Saturday, January 23, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 4

மான்சிக்கு தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ... எந்த ஆணையும் கண்ணால் கூட தீண்ட விடாத தனக்கு இப்படி ஒழுக்கங்கெட்டவன் புருஷனா?

அருவருப்பில் மான்சிக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது... வயிற்றைப் பிடித்துக்கொண்டு பின்பக்கத்து கதவை திறந்தவளுக்கு கூவத்தின் வாசனை(?) இன்னும் குடலைப் புரட்டியது...

கொடகொடவென வாந்தியாய் கொட்டியவளை வந்து தாங்கிப்பிடித்த சரஸ்வதி " மான்சி நீ தலைக்கு ஊத்திக்கிட்டு எத்தனை நாளாச்சு?" என்று சந்தோஷத்துடன் கேட்க...



மான்சிக்கு அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து " அய்யோ கடவுளே இதை கவனிக்காம விட்டுட்டேனே?" என்று கண்ணீர் கொட்டும் விழிகளும் கவலை தோய்ந்த முகமுமாக தனது மணிவயிற்றில் கைவைத்தபடி கலக்கத்துடன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்

சத்யனை மறந்து ... தனது காதலை துறந்து ..... கோபாலை திருமணம் செய்ததற்காக மான்சி ஒருநாளும் வேதனைப்பட வில்லை.... கோபாலின் தாலி இவள் கழுத்தில் ஏறி நிமிடத்திலிருந்து தன் கணவனுக்கு உண்மையாக இருக்கத்தான் விரும்பினாள்.... உண்மையாகத்தான் இருந்துகொண்டும் இருக்கிறாள்...

இப்போதெல்லாம் சத்யனின் நினைப்பு கூட அறவேயில்லை.... கோபாலின் மனம் தன்னை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு மற்ற கணவன் மனைவி போல் அந்நியோன்யமாக எப்போது வாழப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் கோபாலின் மாற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்க தொடங்கியிருந்தாள்.....

ஆனால் அவள் எதிர்பார்ப்பில் இப்படியொரு இடி விழும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை..... சத்யன் வேண்டாம் என்று சொன்ன போது கூட இல்லாத வலியை இப்போது உணர்ந்தாள் மான்சி..... கண்ணீர் நிற்காமல் வழிய " நான் யார் குடிய கெடுத்தேன்? என் வாழ்க்கை இப்புடி சீரழிஞ்சு போச்சே?" என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் மான்சி......

சரஸ்வதி மான்சியை நெருங்கி மெல்ல தூக்கி நிறுத்தி வீட்டுக்குள் அழைத்து வந்தாள்..... பாயில் உட்கார வைத்துவிட்டு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்துவிட்டு அவளும் மான்சியின் அருகில் அமர்ந்து " இதோ பாரு மான்சி ? உன் குடி ஒன்னும் கெட்டுப் போகலை.... எனக்கு பத்து வருஷமா கோபால் அண்ணனை தெரியும்.... சுகுனாவைத் தவிர வேற எந்த பொம்பளையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.... எல்லார்ட்டயும் மரியாதையா பேசுவாரு.... எல்லார் வீட்டு நல்லது கெட்டதுலயும் மொத ஆளா வந்து நிப்பாரு..... இந்த ஏரியாவுல அண்ணனுக்கு ரொம்ப நல்ல பேரு தான் மான்சி.... அப்போ இருந்த நெலமைல சுகுனாவை சேர்த்துக்கிட்டாரு .... அவரோட அப்பா அம்மா தொந்தரவால உன்னைய கட்டிக்கிட்டாரு.... இனி நீதான் அவரை அங்க போக விடாம அவரை உன் கைக்குள்ள வச்சுக்கனும்.... அதை விட்டுப்புட்டு வாழ்க்கை போச்சேன்னு அழுதுகிட்டு இருக்காத மான்சி..... மதியான சாப்பாட்டுக்கு வந்தாருன்னா ரெண்டுல ஒன்னு தீர்த்து நேரடியா கேளு மான்சி.....வயித்துல புள்ளை வந்தாச்சுல்ல? இனிமே அவரு மாறித்தான் ஆகனும்...... உடனே இல்லேன்னாலும் புள்ளை பொறந்ததுமாவது மாறிடுவாரு மான்சி......." என்று மான்சியின் மனதை தெளிவுப்படுத்தினாள்......

மான்சி அமைதியாக எல்லாவற்றையும் கேட்டாள்.... மனைவி இறந்த பின் இந்த சென்னையில் கோபால் எப்படி தனியாக வாழ்ந்தான் என்று யோசிக்காதது தன்னுடைய தவறுதான்.... நிச்சயம் உறவுக்காக ஒருத்தியை நாடித்தான் இருப்பான்.... அதுவே நிரந்தரமாகிப் போனது இவள் துர்திர்ஷ்டம் ...... ஆனால் இனிமேல் என் புருஷனை விடமாட்டேன் ...... எப்படியாவது என்னுடனேயே இருக்க வைப்பேன் ... மான்சியின் மனதில் வைராக்கியம் வளர்ந்தது....


அதற்கு காரணம் கோபாலின் மீது கணவன் என்ற காதலோ உரிமையோ என்பதை விட ....... சத்யன் இருக்கும் ஊருக்கு வாழவெட்டியாக போய் வாழ்வதை விட இங்கேயே கிடந்து சாகலாம் என்பதுதான்......

சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்த சரஸ்வதி அவள் வீட்டுக்குப் போய்விட மான்சி அமர்ந்த வாக்கில் சரிந்து சுருண்டு போய் படுத்துக் கொண்டாள் ..... எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சு படச்சவனையும் ஒரு குழந்தையின் வரவு மாற்றிவிடும் போது ? நல்லவனான கோபாலை மாற்றாதா? மாறுவான்... நிச்சயம் ஒருநாள் மாறுவான்,, மான்சியின் மனதில் நம்பிக்கையின் விதை விழுந்து விருட்ச்சமானது.....

உடல் சோர்வால் மதியம் சாப்பாடு செய்யாமல் மான்சி அப்படியே படுத்திருக்க.... சரியாக ஒன்றரை மணிக்கு கோபால் சாப்பிட வந்தான்... வீட்டுக்கு வெளியே அவன் காலடி சத்தம் கேட்டதுமே மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வர முந்தானையை எடுத்து வாயில் அடைத்துக்கொண்டாள்......

உள்ளே நுழைந்த கோபால் படுத்திருக்கும் மான்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்பக்க கதவை திறந்து வெளியேப் போய் முகம் கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்... மான்சி சாப்பாடு போட வரவில்லை என்றதும் குழப்பமான முகத்துடன் எழுந்து அவளருகே வந்து " என்ன? சாப்பாடு எதுவும் செய்யலையா?" என கேட்க....

அவன் முகத்தைப் பார்க்காமலேயே " எனக்கு உடம்பு சரியில்லை,, அதனால சாப்பாடு செய்யலை" என்று பதில் சொன்னாள்...

கோபால் அடுத்து என்ன பேசுவது என்று புரியாதவன் போல தயக்கமாக நின்றிருந்தான்,, பிறகு " நான் போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வர்றேன் .... சாப்ட்டு சரஸ கூட்டிக்கிட்டு ஆஸ்பத்ரிக்கு போய்ட்டு வா" என்றுவிட்டு கழட்டிய சட்டையை எடுத்து மீண்டும் மாட்டினான்.....

பொண்டாட்டிய ஆஸ்பத்ரிக்கு கூட்டிப் போக கூட முடியாதா? அதுக்கு கூட பக்கத்து வீட்டுக்காரி வேணுமா?...மான்சிக்கு உள்ளுக்குள் கோபம் குமுறி அழுகையாய் வெடித்தது .... பெரிய கேவலுடன் அழுதவளை கண்டு கொஞ்சம் பயந்து தான் போனான் கோபால் ...

மான்சிக்கு சற்று தள்ளி அமர்ந்து,, " என்னான்னு சொன்னா தான தெரியும்? எங்கயாவது வலிக்குதா?" என்று மெதுவாக கேட்டான் கோபால்....

வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த மான்சி... ஒரு வேகத்துடன் எழுந்து அமர்ந்து தன் வயிற்றில் கைவைத்து " இது நீங்க குடுத்த புள்ள தானே?... அப்புறம் நான் ஏன் சரஸ்வதி அக்கா கூட ஆஸ்பத்ரிக்கு போகனும்?" என்ற கேள்வியுடன் விஷயத்தைப் போட்டு உடைத்தாள்....

கோபால் திகைப்புடன் அசையாமல் அப்படியே அமர்ந்திருக்க,,..... " ஏன்டா இந்த புள்ளை வந்துச்சேன்னு இருக்கா? இல்ல உங்க சுகுனா கிட்ட உத்தரவு கேட்காம இந்த புள்ளை வந்துருச்சேனு கவலையா இருக்கா?" படபடவென பொரிந்தாள் மான்சி....

முதலில் அதிர்ந்தாலும் பிறகு தெரிஞ்சு போச்சா என்ற நிம்மதி முகத்தில் படர சற்று தள்ளி சுவற்றில் சாய்ந்த வாறு அமர்ந்து பீடியை எடுத்து பற்ற வைத்து உதட்டில் வைத்து இழுத்தபடி " எப்பருந்தாலும் உனக்கு தெரியப்போறது தான்.... இப்பவே தெரிஞ்சதுல எனக்கு நிம்மதி தான்... இதப்பாருமே நானும் சுகுவும் ரொம்ப வருஷமா வாழுறோம்...


எங்காத்தப்பன் தொந்தரவு தாங்காம உன்னை கட்டிக்கிட்டேன் ... மஞ்சுளா பன்னீரு எல்லாருக்கும் என் மேட்டர் தெரிஞ்சு தான் உன்னைய கட்டிக் குடுத்தாங்க.... இதுக்காக என் அப்பனும் ஆத்தாலும் மஞ்சுக்கு ரெண்டு பவுன் நகை இனாமா குடுத்திருக்காக... இப்ப உனக்காக நான் சுகுவ விட்டுட்டு வரமுடியாது .... ஒனக்கு சவுரியப்பட்டா இரு இல்லேன்னா ஊருக்கு போயிடு... நான் மாசா மாசம் பணம் அனுப்புறேன்" என்று தயவின்றி பேசினான் கோபால்...

மஞ்சுளா இரண்டு பவுன் நகைக்காக தன்னை விலை பேசியிருக்கிறாள் என்றதும் மான்சியின் உடலும் உள்ளமும் கூசியது..... கோபால் சொல்வது போல் வாழாவெட்டியாக ஊருக்குப் போனால்????? நினைத்துப் பார்க்கவே நெஞ்சு குலுங்கியது ..... அலட்சியப்படுத்தி பேசிய சத்யனின் முகத்தில் விழிக்க வேண்டியிருக்கும்... அதைவிட மஞ்சுளாவின் வசை மொழிகளும் அவளுடைய உதிரத்துணியைக் கூட துவைத்துப் போடவேண்டிய அவல வாழ்க்கையை நினைத்த மாத்திரத்தில் அருவருப்பில் உள்ளுக்குள் கசந்தது.. இங்கேயே இருந்து எல்லாருக்கும் சரத்தா வாழ்ந்து காமிக்கிறேன் என்ற சவாலுடன் நிமிர்ந்தவள் " உடம்பு மட்டுமில்ல.... மனசு கூட ஓழுக்கம் தவறக்கூடாதுனு நினைக்கிறவ நான்,, இப்ப எனக்கே ஓழுக்கம்கெட்ட புருஷன் வந்து வாச்சிருக்கான்..... நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணேன்? எனக்கு ஏன் இப்புடியொரு வாழ்க்கை" என்று ஆத்திரமாக பேசியவள் கோபாலை நேராகப் பார்த்து " நான் சொந்த ஊருக்குப் போகனும்னா என் பிணம்தான் போகும்.... நான் இந்த வீட்டுல தான் இருப்பேன்" என்றாள் வீம்புடன்...

அவளை கூர்ந்து பார்த்த கோபால் " அப்படின்னா சுகுனாவை நீ சகிச்சுகிட்டு தான் இந்த வீட்டுல இருக்கனும்" என்றான்...

அமர்ந்திருந்த மான்சி எழுந்து நின்று முந்தானையை உதறி வேகமாக இடுப்பில் சொருகியபடி ..... " நான் யாரையும் சகிச்சுகிட்டு போகனும்னு அவசியமில்ல..... நான் நானாதான் இருப்பேன்... இத்தநாளா ஒப்புக்கு தான் நீங்க என்கூட வாழ்ந்திருக்கீங்க.... இனி அது வேணாம்... எப்ப நான்தான் உங்க பொண்டாட்டினு நினைக்கிறீங்களோ அன்னைக்கு வந்து என்னைய தொடுங்க... அது வரைக்கும் எந்த வேளை என் வீட்டுல சாப்பிடுவீங்கனு சொன்னா.. அந்த வேளை மட்டும் நான் சாப்பாடு செய்து வைக்கிறேன்.... நைட்டு கூட அவங்க வீட்டுலயே தங்கிக்கலாம்... நான் தடுக்க மாட்டேன்... ஆனா என் புருஷன் என்கிட்ட வருவாருனு எனக்கு நம்பிக்கையிருக்கு" என்று கூறிவிட்டு சமையல் மேடையருகே சென்றவள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தாள்....

அரிசியை எடுத்துப் போட்டு கழுவியபடி " எனக்கு ஓட்டல் சோறு வேணாம்.. " கஞ்சி வச்சு குடிச்சுக்கிறேன் ... நீங்க வேனும்னா சாப்பிட்டுக்கங்க" என்று கூற ....

அமைதியாக அமர்ந்திருந்த கோபால் எழுந்து கொண்டு " இல்ல எனக்கும் சேர்த்து கஞ்சி காய்ச்சு... நான் போய் ஊறுகாய் பாக்கெட்டு வாங்கிட்டு வர்றேன்" என்று வெளியேறினான்.....

போகம் கணவனையே பார்த்த மான்சிக்கு மீண்டும் கண்ணீர் தான் வந்தது... அடுத்தவங்களை நோகடிக்காத நல்ல மனுசன் தான்... ஆனா தலையெழுத்தை தான் ஆண்டவன் கோனாலா எழுதிட்டான் போலருக்கு? என்று எண்ணியபடி அரிசியை கழுவி கொதித்துக் கொண்டிருந்த நீரில் போட்டாள்....


ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி வந்து வைத்துவிட்டு தரையில் அமர்ந்த கோபால் தன் போக்கில் பேச ஆரம்பித்தான் " நான் ஒனக்கு துரோகம் பண்ணனும்னு நெனைக்கலைமே... எனக்கு கல்யாணமே வேணாம்னு எவ்வளவோ புடிவாதமா சொன்னேன்... என் ஆத்தாலும் உன் அண்ணி மஞ்சுளாவும் தான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணாங்க.... இதப்பாருமே இது பதிமூனு வருஷத்து ஒறவு நானே நெனைச்சாலும் வெலகி வரமுடியாது... ஒரு முறை என் ஆட்டோ ஆக்ஸிடன்ட் ஆகி எனக்கு கால் ஒடைஞ்சு போச்சு... ஆறு மாசம் கால்ல கட்டோட படுத்த படுக்கையா கெடந்தேன் ... சுகுனாதான் எனக்கு ப்பீ மூத்திரம் கூட வாறிப் போட்டுச்சு.... ஒரு குறை இல்லாம பார்த்துகிட்டா.... என்னால அவ புருஷன் இன்னும் மத்த சொந்தக்காரங்க எல்லாரையும் ஒதுக்கிட்டு என்கூட இருக்குறா... இப்ப ஒனக்காக நான் அவளை விட்டுட்டு வரமுடியுமா சொல்லு?" என்று மான்சியிடமே கேள்வி கேட்டான்.....

மான்சிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை... விலை பேசியது மஞ்சு... வாங்கியது கோபாலின் அம்மா எனும் போது இவனிடம் கோபத்தைக் காட்டி என்ன பிரஜோசனம்.... அமைதியாய் கஞ்சியை இறக்கி தட்டில் ஊற்றி ஆறவிட்டாள்.....

கஞ்சி ஆறிப்போனது.... ஆனால் மான்சிக்கு தான் தனக்கு நேர்ந்த துரோகத்தை எண்ணி நெஞ்சு ஆறவில்லை ....

சாப்பிட்டுவிட்டு கிளம்பிய கோபால் மீண்டும் வந்து " ஆஸ்பத்ரிக்கு போகனுமா.... ஆட்டோ எடுத்துட்டு வரவா?" என்று கேட்க....

" ஆஸ்பத்ரியும் வேணாம் ... ஆட்டோவும் வேணாம்" என்றாள் வெடுக்கென....

கோபால் சற்றுநேரம் நின்றுவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.....

அன்று இரவு சற்று சீக்கிரமாகவே வந்த கோபால் கையிலிருந்த கவரில் பழங்களும் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் இருந்தது.... அவளிடம் நீட்டினான் .... மான்சி வாங்கவில்லை... அவனையே உறுத்துப் பார்க்க.... " சுகு கிட்ட மேட்டரை சொன்னேன் ரொம்ப சந்தோசப்பட்டுச்சு.... அவதான் இதெல்லாம் வாங்கிட்டுப் போய் குடுக்க சொன்னா" என்றான் முகத்தில் பெருமையுடன்....

மான்சி தலையிலடித்துக் கொண்டாள்.... தனது தன்ணானத்தை செல்லரிக்க ஆரம்பித்துவிட்டது போல் உணர்ந்தாள்.... " எனக்கு இதெல்லாம் சாப்ட்டு பழக்கமில்ல... அவங்களுக்கே கொண்டு போய் குடுங்க... எனக்கு வேண்டாம்" என்றுவிட்டு சாப்பாடை எடுத்து வைத்தாள்...

கோபால் கவரை தரையில் வைத்துவிட்டு கைகால் கழுவிவிட்டு சாப்பிட வந்தான்....

அன்று இரவு மான்சியின் அருகில் படுத்து தன் பக்கமாக மான்சியை திருப்பி அவள் புடவையை உயர்த்த முயன்றவனின் கையைத் தடுத்த மான்சி " இந்த கை மறுபடியும் என்னைய மட்டும் தான் தொடும்னா... இப்ப வாங்க... இல்லேன்னா நீங்க அவங்க வீட்டுக்கே போய் படுத்துக்கங்க நான் தடுக்க மாட்டேன்" என்றாள் தெளிவாக....

அவளை முறைத்து விட்டு விலகிப் படுத்தான் கோபால்.... ஆனால் நடுசாமத்தில் எழுந்து சுகுனாவின் வீட்டுக்குப் போக கதவை திறக்கும் போது மான்சியை திரும்பி பார்த்தான் .... கொட்ட கொட்ட விழித்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மான்சி.... சற்று தயங்கி நின்றவன் பிறகு வீம்புடன் வெளியே போனான்.... 


அவன் வரும் வரை கண்ணீரில் கரைந்த மான்சிக்கு தன் வயிற்றுப் பிள்ளைதான் இனி ஆறுதல் என்று புரிந்தது.... அதை காப்பாற்றனும் பிறந்ததும் நல்லா பார்த்துக்கனும்... எல்லாத்துக்கும் காசு வேணும்.... கோபால் நல்லவனாயிருந்தாலும் எனக்கு புருஷனா இல்லாத அவன் காசுல இனிமேல் சாப்பிடக் கூடாது.... வயிற்றுப் பாட்டுக்கு வேற வழி தேடவேண்டும்... இவ்வளவு பெரிய மெட்ராஸ்லயா நம்க்கு ஏதுவும் வேலை இல்லாம போகும்" வைராக்கியாம் உரமாக மாற தன்மானம் வேர்விட்டு ஆழமானது......

மூன்று மணி வாக்கில் கோபால் வந்தான் மான்சி விழித்திருப்பதை பார்த்தபடி வேறு பாயை விரித்து அதில் படுத்தான்.... மான்சி குமுறும் நெஞ்சோடு விழித்தே கிடந்தாள்....

மறுநாள் பொழுத விடிந்தபோது மான்சியும் புதிதாக எழுந்தாள்.... ஊரில் கூலி வேலை செய்து சேமித்து எடுத்து வந்த பணத்தில் இட்லி வாங்கி சாப்பிட்டவள்... கோபால் செலவுக்கு கொடுத்த பணத்தை வாங்காமல்.... இனிமே என் செலவை நானே பார்த்துக்கிறேன்.... உங்க காசு எனக்கு வேண்டாம்" என்றாள் உறுதியுடன்

கோபால் கோபமாக முறைத்ததை அலட்சியம் செய்தாள்... கோபால் போனதும் சரஸ்வதியை தேடி அவள் வீட்டுக்குப் போனாள்.... முதல்முறையாக தனது வீட்டுக்கு வந்தவளை அன்பாக வரவேற்று உட்கார வைத்தாள் சரஸ்வதி....

நிமிர்ந்து அமர்ந்த மான்சி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் ..... " அக்கா எனக்கு எதாவது வேலை வாங்கி குடுங்க்கா?.... மானத்தோட பிழைக்குற வேலை எதுவானாலும் பரவாயில்லக்கா" என்று கேட்டவள் கோபாலுக்கும் தனக்கும் நடந்த விவாதத்தை கூறிவிட்டு தனது முடிவையும் தெளிவாக கூறினாள்....

சரஸ்வதி மான்சியை வியப்பாக பார்த்தாள்.... கணவனின் கூத்தியா வீட்டுக்குப் போய் அசிங்கமாக பேசி தெருவில் சண்டை போடும் பெண்களைத்தான் சரஸ்வதிக்குத் தெரியும்... இதுபோல் அகிம்சையுடன் போராடும் பெண்ணை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறாள்....

" மான்சி இங்க இருக்குற பொம்பளைக பாதி பேரு பணக்கார வீட்டுகள்ள வீட்டு வேலைக்கு போறாங்க மீதி பேரு எக்ஸ்போர்ட்டு கம்பெணிக்கு வேலைக்கு போறாக ...நான் கூட ****** ஜவுளிக் கடை க் காரவுங்க வீட்டுல வீடு தொடைக்குற வேலை தான் பாக்குறேன்..

மொத்தம் ஏழுபேரு வேலை செய்றோம்... எல்லாத்துக்கும் தனித் தனி ஆளுக..... அங்ககூட ஒரு வேலை காலியிருக்கு .. ஆனா அது உனக்கு சரிபட்டு வராது மான்சி... நாலுநாள் பொருத்துக்க.. வேற ஏதாவது வேலைக்கு ஏற்ப்பாடு செய்றேன்" என்றாள்....

சரஸ்வதி செய்யும் இடத்திலேயே வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த மான்சி " அக்கா நீங்க வேலை செய்ற இடத்துலயே நானும் செய்றேன்க்கா... அந்த வேலைக்கே சொல்லுங்கக்கா" என்று கெஞ்சினாள்...

" அது மான்சி அவங்க வீட்டுல ஆறு நாய் இருக்கு ,, அதுக்கு மதியானம் மட்டும் சோறு ஆக்கிப் போடனும் ,, அந்த வேலை செய்த பொண்ணு கல்யணமாகிப் போயிருச்சு... இப்ப அதுக்குதான் ஆள் தேடுறாங்க... அந்த வேலை நீ எப்புடி மான்சி செய்வ?" என்று கேட்டாள் சரஸ்வதி...

" நாய்க்கு சோறாக்குற வேலையா?... நாயிகள அவுத்து விட்டுருப்பாகளாக்கா?" என்று மான்சி பயத்துடன் கேட்க 


" இல்ல மான்சி ... நைட்ல மட்டும் தான் அவுத்து விடுவாக... மத்தநேரம் கட்டிதான் வச்சிருப்பாக" என சரஸ்வதி சொல்ல...

மான்சி தைரியமாக நிமிர்ந்து " அப்புறமென்னக்கா நானே செய்றேன்க்கா... எப்புடியாவது அந்த வேலையை வாங்கி குடுங்கக்கா... இன்னும் என்கிட்ட நூறு ரூபாதான் இருக்கு... அப்புறம் நான் பட்னிதான் கிடக்கனும்" என்று மான்சி கெஞ்சினாள்....

சரஸ்வதி மான்சியை இரக்கமாகப் பார்த்தாள்..... " இல்ல மான்சி நான் வேலை செய்ற மொதலாளி வீட்டுல ரொம்ப ஆச்சாரமானவங்க..... ஆறு நாய்க்கும் மூனுகிலோ மாட்டுக்கறி தினமும் வரும்.... அதை அரிசி கூட சேர்த்து சமைக்கனும்.... அதனால நாய்க்கு சோறு செய்றவங்க வீட்டுக்குள்ளயே வரக்கூடாது ... தோட்டத்துல ஒரு ரூமு இருக்கும்... அங்கேயே சோறு செய்து அந்தந்த நாயோட தட்டை கழுவி போட்டு வைக்கனும்... அதுக தின்னதும் தட்டு,, சாப்பாடு செஞ்ச பாத்திரம் எல்லாத்தையும் கழுவி வச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம்... மொத இருந்த பொண்ணு மூனாயிரம் வாங்குச்சு,, இப்ப ஐநூறு ரூவா சேர்த்து குடுப்பாங்க, ஆனா மாட்டுக்கறி சமைக்கனும் .... உனக்கு ஒத்துவருமா மான்சி?" என சரஸ்வதி கேட்டதும்....

" கொஞ்சம் கஸ்டம்தான் பழகினா சரியாப் பேகும்கா.... வாயில்லா ஜீவனுங்களுக்கு ஆக்கிப் போடுறது... இதுல தோஷமென்ன பாவமென்ன,, நான் வர்றேன்கா" மான்சி மறுபடியும் கெஞ்சினாள்...

" சரி நான் பதினோரு மணிக்கு போவேன்... என்கூடவே வா... வீட்டு மேனேஜர் கிட்ட கேட்டு வேலைல சேர்த்து விடுறேன்" என்றாள் சரஸ்வதி....

மான்சி வீட்டுக்கு ஓடிச் சென்று தயாராகி வந்து கதவை பூட்டினாள்.... மதியம் வர லேட் ஆனா கோபால் வந்து காத்திருப்பானோ? என்று நினைத்தவளுக்கு அந்த காத்திருப்பானோ என்ற வார்த்தையே அபத்தமாக தெரிந்தது..... எனக்காக ஏன் காத்திருக்கப் போறாரு? என்று சோகத்துடன் புன்னகைத்தபடி சரஸ்வதி வீட்டுக்கு போனாள்...

இருவரும் கிளம்பி வந்தபோது " ஏன் மான்சி அண்ணே வந்து உன்னைய தேடுமே ? எதுக்கும் உன் சக்காள்த்தியார் வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிட்டு வரவா?" சரஸ் கேட்டதும் மான்சிக்கும் அது சரியென்றே பட்டது....

" சரிக்கா,, ஆனா வெளியப் போறோம்னு மட்டும் சொல்லிட்டு வாக்கா.... வேலைக்குப் போறோம்னு சொல்லாதீங்க" என மான்சி எச்சரிக்கை செய்து தன் வீட்டு சாவியை கொடுத்து " இதையும் குடுத்துடுங்கக்கா" என்றாள் ...

சரஸ்வதி அதுதான் சரியென்பது போல் தலையசைத்து விட்டு சுகுனாவின் வீட்டருகே வந்ததும் மான்சி முன்னால் போய் நாலு வீடு கடந்து நின்றாள்... சரஸ்வதி ஒரு சிறு பையனை அழைத்து சாவியை அவனிடம் கொடுத்து " டேய் சுகுனா அக்கா கிட்டப் போய் இந்த சாவிய குடுத்து மான்சி அக்கா சரஸ் கூட வெளிய போறாங்கனு சொல்லிடுடா" என்று அனுப்பினாள்....

பையன் உள்ளே சென்று சரஸ் சொன்னதை அப்படியே சொல்வதை கேட்டுவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள்....


இருவரும் பஸ்ஸில் ஏறி சரஸ்வதி வேலை செய்யும் வீட்சுக்கு வந்தார்கள்.... மான்சி அந்த வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றிருந்தாள்.... சினிமாவில் வருவது போல் பிரமாண்டமாக இருந்தது வீடு... சரஸ்வதி சொன்னது போல அவர்களின் ஆச்சாரம் தெரு வாசலிலேயே தெரிந்தது... அந்த சென்னை மாநகரில் சானி தெளித்து அரிசி மாவில் கோலம் போட்டு பூசனிப் பூ வைத்திருந்தார்கள்... அதைப் பார்த்த மான்சிக்கு தன் கிராமத்தைப் பார்த்தது போல் சந்தோசமாக இருந்தது...

பிரமாண்டமான இரும்பு கதவுக்கு பக்கத்திலிருந்த சிறிய கதவை வாட்ச்மேன் திறந்து விட இருவரும் உள்ளே நுழைந்து பறந்து விரிந்த புல்வெளிக்கு நடுவே இருந்த சிமிண்ட் பாதையில் நடந்து பங்களாவுக்கு வெளியே இருந்த ஆபிஸ் ரூமுக்குள் சென்றனர்...

அங்கே 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் மான்சியை அறிமுகம் செய்து வேலைக்கு அழைத்து வந்ததாக சரஸ்வதி சொல்ல... மான்சியை ஏற இறங்கப் பார்த்த அந்த மனிதர் எந்த கேள்வியும் கேட்காமல் ஒரு பேப்பரில் எதையோ எழுதி மான்சியிடம் கையெழுத்து வாங்கி கொண்டு " இன்னைக்கு வாட்ச்மேன் சம்சாரம் தான் டாக்ஸ்க்கு சாப்பாடு செய்றா... நீபோய் எப்படி செய்றாங்கனு பார்த்துக்க... நாளையிலருந்து கரெக்டா பதினோரு மணிக்கு இங்க இருக்கனும் பனிரெண்டரைக்கு டாக்ஸ்க்கு சாப்பாடு குடுத்துடனும்" என்று கூறிவிட்டு அட்வான்ஸாக இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க... மான்சி கை நடுங்க அந்த பணத்தை வாங்கிக் கொண்டாள்....

சரஸ்வதி மான்சியை தோட்டத்து அறைக்கு அழைத்து செல்ல.. அங்கே ஒரு பெண் பெரிய அலுமினிய டபரா ஒன்றில் மாட்டிறைச்சியை வேகவைத்துக் கொண்டிருந்தாள்.... அந்த வாசனையே மான்சியின் வயிற்றைப் புரட்டியது.... பல்லை கடித்துப் பொருத்துக் கொண்டாள்

எப்படி செய்யவேண்டும்... என்னென்ன போடவேண்டும் என அந்த பெண் மான்சிக்கு விளக்கமாக சொன்னாள்... கிட்டத்தட்ட பிரியாணி செய்வது போல்... ஆனால் மசாலா எதுவுமில்லாமல்... உப்பு கூட குறைவாக போட்டு செய்ய வேண்டும் ... மான்சி கவனமாக கேட்டுக் கொண்டாள்...



அடுத்ததாக நாய்களைப் பார்க்க என்று மான்சியை அழைத்து சென்றாள் சரஸ்வதி.... நாய்களைப் பார்த்ததும் மான்சிக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.... ஒவ்வொன்றும் குதிரைகள் போல் இருந்தன.... புதிதாக மான்சியைப் பார்த்ததும் எல்லாம் ஒட்டு மொத்தமாக குறைக்க ஆரம்பிக்க மான்சி நடுங்கிப் போனாள்..... அழுகையே வந்துவிட்டது மான்சிக்கு....

சரஸ்வதிக்கு மான்சியைப் பார்த்து பாவமாக இருந்தது... " இதுக்குத்தான் சொன்னேன்... உனக்கு இந்த வேலை சரியா வராதுனு" என சரஸ்வதி கூற...

மான்சி இல்லையென்று தலையசைத்துவிட்டு நாய்களுக்கு சற்று தள்ளி நின்று அவற்றையேப் பார்க்க... கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் சத்தம் அடங்கி வாலை குழைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டன....

சற்று நேரத்தில் அவற்றுக்கு சாப்பாடு வர பெரியப் பெரிய பீங்கான் பேழைகளில் அவற்றின் உணவை அள்ளிப் போட்டதும் பாய்ந்துகொண்டு சாப்பிட்டன நாய்கள்....

மான்சி எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டு சரஸ்வதி வேலையை முடித்து வரும்வரை காத்திருந்து இருவரும் ஒன்றாக வீட்டுக்கு கிளம்பினர்....

மதியத்துக்கான உணவை தெருவோற கடை ஒன்றில் வாங்கிக்கொண்டு மான்சி தன் வீட்டை நெருங்கியபோது கதவு திறந்தே இருந்ததை கண்டு ஆச்சர்யத்துடன் உள்ளே போனாள்....




No comments:

Post a Comment