Thursday, January 7, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 14

சத்யனை நெருங்கி அவனது கலைந்து கிடந்த கேசத்தை விரல்களால் கோதி சரி செய்தபடி " நகையும் டிரஸூம் அவங்கதான் எனக்கு குடுக்கனுமா? எல்லாமே என்னோடது தானே? நான் ஏன் அதை சீன் போட்டு வாங்கனும்? இப்போ கோபம் நான் நகை போட்டிருக்கதாலயா? இல்ல சின்னராசா தூங்கி விழிக்கும் போது இந்த பொண்டாட்டி பக்கத்துல இல்லைங்கற தாலயா?" மான்சியின் கேள்விகள் நேரடியாக வந்தது

சத்யனின் கோபம் உடனே தனியவில்லை ... இவ நேத்து மாதிரியே பேசி மயக்கப் பார்க்குறா... “ ரெண்டுமே தான் ” என்றவன் அவள் கையை தட்டிவிட்டு “ பணம்.... நகை இதுமேல எல்லாம் ஆசையில்லாம எனக்கு சேவை செய்ய மட்டும் தான் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொல்லாதே மான்சி... நான் நம்பமாட்டேன்” வார்த்தைகள் தேளாக கொட்டியது....



மான்சி சத்யனை ஒரு பார்வை பார்த்து விட்டு கதவு பக்கம் திரும்பி “ வேலு இங்கே வாங்க” என்று குரல் கொடுக்க.... வேலு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் “ வேலு சின்னய்யாவை தூக்கி சோபால உட்கார வைங்க.... பெட்டுக்கு கவர் மாத்தனும்” என்று அதிகாரமாக உத்தரவிட்டாள்....

வேலு தலையை சொரிந்தபடி தயக்கத்துடன் நின்றான்....

“ என்னாச்சு வேலு?” மான்சி கேட்டதும்.... “ இல்லம்மா சின்னய்யா சோபாவுல உட்கார மாட்டார்.... கட்டில்லயும் வீல்சேர்லயும் மட்டும் தான் இதுவரைக்கும் உட்கார்ந்திருக்கார்” என்றான்....

நெற்றி சுருங்க அவனை பார்த்தவள் “ ஏன் அப்படி... வீல்சேர்ல நிமிர்ந்து உட்கார்றவரால சோபால உட்காரமுடியாதா? இனிமேல் பெட்லயே பிரஸ் பண்றது... சாப்பிடுறது இதெல்லாம் கூடாது... மதியமும் இரவும் தூங்க மட்டும் தான் கட்டில்... மிச்சமெல்லாம் உட்கார்ந்து தான்...” என்றவள் சத்யனின் கால்களை சேர்த்து பற்றிக்கொண்டு “ நீங்க தூக்குங்க வேலு” என்று அதட்டினாள்... குரலில் கடுமை ஏறியிருந்தது...

வேலு அவள் அதட்டலுக்கு பணிந்து சத்யனின் அக்குளில் கைவிட்டு தூக்க... இருவரும் சேர்ந்து சத்யனை தூக்கி சோபாவில் உட்கார வைத்தனர்...

இதற்கெல்லாம் சத்யன் எப்போதும் கடுமையாக எதிர்ப்பவன் இன்று அமைதியாக ஒத்துழைத்தான்... அவனுக்குள் ஒரு ஆர்வம்... என்னதான் செய்யப் போகிறாள் என்று..... ஆனாலும் தனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னை டைவர்ட் பண்ணுவதாக தான் எண்ணினான்

சத்யனை உட்கார வைத்துவிட்டு இரண்டு பக்கமும் திண்டுகளை வைத்து முட்டு கொடுத்தவள் “ வேலு நீங்க பெட்டுக்கு கவர் மாத்துங்க... நான் இவருக்கு பிரஸ் பண்ண ரெடி பண்றேன்” என்றதும் வேலு தலையசைத்து விட்டு போக... மான்சி சத்யனிடம் பிரஸை கொடுத்துவிட்டு “ ம்ம் தேய்ங்க.. நான் போய் ஹீட்டர் போட்டுட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு போனாள்...

ஹீட்டர் போட்டுவிட்டு வந்த மான்சி இன்டர்காமில் கீழே சபாபதியை அழைத்து “ மாடிக்கு காபி குடுத்தனுப்ப சொல்லுங்க அங்கிள்... டிபன் இப்போ வேண்டாம் நான் சொன்னதும் அனுப்புங்க” என்று உத்தரவிட்டு விட்டு மீண்டும் சத்யன் அருகில் வந்தாள்... அவன் பல் தேய்த்ததும் வாய் கொப்புளிக்க உதவியவள்.. டவலால் முகத்தை துடைத்து விட... காபி தயாராக வந்தது 

காபி எடுத்து வந்த வள்ளியின் கைகள் நடுங்கியது.... சத்யன் இதுவரை அவன் அறைக்குள் அனுமதித்ததில்லையே?... காபி டிரேயை அவளிடமிருந்து வாங்கிய மான்சி “ வள்ளிம்மா... ரூமை சுத்தமா தொடைச்சு விடுங்க... அந்த பூஜை தாம்பாளத்தை எடுத்துட்டுப் போய் பூஜை ரூம்ல வைங்க” என்றாள்...

காபியை கோப்பையில் கலந்தவள் சத்யனிடம் சர்க்கரையின் அளவு கேட்காமல் கலந்து அவனிடம் நீட்டினாள்.... காபியை வாங்கியவன் “ எனக்கு சுகர் கம்மியா வேனும்” என்றான்..

நிமிர்ந்து பார்த்து சிரித்தவள் “ ம்ம் தெரியும்.... அளவாத்தான் போட்டிருக்கேன்” என்று கூறிவிட்டு தானும் ஒரு கப் எடுத்துக்கொண்டு சத்யன் அருகில் அமர்ந்துகொண்டு காபியை குடித்தாள்....

ஆறேழு மாதமாக படுக்கையிலேயே அணைத்தும் என்று இருந்தவனுக்கு இது கொஞ்சம் வித்தியாசம் தான்... சோபாவில் மனைவியின் அருகில் அமர்ந்து காபி அருந்தவது அதைவிட வித்தியாசமாக இருந்தது...

அறை சுத்தம் செய்யப்பட்டு வள்ளி வெளியேறி விட... வேலு பெட்டுக்கு கவரை மாற்றிவிட்டு அங்கேயே நின்றிருந்தான்... “ வேலு பாத்ரூம்ல இவர் குளிக்க ரெடி பண்ணுங்க” என்று உத்தரவிட்ட மான்சி... சத்யனின் உடைகள் அடுக்கப்பட்டிருந்த கபோர்டை திறந்து அவனுக்கு தேவையான உடைகளை எடுத்து வந்து டீபாயில் வைத்தாள்...

மான்சியை சங்கடமாக பார்த்த சத்யன் “ என்னை பெட்டுக்கு கொண்டு போகச் சொல்லு வயிறு வழிக்குது.... மோஷன் போகனும் ” என்று சிறு குரலில் கூற...

“ அதுக்கு ஏன் பெட்டுக்கு போகனும்” என்றவள் “ வேலு இனிமேல் இவருக்கு பெட்ஃபேன் வைக்காதீங்க... வெஸ்டர்ன் டாய்லட் தானே இருக்கு... தூக்கிட்டுப் போய் உட்க்கார வைக்கலாம்... அதேபோல பெட்டுல படுக்க வச்சு உடம்பு துடைக்காதீங்க பாத்ரூம் உட்கார வச்சு குளிக்க வைக்கலாம்” என்றவள்... சத்யனிடம் திரும்பி “ என்ன நான் சொன்னது உங்களுக்கு ஓகே தான?” என்று கேட்க....

சத்யன் வியப்புடன் இயந்திரமாக தலையசைத்தான்.... மனதுக்குள் தன்னால் உட்கார முடியுமா? வலிக்குமோ என்ற கவலை இருந்தாலும் ... பெட்டிலேயே எல்லாம் என்ற அருவருப்பான நிலைக்கு இந்த வலியைக் கூட தாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணினான்....

மான்சி சொன்னதை உடனே செயல் படுத்தினாள் ... வேலுவும் அவளும் சேர்ந்து சத்யனை தூக்கி டாய்லெட்டில் அமர வைக்க... இடுப்பு மரத்த நிலையில் சத்யனுக்கு அவ்வளவாக வலி தெரியவில்லை.... வேலு சத்யனின் ஷாட்ஸை இறக்கிவிட... சத்யன் அவசரமாக “ மான்சி நீ வெளியே வெயிட் போ” என்றான்....

“ நான் ஏன் போகனும்” என்றவள் “வேலு நீங்க போங்க இனி நான் பார்த்துக்கிறேன்... கூப்பிடும்போது வாங்க ” என்றாள்...

வேலு சத்யனின் பதிலை எதிர்பார்க்காமல் உடனே வெளியேற “ அய்யோ மான்சி ப்ளீஸ் நீயும் வெளிய போ மான்சி” என்று சத்யனின் குரல் கெஞ்சியது...

சிறு சிரிப்புடன் அவனைப் பார்த்தவள் அவன் கூச்சம் உணர்ந்து “ சரி சரி.... நான் கதவுக்கு பின்னாடி நிக்கிறேன்... முடிஞ்சதும் கூப்பிடுங்க” என்றுவிட்டு கதவை லேசாக மூடிவிட்டு வெளியே நின்றாள்.... 


அதன்பின் பாத்ரூமுக்குள் போடப்பட்ட சேரில் சத்யனை அமர வைத்துவிட்டு வேலு போய்விட மான்சி வெண்ணீரில் சத்யனை குளிக்க வைத்தாள்....அவள் விரல்கள் அவன் உடலில் பட்டபோதெல்லாம் சத்யன் கூச்சத்தில் நெளிய “ ஸ்ஸ்ஸ் அசையாதீங்க... அப்புறம் சேர்லேருந்து நழுவிடுவீங்க” என்று அதட்டியபடி குளிக்க வைத்தாள்...

குளித்ததும் உடல் துடைத்து விட்டு... இடுப்பிலிருந்த ஈர டிரவுசரை அவிழ்க்க மான்சி கைவைத்த போது... கையைப் பற்றிய சத்யன் “ ம்ஹூம் வேலுவை வரச்சொல்லு” என்றான்...

அவனை முறைத்த மான்சி “ பொண்டாட்டி நான் செய்யக்கூடாது?... வேலு மட்டும் செய்யலாமா? ” என்றவள் அவன் கையை தட்டிவிட்டு டிரவுசரை அவிழ்க்க பின்புறத்தில் இருந்து வரவில்லை... யாராவது சத்யனை தூக்கிப் பிடித்தால்தான் அவிழ்க்க முடியும்.. இப்போது மான்சியே வேலுவை கூப்பிட ... அவன் வந்து சத்யனை தூக்கி பிடித்து தன்னோடு சாய்த்து நிறுத்த... மான்சி சத்யனின் டிரவுசரை கழட்டி விட்டு கூச்சமின்றி அவன் உடலை சுத்தமாக துடைத்து வேறு உடை மாட்டினாள்...

வேலுவுக்கு என்னவோ கடவுளைப் பார்க்கும் பரவசம்... இப்படியும் ஒரு பெண்ணா? உணர்வுகளை அடக்கி உணர்சிகளுக்கு அடிமையாகமல் ஒரு குழந்தைக்கு தாய் செய்வது போல்.... கணவனுடன் பலகாலம் வாழ்ந்த மனைவிகள் கூட இப்படி செய்வார்களா என்று அவனுக்கு தெரியவில்லை...

தன் கணவனுக்கும் தனக்கும் இடையே வேலு இருக்கிறானே என்ற சங்கடம் இன்றி மான்சி தன் கடமையை காதலோடு செய்ய.... சத்யனும் தனது கூச்சத்தையும் சங்கடத்தையும் விடுத்து அவள் சொல்படி கேட்டு ஒத்துழைத்தான்... ஆனாலும் அவன் மனம் உள்ளுக்குள் ஊமையாக அழுதது... அவன் வெறியுடன் சுகிக்கத் துடித்தவள் இன்று அவனுக்கு ஒரு செவிலியாக பணிவிடை செய்கிறாள்...

வெளியே அழைத்து வரப்பட்ட சத்யனுக்கு இலகுவான ஒரு டீசர்ட்டும் ஜாக்கி டிராக்ஸூம் அணிவித்தாள்... வீல்சேரில் தூக்கி உட்கார வைக்கப்பட்டு டிரஸிங் டேபிள் அருகே அழைத்துச் செல்ல வெகு நாட்கள் கழித்து கண்ணாடி பார்த்து தலைவாரிக் கொண்டவன்... கண்ணாடியில் மான்சியின் முகத்தைப் பார்த்து “ என்ன மான்சி என் கேள்விக்கு பதிலே வரலை?” என்று கேட்க...

குனிந்து அவன் தோளில் தனது தாடையை வைத்த மான்சி “ பதில் சொல்லலைனா நீங்க கேட்ட கேள்வியே சரியில்லைன்னு அர்த்தம்” என்றவள் கைகளை முன்னால் கொண்டு வந்து அவன் டீசர்ட் காலைரை சரிசெய்தபடி “ நகைக்கும் பணத்துக்கும் ஆசைப்படாதவங்க யாராவது இருக்காங்களா? எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் இரக்க சுபாவம் அதோட இவ்வளவு பணக்காரங்க வழிய வந்து கேட்டா மறுக்கவா முடியும்? ... பாதி பரிதாபம் மீதி பணம்... இரண்டும் சேர்ந்து தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்” என்று கூற....

சத்யன் எதுவுமே சொல்லமுடியாமல் அமர்ந்திருந்தான்.... இவன் கூற்றை இல்லை என்று மான்சி மறுத்தால் எதிர்வாதம் செய்யலாம்... இவள் ஒத்துகொள்ளும் போது எப்படி வாதம் செய்வது... ஆனால் மான்சி கூறுவது பொய் என்று அவனுக்குத் தெரியும்... இவள் பணத்துக்காக சம்மதிக்கவில்லை என்று தெரியும்... அதையும் கூட இப்போது சொல்லமுடியாமல் அவன் வாயை கட்டிவிட்டாளே... சற்றுநேரம் கண்ணாடியில் அவள் முகத்தையே பார்த்தவன் பிறகு திரும்பி “ ரொம்ப பசிக்குது மான்சி” என்றான்...




பின்புறமாக இருந்து குனிந்து அவன் உச்சியில் முத்தமிட்ட மான்சி “ இன்னும் ஐஞ்சு நிமிஷம்... நாம கீழே போய் சாப்பிடலாம்” என்றவள் அவன் சேரை கதவை நோக்கி தள்ளிக்கொண்டு போக...

“ கீழேயா? ம்ஹூம் இங்கே கொண்டு வரச்சொல்லு” என்று பிடிவாதமாக மறுத்தான்....

“ ப்ளீஸ்ங்க இன்னிக்கு ஒரு நாள் எல்லார்கூடயும் சாப்பிடலாம்... உங்களுக்கு பிடிக்கலைனா அடுத்த நிமிஷமே இங்கே வந்துடலாம்... ப்ளீஸ் ப்ளீஸ் ” என்று மான்சி கெஞ்சியதும் சத்யன் அமைதியானான்...

வேலுவின் உதவியுடன் லிப்ட் மூலமாக சத்யனை கீழே அழைத்து வந்தாள் மான்சி... வேலு நகர்ந்துகொள்ள மான்சி வீல்சேரை தள்ளியபடி சத்யனை டைனிங் ஹாலுக்கு அழைத்து வந்தாள்...

அங்கே ஏற்கனவே சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த அத்தனை பேரும் திகைப்புடன் எழுந்தே விட்டனர்... ராஜி பரபரப்புடன் மகன் அருகே வந்து “ வா அப்பு” என்று கைகளைப் பற்றிக்கொள்ள... ராஜா மகனின் தோளில் கைவைத்தபடி மான்சியை நன்றியோடு பார்த்தார்...

அவர்களின் பரிவு சத்யனை காயப்படுத்தி விடுமோ என்ற பயத்தில்... அவசரமாக அவர்களுக்கு கண்ஜாடை செய்து விலக சொன்னாள்... புரிந்துகொண்ட ராஜா “ ராஜி வழி விடு அவங்களுக்கு” என்று மனைவியை நகர்த்தி கொண்டு போனார்...

சொக்கலிங்கம் எதுவுமே பேசவில்லை... எதையும் புதிதாக காட்டிக்கொள்ளாமல் சத்யன் அங்கே சாப்பிடுவது வழக்கமான ஒன்று போல் “ வள்ளி மான்சிக்கும் சத்யனுக்கும் தட்டு வை ” என்று குரல் கொடுத்தார்....

டேபிள் அருகே ஒரு சேரை எடுத்துவிட்டு அங்கே சத்யனின் வீல்சேர் நிறுத்தப்பட்டது... அவன் இடக்கையைப் பிடித்துக் கொண்டே அவனுக்கு அருகே மான்சி உரிமையுடன் உட்கார... எல்லோரும் கொஞ்சம் இயல்பானார்கள்.... எதிர் பக்கம் இருந்த சொக்கலிங்கம் ராஜாவிடம் கம்பெனியைப் பற்றி பேசிக்கொண்டே சாப்பிட... ராஜி மகனுக்கும் மருமகளுக்கும் உணவை பரிமாறினாள்....

சத்யன் எந்த உறுத்தலும் இன்றி மெதுவாக சாப்பிட்டான்... ஆனால் மான்சியின் கையை மட்டும் அடிக்கடி பற்றிக்கொண்டான்... அவன் பற்றும் போதெல்லாம் அவன் கை நடுங்குவதை உணர்ந்த மான்சி ... ஒருவேளை ஏதாவது வலியோ என்று வேதனைப்பட்டாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை... எல்லோர் முன்பும் வலிக்கிறதா என்று கேட்பதையே சத்யன் அவமானமாக கருதுவான் என்று அவளுக்குத் தெரியும்....

சாப்பிட்டு முடிந்ததும் சத்யனை ஹாலுக்கு அழைத்து வந்தாள்... அவன் எதிரிலேயே வேலைக்காரர்களுக்கு வேலைகள் சொன்னபடி... அடிக்கடி சத்யனிடமும் திரும்பி ஏதாவது ஆலோசனை கேட்டாள்....
சொக்கலிங்கம் தனது அறையில் இருந்தபடியே எல்லாவற்றையும் மவுனமாக கவனித்தார்... மான்சி எப்பேர்ப்பட்டவள் என்று அவருக்கு முதல் பார்வையிலேயே தெரியுமே?

மான்சி சபாபதியை அழைத்து “ வேலைக்காரங்க வீடெல்லாம் மழை பேஞ்சா கொஞ்சம் ஒழுகுதுன்னு சொன்னாங்க அங்கிள்... அந்த பழைய ஓடுகளை எடுத்துட்டு சிமிண்ட் சீட்கள் வாங்கி போட்டா சரியாவரும்னு நான் நினைக்கிறேன்... நீங்க தாத்தாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அதுக்கு ஆட்களை ஏற்பாடு பண்ணுங்க” என்று அவரிடம் சொல்லிவிட்டு சத்யனிடம் திரும்பி “ ஏங்க சீட் போடலாமா? இல்லை தளம் போட்டே கட்டி குடுக்கலாமா?” என்று கேட்க..


வேலைக்காரர்களுக்கு அங்கேயே வீடுகள் இருப்பதே அப்போதுதான் தனக்கு தெரியும் என்பது போல் விழித்த சத்யன் “ எனக்கென்ன தெரியும் மான்சி... ஆனா கான்கிரீட் தளம் போட்டு கொடுத்தா தேவைப்படும் போது அதுக்கு மேலேயும் ஒரு புளோர் கட்டலாமே” என்று சொல்ல.....

மான்சி “ நீங்க சொல்றதும் சரிதான்.... எதுக்கும் நான் தாத்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வர்றேன்” என்று சொக்கலிங்கம் அறைக்கு போனாள்....

அவர்கள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்த பெரியவர் மான்சி தன் அறைக்குள் வந்ததும் அவரையுமறியாமல் கைகளை கூப்பி கண்கலங்க... மான்சி ஓடி வந்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டு “ ஸ்ஸ்ஸ் என்ன தாத்தா இதெல்லாம்.... நான் எதுவுமே செய்யலை... எல்லாம் தானா நடக்குது” என்றாள்....

“ இல்ல மான்சி சத்யனோட குரல் இந்த ஹால்ல கேட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா? நீ வந்து எல்லாத்துக்கும் உயிர் கொடுத்துட்ட மான்சி” என்றார் ..

மான்சி புன்னகையுடன் அவரை ஏறிட்டு “ தாத்தா அவர் மனசுல தான் ஒரு நோயாளி என்ற நினைப்பு மொதல்ல போகனும்.... அது போய்ட்டா அவர் மனசும் தெளிவாயிடும்....” என்றவள் “ சரி தாத்தா வேலைக்காரங்க வீடு பத்தி உங்க பேரன் சொன்ன யோசனைப்படியே செய்யலாமா?” என்று கேட்க...

“ ம்ம் நடத்தும்மா... அவன் என்ன சொன்னானோ அதன்படி செய்துடு” என்றார் உற்சாகமாக...

மான்சி சிரிப்புடன் தலையசைத்து விட்டு வெளியே வந்து சத்யனுடன் அமர்ந்து “ அங்கிள் பேரன் சொன்ன மாதிரியே செய்யச்சொல்லி தாத்தா சொல்லிட்டார்...” என்றாள்...

அவர் தலையசைத்துவிட்டு சத்யனிடம் விடைபெற்று செல்ல “ மான்சி என் ரூமுக்கு போகலாமா?” என்று சத்யன் கேட்க....

“ இல்லங்க இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே இருந்து மதியம் சாப்பிட்டுட்டு ஒரு வழியா மாடிக்கு போன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று மான்சி சொன்னபோது மறுக்க வேண்டும் என்றுதான் சத்யன் எண்ணினான்... ஆனால் அவன் தலை சரியென்று தான் அசைந்தது....

மான்சி சத்யனை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்... ஏதேதோ பேசியபடி அந்த தோட்டத்தை சுத்தி வந்தாள்... ஒவ்வொரு செடிகளையும் பூக்களையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்... சத்யனுக்குள் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் விலக செல்ல... பூக்களை புன்னகையோடு ரசித்தான்.... அவர்களை பார்த்து விட்டு வரதன் ஓடி வந்தான்... மான்சியை நகர சொல்லிவிட்டு அவன் வீல் சேரை தள்ளியபடி வர மான்சி சத்யனின் அருகில் வந்தாள்...

இத்தனை வருடத்தில் இன்றுதான் அந்த தோட்டத்தை ரசிக்கிறான் சத்யன்.... வரதன் தன் குழந்தைகளை அறிமுகம் செய்வது போல் மரம் செடிகளைப் பற்றியும் அதன் தன்மைப் பற்றியும் சொல்ல சொல்ல சத்யனுக்கு இவ்வளவு இருக்கா என்று வியப்பாக இருந்தது... பாலத்தின் மீது ஏறி நடுவில் நிறுத்தி விட்டு வரதன் கீழே வந்து விட... அந்த செயற்கை நீர்வீழ்ச்சியின் மெல்லிய சாரலை அனுபவித்தபடி இருவரும் அங்கே சற்றுநேரம் இருந்தார்கள்... அங்கிருந்து பார்க்க தோட்டம் பிரமாண்டமாக அழகாக இருந்தது...


மதிய உணவிற்கான நேரம் ஆனதும் தான் இருவரும் வீட்டுக்குள் வந்தார்கள்.... சாப்பிடுவதற்காக சத்யனை அழைத்துச்சென்ற போது அங்கே தண்டபாணியின் குடும்பமும் இருந்தது.... காலையில் முதலிலேயே சாப்பிட்டவர்கள் இப்போது இவர்கள் வரும் நேரத்தில் சரியாக வந்து அமர்ந்திருந்தனர்... சொக்கலிங்கம் ராஜி ராஜா மூவரும் கம்பெனியிலிருந்து இன்னும் வரவில்லை

சத்யன் டைனிங் ஹாலுக்கே அழைத்து வரப்பட்டதும் அவர்களை ஏளனமாக பார்த்த அனு “ என்ன மான்சி அந்த காலத்துல நடக்க முடியாத புருஷனை யாரோ ஒரு பொம்பளை கூடையில தூக்கிட்டு தாசி வீட்டுக்குப் போனாளாம்.... நீயும் அதுபோல உன் புருஷனை இங்க தூக்கிகிட்டு வந்துட்ட... சரி சரி சாப்பிட்டு முடிச்சதும் அப்படியே தூக்கிட்டு அந்த பொம்பளை மாதிரி தாசி வீட்டுக்கும் போயிடேன் ... ஏன்னா சத்யனுக்கு கார்ல்கேர்ள்ஸ்னா ரொம்ப இஷ்டம்... இப்போ எதுவும் செய்ய முடியலைனாலும் சும்மா வேடிக்கையாவது பார்த்துட்டு வருவான்ல” என்று அவள் சொல்ல ஏதோ நகைச்சுவையை கேட்டது போல் தண்டபாணியும் கோமதியும் ஓவென்று கூச்சல் போட்டு சிரித்தனர்....

மான்சி உள்ளுக்குள் நொருங்கினாலும் அதை வெளிக்காட்டாமல் சத்யனின் தோளில் அழுத்தமாக கைவைக்க... அவன் உடலில் ஒரு விரைப்பு “ வா மான்சி மாடிக்கு போகலாம்” இறுகிய குரலில் என்றான் ....

சட்டென்று குனிந்த மான்சி “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு நிமிர்ந்தவள்.... “ நீ சொல்றது சரிதான் அனு ... இவருக்கு கேர்ள்ஸ் ரொம்ப பிடிக்கும் தான்.... ஆனா எனக்கென்னவோ இவரோட அழகையும் கம்பீரத்தையும் பார்க்கும்போது இவர்த் தேடிப்போன பெண்களைவிட இவர்கிட்ட தானா வந்து விழுந்த பெண்கள் தான் அதிகம்னு தோனுது.... ஏன் இதே வீட்டில் இவர் ஒரு முத்தமாவது குடுக்க மாட்டாரான்னு இவர் பின்னாடி நீ அலைஞ்ச கதையெல்லாம் எனக்கும் தெரியும் அனு... ஒருவனுக்கு ஒருத்தியென்று வாழ்ந்து மனைவியை சந்தேகப்பட்டு தீக்குளிக்க வச்ச ராமனைவிட.... கோபியரின் கனவு நாயகனா இருந்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தின கண்ணனைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... அதிலும் அந்த கோபியர் கூட்டத்தில் நீயும் ஒருத்திங்கறத நெனைச்சா எனக்கு சிரிப்பாத்தான் வருது” என்றவள் வாயைப்பொத்திக் கொண்டு உண்மையாகவே சிரித்துவிட....

“ ஏய்...” என்ற கூச்சலுடன் அனு எழுந்துவிட தண்டபாணியும் கோமதியும் மான்சியை எரித்துவிடுவது போல் முறைத்தனர்

மான்சி சளைக்கவில்லை “ அப்புறம் ஒரு விஷயம் புரியலை அனு” என்று புருவம் சுருக்கிய மான்சி “ இவரால எதுவும் செய்யமுடியாது... அதனால வேடிக்கையாவதுப் பார்க்கட்டும்னு சொன்னியே? அது என்ன? இவர் எதை வேடிக்கைப் பார்க்கனும்? எனக்கு நீ சொன்னது புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்லேன் ” என்று மான்சி ஏளனமாக கேட்டாள்...



அனுவின் கோபம் அதிகமானது.... வேகமாக எழுந்து வந்து மான்சியின் எதிரில் நின்று “ என்னடி பிச்சைக்காரி நக்கலாடி.... நொண்டியை கட்டினதுக்கே உனக்கு இவ்வளவு திமிரா ” என்று கேட்க...

அதுவரை அமைதியாக இருந்த சத்யன் “ யாரு பிச்சைக்காரி மான்சியா? நீயா? அவ இந்த மொத்த சொத்துக்கும் உரிமைக்காரி... இனிமே அவகிட்ட கையேந்தும் நீதான் பிச்சைக்காரி” என்றவன்

“ சபாபதி” என்று கத்த... நடப்பதைப் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்தவர் வேகமாக ஓடிவந்து “ சொல்லுங்க தம்பி” என்று பணிவுடன் கேட்க... “ இதென்ன வீடா இல்லை சத்திரமா? நாங்க சாப்பிடுறதுக்கு முன்னாடி இங்கே யாரும் வரக்கூடாது... போகச்சொல்லுங்க இவங்களை” என்று கத்தியவனின் குரல் பங்களா முழுவதும் எதிரொலித்தது...



No comments:

Post a Comment