Tuesday, January 5, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 7

சத்யனின் வார்த்தையை சொக்கலிங்கம் அலட்சியமாக எண்ணவில்லை.... ஏனென்றால் அவருக்குத் தெரியும் சத்யன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்று.... அன்று இரவு குழப்பத்துடனேயே வெகு விழித்துக்கிடந்தார்

மறுநாள் காலை மாடிக்கு உணவு எடுத்துச்சென்ற மரகதம் கண்ணீருடன் திரும்பி வந்து “ ஐயா சின்னராசா சாப்பாடு வேனாம்னு சொல்லிட்டாரு... அதுவுமில்லாம பேசவே இல்லை அமைதியா படுத்திருக்காரு” என்று தாத்தாவிடம் கூற...

தாத்தா மகனைப் பார்த்தார் ...... அப்பாவின் பார்வை புரிந்து “ இதோ நான் போறேன்ப்பா” என்ற ராஜா வேகமாக மாடிப்படிகளில் ஏறி மகனின் அறைக்குச் சென்றார்.... அவருடனேயே மரகதமும் சாப்பாடு பாத்திரத்துடன் சென்றாள்...



சத்யன் இன்னும் உறக்கம் கலையாதவனாக கட்டிலில் படுத்திருக்க... மகனின் அருகில் கட்டிலில் அமர்ந்தார் ராஜா... மகனின் தலை முடியை கோதியவர் “ என்ன சத்யா டிபனை வேணாம்னு திருப்பி அனுப்பிட்ட? உனக்குப் பிடிச்ச மாதிரி வேற ஏதாவது செய்து எடுத்துட்டு வரச்சொல்லவா சத்யா?” என்று கேட்க....

சத்யன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் படுத்திருந்தான்.... அப்போது ராஜியும் தயக்கத்துடன் வந்து கட்டிலில் மறுபக்கம் சத்யன் அருகில் அமர்ந்து “ அப்பு யார் மேலயாவது கோவமா இருக்கியா? எதுவாயிருந்தாலும் மன்னிச்சுக்கோ அப்பு... இப்ப சாப்பிடும்மா ப்ளீஸ்” என்று மகனை சிறுவயதில் அழைத்தது போல் அப்பு என்று அழைத்து சாப்பிட கெஞ்சினாள் ராஜி.... அவள் விரல்கள் சத்யனின் கன்னத்தை வருடியது

சத்யன் சலனமின்றி அப்படியேப் படுத்திருக்க... பெற்றவர்கள் மாற்றி மாற்றி கெஞ்சினார்கள்.... ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த சத்யன் தனது தலையணைக்கு கீழேயிருந்து ஒரு சிறிய லட்டர் பேடை எடுத்து எதையோ வேகமாக எழுதி அப்பாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கண்மூடிப் படுத்துக்கொண்டான்....

ராஜா புருவம் சுருங்க என்ன எழுதியிருக்கான் என்று படித்தார் “ நான் ஏன் இப்படி இருக்கேன்னு தாத்தாவுக்குத் தெரியும்.. அதனால அவரையே போய் கேளுங்க.... அவரு ஓகே சொல்ற வரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன் மாற்றமேயில்லை” என்று எழுதியிருக்க... சீட்டை மனைவியிடம் கொடுத்துவிட்டு ராஜா கட்டிலில் இருந்து எழுந்துகொண்டார்...

அவருக்கும் மகனின் பிடிவாதம் தெரியுமல்லவா? மனைவியை கண்ணசைத்துவிட்டு அங்கிருந்து கீழே வந்தார்.... அவர் பின்னாலேயே வந்த ராஜி டைனிங் டேபிளின் எதிரே அமர்ந்து கம்பெனிக்கு கிளம்பும் அவசரத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமனாரிடம் சத்யன் எழுதிகொடுத்த சீட்டை கொடுத்தாள்....

வாங்கிப் படித்த தாத்தா முகம் இறுக “ முட்டாள்” என்று கூறியபடி அந்த பேப்பரை கசக்கி எறிந்துவிட்டு “ எல்லாரும் சாப்பிட்டு அவங்க அவங்க வேலையைப் பாருங்க... அவன் தானா சரியாவான்” என்று கர்ஜித்து கைகழுவிவிட்டு எழுந்து செல்ல....

எல்லோரும் அந்த அதட்டலுக்கு பயந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்... ராஜாவும் ராஜி குழப்பத்தோடு பார்த்துக்கொண்டனர்...

அன்று முழுவதும் அதே நிலை நீடித்தது..... சத்யன் சாப்பிடவும் இல்லை.... யாரிடமும் பேசவும் இல்லை.... வேலைக்காரர்கள் கூட கவலையோடு மாடியில் சத்யனின் அறைக் கதவையே அடிக்கடிப் பார்த்தபடி இருந்தனர்....

மரகதம் சத்யனின் இந்த உண்ணாவிரதத்தால் கலங்கிப்போய் அடுத்து என்ன செய்வது என்று தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.... வேலுவும் கவலையோடு சத்யனின் அறையில் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்...

நேற்று இரவு தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடந்த வாக்கு வாதம் வேலுவுக்கும் தெரியும்.... மான்சியை மணந்துகொள்ள சம்மதித்தால் தான் சாப்பிடுவேன் என்ற சத்யனின் சவாலையும் கேட்டவன் தான்... ஆனால் சொக்கலிங்கமோ சத்யனோ சொல்லாமல் மற்றவர்களிடம் இதைப் பற்றிப்பேசினால் தனது சீட்டு கிழிந்துவிடும் என்று புரிய அமைதியாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று காத்திருந்தான்...

தலைவலி என்று வேலைக்கு வராமல் வீட்டிலேயே படுத்துக் கிடந்த மான்சிக்கு காலை பத்து மணிக்கே சத்யன் சாப்பிடவில்லை என்ற செய்தி போனது.... துடித்துப் போனாள்... அவசரமாய் எழுந்து பங்களாவுக்கு வந்தவள் ஹாலில் கவலையுடன் அமர்ந்திருந்த ராஜியிடம் சென்றாள்...

இப்போதெல்லாம் ராஜி மான்சி இருவருக்கும் ஒரு சினேகிதம் உருவாகியிருந்தது... மான்சியைப் பார்த்ததுமே பெரியவர் கசக்கி எறிந்த காகிதத்தை அவளிடம் கொடுத்தாள் ராஜி...

மான்சி அந்த எழுத்துக்களின் மீது பதட்டமாய் பார்வையை பறக்கவிட்டாள்.... படித்துவிட்டு குழப்பத்துடன் ராஜியிடம் பேப்பரை கொடுத்துவிட்டு “ பெரியவர் என்னங்கம்மா சொன்னார்?” என்று கேட்க...

“ அவங்கவங்க வேலைப்பாருங்க.. அவன் தானா சரியாவான்னு கத்திட்டுப் போறாரு..... சத்யன் என்ன கேட்டான்... இவர் ஏன் மறுக்கிறாருன்னே புரியலையே” என்று வருத்தமாக கூறினாள் ராஜி........ சோகம் சுருட்டிப் போட மாடியில் மூடிக்கிடந்த சத்யனின் அறையைப் பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள் மான்சி ...

சற்றுநேரம் யோசனையாய் தோட்டத்தில் உலாவியவளை.... ஆயிரம் கேள்விகள் வண்டாய் குடைந்தது... அந்த ஆயிரம் கேள்வியும் ஒன்றேதான் “ என்ன வேண்டுமாம் அவனுக்கு? எதை மறுக்கிறார் பெரியவர்? ” மனம் அமைதியற்று அலைய ரோஜா பதியன்களைுக்கு எரு அள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்

“ மான்சிம்மா இங்கே வாங்களேன்” என்று வரதன் உற்சாகத்துடன் அழைக்க... மான்சி குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்....
நேற்று முன்தினம் மொட்டுவிட்டிருந்த வயலட் நிற ஆர்கிட் மலர்கள் இன்று பூத்திருந்தன... மான்சியின் மனநிலையையும் மீறி முகம் பூவாய் மலர.. வேகமாக வரதனின் அருகில் சென்றாள்...


“ பாருங்கம்மா எவ்வளவு அழகா பூத்திருக்குன்னு” என்ற வரதனின் குரலில் புதிதாய் பிறந்த குழந்தையை காணும் ஒரு தகப்பனின் உற்சாகம்

“ ஆமாம் அண்ணா ரொம்ப அழகா இருக்கு” என்ற மான்சி சற்றுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள்.... அழகான அந்த மலர்களை பார்க்க பார்க்க மனம் சற்று இலகுவானது போல் இருந்தது...

இரண்டு நாட்களாக கண்ணீரை சுமந்திருந்த அந்த முகம் இப்போது சற்றே மலர்ந்திருந்தது கண்டு திருப்தியுற்றவனாக வரதன் அங்கிருந்து நகர்ந்தான்...

சற்றுநேரம் உற்றுப்பார்த்தவளுக்கு புதிதாய் இதழ் விரித்திருந்த ஆர்கிட் மலர்களில் கூட சத்யனின் முகமே தெரிந்தது.... சத்யன் எதை கேட்டு தாத்தா மறுத்திருப்பார்?’ மீண்டும் கேள்வி குடைந்தது... மான்சி யோசிக்கும்போதே சற்று தொலைவில் ராஜி சோர்வுடன் நடந்து வருவது தெரிய மான்சி எழுந்து ராஜியிடம் சென்றாள்

மான்சியைப் பார்த்ததுமே கண்கள் குளமாக “ மதியம் சாப்பாட்டையும் திருப்பி அனுப்பிட்டான்மா” என்றாள்...

மான்சியின் மனது திக்கென்றாலும்..... எதுவும் சொல்லவில்லை.... விஷயம் பெரியது என்று புரிய “ கொஞ்சம் இருங்கம்மா இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு பங்களாவுக்குள் சென்று சபாபதியை சந்தித்து “ நான் பெரியவர் கிட்ட பேசனும்..... கொஞ்சம் கால் பண்ணி தாங்க” என்றாள் தீர்மானமாக...

சபாபதி எதுவுமே சொல்லவில்லை உடனடியாக வீட்டு தொலைபேசியில் இருந்து சொக்கலிங்கத்தை அழைத்து மான்சியிடம் போனை கொடுத்தார் .....

தயக்கமின்றி வாங்கிய மான்சி “ தாத்தா நான் மான்சி பேசுறேன்” என்றாள்....

“ சொல்லும்மா? என்ன விஷயமா பேசனும்” என்று கேட்டார் தாத்தா...

ஒரு கணம் விழிகளை மூடித் திறந்த மான்சி “ உங்க பேரன் மதியம் சாப்பாட்டையும் திருப்பி அனுப்பிட்டார் தாத்தா.... அவருக்கு என்ன தேவையோ அதை கொடுக்க வேண்டியது தானே தாத்தா?... இவர் பட்டினி கிடப்பதில உங்களுக்கு அப்படியென்ன வைராக்கியம்?” மான்சியின் வார்த்தைகளில் கொஞ்சம் சூடு...

அய்யோ பெரியவரையே இப்படி கேட்குறாளே..... அவள் பின்னால் நின்றிருந்த சபாபதிக்கு உதறலெடுக்க ஆரம்பித்தது.... 




“ அவன் என்ன கேட்டான்னு தெரியுமா?” என்று கோபமாக பேசியவர் சட்டென்று தணிந்து “அவன் பட்டினி கிடந்து கேட்குறதை குடுக்க எனக்கும் ஆசைதான்மா.... ஆனா அதுக்கு அப்புறம் நான் எங்கபோய் பாவமன்னிப்பு கேட்குறது மான்சி? பணத்தால் எல்லாத்தையும் வாங்கலாம்மா... ஆனா ஆரோக்கியத்தை வாங்க முடியாது.... அதுபோல தான் அவன் கேட்பதும்.... என்னால நிச்சயமா அதுக்கு சம்மதிக்க முடியாது... ஏன்னா என் நெஞ்சில் இன்னும் ஈரம் இருக்குதே” என்று தொண்டை கமற பேசியவர் “ சரிம்மா நீ வச்சிடு... ஈவினிங் வந்து இதைப்பற்றி பேசுறேன்” என்றவர் உடனே போனை வைத்துவிட...

மான்சி கையிலிருநத போனையே வெறித்துப் பார்த்தாள்.... ஏனோ தாத்தாவின் மீது கோபம் தான் வந்தது.... மனுஷன் பட்டினியா கிடக்கான்... இப்போ போய் நியாய தர்மம் பேசுறாரே?....’ போனை டொக்கென்னு வைத்துவிட்டு கோபமாக அங்கிருந்து மறுபடியும் தோட்டத்திற்கு சென்றாள்...

சோகமே உருவாக அமர்ந்திருந்த ராஜியிடம் வந்து “ தாத்தாக்கு போன் பண்ணி என்ன பண்றதுன்னு கேட்டேன்..... ஈவினிங் வந்து பேசுறதா சொன்னார்மா” என்று முறைப்புடனேயே பதில் சொல்லிவிட்டு மறுபடியும் ஆர்கிட் மலர்களிடம் போய் தரையில் அமர்ந்து கொண்டாள்....

“ இவங்கல்லாம் இவ்வளவு பணத்தை வச்சுகிட்டு என்னதான் பண்ணப் போறாங்க?... பாவமாவது புன்னியமாவது.... ஒருத்தரோட பசிலயா பாவம் புன்னிய கணக்கு பார்க்குறது?’ மான்சியின் மனம் கொதித்தது...

சத்யன் ஏதோ தவறான நியாயமில்லாத ஒன்றைத்தான் கேட்டிருக்கிறான் இல்லையென்றால் தாத்தா இவ்வளவு கோபப்பட வேண்டியதில்லையே... ஆனால் புத்திக்கு புரிந்த விஷயம் மனதுக்கு புரியவில்லை... சத்யனின் காலி வயிறு மட்டுமே மான்சியின் கண்களுக்கு தெரிந்தது... அவனோடு சேர்ந்து இவளும் உண்ணாமல் கிடந்தாள்..... ஒரு கட்டத்தில் ராஜி கூட பசி தாங்காமல் வேலைக்காரர்களின் வற்புறுத்தலில் சாப்பிட்டுவிட்டாள்.... ஆனால் மான்சி தாத்தாவை எதிர்நோக்கி வைராக்கியத்துடன் காத்திருந்தாள்...








“ நீ பூவா? புயலா?

“ நீ பூவானால் நான் பனித்துளியாவேன்...

“ நீ புயலானால் நான் சருகாவேன்....

மாலை ஐந்து மணிக்கு வந்த சொக்கலிங்கத்தின் கடுகடுவென்று இருந்த முகத்தைப் பார்த்து வேலைக்காரர்கள் கூட அலறிப்போனார்கள்.... வேகமாக தனது அறைக்குள் நுழைந்தவர் தனது கைபேசி மூலம் மகனை அழைத்தார்.... இரவு ஏழு மணியாகிவிட... அப்பா எப்போதுமே இந்த நேரத்தில் கூப்பிடமாட்டாரே சத்யனின் விஷயமாகத்தான் இருக்கும் என்று பதட்டத்துடன் ராஜா தன் மனைவி ராஜியுடன் அப்பாவின் அறைக்கு வந்தார்....

சோபாவில் அமர்ந்திருந்த சொக்கலிங்கம் மகனுக்கு எதிர் சோபாவை காட்டிவிட்டு மருமகளைப் பார்த்து “ சத்யன் இன்னும் எதுவுமே சாப்பிடளையா?” என்று கேட்க....

ராஜி மூக்கை உறிஞ்சியபடி “ இல்ல மாமா நானும் நாலஞ்சு முறை போய் கெஞ்சிப் பார்த்தேன்... எதுவுமே பேசாம வாசலை கைகாட்டுறான்” என்று கூற....

சற்றுநேரம் அமைதியா இருந்த சொக்கலிங்கம்... பின்பு மகனை கவலையுடன் நோக்கி “ ராஜா சத்யன் என்ன கேட்குறான் தெரியுமா?” என்று கேட்க...

எதுவும் பேசாமல் குழப்பத்துடன் தனது அப்பாவைப் பார்த்தார் ராஜா...

“ போன மாசம் நம்ம டாக்டரோட யோசனைப்படி சத்யனுடய வாரிசுக்கு செயற்கை முறையில் ஏற்பாடு செய்யலாம்னு முடிவு பண்ணி.. அதற்காக சத்யன் கிட்ட பர்மிஷன் கேட்டதுக்கு அவன் பிடிவாதமா மறுத்தானே? இப்போ அதுக்கு சம்மதம்னு சொல்லிருக்கான்” என்று பெரியவர் நிறுத்த...

சத்யனை பெற்றவர்களின் முகம் சட்டென்று மலர்ந்தது ... ஆனாலும் குழப்பம்.... சந்தோஷப்பட வேண்டிய விஷயத்துக்கு ஏன் கோபப்படனும்?

இருவரின் முகத்தையும் பார்த்துவிட்டு “ ஆனா அதுக்காக அவன் தேர்ந்தெடுத்த பொண்ணு யாரு தெரியுமா?” என்று பெரியவர் கேட்க...

“ யாருப்பா?” ராஜா எதிர்பார்ப்புடன்...

“ நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்க மான்சியைத்தான் கேட்குறான்.... அதுவும் முறைப்படி கல்யாணம் செய்து வைக்கனுமாம்” பெரியவரின் குரலில் கோபம்...

ராஜாவும் ராஜியும் திகைப்பா சந்தோஷமா என்று கண்டுகொள்ள முடியாத முக பாவனையுடன் சொக்கலிங்கத்தைப் பார்க்க...

அவர் யோசனையுடன் தாடையை தடவியபடி “ அது எப்படி முடியும் ராஜா? சத்யனைப் பொருத்தவரை இனி எதுவுமில்லைனு டாக்டர்களே கைவிரிச்சுட்டாங்க... ஆனா மான்சி அப்படியா? இனிமேல் வாழப்போகும் பொண்ணு.... அவளைப் போய் சத்யனுக்கு கல்யாணம் செய்துவைச்சு அவனோட குழந்தையையும் சுமக்க வைக்க நினைக்கிறது எவ்வளவு பெரிய பாவம்?” வருத்தமாக ஒலித்தது பெரியவரின் குரல்...

அமைதியாக நின்றிருந்த ராஜி “ இதுல பாவம் என்ன இருக்கு மாமா? மான்சி ரொம்ப நல்ல பொண்ணு” என்றாள்..

கோபமாக மருமகளை ஏறிட்டவர் “ நல்ல பொண்ணுன்னு நீயே சொல்லிட்டு இதுல பாவம் என்ன இருக்கு கேட்குறயே ராஜி? நம்ம சத்யோனோட நிலைமை உனக்கு நல்லாத் தெரியும்.... அப்படியிருக்கும்போது மான்சியை அவனுக்கு கல்யாணம் செய்து வைப்பதில் என்ன பலன்? மான்சி எப்பேர்ப்பட்ட பொண்ணு என்று நமக்கெல்லாம் தெரிஞ்சும் அவ வாழ்க்கையை நாசமாக்கலாமா ராஜி? ஏற்கனவே என்ன பாவம் செய்தமோ நம்ம வீட்டு பிள்ளைக்கு இப்படியொரு நிலை... இதுல இன்னும் பாவக் கணக்கை ஏத்திகிட்டே போகனுமா? என்னால சுயநலமா முடிவெடுக்க முடியாது” பெரியவரின் வார்த்தைகள் தீர்மானத்துடன் கூர்மையாக வந்து விழுந்தது...

சற்றுநேரம் பெரும் அமைதி நிலவ ... மகனைப் பார்த்து “ என்ன ராஜா அமைதியா இருக்க?” என்று கேட்க...

கவலை படர்ந்த முகத்துடன் நிமிர்ந்த ராஜா “ நீங்க சொல்றது உண்மைதான்ப்பா.... அந்த மான்சி வந்தப் பிறகுதான் எல்லாரும் ஓரளவுக்கு நிம்மதி சிரிச்சு சந்தோஷமா இருக்கோம்.... எனக்கும் அந்த பொண்ணு வாழ்க்கையை பணயம் வைக்க இஷ்டமில்லை...அவளும் இதுக்கு சம்மதிக்க மாட்டா.... இப்போ சத்யன் இப்படியே இருந்தா என்னப்பா பண்றது ” என்று ராஜா கேட்டதும்...

ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்த சொக்கலிங்கம் “ வேறென்ன பண்றது ராஜா? மான்சிய வேலையை விட்டு அனுப்பிட வேண்டியதுதான்” என்ற முடிவாக கூற..

பதட்டமாக நிமிர்ந்த ராஜி “ அவசரப்படாதீங்க மாமா... மான்சிகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாமே? அவளுக்கு சம்மதம்னா அப்போ உங்களுக்கு ஓகே தான மாமா?” என்று கேட்டாள்...

நிச்சயம் மான்சி சம்மதிப்பாள் என்று பெரியவருக்கு தெரியும்... அன்று மண்டியிட்டு கதறியபடி “ என்கிட்ட இதுக்கு மேல எதையும் கேட்காதீங்க” என்றவளையா புரிந்துகொள்ள முடியாது....... மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு “ ராஜி நீ ஒரு சின்னப் பொண்ணு வாழ்க்கையில விளையாடனும்னு நெனைக்கிற” என்று குற்றம்சாட்டினார்

ராஜியின் விழிகள் சட்டென்று குளமாக “ எனக்கும் மான்சி நல்லாருக்கனும்னு என்ற ஆசையிருக்கு தான்.... ஆனா அதையெல்லாம் மீறி நான் சத்யனோட அம்மாவாச்சே மாமா... என் மகன் சந்தோஷம் தான் எனக்கு முதல்ல தெரியுது” என்றவள் சட்டென்று கைகூப்பி “ மாமா எத்தனையே நாள் நான் உங்க பேச்சை மதிக்காம நடந்திருக்கேன்... அந்த ராஜேஸ்வரி இப்போ இல்ல மாமா அவ செத்துட்டா.. இப்போ இருக்குற ராஜிக்கு தன் மகனோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்... இப்பவும் உங்க பேச்சை மீறுவதா நெனைக்காதீங்க மாமா... மான்சியோட அழகு அறிவு குணத்தோட நம்ம வீட்டு பாரம்பரியமும் கொண்டு சத்யனோட குழந்தை இந்த வீட்டுல பிறந்தா அது எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க மாமா.... இது ஒரு தாயோட மடிப் பிச்சையா நெனைச்சுக்கங்க” என்றவள் அதற்குமேல் பேசமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் ராஜி...

காதல் மனைவி கதறுவதை காண சகிக்காத ராஜா சட்டென்று மனைவியை நெருங்கி மெல்ல அணைத்து தன் தோளில் சாய்த்து “ அழாத ராஜி ” என்ற அவருடைய கண்களும் கலங்கித்தான் இருந்தது... மனைவியின் கூந்தலை ஆறுதலாக வருடியபடி பரிதாபமாக தனது தகப்பனாரைப் பார்க்க....

சொக்கலிங்கம் ரொம்பவே தளர்ந்து போனார்... “ சரி இப்போ என்னதான் செய்யலாம்?” என்று அவர்களிடமே கேட்க..

கணவனிடமிருந்து பட்டென்று விலகிய ராஜி முகத்தில் பூத்த புன்னகையுடன் “ நான் போய் மான்சியை அழைச்சிட்டு வர்றேன்... அவகிட்ட எல்லாத்தையும் சொல்லுவோம்... பிறகு அவ என்ன முடிவு சொல்றாளோ அதன்படி விட்டுடலாம்” என்று மருமகள் சொன்னதும்...

“ ம்ம்ம்” என்று பெரியவர் அனுமதித்தஅடுத்தநிமிடம் அந்த அறையிலிருந்து பறந்துவிட்டிருந்தாள் ராஜி....

சமையலறையில் அமர்ந்திருந்த மரகதத்தை பார்த்து “ மான்சி எங்க மரகதம்மா?” என்று ராஜி கேட்க

மரியாதையுடன் எழுந்து நின்ற மரகதம் “ தலைவலின்னு காலையிலருந்து சாப்பிடாம ரூமுக்குள்ளயே படுத்து கெடக்கும்மா” என்று கவலையுடன் சொன்னாள்..

“ சரி நான் போய் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு விடுவிடுவென தோட்டத்திலிருக்கும் மரகதத்தின் வீட்டுக்கு சென்ற ராஜி ஒருக்களித்து மூடியிருந்த கதவை லேசாக தட்டி மான்சி என்று அழைத்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைய..... ஒரு மூலையில் விரித்த பாயில் துவண்ட கொடியாக கிடந்தாள் மான்சி....

ராஜி மான்சியின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து மான்சியின் தோளில் கைவைத்து “ என்னாச்சு மான்சி... ரொம்ப தலை வலிக்குதா?” என்று கருணையுடன் கேட்க..



சத்யனின் நினைவில் கண்மூடி கிடந்த மான்சி பதட்டத்துடன் பட்டென்று எழுந்து “ அம்மா நீங்களா? என்னம்மா இவ்வளவு தூரம்? எனக்கு ஒன்னுமில்லமா... சும்மதான் படுத்திருந்தேன்” என்றதும் ..

மான்சியின் கைகளைப் பற்றிய ராஜி “ பதறாதே மான்சி... நான் சும்மாதான் வந்தேன்.... தாத்தா உன்னைப் பார்க்கனும்னு கூட்டிட்டு வரச்சொன்னார்” என்றாள்

“ இதோ வர்றேன்மா” என்று வேகமாக எழுந்த மான்சி விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி சுருட்டி கொண்டையாக முடிந்துக்கொண்டு வெளியே வந்து தோட்டத்து குழாயில் முகம் கழுவி துடைத்துவிட்டு நெற்றிப்பொட்டை சரிசெய்தபடி “ போலாம்மா” என்றாள்...

மான்சியின் எளிமையான அழகை ரசித்த ராஜியின் தாயுள்ளம் கடவுளே இந்த நல்லது நடந்து இந்த வீட்டு வாரிசு இவ வயித்துல வளரனும்” என்று மானசீகமாக வேண்டுகோள் வைத்தது...


No comments:

Post a Comment