Saturday, January 9, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 21

கையிலிருந்த பெட்டியை மெல்ல தரையில் வைத்தவன்... அவரகளையே பார்க்க... பின்னால் வந்த பாட்டிக்கு தன் பேத்தியை கண்டதும் கண் கலங்கியது......

“ நீ வர்றேன்னு ரெண்டு பேரும் நைட் சரியா தூங்கலை போலருக்கு... உன்னை எதிர்பார்த்து இங்க வந்து உட்கார்ந்ததும் தூங்கிட்டாங்க” என்று கூறிவிட்டு சிரித்தார் பெரியவர்

பரசு தனது கலங்கிய கண்களை மறைக்க சுவர் பக்கமாக திரும்பி தோள்பட்டையில் துடைத்துக்கொண்டான்

சத்யனை நெருங்கிய பெரியவர் அவன் தோளில் கைவைத்து .... மான்சிக்கு கேட்காதவாறு மெல்லிய குரலில் “ சத்யா பரசுராமன் வந்திருகான்பா” என்று கூற...

சத்யன் தூக்கம் களைந்து கண்விழித்து தாத்தாவை பார்த்து புன்னகைக்க... அவர் பரசுவை நோக்கி கைகாட்டினார்...

சத்யன் பரசுவைப் பார்த்து மலர்ந்த புன்னகையுடன் கையசைத்து “ ஹாய் பரசு” என்றவன் பாட்டியைப் பார்த்து “ வாங்க பாட்டிம்மா” என்று மெல்லிய குரலில் அழைத்தான்....

பிறகு தாத்தாவைப் பார்த்து “ தாத்தா மான்சி நைட்டெல்லாம் சரியா தூங்கலை... இப்போ எழுப்பனுமா?” என்று சங்கடமாக கேட்டான்

“ அதான் நானும் யோசிச்சேன் சத்யா.... நீ இப்படியே மான்சியை தூங்க வை... நான் இவங்க தங்க ஏற்பாடு பண்றேன்... இவங்க குளிச்சிட்டு வந்ததும் மான்சியை எழுப்பலாம்” என்று மெதுவாக கூறியதும்

சத்யன் சரியென்று தலையசைத்து விட்டு பரசுவை நோக்கி கையசைத்து தாத்தாவுடன் போகும்படி ஜாடையில் கூறினான்......

இன்னும் திகைப்பிலிருந்து விலகாத பரசு மெல்ல தலையசைத்தான்.... அங்கே நடமாடிய வேலைக்காரர்களுக்கு சபாபதி ஜாடையிலேயே வேலை சொல்லிக்கொண்டிருந்தார்... நடப்பவர்கள் கூட தரை அதிராமல் மெல்ல நடந்து சென்றனர் ... சிறு சப்தம் கூட கேட்காத நிசப்தம்.... அந்த தேவதை உறங்குவதற்காக தோட்டத்து மரம் செடிகள் கூட சத்தமில்லாமல் பூக்களை உதிர்த்தன

எல்லாவற்றையும் கவனித்தபடி பெரியவரின் பின்னால் போன பரசுவுக்கு அழுகையே வந்தது..... என் அக்கா தூக்கம் களையாமல் இருக்க இத்தனை ஏற்பாடா?.... மான்சி அந்த வீட்டில் எப்படி வாழ்கிறாள் என்று யாரும் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் பரசுவுக்கு புரிந்தது... மனம் முழுவதும் சந்தோஷமே சுமையாக தாத்தா சென்ற அறைக்குள் நுழைந்தான்

அவர்களுக்கு முன்பே அங்கிருந்த சபாபதி பெரியவரிடம் “ ஐயா பாத்ரூம்ல ஹீட்டர் போடச்சொல்லிட்டேன்... இவங்களுக்கு காபிக்கு இதோ நான் போய் சொல்லுறேன் ” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியேற.....

“ பரசுராமன் அதோ அதுதான் பாத்ரூம்” என்று பெரியவர் கைகாட்டியதும்..... “ அம்மாச்சி நீ போய்ட்டு வா” என்று தன் பாட்டியை பாத்ரூம் வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தான் பரசு...

அங்கிருந்த சேரில் அமர்ந்த பெரியவர் “ பரசுராமா நீ வந்ததில் எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்பா... நீ வரும்போது மான்சி எழுந்திருக்கலைனு சங்கடப்படாத.... அவ நைட் சரியா தூங்கலை... அப்புறம் இதுமாதிரி சமயத்தில் கர்பிணிப் பெண்களை பாதி தூக்கத்துல எழுப்பக்கூடாதுன்னு சொல்வாங்க.. அதான் மான்சியை எழுப்பலை” என்று பரசுவுக்கு விளக்கம் கூறினார்...

“ ஆமாம் ஐயா நானும் கேள்விப்பட்டிருக்கேன்... அதுனால என்னங்கய்யா அதான் என்னை மச்சான் பார்த்துட்டாரே... அக்கா நல்லா தூங்கி எழுந்திரிக்கட்டும்” என்று பரசு புன்னகையுடன்கூற...

பெரியவர் நிம்மதியாக மூச்சு விட்டபடி எழுந்து “ சரிப்பா நீ ரெடியாகி வா... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு... பங்கஷனுக்கு சில நெருங்கிய சொந்தக்காரங்களை கூப்பிட்டிருக்கேன் அவங்கல்லாம் ஒவ்வொருத்தராய் வர ஆரம்பிச்சிடுவாங்க... அவங்க வர்றதுக்குள்ள சில ஏற்பாடுகள் செய்யனும்.. அதனால நாம அப்புறம் பார்க்கலாம்.. ஏதாவது தேவைனா சபாபதி இங்கயேதான் இருப்பான் அவன் கிட்ட கேளுப்பா.... ” என்று கூறி விடைபெற... 


“ நீங்க போய் உங்க வேலைகளை கவனிங்க ஐயா” என்றவனை பார்த்து முறைத்த பெரியவர் “ இதென்ன ஐயா?.... நான் உனக்கும் தாத்தா தான்.... இனிமே தாத்தான்னு கூப்பிடப் பழகு” என்று அதட்டிவிட்டு வெளியேறினார்...

பரசு அமைதியாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான்.... பல மாதங்களாக மனதை அடைத்து வைத்திருந்த சுமைவிலகி மனம் மயிலிறகு போல் லேசாகியிருந்தது... சற்றுமுன் மான்சி சத்யன் இருவரும் உறங்கிய அழகு அவன் மனதில் கல்வெட்டாக பதிய உதடுகளில் சந்தோஷப் புன்னகை...

அவர்களின் அணைப்பில் இருந்த விரசமில்லாத அன்யோன்யம்...... மனைவியை உறக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டுமா? என்று சத்யன் கேட்ட காதலான வார்த்தைகள்... புனனகை மாறா முகத்துடன் கணவனின் மார்பில் புதைந்து கிடந்த அக்கா.... மனைவியை ஒரு கையால் அணைத்து மறுகையை அசைத்து கம்பீரமான சிரிப்புடன் தன்னை வரவேற்ற மச்சான்... வாழவந்த மருமகளின் தூக்கம் களையாமல் பேரனின் காதில் ரகசியம் பேசிய தாத்தா.... பரசுவின் உதடுகளில் புன்னகை மாறவில்லை என்றாலும் இமைகள் தானாக நனைந்தது...

பரசு அதிகமாக தனது தாயைத்தான் தெய்வமாக வணங்குவான்... இப்போதும் அவன் மனம் தனது தாயை மனதில் நிறுத்தி மனமுருக வேண்டினான்... “ அம்மா அக்காவுக்கும் மச்சானுக்கும் நீதான் துணையிருக்கனும் அம்மா இதுபோல சந்தோஷம் அக்கா வாழ்க்கையில என்னைக்கும் நிலைச்சு இருக்கனும் அம்மா ” கைகூப்பி வேண்டியவனின் பிராத்தனையை வாய்விட்டே சொன்னான்

பாத்ரூமிலிருந்து வந்த பாட்டிம்மா பேரனின் கைகளைப் பற்றிக்கொண்டு “ இனிமே உன் அக்காளுக்கு ஒரு கொறையும் இல்லை ராசா...” என்று கண்ணீர் மல்க.... பரசு ஆமாம் என்று தலையசைத்து “ இனிமே அக்காவுக்கு ஒரு குறையும் இருக்காதுதான்” என்றான்

பரசுவின் பக்கத்தில் அமர்ந்த பாட்டிம்மா “ என் பேத்தியை ராஜகுமாரி மாதிரி இல்ல பார்த்துக்கிறாங்க? ... இந்த காலத்துல இப்படியும் கூட மனுஷாளுங்க இருக்காளா? மருமகப்பிள்ள வேற எம்புட்டு அழகா இருக்காரு.. சிரிக்கறப்ப நம்ம திருத்தணி முருகன் மாதிரி எவ்வளவு அழகாருக்கு” பாட்டி வரிசையாய் அடுக்கிக்கொண்டே போக... அப்போது கதைவை திறந்துகொண்டு கையில் காபி ட்ரேயுடன் வந்தாள் ராஜி...

மரியாதையாக பரசு உடனே எழுந்து நிற்க்க... பாட்டியும் எழுந்தார் ... ராஜி புன்னகையுடன் “ உட்காருங்கம்மா... நான் மான்சியோட அத்தை ராஜேஸ்வரி” என்று தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டு காபி கப்பை எடுத்து பாட்டியிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்து பரசுவிடம் கொடுத்தாள்..

பிரயாணம் எப்படியிருந்தது என்று சம்பிரதாயமாக விசாரித்தவள் “ நீங்க குளிச்சு ரெடியாகுங்க... நான் போய் மான்சி எழுந்துட்டாளானு பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து நகன்றாள்..

மகாராணி போன்ற தோற்றமுடைய பெண் வந்து காபி கொடுத்து மரியாதையாக பேசிய அதிர்ச்சி இன்னும் விலகாமல் பாட்டி அப்படியே அமர்ந்திருக்க.. பரசு காபியை குடித்துவிட்டு குளியலறைக்கு சென்றான்...

பரசு குளித்து வேறு உடை மாற்றி தயாராகி வெளியே வந்தபோது... மரகதம் வந்து தன் அக்காவிடமும் பேரனிடமும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போனாள்

பரசுவை அழைத்துச்செல்ல சபாபதி வந்தார்... அவர்கள் வெளியே வந்தபோது மான்சியும் சத்யனும் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தனர்... பரசுவைப் பார்த்ததும் குடித்துக்கொண்டிருந்த காபியை கீழே வைத்துவிட்டு எழுந்த மான்சியை பரசு வேகமாக வந்து தடுத்தான்... “ நீ மொதல்ல காபியை குடிச்சு முடி அக்கா” என்று அன்புடன்
கட்டளையிட்ட தம்பியின் மாற்றம் மான்சிக்கு வியப்பாக இருந்தது... அவசர அவசரமாக காபியை குடித்து முடித்தாள்

மற்றவர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்க... பரசுவை தன் பக்கத்தில் உட்கார வைத்த மான்சி அவன் முகமெல்லாம் வருடி “. உன்னைப் பார்க்கனும்னு தான் நைட்டெல்லாம் தூங்காம வெயிட் பண்ணேன்.... ஆனா நீ வந்தது தெரியாம நல்லா தூங்கிட்டேன் ஸாரிடா தம்பி.... பரசு இப்போ உடம்பு நல்லாயிருச்சுல்ல... எந்த வலியோ பிரச்சனையோ இல்லைல?.. ” என்று கண்கலங்க கேட்க...




அக்காவின் கையைப் பற்றிக்கொண்ட பரசு “ ஸ்ஸ்ஸ் கண்கலங்காத அக்கா... எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் இப்போ ரொம்ப நல்லாருக்கேன்.... நல்லா ரெண்டு பேரும் தூங்குனீங்க அதான் எழுப்பலை அக்கா... தாத்தா வாசல் வரை வந்து எங்களை உள்ள கூட்டிட்டு வந்தார்... அத்தை வந்து காபி குடுத்தாங்க ” என்று உண்மையான சந்தோஷத்துடன் கூறினான்...

மான்சி அடுத்து எதுவும் பேசவில்லை... பரசுவின் கையைப் பற்றிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்... அக்காவின் நிலை பரசுவுக்க சங்கடமாக இருந்தது... அவள் கையை அழுத்தி “ அக்கா இதோபார் நீ இப்போ மனசுல எந்த குழப்பமும் வச்சிக்க கூடாது... எனக்கு யார்மேலயும் எந்த கோபமும் இல்ல... நம்ம அம்மா மேல சத்தியமா... நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கேன்னு தெரிஞ்சதும் என் கோபமெல்லாம் போயிருச்சு அக்கா... நம்புக்கா” என்று மெல்லிய குரலில் மன்றாடிக் கூறியதும்...

மான்சி கண்ணீருடன் நிமிர்ந்து “ எனக்குத் தெரியும் தம்பி நீ எங்களை புரிஞ்சுக்குவான்னு..நான் இனிமே அழமாட்டேன் பரசு.” என்றவள் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்

இவர்கள் பேசுவதையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த சத்யன் “ சரி பரசு நீ டிபன் சாப்பிட்டு இரு... தாத்தா பங்கஷன் பகல்லயே வச்சிட்டாங்க.. அதனால மான்சி சீக்கிரம் தயாராகனும்... கெஸ்ட் எல்லாரும் போனதும் நாம ஈவினிங் பேசலாம் ” என்றதும்

“ சரிங்க மச்சான்... நீங்க போங்க... எனக்கும் கொஞ்சம் வெளிய வேலையிருக்கு ” என்று பரசு எழுந்துகொண்டான்

வேலு வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வந்து சத்யனின் அருகில் நிறுத்திவிட்டு.. வழக்கம் போல வேலு சத்யனின் அக்குளில் கைவிட்டு தூக்க... மான்சி அவன் கால்களைப் பற்றி தூக்க முயன்றாள்..

பரசு அவர்களைப் பார்த்துவிட்டு விநாடியில் மான்சியை நெருங்கி “ நீ தள்ளு அக்கா ” என்று பிடிவாதமாக மான்சியை ஒதுக்கிவிட்டு சத்யனின் கால்களைப் பற்றினான்.... சத்யன் சங்கடத்துடன் “ நீ விடு பரசு” என்று கூற...

“ ஏன் மச்சான் நான் உங்களை தொடக்கூடாதா?” என்றவன் கண்கள் பட்டென்று குளமாகி மடை உடைக்க.. சத்யனின் கால்களை சேர்த்துப் பற்றிக்கொண்டு “ ஊனம்ங்கறது உடம்புல இருக்கலாம்,.... மனசுதான் ஊனமா இருக்கக்கூடாதுன்னு எனக்கு புரிய வச்சிட்டீங்க மச்சான்.... உடம்பு ரெண்டும் சேராம மனசால ஒத்துபோய் ஒற்றுமையா வாழலாம்னு எனக்கு புரிய வச்சிட்டீங்க மச்சான்... கெட்டவன் என்னிக்குமே கெட்டவானா இருக்கமாட்டான்.. அவன் மாறும் சந்தர்ப்பமும் அமையும் அவனுக்கும் மனசிருக்கும்... அந்த மனசுக்குள்ள நேசமும் இருக்கும்னு எனக்கு புரிய வச்சிட்டீங்க மச்சான்.... உங்க கல்யாணத்தன்னிக்கு நான் உங்களைத் தரக்குறைவா பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க மச்சான் ” என்றவன் சத்யனின் பாத விரல்களில் தனது நெற்றியை அழுத்திப் பதித்தான்... அவன் முதுகு கண்ணீரால் குலுங்கியது...

மான்சி “ தம்பி” என்று மெல்லிய கூச்சலுடன் பரசுவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து மெல்லிய குரலில் விசும்பினாள்... திடுக்கென்று நடந்த இந்த உணர்ச்சிகரமான சம்பவத்தில் அங்கே சிறு கூட்டம் கூடிவிட... சத்யன் தவித்துப் போனான் “ அய்யோ பரசு என்னடா இது காலை விடு” என்று கூறியபடி பரசுவை நோக்கி தனது கைகளை நீட்டி “ ப்ளீஸ் பரசு இங்க வா” என்று அழைத்தான்..

கண்களில் வழிந்த கண்ணீரோடு எழுந்த பரசு சத்யனின் கைகளைப் பற்ற... சத்யன் அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து அவனும் குலுங்கி விட்டான்.... “ நீ சொன்ன மாதிரி நான் எதுவுமே பண்ணலை பரசு.... எல்லாமே உன் அக்காவால கிடைச்ச வாழ்க்கைடா எனக்கு.... அவ மட்டும் என் வாழ்க்கையில வரலேன்னா நான் இன்னேரம் இல்லாமலேயே போயிருப்பேன் பரசு... எனக்கு உயிர் குடுத்து.. எப்படி வாழனும்னு கத்து கொடுத்த தேவதை பரசு உன் அக்கா.... என் கர்வத்தையெல்லாம் அவள் காலடியில் வச்சிட்டு நான் இப்போ மனுஷனாயிட்டேன் பரசு.... நீ அன்னிக்கு சொன்னியே?.... என் அக்கா சாமிடான்னு... ஆமாம் பரசு,, இப்போ நானும் சொல்றேன் உன் அக்கா சாமிதான்... எனக்கு உயிர் குடுத்த சாமி ” சத்யனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெஞ்சின் ஆழத்திலிருந்து உதிரத்தில் நனைந்து கண்ணீரில் குளித்து வெளிவந்தது...

மடிந்து அமர்ந்து அழும் மருமகளை தூக்கி அணைத்துக்கொண்ட ராஜி ... பாட்டிம்மாவும்மரகதம் தன் பேத்தியின் கைகளைப் பற்றிக்கொண்டனர் ராஜாவைப் பார்க்க.... அவர் தன் கண்ணெதிரே நடக்கும் உணர்ச்சி போராட்டத்தில் கலங்கிப்போய் நின்றிருந்தார்... 


ராஜி அவருக்கு ஜாடை செய்ததும் வேகமாக சத்யனை நெருங்கி சத்யன் பரசு இருவரையுமே சேர்த்துப் பிடித்து “ ஏன்பா சந்தோஷமான நேரத்துல அழறீங்க?... இன்னும் கொஞ்சநேரத்துல பங்ஷன் ஆரம்பிக்கனும்... போய் ரெடியாகுங்க ரெண்டுபேரும்” என்று அன்புடன் அதட்டியதும் பரசு சங்கடமாக விலகினான்....

சத்யன் தன் கண்களை அவசரமாக துடைத்துக்கொள்ள.... வேலுவும் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு பரசுவைப் பார்த்து “ நீங்க அங்க பிடிச்சு தூக்குங்க தம்பி... நான் காலைப் பிடிச்சிக்கிறேன்” என்று கூற இருவருமாக சேர்ந்து தூக்கி சத்யனை சேரில் அமர்த்தினார்கள்

சத்யன் பரசுவின் கைகளை விடாமல் பற்றியிருந்தான்... அவனுடனேயே அறைக்குள் சென்றான் பரசு.... சத்யனை வேலு தயார் செய்ய அருகிலேயே இருந்தான் பரசு... அவனுக்கு சத்யனின் ஊனம் துளிகூட கண்களுக்குத் தெரியவில்லை... ஒரு ராஜகுமாரனை தயார் செய்யும் நிகழ்ச்சி தான் அவன் கண்முன் நடந்து போல் சிரிப்பும் கேலியும் சந்தோஷமுமாக அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தான்.... அவனால் தனது சந்தோஷத்தை மறைத்து வைக்க தெரியவில்லை... காமம் இல்லாத இந்த வாழ்க்கை பெரும் புனிதம் என்று அவனுக்குப் புரிந்தது... அந்த புனிதத்தை உணர்த்திய சத்யனும் மான்சியும் அவனுக்கு தெய்வங்கள் போன்று தோன்றினார்கள்....

காலை உணவு முடிந்ததும் ... நேரமாகிவிட்டதை உணர்ந்து அறைக்குள் வந்த ராஜி ஆண்களை வெளியேற்றி விட்டு மருமகளை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.... மருமகளுக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டு தங்கமும் வைரமுமாக அலங்காரம் செய்து வெளியே அழைத்து வர .. அத்தனை பேரின் கண்களும் அந்த அம்மன் சிலையை மொய்த்துக்கொண்டது .... பரசு எழுந்தே நின்றுவிட்டான் .. என் அக்கா சாமிடா என்ற அவனது வார்த்தைக்கு ஏற்ப அம்மனே அவன்முன் வந்து எழுந்தருளியது போல் அதிசயமாக பார்த்தான்.. அவளைத் தொழ அவன் கைகள் எழும்பியதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை ..

கூந்தலில் சூட்டியிருந்த மல்லிகையும் கணகாம்பரமும் இருபக்க தோளிலும் வழிய... பச்சை பார்டர் போட்ட குங்கும சிவப்பு பட்டு உடலில் தவழ... . அவள் முகத்தை விட ஜொலிப்பு குறைவாக இருந்த வைர நகைகள் தங்களால் முடிந்த வரை டாலடிக்க.. மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து ... புருவ மத்தியில் சிவப்பு பொட்டு வைத்து .. அந்த பொட்டுக்கு கீழே கர்ப்பரட்சாகம்பிகை கோயிலின் குங்குமம் வைத்து... அவளது பெரிய கண்களுக்கு மை தீட்டி ... மூக்கின் வலது பக்கத்தில் சிறு பொட்டாக வைர மூக்குத்தி மின்ன .. சயமிடப்படாத சிவந்து குவிந்த உதடுகள் ... இடது கன்னத்தின் கீழே சிறு மச்சமாய் திருஷ்டி பொட்டு வைத்து ... மேடிட்ட வயிற்றுடன் வெள்ளி சலங்கைகள் சத்தமிட அலங்காரம் செய்யப்பட்ட கர்பகிரகத்து சிலையாக வந்து நின்ற மான்சியை கண்ட அனைவருக்குள்ளும் ஒருவித பரவசம் .. சத்யனிடம் மட்டும் பரவசத்தை மீறிய கர்வம் ...

மான்சியின் பார்வை சத்யனிடம் தான் சென்றது ... அவனோ யாரும் பார்க்கும் முன் கண்சிமிட்டு உதடு குவித்து காற்றில் ஒரு முத்தத்தை அனுப்ப... மான்சியின் முகம் அவள் கட்டியிருந்த சிவப்பு பட்டை விட மேலும் அதிகமாக சிவந்து போனது ...

சோபாவில் அமர்ந்து டீபாயில் கால் நீட்டியிருந்த சத்யன் அருகில் வந்த மான்சி அவன் கால்களை தொட்டு தன் கண்களில் ஒற்றிக்கொள்ள சத்யனுக்கு சட்டென்று கண்கள் குளமானது .... அவளை நோக்கி கைகளை நீட்ட.. மான்சி நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள்.... அவள் விரல்களை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்ட சத்யன் " இதெல்லாம் வேண்டாம் கண்ணம்மா" என்று சத்யன் நெகிழ்சியுடன் கூறியதும் .


அவன் அருகில் வந்த ராஜா ... " அதெல்லாம் வேண்டாம்னு சொல்லக்கூடாது சத்யா ... இப்படில்லாம் சந்தர்ப்பம் அடிக்கடி அமையாது ... இதுக்கப்புறம் நாமதான் அவங்க கால்ல விழறமாதிரி இருக்கும்.... அதனால இப்பவே இதெல்லாம் நல்லா அனுபவிச்சுக்கடா மகனே” என்று சிரிக்காமல் சொல்ல...

கூடியிருந்த ஆண்கள் சிலர் “ ஆமா சத்யா ஆமா நல்லா அனுபவிடா திரும்பவும் கிடைக்காது ” என்றதும் பெண்களில் ஒருத்தி “ அடடா நாங்க என்னமோ இவங்களை வந்து கால்ல விழச் சொன்ன மாதிரி பேசுறாங்க? உங்க காரியம் ஆக நீங்க எங்க கால்ல விழுந்தா அதுக்கு நாங்களா பொறுப்பு?” என்று கேட்க... ஆண்கள் “ சொன்னது வாபஸ்” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கையை உயர்த்தினார்... அதன்பின் அங்கே சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது

நல்லநேரம் பார்த்து மான்சியை மனையில் உட்கார வைத்தனர் .... பரசு தான் கொண்டு வந்த சீர்களை அக்காவுக்கு முன்னால் அடுக்கினான்.... பூவும் பழங்களும் வரும்போது மதுரையில் இறங்கி வாங்கி வந்திருந்தான்... மரகதம் பெரியப் பெரிய தாம்பாளத் தட்டுகள் எடுத்து வந்து பரசு கொண்டு வந்தவற்றை அடுக்கினாள்... இறுதியாக பரசு தான் கொண்டு வந்த சூட்கேஸை திறந்து ஒரு பட்டுப்புடவையும் சில நகைப்பெட்டிகளும் ஒரு ஐநூறு ரூபாய் கட்டையும் எடுத்து மரகதத்திடம் கொடுத்தான்...

பேரனைப் பெருமையுடன் பார்த்துவிட்டு அவற்றை ஒரு தட்டில் வைத்து அதை அவனிடமே கொடுத்து “ இதை பெரியவர் கிட்ட குடு பரசு” என்று கூற...

பரசு அந்த தட்டை ஏந்திச் சென்று பெரியவரின் முன்னால் நீட்டி “ தாத்தா அக்காவை கட்டிக்குடுக்கும் போது என் சக்திக்கு தகுந்தாப்ல இருபது பவுன் வரை போடனும்னு நெனைச்சிருந்தேன்.... இதுல அந்த இருபது பவுன் இருக்குத் தாத்தா... ஐம்பதாயிரம் ரொக்கமும் வச்சிருக்கேன்... மச்சான் எப்படி பட்ட டிரஸ் போடுவார்னு தெரியாததால அவருக்கு நான் எதுவுமே வாங்கிட்டு வரலை.... யாரும் தப்பா நினைக்காம இதை ஏத்துக்கனும்” என்று பரசு தெளிவாக தீர்க்கமாக கூறினான்...

பெரியவர் அவனையே கூர்ந்து பார்த்துவிட்டு “ என் வீட்டுல இதுபோல பலஆயிரம் மடங்கு பணமும் நகையும் சொத்தும் இருக்கு பரசு.... ஆனா நீ குடுக்குற இந்த பணத்துக்கும் பொருளுக்கும் ஈடு எதுவுமேயில்லை... இது மான்சியோட தாய்வீட்டு சீர்... இதை மறுக்குற உரிமை யாருக்கும் கிடையாது...” என்றவர் மான்சியைப் பார்த்து “ மான்சி இங்க வாம்மா” என்று அழைக்க... மான்சி எழுந்து அவர் அருகில் வந்து நின்றாள்....

பெரியவர் தட்டை அவளிடம் கொடுத்து “ மான்சி இதுல இருக்கிற பணத்தை சத்யன் கிட்ட கொடுத்திட... நீ போட்டிருக்க புடவையும் நகையையும் மாத்திட்டு இதையெல்லாம் போட்டுகிட்டு வந்து உட்காரும்மா” என்று கூறினார்...

இவ்வளவும் வாங்க பணத்துக்கு என்ன செய்தான் தம்பி? என்ற குழப்பம் நெஞ்சில் இருந்தாலும்.... நிறைவான சந்தோஷத்துடன் மான்சி கண்கலங்க அவற்றை வாங்கிக்கொள்ள... ராஜி மருமகளை மீண்டும் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.... சற்றுநேரத்தில் பரசு கொடுத்த புடவையும் நகையும் அணிந்து மான்சியை அழைத்து வந்து அமர வைத்தாள்....

பெண்களின் சம்பிரதாயங்கள் சிரிப்பும் குதூகலமுமாக ஆரம்பமானது.... மூத்த சுமங்கலியாக மரகதம் தன் பேத்திக்கு முதலில் நலங்கு செய்ய... வந்திருந்த பெண்கள் அடுத்தடுத்து மான்சிக்குப் பூச்சூடி கண்ணாடி வளையல் போட்டு கன்னத்தில் சந்தனம் தடவி நலங்கு செய்தனர்... அழகோவியமாக அமர்ந்திருந்தாள் மான்சி...



சத்யன் மனைவியை தன் கண்பார்வையிலேயே வைத்தபடி பார்த்து ரசித்தான்... பரசு சத்யனை விட்டு நகரவேயில்லை.... கையைப் பற்றியபடி அருகிலேயே நின்றிருந்தான்....
பெரியவர் கூட சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்...

ராஜியின் கண்களில் வழியும் ஆனந்த கண்ணீரை துடைக்க வழியின்றி தவிப்புடன் நின்றிருந்தார் ராஜா.... மருமகளால் இந்த குடும்பத்துக்கே உயிர் வந்தது மட்டுமல்ல... எல்லோருக்கும் சகலவிதமான உணர்ச்சிகளும் வந்திருக்கிறது என்று எண்ணினார் ராஜா

வரதனும் வேலுவும் தோட்டத்து வாசப்படியில் வசதியாக சாய்ந்துகொண்டு நடப்பதை சந்தோஷத்துடன் பேசியபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.....

வேலையாட்கள் கூட சிரிப்பும் சந்தோஷமுமாக நின்று பார்த்துவிட்டு பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்தார்கள்... சபாபதி வந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்குவதில் மும்முரமாக இருந்தார்....

எல்லோரும் சந்தோஷத்தில் திளைத்திருக்க... தாயும் மகளும் மட்டும் நெஞ்சில் வஞ்சமும் உதட்டில் புன்னகையுமாக அமர்ந்திருந்தனர்




" என் வாழ்வில்....

" வெளிச்சம் போனதே.....

" இருள் சூழ்ந்ததே...

" என விழி மூடினேன்....

" இதோ நானிருக்கிறேன் என்று...

" சிறு தீபம் தான் ஏற்றினாய்...

" அதன் சுடரில் நான்...

" உலகையே காண்கிறேன்! 


No comments:

Post a Comment