Saturday, January 23, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 6

உலகம் இயந்திர கதியில் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்க... அவனுக்கு மட்டும் நாட்கள் நத்தையாய் ஊர்ந்தது... நிமிடங்கள் நகரும் நிஜத்தை கூட உணராமல் உயிருள்ள பிணமாய் நடந்து .... நடந்ததை கடந்தும் வர முயன்றான் சத்யன் .... முடியவில்லை அவனால்.... முருங்கை மரத்துப் பசையாய் மனதில் ஒட்டிக்கொண்டு விலக மறுத்தது மான்சியின் நினைவுகள்....

இவனின் சோகம் இவன் வளர்க்கும் காளைகளுக்கும் புரிந்தது போல..... இவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாக மேய்ந்தன காளைகள்.....

இரவில் உறக்கம் தொலைத்த அவன் விழிகள் பகலில் சொருகிக்கொள்ள... அனல்ப்பட்ட புழுபோல் தன்னை சுருட்டிக்கொண்டு கண்மூடினான் சத்யன்
யாரோ தட்டியெழுப்ப திடுக்கிட்டு எழுந்தவன் காளைகளில் ஓன்று அவன் தோளை நக்கிக்கொண்டிருந்தது .... பொழுது சாய்ந்து விட்டதால் காளைகள் அவனை எழுப்பியது.... சத்யன் எழுந்து காளையின் பிடரியை பாசத்தோடு தடவி விட்டு வாய்க்கால் நீரில் முகத்தை கழுவிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்....

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சந்தின் வழியாக காளைகளை ஓட்டிச்சென்று கொட்டடியில் கட்டிவிட்டு .... புழக்கடை வழியாக வீட்டுக்குள் நுழைந்தவன் புதிதாக சிலர் வந்து கூடத்தில் அமர்ந்திருப்பதை குழப்பத்தோடு பார்த்து விட்டு தனது தாயைப் பார்க்க.

பூமாத்தா வாயெல்லாம் பல்லாக சத்யனை நெருங்கி " கண்ணு நம்ம அன்பரசிய பார்க்க வந்திருக்காங்க" என்று தகவல் சொன்னாள்....
சத்யன் பாயில் அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்தான் ... ஐந்து பேர் வந்திருந்தனர்... அவர்களின் பக்கத்தில் சேரில் அமர்ந்திருந்தவன் தான் மாப்பிள்ளை என்று புரிந்தது.... கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தான்.... அன்பரசிக்குப் பொருத்தமாகத்தான் இருப்பான் ... ஆனால் அவளின் ஜாதகம் பொருந்தியதா?

அவர்களைப் பார்த்து நட்பாய் சிரித்த சத்யன் " காபி குடுத்தியாம்மா?" என்று தாயைப் பார்த்து கேட்க...

" ம் குடிச்சிட்டாகப்பா.... நீ வருவே உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு தான் இருக்காக மாப்ள திண்டிவனம் மார்கெட்ல பூக்கடை வச்சிருக்காராம்" என்றாள் பூமாத்தாள........

பையனின் ஜாடையில் மடியில் குழந்தையுடன் இருந்த ஒரு பெண் " எங்கண்ணனுக்கு பொண்ணு பிடிச்சிருக்குங்க... எங்களுக்கும் பிடிச்சிருக்கு.... நீங்க உங்க சவுகரியத்தை சொன்னா கல்யாணத்துக்கு நாள் வச்சிடலாம்" என்றாள் ...

சத்யன் யோசனையுடன் அந்த பெண்ணைப் பார்த்து " ஜாதகம் பார்த்துட்டீங்களா?" என்று கேட்க...

" ம் பார்த்துட்டோம்ங்க... உங்க தங்கச்சிக்கு மூல நட்சத்திரம்னு சொன்னாங்க.... அந்த நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதுனு சொன்னாக..எங்களுக்குப் பிரச்சனை இல்லைங்க ... அப்பா சின்ன வயசுலயே காலமாயிட்டாரு... அம்மா அண்ணன் நான் மட்டும் தான்.... எங்கம்மா மொத மொத வரக்கூடாதுனு எங்களையெல்லாம் அனுப்புனாங்க... உங்க தங்கச்சிய போட்டால பார்த்தே அம்மாக்கு பிடிச்சு போய்தான் எங்களை அனுப்புனாக " அந்தப் பெண் தெளிவாக எடுத்து கூறினாள்...


சத்யனுக்கு மனது அய்யோ என்றது... அடப்பாவிகளா மூனு மாசத்துக்கு முந்தி வந்திருந்தா அன்புக்கு கல்யாணத்தைப் பண்ணிட்டு என் வாழ்க்கையை காப்பாத்தியிருப்பேனே ... ஆற்றாமையால் இதயம் அரற்றியது....
நெற்றியைத் துடைத்தபடி எழுந்த சத்யன் " சரிங்க தங்கச்சியை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்" என்று கூறிவிட்டு பக்கத்து அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்....

புதுப்புடவையில் தலை நிறைய பூவுமாக நின்றிருந்த தங்கையின் முகத்தைப் பார்த்தான்.... அவள் முகமே சொன்னது தனது சம்மதத்தை... இருந்தாலும் ஒரு அண்ணனாய் " என்னா அன்பு... மாப்ளைய பார்த்தியா? புடிச்சிருக்கா?" என்று கேட்க....

நானத்தோடு தலை கவிழ்ந்த அன்பரசி... " ஒனக்குப் பிடிச்சா சரி அண்ணே" என்றாள் சத்யனின் தங்கையாய்....
மூன்று மாதங்கள் கழித்து சத்யன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள்.... " எனக்குப் பிடிக்கலையே? பொண்ணு தரமுடியாதுனு சொல்லி அனுப்பிடவா அன்பு?" என்று கேட்டான்...

திகைப்பு கண்களில் வழிய வேகமாக நிமிர்ந்தவள் .... அண்ணன் முகத்தில் தெரிந்த குறும்பை கண்டு ... " போண்ணா ...... " என்று சினுங்கினாள்
சத்யன் சந்தோசம் முகத்தில் தெரிய வெளியே வந்து அவர்களிடம் தங்கையின் சம்மதத்தை சொன்னான்....

அவ்வளவு நேரமாக லேசான பதட்டத்துடன் அமர்ந்திருந்த மாப்பிள்ளை சன்முகம் சத்யனின் வார்த்தையை கேட்டதுமே முகம் மலர்ந்ததிலிருந்து அவனும் அன்பரசியின் சம்மதத்திற்காகத்தான் காத்திருந்தான் என்று புரிந்துகொள்ள முடிந்தது.......

சத்யன் இயல்பாக அவர்களுடன் அமர்ந்து மற்ற விஷயங்களைப் பற்றி பேசினான்.... எல்லாவற்றிலிம் விட்டுக் கொடுத்துப் போன சன்முகத்துக்காகதான் அன்பரசியை ஆண்டவன் இவ்வளவு நாட்களாக காக்க வைத்தானோ என்று எண்ணினான் சத்யன்....

திருமணத்தேதியை குறித்துவிட்டு சன்முகம் குடும்பத்தினர் சந்தோசமாக விடைபெற .... தங்கைக்கு திருமணம் நிச்சயமானது சத்யனின் மனநிலைக்கு சிறு மருந்தாக ஆனது... மான்சியை எண்ணி எண்ணியே மனதில் இருக்கும் ரணம் சீல் பிடிக்காமல் ஆறவிட ஏகப்பட்ட கல்யாண வேலைகள் அவனுக்காக காத்திருந்தது...

இரண்டு நாட்கள் கழித்து ஊரில் உள்ள பெரியவர்கள் சிலருடன் திண்டிவனம் கிளம்பி சென்று சன்முகத்தின் வீட்டையும் கடையையும் பார்த்தான்.... திண்டிவனம் பஸ்ஸ்டான்டு ரயில் நிலையம் இரண்டுக்கும் நடுவே இருந்த பாலத்துக்கு அடியில் பூக்கடை வைத்திருந்தான் சன்முகம்... நான்கு பேரை சம்பளத்துக்கு வைத்து மாலைகள் கட்டும் அளவுக்கு சற்று பெரிய கடையாகத்தான் இருந்தது...

கடைக்கு வந்தவர்களை பார்த்ததும் சந்தோஷமாக அழைத்து காபி வாங்கி கொடுத்தப் பிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்... திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் ஓட்டு வீடாய் இருந்தாலும் பெரிய வீடாக இருந்தது.... தாயும் மகனும் மட்டுமே வாழும் வீடு என்பதால் வெறிச்சோடிக் கிடந்தது வீடு...

சன்முகத்தைப் போலவே அவன் அம்மாவும் நல்ல மனம் படைத்த பெண்மணியாக அமைதியாக இருந்தாள்.... வந்தவர்களுக்கு திருப்தியாக இருக்கவும் சத்யனைப் பார்த்து " அருமையான இடம் சத்யா... உன் தங்கச்சிய தாராளமா குடுக்கலாம் என்றனர்.. மூன்றாவது மாதமே திருமணம் என்று பேசி முடித்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டனர்


அதன்பின் திருமணத்திற்க்கான ஏற்பாடுகளை செய்தான் .... இரண்டு தங்கைகளுக்கும் ஏற்கனவே நகைகள் செய்து வைத்திருந்ததால் மற்ற சீர் பொருட்களை வாங்குவதிலும் பத்திரிக்கை அடித்து சொந்தங்களுக்கு கொடுப்பதிலும் சத்யனின் பொழுது சரியாக இருந்தது....

மும்முரமான கல்யாண வேலைகளுக்கு மத்தியில் சென்னை சைதாப்பேட்டையில் சிலருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியிருந்ததால் ஒருநாள் அதிகாலையில் சென்னையை நோக்கி கிளம்பினான் சத்யன்....
சென்னையில் தான் மான்சியிருக்கின்றள் என்று சத்யனுக்குத் தெரியும்.... அதுவும் அவன் செல்லும் இடத்தில் தான் இருக்கின்றாள் என்பதும் தெரியும்....

மனம் முழுவதும் பதட்டத்துடனேயே பஸ் ஏறினான் சத்யன்....
சென்னை செல்லும் வரை மான்சி விநாடி கூட அவன் மனதை விட்டு நீங்கவில்லை.... அவளை சந்திக்கும் சந்தர்பம் கிடைக்குமா? அப்படி சந்தித்தால் அதை தாங்கும் சக்தி என் இதயத்துக்கு இருக்கின்றதா?....
சைதாப்பேட்டையின் அடையாளமாக இடிந்து சிதைந்து போன கல்லூரியின் வாசிலில் சற்று உட்கார்ந்து தனது மனதை நிலைப்படுத்திக் கொண்டு பிறகு ஜோதிமாநகர் குடியிருப்பு பகுதிக்கு சென்றான்...

சில வருடங்களுக்கு முன்பு மனிதர்களும் மாடுகளும் மலம் கழிக்க பயன்படுத்திய மைதானமெல்லாம் குடிசைகளாகத் தெரிய... இந்த குடிசை கூட்டத்தில் பத்திரிக்கை வைக்க வேண்டிய வீடுகளை எங்கே தேடுவது என்று குழம்பிப் போனான் சத்யன்

முன்பு கல்லூரியில் வேலை செய்தவர்களுக்கான குடியிருப்பில் ஒரு வீட்டை அடையாளம் தெரிந்தது சத்யனுக்கு... அந்த வீட்டை மையமாக வைத்து விசாரித்தபடி தான் போகவேண்டிய வீடுகளை கண்டு பிடித்து சென்று பத்திரிக்கை வைத்தான்.... இறுதியாக ஒரு வீடு கூவத்தின் கரையோரம்,இருப்பதாக அடையாளம் சொன்னார்கள்.....

சத்யன் அந்த வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்தான்... அவர்களை குடும்பத்தோடு வருமாறு அழைத்து விட்டு கிளம்பியவனை தடுத்தாள் அந்த வீட்டுப் பெண்மணி ...

" சத்யா உன் ஊரு பொண்ணு ஒன்னு இங்கதான் பக்கத்துல இருக்காப்பா... நம்ம வீட்டுலருந்து ஆறாவது வீடு.... மான்சினு பேரு.... அவளுக்கு பத்திரிக்கை குடுக்கலையா?" என்று கேட்டு சத்யனின் தலையில் அந்த சுகமான இடியை இறக்கினாள்....

" மான்சியா? .......... மான்சி இங்கயா இருக்கு?" என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான் சத்யன்

" ஆமாப்பா.... ஆனா இப்ப வீட்டுல இருக்காது... வேலைக்குப் போயிருக்கும்" என்றாள் கூடுதல் தகவலாக....

உள்ளுக்குள் மீண்டும் ஒரு மெல்லிய அதிர்வு ... இதயம் குலுங்கி நின்றது... " வேலைக்குப் போகுதா?" என்று மட்டும் தான் கேட்டான் சத்யன்....

" ஆமாப்பா வேலைக்குதான் போகுது பாவம்.... ***** ஜவுளிக்கடைக் காரங்க வீட்டுல நாய்க்கு சோறாக்கி போடுற வேலை செய்யுது... ஆனா அந்த பொண்ணு ரொம்ப இல்லாதப் பட்டவங்க வீட்டுப் பொண்ணா? போயும் போயும் இவனுக்கு கட்டி குடுத்திருக்காங்களே?" என அந்த பெண் கேட்டதும்...

நாய்களுக்கு சோறு செய்யும் வேலைக்கு மான்சி செல்கிறாள் என்றதுமே சத்யனின் உள்ளம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது... பத்தாக்குறைக்கு அந்த பெண் அடுத்து கூறிய வார்த்தைகள் அவனை பதட்டமடைய செய்ய பதட்டத்துடன் " ஏன் என்னாச்சு? மான்சி புருஷன் அவளை நல்லா தானே வச்சிருக்காரு?" என சந்தேகத்துடன் கேட்க..




" எங்கப்ப? அவன் இதே தெருவுல இருக்குற கல்யாணமான ஒருத்தி கூட பத்து பதினைஞ்சு வருஷமா குடும்பம் நடத்துறான்.... இப்படிப்பட்டவனுக்குப் போய் அந்த பொண்ணை கொடுத்து..... ம்ஹூம் பாவம் இப்ப வயித்துப்புள்ளையோட வேலைக்கு ஓடிகிட்டு இருக்கு... ரொம்ப வைராக்கியமானவ போலருக்கு..... உன் வருமானத்துல சாப்பிடமாட்டேன்னு புருஷன் கிட்ட சொல்லிட்டு வேலைக்குப் போயி சாப்பிடுறா போலருக்கு.... ஆனா கோபாலு இப்பல்லாம் கூத்தியா வீட்டுக்கு அடிக்கடி போறதில்லைனு சொன்னாங்க.... எப்புடியாவது திருந்தி அந்த பொண்ண நல்லா வச்சுகிட்டா சரி" என சரஸ்வதி மூலமாக தனக்கு தெரிந்த விஷயங்களை சத்யனின் காதில் போட்டாள் அந்த பெண்மணி .....

மின்னல் தாக்கியது போல் முகம் கறுக்க ... " அம்மா அந்த பொண்ணுக்கு பத்திரிக்கை வைக்க சொல்லலை சித்தி.... நான் ஊருக்கு கெளம்புறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்...

நெஞ்சம் முழுவதும் நெருஞ்சியாய் மான்சியைப் பற்றிய செய்திகள் குத்தி கிழித்தது.... மண்டைக்குள் ஏதோவொரு பறவை நுழைந்து தனது அலகுகளால் மூளை குத்தி கிளறியது.... தைதாப்பேட்டை பேருந்து நிலையம் வந்தவன் தலைவலி தாங்கமுடியாமல்... மெடிக்கல் ஷாப்பில் ஒரு மாத்திரை வாங்கி பக்கத்து டீக்கடையில் ஒரு டீ வாங்கி போட்டுக் கொண்டான்

கண்ணால் பார்த்தால் கூட கற்பு காணாமல் போய்விடும் என்பதுபோல் நிமிராமல் நடக்கும் என் மான்சிக்கு இப்படியொரு புருஷனா? மான்சியைப் பற்றிய சிந்தனை அவனை மென்று தின்றுவிடும் போலிருந்தது....

தாம்பரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தவன் ..... அப்போது தான் வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கிய மான்சியை கண்டான்.... ஐந்து மாத கருவை சுமக்கும் வயிற்றுடன் உடன் சென்ற சரஸ்வதியுடன் ஏதோ பேசியபடி இவனை கடந்து சென்றாள்.... சென்னையின் அழுக்கு நீர் அவள் அழகை மேலும் செம்மைப் படுத்தியிருந்தது .... மேடிட்ட வயிற்றை முந்தானையால் மூடியபடி இவனை கவனிக்காமல் அழகாக நடந்து சென்றாள் மான்சி.....

பார்த்துவிட்டான் அவனின் தேவதையை ..... இத்தனை நாளாக கண்மூடி தொழுத அவனின் தெய்வத்தை.... அவள் என்னை காணாமல் போனாலும் நான் அவளை கண்டுகொண்டதை யாராவது போய் அவளிடம் சொல்லுங்களேன்? இறைஞ்சியது சத்யனின் மனது... மான்சி கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்....

உயிர்க்கூட்டிற்குள் ஓவென்ற ஓலம் கேட்க அது பேருந்து நிலையம் என்பதையும் மறந்து அவன் விழிகள் கண்ணீரை உகுத்தது.... சிலர் கவனிக்க ஆரம்பித்ததும் அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டான்... அவனை அதிகம் சோதிக்காமல் தாம்பரம் செல்லும் பேருந்து வந்துவிட... யாரோ விரட்டியது போல் முண்டியடித்துக் கொண்டு ஏறினான்....


சத்யன் அன்று இரவு வீட்டுக்கு வரும் வரை .. எப்படி வந்தான் என்றுகூட புரியவில்லை.... வீட்டுக்கு வந்து அன்பரசியின் கல்யாணக்கலை சொட்டும் முகத்தைப் பார்த்ததும் தான் நாம் எங்கே போனோம் என்ன நடந்தது என்று விளங்கியது....அன்பரசி சாப்பாடு பரிமாறியதும் சாப்பிட்டு விட்டு வெளித் திண்ணையில் வந்து படுத்தவனுக்குள் மீண்டும் மான்சி வந்து அட்டைபோல் ஒட்டிக்கொண்டாள்.... அவள் பிள்ளை சுமக்கின்றாள் என்ற எண்ணமே அவனை பாடாய்ப் படுத்தியது...

என் குழந்தை கருவாகி உருவாக வேண்டிய என்னவளின் வயிற்றில் யார் பிள்ளையோ... நினைவே சுடும் மணலாய் ... படுக்கையோ எரிதணலாய் .... கொதிக்கும் படுக்கையை விட்டு எழுந்து நடந்தான்.... நடையின் தூரம் அதிகமானாலும் மான்சியின் நினைவு தந்த நெருக்கும் குறைந்துகொண்டே போனது.... விடியும் வரை விழித்திருந்தவன் விடிந்தபின் நொந்த மனமும் சிவந்த விழிகளுமாக கல்யாண வேலைகளை கவனிக்க சென்றான் ...

ஊமை பேசும் ரகசியமாக சத்யனின் மனது மான்சியின் பெயரை ஓதிக்கொண்டிருக்க..... இன்னொருவனின் மனைவியானவளை எண்ணுவதே இழுக்கு என்று சத்யனின் நேர்மை குணம் இதயத்தின் மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது ... காதல் மனதுக்கும் நேர்மை குணத்துக்கும் கடும் போராட்டம் நடந்தாலும் இறுதியில் சத்யனின் ஊமை காதல் தான் ஜெயித்தது ...

எவன் பொண்டாட்டி ஆனாலும் என் காதலி அவள்,, என்று வீம்பு பிடித்த நெஞ்சு குமுறலோடு நிமிர்ந்து கொண்டது... இப்படி வதைபடுவது கூட சுகமான சித்ரவதையாக தோன்றியது சத்யனுக்கு.... கொஞ்சமாய் அழுத மனது கூட அவளை நேரில் கண்டுவிட்டதும் குமுறிக் குமுறி அழுதது...

சுகமான வேதனை தந்த வலியுடன் அன்பரசியின் கல்யாண வேலைகளை வேகமாக செய்தான்.... ஆனாலும் எங்காவது.... எப்போதாவது வியிற்றில் பிள்ளையை சுமக்கும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்தால் மட்டும் அனுடைய இழப்பின் மதிப்பீடு கடலளவு பறந்து ... வானளவு உயர்ந்து நின்று அவனை ஏளனம் செய்தது..
.
அன்பரசியின் திருமணம்... மாப்பிள்ளை அழைப்பு... வேலையால் கசங்கிய சட்டையைக் கூட மாற்றிக்கொள்ளாமல் ஓடிக்கொண்டிருந்த சத்யனை பிடித்து நிறுத்தி மச்சானுக்காக தான் வாங்கி வந்த உடையை கொடுத்து போட்டுக் கொண்டு வரும்படி கூறினான் சன்முகம்....


சன்முகத்துக்கும் சத்யனுக்கும் ஒரு புரிதல் இருந்தது.... குடும்பத்துக்காக உழைக்கும் சத்யனை சன்முகத்துக்கு பிடித்தது என்றால்....... இளவயதிலேயே சொந்தக்காலில் நின்று குடும்பத்தை காப்பாற்றி வரும் சன்முகத்தின் மீது சத்யனுக்கு மதிப்பு கூடியது...

சத்யனின் பாரத்தை குறைப்பது போல்... " உன் தங்கச்சிக்கு செய்யவேண்டிய சீரை மட்டும் நீங்க செய்ங்க ... கல்யாணத்தை நான் பார்த்துக்கிறேன் " என்ற சன்முகம் திண்டிவனத்திலேயே திருமணத்தை வைத்துக் கொண்டான்

சன்முகம் அன்பரசி திருமணம் நல்லபடியாக முடிந்தது.... தன் மனச்சுமையை மறந்து மகிழ்வுடன் தங்கையின் திருமணத்தை நடத்தினான் சத்யன் ......திருமணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் மறுவீடு வந்தனர்.....

சத்யன் தன் மைத்துனன் என்பதையும் மீறி ஒரு நண்பனாக பழகினான் சன்முகம்.....

இரவு நெருங்க பூமாத்தாள் மகனை அழைத்து " மாப்ளைய கொஞ்சம் வெளிய கூட்டிட்டுப் போய் வா சத்யா" என்று ரகசியமாய் கூற....

சத்யன் ஏதோ புரிந்தவனாக " வாங்க மாப்ள ரோடு வரைக்கும் போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் " என்று அழைத்து சென்றான்......இருவரும் நடக்க ஆரம்பிக்க

" மச்சான் ,, என்னடா இப்புடி கேட்குறான்னு தப்பா நினைக்காதீங்க.... எப்புடிதான் சந்தோஷமா இருக்குற மாதிரி நீங்க காட்டிகிட்டாலும் ஏதோ ஒரு சோகம் உங்க முகத்துல எப்பவுமே இருக்கு மச்சான்.... என்ன பிரச்சனை? கல்யாணத்துக்கு பணம் ரெடி பண்ணதுல ஏதாவது கடன் பிரச்சனையா?" என்று அன்போடு கேட்க.....

தன் முகமே தன்னை காட்டிக் கொடுத்து விட்டதே என்று குமைந்த சத்யன் " அதெல்லாம் இல்ல மாப்ள.... ரெண்டு தங்கச்சிக்கும் நகையெல்லாம் எப்பவோ எடுத்து வச்சிட்டோம்.... சீர் சாமான்கள் வாங்க கூட எங்கயும் கடன் வாங்களை மாப்ள... தமிழரசியோட செயினை அடகு வச்சு சாமானெல்லாம் வாங்கிட்டோம்... இந்த அறுவடையில அந்த செயினை மீட்டுருவேன்...
பணம் பிரச்சனையே இல்ல மாப்ள" என்று சொல்லி சமாளித்தவனை

குழப்பமாகப் பார்த்த சன்முகம்....." வேற என்ன மச்சான் பிரச்சனை?" என்று அழுத்தமாக கேட்க.....

சத்யன் தலை குனிந்தபடி " எந்த பிரச்சனையும் இல்லை மாப்ள.... நீங்க குழப்பிக்காதீங்க" என்றான்....

" சரி நான் இதுக்கு மேல எதையும் கேட்க மாட்டேன்... உங்களுக்கு எப்ப சொல்லத் தோனுதோ அப்ப சொல்லுங்க மச்சான்" என்றான் சன்முகம் நட்புடன் .....


இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்த போது பூமாத்தாள் வெளியவே நின்றிருந்தாள்..... மகனை மட்டும் அழைத்து " சத்யா நானும் தமிழும் சித்தப்பாரு வீட்டுல போய் படுத்துக்கிறோம்... நீ மாப்ளைய உள்ள போக சொல்லிட்டு வந்து சித்தப்பாரு வீட்டு திண்ணையில படுத்துக்க" என்று மெல்லிய குரலில் கூறி விட்டு செல்ல.....

சத்யன் சன்முகத்திடம் " மாப்ள அன்பு உள்ள இருக்கு நீங்க போங்க... நான் சித்தப்பா வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன் என்று கூற....

சன்முகம் சங்கோஜமாய் சத்யனைப் பார்த்து சிரித்துவிட்டு " அதான் உங்க வீட்டுல தனி ரூம் இருக்குதே மச்சான்? பின்ன எதுக்கு எல்லாரும் இன்னொருத்தர் வீட்டுல போய் படுக்கனும்? " என்றான்...

சன்முகத்தின் புரிதல் சத்யனுக்கு ரொம்பவும் பிடித்தது... எங்களின் சந்தோஷத்தை விட உறவுகளின் சஙகடம் தான் பெரிது என்று எத்தனை பேர் எண்ணுவார்கள்.... வெகுநாட்கள் கழித்து சத்யன் சந்தோஷமாக சிரித்து " நீங்க சொல்லுவீங்க சரி... ஆனா உள்ளார இருந்து வர்ற அடிதடி சத்தத்துல எங்களுக்கு தூக்கம் வரனும்ல?" என சத்யன் குறும்பாக கூற....

சன்முகம் போலியாக அதிர்ந்து.... " மச்சான் உங்க தங்கச்சிக்கு கோவம் வந்தா அடிக்குமா?" என பயந்தவன் போல் கேட்க....

சத்யன் இன்னும் வாய்விட்டு சிரித்து.... " ஆமா மாப்ள,, பேரு தான் அன்பரசி ஆனா அவளுக்கு கோவம் வந்தா அடி தாருமாறா விழும்..... எதுக்கும் ஜாக்கிரதையா உங்க குலசாமிய கும்புட்டுட்டு உள்ள போங்க,, அன்புக்கு கோவம் வர்ற மாதிரி நடந்துக்காதீங்க" என்று ஆறுதல் கூறுபவன் போல் சன்முகத்தின் தோளைத் தட்டினான் சத்யன்....

" ம்ம் எங்க குலசாமி சக்தியுள்ளது தான்... என்னை அவரே காப்பாத்தட்டும் " என்ற சன்முகம் மேல் நோக்கி கும்பிட்டுவிட்டு வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே போக ....


சத்யன் இன்னும் சிரிப்பு மாறாத முகத்துடன் திண்ணையில் கிடந்த தனது போர்வையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சித்தப்பா வீடு நோக்கி சென்றான்....

அங்கே அனைவரும் கல்யாண கதையை பேசிக்கொண்டிருக்க " சித்தப்போய் கொஞ்சம் டார்ச்லைட் எடுத்து குடுங்க.... நான் கழனியில போய் படுத்துக்கப் போறேன்" என்றான்

" எதுக்குடா இந்த நேரத்துல" என்று தடுத்த பூமாத்தாவை சமாளித்து... சித்தப்பா கொடுத்த டார்ச்சை வாங்கிகொண்டு கழனிக்கு கிளம்பினான்....

அவன் இருக்கும் மனநிலைக்கு தனிமை வேண்டும்... சில்வண்டின் ரீங்காரம் கூட கேட்காத தனிமை வேண்டும்.... தனது ஊமை காதலை அனுபவிக்க இயற்க்கையும் ஊமையாக இருக்கும் இடம் வேண்டும் அவனுக்கு......அதற்கு கழனிதான் சரியான இடம்.... அங்கே சென்று நிலவை ரசித்தபடி ரகசியமாய் காதலிக்க வேண்டும் அவன் காதலியை....மான்சி இன்னொருவன் மனைவி என்ற அச்சம் அவனை எந்த விதத்திலும் தடுக்கவில்லை .... அன்பரசி சன்முகத்தின் கல்யாணமும் ..... சற்றுமுன் சன்முகத்துடன் இனிமையாய் பேசிய வார்த்தைகளும் சத்யனின் மனதில் கிளர்ச்சியை ஏற்ப்படுத்தியிருந்தது....

சிந்தனையின் ஓட்டத்தைவிட கால்கள் விரைவாக நடைபோட கழனிக்கு வந்து சேர்ந்தான் சத்யன்..... பவுர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்களே என்பதால் நிலவு இரவு சூரியனாய் பிரகசித்தது சத்யன் மோட்டர் ரூமிலிருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து வெளியே வெட்ட வெளியில் போட்டு படுத்தான்....

நிலவும் இரவும் சத்யனை ஒரு மோன நிலைக்கு கொண்டு போனது.... இப்போது மான்சி மட்டும் என்னருகில் இருந்திருந்தால்???????

முதன்முறையாக கண்மூடி கனவில் கட்டியணைத்தான் மான்சியை.... சத்யனின் மார்பில் படர்ந்து ரோமங்களை தனது தளிர் விரல்களால் விரல்களால் அளந்தாள் " நீ கண்மூடி தூங்கு சத்தி நான் உன்னை தூங்க வைக்கிறேன்" என்று மந்திர வார்த்தைகள் பேசி அவன் முகத்தை தன் மார்போடு அணைத்து தலை கேசத்தை வருடினாள்... சத்யனின் நாசியில் ஏதோவொரு மந்திர வாசனை ஏறியது... அவன் விழிகளில் தூக்கம் உறை பனியாக .... மான்சியின் விரல்கள் விடாமல் வருடியது அவனது உடல் முழுவதும் ....... 

மான்சி தன் மேடிட்ட வயிற்றைத் தடவியபடியே படுத்திருந்தாள்... இரவு எட்டு மணியாகியிருந்தது ... கோபால் வரும் நேரம்தான்.... வந்ததும் சாப்பாடு போட்டு விட்டு தூங்க வேண்டும்... இன்று ஏனோ உடல் அசதி அதிகமாக இருந்தது... நாளைக்கு வேலைக்கு வரமுடியாது என்று லீவு சொல்லலாமா? என்று எண்ணியபடி படுத்திருந்தாள்....

இப்போதெல்லாம் கோபால் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுகிறான்தான்... ஆனால் பகலில் சுகுனாவின் வீட்டுக்கு செல்கிறான் என்று சரஸ்வதி சொன்னாள்.... அதுவும் எப்போது மாறுமோ? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள் மான்சி....

கோபால் வீட்டுக்கு டிவி மிக்ஸி எல்லாம் கூட வாங்கி வைத்தான்... மான்சி மறுப்பு தெரிவித்த போது ... " நீ சாப்பாட்டுக்கான செலவை பாரு ... அதுல நான் தலையிடலை... அதேபோல வீட்டுக்கு தேவையானதை நான் வாங்கிப் போட்டா அதுல நீ தலையிடக் கூடாது " என்று விதிமுறை கூறினான்....

மான்சியை இதுவரை கடிந்து ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை .... அதேபோல் மனைவி என்று கொண்டாடவும் இல்லை.... பார்வைக்கு கணவன் மனைவி என்றாலும் கூட ... ஒரு நண்பர்களாய் கூட அன்பை பரிமாறிக்கொள்ள வில்லை இருவரும் ... ரயில் சினேகமாய் ஓடிக்கொண்டிருந்தது அவர்களின் வாழ்க்கை....

கோபாலின் மனதில் என்ன இருக்கிறது என்று மான்சியால் கண்டுகொள்ள முடியவில்லை.... கணவன் என்ற உறவு கொடுத்த மரியாதையும் அன்பும் இருந்ததே தவிர அதை நேசம் என்று எண்ண அவளால் முடியவில்லை...... நேசம் என்பது கோபாலிடமிருந்து வந்தால் தானே இவள் பதில் செய்வாள்... அவன் கிணற்றில் போட்ட கல்லாய் அமைதி காக்க... இவளும் அவனுடைய மாற்றத்துக்காக காத்திருந்தாள்....

ஆனால் சுகுனா மட்டும் எந்த அறிவிப்பும் இன்றி அடிக்கடி மான்சியை வந்து பார்த்து விட்டு ... அன்பாக விசாரித்துவிட்டு போவாள்....

கோபால் கதவை திறந்து உள்ளே வர ... மான்சி தரையில் கையூன்றியபடி தனது ஏழு மாத வயிற்றைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள்

பின்கதவை திறந்து வெளியேப் போய் முகம் கைகால் கழுவிவிட்டு கைலிக்கு மாறியபடி வந்த கோபால் மான்சியின் முகத்தைப் பார்த்து " இன்னா புள்ள டல்லா இருக்க? உடம்புக்கு எதாவது செய்யுதா?" என்று கேட்டான்

" ஒன்னுமில்ல... இன்னைக்கு ஏதோ பந்த் நடக்குதுனு பஸ்லாம் பாதில நிறுத்திட்டாங்க... கொஞ்சதூரம் நடந்து வந்தது ஒரு மாதிரியா இருக்கு" என மான்சி சொல்ல...

சட்டென கோபமான கோபால் " நேத்து நைட்டே சொன்னேன்ல? இன்னைக்கு பந்த்... பஸ் எல்லாம் சரியா ஓடாது... நீ வேலைக்கு போகாதனு சொன்னேன்ல... அதையும் மீறி போய்ட்டு வந்தியா?" என குரலில் கடுமையை ஏற்றி கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றாமல் தலையை குனிந்தாள் மான்சி ....

அவள் முகத்தையேப் பார்த்தவனின் கோபம் குறைந்து விட " சரி நீ எழுந்திருக்க வேனாம் அப்படியே உட்காரு நான் போய் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்றவன் இரண்டு தட்டுகளில் சாதத்தைப் போட்டு குழம்பு ஊற்றி எடுத்து வந்து மான்சியின் எதிரில் வைத்து விட்டு தண்ணீரையும் வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்..

இந்த அனுசரணை தான் சுகுனாவையும் கட்டி வைத்திருக்குமோ? மான்சியின் மனதில் எழுந்த கேள்வியுடன் சாப்பிட ஆரம்பித்தாள்....

இருவரும் சாப்பிட்டதும் கோபால் பாத்திரங்க எடுத்து ஒதுக்கிவிட்டு மான்சிக்கு பாயை விரித்தான் ... மான்சி படுப்பதற்க்கு முன் பாத்ரூம் போகவேண்டும்,என்று தோன்ற... மெல்ல எழுந்து பின்கதவை திறந்து கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்...

யூரின் போய்விட்டு கால்களை கழுவிக்கொண்டு வெளியே வந்தவள் எங்கிருந்தோ பறந்து வந்து கிடந்த பால் பாக்கெட்டின் மீது தனது ஈரமான பாதத்தை வைக்க... வெண்ணை பிசுக்கு உள்ள பால்க்கவர் வழுக்கியது.... சர்ரென்று சருக்கியபடி கூவத்தின் சரிவில் இறங்கிய மான்சி பிடிமானம் எதுவுமின்றி உருண்டுபோய் ஒரு குப்பை குவியலில் மோதி நின்றாள்... அந்த குப்பைக் குவியல் மட்டும் இல்லையென்றால் மான்சி கூவத்தில் கலந்திருப்பாள்....

ஆனால் கை கால்களில் சிராய்ப்பு... ரத்தம் கசியும் வலி .... உடல் முழுவதும் ஒட்டிக்கொண்ட குப்பைகள்..... எங்கோ தொலைவில் நாய்கள் ஊளையிடும் சப்தம் அடிவயிற்றை கலக்கியது... எழுந்து நிற்க முயன்றாள் ... சரிவு என்பதால் முடியவில்லை... கோபாலை கத்தியழைக்க முயன்றாள்... வலியின் காரணமாக முனங்கலாய் வந்தது குரல்....

எப்படி மேலே வருவது என்று புரியாமல் பயந்துபோய் கண்ணீருடன் முனங்கியவளின் குடலைப் புரட்டியது கூவத்தின் நாற்றம்... சாப்பிட்டதில் இம்மி கூட உள்ளே தங்காமல் வாந்தியாக வந்து விழுந்தது ..... இவ்வளவு நேரமாக எட்டிப் பார்க்காத கோபாலின் மீது கோபம் வந்தது ....

தன் மகனை டாய்லட் போவதற்காக அழைத்து வந்த பக்கத்து வீட்டு சரஸ்வதி சரிவில் கேட்ட மான்சியின் முனங்களில் அதிர்ந்து அலறிப்போய் " அய்யோ மான்சி என்று கத்தியபடி இருவீட்டுக்கும் நடுவே இருந்த தடுப்பை தாண்ட முயன்று முடியாமல் மீண்டும் வெளியே ஓடி மான்சியின் வீடு வழியாக உள்ளே வர முயன்றவள் வாசலில் நின்று சிகரெட் புகைத்த கோபாலைப் பார்த்து " அண்ணே மான்சி பள்ளத்துல விழுந்து கெடக்கு போலருக்கு" என்று அலற....

கோபாலுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது... கர்ப்பிணி இருக்கும் வீட்டுக்குள் புகைக்க கூடாது என்று நண்பர் ஒருவர் சொன்னாதால் இப்போதெல்லாம் வீட்டுக்குள் புகைக்காமல் வெளியே வந்துவிடுவது வழக்கம்... அதற்க்குள் இப்படியா?

அதிர்ந்து நின்றவன் சுயநினைவு வந்து உள்ளே ஓட சரஸ்வதி சரிவில் இறங்க முயல்வதை கண்டு " உன்னால முடியாது நீ இரும்மா" என்றவன் வேகமாக சரவில் இறங்கி குத்தங்காலிட்டு அமர்ந்திருந்த மான்சியை தன் கைகளில் தூக்கிக் கொண்டு கவனமாக காலூன்றி மேலே ஏறி வந்தான்....

வீட்டுக்குள் நுழைந்து மான்சியை தரையில் கிடத்தியவன் அவள் இருந்த கோலத்தில் திகைத்து கலங்கிப் போனான்.... வேகமாய் அவள் உடலிலிருந்த குப்பையை அகற்றினான்... சரஸ்வதி ஈரத் துணியை எடுத்து வந்த ரத்தம் கசியும் இடங்களில் துடைத்து விட்டாள்...

சரஸ்வதிக்கு கோபாலின் மீது கடும் கோபம் வந்தது .... " ஏண்ணே என்னதான் பிடிக்காத பொண்டாட்டினாலும் வயித்துப் புள்ளைக்காரினு கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாம போச்சு... இந்த நெலமையில அவளை தனியா பின்னாடி அனுப்பலாமா?.. நீங்கல்லாம் மனுஷனா?" என்று கடுமையாக சாடினாள்...

கோபாலால் பதில் பேசமுடியவில்லை... சோர்ந்து கிடக்கும் மான்சியைப் பார்க்க பார்க்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு " என்ன புள்ள இதெல்லாம்" என்றவன் மேற்க்கொண்டு பேசமுடியாமல் கண்ணீர் விட....

கோபால் மான்சிக்காக விடும் முதல் கண்ணீர்...... அவன் கைகள் மான்சியின் முகத்தை தன் நெஞ்சோடு அணைக்க.... மான்சி அந்த அணைப்பில் நெகிழ்ந்து கண்ணீர் விடும் கணவனை கண்கொட்டாமல் பார்த்தாள்....

சிறுசிறு காயம் தானே தவிர வேறு எதுவும் அடியில்லை என்றாலும் மான்சியை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப் போயிடலாம் என சரஸ்வதி வற்புறுத்த... கோபால் எழுந்துகொண்டு மான்சியை தூக்கினான்....

அவள் புடவையெல்லாம் அழுக்கும் சகதியுமாக இருக்க கோபால் மான்சியை தாங்கிப் பிடிக்க சரஸ்வதி மான்சியின் புடவையை அவிழ்த்து வேறு புடவை கட்டிவிட்டாள் ...

தன்னை அணைத்துப் பிடித்திருந்த கணவனையும் அவன் கண்களில் வழியும் கண்ணீரையும் அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மான்சி....

என்னால் நடக்க முடியும் என்று மான்சி கூறியும் கேட்காமல் கோபால் மான்சியை கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்து தெருவோரம் நிறுத்தியிருந்த தனது ஆட்டோவில் மான்சியை ஏற்றினான் சரஸ்வதி மான்சியின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள .....

கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்தவர்களில் ஒருவரை " டேய் மாப்ள என்னால ஆட்டோவை ஓட்ட முடியாதுடா... வா நீ வந்து வண்டியை எடு " என்று கோபால் அழைக்க அந்தநபர் வேகமாக வந்து ஆட்டோவின் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.....

கோபால் மான்சியின்,அருகில் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள... அவன் கண்ணீர் விழுந்து மான்சியின் கையை நனைத்தது.... கணவனின் சட்டைக் காலரைப் பற்றிக்கொண்டு வாகாக அவன் மீது சரிந்தவள் " எனக்கு ஒன்னுமில்லைங்க... நீங்க அழாதீங்க" என்றாள் மான்சி...
.
கோபால் மான்சியை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.... " என்னை மன்னிச்சிடு புள்ள" என்றவனின் குரலில் கண்ணீர் கசிந்தது...

கணவன் எதற்காக மன்னிப்பு கேட்கிறான் என்று புரியாமலேயே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் மான்சி....... உரிமையோடு!!!!!!!



" காதல் வரவில்லை !

" கவிதைகள் தோன்றவில்லை !

" கதைகள் பேசவில்லை !

" உற்றுக் கூட பார்த்ததில்லை !

" ஆனாலும் உரிமை மட்டும் உரைக்கின்றது!

"உன்மேல் அன்பில்லாமலா????


No comments:

Post a Comment