Monday, January 4, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 5

அறையெங்கும் தெய்வீக மணம் கமழ அம்மாச்சி செய்து எடுத்துவந்த சர்க்கரைப் பொங்கலையும் சுண்டலையும் வாழையிலையில் படையலிட்டு பலநாள் பழக்கப்பட்டவள் போல் நேர்த்தியாக பூஜை செய்தாள்.... மரகதம் தனது பேத்தியை பெருமை பொங்க பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...
கற்பூரம் ஏற்றி பூஜை முடிந்ததும் மரகதம் மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட... மான்சி எரியும் தீபத்தின் முன்பு சம்மணமிட்டு அமர்ந்தாள்.... குமாஸ்தாவின் மகள் திரைப்படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பாடலை மனமுருகிப் பாட ஆரம்பித்தாள்..... 





எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்


திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்!
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்!

எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்


பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும்!
வண்ணக் கவிதை பாடப் பாட, வாழ்வும் வளமும் தேடி வரும்!

எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!

எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

கண்கள் நேராக முருகன் சிலையைப் பார்த்திருக்க உதடுகள் பிழையின்றி அந்த பாடலை பாடியது.... கணீரென்ற அவளது குரலில் அந்த பாடல் பங்களா முழுவதும் ஒலித்தது பாட்டுக்கு நடுவே பின்னால் நிழலாடுவது போல் இருக்க. மான்சி திரும்பவில்லை. முழுப் பாடலையும் பாடி முடித்து விழுந்து கும்பிட்டு எழுந்ததும் தான் திரும்பிப் பார்த்தாள்...

பூஜையறை வாசலில் சாய்ந்து நைட்டி அணிந்து அதன் மேலே ஹவுஸ் கோட் அணிந்த ஒரு பெண் கண்ணில் வழியும் நீரைக்கூட துடைக்க தோன்றாமல் நின்றிருந்தாள்... மான்சி திரும்பிப் பார்த்ததும் தெய்வங்களை கூட கும்பிடாமல் மான்சியைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டாள் அந்த பெண்.... மான்சி பாடிய பாடல் அந்த பெண்ணின் நெஞ்சை உருக்கி கண்களில் வழியவிட்டது

மான்சிக்குப் பார்த்ததுமே புரிந்து போனது... இவங்கதான் ராஜேஸ்வரி அம்மா போலருக்கு.... வேகமாக எழுந்து கற்பூரம் தீபம் இருந்த தாம்பாளத்தை கையில் ஏந்தியபடி ராஜேஸ்வரியின் எதிரில் வந்து நின்று “ எடுத்துக்கங்கம்மா” என்றாள்...

ராஜேஸ்வரியின் கண்ணீர் இன்னும் நிற்க்கவில்லை... கண்ணீருடனேயே தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவள் “ நீ யாரும்மா?” என்று கேட்டாள்... அந்த வார்த்தையில் தெய்வத்தை நேரில் கண்ட பரவசம்...

மான்சி மெல்லிய புன்னகையுடன் “ நான் மான்சி... மரகதம் பாட்டியோட பேத்தி... இங்க வேலைக்கு வந்திருக்கேன்மா” என்றவள் தீபத் தட்டை உள்ளே வைத்துவிட்டு மறுபடியும் ராஜேஸ்வரியின் அருகில் வந்து “ கவலைப்படாதீங்கம்மா... நமக்கும் மேல கடவுள் இருக்கார்... ஒரு தாயின் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டிய கடமையிருக்கு... உங்க மகன் சின்னய்யா நிச்சயம் எழுந்து நடமாடுவார்” என்று மான்சி ஆறுதலாக கூறியதும்...

ராஜேஸ்வரி தன்னை மறந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு “ இன்னைக்கு காலையில உன்னோட பாட்டை கேட்டுதான் எழுந்தேன் ஏதோ அருள்வாக்கு சொல்ற அம்மன் மாதிரி இதை சொல்ற... என் மகன் எழுந்து நடந்தா போதுமே.... உன் வார்த்தைகள் என்னைக்குமில்லாத பலத்தை தருது மான்சி ” என்று தனது கண்ணீரால் மான்சியின் கைகளை நனைத்தாள்...

மான்சிக்கு அந்த தாயின் மனநிலை புரிந்தது... பரசு படுக்கையில் கிடந்த போது தானும் இதே நிலையில் தானே இருந்தோம் என்று நினைத்துக்கொண்டாள். பரசுவை நினைத்ததும் சட்டென்று ஏதோ தோன்ற “ அம்மா கொஞ்சநாளைக்கு முன்னாடி என் தம்பி தலையில அடிபட்டு படுக்கையில் கிடந்தப்ப ஆஸ்பத்திரியில பக்கத்து ரூம்ல இருந்த ஒரு ஐயர் வீட்டம்மா சில ஸ்லோகம் சொல்லிக் குடுத்தாங்க... அந்த ஸ்லோகத்தை நோயாளியோட ரத்த சம்மந்தம் உள்ளவங்க சொல்றது தான் நல்லதுன்னு சொன்னாங்க... என் தம்பிக்காக நான் இரண்டு வேளையும் குளிச்சிட்டு அந்த ஸ்லோகத்தை சொல்வேன்.... இப்போ என் தம்பி பூரணமா குணமாயிட்டான்... உங்க மகனுக்காக நாளையிலருந்து அந்த ஸ்லோகத்தை சொல்லலாம்... நீங்களும் வர்றீங்களா? நான் சொல்லும்போது நீங்களும் கூட சொன்னா போதும் ” என்று ராஜேஸ்வரியை அழைத்தாள் மான்சி....

ராஜேஸ்வரி யோசிக்கவில்லை சட்டென்று “ சரிம்மா நீ எப்ப சொல்றியோ நான் வர்றேன்” என்றாள்... எட்டு மணிக்கு முன்பு எழுந்தே பழக்கமில்லாத அவள் மகனுக்காக அதிகாலை எழுந்து மான்சியுடன் சேர்ந்து ஸ்லோகங்களை சொல்லத் தயாரானாள்...

அதன்பின் ராஜேஸ்வரி தனது அறைக்கு செல்ல... மான்சி மற்ற வேலைகளை கவனிக்க சென்றாள்.... ஒரே நாளில் மாற்றம் வரும் என்பதை நம்பாதவர்கள் கூட நம்பும் அளவிற்கு மான்சியின் வரவு அந்த வீட்டையே தலைகீழாக மாற்றியது.... சபாபதிக்கே யோசனைகள் சொன்னாள்... வேலைக்காரர்களை ஷிப்ட் மாற்றிப் போட்டு... அவரவருக்கு ஏற்ற வேலை கொடுத்தாள்... ஒரு குடும்பப்பாங்கான எஜமானி எப்படியிருப்பாளோ அப்படி நேர்த்தியாக சகலவற்றையும் கவனித்து செய்தாள்...

அதிகாலை எழுந்த ராஜேஸ்வரி தலைக்குளித்து ஈரம் சொட்ட மான்சியுடன் அமர்ந்து ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.... இரண்டு பெண்களின் கணீர் குரலும் இரண்டு வேளையும் அந்த பங்களாவில் ஒலிக்க ஆரம்பித்தது.... ராஜலிங்கம் கூட மாலைவேளையில் பூஜையறை வாசலில் வந்து நின்று அவர்கள் சொல்லும் ஸ்லோகங்களை முனுமுனுக்க ஆரம்பித்தார்...

வேலு கூட மாடியிலிருந்து இறங்கி வந்து பூஜையறையின் வாசலில் நின்று கண்மூடி சாமி கும்பிட்டு விட்டு போவான்... இப்போதெல்லாம் ஒட்டுமொத்தமாக அத்தனைப் பேரின் பிரார்த்தனையும் சத்யனின் நலனுக்காகத்தான் என்றானது

தெய்வம் என்றால் என்னவென்றே அறியாமல் இருந்த குடும்பத்தில் இருவரை பூஜையறைக்கு கொண்டுவந்து விட்டாள் மான்சி....

தாத்தா ஹாலில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்தார்.... மான்சி யார் என்றும் அவள் எங்கிருக்கவேண்டியவள் என்றும் அவர் அறிவுக்கு எட்டினாலும்.... தன் பேரனின் இயலாமையை எண்ணி மவுனமாக கண்ணீர் விட்டார்.... இவள் மட்டும் ஆறுமாதம் முன்பு இந்த வீட்டுக்கு வந்திருந்தால் என் பேரனுக்கு இப்படி ஆகியிருக்காது... இன்னேரம் இவளும் இந்தவீட்டு இளையராணி ஆகியிருப்பாள் என்று இயலாமையுடன் யோசித்து கலங்கினார்...

மரகதத்தின் எச்சரிக்கையால் மான்சி மாடிப்படிகளில் கூட கால் வைப்பதில்லை..... ஆனால் பார்த்தறியாத அவனுக்காக மனமுருகி பிரார்த்தனை மட்டும் செய்தாள் ...

அன்று மான்சி பூஜை செய்யக்கூடாது என்பதால் தோட்டத்து வேலைகளை செய்துவிட்டு பரசுவிற்கு போன் செய்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்... பிறகு மதிய உணவிற்கான நேரம் வந்ததும் சாப்பிடுவதற்காக பங்களாவுக்குள் நுழைந்தாள்....ஆனால் அங்கே வேலைக்காரர்கள் எல்லாரும் கலவரத்துடன் கையை பிசைந்தபடி நின்றிருந்தனர்

மான்சி குழப்பத்துடன் அவர்களை நெருங்கி “ என்ன ஆச்சு? எல்லாரும் ஏன் இப்படி நிக்கிறீங்க?” என்று கேட்க...




சபாபதி முன்னால் வந்து “ இன்னிக்கு மீனாட்சி அம்மன் கோயில்ல சிறப்பு பூஜைன்னு மரகதம்மாவையும் கூட்டிட்டிப் போயிட்டாங்க.... இந்த வேலுவும் சின்னய்யா தூங்குறாருன்னு சொல்லிட்டு எங்கயோ வெளியப் போனான்.... போனவன் இன்னும் வரலை... சின்னய்யாவுக்கு இன்னும் சாப்பாடு குடுக்கலை... அதான் எல்லாரும் பயந்துபோய் நிக்கிறோம்” என்று நிலைமையை தெளிவுப்படுத்தினார்

மான்சி எல்லோரையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு “ சாப்பாடு குடுங்க நான் எடுத்துட்டுப் போய் குடுக்கிறேன்” என்றாள்....

சபாபதி திகைப்புடன் “ என்னம்மா அவரோட குணம் தெரியாம பேசுற? வேற யார் போனாலும் பயங்கரமா கத்துவார் ” என்று சலிப்புடன் கூற...

“ சாப்பாடு எடுத்துட்டுப் போகலைனாலும் கோபப்படுவார் தானே? இதோப்பாருங்க சார் ... இப்போ அவர் இருக்குற நிலைமைல நாம யாரும் போகாம இருந்தா இனிமேல் நமக்கு அவ்வளவு தான் மரியாதை போலன்னு விரக்தியா நினைப்பார்.... அதைவிட சாப்பாடை குடுத்து திட்டினாலும் அடிச்சாலும் வாங்கிகிட்டு வரலாம்... மொதல்ல சாப்பாட்டை குடுங்க நான் எடுத்துட்டுப் போறேன்” என்று மான்சி அதட்டியதும் உடனடியாக சத்யனுக்கான சாப்பாடு வந்தது...

மான்சி உணவு பாத்திரத்தை வாங்கிக்கொண்டு மென் நடையாக மாடிப்படிகளில் ஏறினாள்.... இத்தனை நாட்களாக கீழேயிருந்து பிரமிப்புடன் பார்த்த கதவை தள்ளித்திறந்து கொண்டு உள்ளேப் போனாள்...

சகல வசதியுடன் கூடிய பிரமாண்டமான அந்த அறையில் வலது பக்கமாக ஓரே படி கொண்ட ஒரு மேடையிருக்க அதன்மேல் ஒரு கட்டிலில் ஒரு உருவம் படுத்திருந்தது.. மான்சி தைரியத்துடன் உள்ளே நுழைந்து உணவை டேபிளில் வைத்துவிட்டு கட்டிலை நெருங்கினாள்...

உறங்கிக்கொண்டிருந்தவனை உற்றுப் பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோவொன்று இடம் மாறியது... இன்னும் நெருக்கமாகப் பார்த்தாள்... ச்சீச்சீ இது அவன் இல்லை... அவன் முடி நீளமாக... தாடிகூட வித்தியாசமாக.... கன்னங்கள் செழுமையுடன்... கண்களில் உயிர்ப்புடன்... ம்ஹூம் இது முதலாளி மகன் சத்யன் தான்.... அன்று வந்த கார்க்காரன் இவன் இல்லை

மனசாட்சி இல்லை நன்றாகப் பார் என்று தகராறு செய்ய.... மான்சி உற்றுப்பார்த்தாள் அந்த உருவத்தை.... நெற்றி... புருவங்கள்... மூடியிருந்த இமைகள்.... நேராய் நீண்ட நாசி.... அழுத்தமாய் இறுகி
கிடந்த உதடுகள்...... சற்றே குழிவிழுந்த கன்னங்கள் ... அழுத்தமான மேவாய்.... மான்சியின் மனது அவசர அவசரமாக அன்று பார்த்த அழகனுக்கு நோயாளி வேஷமிட்டுப் பார்த்தது....அய்யோ இவனைப் போலவே இருக்கிறானே...... ஓலமிட்ட மனதை அடக்கி அவசரமாய் அறையை நோட்டம் விட்டாள்

சற்று தொலைவில் கண்ணாடியால் ஆன அலமாறி ஒன்றில் ஏராளமான புகைப்படங்கள்.... ஆனால் அத்தனையும் கவிழ்த்தும் திருப்பியும் வைக்கப்பட்டிருந்தது ...அவசரமாக அலமாறியை நெருங்கி திறந்தாள் ... ஒரு புகைப்படத்தை கையிலெடுத்து பார்த்தாள் ....

அவள் கூற்று பொய்யாகவில்லை.... அவனேதான்.... இவனா சத்யன்?.... இவனுக்கா இந்த நிலை?..... அன்று அவனது நடைப்பார்த்துதான் ரசித்து வீழ்ந்தாள் ..... இன்று இவனால் நடக்கவே முடியாதா? புகைப்படத்தை நெஞ்சோடு வைத்துக்கொண்டு குமுறினாள்.... கண்ணீர் ஆறாகப் பெருகியது.


மீண்டும் கட்டிலை நெருங்கிப் பார்த்தாள்.... ஆறுமாதமாக உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்தவனை உருக்குலைந்த தோற்றத்தில்....






“ எத்தனை முறை குலுக்கினாலும்....

“ அலையடிக்காத கடலாய்....

“ உறைந்து போன அவன்!

“ எத்தனை முறை நெருப்பு மூட்டினாலும்....

“ பற்றிக்கொள்ளாத நமத்துப் போன...

“ எரிமலையாய் அவன்!

“ சுருண்டோடிக் கிடந்தான் அவன்.....

“ குனிந்தோடிப் பார்த்தாள் இவள்...

“ இருண்டோடிப் போனது இவள் விழிகள்....

“ வாழும் பிணமாய் இறந்து நடக்கும் இவள்.....

“ வாழும் பிணமாய் மறந்து கிடக்கும் அவன்....

“ அழகான இவர்களின் தோட்டத்தில்...

“ அமிலத்தை ஊற்றியது யார்?

நெஞ்சோடு அனைத்திருந்த சத்யனின் படத்திற்கும் இதோ படுக்கையில் கிடப்பவனுக்கும் தான் எத்தனை வித்தியாசம்... உடல் இளைத்திருந்ததால் இன்னும் நீண்டு கிடந்தான்.... அவன் உருவத்தை விழிகளில் தேங்கிய நீர் மறைக்க ஆவேசமாக சுண்டிவிட்டு உற்றுப் பார்த்தவள்.... அவனிடம் அசைவு தெரியவே சட்டென்று விலகினாள்...

தூக்கத்தில் இருந்து விழிக்காமலேயே படுக்கையில் கையூன்றியவாறே வலது தோளை மட்டும் திரும்பி மறுபுறம் ஒருக்களித்தவாறு படுத்தான்.... மான்சி நன்றாக கவனித்தாள் ... இடுப்புக்கு மேலே வளைந்து திரும்பிய உடல் இடுப்பு கீழே அசைவின்றி கிடந்தது.....

மான்சியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..... மடிந்து அமர்ந்து சத்தமில்லாமல் குமுறினாள்..... எதுக்காக இப்படி? என் சம்மதம் கேட்டுதானே கையைப் பிடித்தான்?... அதற்கா இவ்வளவு பெரிய தண்டனை? திடீரென பூஜையறையில் இருந்த விக்ரகங்கள் அனைத்தும் அலங்கார பொம்மையாகிப் போனதாக நினைத்தாள்.... யாருக்காக என்று தெரியாமலேயே இந்த பத்துநாளும் பூஜை செய்துவிட்டு அதற்கான பலனாக இன்று சத்யனை இந்த கோலத்தில் காட்டிய கடவுளை நிந்தனை செய்தவாறு குமறியவளின் குமுறல் படுத்திருந்தவனின் காதில் விழுந்துவிட்டது....

“ யாரது?” என்று அதட்டலாக வந்தது அவன் குரல்.....

அன்று கர்வமாய் சம்மதம் கேட்ட குரல்.... மொத்தமாய் உருவத்தை மாற்றிய கடவுளால் குரலை மாற்ற முடியவில்லை போலருக்கு.... இதிலாவது என்மீது இரக்கம் காட்டினானே கடவுள்’ என்று எண்ணும்போதே “ யாரதுன்னு கேட்டேன்?” மீண்டும் அதட்டியது சத்யனின் கம்பீரக் குரல்....

மான்சி கட்டிலுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தவாறு முந்தானையை எடுத்து வாயில் அடைத்துக்கொண்டாள்..... இப்போது இவன் இருக்கும் நிலையில் என்னைப் பார்த்தால் தாழ்வுணர்ச்சியே இவனை இன்னும் குன்றவைக்கும் என்று தோன்ற.... தலையை மட்டும் நீட்டிப் பார்த்தாள்...

சத்யன் சுவர் பக்கமாக பாதி திரும்பிய நிலையிலேயே இருந்தான்.... மான்சி பட்டென்று எழுந்து நீண்ட கேவலுடன் கதவை நோக்கி ஓட.... சத்யனும் பட்டென்று புரண்டு விழுந்து “ ஏய்...... ஏய்...... நில்லு....” என்று அவள் முதுகைப் பார்த்து கத்தியவனின் முகத்தில் அறைவது போல கதவை மூடிவிட்டு ஓடிப்போனாள் மான்சி....

அழுகையுடன் படிகளில் தடதடவென்று இறங்கியவளைப் பார்த்து ‘ சத்யன் ஏதோ நாரசமாய் திட்டியிருக்க வேண்டும்’ என்றுதான் எல்லோரும் நினைத்தனர்.... ஆறுதல் சொல்ல நெருங்கியவர்களை விலக்கித் தள்ளிவிட்டு மரகதம் வீட்டுக்கு செல்ல ஓடியவளின் கண்களில் பூஜையறை தெரிய அதன் வாசலில் மண்டியிட்டு கவிழ்ந்தாள்...

உள்ளே செல்லமுடியாத நிலையில் மூடிய கதவுக்கு வெளியே இரு கைகளையும் கூப்பி அப்படியே தரையில் மடிந்து அந்த கைகளின் மேல் தனது தலையை வைத்துக்கொண்டு ஓவென்று கதறியவளைக் கண்டு எல்லோருக்கும் அழுகை வந்தது....

சபாபதி மான்சியை நெருங்கி குனிந்து ஆறுதலாக அவள் கூந்தலை வருடி “ இதுக்குத்தான் உன்னை போகவேண்டாம்னு சொன்னேன்..... ரொம்ப திட்டிட்டாராம்மா?” என்று கவலையாக கேட்டவரை நிமிர்ந்து அண்ணாந்துப் பார்த்தவள்....

“ அவருக்கு எப்போ ஆக்ஸிடன்ட் நடந்துச்சு..?” என்று கண்ணீருடன் கேட்க....
அந்த வீட்டில் யாருக்காவது மறக்குமா அந்த நாளை? தேதி..... கிழமை.... நேரம்..... இடம்... என சகலத்தையும் விபரமாக சொன்னவர் “ ஏன்மா கேட்குற?” என்றார்...

அவருக்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.... நெஞ்சம் குமுற “ அய்யோ முருகா..... எல்லாத்துக்கும் காரணம் நான்தானா?” என்று கதறியழுதாள்.... அங்கிருந்த யாருக்கும் ஒன்றும் புரியவில்லை... மான்சியைச் சுற்றி நின்றிருந்தனர்

அப்போது மாடியிலிருந்து “ வேலு வேலு வேலு” என்ற சத்யனின் குரல் உரத்து ஒலிக்க..... மான்சி சட்டென்று நிமிர்ந்து எழுந்தாள்..... மாடியை ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு “ அய்யோ அவரு கத்துறாரே? வேலு எங்கப் போனாருன்னு தேடுங்களேன்” என்று எல்லோரையும் பார்த்து மான்சி இறைஞ்சுதலாய் கேட்க.....

எல்லோரும் சட்டென்று கலைந்து ஆளுக்கொரு பக்கமாக ஓடிய அதே நேரம் வேலு தலையில் சிறிய கட்டுடன் உள்ளே நுழைந்தான்.... சபாபதி அவனை எதிர்கொண்டு விசாரிக்க...

“ சின்னய்யாவுக்கு சிகரெட் காலியாயிருச்சு ... சரி அவரு தூங்கும்போது வாங்கிட்டு வந்துடலாம்னு போனேன்... ஒரு பைக்காரன் வந்து இடிச்சு தலையில காயமாயிருச்சு.... அவசரமா ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டுப் போட்டுகிட்டு ஓடியாறேன்” என்றான்...

மான்சி அவன் காயத்தை ஆராய்ந்து விட்டு “ அண்ணா மொதல்ல போய் அவரை சாப்பிட வைங்க... ரொம்ப நேரமா கத்துறார்..... அப்புறம் அம்மாச்சி வந்ததும் நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று பரபரப்புடன் சொல்ல...

“ என்க்கு ஒன்னுமில்லமா.... சின்ன காயம் தான்.... இதோ நான் போறேன்” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு மாடிப்படிகளில் வேகமாக ஏறினான்....

வேலு சத்யன் அறை கதவை திறந்து உள்ளே செல்லும் வரை பார்த்திருந்த மான்சி “ நான் கொஞ்சநேரம் படுத்திருந்துட்டு வர்றேன் சார்” சற்றுநேரத்தில் எழுந்து தோட்டத்து மரகதம் வீட்டுக்குப் போய் படுத்துக்கொண்டாள்

சுவர் பக்கமாக படுத்த வாறு நடந்தவற்றை மனதுக்குள் கொண்டு வந்தாள்.... அப்போதே அவன் தோற்றத்தை வைத்து வசதி படைத்தவனாகத் தான் இருப்பான் என்று எண்ணியிருந்தாள்.... ஆனால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரன் என்று தெரியாமல் போனது... கம்பீரமாக தன்னை நோக்கி நடந்து வந்தவன் இனிமேல் நடக்கவே மாட்டான் என்ற நிலைமையை மான்சியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை....

கண்மூடிப் படுத்திருந்தாலும் கண்ணீர் நிற்க்கவில்லை... நிற்காமல் வழிந்த கண்ணீரை அவள் துடைக்கவும் இல்லை.... அவள் காதல் அவளுக்கு புரியும் தருணம் காதலுக்கு உரியவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை அவள் மனம் ஏற்றுக்கொள்ளாமல் கண்ணீரில் கரைந்தது....

பக்கத்தில் யாரோ வந்து அமர... மான்சி திரும்பிப் பார்த்தாள்... மரகதம் பாட்டி தான்.... மான்சியின் கூந்தலை வருடி “ நீ ஏன் கண்ணு போன? அதுதான் கோவக்கார புள்ளன்னு சொன்னேனே?” என்று சொல்ல....

சத்யன் தன்னை திட்டியதால் தான் அழுவதாக எல்லோருமே நினைக்கிறார்கள் என்று மான்சிக்கு புரிய பாட்டியின் கைகளைப் பற்றிக்கொண்டு “ இல்ல அம்மாச்சி அவரு என் முகத்தை கூட பார்க்கலை.... அவரோட நிலைமையைப் பார்த்து மனம் பொருக்காமத்தான் நான் அழுதுகிட்டே வந்துட்டேன்...” பாதி உண்மையை சொன்னாள் ...



“ உனக்கு ரொம்ப இளகுன மனசு கண்ணு... சரி வா கண்ணு போய் சாப்பிடலாம்... நீ மத்தியானமும் சாப்பிடலையாமே” என்று பாட்டி அழைக்க...

“ இல்ல அம்மாச்சி எனக்கு சாப்பாடு வேண்டாம்... நைட்டு சாப்பிட்டுக்கிறேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டு எழுந்து தோட்டத்துக்குப் போனாள்... அங்கிருந்த மலர்கள் அவளை கொஞ்சமாவது ஆறுதல் படுத்தும் நோக்கில் மலர்ந்து சிரிக்க... அவைகளை ஏமாற்ற மனமின்றி மான்சியும் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் ரோஜாப் பூந்தோட்டத்தின் நடுவே இன்னொரு மலர்த்தோட்டமாக நடந்தாள்.....



“ நீ அதிகம் சிரிக்காதே கண்ணே....

“ மலர்வது எப்படியென்று மறந்துபோனதாம்...

“ மலர்களுக்கு!


“ நீ அதிகம் பேசாதே கண்ணே....

“ பேசுவது எப்படியென்று மறந்து போனதாம்...

“ கிளிகளுக்கு!


No comments:

Post a Comment