைச்சவன் தினையறுப்பான்... வினை விதைச்சவன் வினையறுப்பான்.. அதுதான் உன் மகளுக்கு நடந்திருக்கு... அதனால வாயை மூடிகிட்டு இருக்க முடிஞ்சா இருங்க... இல்லேன்னா இந்த நிமிஷமே வீட்டைவிட்டு வெளியேறுங்க... வரதன் நல்லவனா இருந்ததாலதான் நடந்த உண்மையை போலீஸ்ல சொல்லாம குடும்ப மானத்தை யோசிச்சு அனுவை குற்றவாளி ஆக்காம குடிபோதையில் செய்ததா பழியை தன்மேல போட்டுகிட்டு ஜெயிலுக்குப் போனான்... ஆனா நான் அப்படியில்லை... மான்சிக்கு ஏதாவது பங்கம் வந்ததுன்னா எல்லாரையும் ஒழிச்சுக் கட்டிடுவேன்... இனிமேல் இதைப்பத்தி ஒரு வார்த்தை உன் மனைவி பேசினாள்னா அப்புறம் நானே போலீஸை வரவழைச்சு நடந்ததை சொல்ல வேண்டியிருக்கும்... சைபர் க்ரைம் குற்றம் செய்த நீங்க மூனுபேரு வாழ்நாள் பூராவும் ஜெயில்லயே காலத்தை கழிக்க வேண்டியிருக்கும் ஜாக்கிரதை ஆமாம் ” என்று ஆக்ரோஷத்துடன் கத்திவிட்டு டமால் என்று கதவை திறந்துகொண்டு வெளியே சென்றார் பெரியவர்...

அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த தண்டபாணி கோமதியை ஆத்திரமாக முறைத்து “ எல்லாம் உன்னால தான்டி.... ஆரம்பத்துலருந்து உன் பேச்சை கேட்டு கேட்டு இன்னைக்கு என் மக வாழ்க்கையே கேள்விக் குறியா போச்சு.... நடந்தது நடந்து போச்சுன்னு ரகசியமா அவனை போலீஸ்ல ஒப்படைச்சிட்டு மகளோட வாழ்க்கையை காப்பாத்தனும்னு நெனைக்காம.. ஊரைக்கூட்டி எல்லாத்தையும் வெட்ட வெளிச்சம் ஆக்கிட்ட? உன் பேச்சை கேட்டு நானும் நடந்துகிட்டேன்.... ஆனா இனிமே என் மகளோட கதி?” என்று குமுறியவர் மகளின் அருகே கட்டிலில் அமர “ அப்பா “ என்ற கதறலுடன் அனு அவர் மடியில் தலைவைத்து அழ ஆரம்பித்தாள்...

கண்ணீருடன் மகளின் கூந்தலை வருடியவர் “ அம்மா அப்பா சரியில்லைனா பொண்ணோட வாழ்க்கை இப்படித்தான் சீரழிஞ்சு போகும்னு நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்.... உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்னு நினைக்கும்போது என் நெஞ்சே வெடிச்சிடும் போலருக்கேம்மா” என்று அவர் கண்ணீர் விட.....

கோமதி எரிச்சலுடன் “ இப்ப ஏன் எளவு விழுந்த மாதிரி ரெண்டு பேரும் அழுதுகிட்டே இருக்கீங்க? இந்தாங்க... நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? என்னமோ கெடுத்தவனுக்கே மகளை கட்டி குடுக்கனும்ங்கற பழையகாலத்து மனுஷன் மாதிரி பேசுறீங்க? அவனை உள்ள தள்ளி தண்டனை வாங்கி குடுத்தமா இல்ல ஆளை வச்சு அவனை காலி பண்ணோமா அதே கையோட மகளுக்கு நல்ல பணக்காரனாப் பாத்து கல்யாணத்தை முடிச்சோமானு இல்லாம என்னமோ கண்ணீரும் கம்பலையுமா இருக்கீங்க? பணத்தை வீசியெறிஞ்சா அனுவை கல்யாணம் செய்துக்க ஆயிரம் பேர் க்யூவில் வந்து நிப்பானுங்க” என்று பேசிக்கொண்டே இருந்தவளின் வலது காது குப்பென்று அடைத்ததும் தான் புரிந்தது தன் கணவன் தன்னை அடித்துவிட்டான் என்று....

அதிர்ச்சியுடன் நோக்கியவளை ஆத்திரமாக முறைத்த தண்டபாணி “ எந்த காலத்துலயும் பொண்ணுங்களுக்கு கற்பு ஒன்னு தான்டி .... அதை இழந்தா இழந்ததுதான்.. புதுசா ஒரு மாப்பிள்ளையை கொண்டு வரலாம் ஆனா எவ்வளவு பணம் செலவு பண்ணாலும் இழந்த கற்பை மீட்க முடியாது ” என்றவர் மகளின் பக்கம் திரும்பி “ அனும்மா நாம நம்ம கிராமத்துக்கே போயிடலாம்னு நினைக்கிறேன்.. நீ என்னம்மா சொல்ற?” என்று கேட்க...

அனு அழுதழுது சிவந்த விழிகளுடன் “ நானும் அதான்பா நெனைச்சேன்.. இந்த வீட்டுல நாம இருக்க வேனாம்பா ... உடனே போயிடலாம்.... காபி எடுத்துட்டு வர்ற வேலைக்காரிக் கூட அய்யோ பாவம்னு பாக்காம... இவளுக்கு இது வேனும்ங்கற மாதிரி ஏளனமா பார்க்குறாங்கப்பா... என்னால அதைத்தான் தாங்க முடியலை.. இன்னேரம் என் ப்ரண்ட்ஸ்ங்க எல்லாருக்கும் கூட விஷயம் தெரிஞ்சிருக்கும்.... எல்லாரையும் நான் கேலி கிண்டல் பண்ணது போய் இனிமே அவங்க என்னை நக்கல் பண்ணுவாங்க... அதை என்னால தாங்கமுடியாதுப்பா... நாம இந்த ஊரைவிட்டு போயிடலாம்பா” என்று முகத்தை மூடிக்கொண்டு வேதனையுடன் விம்மினாள்...


“ சரிம்மா நீ அழாத.... நான் போய் பெரியவர் கிட்ட சொல்லிட்டு கிளம்ப தயாராகுறேன்.. நீ உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்து வைம்மா” என்றவர் எழுந்து தான் விட்ட அறையின் அதிர்ச்சியிலிருந்து வெளியே வராத மனைவியின் அருகில் வந்து “ ஏய் சொன்னது காதுல விழுந்துச்சில்ல... போய் எல்லாத்தையும் எடுத்து தயாரா வை.. என்னை மறுபடியும் கோவக்கரானாக்காத” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்...

நேராக பெரியவரின் அறைக்குள் நுழைந்தவர் சோபாவில் அமர்ந்திருந்த பெரியவரின் அருகில் சென்று “ மாமா நடந்ததுக்கு மன்னிச்சிடுங்கனு ஒரு வார்த்தை சொன்னா அது சரியாகாது.... நீங்க சொன்னமாதிரி நான் வச்ச வினை எனக்கே திரும்பிடுச்சு... இனிமேல் எங்களால யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.... நாங்க ஆலங்குடிக்கே போயிடுறோம் மாமா” என்று ரொம்பவே இறங்கிய குரலில் கூற..

அவரை நிமிர்ந்துப் பார்த்த பெரியவர் சாந்தமான முகத்துடன் “ நல்லது தண்டபாணி... இப்பதான் நீ சரியான முடிவு எடுத்திருக்க.... ராஜாகிட்ட போன் பண்ணி நான் தகவல் சொல்லிக்கிறேன்.. நீ கிளம்பு... ஆனா அனுவை ஜாக்கிரதையா பார்த்துக்க.. மேல படிக்கனும்னு சொன்னாள்னா படிக்க வை... கம்பெனியில் உன் உழைப்பிற்கான ஊதியம் குறையாமல் வந்து சேரும்” என்று சொன்னார்..

தண்டபாணி வேற எதுவும் கூறவில்லை சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு “ சரி மாமா நான் கிளம்புறேன் மாமா ” என்று வெளியேறினார் ...

அன்று இரவு எட்டு மணிக்கு தங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு மனைவி மகளுடன் கிளம்ப தயாரானார்....

மான்சி கண்ணீருடன் அவர்களை வழிமறித்து “ சித்தப்பா பரசு சின்னப்பையன்.. ஏதோ தெரியாம பண்ணிட்டான்.. அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... தயவுசெஞ்சு இந்த நிலைமையில நீங்கல்லாம் இந்த வீட்டை விட்டுப் போகக்கூடாது.. ப்ளீஸ் சித்தப்பா இங்கேயே இருங்களேன்” என்று தண்டபாணியிடம் கெஞ்சினாள்..

அவளின் வார்த்தைகளே தண்டபாணியின் குற்றவுணர்வை மேலும் அதிகரித்தது.. “ இல்லம்மா இனிமேல இந்த வீட்டுல இருக்க எங்களுக்கு தகுதியில்லை.... என் சொந்த கிராமத்துல வீடு நிலம் சொத்தெல்லாம் இருக்கு.. அதை கவனிச்சிகிட்டு அங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்....” என்றவர் கையிலிருந்த பெட்டியை கீழே வைத்துவிட்டு “ முடிஞ்சா நீயும் எங்களை மன்னிச்சிடுமா” என்று மான்சியை நோக்கி கையெடுத்துக்கும்பிட்டார்..

அவர் அப்படி செய்ததும் மான்சி அழுதுவிட்டாள்... அவர் கைகளைப் பற்றி “ எனன சித்தப்பா இது பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு?.... நான் உங்களை எப்பவுமே வேத்து மனசங்களா நினைச்சதயில்லை... என் சொந்த அப்பா அம்மாவாத்தான் நினைக்கிறேன்” என கூறிவிட்டு மான்சி குலுங்கி அழ....

தண்டபாணியின் கையைப் பற்றியிருந்த மான்சியின் கைகளை பட்டென்று தட்டிவிட்ட கோமதி “ என்னமா நடிக்கிறடி... இந்த சொத்து மொத்தத்தையும் அடையனும்ங்கற உங்க குறிக்கோள்... அதுக்கு சமயம் பார்த்து காத்திருந்தீங்க... என் நாத்தனார் இல்லேன்னதும் வரதனை ஏவி என் மகளை நாசம் பண்ணியாச்சு... இப்போ உன் தம்பி அவனை ஜாமீன்ல எடுக்க வச்சு மூனு பேரமா சேர்ந்து மொத்த சொத்தையும் அமுக்கப் போறீங்க... இதெல்லாம் நாங்க சொன்னா இந்த வீட பெரியவங்களுக்கு பிடிக்காது... நல்லா அனுபவிச்சா தான் தெரியும்... இன்னைக்கு நாங்க வயிரெரிஞ்சு இந்த வட்டை விட்டு போற மாதிரி நீயும் ஒரு நாள் இந்த வீட்டை விட்டு வெளியே போவடி அப்போ தெரியும் எங்க வலியும் வேதனையும் ” என்று சாபமிடுபவள் போல இறைந்தவளை வாசல் பக்கமாக தள்ளினார் தண்டபாணி..


கோமதயின் வார்த்தைகள் மான்சியின் மனதுக்குள் பயத்தை விதைக்க தரையில் மடிந்து அமர்ந்து “ அய்யோ அப்படி சொல்லாதீங்க சித்தி... நான் ஒருநாளும் அப்படி நினைக்கலையே... அவர் ட்ரீட்மெண்ட்க்கு போறதுக்கு முதல் நாள் கூட அனு எனக்கு தங்கை மாதிரி அனுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரனும்னு தானே பேசினார்... நானும் அதைத்தானே நினைச்சேன்.... அதனாலதானே அனு எவ்வளவு கோபமா பேசினாலும் என் தங்கையா நெனைச்சு விட்டு கொடுத்துப் போனேன்... நானா அவளுக்கு கெடுதல் நினைப்பேன்? ” என்று கண்ணீருக்கிடையே பேசியவளை ஆச்சர்யமாக பார்த்தாள் அனு...

‘ நான் சத்யனுக்கு தங்கச்சியா? ‘ அனுவுக்குள் அந்த வார்த்தை ஆழாகப் போய் விழுந்தது.... சற்று நின்று மான்சியின் முகத்தையேப் பார்த்தவள் பிறகு “ எனக்கு உன்மேல எந்த வருத்தமும் இல்லை.. நான் தான் எங்க ஊருக்குப் போகனும்னு சொன்னது... நாங்க வீட்டை விட்டு போறதுக்கு நீ காரணம் இல்லை... அதனால அழாதே” என்ற அனு “ வாங்கப்பா போகலாம்” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று வாசலை நோக்கி நடந்தாள்..

சற்றுநேரத்தில் அவர்கள் கார் கிளம்பிப் போகும் ஓசை கேட்டது.... பெரியவர் கண்ணசைத்ததும் வேலைக்காரர்கள் கலைநத செல்ல... மரகத வந்து பேத்தியை தூக்கி தன் தோளில் சாய்த்தபடி அறைக்கு அழைத்து சென்றாள்

பெரியவர் மான்சியின் அறைக்கு வந்ததும் “ தாத்தா அத்தை மாமா இல்லாதப்ப இவங்க இப்படி வெளியேறிட்டாங்களே? இதுக்கு நான்தான் காரணம்னு ஊர் பேசுமே தாத்தா” என்று வேதனையுடன் கூறினாள்..

“ அதெல்லாம் யாரும் சொல்லமாட்டாங்க மான்சி.... நீ தைரியமா இரு நான் ராஜா ராஜி கிட்ட பேசிக்கிறேன்” எனறு ஆறுதல் கூறிவிட்டு தன் அறைக்கு வந்தார் பெரியவர்

அவர்கள் சென்ற பிறகு மான்சியின் மனம் ஒரு நிலையாக இல்லை... பரசுவின் மீது கோபம் தான் வந்தது... தனது அறைக்கு சென்றவள் பரசுவின் நம்பருக்கு கால் செய்தாள்...

அப்போது பரசு வரதன் சென்ற பேருந்து பயணிகளின் இரவு உணவுக்காக திருச்சி தாண்டி வழியோரத்து உணவு விடுதி ஒன்றில் நின்றது... வரதன் பேருந்தை விட்டு இறங்காததால் அவனுக்கு ஒரு டீ மட்டும் வாங்கி கொடுத்து குடிக்க வைத்துவிட்டு பரசுவும் அவன் நண்பன் சிவராமனும் பாத்ரூம் போய் விட்டு டீக்கடையில் நின்று டீ குடித்தனர் ...

தனது மொபைல் அடித்ததும் எடுத்துப் பார்த்த பரசு.. மான்சியின் நம்பர் வந்ததும் கொஞ்சம் உஷாரானான்... நிச்சயம் தண்டபாணி மூலம் விஷயம் தெரிந்திருக்கும் அதை கேட்கத்தான் அக்கா போன் செய்கிறாள் என்று சொல்லாமலேயே புரிந்தது
நல்லவேளை பக்கத்தில் வரதன் இருக்கும் போது போன் செய்யவில்லை என்ற நிம்மதி பெருமூச்சுடன் செல்லை ஆன் செய்து காதில் வைத்து " சொல்லுக்கா பரசு பேசுறேன்" என்றான்......

மான்சி எடுத்தவுடனேயே " ஏன்டா பரசு இப்படி செய்த? இதனால எவ்வளவு பிரச்சனை தெரியுமா?.. நீ செய்ததுக்கு இப்போ மொத்த குடும்பமும் தான் தூண்டி விட்டு வரதன்ணாவை அனுகிட்ட தவறா நடந்துக்க சொன்னதா சொல்றாங்க பரசு... தேவையாடா இது.. ஆயிரம் இருந்தாலும் அண்ணா செய்தது தப்பு தானே?" என மான்சி படபடவென பொரிந்து தள்ள

பூகம்பம் அதிகமாகத்தான் தாக்கியிருக்கிறது அதன் எதிரொலிதான் அக்காவின் கோபம் என்று உணர்ந்த பரசு " அக்கா நீ சொல்றது சரிதான் ... அண்ணா செய்தது தப்புதான்... நான் இல்லேன்னு சொல்லலை ... ஆனா அதுக்கான தண்டனை போதும்... இப்போ அவர் உடம்புல உசுர் மட்டும் தான் இருக்கு... நான் மட்டும் அவரை ஜாமீன்ல எடுக்கலைனா ... அந்த உசுரும் போய் அனாத பொணமா அவரை எங்கயாவது தூக்கி போட்டிருப்பாங்க...." பரசு சொல்லி முடிக்கும் முன்பே எதிர் முனையில் மான்சி " அய்யோ அண்ணா " என்று அலரும் சப்தம் கேட்டது..


" ஆமாக்கா நான் சொல்றது நிஜம்... போலீஸ்க்கு பணத்தை கொடுத்து அவரை குமுற சொல்லிருக்காங்க... அவனுங்களும் கண்மண் தெரியாம அடிச்சு அண்ணனால நடக்க கூட முடியலை.. இப்பகூட பஸ்ல படுத்துதான் இருக்காரு... நானும் சிவாவும் டீ குடிக்க இறங்கினோம் நீ கரெக்டா போன் பண்ற" என்று வேகமாக பேசியவன் சட்டென்று குரலை தாழ்த்தி " அக்கா தப்புக்கு தண்டனைங்கறது நாம பார்த்து முடிவு செய்றது இல்லை..... அது அந்த ஆண்டவன் பார்த்து முடிவு செய்றது.. அப்படிப்பார்த்தா அனு செய்த ஏதோவொரு பயங்கரமான தப்புக்கு இதுதான் தண்டனைனு ஆண்டவன் முடிவு பண்ணிருப்பான் ... அதேபோல வரதண்ணாவுக்கும் தண்டனை உண்டுதான்... அது இப்போ முடிஞ்சி போச்சு. இனிமே அவரை தண்டிக்க அந்த தண்டபாணிக்கு உரிமை கிடையாது.... அப்படி செய்தாலும் நான் விடமாட்டேன்.... உன்னால தான் எனக்கு வரதன் அண்ணனா அறிமுகமானாரு அந்த நிமிஷத்துலருந்து நான் அவரை அண்ணனா ஏத்து கிட்டேன் ... நீயும் அவரை அண்ணனா ஏத்துகிட்டது உண்மையா இருந்தா இனிமே அவர் செய்தது தப்புனு திரும்ப திரும்ப பேசி அவரை வதைக்காதே... இப்பவே மனுஷன் இனிமே மான்சி முகத்துல எப்படி முழிப்பேன்னு பாதி செத்துட்டாரு ... மேலும் நீ இப்படி பேசுறது தெரிஞ்சா தற்கொலை கூட செய்துக்குவாறு அக்கா" என்று பரசு சொல்லி முடிக்க

எதிர்முனையில் மான்சி அழும் குரல் தான் கேட்டது..... " நான் அண்ணாவை வெறுக்கலை பரசு.... ஆனா அனு சின்னப் பொண்ணுடா ... வாய் துடுக்கா பேசுவாளேத் தவிர பாவம்டா அனு..... " என்ற மான்சியின் பேச்சுக்கு குறுக்கே வந்த பரசு " யாரும் பாவம் அவளா? சின்னப் பொண்ணுனு நீ சொல்ற ஆனா அவ செய்த காரித்தை கேட்டா நீ அவ்வளவுதான் " என்று கோபமாக கத்தியவன் சட்டென நாக்கை கடித்துக்கொண்டு நெற்றியில் அடித்துக்கொண்டான்...

உடனே " அப்படியென்ன பரசு செய்தா?" என்று மான்சி கேட்டதும் ... " அது மச்சான் வரவும் தெரியும்.... நீ இப்போ அதையெல்லாம் நினைக்காம குழந்தையை கவனிக்கா.... நான் வரதன்னாவை பார்த்துக் கிறேன்" பரசு சொல்ல

" எனக்கு அண்ணாவும் முக்கியம் அனுவும் முக்கியம் ஆனா அவருக்கு அனு மட்டும் தான் முக்கியம் .... அவருக்குத் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவார் பரசு ... அனுவை தன் தங்கச்சியா நெனைக்கிறார் பரசு... இப்போ நீ வரதண்ணாக்கு உதவுனது தெரிஞ்சா அவரோட கோபம் உன் பக்கம் தானே திரும்பும்... இப்பதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சு நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா பேசிக்கிறீங்க இப்போ இந்த பிரச்சனை உங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடுமோனு பயமாருக்குடா?" என்ற மான்சியின் வேதனை பரசுவையும் தொற்றிக்கொண்டது



" நானும் இதைப் பத்தியெல்லாம் யோசிக்காம இல்ல... எல்லாத்தையும் யோசனைப் பண்ணிட்டுதான் இந்த வேலையில இறங்கினேன்... நீ கவலைப்படாதேக்கா மச்சான் நிச்சயம் என்னை புரிஞ்சுக்குவாறு ... அப்படி அவர் கோவப்பட்டா ...... நான் அவர் கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்க தயாரா இருக்கேன்" என்று கூறிவிட்டு பரசு அவன் கண்களை துடைத்துக் கொண்டான்...

மான்சியின் மனம் ஓரளவுக்கு சமாதானம் ஆனாலும் சத்யன் பற்றிய பயம் அவள் மனதை அரித்தது... அனு மீது இருக்கும் அவனே சொன்ன பிறகு இந்த பிரச்சனையை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று பயமாக இருந்தது ... அவனுக்கு தெரியும் போது எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று தள்ளி வைக்க கூடிய விஷயமாகவும் இது இல்லையே? கொலை குற்றமே செய்திருந்தாலும் தன் வீட்டு பெண்ணை சத்யன் எப்படி விட்டுகொடுப்பான் ? அதுவும் தப்பு செய்தது ஒரு வேலைக்காரன் எனும் பட்சத்தில் சத்யனின் ஆத்திரம் எப்படி திரும்புமோ என புரியாமல் நெஞ்சு பயத்தில் விம்ம தம்பியுடன் பேசினாள்

தண்டபாணியின் மாற்றத்தையும் ... கோமதியின் வசையையும் ... தம்பியிடம் கூறியவள் தண்டபாணி சொந்த கிராமத்துக்கு போய்விட்டதையும் கூறிவிட்டு போனை வைத்தாள்



No comments:

Post a Comment