Friday, January 29, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 17

பள்ளிக்கூட திண்ணைக்கு வந்து காமாட்சிப் பாட்டி குழந்தையை வைத்துக்கொள்ள மான்சி அடுப்பு மூட்டினாள்... " கண்ணு காசு இருந்தா குடும்மா ஏதாவது காய்கறி வாங்கிட்டு வர்றேன்... மூனு வேளையும் கஞ்சியே குடிச்சா ரத்தம் செத்துப் போய் வேலை வெட்டி செய்ய முடியாது" என்று பாட்டி சொல்ல...

மான்சிக்கும் பாட்டி சொல்வது சரியென்றுதான் பட்டது.. உடலில் உரமிருந்தால் தான் உழைக்க முடியும் .... காய்கறி வாங்கிவர காசு கொடுத்தனுப்பினாள்



சமையலை முடித்தவள் ... பக்கத்தில் நெருப்பு உலையில் எஃகு உளிகளுக்கு கூர் அடித்துக்கொண்டிருந்த கல் உடைப்பவர்களிடம் சென்று.. " எனக்கு ஆயிரம் சக்கை கல்லு வேணும்... எவ்வளவு காசு ஆகும்?" என்று கேட்க....

அந்த குடியானவன் நிமிர்ந்து பார்த்து ஒரு கல்லு அஞ்சு ரூவா தாயி... ஆனா காண்ட்ராக்டருக்கு உடைக்க தான் எங்களுக்கு நேரம் சரியா இருக்கு... உனக்கு எங்கருந்து கல் ஒடைச்சு தரமுடியும் என்று சொல்ல.... அவருக்கு பக்கத்தில் இருந்த அவர் மனைவி அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல... தலையசைத்தவர் மீண்டும் நிமிர்ந்து " பாவம் கைப்புள்ளையோட நிர்கதியா நிக்கிது... நாமலும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கோம் ... அதுகளுக்கு புண்ணியமா இருக்கும்....கல்லு ஒடச்சு குடுனு என் பொஞ்சாதி சொல்லுதும்மா... இன்னும் ரெண்டு நாள்ல கல்லை கொண்டு வந்து இறக்குறோம் .. நீ கல்லுக்கு நாலு ரூவா குடு தாயி போதும்" என்று சொல்ல

இது போன்ற நல்லவர்களால் தான் பூமி பந்து இன்னும் தனது சுழற்சியை நிறுத்தாமல் இருக்கிறது என்று எண்ணிய மான்சி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு முந்தானையில் இருந்த பணத்தில் நாலாயிரம் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள் ....

அன்று இரவு உறங்கும் போது அவளின் காவல் தெய்வம் பெட்சீட்டால் முக்காடு போட்டுக்கொண்டு அங்கே வந்து ...அந்த நீளமான திண்ணையின் மறுபுறம் வந்து யாருமறியாமல் படுத்துக்கொண்டது.... சத்யனுக்கு பயம்... அந்த கிராமத்தில் நல்லவர்கள் நாலு பேர் இருந்தால் ஊர் பெயரை கெடுக்கவென்று ஊதாரிகள் எட்டு பேர் இருந்தார்கள்... அவர்களின் விஷமத்திலிருந்து மான்சியை காக்க வேண்டுமே என்ற பயம்... கழனிக்குப் போய் படுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு நன்றாக இருட்டியதும் இங்கே வந்து படுத்துக் கொண்டான்....

நடு இரவில் குழந்தை அழுததும் மான்சி எழுந்து அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்க ... இவனும் எழுந்து கொண்டான் ... பெட்சீட்டால் மூடிக்கொண்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.... அவன் நினைத்தது போல் எதுவுமில்லை.... ஒட்டர் இன மக்களின் கூர் தீட்டிய எஃகு உளிகளுக்குப் பயந்து யாரும் அந்த பக்கமே வரவில்லை.....

இரண்டாம் நாள் அதிகாலையே மான்சி அறியா வண்ணம் எழுந்து கழனிக்குப் போய் விட்டான் சத்யன்...... மான்சி சமையல் முடித்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கடப்பாரை இன்னும் மற்றப் பொருட்களை தலையில் வைத்துக் கொண்டு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி தனது மனைக்கு வந்தாள்...

நேற்று போலவே குழந்தையை தொட்டில் கட்டிப் போட்டுவிட்டு..... களத்தில் இறங்கினாள்... கடப்பாரையை தோளில் சாய்த்து கொண்டு மலைமேல் இருந்த கன்னிமார் தெய்வத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டாள்... சனிமூலைக்கு வந்து முந்தானையில் இருந்த காலனா கர்பூரத்தை எடுத்து தரையில் வைத்து தீப்பொட்டியை உரசிப் பற்ற வைத்து கர்ப்பூரத்தை ஏற்றினாள்.. கர்ப்பூர தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு கடப்பாரையை தலைக்குமேல் உயர்த்தி அதே வேகத்தில் தரையில் குத்தி தோண்ட ஆரம்பித்தாள்...

அவளின் உறுதியும் .. உழைப்பின் வேகமும் சேர்ந்து நம்பிக்கையை விதைக்க ,, மண் உமியைப் போல பொது பொதுவென வந்தது... சிறிது நோண்டுவதும் பிறகு அந்த மண்ணை அள்ளி பக்கத்தில் போடுவதுமாக அவளே இரண்டு வேலையும் செய்ததால் நேரம் போனதே தவிர பள்ளம் ஆழமாகவில்லை....

மதியத்துக்கெல்லாம் சோர்ந்து போனாள் மான்சி.... எழுந்து வந்து சோற்றை பிசைந்து அள்ளி விழுங்கும் போது கண்ணீரையும் சேர்த்து விழுங்கினாள்.. சாப்பிட்டு முடித்து குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி பால் கொடுக்க ஆரம்பித்தவளின் முன்னால் மான்சியின் அப்பாவும் அம்மாவும் நின்றனர்...

என்ன? என்பதுபோல் மான்சி நிமிர்ந்துப் பார்க்க.... " இதெல்லாம் என்னத்துக்குடி? உன் அண்ணிகாரி புத்தி தெரிஞ்சதுதான் .. ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்கு வா மான்சி" என்று அவள் அம்மா அழைக்க....

அவர்களை ஏளனமாகப் பார்த்த மான்சி " உன் மக மன்னிப்பு கேட்பா... ஆனா நான் கோபாலுக்குப் பொண்டாட்டி.... கோபால் பொஞ்சாதி யார்ட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டா.... கையாலாக உன் புள்ளைய கட்டிகிட்ட அவளுக்கே அவ்வளவு வீராப்புன்னா.... நல்லவனுக்கு முந்தி விரிச்சு சிங்கக்குட்டி மாதிரி புள்ளையப் பெத்த எனக்கு எம்புட்டு இருக்கும்?.... இனி செத்தாலும் அந்த வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்... நீங்கப் போய் சேருங்க...இல்லேன்னா நாளைக்கு நீங்க செத்தா கொள்ளி கூட போடமாட்டேன்னு சொல்லிடுவான் உங்கப் புள்ளை" என்று நக்கலாக மொழிந்தாள் மான்சி....

அவளை பெற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மான்சி சமாதானம் ஆகவில்லை என்றதும் விதியை நொந்தபடி வீட்டுக்கு கிளம்பினார்கள் மான்சியைப் பெற்றவர்கள்.....


அவர்கள் போனதும் குழந்தையை தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு பள்ளத்தில் இறங்கி நெற்றி வியர்வையை வழித்து எரிந்துவிட்டு வீம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தாள்.....

மான்சியின் நிலையை காண சகிக்காமல் அவள் பெற்றோரிடம் பேசி மான்சி பார்க்க அழைத்து வந்த சத்யனின் காதுகளில் மான்சி கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் குயிலின் இசையாய் ஒலித்தது.... அவளின் உறுதியும் வீராப்பும் இவனுக்கும் உற்சாகத்தை கொடுத்தது... ஏன்தான் அவர்களை அழைத்து வந்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டான்...

ஆனாலும் உதவிக்கு இன்னொரு ஆள் இல்லாமல் கடக்கால் பள்ளம் எடுக்க முடியாது.... மீண்டும் ஏழுமலையைத் தேடி ஓடினான் சத்யன்.....

அன்று முழுவதும் 16க்கு 16 சுற்றில் ஒரு அடி ஆழமே தோண்ட முடிந்தது மான்சியால்..... மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூட திண்ணைக்கு வந்தாள்... தனது கணக்குப்படி ஒரு வாரத்தில் குடிசை கட்ட முடியாது போலிருக்கே என்ற கவலை வந்தது... என்ன செய்யலாம்... JCP இயந்திரத்தை வைத்து எடுக்கலாம்... ஒரு மணி நேரத்தில் வேலை முடியும்... ஆனால் மணிக்கு இரண்டாயிரம் கேட்பான்.... வேறு வழியில்லை என்று தோன்றியது....

அன்று இரவு உறங்கும் முன்பு மான்சியை காண வந்த ஏழுமலையிடம் " தம்பி பக்கத்து ஊர்ல ஜேசிபி இருக்குள்ள... அதை நாளைக்கு எடுத்துட்டு வர சொல்லுபா... மலைப் பாறையா இருக்குறதால கடப்பாரைக்கு அசையலடா தம்பி" என்று மான்சி சொன்னதும் ...

ஏழுமலை வியப்பின் உச்சிக்கேப் போய்விட்டான்.... ஏனென்றால் சத்யனும் அதே யோசனையைத்தான் சொல்லி அனுப்பியிருந்தான்...

மூன்றாம்நாள் காலை வழக்கம் போல் விடிவதற்கு முன்பு குளத்தில் இறங்கி குளித்த மான்சிக்கு மறு பக்கம் மறைவாக அமர்ந்து காவலிருந்தான் சத்யன்

சரியாக எட்டு மணிக்கு ஜேசிபி இயந்திரம் எடுத்துவரப் பட்டு ஒரு மணி நேரத்தில் பள்ளம் எடுக்கப்பட்டது..... நான்கடி ஆழத்தில்.. இரண்டடி அகலத்தில் பள்ளம் எடுத்தனர்... மான்சி அவர்களுக்குப் பணத்தை கொடுத்தனுப்பிவிட்டு... மலையின் அடிவாரத்தில் உருண்டு வந்து விழுந்து கிடக்கும் கற்களை தலையில் சுமந்து வந்து பள்ளத்துல் போட்டு கடக்கால் துர்க்க ஆரம்பித்தாள்... இயந்திரம் தோண்டி கொட்டிய மண் பக்கத்தில் இருக்க... ஒரு வரிசை கல் ஒரு வரிசை மண் என்று பள்ளத்தில் போட்டு ஐந்து அடுக்குகளாக கற்களை அடுக்கி கடக்கால் வேலையை முடித்தாள்...




அன்று மாலை ஏழுமணி வரை கற்களை பொறுக்கி வந்து பள்ளத்தில் போட்டாள்... தோண்டிய பள்ளம் தரை மட்டத்துக்கு வந்தது... இயந்திரம் தோண்டிய மண் மொத்தமும் மீண்டும் பள்ளத்தில் அள்ளி கொட்டினாள்...

அன்று இரவு உறங்கக்கூட முடியாத அளவுக்கு உடல் வலித்தது.... புரண்டு புரண்டு படுத்து அவள் படும் துன்பத்தை கண்டு இதயம் வலிக்க கையாலாகாது தூரத்தில் படுத்திருந்தான் சத்யன்......

நான்காம்நாள் காலை மலையின் மறுபக்கம் இருந்த மழைநீர் குட்டையிலிருந்து குடத்தில் தண்ணீர் மொண்டு வந்து கடக்காலில் ஊற்றினாள்.... மதியத்தோடு அந்த வேலை முடிய... சுற்று சுவர் வைக்க மண் அள்ளி வரவேண்டும் ... காட்டின் ஒரு பகுதியில் செம்மண் கிடைக்கும்.... அந்த மண்ணால் கட்டிய வீடுகளுக்கு மேல் தளமே போடலாம் அந்தளவுக்கு உறுதி வாய்ந்த மண்...

மான்சி குழந்தையை மடியில் வைத்து இறுக்கமாக கட்டி அந்த துணியை தோளின் குறுக்காக தூளிபோல் போட்டுக்கொண்டாள்..... இரும்பு கூடையையும் மண்வெட்டியும் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்று மண் அள்ளி வந்து கொட்டினாள்.... இரவு ஏழு மணி ஆகிவிட்டது.... நிலவின் வெளிச்சத்தை விட அவளது வைராக்கியம் வெளிச்சமாக இருந்தது...

கழனியிலிருந்து நேரே அங்கே வந்தவன்... சோர்ந்த நடையுடன் மான்சி போவதைப் பார்த்துவிட்டு தனது வீட்டுக்கு கிளம்பினான் சத்யன் ...

ஐந்தாம் நாள் காலை கருங்கற்கள் உடைத்து தயாராகிவிட .. அவர்களே மலையின் மீதிருந்து எடுத்து வந்து மான்சியின் மனையில் போட்டனர்... மான்சி இன்னும் கொஞ்சம் மண் அள்ளி வந்து கொட்டி விட்டு அதில் தண்ணீர் ஊற்றி காலால் மிதித்து சேறாக மண்ணை குழைத்தாள்....

அன்று கூலி வேலைக்குப் போகாமல் காமாட்சிப் பாட்டி குழந்தையைப் பார்த்துக்கொள்ள... மான்சி சதுரமாக இருந்த கற்களை அடுக்கி மண்ணால் பூசி சுவர் எழுப்ப ஆரம்பித்தாள்.... கல் உடைப்பவர்கள் உதவிக்கு வர ,, சரி அவர்களுக்கான கூலியை கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு கடகடவென சுவர் வைக்க ஆரம்பித்தாள் மான்சி... பொழுது சாய சாய மூன்றுபக்க சுவர் முடிந்தது காமாட்சிப்பாட்டியின் வீட்டிலிருந்து லாந்தர் விளக்கை எடுத்து வந்து நான்கு பக்க சுவரும் வைத்து முடிக்கும் போது இரவு மணி எட்டு ஆகிவிட்டது....

மான்சி வந்து சோறு செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி பத்து ஆகிவிட்டது.... இவளை காக்கும் பொருப்பில் ஒரு ஜீவன் உண்ணவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் தவித்து விழித்திருப்பதை உணராமலேயே உறங்கினாள் மான்சி.....


நடு சாமத்தில் குழந்தையின் அழுகுரல் கூட மான்சியை அசைக்கவில்லை.... குழந்தை அழுததும் சத்யன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்... அவ்வளவு அலுப்பில் உறங்கினாள் மான்சி..... இயந்திரம் போல் தூக்கத்தில் குழந்தையை இழுத்து மார்போடு அணைத்து ரவிக்கையை உயர்த்தியதும் குழந்தை பால் குடிக்க ஆரம்பித்தது... குடித்து முடித்து மழலையில் பேசியபடி கைகாலை ஆட்டி விளையாடிய மகனை ரசிக்கக்கூட முடியாமல் உறங்கியவளை பரிதாபத்துடன் பார்த்தான் சத்யன் ....

ஏதோவெரு அசட்டுத் துணிச்சல் கைகொடுக்க மெல்ல எழுந்து பூனைநடையாக நடந்து மான்சியின் அருகே வந்து பார்த்தான்... நிலவின் வெளிச்சத்தில் குழந்தை அழகாக சிரித்தபடி விளையாடியது.... குழந்தையின் சிரிப்பைப் பார்த்ததும் கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் போய்விட ... சத்யன் குனிந்து குழந்தையை தூக்கினான்... பால் கொடுத்தபடி உறங்கிப் போன மான்சியின் தனங்களை ஒரு தாயின் அன்போடு ... மனதில் கலங்கமின்றி அவள் போர்த்தியிருந்த பழம் புடவையால் இழுத்து மூடினான் .... குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வெளிச்சமான இடத்துக்கு வந்தான்....

முதன்முறையாக மான்சியின் குழந்தையை தனது தோளில் சுமக்கும் பாக்கியத்தைத் தந்த கடவுளுக்கு நன்றி சொன்னது சத்யனின் மனம்.... குழந்தை அவன் முகம்பார்த்து சிரிக்க... சத்யனுக்கு அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது... அவன் கையில் இருக்கும் குழந்தை,, மான்சியின் வயிற்றில் இருக்கும் போது கழனியில் படுத்துக்கொண்டு பலமுறை சத்யன் கனவில் வருடிக் கொடுத்த குழந்தை தானே? ஆசை தீர குழந்தையின் முகமெல்லாம் முத்தமிட்டான்...

சத்யனுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் மட்டுமே வந்தது.... " என்னாடா செல்லம் உன்னை என்னப் பேர் சொல்லி கூப்பிடுறது? உன் அம்மா இன்னும் உனக்கு பேர் வைக்காம சின்னு னு கூப்பிடுறாளே... என் தங்கப் பிள்ளைக்கு என்ன பேர் வைக்கிறதுடா செல்லம்" என்று குழந்தையின் காதில் பேசினான்...

சத்யனின் கொஞ்சலில் குழைந்து போனான் மான்சியின் மகன்... இதமாய் சத்யனின் தோளில் படுத்துக் கொண்டவனை மெல்ல வருடி உறங்க வைத்தான் சத்யன்.... குழந்தை நன்றாக உறங்கியதும் தூக்கி வந்து உறங்கும் மான்சியின் பக்கத்தில் படுக்க வைத்துவிட்டு துணியால் மூடினான்.... சற்று நேரம் வரை மான்சியின் முகத்தை வெகுநாள் கழித்து அருகில் பார்த்தான்.....

காதிலும் கழுத்திலும் எதுவுமில்லை... பிறை நெற்றியில் பொட்டில்லை.... கலைந்து போய் காற்றில் பறக்கும் செம்பட்டை படிந்த கூந்தல்.... வெயிலில் உழைத்ததின் அடையாளமாக மங்கிய அவளின் பொன்னிற மேனி.... இன்னும் ஒரு வாரம் உடுத்தினால் கந்தலாகிவிடக் கூடிய புடவை.... இத்தனைக்கும் மத்தியில் சிறிதும் குன்றாத மங்காத அழகுடன் அவன் தேவதை..... பார்க்கப் பார்க்க பிடிக்கக் கூடிய அழகு மான்சியின் அழகு.... அவள் பாதங்களையாவதுத் தொட்டுப் பார்க்கத் துடித்த விரல்களை அடக்கி கையை இழுத்துக்கொண்டு என்றுமில்லாத உற்சாகமான மனநிலையில் சத்யன் தனது இடத்துக்குப் போய்ப் படுத்துக்கொண்டான்....


ஆறாவது நாள் காலை,, வைத்த சுவர் நன்றாக காயவேண்டும் என்பதால் அன்று குடிசைக்கு தேவையான கொம்புகளும் பனை ஓலையும் வாங்குவதற்காக அலைந்தாள் மான்சி... பாட்டியும் அவளுடன் வந்திருந்தாள்... கூரை வீட்டை பிரித்து சிமிண்ட் வீடு கட்டிக்கொண்ட ஒருவரிடம் போய் பழைய கொம்புகளை விலை பேசி வாங்கினார்கள்.... அதேபோல் ஒரு பழைய கதவையும் வாங்கினாள்

ஆனால் ஓலை மட்டும் கிடைக்கவில்லை... ஓலை கிடைத்தாலும் மரத்திலிருந்து வெட்டி அதை படிய வைத்து அதன்பின் கூரை வேய்ந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகும்... அது சரியாக வராது என்று எண்ணிய மான்சிக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது...

அந்த மலை குன்றுகளில் ஏராளமாக கிடைக்கும் மஞ்சி எனும் பில் கொண்டுதான் முன்பெல்லாம் வீடு கட்டுவார்கள்.... ஆளுயரத்துக்கு வளரக்கூடிய இந்த புல் வகை நீரை ஊடுருவ விடாது... ஒரு முறை கட்டினால் கிட்டத்தட்ட பத்து வருடம் வரை அந்த கூரை பயன்படும்... காய்ந்து பழுப்பு நிறத்தில் இருக்கு மஞ்சிப் புல்லை பெரியப் பெரிய கத்தைகளாக கட்டி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி நார் கொண்டு கட்டி கூரை வேய்ந்து முகப்பில் தொங்கும் புல்களை அருவாள் கொண்டு சமமாக அறுத்துவிட்டால் அழகான குடிசை வீடு தயார்.... ஆதி கால முனிவர்களின் குடில்கள் கூட இப்படித்தான் உருவாக்கினார்கள்....

மான்சி குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு அருவாளுடன் மலையேறினாள்..... விளைந்து பழுத்துக் கிடந்த மஞ்சி புல்களை கடகடவென அறுத்துத் தள்ளினாள்... பெரிய பாறையில் அள்ளிப் போட்டு பெரியப் பெரிய சுமைகளாக கட்டி பாறையின் கீழே வந்து சுமையை உருட்டி தலையில் தூக்கிக்கொண்டு கீழே எடுத்து வந்தாள்...

நான்காவது சுமைக்கு பாட்டி வந்து குழந்தையை வாங்கிக் கொள்ள ... மான்சிக்கு வேலை கொஞ்சம் சுலபமானது... புல் கட்டுகள் வேகமாக அடிவாரம் வந்து சேர்ந்தன..... சுமார் நாற்பது முறை மலையில் ஏறி இறங்கினாள் மான்சி .... சில நேரம் மான்சியின் கால்கள் பலமிலந்து நடுங்கின... அதற்கு ஓய்வு கொடுக்க மனமின்றி வீம்புடன் வேலை செய்தாள் ..... சிறு சிறு வெடிப்புகள் விழுந்து காலை தரையில் ஊன்றுவதற்கு கஷ்டமாக இருக்க... பழைய துணியை நனைத்து இரண்டு காலிலும் கட்டிக்கொண்டு மலையில் ஏறிச் சென்று சுமையைத் தூக்கி வந்தாள் மான்சி....

அன்று இரவு ஏழு மணிக்கு காமாட்சிப் பாட்டியை துணைக்கு அழைத்துக்கொண்டு பக்கத்து ஊர் சென்று மஞ்சி குடிசை கட்டும் ஆட்களுக்கு சொல்லிவிட்டு வந்தாள் மான்சி....

அன்றும் அலுப்புடன் உறங்கியவளின் பக்கத்தில் சிரித்து விளையாடிய குழந்தையை சத்தமின்றி வந்து தூக்கிக்கொண்டான் சத்யன்... மூக்கால் உரசி குழந்தையை அவன் கொஞ்ச... தனது இரு கையாளும் சத்யனின் தாடையைப் பற்றிக்கொண்டு சிரித்தது குழந்தை...


குழந்தையை தூங்க வைத்து மான்சியின் அருகில் படுக்க வைத்தவன் அப்போதுதான் மான்சியின் பாதங்களைப் பார்த்தான்.... வெடிப்புகளில் கசிந்த உதிரம் உறைந்து போயிருந்தது... கதறியது சத்யனின் மனம்... காதல் துணிச்சலைத் தர மான்சியின் பாதங்களை மெல்ல மெல்ல எடுத்து தனது கைகளில் ஏந்தி முகத்தை அந்த சொரசொரப்பான பாதத்தில் பதித்தான்.....

அவனையும் அறியாமல் வழிந்த கண்ணீர் அவள் பாதத்தில் இருந்த புண்களில் வழிந்தது.... பச்சை ரணத்தில் உப்புநீர் பட்டதும் .சுர்ரென்று எரிச்சல் எடுக்க... தூக்கக் கலக்கத்தில் தன் பாதங்களை வேகமாக இழுத்த மான்சி... கால்களை யாரோப் பற்றியிருப்பதை உணர்ந்து பட்டென்று கண்விழித்தாள்.....

அவள் கண்ணெதிரே கண்ணீருடன் சத்யன் ... இவளின் கால்களை தன் கைகளில் தாங்கியபடி.... வேறு சமயமாக இருந்திருந்தால் ஆவேசமாக கத்தி அவனை அறைந்திருப்பாள்... ஆனால் சத்யனின் கண்களில் வழிந்த கண்ணீர் அவளை தடுத்து நிறுத்த .. கால்களை மட்டும் உதறி விடுவித்துக் கொண்டாள்....



அவன் முகத்தைப் பார்க்கவும் கூசியவளாக தலை குனிந்து அவனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டபடி வேண்டாம் என்பது போல் தலையை அசைக்க ... குனிந்திருந்தாலும் அந்த காட்சி அவளின் பார்வை வட்டத்துக்குள் தெளிவாக விழுந்தது... சத்யன் தனது நெஞ்சில் அறைந்து கொண்ட காட்சி தெளிவாக தெரிய சட்டென்று நிமிர்ந்தாள் மான்சி.... இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளின் விழிகள் இப்போது நெருப்புத் துண்டென ஜொலித்தன.....

" யாரோட பரிதாபமும் எனக்கு வேண்டாம்..... எல்லாரும் என்னை வேசி மாதிரினு தான் சொன்னாங்க... இந்த நேரத்துல என்கிட்ட வந்த நீ என்னைய உண்மையாவே வேசியா ஆக்கிடாத?.... நான் விதவை தானே தவிர வேசி இல்லை..... தயவுசெஞ்சு என்னை வாழ விடு" என்று மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக மான்சி கூற....

சத்யனுக்கு சவுக்கடி போல் வந்து விழுந்து இதயத்தை கிழித்தன மான்சியின் வார்த்தைகள்.... அவளையே சிறிது நேரம் பார்த்தவன் " என்னால உனக்கு எந்த கலங்கமும் வராது.... குழந்தை அழுதுச்சு தூக்கிட்டுப் போய் தூங்க வச்சு கொண்டு வந்து படுக்க வச்சேன்..." என்றவன் எழுந்து சென்று தனது இடத்தில் படுத்துக் கொள்ள...

மான்சி அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.... அப்படின்னா இத்தனை நாளா அந்த இடத்துல போர்த்திகிட்டு படுத்திருந்தது இவன் தானா?..... குழந்தையை இன்னைக்கு மட்டும் தான் தூக்கி போய் தூங்க வச்சானா... இல்லை தினமுமா? இந்த இரு கேள்விகளும் பூதகரமாய் எழுந்து நின்று மான்சிப் பார்த்து ஏளனமாய் சிரிக்க.... மான்சி ரொம்பவும் இழிந்து போனது போல் உணர்ந்தாள்....




6 comments: