Monday, January 25, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 8

சத்யனின் தங்கை தமிழரசியின் திருமணம்,, கடைக்குட்டிப் பெண் என்பதால் ஊரில் உள்ள அனைவரையும் இரண்டு லாரிகளில் அழைத்துக்கொண்டு முதல் நாள் மாலையே சத்யன் கிளம்பிவிட்டான்....

மஞ்சுளாவுக்கும் பூமாத்தாவுக்கும் அடிக்கடி ஏற்ப்படும் சண்டையால் யாருமே சத்யன் வீட்டு கல்யாணத்துக்கு போகக்கூடாது என்று சொல்லிவிட்டு தன் கணவன் குழந்தையுடன் தாய்வீடு கிளம்பிவிட்டாள் மஞ்சுளா....

மறுநாள் காலை மான்சியின் அம்மா மாடுகளை ஓட்டிக்கொண்டு போய்விட... மான்சியின் அப்பா விவசாய வேலைக்கு சென்றுவிட்டார்... வீட்டில் தனிமையில் குழந்தையுடன் படுத்திருந்தவளுக்கு கோபாலின் நினைப்பாகவே இருந்தது...இங்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிலையில் கோபால் இதுவரை ஏழு முறை வந்துபோய்விட்டான்...



அடுத்த வாரம் வந்தா பேசாம அவரு கூடவே ஊருக்கு கிளம்பிடனும்..... இன்னும் புள்ளைக்கு வேற பேரு வைக்காம இருக்கு , பொறந்தப்ப சாமி பேரு வச்சதோட இருக்கு.. ஊருக்குப் போய் எல்லாரையும் கூட்டி உனக்கு நல்ல பேரா வைக்கனும்டா செல்லம்" என்று மகனிடம் பேசியபடி படுத்திருந்தவளை கோபால் கொடுத்துவிட்டு போயிருந்த செல்போன் அழைக்க.... " உன் அப்பா தான்டா செல்லம் " என்றபடி ஓடிச் சென்று போனை எடுத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...

பேசியது கோபால் ஆட்டோ ஓட்டும் ஆட்டோவின் முதலாளி தான் பேசினார்.... " யாரும்மா கோபால் சம்சாரம் தானே?" என்று கேட்டவருக்கு குழப்பமாகவே " ஆமாங்க" என்றாள்

" இங்க சாவரிக்குப் போன இடத்துல கோபாலுக்கு உடம்பு சரியில்லைனு வீட்டுக்குப் போய்ட்டான்மா... மார் நோவுதுனு சொன்னானாம்... நானும் இப்ப கோபாலைப் பார்க்க தான் போறேன் .... நீ யாராவது துணைக்கு கூட்டிகிட்டு கிளம்பி வாம்மா" என்று சொல்ல...

மான்சியின் கையிலிருந்த போன் நழுவாமல் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு " அய்யோ என்னா இப்புடி சொல்றீங்க? நேத்து நைட்டு கூட என்னான்ட பேசுனாரே? நல்லாத்தான இருந்தாரு?" என்று கதறியவளை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சமாதானம் செய்தவர் " ஒன்னும் ஆகாதும்மா,, நேரத்தை கடத்தாம சீக்கிரமா கெளம்பி வாம்மா" என்று கூறி விட்டு போனை வைத்தார் .

சற்றுநேரம் வரை மான்சிக்கு ஒன்றுமே புரியவில்லை,,, இப்பதான சந்தோசமா நினைச்சுகிட்டு இருந்தேன்? அதுக்குள்ள இடி மாதிரி விழுந்துடுச்சே?" என்று தலையிலடித்துக் கொண்டு கதறியவள் அவசரமாக குழந்தையை தூக்கிக்கொண்டு பணம் வைக்கும் பெட்டியை திறந்து பார்த்தாள் ஒரு ரூபாய் நாணயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.... மஞ்சுளா துடைத்துவிட்டு போயிருந்தாள்....

யாரையும் கூப்பிடவும் தோன்றவில்லை... அம்மா அப்பாவுக்கு தகவல் சொல்லவும் நேரமில்லை.... உடனே கோபாலைப் பார்க்க மான்சியின் உயிர் துடித்தது.... கடைசியாக கோபால் வந்த அன்று கிளம்பும் போது தொட்டிலில் தூங்கிய குழந்தையின் கையில் நூறு ரூபாயை தினித்துவிட்டு போக அந்த ரூபாய் நோட்டு குழந்தையின் துணிகளுக்கு மத்தியில் வைத்தது ஞாபகம் வந்தது...


வேகமாக ஓடிச்சென்று துணிகளை உதறினாள்... ரூபாய் நோட்டு விழுந்தது... பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் தின்னையில் அமர்ந்திருந்த பாட்டியிடம் " ஆயா எங்க வீட்டுகாருக்கு உடம்பு சரியில்லைனு போனு வந்துச்சு... நான் கிளம்பி போறேன்.. அம்மாவும் அப்பாவும் வந்தா சொல்லிடு ஆயா" என்றவள் பதிலை எதிர்பார்க்காமல் குழந்தையுடன் பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினாள்....

தாம்பரம் செல்லும் பேருந்து வந்து நிற்க அவசரமாய் ஏறி இருக்கையில் அமர்ந்தாள் .... மூன்றரை மணிநேர பயணம் .... நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினாள் ... மீதி நாற்பது ரூபாய் தான் இருந்தது.... பஸ்ஸில் அழுது கொண்டே வந்தவளை சகப் பயணிகள் பரிதாபமாகப் பார்த்தனர்....

அவருக்கு ஒன்னும் ஆகக்கூடாது என்று வழி நெடுக பிதற்றியபடியே வந்தாள்.... மனம் ஆயிரமாயிரம் தெய்வங்களை வேண்டியது... பஸ் தாம்பரத்தில் நின்றதும் இறங்கினாள்...

சைதாப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏற நினைத்தவள் ... ' ஒருவேளை அவர ஆஸ்பத்ரிக்கு கூட்டிப் போயிருந்தா?' என்ற கேள்வி தோன்ற ஒரு எஸ்டிடி பூத்தை நெருங்கி தன்னிடம் இருந்த போனில் கடைசியாக வந்த நம்பரை கண்டுபிடித்து அந்த நம்பருக்கு கால் செய்தாள்...

இரண்டாவது ரிங்கிலேயே எடுக்கப்பட.... " நான் கோபால் சம்சாரம் பேசுறேங்க... இப்ப தாம்பரத்துல இருக்கேன்... அவரு வீட்டுல இருக்காரா? இல்ல ஆஸ்பத்திரிக்கு போயிருக்காரா?" என்று கேட்க....

எதிர் முனையில் சில விநாடி மவுனத்திற்குப் பிறகு " இல்லம்மா கோபாலுக்கு உடம்பு சரியாயிடுச்சு... உடனே உன்னையப் பாக்கனும்னு சொன்னான்... அதனால என்னோட கார்லயே அவன அனுப்பிருக்கேன்.... இன்னோரம் அவனோட சொந்த ஊர்ல இருப்பான்.. நீ இங்க வரவேணாம் அப்படியே திரும்பிப் போயிடுமா" என்றார் .....

மான்சிக்கு நிம்மதியாக மூச்சு வர " ரொம்ப நன்றிங்க,, ஆனா அவரோட ஊருக்காப் போயிருக்காரு?" என்று கேட்க...

" ஆமாம்மா... அவனோட அம்மா அப்பாவையும் பாக்கனும்னு போயிருக்கான் நீ நேரா உன் மாமியார் வீட்டுக்கேப் போயிடுமா" என்றார்....

சரியென்று போனை வைத்த மான்சி மீண்டும் பஸ்ஸில் ஏறினாள்.... மான்சியின் ஊருக்கும் கோபாலின் ஊருக்கும் நடுவில் இருக்கும் டவுனுக்கு டிக்கெட் எடுத்தாள் ... மிச்சமிருந்த அறுபது ரூபாயும் சரியாகப் போய்விட்டது.... மாமியார் ஊருக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணுமே என்று யோசித்தவள் " சரி டவுன்ல யாராவது தெரிஞ்சவங்க இருப்பாங்க பத்து ரூபா கேட்டு வாங்கிக்கலாம்" என்று எண்ணியபடி குழந்தையை மார்போடு அணைத்து நிம்மதியுடன் சீட்டில் சாய்ந்து கொண்டாள் ....

பஸ் மான்சியை சுமந்து கொண்டு பயணமானது... வாழ்க்கை கேள்விக்குறியாகப் போவதை அறியாமல் மான்சிக்கு அலைச்சலில் உறக்கமே வந்துவிட்டது...





" மான்சியின் வாழ்வில் ....

" மகிழ்ச்சி தபாலில் வந்தால்....

" துயரம் தந்தியில் வருவதே வழக்கம்...

" இம்முறையும் தப்பவில்லை மான்சி....

" விரைவான பயணத்தில் ....

" அவளது சோகத்தின் தூரம் குறுகிக்கொண்டிருந்தது....

" வாழ்க்கை என்பதே இருட்டின் கூடாரம்......

" இவளுக்கு மட்டும் வெளிச்சம் கிடைக்காது என்பது தான் விதி!!!



மான்சி பஸ்ஸில் வந்த எதிர்காற்றில் குழந்தையை அணைத்தபடி சுகமாக உறங்கிவிட ... இறங்க வேண்டிய இடம் வந்து பஸ் நின்றதும் நடத்துனர் வந்து " ஏம்மா ஊர் வந்தாச்சு இறங்குமா" என்று குரல் கொடுத்ததும் அவசரமாக இறங்கினாள் மான்சி....

மாமியார் வீட்டுக்கு செல்ல கையில் பணம் இல்லை.... அதிகமாக டவுனுக்கு வந்து பழக்கமில்லாததால் அங்கே யாரையுமே தெரியவில்லை,, அத்தனை கிராமங்களுக்கும் மத்தியிலிருக்கும் டவுன் என்பதால் எங்கு பார்த்தாலும் கூட்ட நெரிசலாக இருந்தது..

எல்லாமே அறிமுகம் இல்லாத முகங்கள்... யாரிடம் போய் உதவி கேட்பது? பஸ் ஸ்டான்டில் அமர்ந்து பிச்சை எடுப்பவன் தட்டில் கூட ரூபாய் நோட்டுகள் கிடந்தன்.... அவனிலும் கேடாக நிற்பதை எண்ணி கண்ணீர் முட்டியது.... கூந்தலை கூட சேர்த்து கட்டாமல் பரக்கப் பரக்க விழத்தபடி நின்றிருந்தவளை சிலர் பார்த்துகொண்டே போக.... மான்சிக்கு கோபால் மேல் கோபம் வந்தது... ஊருக்குப் போற மனுசன் என் ஊர்ல எறங்கி என்னையும் கூட்டிப் போறது தான? பச்சப் புள்ளக்காரினு கூட யோசிக்காம போயிட்டாரே? ' மனதுக்குள் புலம்பியபடி குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தபடி நின்றிருந்தாள்...

சுற்றிலும் பார்த்தவளின் கண்ணில் பட்டது “ அம்மா” இனிப்பு கடை .. அவள் ஊரைச் சேர்ந்த பையன் ஒருவன் அங்கே வேலை செய்வது அப்போதுதான் ஞாபகம் வர... கண்முன் கடவுளே தோன்றியது போல் ஒரு நிம்மதியுடன் வேகமாக அந்த கடையை நெருங்கினாள்....

அங்கும் கூட்டமாக இருந்தது,, கூட்டம் சற்று குறையும் வரை காத்திருந்து பிறகு கடையின் கல்லாவில் முதலாளி போல் அமர்ந்திருந்தவரிடம் சென்று " சார்,, மஞ்சப்புத்தூர்லருந்து ஏழுமலைனு ஒருத்தர் இங்க வேலை செய்றாரே அவுரு இருக்காரா?" என்று கேட்க....

அந்த மனிதர் ஏதோ சொல்ல வந்து பிறகு தாமதித்து ,, " நீ எந்த ஊரு? உன் பேரு என்னம்மா ? " என கேட்டார்

" என் பேரு மான்சிங்க... நானும் மஞ்சப்புத்தூர் தான்.... ஏழுமலை இல்லைங்களா?" என்று கேட்டாள்.....

" இங்கதான்மா வேலை செய்றான்.... கொஞ்சம் முன்னாடி தான் உன் ஊர் ஆளுங்க வந்து கூட்டி போனாங்க,, என்றதும் ..

மான்சியின் முகம் வாட " அவனும் இல்லையா?" என்றாள் சலிப்புடன்

அவர் எதுவும் பேசாமல் கல்லாவை விட்டு எழுந்து வெளியே வந்து அங்கிருந்த பிரிட்ஜை திறந்து ஒரு கூல்டிரிங்க் பாட்டிலை எடுத்து அவர் கையாலயே திறந்து மான்சியிடம் கொடுத்து " மொதல்ல இதை குடிம்மா.... காலையிலருந்து சாப்பிடலைனு நினைக்கிறேன்?" என்றார்

மான்சி சங்கடத்துடன் தலையசைத்து " அய்யோ வேணாங்க" என்று மறுக்க.... " பரவாயில்ல குடிம்மா" என்று வற்புறுத்து அந்த குளிர்பானத்தை குடிக்க வைத்தார்....

பிறகு கடை பையனை அழைத்து ஒரு ஆட்டோ அழைத்துவரும்படி கூற .. ஆட்டோ தனக்குத்தான் என்று மான்சிக்குப் புரிய " இல்லைங்க நான் என் மாமியார் வீட்டுக்கு போகனும்.... எனக்கு ஆட்டோ வேணாம்... கையில காசில்லை... பத்துரூபா மட்டும் குடுத்தீங்கன்னா பஸ்லயே போய்டுவேன்" என்றாள்

" பரவால்லம்மா... கை கொழந்தைய வச்சுகிட்டு பஸ்ல போக வேணாம்... இன்னைக்கு முகூர்த்த நாள்.. பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கும்.... நீ ஆட்டோவுலயே போ... நான் ஏழுமலை கிட்ட காசு வாங்கிக்கிறேன்" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோ வந்துவிட " சரி கிளம்பும்மா" என்றவர் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து கடைப் பையனையும் உடன் அனுப்பி வைத்தார்....

மான்சி கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினாள்.... பார்த்தறியாத தனக்கு உதவிய அந்த மனிதரை நினைத்து மனம் நெகிழ்ந்தது...

இன்னும் அரை மணிநேரத்தில் கணவனை சந்திக்கப்போகும் சந்தோஷத்தில் மனம் திளைக்க,, மகனை கொஞ்சியபடி வந்தவளை அந்த கடை பையன் பரிதாபமாக பார்த்தானேத் தவிர எதுவும் பேசவில்லை... மான்சிக்கு குழப்பமாக இருந்தது... ' ஏன் இந்த பையன் அழுவுற மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு வர்றான்? .... ஆமா வேலையில இருந்த ஏழுமலையை ஏன் ஊர் ஆளுங்க கூட்டிப் போனாங்க? ' பதில் தெரியாத குழப்பம் நெஞ்சில் உறுத்தலாய் மாற நடந்த விஷயங்கள் அத்தனைக்கும் முடிச்சிட்டுப் பார்த்தது மனது....

ஊருக்குள் ஆட்டோ நுழையும் போதே ஆங்காங்கே கூடியிருந்த மக்கள் ஆட்டோவைப் பார்த்துவிட்டு பரபரபப்பாய் பேசிக்கொள்ள.... திருமணம் ஆன பிறகு இரண்டாவது முறையாக இப்போதுதான் அந்த ஊருக்குள் நுழைகிறாள்... ஆனாலும் தெருக்களையும் வீடுகளையும் அடையாளம் தெரிந்தது... இந்த தெரு திரும்பி கடைசிலதான அவர் வீடு என்று மனசுக்குள் அடையாளம் சொல்லிக்கொண்டாள்....

தெரு திரும்பும் போது இருந்த டீக்கடையில் ஏழுமலையும் இன்னும் ஊர்காரர்கள் சிலரும் நிற்க,, மான்சியின் இதயம் உலர்ந்து போனது.... இவங்கல்லாம் இங்க என்ன பண்றாங்க?" குழப்பத்துடன் மான்சி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தெருவின் கடைசியில் இருந்த கோபாலின் வீடைப் பார்க்க......

அங்கே வாசலில் பெரிய ஷியாமியானா பந்தல் போடப்பட்டிருக்க நடுவே ஒரு பெஞ்ச் போடப்பட்டு அதன் மீது யாரையோ மாலைப் போட்டு படுக்க வைக்கப்பட்டிருந்தது.....

ஒன்றோடு ஒன்று கோர்வையாகி பல செய்திகள் சொல்ல மான்சிக்குத் தெளிவாக புரிந்துபோனது... ஆட்டோ நெருங்க நெருங்க அவள் இதயம் நொருங்க ஆரம்பித்தது,, படுக்க வைக்கப்பட்டிருப்பது கோபால் என்று புலனாக .. " என்னாங்க" என்று அலறியவளின் மடியிலிருந்த குழந்தையை அவசரமாக கடைப் பையன் தூக்கிக்கொள்ள, மான்சி,, ஓடுகின்ற ஆட்டோ நிற்கும் முன் ஒன்றுமே புரியாமல் வெளியே குதித்தாள்....

தெருவில் விழுந்தவளை கண்டு மான்சியின் ஊர் ஆட்கள் கதறியபடி ஓடிவர.... விழுந்தவள் தானாகவே எழுந்தாள்.... வலது கனுக்காலின் கீழ் சதை கல்லில் பட்டு சக்கையாக பெயர்ந்து ரத்தம் வழிய ..... அதோடு கோபாலிடம் ஓடினாள்......

எதிரில் வந்தவர்கள் அவளை தடுத்து அணைக்க முயல்... அவர்களை ஆவேசமாக உதறிவிட்டு ஓடிப்போய் நின்றவள்.... வாடாத முகத்துடன் தனது கம்பீரம் குலையாமல் தூங்குவது போல் படுத்திருந்த கணவனையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தாள்... நிலவரம் நெஞ்சியில் உரைக்க அடித் தொண்டையிலிருந்து குரலெடுத்து " இல்ல இல்ல அவருக்கு ஒன்னுமில்ல" என்றபடி ஆவேசத்துடன் கோபாலின் கழுத்திலிருந்த மாலையை எடுத்து வீச முயன்றாள்

மான்சியின் அம்மாவும் இன்னும் சில ஊர்ப் பெண்களும் மான்சியை இழுத்துப் பிடித்துக் கொண்டனர்... மான்சி அவர்களிடமிருந்து விடுபட போராடியபடி கதறினாள்.... கொஞ்ச நேரத்தில் கூச்சலும் கதறலுமாக போர்க்களம் போல் ஆனது அந்த இடம்....




ஐயா,, ஊரோ ரெண்டாச்சு......

அதன் ஊடே கடலாச்சு.....

ஐயா,, நாடோ ரெண்டாச்சு...

அதன் நடுவே கடலாச்சு....

ஐயா,, ஓடுகின்ற தண்ணியில..

ஓலை நீ விட்டிருந்தா....

ஐயா,, ஓடி நான் வந்திருப்பேன்

ஓன்னோட கூடி நான் கலந்திருப்பேனே!!


வெகுநேரம் வரை மான்சியின் மனது நடப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தது.... அழுதவள் திடீரென்று ஆவேசமாக கண்களை துடைத்துகொண்டு எழுந்து கோபாலின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் மநெஞ்சின் மீதே படுத்துக் கொள்வாள்.... அதன்பின் அவளை அகற்றுவது பெரும் போராட்டமானது...



No comments:

Post a Comment