Tuesday, January 12, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 26

வரதன் குனிந்த தலை நிமிராமல் ஜீப்பில் அமர்ந்திருந்தான்.... இன்ஸ்பெக்டர் அவன் கையில் அடித்த இடத்தில் வலி அதிகமாக இருந்தது... ரத்தம் லேசாக கசிந்து கட்டயிருந்த கைலியில் பட்டது... ஆனாலும் அவன் தனது கையை தொட்டு கூட பார்க்க வில்லை.. முகத்திலும் முதுகிலும் அனுவின் விரல் நகம் பட்ட இடமெல்லாம் வேறு ரத்தம் கசிந்து கறுத்துப் போயிருந்தது... இரவு நடந்ததெல்லாம் மனதில் படமாக விரிந்தது...

அனு இரவே அவள் அம்மா அப்பாவிடம் சொல்லியிருந்தால் அவன் அறைக்கு சென்று படுத்த அடுத்த அரை மணிநேரத்தில் போலீஸ் வந்திருக்கும்... ஆனால் சொல்லவில்லை போலிருக்கு? ஒன்று காலையில் அனு சொல்லிருக்கனும்... இல்லேன்னா இவளை எழுப்ப வந்த அவள் அம்மா கண்டுபிடித்து போலீஸ்க்கு தகவல் சொல்லி வரவழைச்சுருக்கனும்...

போலீஸ் கேட்டவுடன் ஆமாம் என்று தலையசைத்த அனுவின் முகம் ஞாபகத்திற்கு வந்தது... இரவெல்லாம் அழுதிருப்பாளா? முகம் வீங்கியிருந்ததே?

இறுதியாக அவள் கூறிய வார்த்தைகள் இப்போது மனதிற்குள் வலியை ஏற்படுத்தியது... இப்படியொரு கொடுமை செய்ததற்கு அவளை அடித்து கூட திருத்தியிருக்கலாம்.... ஒரு சின்னப்பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிட்டோமே என்று அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வளர்ந்தது... அவன் எண்ணம் முழுவதும் அனுவையே சுற்றிச்சுற்றி வந்தது

கொஞ்சநேரம் புத்தியை கடன் கொடுத்துவிட்ட வேதனை அவன் நெஞ்சை அரித்தது... இனி மான்சி பெரியவர் இன்னும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் முகத்துல எப்படி முழிப்பேன்? பரசுவை நினைத்தவுடன் வரதனின் கண்கள் கலங்கியது... சமீபகாலமாக இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த சகோதர உறவு இதற்குப்பின்னும் நீடிக்குமா? ஆத்திரத்தில் அறிவிழந்து இப்படி எல்லாரோட வெறுப்புக்கும் ஆளாயிட்டேனே?

அனுவுக்கு செய்த கொடுமைக்கான பரிசு போலீஸ் ஸ்டேசனில் தனக்காக காத்திருக்கும் என்று தெளிவாகப் புரிந்தது... அதை முழு மனதோடு ஏற்க தயாராக இருந்தான் வரதன்... தண்டபாணியின் பணம் தன்னை லேசில் விடாது என்றும் அவனுக்குப் புரிந்தது. தன் தவறுக்கான விலை உயிரே ஆனாலும் கொடுக்க தயார் என்று முடிவெடுத்து அமைதியாக இருந்தான்..

ஸ்டேஷன் வந்ததும் அவன் கழுத்தைப் பிடித்து இறக்கி உள்ளே தள்ளிக்கொண்டு போனார்கள் போலீஸ்காரர்கள்... இவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தார் தண்டபாணி.. வரதனின் முகத்தை கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.. வரதனை ஒரு செல்லில் அடைத்து பூட்டிவிட்டு வந்து அமர்ந்த இன்ஸ்பெக்டர் “ சில பேப்பர்ஸ் தர்றேன் உங்க மககிட்ட அதுல கையெழுத்து வாங்கிட்டு வந்து குடுங்க சார்.. உடனே எப்ஐஆர் பைல் பண்ணிடலாம்” என்றார்..

தண்டபாணி சரியென்று தலையசைக்க.. அப்போது அவர் செல் அடித்தது... எடுத்தவர் “ ம்ம் ஸ்டேஷனில் தான் இருக்கேன்... இதோ இருக்கார்” என்றவர் இன்ஸ்பெக்டரிடம் போனை கொடுத்து “ சார் என் ஒய்ப் பேசனுமாம்” என்றார்..

செல்லை வாங்கி இன்ஸ்பெக்டர் “ சொல்லுங்க மேடம்” என்றார்...

“ இன்ஸ்பெக்டர் அவனை சும்மா விடாதீங்க.... அவன் செத்தா கூட பரவாயில்லை வர்ற பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம்... ராஸ்கல் என் மக மேலயே கைவச்சிட்டான்.. சும்மா விடாதீங்க சார்.. நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்களோ அது இரண்டு மடங்கா வந்து சேரும்.. அவனை கிழிச்சு தொங்க விடுங்க ” என்று ஆக்ரோஷமாய் கத்திக்கொண்டிருந்த கோமதியை சமாதானப்படுத்தும் விதமாக...

“ கவலையேப் படாதீங்க மேடம்.... ரெண்டு நாளைக்கு கோர்ட் லீவுதான்... பையலுக்கு நாங்க யாருன்னு காட்டிர்றோம்” என்ற இன்ஸ்பெக்டர் “ மத்ததெல்லாம் சார் கிட்ட சொல்லி அனுப்புறேன் மேடம்” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு தண்டபாணியைப் பார்க்க... 


தண்டபாணி தன் பக்கம் இருந்த ஒரு பைலை திறந்து அதில் ஒரு ஐநூறு ரூபாய் கட்டை வைத்து மூடி இன்ஸ்பெக்டர் பக்கமாக தள்ளிவிட்டு “ சரி சார் இனி நீங்க பார்த்துக்கங்க... நான் கிளம்புறேன்” என்று எழுந்துகொண்டார்

இன்ஸ்பெக்டரும் எழுந்து தண்டபாணிக்கு கை கொடுத்து “ ஓகே சார் நீங்க கிளம்புங்க.. நான் கவனிச்சுக்கிறேன்” என்றபடி டேபிளை சுற்றிக்கொண்டு வெளியே வந்து தனது இடுப்பு பெல்ட்டை உருவிவிட்டு காக்கிச்சட்டையை கழட்டி ஒரு சேரில் மாட்டிவிட்டு வெறும் பனியனுடன் மூலையிலிருந்த தடியை எடுத்துக்கொண்டு வரதன் இருந்த அறைக்குள் நுழைந்தார்....

ஒரு மூலையில் முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் வரதன்.. இரும்பு கதவு திறக்கும் சப்தம் கேட்டதுமே புரிந்துவிட வைராக்கியத்துடன் பற்களை கடித்துக்கொண்டான்... பிரம்பின் முதல் அடி முழங்காலை கட்டியிருந்த கைகளின் மீதுதான் விழுந்தது.. வலி பொறுக்க முடியாமல் “ அம்மா” என்று அடி வயிற்றில் இருந்து முனங்கியபடி கையை எடுத்துவிட்டு பட்டென்று தரையில் சரிந்தான்..

ஷூக் காலால் எட்டி உதைத்து “ என்னடா நாயா ஒரு அடிக்கே சொகுசா படுத்துகிட்ட” என்ற இன்ஸ்பெக்டர் மறுபடியும் பிரம்பை பலமாக அவன் முதுகை நோக்கி வீசியபடி “ எந்திரிச்சு உட்காருடா நாயே” என்றவாறு சரமாரியாக பிரம்பின் அடிகளை இறக்க... கையை சுருட்டி அடிவயிற்றில் வைத்துக்கொண்டு ஒரு பந்தைப் போல தன் உடலை சுருக்கி சத்தமின்றி முனங்கியபடி அடிகளை தாங்கினான் வரதன்....

சற்றுநேரத்தில் அடித்தவனுக்கே கை வலித்துவிட வரதனை அசிங்கமாக திட்டியபடி பிரம்பை மூலையில் வீசிவிட்டு கதவை திறந்து வெளியே போனார் இன்ஸ்பெக்டர்...

அவர் போய் ஐந்து நிமிடத்தில் ஒரு வாளி தண்ணீர் எடுத்து வந்து வரதன் மேல் யாரோ ஊற்றிவிட்டு செல்ல...... பிரம்பால் அடித்த வலியை விட தண்ணீர் ஊற்றியது பயங்கரமாக எரிச்சல் கலந்த வலியை கொடுத்தது... சுருண்டு கிடந்த வரதன் வலியால் துடித்தபடி மல்லாந்து விழுந்தான்... அவ்வளவு அடியையும் வைராக்கியமாக தாங்கியவன் இப்போது முதன்முறையாக கண்ணீர் விட்டான்...

அனு கையெடுத்துக் கும்பிட்டு கதறியது மனக்கண்ணில் வந்து போக “ என்னை மன்னிச்சிடு அனு” என்று வாய்விட்டு முனங்கினான்...

இரண்டு மணிநேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வந்தான் அந்த இன்ஸ்பெக்டர்... இப்போது அவன் கையில் இருந்த பிரம்பு வித்தியாசமாக இருந்தது அதன் முனை நான்காய் கிழிந்துபோய் முழுவதும் எண்ணை தடவி பளபளவென்று இருந்தது... அதன்பின் விழுந்த அடிகள் அத்தனையும் பயங்கர வலியைக் கொடுக்க வரதனின் வைராக்கியம் பொடிப்பொடியானது... அலறித் துடித்தான் வரதன்....

அன்று முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரதனை வதைத்தார்கள்.... வரதனின் உரமிகு உடலாலேயே அந்த சித்ரவதைகளை தாங்க முடியவில்லை... மதியம் மட்டும் புளித்துப்போன தயிர் சாதம் ஒரு பாக்கெட்டும் ஒரு தண்ணீர் பாக்கெட்டும் கொடுக்கப் பட்டது... எழுந்து அமர்ந்து அதை தின்பதற்கு கூட திராணியற்று வீழ்ந்து கிடந்தவனை மறுபடியும் அடித்தே எழுப்பி அமர வைத்து சாப்பிட வைத்தனர்....

செய்த குற்றத்தின் அளவு பெரிது என்பதால் வலியை தாங்கி அடிகளை வாங்கியவன் இறுதியாக “ என்னை ஏதாவது செய்து கொன்னுடுங்க சார்” என்று கெஞ்சினான்...

அவன் கெஞ்சியப் பிறகுதான் பரிதாபம் வந்தது போல... அன்று இரவு அடிகள் இன்றி வலியின் மயக்கத்தோடு உறங்கினான்... 




வீட்டுக்கு வந்த தண்டபாணி தனது மகளின் அறைக்குள் சென்றார்... கட்டிலில் சுருண்டு கிடந்த மகளின் அருகே போய் அமர்ந்தவர் மெல்ல அவள் தலைமுடியை வருடி விட்டபடி “ அவனை போலீஸ் இன்னேரம் நார்நாரா கிழிச்சிருப்பாங்க..... நீ எதையும் மனசுல வச்சுகாம கொஞ்சம் நேரம் தூங்கு அனும்மா...” என்றவர் அதன்பின் எதை பேசுவது என்று புரியாமல் மவுனமாக அமர்ந்திருந்தார்...

அனுவிடமும் எந்த பதிலும் இல்லை கண்களை மூடிக்கொண்டு சுருண்டு போய் கிடந்தாள் அவளது முகம் கல் போல் இறுகி கிடந்தது... வரதன் கொடுத்த வலிகள் உடலில் இன்னும் மிச்சமிருந்தது... அவன் ஆர்வத்தில் கடித்து விட்ட கீழுதடு வீங்கியிருக்க அந்த உதட்டை மடித்து வாய்க்குள் வைத்திருந்தாள்...

அப்போது கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த கோமதி “ என்னாங்க இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? அந்த நாய் செத்துப்போனதும் பார்த்துட்டு வரவேண்டிய தான?” என்று ஆத்திரத்துடன் சீறினாள்...

தண்டபாணி எதுவுமே பேசவில்லை.. சுருண்டு கிடக்கும் மகளையேப் பார்த்துக்கொண்டிருந்தார் ... அவர் இதுவரை செய்த அத்தனைக்கும் காரணம் மகள் நல்லா வாழனும்னு தான்.. ஆனால் அவள் வாழ்க்கை இப்படி சீரழியும் என்று கனவில் கூட எண்ணாதவர்... இப்படி கிடக்கும் மகளை கானப் பொறுக்காமல் கையால் தலையை தாங்கி கவிழ்ந்து இருந்தார் ..

“ இப்போ என்ன குடிமுழுகிப் போச்சுன்னு அப்பனும் மகளும் இப்படியிருக்கீங்க? நாம இப்படியிருந்தா அந்த நாய்களுக்கு தான் இளப்பமா போயிடும்..” என்று கோமதி கத்திக்கொண்டு இருக்கும்போதே அவளை திரும்பிப் பார்த்து அனு.. “ தயவுசெஞ்சு என்னை தனியா விட்டுட்டுப் போங்களேன் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்..

தண்டபாணி அமைதியாக எழுந்து கதவை நோக்கிப் போக.. கோமதியும் வேறு வழியின்றி வெளியேறினாள்...

ஹாலில் பெரியவர் அமர்ந்திருக்க தண்டபாணி அவரை கடந்து செல்லும் முன் சற்று தயங்கி நின்றார்.. நிமிர்ந்துப் பார்த்த பெரியவர் “ இதைப்பத்தியே பேசி பேசி அனுவை மேலும் வேதனைப்படுத்தாதே தண்டபாணி... அவளை தனியா விடு கொஞ்சம் அமைதியா படுத்திருக்கட்டும்” என்றவர் சிலவிநாடிகளுக்குப் பிறகு “ போலீஸ் என்ன சொன்னாங்க?” என்று கேட்க...

“ ரெண்டுநாள் கோர்ட் லீவு.. அவனை போலீஸ் கஸ்டடியில் தான் வச்சிருக்கப் போறாங்களாம்” என்று மட்டும் சொல்லிவிட்டு சோர்ந்த நடையாக தனது அறைக்குப் போனார்

பெரியவர் வேறு எதுவும் கேட்கவில்லை... கேட்கும் மனநிலையிலும் அவர் இல்லை... இப்போது லண்டனில் சத்யனுக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்னும் கண்விழிக்காமல் மயக்க நிலையில் இருந்தான்... இன்னும் இரவுக்குள் அவன் மயக்கம் தெளியவேண்டும்... இரவை கடந்த பிறகுதான் அவன் நிலைமை தெரியும் என்பதால் அதைப்பற்றியே கவலையே அவரை ஆட்டுவித்தது மெல்ல எழுந்து மான்சியின் அறைக்கு சென்றார்...

கம்பியூட்டர் டேபிளின் முன்பு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள் மான்சி... அன்று காலை போலீஸ் வரதனை அழைத்து சென்றதும்தான் பரசு வந்து விட்டிருந்தான்... வந்தவன் தனது மச்சான் பற்றிய கவலையில் மான்சியின் அறையிலேயே முடங்கிவிட... மரகதம் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு கவலையுடன் பேத்தியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்..

பெரியவர் வந்ததும் பரசு எழுந்துவிட ... “ உட்காரு பரசு ” என்றபடி மான்சியின் அருகில் போனார்... “ என்னம்மா ராஜா ஏதாவது சொன்னானா?” என்று கேட்க..


அவரை நிமிர்ந்துப் பார்த்த மான்சியின் விழிகளில் விடியவிடிய கண்விழித்த சிவப்பு.... “ காலையில ஆறு மணிக்கு சொன்னாரே தாத்தா... அதுக்கப்புறம் இன்னும் ஒரு தகவலும் வரலையே? ஆப்ரேஷன் முடிஞ்சு கிட்டத்தட்ட பத்து மணிநேரம் ஆச்சே தாத்தா... இன்னும் அவர் கண்முழிக்கலையே?” என்று அவரிடம் பரிதாபமாக கேட்டபடி கண்ணீர் விட்ட மான்சிக்கு பதில் சொல்லமுடியாது அவரும் கலங்கினார்...

பரசு எழுந்து அக்காவின் அருகில் வந்து “ என்னக்கா அது என்ன சின்ன ஆப்ரேஷனா? உடனே மயக்கம் தெளிய? இவ்வளவு நேரம் இருந்தியே இன்னும் கொஞ்சநேரம் வெயிட் பண்ணுக்கா? மச்சானுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்” என்று தன்னால் முடிந்த ஆறுதலை மான்சிக்கு சொல்லிவிட்டு தரையில் அமர்ந்தான்...

பெரியவரும் அங்கேயே ஒரு சேரில் அமர்ந்து அவர்களுடன் காத்திருந்தார்... மதிய உணவுக்கு கூட யாரும் மான்சியின் அறையை விட்டு அகலவில்லை... சபாபதியின் வற்புறுத்தலால் ஆளுக்கு ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடித்தனர்.... நேரம் ஆகஆக மான்சியின் கண்ணீரும் பெரியவரின் தவிப்பும் அதிகமானது... பரசு அவர்களை ஆறுதல் படுத்தவேண்டும் என்பதற்காக தன்னை அடக்கிக்கொண்டு காத்திருந்தான்....

மாலை சரியாக ஆறு மணிக்கு ராஜாவிடமிருந்து போன்கால் வர... அதை தொடர்ந்து வீடியோ சாட்டில் வந்தார் ராஜா... அவர் முகத்திலிருந்த சந்தோஷமே சத்யனின் நிலையை சொல்லிவிட்டது .. மான்சி ஆர்வமாய் பார்க்க “ சத்யனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு மான்சி... கண்ணை திறந்து பார்த்தான்மா... இனிமேல் அவனுக்கு ஆபத்தில்லைனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க” என்று ராஜா சந்தோஷமாக சொன்னதும்....

அவ்வளவு நேரம் இருந்த மன இறுக்கம் அழுகையாய் வெடிக்க மான்சி முகத்தை மூடிக்கொண்டு ஹோவென்று கதற ஆரம்பித்தாள்... பரசு அவசரமாய் அக்காவை நெருங்கி இருக்கையில் இருந்து தூக்கி கட்டிலுக்கு அழைத்து சென்று உட்கார வைக்கு... மான்சியின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை...

பெரியவர் கம்பியூட்டர் முன்பு அமர்ந்து ராஜாவிடம் மற்ற தகவல்களை கேட்டுக்கொண்டார்.... சிறிதுநேரம் பேசிய ராஜா சத்யனை கண்டுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு மறைந்துவிட... சந்தோஷத்துடன் எழுந்து மான்சியின் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டு ‘ உன் வேண்டுதலும் பிரார்த்தனையும் வீண் போகலை மான்சி... இனி சத்யனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்... படிப்படியா ரெக்கவர் ஆயிடுவானாம்... சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்துல இப்படி அழறியேம்மா?” என்று மான்சியை கேலி செய்ய..

மான்சி வற்றாத கண்ணீருடன் அவரை நோக்கி கைகூப்பியபடி சிரிக்க... “ என்னம்மா இது பைத்தியக்காரப் பொண்ணா இருக்க? நாங்க எல்லாரும் தான் உன்னை கும்பிடனும்” என்றவர் அவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்...

பரசுவுக்கும் சந்தோஷத்தில் கண்ணீர் தான் வந்தது... குழந்தையை தூக்கியவன் “ நீ பிறந்த நேரம் உன் அப்பா அம்மாவுக்கு நல்ல வாழ்க்கையை குடுத்துட்டடா மாப்ள” என்று கொஞ்சினான்..

சற்றுநேரம் வரை அங்கே சத்யனைப் பற்றிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பட்டது... யாரும் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பதால் சபாபதி எல்லோரையும் சாப்பிட அழைத்துச் செல்ல... மான்சி இருக்கும் நிலையில் அவள் டைனிங் ஹால் வரவேண்டாம் என்று அறைக்கே உணவு எடுத்து வரச்சொன்னார் பெரியவர்....


அன்று காலை வரதனை போலீஸ் அழைத்துச் சென்றது கூட மான்சிக்கு மறந்துவிட்டிருந்தது... அவள் நினைவில் சத்யனைத் தவிர வேறொன்றும் இல்லை.. அவள் பெற்ற குழந்தையை கூட மறந்திருந்தவளை மரகதம் தான் அடிக்கடி ஞாபகப்படுத்தி பால் கொடுக்க வைத்தாள்.... மான்சியின் கண்முன் இருந்த அணைத்திலும் சத்யன் தான் தெரிந்தான்... அவனுக்கு குணமாகி அவனுடன் தாம்பத்யம் நடத்தப் போகிறோம் என்ற நினைப்பு அவளுக்கில்லை... சத்யன் பிழைத்துவிட்டான் என்ற செய்திதான் அவளுக்கு தேனாய் இனித்தது... திடீரென்று சிரித்து சந்தோஷமாகி... திடுக்கென்று ஏதோ நினைவில் அழும் தன் அக்காவை கான பரசுவால் முடியவில்லை.. சத்யன் பிழைத்துக்கொண்டான் என்ற சந்தோஷத்தைக் கூட தன் அக்காவால் தாங்க முடியவில்லையே. மச்சானுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால்????? அந்த நினைப்பே பரசுவை நடுங்க வைத்தது... கடவுளை நோக்கி மேலே கையெடுத்துக் கும்பிட்டான்

இரவு எட்டு மணிக்கு மான்சியை சாப்பிட வைத்துவிட்டு தானும் சாப்பிட்ட பரசு .. இரவெல்லாம் கண் விழித்த மான்சியை அவள் அறையில் தூங்க வைத்து மரகதத்தை அங்கே காவல் வைத்துவிட்டு வரதனைத் தேடி தோட்டத்துக்கு வந்தான்...

பரசு தோட்டத்துக்கு செல்வதை கவனித்த சபாபதி அவன் பின்னால் வந்து " என்ன பரசு வரதனை தேடி போறியா? " என்று கேட்க...

" ஆமாம்ங்க... காலையிலருந்து மச்சான் டென்ஷன்ல அண்ணைப் பார்க்கவேயில்லை... ஆனா அவரும் மச்சானைப் பத்தி விசாரிக்க கூட வரலையே?" என்றபடி வரதன் அறை பக்கம் திரும்பியவனை தடுத்த சபாபதி ...

" அவன் இல்லை தம்பி" என்று கூறிவிட்டு இரவு பெரியவர் வரதனை அழைத்து வேலையை விட்டு நீக்கியதில் இருந்து அதே இரவில் அனுவை வரதன் மானபங்கம் செய்தது வரை சொல்லிவிட்டு.... " காலையில கோமதியம்மா போய் மக ரூம்ல பார்த்து அந்த பொண்ணு இருந்த நிலைமையை கவனிச்சு விசாரிச்சி போலீஸ்க்கு தகவல் சொல்லிட்டாங்க பரசு... போலீஸ் வந்து காலையில தூங்கிகிட்டு இருந்த வரதனை கூட்டிப் போய்ட்டாங்க" என்று மொத்த விவரத்தையும் சொல்ல ...

பரசு அதிர்ந்து போய் நின்றிருந்தான்.... வரதன் அண்ணாவா இப்படி? என்ற கேள்வி பூதகரமாக எழுந்து நிற்க்க... கூடவே... இத்தனை நாள் இல்லாம ஏன் திடீர்னு வரதனை வேலையை விட்டு தூக்கனும்.?.. அவரும் ஏன் அனுவை மானபங்கம் செய்யனும்? என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்தது...

தலையில் கைவைத்துக்கொண்டு தோட்டத்து பெஞ்சிலேயே அமர்ந்துவிட்டான் .... வரதனா இப்படி என்ற விஷயத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.... இந்த சில மாதங்கள் பழக்கத்தில் வரதனைப் பற்றியும் பெண்கள் மீதான அவனது மரியாதையைப் பற்றியும் பரசுவுக்கு நன்றாகத் தெரியும்... அப்படிப்பட்ட வரதன் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டது பரசுவுக்கு பல சந்தேகத்தை கிளப்பியது... ஒருவேளை அண்ணனை வேலையை விட்டு நிறுத்த இந்த அனுதான் காரணமா? அதற்காகத்தான் பழிவாங்க இப்படியொரு கேவலத்தை செய்தாரா? என்று எண்ணியவன் ... வெறும் வேலைக்காக. வரதன் இதை செய்திருக்க மாட்டான் என்ற எண்ணம் கூடவே வந்தது ...

இதற்கெல்லாம் பதில் பெரியவரிடம் தான் இருக்கிறது என்று புரிய எழுந்து பெரியவரின் அறைக்கு சென்றான் பரசு...

அப்போதுதான் படுக்கலாம் என்று படுக்கையில் அமர்ந்த பெரியவர் பரசுவின் தாத்தா என்ற குரல் கேட்டு " வா பரசு முழிச்சுதான் இருக்கேன்" என்றார்...

பரசு கதவை திறந்து உள்ளே வர ... படுக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் பரசு அமர ஒரு சேரை காட்டி " உட்கார்ந்து பேசு பரசு" என்றார்...


பரசு மறுக்காமல் உட்கார்ந்தான்.... பெரியவரை நேரடியாகப் பார்த்து " தாத்தா வரதன் அண்ணாவை ஏன் வேலையை விட்டு எடுத்தீங்க? அவர் வேலை போக அனு தான் காரணமா?" என்று கேட்க...

பெரியவர் அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தார் ... பிறகு இரண்டு கேள்விக்கும் ஒரே பதிலாக ஆமாம் என்று தலையசைக்க...

" சரி தாத்தா... ஆனா அனுவை நாசமாக்குற அளவுக்கு அவங்களுக்குள்ள என்ன விரோதம்?..... ஏன்னா எனக்கு வரதன் அண்ணனைப் பத்தி நல்லாத் தெரியும்... அவர் பெண்களை தெய்வத்துக்கு சமமா நினைக்குறவர்... அவரே இப்படியொரு பாதகத்துக்கு துணிஞ்சார்னா காரணம் ரொம்ப பெரிசாத்தான் இருக்கனும் ?.... தயவுசெஞ்சு என்ன நடந்ததுன்னு விளக்கமா சொல்லுங்க தாத்தா" என்று பரசு கேட்டான் ....

பெரியவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.....

" தாத்தா நீங்க என்கிட்ட இதுவரை எதையுமே மறைச்சதில்லை .... இதுல மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம்.?.. வரதன் ரொம்ப நல்லவர் தாத்தா.... என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லுங்க?" என்று கெஞ்சினான் பரசு....

ஒருநநீண்ட மூச்சுடன் நிமிர்ந்த பெரியவர் ராஜாவிடமிருந்து தனக்கு வந்த போன்கால் பற்றி சொல்லி அதனால்தான் வரதனை வேலை நீக்கம் செய்ததாக கூற...

பரசுவின் முகம் கோபத்தில் கொந்தளித்தது... " அப்போ நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த அனுதான் இந்த கேவலத்தை செய்ததா? பொண்ணுக்குப் பொண்ணு இப்படியொரு அநியாயம் செய்ய முடியுமா தாத்தா?" என்று குமுறினான்....

ஒரு சகோதர உறவை கொச்சைப் படுத்திய அனுவை கொலையே செய்யவேண்டும் போல் ஆத்திரம் கிளம்பியது....
வரதனுக்கு அனுதான் அந்த கிராதகினு தெரிஞ்சதால தான் இப்படி பண்ணிருக்காரு என்று தெளிவாகப் புரிந்தது...

அக்காவுக்காக தனக்கே இப்படி கொதிக்கும் போது பாதிக்கப்பட்ட வரதனின் நிலைமையை பரசுவால் புரிந்து கொள்ள முடிந்தது



பெரியவர் எழுந்து வந்து பரசுவின் தோளில் கைவைத்து... " எல்லாம் வெளிய தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம்னு நான் அமைதியா இருந்துட்டேன் பரசு... அதுமட்டுமில்ல சத்யனோட நிலைமையும் மான்சியோட கண்ணீரும் எனக்கு வேற எதையுமே நினைக்கத் தோனலைபா" என்று கூற ...

அவரை கோபமாக நிமிர்ந்துப் பார்த்த பரசு " அதுக்காக ஒரு அப்பாவியை ஜெலிக்கு அனுப்பலாமா? அவர் செஞ்சது தப்புதான் ஒத்துக்கிறேன்... ஆனா அனு செய்த தப்பால என்அக்காவும் மச்சானும் தானே இல்லாம போயிருப்பாங்க? என் மச்சான் நல்லவரா இருந்து என் அக்காவ நம்பினதால எந்த பிரச்சனையும் இல்லாம போச்சு இல்லேன்னா என் அக்காவோச கதி? இல்ல தாத்தா அந்த அனுமேல எனக்கு இரக்கமே வரலை.... அவளை கொலை செய்யனும் போல ஆத்திரம்தான் வருது" என்று கொதித்தபடி எழுந்தவன் கையைப் பற்றிய பெரியவர்..

" கொலையை விட கொடுமையான தண்டனையை அவளுக்கு கொடுத்துட்டான் வரதன்" என்றார்...



No comments:

Post a Comment