Saturday, January 2, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 3

சத்யன் தனது நிலைமையை உணர்ந்து கொள்ள சரியா பத்துநாட்கள் ஆனது.... இனிமேல் எதுக்கும் பயண்பட மாட்டோம் என்று புரிந்ததும் கிட்டத்தட்ட வெறிபிடித்தவன் போல ஆனான்... யாரையும் கிட்டே வரவிடாமல் கத்தியவன்.... எப்போதும் சொல்லும் வார்த்தை “ என்னை கொன்னுடுங்களேன் என்னால இப்படி இருக்க முடியலையே ப்ளீஸ் கொன்னுடுங்க... நான் வேனாம் ” என்று கத்திவிட்டு நாளடைவில் கெஞ்ச ஆரம்பித்தான்.....

தன்மேல் இருக்கும் மருத்துவ உபகரணங்களை பிய்த்து எறிந்தான்... எதிரே வந்து நிற்பவர்கள் மேல் கையில் கிடைத்ததை வீசியெறிந்தான்.... இறுதியாக கத்திக்கதற ஆரம்பித்தான்.... அவனை சமாளிப்பது பெரும் கஷ்டமென்று ஆனது

எல்லோராலும் அவனைப் பார்த்து கண்ணீர் விடமட்டும் தான் முடிந்தது



வேலுவை உடன் வைத்துக்கொண்டு தாத்தா மட்டும் சத்யனுடன் இருக்க மற்றவர்கள் மதுரை திரும்பினார்கள்.....
ஆனால் சத்யன் எதற்குமே ஒத்துழைக்க மறுத்தான்.... படுக்கையிலேயே மலம் ஜலம் என்பதை அவனால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை... சத்யனுக்காக எவ்வளவோ வேலைகள் செய்த வேலு இப்பவும் அவனுக்காக எல்லாம் செய்தான்.... சத்யனைத் தூக்கிச்சென்று டாய்லெட்டில் உட்கார வைத்து அவனே சகலமும் செய்தான்... சத்யனால் அவன் பெற்ற சுகங்களுக்கு திருப்பி நன்றிக்கடன் செலுத்தினான்

சத்யனின் நீண்ட கேசம் காணமல் போய் தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டது... தினமும் ஒரு ஸ்டைல் என்பது போல் எப்போதுமே நிரந்தரமாக சில நாட்கள் தாடி தாடையில்.... அழுத்தமில்லாத பருத்தி உடைகள் அவனுக்கு வசதியாக அணிவிக்கப்பட்டது... கட்டுமஸ்தான சத்யனின் உடல் மெலிந்தது ... மொத்தத்தில் சத்யன் ஒன்றுமில்லாது ஒன்றுக்கும் லாயக்கில்லாதவனாக மாறிப்போனான்

சத்யன் மீண்டும் மதுரைக்குத் திரும்ப கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆனது.... அவனுடன் சேர்ந்து ஒரு வீல் சேரும் வந்தது... காரிலிருந்து சத்யனை வேலு தூக்கி வீல் சேரில் அமர்த்தி பங்களவுக்குள் தள்ளிக்கொண்டு வந்தான்

வேலைக்காரர்கள் கூட சத்யனுக்காக கண்ணீர் சிந்த தண்டபாணி அன்கோ மட்டும் ஏளனமாகப் பார்த்தது....

ராஜலிங்கமும் ராஜேஸ்வரியும் மகனின் நிலைமையால் முற்றிலும் உடைந்து போயிருந்தனர்.... அவர்களின் கனவு அல்லவா சத்யன்? அந்த கனவு முடமாகிப் போனதை அவர்களால் இன்னும் கூட நம்பமுடியவில்லை....

தற்போதைய சத்யனின் நிலைக்கேற்ப அவனது அறை மாற்றியமைக்கப்பட்டது.... நீண்ட நாட்களாக படுத்தே இருப்பதால்.... புண்கள் ஏற்ப்படாத வாறு படுக்கைக் கூட மாற்றப்பட்டது... பிரத்யோகமாக அவனருகில் எப்போதும் இருக்கும் மாறு ஒரு ஆண் நர்ஸ் நியமித்தனர்....

ஆனால் சத்யனின் அராஜகத்தை தாங்கமுடியாமல் அடுத்த நாளே ஓடிப்போனார்கள்….. சற்று வயதான பெண் நர்ஸ்களை நியமித்தபோது சத்யன் அவர்களை தனது அறைக்குள்ளேயே அனுமதிக்கவில்லை.... அசைக்கமுடியாத கால்கள் சூம்பிப் போகா வண்ணம் அதற்கென சில ஆயில்கள் போட்டு மசாஜ் பயிற்சிகள் செய்ய காலை மாலை இரண்டு வேளையும் வரும் பிசியோதெரபிஸ்ட்டும் எப்போதும் உடனிருக்கும் வேலுவும்... அறையை சுத்தம் செய்யது சத்யனுக்கு உணவளிக்க என வரும் மரகதமும் மட்டுமே தனது அறைக்குள் வர அனுமதித்தான் சத்யன்.... 

அவன் உறங்கும் நேரத்தில் வந்து கண்ணீர் விட்டுச் செல்லும் பெற்றோர்... சத்யன் விழித்திருக்கும்போது அமைதியாக வந்து அமர்ந்துவிட்டுச் செல்லும் தாத்தா... என சத்யனின் வட்டம் குறுகிப்போனது.... கம்பீரமான அழகனாய் நண்பர்களுடன் சுற்றித்திரிந்தவனுக்கு இப்போது படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் நண்பர்களை சந்திக்க இஷ்டமில்லாமல் நண்பர்களை சந்திப்பதையும் தவிர்த்தான்... ஒரு எரிமலையின் அமைதி சிலநேரம்.... அலைகள் அமைதிகாக்கும் கடல் சிலநேரம்... ஆக இரண்டுமே எப்போது வேண்டுமானாலும் தனது சுயத்தை காட்டலாம் என்பதுபோல் இறுகியிருந்தது...

இதில் ரொம்பவே நொருங்கிப் போனது ராஜேஸ்வரி தான்..... மகன்தான் அவளது கனவு.... அவனது நிலைமை இப்படியானதும் தொழிற்சாலைக்கு கூடச் செல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கிப் போனாள்... அதுவும் சிலநேரங்களில் சத்யனின் அறைக்குள் செல்லும்போது மரகதத்திடம் பேசும் அளவிற்கு கூட தன்னிடம் பேசாமல் முகம் திருப்பும் மகனை கண்டு குமுறியது அவனை சுமந்த வயிறு... சத்யன் உறங்கும்போது மகனைத் தொட்டுப்பார்த்து மவுனமாக கண்ணீர் விட்டாள்... சரியான பாதையில் மகனை அழைத்துச்செல்ல தவறிவிட்டோம் என்று ராஜேஸ்வரி புரிந்துகொண்டு இந்த நிமிடம் அவள் நல்ல தாயாக மாற நினைத்தாலும் காலம் கடந்துவிட்டது...

மருமகள் மகன் நினைவில் முடங்கிப்போனதும் சொக்கலிங்கம் தொழிற்சாலையில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்... அவருக்குள் ஏதோவொரு நம்பிக்கை... நிச்சயம் சத்யன் எழுந்து நடமாடுவான் என்று... தான் இவ்வளவு நாட்களாக பக்தியோடு கையெடுத்த தெய்வம் தனது குடும்ப வாரிசை காப்பாற்றும் என்று மனசுக்குள் நம்பிக்கை இருந்தது... அந்த நம்பிக்கைதான் அவரை தைரியமாக செயல்பட வைத்தது...

தன் மகன் ராஜலிங்கமும் விரக்தியுடன் சோர்ந்து போனதால்.... தாத்தா தொழிற்சாலை முழுவதையும் தனது கண்கானிப்பில் வைத்துக்கொண்டார்.... இல்லையென்றால் தண்டபாணி புகுந்து மொத்தத்தையும் சுருட்டிவிடுவான் என்று அவருக்குத் தெரியும்...

குடும்பம் இந்த நிலையில் இருந்தும் தண்டபாணி அங்கிருந்து வெளியேறவில்லை... சத்யனின் வாழ்நாள் ரொம்பவே சுருங்கிப்போனதால் வாரிசு இல்லாத இந்த மொத்த சொத்தும் தனது கைக்கு வரும் என்ற புதுக்கனவு அவர் நெஞ்சில் ஓடியது...

சத்யனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று துள்ளித்திரிந்த அனுரேகா கூட சத்யனின் அறையில் எட்டிக்கூட பார்க்கவில்லை...... தனது ஒற்றைப் பார்வை கிடைக்குமா என்று வழியில் நின்ற அனு கூட தன்னை ஒதுக்கியதால் சத்யன் ரொம்பவே வெறுத்துப் போனான்.... 


மரகதம் தான் சத்யனுக்கு உணவு உடை மாற்றுவது என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு... மொத்த நேரமும் சத்யன் அறையில் இருப்பதால் பூஜையறை கவனிப்பார் அற்று ஒட்டடை பிடிக்க ஆரம்பித்தது... பெரியவரிடம் சொல்லி பூஜையறையை கவனிக்க தனியாக ஒரு ஆளை நியமிக்க சொல்லி கேட்டுக்கொண்டாள் மரகதம்...

பாரம்பரியம் மிக்கு அந்த தெய்வ விக்ரகங்களை தொட்டு சுத்தம் செய்ய வேறு யாரையும் நியமிக்க ஆர்வமில்லாமல் “ உன்னால முடிஞ்சா வாரம் ஒரு முறை செய் மரகதம்.... வேற ஆள் எல்லாம் வேண்டாம்” என்று மறுத்துவிட்டார்......

மரகத்திற்கும் அவர் மனநிலை புரிய அதன்பிறகு அதைப்பற்றி பேசவில்லை... துயரம் வரும்போது தெய்வத்தை நினைத்து நெஞ்சுருகி பிரார்த்தனை செய்யும் சராசரி குடும்பப்பெண்ணாக இப்போதெல்லாம் ராஜேஸ்வரியும் கூட அதிகநேரம் பூஜையறையில் அமர்ந்து கண்ணீருடன் மகனுக்காக வேண்ட ஆரம்பித்தாள்.....



“ செதுக்கினால் கடவுள்...

“ உடைத்தால் வெறும் கல்...

“ நாம் வணங்கப்பட வேண்டியது ...

“ கல்லையா ?

“ கடவுளையா ?.



சத்யனுக்கு அடிபட்டு சரியாக ஐந்து மாதம் ஆனது..... சொந்த ஊரில் ஒரு உறவினரின் சாவுக்கு செல்லவேண்டிய நிற்பந்தம் ஏற்பட மரகதமும் சாமிக்கண்ணும் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள்.... சத்யனை கவனமாக பார்த்துக்கொள்வதாக வேலு உறுதியளித்ததும் தான் மரகதம் ஊருக்கு கிளம்பினாள்..... இரண்டு நாளில் திரும்புகிறேன் என்று சத்யனிடம் உறுதியாக கூறிவிட்டு சென்றாள்....

சத்யன் ஏன் தான் வாழ்கிறோம் என்று வெறுப்புடன் நாட்களை கடத்தினான்..... எப்போதாவது விபத்து நடந்த அன்றைய தினத்தை நினைத்துப் பார்ப்பான்..... அப்போதெல்லாம் அந்த அழகு விழியாளும் அவளுக்காக இவன் கழுத்தில் கத்தி வைத்த அவள் தம்பியும் ஞாபகத்தில் வருவார்கள்..... அந்தநேரத்தில் சத்யனின் உடலும் மனமும் அவமானத்தில் இறுகிவிடும்.... ஏன் என்றே தெரியாமலேயே அந்த பெண்ணின் மீதும் அவள் தம்பியின் மீதும் சத்யனின் நெஞ்சம் முழுவதும் வஞ்சம் நிறைந்தது... ஆனால் தன்னால் ஒன்றுமே செய்யமுடியாத வேதனையில் இதயம் நொந்து போவான்





“ ஒரு இரவின் கறுப்பில் தான்...

“ நமது பிறப்பின் ரகசியம் தெரியும்!

“ ஒரு மங்கையின் மடியில் தான்....

“ சொர்க்கத்தின் சுகங்கள் தெரியும்! 

மான்சி முழங்கால்களை கட்டிக்கொண்டு கட்டிலில் கிடந்த தம்பியைப் பார்த்தாள்.... தலை மொட்டையடிக்கப்பட்டு அவனது கட்டுமஸ்தான உடல் கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தது.... தம்பியைப் பார்த்து கண்ணீர் விடவில்லை மான்சி... இந்த ஆறு மாதங்களில் கண்ணீர் வற்றிப்போய் விட்டது

பரசு திரும்பி அக்காவை பார்த்தான்.... “ என்னக்கா? நான் உனக்காக சம்பாதிச்சது மொத்தமும் என்னோட வைத்தியத்துக்கு போச்சேக்கா? இனிமே உன்னைய எப்படியக்கா கல்யாணம் பண்ணிக் குடுப்பேன்?” என்றான் வேதனையான குரலில் ..

மெல்ல நகர்ந்து கட்டிலின் அருகில் வந்த மான்சி தம்பியின் ஒட்டிப்போன கன்னத்தை வருடி “ நீ பொழச்சு வந்ததே போதும் பரசு.... பணம் போனா போகட்டும்... நான் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இல்லைடா... இப்படியே உனக்கு அக்காவாவே இருந்துடுறேன் பரசு” என்று மான்சி கூறியதும்...

பரசுவின் முகம் சட்டென்று மாற கோபமாக “ லூசுத்தனமா பேசாதக்கா.... எனக்கு தான் எல்லாம் சரியா போச்சு... இனிமேல் எந்த பயமும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாருல்ல.. பிறகு என்ன... இன்னும் கொஞ்சநாள்ல மறுபடியும் இளநீர் ஏவாரத்துக்குப் போய் நிறைய சம்பாதிக்கப் போறேன்” என்று விழிகள் பளிச்சிட பரசு சொன்னதும் ....

அவன் வாயை தன் விரல்களால் பொத்திய மான்சி “ நாம பிச்சை கூட எடுக்கலாம்டா ... ஆனா இந்த இளநீ வியாபரம் மட்டும் வேண்டாம்” என்றவளின் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் கொட்டியது...

பரசுவும் அந்த பயங்கரத்தை எண்ணி கண்களை மூடிக்கொண்டான்...... அன்று அந்த கார்க்காரனிடம் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிறகு மான்சியை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு மூன்று மணிக்கு மீண்டும் தோப்புக்கு வந்தவன் மறுநாள் வியாபாரத்துக்கு இன்னும் கொஞ்சம் இளநீர் குலைகளை மரத்திலிருந்து இறக்கி வைக்கலாம் என்று எண்ணி தோப்பின் மறு மூலைக்கு சென்றான்...

மிக உயரமான அந்த மரத்தை அன்னாந்து பார்த்தான்... இன்னும் இரண்டு நாள் விட்டு வச்சா மொத்தமும் தேங்காயாக ஆகிவிடும் என்பதால் சரசரவென்று மரத்தில் ஏறினான்... இடுப்பிலிருந்த வெட்டு கத்தியால் ஒரு கலையை வெட்டிவிட்டு மீண்டும் கீழே வந்தவன் அடுத்த மரத்தில் ஏறினான்...

அப்போது மதியம் தகராறு செய்தவனின் காரைப் போலவே ஒரு கார் அவன் தோப்பை கடந்து செல்ல.. மரத்தில் இருந்தவாறு அதைப் பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் ஆத்திரம் வெடித்தது... ச்சே அவனை வெட்டாம விட்டுட்டமே என்று கோபமாக மரத்தில் குத்தினான்... பிறகு மீண்டும் மரத்தில் ஏறியவன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து ஒரு குலையை வெட்டிவிட்டு மரத்தின் மறுபுறம் இருந்த குலையை வெட்ட காலகளை மரத்தில் பின்னிக்கொண்டு எட்டி அந்த பக்கம் இருந்த இளநீர் குலையை வெட்டினான்... வெட்டு பதியவில்லை.. மரத்தை கட்டிக்கொண்டு மெல்ல ஊர்ந்து மறுபுறம் வந்தவன் அருவாளை ஓங்கி தென்னங்குலையில் போடவும் அவன் கால்கள் நழுவவும் சரியாக இருந்தது... மரத்தில் ஏறியதை விட பலமடங்கு வேகத்தில் அங்கிருந்து தலைகீழாக விழுந்தான் பரசு...

சத்யனுக்கு விபத்து நடந்த அதேநேரத்தில் பரசு மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தான்...
பக்கத்து வயல்களில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பரசுவை தூக்கிய போது அவன் முற்றிலும் நினைவின்றி கிடந்தான்... தரையில் கல் இருந்திருந்தால் அவன் தலை சிதறியிருக்கும்... கட்டாந்தரை என்பதால் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது

அவனை கயிற்று கட்டிலில் தூக்கிப்போட்டு ரோட்டுக்கு கொண்டு வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போன போது அவர்கள் வெறு முதழுதவி மட்டும் செய்துவிட்டு உடனடியாக திருச்சி எடுத்துச்செல்லு மாறு டாக்டர்கள் சொல்ல...

அதற்குள் மான்சியும் பாட்டியும் வந்துவிட்டனர்... மான்சி தனது தம்பியைப் பார்த்து கதறினாலும் அவனை பிழைக்க வைத்தே தீருவேன் என்ற வைராக்கியத்துடன் திருச்சியில் பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு... மீண்டும் தனது ஊருக்கு வந்து வங்கியில் ஜாயிண்ட் அக்கவுண்டில் இருந்த பணம் சில லட்சங்களை எடுத்து வந்து டாக்டர்கள் முன்பு கொட்டியதும் பரசுவுக்கு ராஜ வைத்தியம் நடந்தது ஒரே வாரத்தில் தலையில் இரண்டு ஆப்ரேஷன்கள் நடந்தது...

பரசு நன்றாக எழுந்து நடக்கும் போது அவர்களின் இருப்பு மொத்தமும் கரைந்து போய் அந்த வீடும் தோப்பும் மட்டுமே மிச்சமிருந்தது... மருத்துவமனையிலிருந்து வெளியே வருவதற்கு தோப்பை ஐம்பதாயிரத்திற்கு அடமானம் வைத்து எடுத்துச்சென்று கட்டிவிட்டு தான் தம்பியை வீட்டுக்கு அழைத்து வந்தாள் மான்சி....

கிட்டத்தட்ட ஆறு மாதமாக ஆஸ்பிட்டலும் வீடும் என்று அலைந்து திரிந்து இனிமேல் பரசுவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார்கள்...

ஆனால் தினமும் சாப்பாட்டுக்கு யாராவது ஒருத்தர் வேலைக்கு செல்லவேண்டிய நிலைமை... பரசு உடல் தேறி வேலைக்கு செல்ல இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலையில் பாட்டியும் பேத்தியும் கிராமத்தில் கிடைத்த கூலி வேலைகளுக்கு போக ஆரம்பித்தனர்.... வரும் வருமானம் பரசுவுக்கு சத்துள்ள ஆகாரம் வாங்கி கொடுக்க கூட பத்தாமல் இருவரும் தவித்தனர்...

அவ்வளவு கஷ்டத்திலும் மனசுக்குள் ஒரு ஓரமாக அன்று பார்த்த அந்த கார் காரனை மீண்டும் எங்காவது சந்திப்போமா? என்ற எண்ணம் எழும்போதெல்லாம் அன்று பரசுவுக்கு நடந்த விபத்தும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வந்து அவளை பயமுறுத்தும்.... மீண்டும் அவனைப்பற்றி நினைக்க் கூடாது என்று கண்களை இறுக மூடிக்கொள்வாள்

“ உன்னை காணக்கூடாது என்றுதான்...

“ என் விழிகளை இறுக மூடிக்கொள்கிறேன்....

“ அந்த மூடிய இருளிலும் .....

“ உன் உருவத்தை தான் தேடுகிறேன்! 

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கலங்கித் தவிக்கும்போது ஒருநாள் பாட்டியின் ஒன்றுவிட்ட தங்கையான மரகதம் ஒரு சாவின் ஈமக்கிரியைக்கு கணவனுடன் வந்தவள் பரசுவை பார்க்க வீட்டிற்கு வந்தாள்......

சிறிதுநேரம் வரை தனது அக்காள் பேரனைப் பார்த்து கண்ணீர் விட்டவள் அவர்களின் குடும்ப நிலையை உணர்ந்து தன்னிடமிருந்த சில நகைகளை கழட்டி மான்சியிடம் கொடுத்து “ இதை வச்சுக்க கண்ணு... என்னால இதுதான் முடிஞ்சது... எனக்கு யாருமே தகவல் சொல்லலை கண்ணு இல்லேன்னா நான் அப்பவே வந்து பார்த்துட்டு போயிருப்பேன்... எப்படி ஆடி ஓடி வேலை செஞ்ச புள்ளை.. இப்போ இப்படி கட்டிலில் கிடக்குதே” என்ற மரகதத்திற்கு சத்யனின் ஞாபகமும் வர கண்ணீர் மேலும் பெருகியது...

மான்சி மரகதம் கொடுத்த நகைகளை வாங்க மறுத்தாள் “ நீங்க வந்து பார்த்ததே போதும்அம்மாச்சி ... எனக்கு நகையெல்லாம் வேனாம்... ஆனா உங்களால ஒரு உதவி வேனும் அம்மாச்சி?” என்று மான்சி மரகதத்தின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்க...

“ சொல்லு கண்ணு... என்னால முடிஞ்ச எதையும் என் பேத்திக்காக செய்வேன்” என்று மரகதம் உறுதியளிக்க...

“ அம்மாச்சி இனிமே தம்பி உடம்பு தேரனும்னா நல்ல சாப்பாடு பழமெல்லாம் குடுக்கனும்... ஆனா இங்கே நானும் பாட்டியும் வேலை செஞ்சாலும் வர்ற கூலி பத்தலை.. பாதிநாள் வேலையும் இல்லை.... அதனால நீங்க மதுரையில பெரிய பணக்காரங்க வீட்டுல தான வேலை செய்றீங்க... அங்கயே எனக்கு ஒரு வேலை கேட்டு வாங்கி குடுங்க அம்மாச்சி... எந்த வேலையா இருந்தாலும் செய்றேன் அம்மாச்சி... வர்ற சம்பளத்தை பாட்டிக்கு அனுப்பினா அவங்க பரசுவை பார்த்துக்குவாங்க... எனக்கு பணம் வேணாம் இந்த உதவியை மட்டும் செய்ங்க அம்மாச்சி” என்று மரகதத்தின் கைகளைப் பற்றிக்கொண்டு மான்சி இறைஞ்சினாள்

மரகதம் சற்றுநேரம் யோசித்தாள்... அ’ ந்த வீட்டுல இல்லாத வேலையா? இவ்வளவு நாளா நான் செய்த வேலையே மான்சிக்குத் தரச்சொல்லலாம்.... நாம கேட்டு பெரியவர் மறுக்க மாட்டார்.... ஆனா வேற ஆள் வேனாம்னு சொன்னாரே’ என்று குழம்பியவள் கட்டிலில் அமர்ந்து பரசுவிடம் பேசிக்கொண்டிருந்த தனது கணவரிடம் “ ஏனுங்க உங்க செல்போன்ல இருந்து பெரியவருக்கு ஒரு போன் போட்டு தாங்களேன் நான் அவருகிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறேன்” என்று கூற...

சாமிக்கண்ணு தனது செல்போனில் இருந்து சொக்கலிங்கத்துக்கு போன் செய்து தன் மனைவியிடம் போனை கொடுத்தார்...

பரசுவிற்கு தனது அக்காவை வெளியூர் அனுப்ப துளிகூட இஷ்டமில்லை... முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு படுத்திருந்தான்

எதிர்முனையில் சொக்கலிங்கம் ஹலோ என்றதும் “ ஐயா நானு மரகதம் போசுறேனுங்க.... உங்ககிட்ட ஒரு சமாச்சாரம் கேட்கனும்” என்று மரகதம் பீடிகையுடன் சொல்ல...

“ கேளு மரகதம்.... என்ன விஷயம்?” என்றார் சொக்கலிங்கம்...

“ அதுங்கய்யா....... இப்பல்லாம் என்னால சின்னராசாவ கவனிச்சுக்கத்தான் முடியுது.... பூசைஅறைய சுத்தம் பண்ணி சாமி கும்பிட நேரங்கெடைக்கலை.... அதுக்கு வேற ஆள் போடலாம்னு சொன்னேன் ... நீங்க வேணாம்னு சொல்லிட்டீக... ஆனாங்கய்யா இங்க என் பேத்தி ஒருத்தி இருக்க..... நல்ல குணவதி... அமைதியான பொண்ணு... குடும்ப நெலமைல ஏதாவது வேலை வேணும்னு கேட்குது.... நீங்க அனுமதி குடுத்தீங்கன்னா நான் நாளைக்கு வரும்போது கூட கூட்டியாறேனுங்க... நீங்க என் பேத்திய பாருங்க... உங்களுக்கு சரின்னு தோனுனா இருக்கட்டும்... இல்லேன்னா எங்க வூட்டுக்காரரு கூட உடனே ஊருக்கு அனுப்பிடுறேனுங்க...... நல்ல புள்ளைங்க ஐயா ” என்றவள் அவருடைய பதிலுக்காக காத்திருந்தாள்

சிறிது அமைதிக்கு பின் “ உன் சொந்த பேத்தியா மரகதம்? பேர் என்ன?” என்று தாத்தா கேட்டார்....

“ ஆமாங்க என் பேத்தி தான்... என் அக்கா பேத்தி... என் பேத்தி தான? பேரு மான்சிங்க” என்றாள் மரகதம் நம்பிக்கையுடன்...

“ மான்சி” என்று ஒரு முறை அந்த பெயரை உச்சரித்துப் பார்த்தவர் “ சரி மரகதம் நீ வரும்போது அழைச்சிட்டு வந்துடு” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்...

மரகதத்துக்கு சந்தோஷம் பிடிபடவில்லை வயதை மறந்து ஓடி வந்து பேத்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு “ கண்ணு பெரியவர் உன்னைய கையோட கூட்டியாரச் சொல்லிட்டாரு... நீ உன் துணிமணிகளை எல்லாம் எடுத்து வை கண்ணு... நாளைக்கு வெடியக்காலை மொத பஸ்ஸுக்கு கெளம்பலாம்” என்றதும்...

“ அக்கா நீ அவ்வளவு தூரம் போக வேனாம்க்கா.... இங்கயே இருக்கிற வேலையை செய்யலாம்... நானும் சின்னச்சின்னதா ஏதாவது வேலை செய்றேன்க்கா.... என்னைய விட்டுட்டு போகதக்கா ” கண்ணீருடன் யாசித்தது பரசுவின் குரல்... தேவதையாக வாழ வைக்க நினைத்த தனது அக்காவை இப்படி ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்ப மனமில்லாத கண்ணீர் இது... 

மான்சி தம்பியின் அருகில் வந்து அமர்ந்து அவன் கைகளை மென்மையாக வருடி “ பரசு நீ இன்னும் பழசையே நெனைச்சுகிட்டு இருக்காதே..... நாம வாழனும்னு சாப்பிடனும்... நாம சாப்பிடனும்னா அதுக்கு பணம் சம்பாதிக்கனும்.. அந்த பணத்தை நேர்மையான முறையில சம்பாதிக்கிறோமா என்பதுதான் முக்கியமத் தவிர அது வேலைக்காரியா... அல்லது எஜமானியா என்பது இல்லை... இப்போ அம்மாச்சி பேசுனதை கேட்டே இல்ல? அந்த வீட்டு பூஜையறையில இருக்குற வேலைக்குத்தான் என்னை கூட்டிப் போறாங்க.... கிட்டத்தட்ட ஒரு கோயில்ல வேலை செய்றதுக்காக தான்... மத்தபடி இதுல அசிங்கபட ஒன்னுமில்ல பரசு.... எனக்கு அங்கே எந்த குறையும் வராது... என் கூடவே நம்ம அம்மாச்சியும் தாத்தாவும் இருக்காங்க.. அதனால நீ கவலையேப் படாதேடா” என்று தம்பியை ஆறுதல் படுத்தினாலும் அவன் சமாதானம் ஆகவில்லை....

“ நான் என்னென்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தேனே? எல்லாம் போச்சே... நான் அப்பவே செத்து போயிருந்தா பணமாவது மிச்சமா இருந்திருக்குமே” என்று பரசு கண்ணீருடன் பிதற்ற....

“ வேனாம்பா அப்படியெல்லாம் பேசாத.... மான்சிக்கு அந்த வீட்டுல சின்ன அவமானம் நடக்கவும் நான் விடமாட்டேன் பரசு... பெரியவர் ரொம்ப நல்லவர்... என் வார்த்தைக்கு கூட மரியாதை உண்டு.... அதனால நீ பயப்படாம தைரியமா அனுப்புடா” என்ற சாமிக்கண்ணு பேரனை ஆறுதலாக அணைத்துக்கொண்டார்

மரகதமும் மான்சியின் பாட்டியும் பரசுவை ஏதேதோ பேசி சமாதானம் செய்ய... பரசு அரைமனதோடு சம்மதித்தான்...

தம்பியின் சம்மதம் கிடைத்ததும் மான்சி தனது உடைமைகளை எடுத்து சூட்கேசில் வைத்துக்கொண்டாள்.. அவளுக்கும் தான் பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் செல்வது பிடிக்கவில்லை... ஆனால் வாழ வழிவேண்டுமே?

அதிகாலை பேருந்தில் சாமிக்கண்ணு மரகதம் தம்பதிகளுடன் மதுரைக்கு கிளம்ப தயாரானாள் மான்சி.... தம்பிக்கு தேவையானவற்றை வாங்கி வைத்தவள்... தம்பியை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பாட்டிக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டு கண்ணீர் மழையை மறைக்க இமைகளை குடையாய் பிடித்தபடி கிளம்பினாள் மதுரைக்கு... அங்கே தனக்காக காத்திருப்பது என்னவென்று அறியாமலேயே......................


“ எங்கும் அடங்காமல் ஆவேசமாக எரியும்...

“ அக்னி நான் !

“ வா..... நீயும் வந்து என்னுடன் சேர்ந்து எரிந்து...

“ ஒன்றாய் கலந்துவிடு! 


No comments:

Post a Comment