Friday, January 22, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 1

செவ்வானம் தன் காவலாளியை மாற்றிக்கொள்ளும் மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்து வந்த சுகந்தமான மாலை நேரம்..... சுட்டெரிக்கும் சூரியன் பூமிக்கான தன் காவலை முடித்துக்கொண்டு நிலவை அனுப்பி வைக்க..... நீலவானில் தனது கருநீல கையெழுத்தைப் பதித்துவிட்டு பூமியின் காவலுக்கு வந்தது நிலவு...

கொன்றை மரத்து குயில்கள் குஞ்சுகளுக்கான இரைகளை கவ்விக்கொண்டு கூடுதேடி அவசரமாக பறந்து செல்ல..... வயல்வெளிகளில் உணவுத் தேடிய கொக்குக் கூட்டம் அந்தி சாயும் நேரம் உணர்ந்து இருப்பிடம் சென்று சேர விர்ரென்று விண்ணை நோக்கி பறக்க.... தாய்ப்பசுவின் மடி தேடும் கன்றுகளின் ஏக்கம் நிறைந்த குரல் எங்கோ தொலைவில் கேட்க.... கடகடவென பகல் வடிந்து இரவு கவிழ்ந்தது...

கிணற்றிலிருந்து இறைத்த நீர் கால்வாயில் கரைபுரண்டு ஓடியது.....

ஏர் ஓட்டி களைத்துப்போன காளைகளுக்கு தண்ணீர் காட்டி தென்னைமரத்தில் கட்டிவிட்டு வந்து ஏர்உழுத கலப்பையை கால்வாய் நீரில் போட்டு கழுவிக்கொண்டிருந்த சத்யன் தலைக்கு மேலே பறந்த கொக்கு கூட்டத்தைப் பார்த்ததும் சிறுவயதில் இவனும் இவன் தங்கைகள் அன்பரசியும் தமிழரசியும் சேர்ந்து வரப்பில் ஏறிக்கொண்டு பறக்கும் கொக்குகளை நோக்கி விரல்களை நீட்டியது ஞாபகம் வந்தது... விரல் நகங்களில் வெள்ளை கோடுகள் விழுந்தால் புதுத்துணி கிடைக்கும் என்ற குழந்தைத்தனமான நம்பிக்கையால்....

இன்றிருந்த உற்சாகமான மனநிலையில் இருபத்தைந்து வயது சத்யனுக்கு சற்றுநேரம் குழந்தையாக மாற ஆசை வந்தது..... கழுவிக்கொண்டிருந்த கலப்பையை அப்படியே போட்டுவிட்டு வரப்பில் ஏறியவன் கை விரல்களை கொக்குகளை நோக்கி நீட்டிவிட்டு தனது செயலை எண்ணி அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தான்...

“ என்ன தனியா நின்னுகிட்டு சிரிக்கிற? ” என்ற குரல் சத்யனின் சிரிப்பை அடக்கி முரட்டு உதட்டில் நெளியும் அழகான புன்னகையாக மாற ....நீட்டியிருந்த கையை மடக்கிக்கொண்டு சட்டென்று திரும்பிப் பார்த்தான்...

அங்கே..... முகம் முழுவதும் புன்னகையை தேக்கி பூமுகம் மலர நின்றிருந்தாள் மான்சி.... அவள் கையிலிருந்த கயிற்றின் நுனியிலிருந்த பசு வரப்பில் இருந்த புல்லை ஆவேசமாக மேய.... கயிற்றை இழுத்து அதன் ஆவேசத்தை லாவகமாக அடக்கியபடி தலையை பக்கவாட்டில் சாய்த்து “ என்ன கொக்கு கிட்ட புதுத்துணி கேட்டியா?” என்று தனது வெள்ளி சலங்கை குரலில் கேட்டாள்.......

சத்யனுக்கு தனது செயலை அவள் பார்த்துவிட்டாளே என்ற வெட்கம் ஒரு புறம்... அவளின் நேரடி கேள்வி மறுபுறம் என தவிக்க விட வரப்பிலிருந்து இறங்கியபடி “ ம்ம்” என்றான் சிரிப்பு மாறா முகத்துடன்....

“ நாளைக்கு எங்க மரத்து புளிய அடிச்சு மாட்டு வண்டியில ஏத்திக்கிட்டு சேத்தனூர் சந்தைக்கு போறேன்... நா வச்சிருக்க காசுல சந்தையில உனக்கு புது சட்டைத்துணி வாங்கிட்டு வரவா?” மான்சியின் அன்பு வார்த்தைகளில் கசிந்தது...

அவளை திரும்பி பார்த்து முறைத்த சத்யன் “ ஏன்டி எங்கம்மா கிட்ட எனக்கு செருப்படி வாங்கி தர்றதுக்கா? போடி போய் உன் வேலையைப் பாரு” என்றுவிட்டு மீண்டும் கலப்பையை கழுவ ஆரம்பித்தான்...

“ நான் வாங்கித் தந்ததுனு உங்காத்தாக்கு தெரிஞ்சா தான? நீயே வாங்குனதுனு சொல்லி தைச்சு போட்டுக்க சத்தி....” என்று மான்சியின் பரிதாபமான குரலும் கூட சத்யனுக்கு பிடிக்கவில்லை.... 


“ இப்போ நான் துணியில்லாம தெறந்து போட்டுட்டு இல்லை..... எனக்கு எவளும் வாங்கித் தரவேண்டியதில்லை... பொழுது போச்சு நீ மொதல்ல கிளம்பு” என்று கோபமாக கூறியவன் கலப்பையை தோளில் சுமந்து சென்று மோட்டார் ரூமில் வைத்துவிட்டு ஓடிக்கொண்டிருந்த பம்புசெட்டின் சுவிட்சை நிறுத்திவிட்டு கதவை பூட்டிக்கொண்டு வெளியே வந்தான்....

மரத்தில் கட்டியிருந்த காளைகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பியவன்... தன் பேச்சுக்கு மான்சியிடம் பதில் இல்லாது போகவே நின்று திரும்பி “ ஏபுள்ள பொழுதே போச்சு கறவை பசுவை இங்கயே பிடிச்சிக்கிட்டு இருந்தா பால் சொசைட்டிலருந்து பால் கறக்க வர்றவன் உங்கவீட்டு திண்ணையில் கிடக்குற உன் அப்பத்தாகிட்டயா பாலை கறந்துட்டு போவான்?” என்று குறும்பு வார்த்தைகளில் கேட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தான்...

முகத்தை உம்மென்று வைத்திருந்த மான்சி சத்யனின் பேச்சில் சட்டென்று குளிர்ந்து “ ம்ம் உங்க ஆயாகிட்ட கறந்துகிட்டு போகச்சொல்லிருக்கேன்.... பேச்சைப் பாரு? சரியான வெவகாரம் புடிச்ச ஆளா இருப்ப போலருக்கு” என்றவள் சத்யனின் பின்னால் நடந்தாள்....

சத்யன் தனது வேகத்தை குறைத்தான்... மான்சியுடன் இணைந்து நடக்கும் ஆசையில்.... இருவரும் இணைந்து ஊரை நோக்கி நடந்தனர்... அன்றாட வழக்கமாக அர்த்தமற்ற அந்த மவுனம் வந்து அவர்களுக்கு இடையில் நடந்து இடைவெளியை அதிகமாக்கியது.... தினமும் இப்படித்தான் மவுனமே அவர்களின் மொழியாக நடப்பார்கள்... இருவருக்கும் இது பிடித்திருக்கிறதோ இல்லையோ.... இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கு இதுதான் பொருத்தமென்று முடிவு செய்துவிட்டான் ஆண்டவன்

மான்சி,, கரிசல்காட்டு கிராமங்களில் அரிதான வெளுத்த சருமம்... எப்போதும் தீட்டிய வைரமாய் ஜொலிக்கும் விழிகள்.... அந்த விழிகளின் படபடப்பில் விட்டில்கள் கூட மயங்கி நிற்கும்... அந்த நேர்நாசியையும் அதன் சிவந்த நுனியையும் பார்த்தாலே அவளின் நேர்மை குணத்தையும் ரோஷத்தையும் உணரலாம்... இதழ்களும் அதன் நடுவே இருக்கும் இடைவெளியையும் நெருக்கத்தில் பார்த்தவன் பித்தனாய் போனான் என்பது பழைய செய்தி.... கிராமத்து உரிய அழகாய் வளவளவென்ற கன்னத்தில் லேசாய் மிளிரும் செந்நிற ரோமங்கள்.... கழுத்து கை கால்கள் என எல்லா இடங்களிலும் மெல்லிய செந்நிற பூனை ரோமங்கள் ஜெலிக்க பார்க்கும் ஆண்களை நெஞ்சை பிளக்கும் அழகுக்கு சொந்தக்காரிதான் மான்சி..

செம்பட்டை முடிகள் கலந்து கருநாகமாய் வழிந்த கூந்தலும்... நீண்ட கழுத்தும்.... குழிந்த வயிறும்... வளைந்த இடையும்... நெடுநெடுவென நிமிர்ந்த உடலமைப்பும் கொண்ட இந்த சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு அழகை வஞ்சனையின்றி வழங்கிய ஆண்டவன் வறுமையையும் அதைவிட சற்று அதிகமாகவே கொடுத்துவிட்டான்....

இரண்டு அக்காள்களுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு ஆண்குழந்தைகள் பிறந்து இறந்துவிட தவமாய் தவமிருந்து செல்வனாய் பிறந்த பன்னீர்செல்வத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் கழித்து பெற்றோர் நாற்பதை கடந்த பிறகு கடைசியாய் இது தேவையேயில்லை ச்சீ என்ற வெறுப்புடன் பிறந்தவள் தான் மான்சி... வெளேரென்று பிறந்த தன் அழகு தங்கைக்கு மூத்த அக்கா வைத்த பெயர்தான் மான்சி....

வளரும்போதே உழைப்பின் மொழியைதான் முதலில் கற்றுக்கொண்டு வளர்ந்தாள் மான்சி... அவள் உடலின் ஒவ்வொரு செல்லும் உழைத்து உழைத்து தங்களை வலிமையாக்கிக் கொண்டிருந்தன... ஒரு ஆணுக்கு இணையாக அத்தனை வேலைகளையும் செய்யும் மான்சியின் பொருப்பில் இருக்கும் இரண்டு பசுக்களின் மூலமாக அந்த குடும்பத்துக்கு அவள் ஈட்டித்தரும் வருவாய் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்....


பிறந்ததிலிருந்து பெண்களின் உழைப்பிலேயே வளர்ந்தும் வாழ்ந்தும் பழகிவிட்ட பன்னீருக்கு உழைப்பு என்றால் வேப்பங்காயாய் கசக்கும்.... மூத்த அக்காள்கள் இருவரும் உழைத்துக்கொட்டி முடியாமல் அவர்களுக்கு ஏற்ற ஏழைகளை திருமணம் செய்து கொண்டு போய்விட... சோக்காளியான பன்னீருக்கும் பக்கத்து ஊர் பெண் மஞ்சுளாவுக்கும் திருமணம் நடந்தது....


மனைவியின் உடலழகில் மயங்கிப்போன பன்னீருக்கு வீட்டைவிட்டு வெளியே வருவது கூட வேதனை தரும் விஷயமாகிவிட்டது.... சட்டைக் கலரில் அழுக்குப்படாமல் கர்சீப் வைத்துக்கொண்டு சுற்றும் பன்னீருக்கு உடல் நோகாமல் வேலை கொடுத்தால் மட்டுமே செய்வான்.... திருமணமான மறுவருடமே தகப்பனாகிவிட்ட இவன் குடும்பத்துக்கே மான்சியும் அவளது வயதான பெற்றோரும் தான் உழைத்துப் போடுகிறார்கள்.... இவர்கள் மூவரின் உழைப்பிலும் செல்வாக்காய் வாழ்ந்தனர் பன்னீரும் அவன் மனைவியும்

குடுமபத்துக்காக உழைக்கும் மான்சிக்கு தன் கோபத்தையும் வஞ்சினத்தையும் காட்ட யாருமில்லாமல் தன்னை ரசிக்கும் வயசு பசங்களின் மீதுதான் திருப்புவாள்.... இவளை ஒருநாளுக்கு மேல் பின் தொடரும் எவனாக இருந்தாலும் சரி இரண்டாவது நாள் கந்தலாகிவிடுவான்.... மான்சி மாட்டுக்கொட்டகை கூட்டும் விளக்குமாறு அவன் தலையில் முளைத்திருக்கும்... அப்படியொரு ஆவேசம் வரும் மான்சிக்கு... அவளது குணம் தெரிந்து அவள் எதிரே வந்தால் கூட ஒதுங்கி செல்வார்கள் இளவட்டங்கள்

அந்த ஊர் இளவட்டங்களின் கனவுகளில் மட்டும் தலைவிரித்தாடும் மாய மோகினி மான்சி என்றால்,, சத்யனுக்கு மட்டும் நிஜத்தில் காட்சிதரும் தேவதை.... ஆம் அவனிடம் மட்டுமே பேசுவாள்... தன்னைப்போலவே குடுமபத்துக்காக சுயநலமின்றி உழைக்கும் சத்யனின் மீது மான்சிக்கு அளவில்லாத அன்பு....

அவர்கள் வாழும் மஞ்சப்புத்தூர் கிராமம் மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்தான் என்றாலும் அதன் அழகை ரசிக்கும் அளவுக்கு அங்குள்ள மக்களுக்கு நேரமும் ரசனையும் இல்லை... தேங்காய் நார் கொண்டு கயிறு திரிக்கும் தொழிலும் விவசாயமும் தான் பிரதான தொழில்...

மலையடிவாரத்தில் இருப்பதால் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம்... மான்சியின் வீடு மலையின் அடிவாரத்தில் என்றால் மறுபுறம் அடிவாரத்தில் சத்யனின் வீடு... ஆனால் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டவேண்டும் என்றால் மலையை ஒட்டியிருக்கும் காட்டில் தான் போகவேண்டும்....

சத்யனின் தங்கைகளுக்கு அவனது காளைகள் அடங்காது என்பதால் சத்யன்தான் ஓட்டிக்கொண்டு வருவான்....... இருவரும் புல் இருக்கும் இடத்தில் மாடுகளை கட்டிவிட்டு ஏதாவது ஒரு மரத்தடியில் இடைவெளிவிட்டு அமர்ந்தார்கள் என்றால் அவர்களைப்பற்றிய பேச்சைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுவார்கள்.... இனி பேச எதுவுமில்லை என்றால் அமைதியாக தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் அவர்களை மவுனம் கூட அசைத்துப் பார்க்காது...

சத்யனுக்கும் மான்சியையும்... மான்சிக்கு சத்யனையும் பிடிக்கும் .... ஒரே ஊராக இருப்பதால் சிறுவயது முதல் அறிமுகமானவர்கள் தான்... இருவருக்குள்ளும் சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் செல்லச் சண்டைகளாக மாறி ஒரு கட்டத்தில் அதுவும் நின்று போய் நேரடிப் பார்வைகளை தவிர்த்து திருட்டுத்தனமாய் ஒருவரையொருவர் ரசிக்க ஆரம்பித்த பிறகு இருவரும் தங்களின் மனதை உணரத் தொடங்கினர்...




ஆனால் தங்களது நேசத்தை இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லிக்கொள்ள வில்லை... இதுபோன்ற குறும்பு பேச்சுகளும் புன்னகை சிந்தும் பார்வைகளும் தான் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்திருந்தது...

சத்யனுக்கு மான்சியின் மீதான நேசம் புரிந்தாலும் அவனது குடும்ப சூழ்நிலை அவனை சுதந்திரமாக காதலிக்க விடவில்லை..... தகப்பனற்ற குடும்பம்... விதவைத் தாய் இரண்டு தங்கைகள் என்று மூன்று பெரும் சுமைகளை தாங்கி நிற்ப்பனை காதல் சற்று தள்ளி நின்றே பார்த்தது....

சத்யனின் அப்பா இவர்களுக்கென்று விட்டுச் சென்றது ஒரு ஏக்கர் நிலமும் ஒரு ஓட்டு வீடும் இரண்டு காளைகளும் தான் .... சத்யனின் உழைப்பை நம்பித்தான் மொத்த குடும்பமும் வாழ்கிறது... தனது நிலத்தில் வேலை செய்த நேரம் போக மற்ற கூலி வேலைகளுக்கும் சத்யன் போவதுண்டு .....முதல் தங்கை அன்பரசிக்கு வயது 23 ஆகியும் அவளது மூல நட்சத்திர ஜாதகம் வரும் வரன்களை எல்லாம் தட்டிவிட அதுவே பெரும் கவலையாக அன்பரசியின் எதிர்காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர் சத்யன் குடும்பத்தினர்....

குடும்ப சூழ்நிலை சத்யனின் காதலைக் கூட ஆழத்தில் புதைத்து வைத்திருந்தது .... மான்சிக்கு சத்யனைத் தவிர வேறு உலகமில்லை என்பதுபோல் எங்கிருந்தாலும் மனது அவனையே நினைக்கும் .... ஊரில் அவனைப் போல் நல்லவனும் தனக்குப் பொருத்தமானவனும் இல்லை என்று எண்ணியிருந்தாள்... சத்யனின் கருத்த உடம்பையும் உயரத்தையும் கம்பீரத்தையும் ஓரக்கண்ணால் ரசித்தபடி அவனுடன் நடந்தாள்..

இருவரும் மவுனமாக தங்களின் வீடுகளை நோக்கி நடந்தனர்... மனதில் தோன்றும் ஆசைகள் எல்லாம் தோன்றிய கனமே மடிந்துவிட... அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இருவருக்குமே துணிச்சலின்றி கோழையாய் கிடந்தனர்...

இருவரும் பிரிய வேண்டிய இடம் வந்தது... சத்யன் தயங்கி நிற்க... மான்சி பசுவின் கயிற்றை கையில் சுற்றி இழுத்துப் பிடித்துக் கொண்டு தலையை கவிழ்ந்து.... " நாளைக்கு நான் மேய்ச்சலுக்கு வரமாட்டேன்... பொழுதுவிடிய செவலை பசுவ மாட்டாஸ்ப்பத்திரிக்கு ஓட்டனும்... பால் மறத்து ரெண்டு மாசமாச்சு... செனை ஊசி போடுனும்.... வந்து எங்கப்பாரு கூட புளிய ஏத்திகிட்டு சந்தைக்குப் போகனும் .. திரும்பி வர ராவு ஆகும்" என்று சத்யனுக்கு தகவல் சொல்ல...

சத்யன் தன் பிடரியை கையால் தடிவிக்கொண்டு எங்கோ பார்த்தபடி... " பொழுது விடிய மாட்டாஸ்பத்திரி போகாத.... அந்தாளு ஒரு மாதிரினு சொன்னாங்க... கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும் போ ." என அக்கரையாய் அறிவுரை கூறிவிட்டு தனது வீட்டுக்கு செல்லும் பாதையில் திரும்பினான்...

அவனு அக்கரையான பேச்சு மான்சியின் நெஞ்சு வரை இனித்தது... போகும் அவனையேப் பார்த்திருந்து விட்டு திரும்பியவளை நின்று திரும்பிப் பார்த்த சத்யன்... " ஏய் நேரமாச்சு போடி" என்று அதட்டலாக குரல் கொடுக்க ... மான்சி தலையசைத்து சிரித்துவிட்டு போனாள்...

மறுநாள் சத்யன் தனது வயலில் வேலை எதுவும் இல்லாது போக ... வேறு இடத்துக்கு கூலி வேலைக்கு போய்விட்டு தனது வயலுக்கு வந்து கைகால் முகம் கழுவி விட்டு நிமிர்ந்தவன் தூரத்தில் மான்சி ஓடிவருவதை கண்டு " அதுக்குள்ளயுமா சந்தையில இருந்து வந்திருப்பா?" என்ற கேள்வியால் எழுந்த குழப்பத்துடன் வரப்பில் ஏறி மான்சியை நோக்கி சென்றவன் அப்போதுதான் கவனித்தான் மான்சி புடவை கட்டியிருந்ததை..... வியப்பில் கண்கள் அகல நீல நிற நைலக்ஸ் புடவையில் அவள் அழகை விழி நிறைய பருகியவாறு நின்றான்....


வரப்பில் வேகமாக வந்ததால் மூச்சு வாங்க வந்து நின்றிவளின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க.... நெற்றியில் விழுந்த கத்தை முடியை ஆவேசமாக புறம் தள்ளிவிட்டு நிமிர்ந்தாள்....

ஏதோ விஷயமென்று சத்யனுக்கு புரிய " என்ன புள்ள சந்தைக்குப் போகலையா?" என்று கேட்க...

அதுவரை கலங்கியிருந்த கண்களில் இருந்து சட்டென்று நீர் உருண்டு அவள் மார்புச் சேலையில் விழ... " இல்ல ,, சந்தைக்குப் போகலை... என் அண்ணன் பொண்டாட்டி சும்மானாலும் சந்தைக்கு போகனும்னு சொல்லி என்னை மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டவிடாம வீட்டுலயே நிறுத்திட்டா" என்று விசும்பலுக்கு இடையே பேசியவளை குழப்பமாக பார்த்த சத்யன் " ஏன் ?" என்று கேட்டான்...

கண்ணீருடனேயே நிமிர்ந்தவள் " எங்க அண்ணியோட பெரியம்மா மகன் ஒரு ஆளு மத்தியானம் என்னைய பொண்ணு பாக்க வந்தான்.... வயசு நாப்பத்திரெண்டுனு சொன்னாக... மொத தாரம் சம்சாரம் செத்து போய் பத்து வருஷம் ஆகுதாம் கல்யாணம் வேனாம்னு இருந்த ஆளு இப்பதான் அவுக ஆத்தா பேச்சை கேட்டு என்னைய பார்க்க வந்திருக்கான்... என்னால எதையுமே சொல்ல முடியலை.. என் அண்ணன் ஏற்பாடுன்றதால எங்கப்பாரும் சம்மதம் சொல்லி மதியானமே வெத்தலை பாக்கு மாத்தியாச்சு..... அதுலருந்து அழுதுகிட்டு மூலையில உட்காந்து கெடந்தேன் ... எல்லாரும் நகந்ததும் உன்னைய பாக்க ஓடியாந்தேன்" மான்சி மூச்சுவிடாமல் கடகடவென நடந்தவைகளை சொல்லிமுடிக்க....

சத்யன் விதிர்த்துப் போய் நின்றிருந்தான்..... எனக்குன்னு இருந்த ஒரு சந்தோஷத்தையும் கொள்ளி வச்சிட்டானே இந்த கடவுள்' என்று எண்ணியவனாய் வரப்பில் இருந்த மரத்தில் ஓங்கி குத்தினான்...

மான்சிக்கு அவன் கோபம் புரிந்தது... " இப்ப என்னா பண்றது சத்தி? இன்னும் எட்டு நாள்ல நம்மூரு செல்லியம்மன் கோயில்லயே கல்யாணத்தை முடிச்சிட்டு மறாவது நாளே மெட்ராஸுக்கு கூட்டிப்போறாகளாம்.... அந்தாளு நகைநட்டு சீர் எதுவும் வேணாம்னு சொன்னதால எங்கவீட்டுல எல்லாரும் தயாரா இருக்காங்க... இரக்கமில்லாத பாவி என் அண்ணி பண்ற வேலை இதெல்லாம்... எனக்கு ஒன்னுமே புரியலை சத்தி" என்றவளின் கண்ணீர் வழிந்து காற்றில் உடனே உலர்ந்து கன்னங்களில் உப்புக்கரையாக மாறியபடி கேட்டவளுக்கு பதில் சொல்லமுடியாமல் விக்கித்துப்போய் நின்றிருந்தான் சத்யன்...

சற்றுநேர யோசனைக்குப் பிறகு " இருபுள்ள இன்னும் ஒரு வாரம் இருக்குள்ள... அதுக்குள்ள ஏதாவது யோசிக்கலாம்" என சத்யன் கூற....

பார்வையில் யாசகமும்.. ஏக்கமுமாக அவனைப் பார்த்த மான்சி .... " நீதான் எதாவது பண்ணனும் சத்தி... எனக்கு இந்த ஊரைவிட்டா வேற எதுவும் தெரியாது" என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு ... " சரி சத்தி நான் போறேன் தேடுவாக" என்று கூறிவிட்டு கிளம்பினாள்...

விரல் நகத்தை கூட தீண்டாத இவர்களின் நேசம் தீண்டப்படாமலேயே போய்விடுமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சத்யன் ...

அன்று மாலை இருள் கவிழும் வரை வயலிலேயே அமர்ந்திருந்தவன் இரவு ஏழு மணியளவில் தனது வீட்டுக்குள் நுழைந்த போது அன்பரசி அடுப்பூதிக் கொண்டிருக்க... தமிழரசி இரவு சமையலுக்காக காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்... " அம்மா எங்க அன்பு?" என்ற சத்யன் கேட்க...

விரகை அடுப்பினுல் தள்ளியபடி திரும்பிய அன்பரசி.... " தெரியலைணே... மதியாணம் நாங்க ரெண்டுபேரும் வேலையிலருந்து வந்தப்ப உம்முனு உட்கார்ந்திருந்தாங்க நாங்க கேட்டதுக்கு எதுவுமே சொல்லலை... அப்புறம் இப்பதான் எந்திரிச்சு தோட்டத்துப் பக்கம் போனாங்க" என்றாள் அன்பரசி...


என்னவாக இருக்கும் என்று எண்ணியபடி கூடத்தில் கிடந்த பெரிய மர பெஞ்சில் கால் நீட்டி படுத்தான் சத்யன்.... சற்றுநேரத்தில் அவன் அம்மா பூமாத்தாள் அவனை கடந்து செல்ல சத்யன் திரும்பிப் பார்த்தான்... மடியில் எதையோ எடுத்து வந்து அதை அம்மியில் அள்ளி வைத்தாள்...

" ஏய் தமிழு காய் அப்புறம் நறுக்குவ... மொதல்ல இதை வந்து அரைச்சு வை" என்றதும் தமிழு காய் நறுக்குவதை பாதியில் விட்டுவிட்டு அம்மியில் இருந்ததை அரைக்க வந்தாள் ...

பாவாடையை சுருட்டி காலிடுக்கில் வைத்தபடி அரைக்க அமர்ந்தவள் அம்மியில் இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் " அய்யய்யோ அம்மா... இது என்னாத்துக்கு?" என்று அலறினாள்... அம்மியில் இருந்தது மொத்தமும் அரளிக்கொட்டைகள்

தங்கையின் அலறல் கேட்டு எழுந்து வந்த சத்யன் அம்மியில் இருந்த அரளிவிதைகளை கண்டு அதிர்ச்சியுடன் " என்ன அம்மா இதெல்லாம் " என்றபடி அவற்றை அள்ளுவதற்க்காக குனிந்தவனை இழுத்து மறுபுறம் தள்ளினாள் அவன் அம்மா...

முற்றத்து சுவற்றில் மோதி நின்றவனை ஆத்திரமாய்ப் பார்த்த பூமாத்தாள் " எதுக்கா ? நானும் என் மகளுகளும் இதை அரைச்சு குடிச்சிட்டு சாகுறோம் .. நீ உன் இஷ்டத்துக்கு உனக்குப் பிடிச்சவ எவளையாவது கட்டிகிட்டு குடும்பம் நடத்து... நாங்க எதுக்கு சாமி உனக்கு இடைஞ்சலா இருக்கனும்" என்று படபடவென பொரிந்து கொட்டினாள் ....

சத்யனுக்குப் புரிந்து போனது... மதியம் மான்சி வந்து தன்னைப் பார்த்தது அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு.... எப்படி தெரிஞ்சிருக்கும் என்ற யோசனையில் ஈடுபடாமல் இதை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி யோசித்தான்...

" என்னத்துக்கு சாமி உன் சந்தோஷத்துக்கு இடைஞ்சலா நாங்க உசுர வச்சுகிட்டு இருக்கனும்? நாங்க நல்லபடியா போய் சேர்ந்துடுறோம் நீ நல்லபடியா வாழு... இந்த முண்டச்சியால இனி என்ன செய்முடியும்... ரெண்டு பொட்டைய பெத்து அதுகல காலாகாலத்துல ஒருத்தன் கையில பிடிச்சு குடுக்க வழியில்லாம நிக்கிறேன்... எங்களால உன் சந்தோசம் கெடவேணாம்ய்யா" என்று பேசிக்கொண்டே போனவளை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சத்யன் ...

" அம்மா என்னம்மா இப்படிலாம் பேசுற? நீங்க இல்லாம எனக்கு என்னம்மா சந்தோசம் இருக்கு? எப்பவுமே நான் அந்தமாதிரி எப்பவுமே எண்ணலைமா" என்று கண்ணீர் தழும்ப கூறியவனை ஏறிட்டாள் பூமாத்தாள்

" நீ சொல்றது நெசம்னா அந்த சிறுக்கி ஏன்டா மதியானம் உன்னைய பாக்க வயக்காட்டுக்கு வந்தா?" என்ற அம்மாவின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலைகவிழ்ந்தான் சத்யன்... மகனைப் பார்த்து ரௌத்திரமாய் விழித்தவள் " அவ அண்ணிகாரி என்னை கூப்ட்டு காறித்துப்பாத குறையா சொல்லியனுப்புறாடா... உன் மவனை ஒழுங்கா இருக்க சொல்லு ... என் நாத்தனாள என் அண்ணனுக்கே கட்டிக் குடுக்கப் போறோம் இடையில புகுந்து உன் மகன் ஏதாவது குழப்பம் பண்ணா அப்புறம் நா சும்மா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போறாடா... நானும் என் புருஷனும் மானம் மரியாதையோட பொழைச்ச ஊருடா இது.. இங்க எங்களை தலைகுனிய வச்சுடாதடா" என்றவள் அப்படியே மடிந்து அமர்ந்து தலையிலடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள் .....

அன்பு தமிழும் ஆளுக்கொரு பக்கமாய் வந்து அமர்ந்துகொண்டு தாயை கட்டிக்கொண்டு அழுதபடி " ஏன்ணே இப்புடி? நாங்கதான் உனக்கு இடைஞ்சல்னு நீ நினைச்சா எங்களை உன் கையாலயோ கொன்னுபோடு அண்ணே" என்று அவர்கள் பங்குக்கு சத்யனை கலங்கடித்தனர்...


சத்யன் யாருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தலையில் கைவைத்துக்கொண்டு பெஞ்சில் அமர்ந்தான் ....

அவன் எதுவும் பேசவில்லை என்றதும் பூமாத்தாளின் ஆத்திரம் அதிகமாக மகள்கள் இருவரையும் மாற்றி மாற்றி அடித்து " எல்லாம் உங்களாலதான்டி ... இவன் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்க மாட்டான்... ஒன்னு செத்துப் போங்க... இல்லேன்னா எவனையாவது கூட்டிக்கிட்டு ஓடிப் போங்கடி" என்று ஆத்திரமாக கத்தினாள்...

இந்த வார்த்தைகள் சத்யனின் தன்மானத்துக்கே பெரும் அடியாக விழுந்தது... ரோசத்துடன் நிமிர்ந்தவன் " அம்மா வார்த்தையை அழந்து பேசு... என் கடமையிலருந்து ஒருநாளும் நான் தவறமாட்டேன் ... என் வாழ்க்கை எனக்கு ரெண்டாம்பட்சம் தான்... என் தங்கச்சிகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்ப்படுத்தி குடுக்காம என் வாழ்க்கைப் பத்தி நான் யோசிக்கவே மாட்டேன்..." என்று சத்யன் ஆவேசமாக கத்த...

அவனை கூர்ந்து பார்த்த பூமாத்தாள் " அப்படின்னா எங்க மூனுபேர் மேலையும் சத்தியம் பண்ணி சொல்லுடா.... அந்த சிறுக்கி மவளை கட்டிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுடா" என்று கேட்க...

சத்யன் யோசிக்கவில்லை கண்முன் மூன்று உயிர்களின் போராட்டம்தான் தெரிந்தது ... வேறு எதுவும் தோன்றவில்லை ..... அவன் அம்மாவைப் பற்றித் தெரியும் நிச்சயம் சொன்னதை செய்வாள் ... எழுந்து தன் தாயிடம் வந்தவன் அவள் தலையில் கைவைத்து " உன்மேல சத்தியமா தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணாம நான் என் வாழ்க்கையை ஏற்ப்படுத்திக்க மாட்டேன் ..." என்று சத்தியம் செய்தான்

அவன் மனதில் ஆழத்தில் இருந்து காதல் இன்னும் ஆழத்துக்குப் போய் சமாதிநிலையை அடைந்தது... நெஞ்சை வந்து அடைத்து துக்கம் தொண்டையில் மாட்டிக்கொண்டு ஈனஸ்வரத்தில் கேவலாய் வெடிக்க அப்படியே மடிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறினான் சத்யன்...

மகனின் கண்ணீர் தாயின் மனதை வதைக்க மகனை அணைத்து ... " அய்யா சாமி எங்களுக்கு உன்னைய விட்டா யாருடா இருக்கா சாமி... எங்க சொத்தே நீதானய்யா.... நீயும் போய்ட்டா எங்களுக்கு யார் கதி சாமி" என்று சத்யனுடன் சேர்ந்து கதறினாள்...



ஒரு ஏழைத் தாயின் நிலையில் பூமாத்தாள் சுயநலமாக சிந்தித்து மகனிடம் சத்தியம் வாங்கினாள்... சத்யனோ சூழ்நிலை கைதியாக நின்று வேறுவழியின்றி சத்தியம் செய்து கொடுத்துவிட்டு கதறிக்கொண்டிருந்தான் ....

அன்றைய இரவு அந்த குடும்பத்தில் அனைவருக்கும் தூங்கா இரவாகிப் போனது ... தங்களால் தான் அண்ணனின் வாழ்க்கை கேள்விக்குறியானது என்று அன்பும் தமிழும் குமுறியபடி படுத்திருக்க.... மான்சியிடம் வெளிப்படையாக சொல்லாத காதல் இறுதி வரை ஊமையாகவே நின்று போனதால் இயலாமை தந்த கண்ணீருடன் சத்யன் விழித்துக் கிடக்க ... எங்கே தன் மகன் தங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு போய் விடுவானோ என்ற பயத்துடனேயே கொட்ட கொட்ட விழித்திருந்தாள் பூமாத்தாள் ....

மான்சியின் வீட்டின் கிழக்கு மூலையின் ஒரு ஓரமாக பாய் விரித்து சத்யனை மட்டுமே நெஞ்சில் சுமந்து அவன் தனக்கு நல்வழி காட்டுவான் என்ற எதிர்பார்ப்புடன் கனவுகள் கைகோர்த்து வர சத்யனுடன் கண் விழித்தே கனவுகளில் மிதந்தபடி மான்சி விழித்திருக்க.... இந்த ஒரு வாரத்திற்கு மான்சியை எப்படி பாதுகாப்பது என்று தனது கணவனுக்கு வகுப்பெட்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா......



No comments:

Post a Comment