Tuesday, January 12, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 27

" இல்ல தாத்தா நீங்க வரதன் ஒரு வேலைக்காரன் தானேனு அலட்சியம் காட்டிட்டீங்க" என்று பரசு குற்றம்சாட்ட
" நான் என்ன செய்ய முடியும் பரசு... வரதன் ஒருத்தனுக்காகப் பார்த்தா... ஒருபக்கம் மருமகளோட அண்ணன் குடும்பம்.... மறு பக்கம் என் பேரன் அவன் மனைவியோட மானம் ... அனுமேல நடவடிக்கை எடுக்க சரியான ஆதரத்துக்காக வெயிட் பண்ணேன் ... அதுக்குள்ள வரதன் அவசரப்பட்டுட்டான்... அதுவுமில்லாம சத்யனுக்கு சரியானப் பிறகு இதைப் பத்தி பேசலாம் இப்போதைக்கு சர்ச்சைக்குரிய வரதனை மட்டும் வேலையை விட்டு அனுப்புங்கனு லண்டன்ல இருந்து உத்தரவு...

இந்த நிலைமையில நான் என்னதான் செய்யமுடியும்... சரியான சந்தர்பத்துக்காக காத்திருந்தேன்... ஆனா அதுக்குள்ள எல்லாம் கையை மீறி போயிடுச்சு இப்பவும் நம்ம குடும்பத்துப் பொண்ணு மேல கைவச்சவனுக்கு உதவுறாங்கன்னு எல்லாரும் பேசுவாங்க பரசு .. அதான் வரதன் விஷயத்துல எதுவுமே செய்யமுடியலை " என்று பெரியவர் கைகளை விரிக்க

பரசு சற்றநேரம் அமைதியாக இருந்தான் ... பெரியவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது ... எழுந்தவன் " நீங்க சொல்றதும் சரிதான் ..... சரி தாத்தா நீங்க தூங்குங்க .. நான் போறேன்" என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து படுத்தவன் ' வரதன் அண்ணாக்கு இவங்களால முடியாது ... ஆனா என்னால முடியுமே?.. ஏன்னா என் அக்காவாலதான அவருக்கு இந்த நிலைமை?" என்று சிந்தித்தபடியே உறங்கிப் போனான்

மறுநாள் காலை எழுந்தவன் மான்சியின் அறைக்கு வந்தபோது மான்சி கண்விழித்து கவலையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள் .... பரசு குழப்பத்துடன் அக்காவை நெருங்கி " என்னக்கா ஆச்சு?...மச்சானுக்கு ஏதாவது?........" என்றவன் வாயைப் பொத்திய மான்சி...

" அவருக்கு ஒன்னுமில்லைடா பரசு... நாலு மணிக்கு கூட மாமா கால் பண்ணாரு ... மறுபடியும் கண் முழிச்சுப் பார்தாராம்.... ஆனா இது வரதன் அண்ணா பத்திடா... நேத் அவரை போலீஸ் கூட்டிட்டு போயிடுச்சு பரசு... உன் மச்சான் பத்தி கவலைல இருந்ததால என்னால அண்ணாக்கு என்னாச்சுனு விசாரிக்க முடியலை ... உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா பரசு " என்று கேட்க....

பரசு ஆமாம் என்று தலையசைத்தான்... ஆனால் அனு மான்சிக்கு செய்த அநியாயத்தை சொல்லவில்லை .. அது சத்யனிடம் சொல்லிவிட்டுதான் மான்சியிடம் சொல்லவேண்டும் என நினைத்தான்...

மான்சி கவலையுடன் " அண்ணா ஏன் இப்படி செய்தார் பரசு... அனு பாவம்ல ரொம்ப சின்னப் பொண்ணுடா.... அவ ஏதாவது தப்பு செய்திருந்தா கூட அதுக்கு தண்டனை இதுவா?.... உன்னோட மச்சான் நிச்சயமா இதை ஏத்துக்கவே மாட்டார்... இனிமேல் நாம வரதன் அண்ணாவை பார்க்கவே முடியாது போலருக்கு?... அவர் செய்ததை என்னால மன்னிக்கவே முடியாது பரசு..... இப்பவும் அவர் அப்படி செய்திருப்பார்னு என்னால நம்பவே முடியலை" என்று வருத்தப்பட்டவளுக்கு ஆறுதல் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தான் பரசு

குழந்தை அழும் குரல் கேட்டு தூக்கியவள் .... " போலீஸ் அண்ணாவை அடிச்சிருக்குமா பரசு?" என்று கவலையுடன் கேட்க...

அக்காவின் அருகில் அமர்ந்த பரசு " அக்கா நான் சொல்றதை கவனமா கேளு.... பெரிய காரணம் இல்லாம வரதண்ணா அனுவை அப்படி செய்திருக்க மாட்டார்... அவர் செய்தது தப்புதான்.... ஆனா அதைவிடவும் பெரிய தப்பு அனு செய்திருக்கனும்...... இல்லேன்னா அவர் இதுபோல நடந்திருக்க மாட்டார்... நாமலே அவரை தவறா நெனைக்க கூடாதுக்கா" என்று சொன்னதும்....

புருவங்கள் முடிச்சிட அவனை யோசனையுடன் பார்த்த மான்சி " நீ சொல்றதும் சரிதான் பரசு ... ஆனா ஒரு பெண்ணோட கற்ப்பை சூரையாடுற அளவுக்கு பெரிய தவறு உலக்த்துல வேற எதுவுமே இல்லைனு தான் நான் சொல்வேன் " என்றாள் உறுதியுடன்...

பரசு மறுபடியும் வரதன் பற்றி எதுவும் பேசவில்லை... இப்போ இதைப் பற்றி பேசுறதை விட வரதனை மீட்பது தான் பெரிய விஷயமாக தேன்றியது பரசுவுக்கு ...


அன்றைய காலை உணவு முடிந்ததும் வெளியே போய் வருவதீக கூறிவிட்டு வரதனை அழைத்து சென்ற காவல்நிஸையத்துக்கு சென்றான் பரசு .... அவன் போன நேரம் இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்க ஏட்டிடம் இரண்டு நூறுரூபாய் நோட்டை கொடுத்ததும் வரதன் இருந்த அறைக்கு அனுப்பினார்கள் ....

கம்பிக்கு வெளியே நின்று உள்ளே இருட்டில் ஒரு மூளையில் சுருண்டு கிடந்த வரதனை கண்டு உள்ளம் குமுறியபடி " அண்ணா " என்று அழைக்க... வரதனிடம் அசைவில்லை... பரசு பதட்டத்துடன் சற்று பலத்த குரலில் மீண்டும் அழைத்தான் ...

வரதன் தலையை மட்டும் திருப்பி பார்த்தான்.... " அண்ணா நான் பரசு வந்திருக்கேன்" என்று பரசு கூறியதும் வரதன் மெல்ல எழுந்து அமர்ந்து தரையில் கையை ஊன்றி எழுந்திருக்க முயல ... எழ முடியவில்லை... பிரம்படி இரண்டு கால் முட்டியையும் பதம் பார்த்திருந்தது ...

பரசுவுக்கு இதயமே வெடிக்கும் போல குமுறியது.... " நாதாரி பயலுக இப்படி குமுறி வச்சிருக்கானுகளே?" என்று முனங்கியவன்.... " அண்ணே நீ வர வேணாம் ... அங்கயே உட்காரு " என்று வரதனிடம் கூற...

" ம்ம்" என்றவன் தலை நிமிராமல் கவிழ்ந்திருந்தான் வரதன் ....

பரசுவுக்கு அவன் நிலைமை புரிந்தது ... " அண்ணே தாத்தா எல்லாம் சொன்னாரு... மிச்சத்தை நானே புரிஞ்சிகிட்டேன் ... என்னா ஒன்னு அந்த சனியனை கத்தியால குத்தி கொன்னுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கலாம் ... இதுபோல செய்தது தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு.... ஆனா அவ பண்ணதுக்கு அனுபவிக்கனும் அண்ணே" என்று பரசு சொல்லிக்கொண்டே போக...

" மான்சி இனிமே என் மூஞ்சிலயே முழிக்காது பரசு" என்ற வரதனின் குரல் வித்தியாசம் உணர்ந்து " அண்ணே முகத்தை நிமிருங்க" என்று பரசு அதட்ட.... வரதன் மெல்ல நிமிர்ந்தான்...

முகமே அடையாளம் தெரியாதது போல் மாறியிருந்தது... உதடு கிழிந்து ரத்தம் உறைந்திருந்தது ... வலது புருவத்தில் ஒரு வெட்டு ... கன்னங்கள் அறை வாங்கி வீங்கியிருந்தது ... பரசு அதிர்ந்து போனான்... அடப்பாவிகளா இப்படி கூட அடிப்பாங்களா? என்று ஆத்திரப்பட்டவன் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது ...

அப்போது ஏட்டு பரசுவை அழைக்க திரும்பி பார்த்தான்... " தம்பி அந்த இன்ஸ்பெக்டர் வர்றதுக்குள்ள அந்த பயலுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி குடுப்பா" என்று கூற...

பரசு தலையசைத்துவிட்டு வெளியே ஓடி அருகில் இருந்த கடையில் இட்லியும் தண்ணீர் கேனும் வாங்கிக் கொண்டு ஓடி வந்தான்... ஏட்டு இன்னும் நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு கதவை திறந்துவிட உள்ளே போய் வரதனின் அருகில் அமர்ந்து இட்லியை கொடுத்தான்

வரதனின் விரல்கள் கூட அசையவில்லை... அடிவாங்கியதில் முடங்கிப் போயிருந்தது... பரசுவுக்கு நெஞ்சம் குமுறி கண்ணீர் வழிய .. இட்லியை பிய்த்து வரதனுக்கு ஊட்டினான் ...மிகுந்த சிரமத்துக்கிடையே வாயை திறந்து வாங்கிக் கொண்டான் வரதன்...

அதன்பிறகு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை ... வரதன் பரசுவின் கையைப் பற்றி " என்னை கேவலமா நினைக்காதே பரசு... என்னால கோபத்தை அடக்க முடியாம தான் அப்படி பண்ணேன்" என்று கூற ...

பரசு அவன் கையை அழுத்திக்கொண்டு " எனக்குத் தெரியும்ணே ... நீங்க அதுபோல ஆள் கிடையாது " என்று சொல்லும் போதே அங்கு வந்து ஏட்டு " தம்பி ஐயா வர்ற நேரமாச்சு கிளம்புப்பா" என்று குரல் கொடுக்க...




பரசு என்ன சொல்லவது என்று புரியாமல்... தைரியமா இருண்ணே .. நான் ஏதாவது செய்ய முடியுமானு பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு வெளியே வந்தான் ...

கதவை பூட்டால் பூட்டியபடி " நாளைக்கு கோர்ட்டுக்கு கூட்டி போவாங்க தம்பி ... நீ யாராவது லாயரைப் பார்த்து ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுப்பா " என்று ஏட்டு யோசனை சொல்ல ... பரசு சரியென்று தலையசைத்து வெளியே வந்தான்

யோசனையுடன் வெளியே வந்தவன் வீட்டுக்கு வந்து நேராக பெரியவர் அறைக்கு தான் சென்றான் ... அவனைப் பார்த்ததுமே " என்ன பரசு வரதனைப் பார்த்தியா?" என்று பெரியவர் கேட்க ...

பரசு அவரை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்து " உடம்புல உசுரு மட்டும் தான் இருக்கு தாத்தா... குமுறி வச்சிருக்கானுங்க பாவிங்க" என்று அழ ஆரம்பிக்க...

பரசுவின் தோளைத் தட்டி ஆறுதல் கூறிய பெரியவர் " அது விதி பரசு ... தப்புக்கு தண்டனை... இனிமேல் அவன் சரியாயிடுவான் ... பாவம் அந்த பொண்ணும் 2 நாளா ரூமை விட்டு வெளியே வரலை... சாப்பாடும் சரியா சாப்பிடலையாம்... நான் யாருக்காக சொல்லமுடியும் பரசு" என்று வேதனையுடன் கூறினார்

" நீங்க யாருக்காகவும் பேசவேண்டாம் தாத்தா... இதுலருந்து நீங்க ஒதுங்கியே இருங்க... ஆனா எனக்கு ஒரு நல்ல வக்கீலா மட்டும் சொல்லுங்க... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று உறுதியுடன் பரசு சொன்னதும்...

அவனையே கூர்ந்த பெரியவர் " நீ வரதனை ஜாமீன்ல எடுக்கப் போறியா பரசு?" என்று கேட்க

" ஆமாம்..... என் அக்காவால தானே அவருக்கு இந்த நிலைமை... அவரை ஜாமீன்ல எடுத்து நான் என்கூடவே கூட்டிப் போகப் போறேன்" என்றான் உறுதியுடன் ...

பெரியவர் பரசுவின் தோளில் தட்டிவிட்டு தனது செல்போனை எடுத்து தனது லாயருக்கு போன் செய்து .... விவரம் கூறி " நீ இதுல தலையிட்டா தண்டபாணி என்னோட ஏற்பாடுதான்னு நினைப்பான் ஏகாம்பரம்.... அதனால வேற யாரையாவது பார்த்து கேஸை எடுத்துக்க சொல்லு" என்று கூற....

எதிர்முனையில் என்ன சொன்னார்களோ... சரி சரியென்று கூறிவிட்டு செல்லை அனைத்தவர் பரசுவிடம் " நான் தர்ற அட்ரஸ்ல போய் பாரு பரசு ... என்னோட லாயர் வேற ஒரு லாயரை ஏற்பாடு செய்றதா சொன்னாரு... ஆனா சொத்து ஜாமீனோ... ரொக்க ஜாமீனோ கட்ட வேண்டியிருக்குமாம்... " என்றார்...

பரசுவின் முகம் நம்பிக்கையில் மலர... " ரொக்கம்னா பேங்க்ல மூனு லட்சம் இருக்கு தாத்தா... சொத்து ஜாமீன் கேட்டா தோப்போட பத்திரம் இருக்கு... அதனால கவலையில்லை... நான் இப்பவே அம்மாச்சிக்கு போன் பண்ணி என் ப்ரண்ட் கிட்ட பத்திரமும் பேங்க் பாஸ்புக்கும் குடுத்தனுப்ப சொல்றேன்" என்றவன் தனது செல்லில் நண்பனை அழைத்தான் ...

வீட்டுக்குப் போய் கால் செய்து பாட்டியிடம் கொடுக்க சொல்லிவிட்டு கட் செய்தான் ...

பெரியவர் அவனை வியப்படன் பார்க்க .... " என்ன தாத்தா அப்புடி பார்க்கிறீங்க... நாங்கல்லாம் ஏழையா இருந்தாலும் கோழைங்க கிடையாது .... ஏழை எங்களுக்கு பணத்தை விட மனுசன் குணம் தான் முதல்ல கண்ணுக்குத் தெரியும் .... இறங்குறதுக்கு முன்னாடிதான் யோசிப்போம்... இறங்கிட்டோம் அப்புறம் யோசிக்கவே மாட்டோம்... ஏன்னா எங்களுக்கு சொந்தக்காரங்க ... சமூகம்... அந்தஸ்து இதைப் பத்தின பயமே கிடையாது... யாருக்கும் பயப்படனும் பதில் சொல்லனும்னு அவசியமும் கிடையாது... மனசுக்கு நியாயம்னு பட்டா எடுத்த காரியத்தில் வெற்றி இல்லேனா மரண்ம்னு கடைசி வரை போராடுவோம்" என்று கண்களில் கனல் தெறிக்க அவன் பேசப் பேச பெரியவர் அசந்து போய் நின்றிருந்தார்


அன்று மதியமே பெரியவரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு வக்கீலை சந்தித்து விபரம் கூறினான் ... சகலமும் அலசி ஆராய்ந்த பிறகு ஜாமீனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாயர் நிலையில் செய்தனர்...

மறுநாள் காலை பரசுவின் நண்பன் பத்திரம் மற்றும் பேங்க் பாஸ் புக்குடன் வந்துவிட... பரசு அக்காவுக்கு தெரியாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்தான் ... வக்கீலின் வீட்டுக்கு நண்பனுடன் சென்றான்...

சரியாக பதினோரு மணிக்கு வரதன் மதுரை ஐகோர்ட் கிளைக்கு அழைத்து வரப்பட்டான்... பரசு நியமித்த வக்கீல் அவனுக்கான ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய... ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில் கடுமையாக எதிர்த்தனர் ...

ஆனால் பரசு நியமித்த வக்கீல் வரதன் குற்றத்தை முழுமனதோடு ஒப்புக்கொண்ட பிறகு போலீஸார் அவனை அடித்து துண்புறுத்தியதை வாதம் செய்து ... போலீஸாரின் விசாரனைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி ஒப்பதல் அளிக்க... வரதனுக்கு நிபந்தனையுடன் கூடிய ரொக்க ஜாமீன் வழங்கப்பட்டது ...

பரசு கோர்ட்டின் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வரதனை அழைத்துக்கொண்டு மாட்டுத்தாவனி பஸ்ஸ்டான்ட் வந்தான்... அங்கிருந்து பெரியவருக்கு போன் செய்து " தாத்தா என் அண்ணனை ஜாமீன்ல எடுத்துட்டேன்... இப்படியே ஊருக்கு கிளம்புறேன் தாத்தா... அக்காக்கு எப்படியும் விஷயம் தெரிஞ்சுடும்... ஏன்னா தண்டபாணி வந்திருந்தார் ... அவர் மூலமா தெரியும்.. அக்கா ஏதாவது கேட்டா நான் பேசிக்கிறேன் தாத்தா...... நான் கிளம்பிட்டதா மட்டும் சொல்லுங்க " என்றான்....

பெரியவர் சரியென்றதும் போன் காலை கட் செய்தவன் .. வரதனையும் தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டார்கள்...

பிறகு சென்னை செல்லும் பேருந்துந்தில் ஏறினார்கள்.... பரசு வரதனின் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டான் .... வரதன் எதுவுமே பேசவில்லை... எந்த ஜென்மத்திலோ செய்த புன்னியம் தான் பரசுவும் மான்சியும் தனக்கு தம்பி தங்கையாக கிடைத்தது என்று எண்ணிக் கொண்டான்...

இரண்டு நாள் போலீஸ் கஸ்டடியில் இருந்தது அவனை பத்து வயது மூப்பாக்கியிருந்தது... ரொம்பவும் சோர்வாக இருந்தவனை தன் தோளில் சாய்த்த பரசு " இனி ஒன்னும் இல்லைனே ... அப்படியே தூங்கு" என்று அன்புடன் கூற .... வரதன் பரசுவின் தோளில் கண் மூடினான் ..........






" உணர்ச்சிவசப்படுபவனை விட....

" உணர்ச்சியை வசப்படுத்துபவனே ..

" சுத்த வீரன்!


" பேச்சை அடைப்புக் குறிக்குள் அடைத்துவிட்டு.....

" செயலை ஆச்சர்யக் குறியாக மாற்றுபவனே...

" சுத்த வீரன்!


" வெட்டியாய் விவாதம் செய்பவனை விட...

" விழிகளை வாசித்து விஷயத்தை கிரகிப்பவனே ...

" சுத்த வீரன்!


" எப்போதும் கர்வமாய் கர்ஜிப்பவனை விட....

" கடமையை ஒரு கண்ணிலும்..

" கருணையை மறு கண்ணிலும் தேக்கியவனே...

" சுத்த வீரன்!


No comments:

Post a Comment