Wednesday, January 27, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 11

சுகுனாவும் சரஸ்வதியும் நடந்தவற்றை சொல்லி சொல்லி அழும்போதுதான் மான்சிக்கு நடந்தது தெளிவாகப் புரிந்தது...

காலை ஆறு மணிக்கு குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தவன் இரும்பு போரை அடித்து இரண்டு குடம் தண்ணீர் பிடித்துள்ளான்... தண்ணீர் குடத்தை வேகமாக தூக்கி தோளில் வைக்கும் போது நெஞ்சு சுருக்கென்று வலிக்கு குடத்தைப் போட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தவனை முதலில் பார்த்தது சரஸ்வதி தான்.... " அய்யோ அண்ணே" என்ற அலறலுடன் கோபாலை தாங்கியவள் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவியுடன் வீட்டுக்கு தூக்கி வந்து படுக்க வைக்க... அதற்குள் தகவல் தெரிந்து ஓடி வந்த சுகுனா " என்னய்யா ஆச்சு?" என்று கோபாலின் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு கண்ணீர் விட....

அதற்குள் யாரோ கோபாலின் ஓனருக்கு போன் செய்து தகவல் சொல்லி... அவருக்கு மட்டுமே மான்சியின் நம்பரை கொடுத்திருந்ததால் அவர் மான்சிக்கு தகவல் சொல்லிருக்கிறார்....

வேகமாக ஓனர் காரில் வர, அவர் காரிலேயே சென்னை GH க்கு அழைத்து செல்ல கோபாலை காரில் ஏற்றியுள்ளனர்.... அது வரையில் கோபாலின் பேச்சு தெளிவாக இருந்திருக்கிறது... விநாடி கூட வாய் மூடாமல் மான்சியையும் தன் மகனையும் பற்றியே பேசினான்.... காரில் சுகுனாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தவன்.. அவள் கையைப் பற்றிக்கொண்டு " நான் சாகுறத பத்தி எனக்கு கவலையில்ல சுகு... ஆனா கல்யாணத்தைப் பண்ணி மான்சியோட வாழ்க்கையும் நாசமாக்கிப்புட்டேனே? அந்த புள்ளைக்கு சூதுவாது தெரியாது... ஒலகம் புரியாது.... நான் இல்லாம இனி எப்புடி இருக்குமோ தெரியலையே சுகு?..." என்றவனுக்கு மூச்சு திணறல் அதிகமாக . சுகுனாவின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு ." மான்சி..ய பாத்....து ...க்க ...சு...கு...னா.....,, அவ ரொ...ம்ம்ப.. சின்..ன.. பொண்..ணு... ஒ.... ரு... நநந..நல்..லவனா.... பாத்து.....வாழ்....." இறுதி வார்த்தையை முடிக்காமலேயே கோபாலின் உயிர் சுகுனாவின் மடியிலேயே பிரிய.... சுகுனாவின் கதறல்தான் காரில் தான் ஒலித்தது ....

அதன்பிறகு அதே காரில் அப்படியே கோபாலின் ஊருக்கு வந்துவிட்டார்கள்..... வரும்போதே மான்சியின் ஊருக்கு தகவல் தெரிவித்து விட அங்கிருந்தவர்களும் கூடவே கிளம்பி வந்திருக்கிறார்கள்.... மஞ்சுளாவும்... பன்னீரும் கோபால் ஊருக்குப் பக்கத்தில் தான் என்பதால் அவர்களும் வந்துவிட்டனர்....

தன் கணவன் கடைசி நிமிடம் வரை தன்னைப் பற்றியே தான் பேசினான் என்று தெரிந்ததும் மான்சியின் கதறல் அதிகமானது... " நீங்க இல்லாம நான் மட்டும் ஏன் இருக்கனும்" என்று காட்டுத்தனமாக கத்திக்கொண்டு பெஞ்சில் மோதி தன்னையே காயப்படுத்திக்கொள்ள முயன்றவளை தடுப்பதே பெரும் பாடானது......

மான்சி தன் கணவனின் நினைப்பிலேயே கற்பூரமாய் கரைந்துகொண்டிருக்க.... அவள் பெற்ற அந்த பச்சை மண் யார் மடியிலோ படுத்து பாலுக்காக கத்திக்கொண்டிருந்தது... மான்சியின் அம்மா மகள் வாழ்க்கை நாசமாகப் போனதில் கண்ணீர் விட்டபடி கடையில் வாங்கி வந்த பாலை சங்கில் ஊற்றி பேரனுக்குப் புகட்டினாள்....


நேரம் ஆக ஆக பெண்களின் சத்தமான ஓலமும்... ஆண்களின் மவுனமான கதறலும் அதிகமானது.... கோபாலின் வாழ்க்கை முறை கோனலாக இருந்தாலும்.... அவனது நல்ல குணம் நிறைய பேர் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது,,

சற்றுதள்ளி பச்சை மூங்கிலில் கோபாலுக்கான இறுதிப்படுக்கை தயார் செய்யப்பட்டு பூவால் அலங்காரம் செய்யப்பட்டது.... ஃபேண்டு வாத்தியம் காதை கிழித்தது... துக்கம் தெரியாத சில இளவட்டங்கள் ஒரு ஓரமாக வாத்தியத்துக்கு ஏற்ப டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்....

யாரோ ஒரு விதவை பெண் வந்து மான்சியின் முகத்தில் அரைத்த மஞ்சளை பூசி நெற்றியில் பெரிதாக குங்குமப்பொட்டு வைத்து.. கை நிறைய கண்ணாடி வளையல்களைப் போட்டு தலை நிறைய பூ வைத்து விட்டாள் ... மறுக்க கூட வழியின்றி மான்சி தலை துவண்டு கிடந்தாள்

கணவன் இறந்த துக்கத்தை விட சம்பிரதாயங்கள் சடங்குகள் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகள் தான் கான சகிக்காது... எப்போது மாறும் இந்த வன் கொடுமைகள் என்று கத்த வேண்டும் போல் தோன்றும்...

ஒன்பது குடங்களில் நீர் மாலை எடுத்து வந்து வைத்ததும் கோபால் மேலிருந்த மாலைகள் அகற்றப்பட்டது..... பெஞ்சிலிருந்து தூக்கி உட்கார வைக்கப்பட்டு தலைமாட்டில் ஒருவர் நின்று கோபாலை தன் காலில் சாய்த்து தாங்கிக்கொள்ள... நாவிதன் வந்து கோபாலுக்கு முகச்சவரம் செய்தான்....

பின்னர் மான்சியை கோபாலின் அருகில் அமர்த்தி இருவரின் தலையில் எண்ணை சீயக்காய் வைத்து தேய்த்து தண்ணீர் ஊற்றப்பட்டது.... ஒன்பது குடம் நீரும் இருவருக்கும் மாற்றி மாற்றி ஊற்றப்பட்டது....

கோபாலுக்கு புது சட்டையும் வேட்டியும் போடப்பட்டு புதிதாக இரண்டு மாலைகள் கோபாலுக்கும் மான்சிக்கும் போட்டார்கள்.. மான்சிக்கு மீண்டும் மஞ்சள் பூசி பொட்டு வைத்து பூ வைத்து வளையல் போடப்பட்டது.... இருவரும் எதிரெதிராக திருப்பப்பட்டு கோபாலின் கழுத்திலிருந்த மாலை மான்சி கழுத்துக்கும் .... மான்சியின் கழுத்திலிருந்த மாலை கோபாலின் கழுத்துக்கும் மாற்றப்பட்டது...

மூன்று முறை மாலை மாற்றியதும் யாரோ ஒரு ஆண் குரல் ... " ம்ம் பொறந்த வீட்டுக் கோடி... புகுந்த வீட்டுக்கோடி .. போடுறவங்க சீக்கிரமா வந்து போடுங்கப்பா" என்று கத்தினார்...

கோபாலின் அப்பா வந்து புகுந்த வீட்டு கோடி என்று உரக்க கூறியபடி ஒரு புதுப்படவையை மான்சியின் தலையில் முக்காடாக போட்டார்... கூட்டத்தில் சிலர் ஓங்கி அழும் குரல் கேட்டது

அடுத்ததாக பன்னீர் கையில் புதுப்புடவையுடன் வந்தான்.... எப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவனாக இருந்தாலும் தாலியறுக்கப் போகும் சகோதரிக்கு கோடித்துணி போடும்போது கலங்கித்தான் போவான்... பன்னீரும் வாய் விட்டு அழ முடியாமல் கண்ணீர் விட்டு குமுறியபடி மான்சியின் அருகே வந்தான்

அது வரை சுயநினைவின்றி துவண்டு கிடந்த மான்சி தன்னுடன் பிறந்தவனை கண்டதும் அழுகை அடியாளத்திலிருந்து வெடித்துக்கொண்டு வர... சேரிலிருந்து எழுந்த மான்சி கையெடுத்து கும்பிட்டபடி அண்ணனின் காலில் விழுந்தாள்

" அய்யோ அண்ணா இந்த கோடித் துணி போடவா இத்தனை நாளா எனக்கு ஒரு கந்தல் துணி கூட வாங்கித் தராம இருந்த? இதுக்காவ வந்த? எனக்கு உன் கோடித்துணி வேனாம்ண்ணா... என் புருஷன் தான் வேணும்" என்று பன்னீரின் காலை பிடித்துக்கொண்டு கதறினாள் மான்சி....


பன்னீரும் நெஞ்சு குமுற கையிலிருந்த புதுப்புடவையை விரித்து மான்சியின் தலையில் முக்காடாகப் போட்டுவிட்டு அங்கிருந்து நகர... " அய்யோ அண்ணா,, எனக்கு சாவுக் கோடியும் சேர்த்துப் போட்டுடேன் நானும் அவரு கூடவே போறேன் அண்ணா" என்ற கதறலுடன் மான்சி சரிந்து தரையில் விழுந்தாள்..

அடுத்ததாக நடத்த வேண்டிய சில சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து உறவு கூட்டங்களின் கையில் ஊர் சலவை தொழிலாளி எரியும் நெய் பந்தத்தை கொடுக்க அத்தனை பேரும் நெய் பந்தத்துடன கோபாலை சுற்றி வந்தனர்..

பிறகு பெரும் கூச்சலுடன் கோபாலின் உடல் கட்டி வைத்திருந்த மூங்கில் பாடைக்கு மாற்றப்பட்டது ..... தலைக்கு தலையனை வைத்து உடல் காடாத்துணியால் மூடப்பட்டு நாடாவால் பாடையுடன் சேர்த்துக் கட்டப்பட்டது...

கோபாலின் மூன்று மாத குழந்தை தூக்கிவரப்பட்டு அவன் மீது சிறிது தண்ணீர் தெளித்தனர் பிறகு மண்சட்டியில் இருந்த கொள்ளியை குழந்தையின் விரலால் தொட்டு அதை எடுத்து கோபாலின் அப்பாவிடம் கொடுக்க கூட்டம் முழுவதும் பெரும் கூச்சலுடன் கத்த... சுகுனாவும் சரஸ்வதியும் மான்சியை தூக்கி நிறுத்தி இடுகாட்டுக்கு செல்லும் கோபாலை வழியனுப்ப தயாராக இருக்க ... கோபாலை தூக்கினார்கள்...

தன் தோளில் துவண்டு கிடந்த மான்சியின் கண்ணத்தைத் தட்டி " மான்சி கண்ணை தொறந்து பாருடி .. உன் புருஷனை தூக்கிட்டுப் போறாங்க" என்று சுகுனா கத்த மான்சியின் கண்கள் பட்டென்று திறந்து கொண்டது....

மூன்று சுற்று சுற்றிவிட்டு பாடை நகர.... சுகுனா சரஸ்வதி இருவரையுமே ஆவேசமாக உதறிவிட்டு படைக்கு முன்பு ஓடிய மான்சி கோபாலை நோக்கி கையெடுத்து கும்பிட்டு " என்னையும் கூட்டிட்டுப் போங்களேன் ஏஞ்சாமி... நீங்க இல்லாம எனக்கு வாழத் தெரியாதே அய்யா" என்று கத்தியதும் அந்த ஊரே ஸ்தம்பித்தது... அவளின் கதறல் கண்டு துடித்தது... செய்வதறியாது தவித்தது..... தரையில் விழுந்து புரண்ட மான்சியை நான்கைந்து பெண்களாக சேர்ந்து தூக்கி அப்புறப்படுத்தினர்

கோபாலுக்கு முன்னால் ஒரு கூட்டம் வாத்தியத்துக்கு ஏற்றபடி உற்சாகமாக டான்ஸ் ஆட.... கோபாலுக்குப் பின்னால் ஒரு கூட்டம் கதறிக்கொண்டு அவனை வழியணுப்பியது..

வீட்டுக்கு வந்த பெண்கள் அனைவரும் குளித்துவிட்டு வீட்டை கழுவினர்... பன்னீர் போட்ட முக்காட்டு சேலையை மான்சியின் உடலில் சுற்றி கோபாலின் வீட்டு கூடத்தில் ஒரு மூலையில் மான்சி அமர வைக்கப்பட்டாள்....

வயதான பெண் ஒருத்தி வந்து " இனி ஒம் புருஷனுக்கு காரியம் முடியிறவரைக்கும் இங்கருந்து எழுந்திரிக்கப்படாது... உன் கையால தொட்டு எந்த வேலையும் செய்யக் கூடாது... காருமாதி நடக்குற வரை வெடியக்காலை . மதியம்.. ராவு.. மூனு வேலையும்வெளக்கேத்தி வச்சு அழுவனும் ... காக்காய்க்கு சோறு வைக்காம நீ சாப்பிடக்கூடாது... நெதமும் காலையில எழுந்ததும் குளிச்சு முழுகி மஞ்சள் பூசி பொட்டு வச்சு பூ வச்சுக்கனும்... கருமாதி நடக்குற வரைக்கும் உன் மாமனாரும் உன் அண்ணனும் குடுத்த சேலையை தான் மாத்தி மாத்தி கட்டிக்கனும் " என்று இன்னும் பதினாறு நாட்களுக்கு மான்சி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாள்....

மான்சியின் தாய் மட்டும் அவளுக்கு துணையிருக்க மற்ற ஊர்காரர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்பினார்கள்.... சரஸ்வதி மான்சியை அணைத்து கண்ணீர் விட்டு விட்டு மேலும் எதுவும் பேசி அவளை வருத்த நினைக்காமல் . " காரியத்துக்கு வர்றேன் மான்சி... புள்ளைகள அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்" என்று கூறிவிட்டு கிளம்பினாள்.....




சுகுனா வந்து மான்சியின் அருகில் அமர்ந்தாள்.... மான்சி துக்கம் தாளாமல் தன் கணவன் உயிர்விட்ட சுகுனாவின் மடியில் விழுந்து " அவரு உன் கூடவே இருந்திருந்தா உசுரோட இருந்திருப்பாரு அக்கா... என்னைய கட்டுனாதாலதான் அவருக்கு இந்த கதி... நான் ராசியில்லாத தரித்திரம் பிடிச்சவக்கா" என்று அழுதாள்

தன் மடியில் கிடந்தவளின் கூந்தலை ஆறுதலாக வருடி சுகுனா " அப்படி சொல்லாத மான்சி,, உன்கூட சந்தோஷமாத்தான் வாழ நினைச்சாரு... பொல்லாத விதி அவரை அல்பாயுசுல கொண்டு போயிருச்சு" என்று அவளும் அழுதாள்...

சுகுனாவுக்கு பதிமூன்று வருடமாக சேர்ந்து வாழ்ந்தவனை விட்டுப் பிரிந்த துக்கம்.... மான்சிக்கு இனிமேல் தான் வாழவேண்டும் என்று நினைத்த நேரத்தில் கொண்டவனை பறிகொடுத்த துக்கம்... யார் துயரம் பெரிதென்று கூறமுடியாத நிலைமை.... சுகுனாவுக்கு மகள் மருமகன் பேரக்குழந்தைகள் என கோபாலை மறக்கக்கூடிய விஷயங்கள் ஏராளம்... ஆனால் மான்சிக்கு எந்நேரமும் கோபாலை ஞாபகப்படுத்தக்கூடிய மகனுடன் எப்போது மறக்க முடியாமல் கோபாலின் நினைவிலேயே வாழ வேண்டிய சூழ்நிலை...

இரண்டாவது மகள் பிரசவத்துக்கு வந்திருப்பதால் மான்சியுடன் தங்கமுடியாத நிலை சுகுனாவுக்கு.... அடிக்கடி வருவதாக கூறிவிட்டு அவளும் புறப்பட்டாள்...

மாமனார் மாமியார்... கோபாலின் சகோதரிகள் இருவர் மான்சியின் அம்மா என இவர்கள் மட்டுமே மிச்சமிருந்தனர்.... அந்த வீட்டில் தான் இனி காலம் கழிக்க வேண்டும் என்று மான்சிக்கு புரிந்தது...

நெஞ்சை கசக்கும் கோபாலின் நினைவோடும் மான்சியின் வற்றாத கண்ணீரோடும் பதினைந்து நாட்கள் கழிந்தது.... இடையிடையே சுகுனா இரண்டு முறை வந்து போனாள்

கோபாலின் காரியத்தன்று முதல் நாளே மீண்டும் சென்னையிலிருந்து எல்லோரும் வந்தனர்... சரஸ்வதியும் சுகுனாவும் கூட வந்திருந்தனர்... இன்னும் சில உறவு கூட்டங்களும் வந்து கோபாலின் படத்தை வைத்து வாங்கி வந்த பலகாரங்களை படையல் போட்டனர்

இதோ இன்றோடு மான்சி தன் பூவையும் பொட்டையும் மஞ்சளையும் நிரந்தரமாக துறக்க வேண்டிய நாள்.... பிறந்ததிலிருந்து அவள் உடன் வந்தவற்றை நேற்று வந்து தாலி கட்டி பாதியில் விட்டுச்சென்ற ஒருவனுக்காக முற்றிலும் இழக்கவேண்டிய நாள்...

இரவு பணிரெண்டு மணி கடந்ததும் பெண்கள் கூடி கோபாலுக்கு மீண்டும் ஒருமுறை படையல் போட்டுவிட்டு மான்சிக்கு இறுதியாக ஒருமுறை மஞ்சள் பூ பொட்டு வளையல்கள் என அணுவித்தனர் ... இதுதான் இறுதிஅலங்காரம் என்று கூறி ஒரு விதவைப்பெண் கண்ணாடி எடுத்து வந்து மான்சியிடம் கொடுத்து முகம் பார்க்கும் படி கூறினாள்...

கண்ணீர் வற்றிப்போய் காய்ந்த சருகாக இருந்த மான்சி தனது சுமிங்கலி கோலத்தின் இறுதியை கண்ணாடியில் கண்டாள்.... இந்த பதினாறு நாளில் மான்சியின் அழகு பலமடங்கு கூடியிருந்தது....

இதுதான் கடவுள் பெண்களுக்கு செய்யும் கொடுமை.. கொண்டவனை இழந்து சுமங்கலி கோலத்தை துறக்கும் போதுதான் அந்த பெண்களின் அழகு வியக்கும்படி அதிகரித்து .... அந்த அழகு அவலமாகப்போவதை நினைத்து கண்ணீர் விட வைக்கும் கொடுமை இது....


அதன்பின் மான்சியை கட்டிக்கொண்டு அழுதனர் அனைவரும்... பிறகு ஆண்களும் மற்ற சுமங்கலிப் பெண்களும் அங்கிருந்து அகற்றப்பட்டனர்... அதிகாலை மணி மூன்று.. ஏழெட்டு விதை பெண்கள் மான்சியை பாத்ரூம் அழைத்து சென்று தலையில் தண்ணீரை கொட்ட ... அவள் முகத்தில் இருந்த மஞ்சளும் குங்குமமும் தண்ணீரில் கரைந்தது.... தலையிலிருந்த பூ எடுத்து வீசப்பட்டது... ஈர உடையுடன் அழைத்து வரப்பட்ட மான்சி மூலையில் உட்கார வைக்கப்பட்டாள் ... ரவிக்கைக்குள் இருந்த மாங்கல்யம் எடுத்து மேலே போடப்பட்டது.... எதிரே தட்டில் பால் ஊற்றி வைக்கப்பட்டிருக்க, அருவாள் கொண்டு அறுக்கப்பட்ட மான்சியின் மாங்கல்யம் அந்த பாலில் போடப்பட்டது... பிறகு இரண்டு கையையும் சேர்த்துப் பிடித்து ஒன்றின் மீது ஒன்றாக வைத்து தட்டினார்கள்... மான்சியின் கையிலிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்து பாலில் விழுந்தது... சில கண்ணாடித்துண்டுகள் கையையும் பதம் பார்த்தன ... கால் விரலில் இருந்த மெட்டி... கால் சலங்கை...மூக்குத்தி தோடுகள் என எல்லாம் அகற்றப்பட்டு பாலில் போடப்பட்டது.... ... மான்சி கட்டிய துணி மட்டும் உடலில் மிஞ்ச அமங்கலி ஆனாள்...

பிறகு மான்சியை வீட்டு வாசலுக்கு அழைத்து வந்து வாசலில் நட்டு வைத்திருந்த வாழைமரத்தை வெட்டச்சொன்னார்கள்... பசுவும் கன்றும் வந்து வாசலில் நிற்க... மான்சியில் கையால் அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கப்பட்டு பசுவுக்கு அருகம் புல் கொடுத்து தயிர் சாதம் கொடுக்க சொன்னார்கள் .... மான்சி கொடுத்ததும் பசு சாணம் போட அதை விரலில் தொட்டு இத்தனை நாள் குங்குமம் மிளிர்ந்த மான்சியின் நெற்றியில் பசுவின் சாணத்தை வைத்தார்கள்...


தட்டிலே மை இருக்க.....

தாய் கொடுத்த சீர் இருக்க....

தாய் கொடுத்த சீரிழந்தேன்

நீ தந்த தாலி தானிழந்தேன்

இனி நான் தனி இருந்து என்ன பயனோ ?

புண்ணியரே உன்னை விட்டு

நான் பெண்ணிருந்து என்ன செய்ய ?


இனி என்னை மூளி அலங்காரி

இவள் மூதேவி என்பார்களே

விலங்காத குடிகேடி..

எதிரில வந்தாளே என்பார்களே...

முண்டச்சி முகம் விழித்து..

எல்லாம் தண்டமாய் போச்சு என்பார்களே....

செல்லரித்த பணம் போல...

நான் பயனற்றுப் போனேனே!!!!!


அதன் பிறகு " முடிஞ்சு போச்சு எல்லாரும் வாங்க" என்று குரல் கொடுத்ததும் இதையெல்லாம் கானமுடியாத தூரத்தில் அமர்ந்திருந்த அனைவரும் வீட்டுக்குள் வந்தனர் ... அன்று போலவே கோபாலின் அப்பா புதுப் புடவையை மான்சியின் தலையில் போட இரண்டாவதாக பன்னீர் வந்து புடவை போட்டான்.... கோபாலுடன் அரைகுறை வாழ்க்கை நடத்திய மான்சிக்கு எல்லாம் முடிந்தது ....


இங்கே முறையோடு(?) மான்சிக்கு அனைத்து சடங்குகளும் நடக்க... அதே ஊரின் மற்றொரு மூலையிலிருந்த ஊர் குளத்தில் சுகுனா தலைமுழுகி எழுந்து தனது தலையிலிருந்த பூவை எடுத்து குளத்தில் வீசிவிட்டு... தனது மஞ்சளையும் குங்குமத்தையும் கழுவினாள்... அவளின் முன்னால் புருஷன் கட்டியதாக இருந்தாலும் இத்தனை நாட்களாக கோபாலுக்காகவே சுமந்த தாலியை கழட்டி குளத்தில் போட்டாள் ... மீண்டும் ஒருமுறை நீரில் மூழ்கி எழுந்து வந்தவளை " அக்கா" என்று சரஸ்வதி கட்டிக்கொண்டு அழுதாள்...

" எனக்காக அழாத சரஸூ.... நான் அந்தாளு கூட நிறைவா வாழ்ந்துட்டேன்... ஆனா மான்சி இன்னும் புருஷ சுகத்தையே முழுசா உணராதவ... அவ வாழ்க்கை இப்புடி போச்சேனு அழு சரஸ்வதி" என்றபடி சுகுனாவும் அழுதாள்....

இருவரும் கோபாலின் வீட்டுக்கு வந்தபோது சுகுனாவின் கோலத்தைப் பார்த்து யாரும் அதிரவில்லை ... கோபாலுடன் அவள் வாழ்ந்தது ஊரிறிந்த விஷயமாகிவிட்டதே..... அதனால் எல்லோரும் பரிதாபத்துடன் உச்சுக் கொட்டினர்....

சுகுனா மான்சியைத் தேடிப் போனாள்... மூலையில் முகாடிட்டு அமர்ந்திருந்த மான்சியை கண்டதும் அவளது நெஞ்சு கொதித்தது... பச்சை மண்ணுக்குப் போய் சாஸ்திரம் சம்பிரதாயம்னு சொல்லி வதைக்குறாங்களே என்று அழுதபடி மான்சியை அனைத்துக்கொண்டாள்...

மான்சி நிமிர்ந்து சுகனாவின் கோலத்தைப் பார்த்து " நீயும் அறுத்துட்டியா அக்கா?" என்று அழுதாள்.....

பொழுது விடிந்து கோபாலுக்கான இறுதி காரியம் நடந்தது,, ஐயர் வந்து ஹோமம் வளர்த்தி நடத்தப்பட்டு ... எள்ளும் சாதமும் கலந்து கோபாலுக்கு பிண்டம் வைக்கப்பட்டது....

எல்லாம் முடிந்து அவரவர் கிளம்பி விட மான்சியும் அவள் குழந்தையும் கோபாலின் வீட்டில் மாமனார் மாமியார் ஆதரவில் வாழவேண்டிய நிலை..... சுகுனா தன்னால் முடிந்த போது வருவதாக கூறிவிட்டு சென்றாள்.... சரஸ்வதி எதுவுமே கூறாமல் முந்தானையை வாயில் அடைத்து துக்கத்தை மென்றவாரு சென்று விட்டாள்

மறுநாளில் இருந்து மான்சிக்கு அந்த புதிய வாழ்க்கை பிடிபட்டது.... கழந்தையை கவனித்த நேரம் போக வீட்டு வேலைகளை செய்தாள்.... இவர்களுக்கும் விவசாய நிலம் இருந்ததால் மாமனார் மாமியார்க்கு விவசாய வேலையே சரியாக இருந்தது...

மான்சியின் மாமியார் ஓரளவுக்கு நல்லபடியாகத்தான் நடந்துகொண்டாள்... குடும்பத்துக்கென ஒரு ஆண் வாரிசை தந்த மான்சியின் மீது சிறிதளவு பாசம் இருந்தது..... எப்போதாவது வரும் நாத்தனார்கள் இருவரும் மான்சியிடம் அளவோடுதான் பழகினார்கள்... அதிகமாக பூசிக்கொள்ள வில்லை....

கோபாலின் அப்பாவை பொருத்தவரை புரிந்து கொள்ள முடியாத புதிராக இருந்தார்..... வயதானாலும் உழைப்பின் வீரியம் உடலில் மிளிர நிமிர்வுடன் இருக்கும் அவர் தனக்கான சாப்பாட்டைக் கூட தன் மருமகள் தான் போடவேண்டும் என்பார்...

தன்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரே என்று ரொம்பவே சந்தோஷப்பட்டாள் மான்சி அந்த கிழ நாயின் சுயரூபம் தெரியும் வரை...





No comments:

Post a Comment