Thursday, January 28, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 15

மறுநாள் காலை நான்கு மணிக்கே எழுந்து சாப்பாடு செய்து கொண்டிருந்தனர் கல் உடைக்கும் ஒட்டர் எனப்படும் பழங்குடி இன மக்கள் .... இரவெல்லாம் சிந்தனையின் பிடியில் சிக்கி தூக்கத்தை பழி கொடுத்த மான்சி அதிகாலை புதிய தெளிவுடன் எழுந்தாள்.... கீழே கிடந்த செங்கல் துண்டை எடுத்து தூளாக்கி பல் தேய்த்து பள்ளிக்கூட குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கை கால் கழுவினாள்...

குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு காமாட்சிப் பாட்டியின் வீட்டுக்குப் போய் திண்ணையில் கிடந்த இவளுடைய பாத்திரங்களில் இருந்து கஞ்சி வைக்க ஒரு பாத்திரமும் கஞ்சியை ஊற்றி எடுத்து செல்ல ஒரு தூக்குவாளியையும் எடுத்துக்கொண்டாள்... பாட்டி கண் விழித்துப் பார்த்து " என்னா கண்ணு?" என்று கேட்க...



" கஞ்சி காய்ச்ச ஏனம் எடுத்துட்டுப் போக வந்தேன் ஆயா" என்றாள் மான்சி ...

" அரிசி வச்சிருக்கியா கண்ணு?" என்று பாட்டி கேட்டதும் ..... " இல்ல ஆயா... யாராவது ரேஷன் அரிசி வித்தாங்கன்னா வாங்கி வச்சுக்கனும்... இப்ப கடையில தான் வாங்கனும் ஆயா... நேத்து வேலை செஞ்ச கூலி இருக்கு " என்றாள்

" இந்த மாசம் வாங்குன அரிசி என்கிட்ட அப்புடியேதான் இருக்கும்மா... வேனும்னா வாங்கிக்க" என்று காமாட்சிப் பாட்டி வழி சென்னதும்... மான்சிக்கு சற்று நிம்மதியாக இருந்தது... இல்லேன்னா காலை ஆறு மணிவரை காத்திருந்து கடைக்குப் போய் வாங்கிருக்கனும்...

பாட்டி வைத்திருந்த பத்து கிலோ ரேஷன் அரிசியை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய மான்சி அன்றைய தேவைக்கு மட்டும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை மூட்டையாக கட்டி பாட்டி வீட்டு திண்ணையிலேயே வைத்து விட்டு மீண்டும் குழந்தையுடன் பள்ளிக் கூடத்துக்கு வந்தாள்...

பள்ளிக்கூடத்தின் பின்புறம் மூன்று கற்களை வைத்து பக்கத்தில் பொங்கிய பழங்குடி இனப் பெண்ணிடம் நெருப்பு வாங்கி அடுப்பு மூட்டினாள் .... சுற்றிலும் கிடந்த சருகுகளும் சுள்ளிகளையும் பொருக்கி வந்து அடுப்பில்ப் போட்டு கஞ்சி வைத்தாள்....

பழங்குடிப் பெண் உப்பு கொடுக்க அதை கஞ்சியில் போட்டு கலந்து பாதியை தூக்கில் ஊற்றி வைத்து விட்டு மீதியை பாத்திரத்தோடு அப்படியே குடித்தாள்... அவ்வளவு காலையில் பசியோடு பாத்திரத்தில் இருக்கும் கஞ்சியை மான்சி குடிப்பதை ஒரு ஜோடி விழிகள் கண்ணீருடன் கண்டது...


பள்ளிக்கூட காம்பவுண்ட் சுவரை ஒட்டி நின்று மான்சி சாப்பிடுவதை கசங்கிய இதயத்தோடு சத்யன் பார்த்துக் கொண்டிருந்தான்.... அதிகாலை டீ கடைக்குப் போனவனின் காதில் முதலில் விழுந்த செய்தியே மான்சி வீட்டிலிருந்து துரத்தப் பட்டு நடுத் தெருவில் கிடந்ததும்.. பிறகு அடைக்கலம் தேடி பள்ளிக்கூடம் சென்றதும் தான்... காசு கொடுத்து வாங்கிய டீ விஷம்போல் தெரிய குடிக்காமல் அப்படியே வைத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தவன் மறைவில் நின்று மான்சியைப் பார்த்தான்....

முதல்நாள் பட்டினியால் தான் இவ்வளவு காலையில் கஞ்சி குடிக்கிறாள் என்று சத்யனுக்குப் புரிய கண்கள் கசிந்தன... என் மான்சிக்கு மட்டும் ஏனிந்த நிலைமை? விடை தெரியா கேள்வியை கடவுளின் முன் வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்றான் சத்யன்

மான்சிக்கு எந்த விதத்திலும் உதவ முடியாத தனது ஈன நிலையை எண்ணி இதயமும் சேர்ந்து கண்ணீர் விட்டது... இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவ நினைத்தால் நிச்சயம்,ஏற்கமாட்டாள் என்பதோடு அல்லாமல் இவன் முன்பு இழிந்து விட்டோமே என்று நொந்து போவாள் என்றும் சத்யனுக்குப் புரிந்தது....

ஆனாலும் எதாவது செய்யனும்... மான்சி இருக்க இடமாவது தேடிக் கொடுக்கனும்.... மலையில் கல் உடைக்க வந்த மக்கள் வேலை முடிந்து போய்விட்டால் பிறகு மான்சி தனியாக இங்கே இருக்க முடியாது.... அதற்குள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்... ஆனால் நான் நெருங்கினாலே நெருப்பாகி விடுவாள்... என்ன செய்வது?

சத்யனின் மனதில் சட்டென்று ஏழுமலையின் ஞாபகம் தான் வந்தது ... அவன் மட்டும் தான் மான்சிடம் சகஜமாக பேசுவான்.... தூரத்து உறவில் மான்சிக்கு தம்பி முறை உள்ளவன்.... அது மட்டுமல்ல மான்சி சத்யன் இருவரின் கடந்த காலத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்த ஒரே நபர்... காய்சல் காலத்தில் இவர்களுடன் அவனும்தான் மாடுகள் மேய்க்க வருவான்... மவுனமாக இவர்கள் வந்தாலும் இவர்களின் மனது ஆயிரம் கதைகள் பேசிக்கொள்வதை யூகித்தவன் ஏழுமலை... டவுன் ஸ்வீட் ஸ்டாலுக்கு வேலைக்குப் போய் விட்டதால் இப்போதெல்லாம் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை....

சத்யன் அவசரமாக ஏழுமலையின் வீட்டை நோக்கி ஓடினான்.... ஏழுமலையின் அம்மா தெருவுக்கு சாணி தெளித்துக் கொண்டிருந்தாள்... சத்யனை கண்டதும் " என்னா மருமகனே இம்பூட்டு காலையிலயே வந்திருக்க? யார பாக்கனும்?" என்று கேட்க...

" சும்மா ஏழுமலைய பாக்கலாம்னு வந்தேன் அத்தை... இன்னும் தூங்குறானா?" என்றபடி குனிந்து வீட்டுக்குள் நுழைந்தவன் ஏழுமலை பல் தேய்ப்பதை பார்த்ததும் அவனை நெருங்கி ... "ஏழுமலை கொஞ்சம் பேசனும்டா வெளிய போகலாமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்...


அவனை அவ்வளவு காலையில் எதிர்பார்க்காத ஏழுமலை " இரு மாமா இதோ வர்றேன்" என்று முகத்தை துடைத்துக் கொண்டு வந்தான்...

இருவரும் மலையின் அடிவாரத்தில் ஓரமாக நடந்தபடி " ஏழுமலை எனக்கு வேற வழி தெரியலை... இதைப் பத்தி யார்கிட்டயும் பேசவும் பயமாருக்கு... யாரும் மான்சியை தப்பா நினைச்சிட கூடாதேனு தான் உன்னைய தேடி வந்தேன்" என்று சத்யன் ஆரம்பிக்கும் போதே ...

"நடந்தது எனக்கும் தெரியும் மாமா.... நைட் பஸ்விட்டு இறங்குறப்பவே ரோட்ல பேசிகிட்டாங்க.... இப்ப அக்காவ பார்க்க போகலாம்னு தான் சீக்கிரமா எழுந்திரிச்சேன்" என்றான் ஏழுமலை...

நெஞ்சு வேதனையில் அடைக்க தலை குனிந்த சத்யன் " அன்னைக்கு நான் சுயநலமா யோசிச்சதால தான் இன்னைக்கு மான்சிக்கு இந்த நிலைமை.... எப்புடி வாழ வேண்டியவளுக்கு இன்னைக்கு வீதியில சோறு பொங்க வேண்டிய நிலை.... இப்பல்லாம் என்னையப் பாத்தாலே நெருப்பு மாதிரி ஆயிடுறா.... என்னால அவகிட்ட கூட நிக்க முடியலை ஏழுமலை... ஆனா பள்ளிக் கூடத்துல இருக்குறவங்க போய்ட்டா மான்சி அங்க தனியா இருக்க முடியாது... அதுக்குள்ள எங்கயாவது குடிசை கட்டிகிட்டு போயிடனும்... அவ நெனப்புல என்ன இருக்குனு தெரியலை... நீ போய் என்ன ஏதுனு விசாரி ஏழுமலை நான் போய் அவ அப்பனைப் பார்த்து பேசிப் பாக்குறேன்" என சத்யன் சொல்ல...

" சரி மாமா நான் போய் பேசுறேன்" என்று நகர்ந்தவனை " ஏழுமலை கொஞ்சம் இரு" என்று கூறி அருகில் வந்த சத்யன் .... " அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி பெரிய மலை அடிவாரத்துல எல்லாரும் புரம்போக்கு மனை மடக்குனாங்க.... அங்க மான்சியும் கூட ஒரு இடம் புடிச்சு கல்லு நட்டு வச்சிட்டு வந்தா.... எங்க ரெண்டு பேர் மனையும் பக்கத்து பக்கத்துலதான்.... இப்ப அங்க நாலஞ்சு பேர் வீடு கட்டி இருக்காங்க... மான்சியையும் அந்த இடத்துல குடிசை போட சொல்லு.... பணம் அவ கிட்ட இருக்காது.... நான் ஒரு பத்தாயிரம் தர்றேன் நீ உன் ஓனர் கிட்ட கடன் வாங்கினதா குடுத்து குடிசை கட்ட சொல்லு ஏழுமலை, நான்உன்னைப் பாத்து பேசினது அவளுக்குத் தெரிய கூடாது... நீயா யோசனை சொல்லு ஏழுமலை... மான்சி என்ன சொல்றானு கண்டுகிட்டு வா... நான் பஸ் ஸ்டாப்பு பக்கத்துல வாராபதில உட்கார்ந்திருக்கேன்" என்ற சத்யன் சோர்ந்த நடையுடன் செல்ல.... அவனையேப் பார்த்த ஏழுமலையின் கண்கள் கூட கலங்கியது... ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா இந்த மனுஷன் மான்சி அக்காவை உள்ளங்கையில வச்சு தாங்கிருப்பாரு... ஆனா ரெண்டு பேருமே குடும்பத்தை மட்டும் நெனைச்சதால இன்னைக்கு ஆளுக்கோரு திசையில நிக்கிறாங்களே? வேதனையுடன் மான்சித் தேடி சென்றான் ஏழுமலை...


கஞ்சி செய்த பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு மறைவாக திரும்பி குழந்தைக்கு பால் கொடுத்தக் கொண்டிருந்த மான்சி ஏழுமலை வருவதை பக்கவாட்டில் பார்த்து விட்டு முந்தானையை இழுத்து முழுவதுமாக மூடிக்கொண்டு " என்னா ஏழுமலை நான் இங்க இருக்குறேன்னு யாரு சென்னா?" என்று சிறு புன்னகையுடன் கேட்க...

திண்ணையில் ஏறி அமர்ந்த ஏழுமலை " ஆமா பெரிய சிதம்பர ரகசியம்... தெரியாமப் போறதுக்கு? அதான் ஊரே பேசி சிரிக்குதே உன் அண்ணன் வகுசிய,, மனுசனா அவன்லாம்? இந்த மாதிரி பொண்டாட்டிக்குப் பயந்தவனை நான் எங்கயுமே பாக்கலை?" என்ற ஏழுமலை வாய்க்கு வந்தபடி பன்னீரையும் மஞ்சுளாவையும் திட்டித் தீர்த்தான்...

குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த மான்சி " விடு ஏழுமலை... இத்தனை நாளா அவங்களுக்கு உழைச்சிப் போட்டேன்.. இனி என் புள்ளைய காப்பாத்த உழைக்கப் போறேன்... எங்காத்தாப்பனுக்கு தவமிருந்து பெத்த ஒத்தப் புள்ளைய விட்டுட்டு எனக்குப் பரிஞ்சி பேச பயம் ... நாளைக்கு அதுக செத்தா கொள்ளிப் போடப்போறது அவன் தான? பொட்டச்சி நானு ஒப்பாரி வைக்கிறதோட முடியப்போகுது... யார் யாரு எப்புடினு தெரிஞ்சுக்க ஆண்டவன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுத்துருக்கான் அவ்வளவுதான் ஏழுமலை" என்று மான்சி இலகுவாக பேசினாள்



இரவு முழுவதும் பசியோடு கூடிய சிந்தனை வாழும் வேகத்தையும் வாழ்க்கையின் மிச்சத்தையும் அவளுக்குத் தெளிவுப் படுத்தியிருந்தது...

நிமிர்வுடன் பேசிய மான்சியை வியப்புடன் பார்த்த ஏழுமலை " சரிக்கா,, இங்கயே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?.... உனக்குனு தங்க ஒரு இடம் வேனுமே அக்கா?" என்று மெதுவாக ஆரம்பிக்க...

" அதுக்குதான் சித்த முந்தி உன்னையப் பாக்க வரலாம்னு இருந்தேன் ஏழுமலை" என்று மான்சி கூறியதும் ..... ஏழுமலைக்கு திக்கென்றது.... நல்லவேளை வந்திருந்தா மாமாவையும் என்னையும் சேர்த்து பார்த்துட்டு திரும்பிருக்கும்,, என்று எண்ணியபடி " சொல்லுக்கா நான் என்ன செய்யனும்?" என்று கேட்டான்....

" ஏழுமலை பெரிய மலை அடிவாரத்துல நாமெல்லாம் இடம் மடக்குனமே? அங்க எனக்கும் ஒரு இடம் இருக்கு..... அந்த இடத்துல ஒரு குடிசைப் போட்டுகிட்டு அங்கப் போயிடலாம்னு இருக்கேன் ... அது விஷயமா தான் உன்னையப் பாக்க வந்தேன் ஏழுமலை" என்று மான்சி கூற ...

சத்யன் கூறிய அதே விஷயத்தை மான்சியும் கூற... இதுபோல் ஒத்த சிந்தனையுடைய இவங்க ரெண்டு பேரையும் ஏன் பிரிச்சி வச்ச ஆண்டவா? என்று கடவுளையே சபித்தான் ஏழுமலை...


" சரிக்கா நல்ல யோசனைதான்... அங்கயும் இப்ப நாலஞ்சு வீடுக வந்துருச்சு.... அந்த பிசாசு கூட இனி எப்பவுமே ஒரே வீட்டுல வாழ முடியாதுக்கா.. நீ ரெடி பண்ணு ... நான் என் ஓனர் கிட்ட கடனா கொஞ்சம் பணம் வாங்கித் தர்றேன் ... அதுல வீட்டைக் கட்டு... அப்புறமா கூலிக்கு செஞ்சு கடனை கொஞ்சம் கொஞ்சமா திருப்பி குடுத்துடு அக்கா" என்று சத்யன் சொல்லச் சொன்ன பொய்யை பக்குவமாக சொன்னான் ஏழுமலை...

அவனையே உற்றுப் பார்த்த மான்சி " ஏன் தம்பி அந்த அண்ணிகாரி ஏற்கனவே என்மேல இல்லாத பழி எல்லாம் சொல்லிருக்கா.... இப்ப உன் ஓனர்கிட்ட எனக்கு பணம் வாங்கி குடுத்தேன்னு வை... அவரையும் எனக்கு புருஷன் சொல்லுவா.... என்னால அந்த நல்ல மனுஷனுக்கு ஏன்டா கெட்ட பேரு ... யார்கிட்டயும் பத்து பைசா கையேந்த வேணாம் " என்றவள் தனது உழைப்பில் வாங்கி காதில் போட்டிருந்த தோடுகளை கழட்டினாள்... பிறகு கோபால் தன் மகனுக்கு வாங்கிப் போட்டிருந்த குழந்தையின் இடுப்பில் இருந்த வெள்ளிக் கொடியையும் கால் கொலுசையும் கழட்டினாள் ... எல்லாவற்றையும் சேர்த்து ஏழுமலையிடம் நீட்டி " என் தோடு கால் பவுன் ... வித்தா அஞ்சாயிரம் தேறும்... பிள்ளையோட கொடியும் கொலுசும் வித்தா அஞ்சாயிரம் தேறும்... குடிசை கட்ட அது பாத்தாதுதான்.. ஆனா கூலிக்கு ஆள் வைக்காம நானே ராவும் பகலும் கஷ்டப் பட்டா இந்த பணம் போதும் ... நீ இதையெல்லாம் வித்து பணமாக்கி.... பக்கத்து ஊர் சந்தையில ஒரு கடப்பாரையும். மம்டியும்.. மண் அள்ள ரெண்டு இரும்பு கூடையும் மட்டும் வாங்கிட்டு வந்து குடு.. குழந்தைய வச்சுகிட்டு என்னால அலைய முடியாது... நீ பஸ்க்கு சாப்பாட்டுக்கு இதுலருந்து காசு எடுத்துக்க ஏழுமலை" என்று மான்சி சொல்லி முடிக்க...

ஏழுமலைக்கு அழுகையை அடக்குவது கஷ்டமாக இருந்தது.... குடிசையாக இருந்தாலும் அதுக்கும் கடக்கால் தோண்டனும் ... தோண்டிய பள்ளத்தில் கருங்கற்களைப் போட்டு துர்க்கனும் ... அதெல்லாம் ஒரு பெண்ணால் முடியுமா? ...... முடியும் மான்சியால் முடியும்....

ஏழுமலை மான்சி கொடுத்தப் பொருட்களை வாங்கி பத்திரப் படுத்திக்கொண்டு .... " சரிக்கா நான் என் ஓனரை வச்சு முடிஞ்ச வரை அதிக தொகைக்கு வித்துட்டு பணத்தோட வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றான்...

வீட்டுக்குப் போய் குளித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்தவன் சத்யன் சொன்ன இடத்துக்கு செல்ல.... கழனிக்கு கூட போகாமல் ஏழுமலைக்காக காத்திருந்தான் சத்யன் ... அவன் அருகில் சென்று அமர்ந்த ஏழுமலை மான்சியை பார்த்து நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னான் ...

சத்யன் அமைதியாக இருந்தான்.... மான்சி கூறியதில் தவறேதும் இல்லை.... வெளியூரில் இருக்கும் ஏழுமலையின் ஓனருக்கே இந்த சொல் என்றால்? இங்கேயே இருக்கும் நான்தான் உதவினேன் என்று தெரிந்தால் மஞ்சுளா பேசுவதற்கு முன்பே மான்சி தன்னையே கூட அழித்துக் கொள்வாள் என்று தோன்றியது சத்யனுக்கு....


இயலாமை கொடுத்த நீண்ட பெருமூச்சுடன் எழுந்த சத்யன் " சரி ஏழுமலை நானும் வர்றேன்... எனக்குத் தெரிஞ்ச நகைக் கடைக்குப் போய் நல்ல விலைக்கு விக்குதானு பார்க்கலாம்" என்று கூற... இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள்....

டவுனில் நான்கைந்து கடைகள் அலைந்து மான்சி கொடுத்தப் பொருட்களை பனிரெண்டாயிரம் வரை விற்றான் சத்யன்... ஆனால் மான்சியின் தோடுகளை விற்றதை விட .... குழந்தைக்கு கோபால் முதல்முதலாக வாங்கிப் போட்ட பொருட்களை விற்க சத்யனுக்கு மனசே வரவில்லை....

ஏழுமலையின் எதிரில் விற்று பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு ... அவன் சென்றதும் அந்த கடைக்கு ஓடி குழந்தையின் பொருட்களுக்குப் பதிலாக மச்சான் மோதிரமாக சண்முகம் தனது திருமணத்தின் போது சத்யனுக்குப் போட்ட மோதிரத்தை விற்று குழந்தையின் பொருட்களை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான்....

ஏழுமலை சந்தைக்குப் போயிருப்பான் என்று தெரிந்து சத்யனும் போய் மான்சி கேட்டப் பொருட்களை வாங்கி கொடுத்து ஏழுமலையை முதல் பஸ்ஸில் ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த பஸ்ஸில் வந்தான் சத்யன்...

ஏழுமலையை அனுப்பி விட்டு மான்சி குழந்தையையும் சாப்பாடு தூக்கையும் கூடவே காமாட்சிப் பாட்டியிடம் ஒரு அருவாளையும் வாங்கி எடுத்துக்கொண்டு பெரிய மலையின் அடிவாரத்துக்கு வந்தாள்... காடாய் வளர்ந்து கிடந்த காட்டுச் செடிகளை கண்டு அஞ்சாமல் குழந்தையை ஒரு மரத்தில் தொட்டில் கட்டி போட்டுவிட்டு அருவாளோடு அவளது மனையில் இறங்கினாள்....

சிறியதாய் இருந்த செடிகளை கையால் பிடுங்கியபடி பெரிய செடிகளை அருவாள் கொண்டு வெட்டி வீசினாள்..... ஏழுமலை வரும் வேளைக்கு பாதி செடிகளை அப்புறப்படுத்தியிருந்தாள்....

ஏழுமலை கொடுத்தப் பணத்தை வாங்கி முந்தானையில் முடிந்தவள் ,, " பரவாயில்லையே சாமர்த்தியமா நல்ல விலைக்கு வித்திருக்க" என்றபடி ஒரு நூறு ரூபாய் நோட்டை ஏழுமலையின் சட்டைப் பையில் வைத்தாள் ...

அந்தப் பணத்தை எடுத்து கீழே வீசிவிட்டு குமுறியவன் " என்ன கமிஷன் குடுக்குறியா? நான் ஒன்னும் பன்னீர் இல்ல.... மான்சிய என் சொந்த அக்காவா நினைக்குற ஏழுமலை " என்றபடி கண்களை துடைத்துக் கொண்டான்....


மான்சி எதுவும் பேசாமல் செடிகளை வெட்ட ஆரம்பித்தாள்... ஏழுமலை அவளுக்கு உதவும் நோக்கில் வெட்டிய கிளைகளை இழுத்துச்சென்று பாறையின் மீது போட .... பட்டென்று நிமிர்ந்துப் பார்த்த மான்சி " ஏழுமலை தப்பா நினைக்காதடா.... நான் சொந்தமா உழைச்சு இந்த வீட்டை கட்டனும்னு நினைக்கிறேன்.... யாரோட உதவியும் வேணாம்டா தம்பி... கூடப் பொறந்தவனே ஆனாலும் தப்பா பேசுற உலகம்டா இது.... நான் நிறைய அனுபவிச்சிட்டேன்... அதான் சொல்றேன்... நீ வீட்டுக்குப் போ... எனக்கு எதாவது உதவி வேணும்னா என் சின்னம்மா... அதான் உன் அம்மா எதிர்ல வந்து கேட்குறேன்" என்று குரலை உயர்த்தி பிடிவாதமாக சொல்ல.... ஏழுமலை வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு செடிகளை வீசிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்....
கொண்டு வந்த கஞ்சியை ஊறுகாய் கூட இல்லாமல் குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினாள் மான்சி.... முள் செடிகளை முரட்டுத்தனமாக வெட்டி இழுத்துப் போட்டதில் கையில் ஏராளமான இடங்களில் குத்தி ரத்தம் வந்தது.... ஆனாலும் அவளுக்குள் இருந்த வெறி வலியை உணரவிடாமல் வேலையை செய்ய வைத்தது... ...

மாலை ஆறு மணியாகி இருள் கவிழத் தொடங்க.... மான்சி இன்னும் வேலை செய்து கொண்டிருந்தாள்.... செடிகளை அள்ளி வீசிய பாறைக்குப் பின்னால் அமர்ந்து நெஞ்சில் உதிரம் வழிய " அய்யோ பொழுது போச்சே இன்னும் இங்கயே இருக்காளே என்று தவித்துக் கொண்டிருந்தான் சத்யன்.... அதைவிட தொட்டிலில் கத்திக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் அவனை இன்னும் வதைத்தது...

" போதும் மான்சி ,, பொழுது போச்சு " என்று சொல்லக் கூட சத்யனுக்கு உரிமையில்லையே?

அப்போது தெய்வம் போல் வந்த காமாட்சிப் பாட்டி தொட்டிலில் கிடந்து அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு " கண்ணு பொழுது போச்சு ... சீர் பண்ணது போதும் மிச்சத்தை நாளைக்குப் பார்த்துக்கலாம் ... வா கண்ணு" என்று அழைக்க...

நிமிர்ந்துப் பார்த்த மான்சி " முடிஞ்சது ஆயா,, நாளைக்கு கடக்கால் தோண்ட வேண்டியது தான்" என்றபடி அருவாளை எடுத்துக்கொண்டு வந்தாள்....

அவள் கூறியதை கேட்ட சத்யனுக்கு திக்கென்றது.... இவளே கடக்கால் தோண்டப் போறாளா? அய்யோ ஆம்பளையாலயே முடியாதே? எல்லாம் என்னாலதான் என்று தலையில் அடித்துக் கொண்டான்.... இப்போது மான்சியை தடுக்கவும் முடியாது தள்ளி நின்று பார்க்கவும் முடியாது.... மான்சி கிளம்பியதும் பாறையின் மறைவிலிருந்து வெளியே வந்தவன் சுத்தப்படுத்தப்பட்ட மான்சியின் மனையை பார்த்தான்... ஒரு புல் கூட இல்லாமல் சுத்தமாக இருந்தது... மான்சியின் உழைப்பை எண்ணி நெஞ்சு விம்மிற்று.. இங்கே குடிசை போட்டு மான்சி வாழப்போகிறாள்... புதிதாக ஏதோவொரு உணர்வு இதயத்தை ஊடுருவ ... மண்டியிட்டு அமர்ந்து குனிந்து பூமித்தாயை முத்தமிட்டு நிமிர்ந்து மலைமேல் இருந்த ஏழு கன்னிமார் கோயிலை கையெடுத்துக் கும்பிட்டு " அம்மா நாகக்கன்னி,, இனிமேல் என் மான்சியை பத்திரமா பாத்துக்கனும் அடுத்த வருஷ ஆடித் திருவிழாவுக்கு உன் காவலுக்கு குதிரை சிலை செய்து வைக்கிறேன்ம்மா" என்று வாய்விட்டு சத்தமாக வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்...


பள்ளிக்கூட திண்ணைக்கு வந்து காமாட்சிப் பாட்டி குழந்தையை வைத்துக்கொள்ள மான்சி அடுப்பு மூட்டினாள்... " கண்ணு காசு இருந்தா குடும்மா ஏதாவது காய்கறி வாங்கிட்டு வர்றேன்... மூனு வேளையும் கஞ்சியே குடிச்சா ரத்தம் செத்துப் போய் வேலை வெட்டி செய்ய முடியாது" என்று பாட்டி சொல்ல...

மான்சிக்கும் பாட்டி சொல்வது சரியென்றுதான் பட்டது.. உடலில் உரமிருந்தால் தான் உழைக்க முடியும் .... காய்கறி வாங்கிவர காசு கொடுத்தனுப்பினாள்

சமையலை முடித்தவள் ... பக்கத்தில் நெருப்பு உலையில் எஃகு உளிகளுக்கு கூர் அடித்துக்கொண்டிருந்த கல் உடைப்பவர்களிடம் சென்று.. " எனக்கு ஆயிரம் சக்கை கல்லு வேணும்... எவ்வளவு காசு ஆகும்?" என்று கேட்க....

அந்த குடியானவன் நிமிர்ந்து பார்த்து ஒரு கல்லு அஞ்சு ரூவா தாயி... ஆனா காண்ட்ராக்டருக்கு உடைக்க தான் எங்களுக்கு நேரம் சரியா இருக்கு... உனக்கு எங்கருந்து கல் ஒடைச்சு தரமுடியும் என்று சொல்ல.... அவருக்கு பக்கத்தில் இருந்த அவர் மனைவி அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல... தலையசைத்தவர் மீண்டும் நிமிர்ந்து " பாவம் கைப்புள்ளையோட நிர்கதியா நிக்கிது... நாமலும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கோம் ... அதுகளுக்கு புண்ணியமா இருக்கும்....கல்லு ஒடச்சு குடுனு என் பொஞ்சாதி சொல்லுதும்மா... இன்னும் ரெண்டு நாள்ல கல்லை கொண்டு வந்து இறக்குறோம் .. நீ கல்லுக்கு நாலு ரூவா குடு தாயி போதும்" என்று சொல்ல

இது போன்ற நல்லவர்களால் தான் பூமி பந்து இன்னும் தனது சுழற்சியை நிறுத்தாமல் இருக்கிறது என்று எண்ணிய மான்சி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு முந்தானையில் இருந்த பணத்தில் நாலாயிரம் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள் ....

அன்று இரவு உறங்கும் போது அவளின் காவல் தெய்வம் பெட்சீட்டால் முக்காடு போட்டுக்கொண்டு அங்கே வந்து ...அந்த நீளமான திண்ணையின் மறுபுறம் வந்து யாருமறியாமல் படுத்துக்கொண்டது.... சத்யனுக்கு பயம்... அந்த கிராமத்தில் நல்லவர்கள் நாலு பேர் இருந்தால் ஊர் பெயரை கெடுக்கவென்று ஊதாரிகள் எட்டு பேர் இருந்தார்கள்... அவர்களின் விஷமத்திலிருந்து மான்சியை காக்க வேண்டுமே என்ற பயம்... கழனிக்குப் போய் படுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு நன்றாக இருட்டியதும் இங்கே வந்து படுத்துக் கொண்டான்....

நடு இரவில் குழந்தை அழுததும் மான்சி எழுந்து அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்க ... இவனும் எழுந்து கொண்டான் ... பெட்சீட்டால் மூடிக்கொண்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.... அவன் நினைத்தது போல் எதுவுமில்லை.... ஒட்டர் இன மக்களின் கூர் தீட்டிய எஃகு உளிகளுக்குப் பயந்து யாரும் அந்த பக்கமே வரவில்லை.....


இரண்டாம் நாள் அதிகாலையே மான்சி அறியா வண்ணம் எழுந்து கழனிக்குப் போய் விட்டான் சத்யன்...... மான்சி சமையல் முடித்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கடப்பாரை இன்னும் மற்றப் பொருட்களை தலையில் வைத்துக் கொண்டு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி தனது மனைக்கு வந்தாள்...

நேற்று போலவே குழந்தையை தொட்டில் கட்டிப் போட்டுவிட்டு..... களத்தில் இறங்கினாள்... கடப்பாரையை தோளில் சாய்த்து கொண்டு மலைமேல் இருந்த கன்னிமார் தெய்வத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டாள்... சனிமூலைக்கு வந்து முந்தானையில் இருந்த காலனா கர்பூரத்தை எடுத்து தரையில் வைத்து தீப்பொட்டியை உரசிப் பற்ற வைத்து கர்ப்பூரத்தை ஏற்றினாள்.. கர்ப்பூர தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு கடப்பாரையை தலைக்குமேல் உயர்த்தி அதே வேகத்தில் தரையில் குத்தி தோண்ட ஆரம்பித்தாள்...

அவளின் உறுதியும் .. உழைப்பின் வேகமும் சேர்ந்து நம்பிக்கையை விதைக்க ,, மண் உமியைப் போல பொது பொதுவென வந்தது... சிறிது நோண்டுவதும் பிறகு அந்த மண்ணை அள்ளி பக்கத்தில் போடுவதுமாக அவளே இரண்டு வேலையும் செய்ததால் நேரம் போனதே தவிர பள்ளம் ஆழமாகவில்லை....

மதியத்துக்கெல்லாம் சோர்ந்து போனாள் மான்சி.... எழுந்து வந்து சோற்றை பிசைந்து அள்ளி விழுங்கும் போது கண்ணீரையும் சேர்த்து விழுங்கினாள்.. சாப்பிட்டு முடித்து குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி பால் கொடுக்க ஆரம்பித்தவளின் முன்னால் மான்சியின் அப்பாவும் அம்மாவும் நின்றனர்...

என்ன? என்பதுபோல் மான்சி நிமிர்ந்துப் பார்க்க.... " இதெல்லாம் என்னத்துக்குடி? உன் அண்ணிகாரி புத்தி தெரிஞ்சதுதான் .. ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்கு வா மான்சி" என்று அவள் அம்மா அழைக்க....

அவர்களை ஏளனமாகப் பார்த்த மான்சி " உன் மக மன்னிப்பு கேட்பா... ஆனா நான் கோபாலுக்குப் பொண்டாட்டி.... கோபால் பொஞ்சாதி யார்ட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டா.... கையாலாக உன் புள்ளைய கட்டிகிட்ட அவளுக்கே அவ்வளவு வீராப்புன்னா.... நல்லவனுக்கு முந்தி விரிச்சு சிங்கக்குட்டி மாதிரி புள்ளையப் பெத்த எனக்கு எம்புட்டு இருக்கும்?.... இனி செத்தாலும் அந்த வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்... நீங்கப் போய் சேருங்க...இல்லேன்னா நாளைக்கு நீங்க செத்தா கொள்ளி கூட போடமாட்டேன்னு சொல்லிடுவான் உங்கப் புள்ளை" என்று நக்கலாக மொழிந்தாள் மான்சி....

அவளை பெற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மான்சி சமாதானம் ஆகவில்லை என்றதும் விதியை நொந்தபடி வீட்டுக்கு கிளம்பினார்கள் மான்சியைப் பெற்றவர்கள்.....


அவர்கள் போனதும் குழந்தையை தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு பள்ளத்தில் இறங்கி நெற்றி வியர்வையை வழித்து எரிந்துவிட்டு வீம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தாள்.....

மான்சியின் நிலையை காண சகிக்காமல் அவள் பெற்றோரிடம் பேசி மான்சி பார்க்க அழைத்து வந்த சத்யனின் காதுகளில் மான்சி கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் குயிலின் இசையாய் ஒலித்தது.... அவளின் உறுதியும் வீராப்பும் இவனுக்கும் உற்சாகத்தை கொடுத்தது... ஏன்தான் அவர்களை அழைத்து வந்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டான்...

ஆனாலும் உதவிக்கு இன்னொரு ஆள் இல்லாமல் கடக்கால் பள்ளம் எடுக்க முடியாது.... மீண்டும் ஏழுமலையைத் தேடி ஓடினான் சத்யன்.....

அன்று முழுவதும் 16க்கு 16 சுற்றில் ஒரு அடி ஆழமே தோண்ட முடிந்தது மான்சியால்..... மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூட திண்ணைக்கு வந்தாள்... தனது கணக்குப்படி ஒரு வாரத்தில் குடிசை கட்ட முடியாது போலிருக்கே என்ற கவலை வந்தது... என்ன செய்யலாம்... JCP இயந்திரத்தை வைத்து எடுக்கலாம்... ஒரு மணி நேரத்தில் வேலை முடியும்... ஆனால் மணிக்கு இரண்டாயிரம் கேட்பான்.... வேறு வழியில்லை என்று தோன்றியது....



அன்று இரவு உறங்கும் முன்பு மான்சியை காண வந்த ஏழுமலையிடம் " தம்பி பக்கத்து ஊர்ல ஜேசிபி இருக்குள்ள... அதை நாளைக்கு எடுத்துட்டு வர சொல்லுபா... மலைப் பாறையா இருக்குறதால கடப்பாரைக்கு அசையலடா தம்பி" என்று மான்சி சொன்னதும் ...

ஏழுமலை வியப்பின் உச்சிக்கேப் போய்விட்டான்.... ஏனென்றால் சத்யனும் அதே யோசனையைத்தான் சொல்லி அனுப்பியிருந்தான்...

மூன்றாம்நாள் காலை வழக்கம் போல் விடிவதற்கு முன்பு குளத்தில் இறங்கி குளித்த மான்சிக்கு மறு பக்கம் மறைவாக அமர்ந்து காவலிருந்தான் சத்யன்

சரியாக எட்டு மணிக்கு ஜேசிபி இயந்திரம் எடுத்துவரப் பட்டு ஒரு மணி நேரத்தில் பள்ளம் எடுக்கப்பட்டது..... நான்கடி ஆழத்தில்.. இரண்டடி அகலத்தில் பள்ளம் எடுத்தனர்... மான்சி அவர்களுக்குப் பணத்தை கொடுத்தனுப்பிவிட்டு... மலையின் அடிவாரத்தில் உருண்டு வந்து விழுந்து கிடக்கும் கற்களை தலையில் சுமந்து வந்து பள்ளத்துல் போட்டு கடக்கால் துர்க்க ஆரம்பித்தாள்... இயந்திரம் தோண்டி கொட்டிய மண் பக்கத்தில் இருக்க... ஒரு வரிசை கல் ஒரு வரிசை மண் என்று பள்ளத்தில் போட்டு ஐந்து அடுக்குகளாக கற்களை அடுக்கி கடக்கால் வேலையை முடித்தாள்...



No comments:

Post a Comment