Wednesday, December 9, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 15

சுந்தரம் மகனை ஏறஇறங்க பார்த்தார்... இரவு குடித்த சரக்கின் தாக்கத்தில் சத்யனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க... இடுப்பில் வெறும் ஷாட்ஸூடன் நின்றிருந்த மகனைப் பார்த்து சுந்தரம் தலையை குனிந்து கொள்ள...

தனது அப்பாவை எதிர்பார்க்காத சத்யன் திகைப்பு விலகாமல் " என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க?" என்று மெதுவாக கேட்க...

இனி பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தலைநிமிர்ந்த சுந்தரம் " என் மருமகள் எங்க சத்யா? அவளை வரச்சொல்லு பார்க்கனும்" என்றார்...

அவரை கூர்ந்து பார்த்த சத்யன் " என்னது மருமகளா? எவ அவ? " என்று ஏளனமாக கேட்க.... அவன் குரலில் இருந்த ஏளனம் சுந்தரத்தையும் பயப்படுத்தியது...



அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு வயிற்றில் சத்யனின் பிள்ளையும்... கண்களில் கண்ணீருமாக வெளியே வந்தாள் மான்சி

மான்சியைப் பற்றி பெரியவர் சொல்லியிருந்தாலும்... அவளின் கர்ப்பிணி வயிறும் கண்களில் இருந்த கண்ணீரும் சுந்தரத்தின் இதயத்தை பிசைந்தது... அவள் கண்ணீருக்கான காரணம் புரிந்தவர் போல.. சட்டென்று வரவழைத்த புன்னகையுடன் “ என்னம்மா என் பேரக்குழந்தையும் நீயும் சவுக்கியமா?” என்று கேட்டு அவள் மனதை இலகுவாக்க முயன்றார்..

அவர் முயற்சி பலித்தது... மான்சி கண்ணீர் நிற்காவிட்டாலும் கூட உதட்டில் கீற்றாய் ஒரு புன்னகையுடன் மெல்ல தலையசைத்தாள்....

சுந்தரம் சாமுவேல் பக்கமாக திரும்பி “ மான்சிக்கு காபி எடுத்துட்டு வந்து கொடு சாமு” என்று கனிவுடன் கூற....

அங்கிருந்த சத்யனுக்கு மான்சியிடம் அவர் காட்டிய கனிவு கூட பிடிக்கவில்லை.. அவர் இடத்தில் ஒரு பெண் இருந்தாலும்கூட அவனுக்கு பிடிக்காதுதான்.. இனிமேல் மான்சி சம்மந்தப்பட்ட அனைத்தும் அவன் இல்லாமல் நடக்கக்கூடாது என்று நினைத்தான்...

மான்சியின் பக்கம் திரும்பி “ நீ போய் ரெஸ்ட் எடு மான்சி, காபி ரூமுக்கு வரும்” என்றான்... அப்பாவுக்கு கூட மரியாதை கொடுக்காமல் எப்படி பேசுறான் பாரு என்று அவனை முறைத்தபடி மான்சி தனது அறைக்குள் போக.. சத்யன் சுந்தரத்தின் முன்புறம் இருந்த சோபாவில் அமர்ந்தான்..

“ ம் சொல்லுங்கப்பா என்ன இவ்வளவு அவசரமா வந்திருக்கீங்க? மான்சியைப் பத்தி உங்களுக்கு யார் சொன்னது? ” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்

சுந்தரமும் இனி சுற்றிவளைக்க ஏதுமில்லை என்று எண்ணியவறாக “ சத்யா இதுவரைக்கும் நீ மான்சிகிட்ட எப்படி வேனும்னாலும் இருந்திருக்கலாம்... ஆனா இப்போ நீயும் ஒரு பிள்ளைக்கு தகப்பன் ஆயிட்ட... அந்த பிள்ளைக்கு முறையான அந்தஸ்தை கொடுக்கனும்னா நீ மான்சியை கல்யாணம் பண்ணிக்கனும்... இதுதான் உன் தாத்தா விருப்பமும் என்னோட விருப்பமும்” என்று கூறிவிட்டு பதிலுக்காக மகனின் முகத்தைப் பார்த்தார்....

சத்யன் யோசிக்கவேயில்லை பட்டென்று பதில் சொன்னான் “ எனக்கு கல்யாணத்தில் இன்ரஸ்ட் இல்லைப்பா” என்று...


இவ்வளவு பெரிய விஷயத்தை அலட்சியமாக யோசிக்காமல் பதில் சொன்ன மகனைப் பார்த்து சுந்தரத்திற்கு முணுக்கென்று கோபம் வந்தது “ சத்யா நீ பேசுறது சரியில்லை... ஒரு பொண்ணை கொண்டு வந்து கர்ப்பிணியாக்கி இப்போ கல்யாணத்தில் இன்ரஸ்ட் இல்லேன்னு சொல்றது நல்லதில்லை... அந்த பொண்ணைப் பார்த்தா பரிதாபமா இல்லையா சத்யா... பெண் பாவம் பொல்லாததுடா... பேசமா அவளை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு.. ஒரு நல்லநாள் பார்த்து கல்யாணம் பண்ணிடலாம்”என்று முடிந்தவரை பொறுமையாக பேச முயன்றார்

சத்யன் அவரை வாய் கொள்ளா சிரிப்புடன் பார்த்து “ என்னப்பா இவ்வளவு டயலாக் பேசுறீங்க... நான் ஒன்னும் மான்சியை ஏமாத்தலை... எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு ஒப்பந்தம் இருந்தது.. அதுல நான் என் வழியில ஜெயிச்சேன்.. அதனால அவ என்கூட இருக்கா... நான் அவளை வற்புறுத்தலைபா... அவ விருப்பத்தோட தான் இங்கே இருக்கா... அவளுக்கே தெரியும் எனக்கு கல்யாண வாழ்க்கையில் விருப்பம் இல்லைன்னு.. எங்களுக்கு பிடிச்ச வரைக்கும் சேர்ந்து வாழுவோம்.. பிடிக்கலைன்னா பிரிஞ்சிடுவோம்... இதை முதல்லயே பேசியாச்சு.. இப்போ புதுசா நீங்க வந்து கல்யாணம் அது இதுன்னு குழப்பாதீங்க” என்று சத்யன் சொல்ல...

“ அது நீயும் அவளும் மட்டும் இருக்கும்போது... இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நடுவே ஒரு குழந்தை உருவாயிருக்கு.... அது நம்ம குடும்பத்துக்கு வாரிசு சத்யா... அதை அனாதையா விட சொல்றியா?” என்று கேட்டார் சுந்தரம்..

சத்யனுக்கு சுந்தரம் வந்ததே பிடிக்கவில்லை... அதோடு இதில் அவர் தலையிடுவது அதைவிட சுத்தமாக பிடிக்கவில்லை... “ இந்த குழந்தை என் சம்மதத்தோட வரலைப்பா... இது அவளோட விருப்பம்... அதனால இதன் பொறுப்புகளும் அவளை சார்ந்ததுதான்.. எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை” என்று அலட்சியமா உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கிக் கொண்டான்...

சுந்தரம் சத்யனின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க... அறையில் அமர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மான்சிக்கு கோபம் கொந்தளித்தது... என்னவொரு அநியாயம்... என் பிள்ளைக்காக கூட இவனிடம் கையேந்த மாட்டேன்.... இன்னும் இவன் தன்னை உணரவில்லை என்றால்........ இவன் கர்வம் அழியவேண்டும்... நான் அதை அழிப்பேன்.... அப்போ நீ என் கால்களை பிடிச்சு கதறினாலும் நான் இறங்கமாட்டேன் சத்யா.... என்ற வைராக்கியத்துடன் எழுந்து வெளியே வந்தாள்

சுந்தரம் மான்சியை கவலையுடன் பார்த்தார்... மான்சி அவரெதிரே வந்து நிமிர்ந்து நின்று “ என்னங்க சார் நீங்க என்னனென்னவோ சொல்றீங்க?... சத்யன் சொன்ன மாதிரி எங்களுக்குள்ள உண்டான ஒப்பந்தம் இது... இதில் நான்தான் முதலில் வீழ்ந்தது... அதனால தான் நான் இங்கே இருக்கேன்... மூனு வருஷம் முடியும் போது நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன்.. அப்போ யாரும் எதுவும் என்னை கட்டுப்படுத்த முடியாது... இவர் சொல்ற மாதிரி இந்த குழந்தை என்னோட விருப்பம் சார்... இந்த குழந்தையின் பொறுப்புகள் எதுவும் இவரைச் சேராது... அதனால எனக்கும் இவருக்கும் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று மான்சி திட்டவட்டமாக கூற ...

சுந்தரம் திகைப்புடன் மான்சியை பார்த்து “ என்னம்மா சொல்ற? நீயும் இவனை காதலிப்பதால் தானே இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் இவன் பிள்ளையை வயித்துல சுமந்துகிட்டு இங்கேயே இருக்க? நீ இருக்குற நிலைமையைப் பார்த்தா அந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இருக்குற மாதிரி தெரியலையே?” என்று பார்வையில் கூர்மையுடன் வினவியவர் “ உன் மனசுல இருக்குற நேசம் தான் உன்னை கட்டுப்படுத்தி வச்சிருக்குன்னு நான் சொல்றேன்... ஆனா சத்யன் மனசு தெரியுற வரைக்கும் உன்னை வெளிக்காட்ட நீ தயாராக இல்லை இதுதான் உண்மை” என்று மான்சியின் மனதை கண்டுகொண்டவர் போல் நிதானமாக கூறினார்....




சுந்தரத்தின் கூற்றை அலட்சியம் செய்த மான்சி சத்யனை திரும்பி பார்த்தாள்.... அவன் பார்வையில் ஏளனத்துடன் புருவம் உயர்த்தி ‘ எப்படி’ என்பது போல் பார்த்தான்... அந்தப் பார்வை மான்சிக்குள் நெருப்பை பற்ற வைத்தது... தீயென விழித்து சத்யனை நோக்கியவள்.. சுந்தரம் அருகில் வந்து அவரை நேர் பார்வையாக பார்த்து.... “ இதோ பாருங்க சார் ... என் அப்பா வயசில் இருக்குற உங்ககிட்ட இதை பத்தியெல்லாம் பேச எனக்கு தயக்கமாத்தான் இருக்கு.. ஆனா எனக்கு வேற வழியில்லை.. நான் இதைப்பற்றி பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்னு நெனைச்சு உங்ககிட்ட சில விஷயங்களை வெளிப்படையா சொல்றேன்” என்று மான்சி மூச்சு வாங்கி நிறுத்தினாள்...

அப்போதுதான் அவள் நின்றுகொண்டே பேசுவதை உணர்ந்த சத்யன் அவளருகே வந்து அவள் கையைப் பற்றி இழுத்துவந்து ஒரு சோபாவில் அமர்த்தி “ எதுவாயிருந்தாலும் உட்கார்ந்தே பேசு” என்று அதட்டலாகக் கூறிவிட்டு அவன் மாடிப்படியின் கைப்பிடி சுவற்றில் ஸ்டைலாக சாய்ந்து நின்றுகொண்டான்...

பேச்சின் ஊடே சத்யன் அப்படி செய்தது மான்சிக்கு எரிச்சலாக இருந்தாலும் பேச்சை திசைதிருப்பும் இதுபோன்ற எதையும் கவனத்தில் கொள்ள கூடாது என்ற முடிவுடன் மறுபடியும் ஆரம்பித்தாள் “ மொதல்ல நீங்க ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும்... நான் மூனு வருஷ ஒப்பந்தப்படி வேலைக்கு தான் அமர்த்தப்பட்டேன்... உங்க மகனோட படுக்கையை பகிர்ந்துக்க இல்லை... அவர் தோற்றால் பலபேர் முன்னாடி என் காலில் விழுறதுன்னும்.... நான் தோற்றால் நானாகவே அவரோட படுக்கைக்கு வந்திரனும் என்பது உங்க மகன் சொன்னது... அன்னிக்கு இவர் நடிச்சாருனு தெரியாம நான் இணங்கியதுக்கு காரணம் நான் இவர்மேல கொண்ட காதல்தான்... அதுக்குப்பிறகு இவர் ஏமாத்தியதை உணர்ந்து நான் கொதிச்சுப் போனாலும்.. இவர் மனசுமாறி என்னை கல்யாணம் பண்ணிக்குவார்னு நெனைச்சு கெஞ்சினேன்... ஆனா இவர் அதிலேயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைனு சொல்லி பிடிவாதமா மறுத்துட்டாரு... நானும் இவர் மனசுல காதல் இருக்குன்னு நம்பி என்னையே தாழ்த்திக்கிட்டு என் கவுரவத்தை பாழாக்கிக்கிட்ட அதை இவருக்கு உணரவைக்க முயன்றேன்.. ஆனா இவரோட வப்பாட்டி நான்னு எல்லாரும் பேசினப்ப கூட இவர் அசையலை... அப்புறம்தான் இவருக்கு என்மேல காதலே இல்லை என் உடல்தான் இவருக்கு தேவைன்னு புரிஞ்சுகிட்டேன்...

“ அப்புறம் உங்களைப்பார்க்க மலேசியா போனதும் நான் கர்ப்பமாக இருக்கிறது எனக்கு தெரிஞ்சது... இவருக்கு என்மேல காதல் இல்லேன்னாலும் நான் இவரை நேசிச்சது உண்மை தானேன்னு இந்த குழந்தையை அழிக்க மனசு வராம சுமந்தேன்... சரி என் மேல காதல் இல்லேன்னாலும் அவரோட வாரிசு மேல அக்கரையிருக்கும்னு நினைச்சேன்... அதுவுமில்லைனு உங்கப் பிள்ளை நேத்தே சொல்லிட்டாரு.... இதுக்கு மேல நான் இந்த வீட்டுல இருக்கனும்னு அவசியமில்லை... நான் பழையபடி தோட்டத்து ரூமுக்கே போயிடுறேன்... என்னைப்பொறுத்தவரை சொன்னசொல் தவறாமல் இன்னைக்கு வரைக்கும் இவரோட எஸ்டேட்க்கு வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கேன்... மூன்று வருஷ வேலை ஒப்பந்தம் முடிய இன்னும் பதினெட்டு மாசம் இருக்கு... அதுவரைக்கும் இவரோட எஸ்டேட்ல தான் வேலை செய்வேன்... வேற எங்கேயும் போகமாட்டேன்... ஆனா அதுக்கப்புறம் ஒரு விநாடி கூட இங்கே இருக்கமாட்டேன் சார்... என் தம்பியோட படிப்புக்காக நான் இவர்கிட்ட வாங்கின கடன் ஐம்பதாயிரம் எனக்கு பயன்படலை .. அதனால அதையும் பேங்கில் இவர் கணக்கில் கட்டிட்டேன்... இப்போ செய்யும் வேலையைத் தவிர வேறெந்த பந்தமும் எங்களுக்கு இல்லை ” என்று மான்சி ஒரு நிமிர்வுடன் பேச ...

சுந்தரம் மான்சியை பெருமை பொங்க பார்த்துவிட்டு... சத்யனை எரித்துவிடுவது போல் பார்த்தார்... சத்யன் இன்னும் அதே அலட்சியத்துடன் நின்று கொண்டு “ எல்லாம் சொல்லிட்ட மான்சி... புதுசா ஒரு மாப்பிள்ளையை ரெடி பண்ணிருக்கியே விக்டர்.... விக்டர்.. அவனைப் பத்தியும் சொல்லிடு கண்ணு... உன்னோட காதல் எவ்வளவு உயர்வானதுன்னு எங்கப்பாவுக்கும் தெரியட்டும்”என்று ஏளனமாக கூறினான்..

மான்சி ஆத்திரமாக எழுந்தாள்.... “ அப்போ உன்னை காதலிச்ச பாவத்துக்கு நான் காலம் பூராவும் உன்னை நெனைச்சுக்கிட்டே இருக்கனுமா? நாற்பது வயது விதவைக்கே கல்யாணம் பண்ணி வைக்கிற காலம் இது... இந்த காலத்தில் உன்னோட இருந்த பாவத்துக்காக காலமெல்லாம் நான் சிலுவையை சுமக்க முடியாது” என்று குமுறிக் கொட்ட ...

அவளருகே வந்து தோளில் கைவைத்து “ கூல் பேபி கூல்” என்று மீண்டும் சோபாவில் அமர்த்திய சத்யன் “ நீ தானடி சொன்ன.. நான் கற்புக்கரசி.. பத்தினி.. பதிவிரதைன்னு... அதான் உன்னோட இரண்டாவது காதல் இதுல எந்த லிஸ்ட்ல வருதுன்னு கேட்டேன்” மீண்டும் பரிகாசமாக பேசினான்...


சுந்தரம் வாயடைத்துப் போய் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க.... மான்சி தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு குமுறியபடி “ ஆமா சொன்னேன் தான்... ஆனா என்னோட மானத்தை தான் அன்னம்னு நினைச்சு பருந்துக்கு விருந்தா படையல் போட்டுட்டேனே? இனிமேல் அதைப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது... நான் கற்பிழந்தவள் தான்... ” என்று அன்று நடந்ததுக்கு இப்போது மீண்டும் மீண்டும் குறினாள்

அழாதே என்பதுபோல் சத்யனின் கை வலுவாக அவள் தோளில் அழுந்தியது... மான்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள்... அதே ஏளன சிரிப்பு ‘ நீ என்னை விட்டு போகமுடியாது’ என்பது போன்ற கர்வம் அவன் கண்களில் மின்னியது

பட்டென்று அவன் கைகளை உதறிவிட்டு எழுந்த மான்சி சுந்தரம் எதிரில் வந்து நின்றாள் “ சார் இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்குமே? நான் எந்த ஒப்பந்தத்துக்கும் கட்டுப்பட்டு இங்கே இல்லையென்று? இன்னையோட இந்த வீட்டு மற்றும் உங்க மகனுக்கும் எனக்கும் உண்டான உறவு முறிஞ்சுபோச்சு... நான் இதே தோட்டத்து வீட்டுல ஒரு வேலைக்காரியா இன்னும் பதினெட்டு மாசம் இருப்பேன்... அது முடிஞ்சதும் எனக்கும் பக்கத்து எஸ்டேட் ஓனர் விக்டருக்கும் கல்யாணம்.. இவ்வளவு நாளா விக்டர் தன்னோட காதலைப் பத்தி வெளிப்படையா பேசினாலும்.. எனக்குள்ள ஒரு தயக்கம் இருந்துச்சு.. இந்த நிமிஷத்தில் இருந்து அந்த தயக்கத்தை தூக்கியெறிஞ்சுட்டேன்.. இனிமேல் யாரும்.. எதுவும்.. என்னை கட்டுப்படுத்தாது... மீறி யாராவது என்னை தடுக்க நினைச்சா நான் போலீசுக்குப் போவேன்... மகளிர் அமைப்புகளிடம் புகார் கொடுப்பேன்...” என்று குமுறியவளின் கையைப் பற்றிய சுந்தரம் “ அய்யோ அவசரப்படாதேம்மா... நான் சத்யன்கிட்ட பேசுறேன்.. இந்த நிலைமையில் போகாதேம்மா ”என்று கெஞ்சினார்..

அவரை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த மான்சி “ யாருடை அனுதாபமும் எனக்கு வேண்டாம்... நீங்க எடுத்து சொல்லி உங்க மகன் எனக்கு வாழ்க்கை தரனுமா? அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம்... எனக்காக இவ்வளவு நாளா காத்திருந்து.. இனிமேலும் காத்திருக்கப் போகும் விக்டரோடு தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்.. இதுக்கு மேல என்னை வற்புறுத்தாதீங்க...” என்றவள் தன் வயிற்றில் கைவைத்து “ நான் என் குழந்தை இருவருமே உங்ககிட்ட எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டோம்... உங்களுக்கு சந்தேகமிருந்தால் எதில் வேண்டுமானாலும் கையெழுத்துப் போட்டு தருகிறேன் சார்... தயவுசெய்து இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழவிடச் சொல்லுங்க உங்க மகனிடம் ” என்று கூறிவிட்டு தான் தங்கியிருந்த அறைக்குள் போனாள் மான்சி

சுந்தரம் தன் மகனை ஆத்திரமாக பார்த்து “ நானும் தடம் மாறினேன் தான்... உன் அம்மா இறந்த பிறகுதான் மாறினேன்... அப்பவும் அந்த ரோச்சலை உண்மையா நேசிச்சேன்.. அவ என்னைவிட்டு போகனும்னு சொன்னப்ப யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம நான் விலகினேன்.... ஆனா உன்னால எத்தனைப் பிரச்சனைகள்... நான் உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நெனைச்சு தான் வந்தேன்...இப்போ அந்த நினைப்பு இல்லை... இவ்வளவு கேவலமான உன்னைவிட அந்த விக்டர் தான் மான்சிக்கு பொருத்தமானவன்னு தோனுது... தயவுசெய்து இனிமேலும் இந்தப் பொண்ணை தொந்தரவு பண்ணாதே... ஏற்கனவே பண்ண பாவம் போதும் மேலும் மேலும் பாவம் பண்ணாதே” என்று வெறுப்புடன் பேசிவிட்டு தனது பெட்டியை கையிலெடுத்தார்

சத்யன் கறுத்துப் போன முகத்துடன் சோபாவில் அமர்ந்தான்... மான்சியிடம் இத்தனை ஆத்திரத்தை அவன் எதிர் பார்க்கவில்லை... மான்சி கூறிய உண்மைகள் அவன் நெஞ்சில் ஊசியாக இறங்கியிருந்தது... அவளை இங்கே கட்டுப்படுத்தி வைக்க ஏதுமில்லையா? ஓப்பந்தம் வேலைக்கு மட்டும் தானா? இவ்வளவு பேசும் அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்.. இவளா வரனும்னு ஆசைப்பட்டேன் அது தப்பா?.. இப்பவும் என்மீது எந்த தவறும் இல்லை... நான் இவளை ஏமாற்றவில்லை ’ என்று சத்யன் எண்ணமிட்டுக் கொண்டு இருக்கும்போதே மான்சி தனது லெதர் பையுடன் அறையிலிருந்து வந்தாள்...

சுந்தரம் மான்சியை நெருங்கி “ குடும்மா நான் எடுத்துட்டு வர்றேன்” என்று பையை வாங்க “ இல்ல வேனாம் சார் நானே எடுத்துட்டு வர்றேன்” என்று மான்சி சொன்னதும் .. அவளை வருத்தமாகப் பார்த்து “ உன் அப்பா வயசுள்ள ஆள்ன்னு சொன்னியேம்மா? இனி உன் அப்பாவாகவே நெனைச்சுக்கோ... என் மகனுக்காக நான் உன்னிடம் எதையும் கேட்கமாட்டேன் என்னை நம்பும்மா... மருமகளா வந்தால் தானா உறவு? இனி என் மகளா இருந்துட்டு போம்மா ” என்றபடி மான்சியின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு தோட்டத்து அறை இருக்கும் திசைக்குப் போனார்...


அதுவரை முகம் கறுத்து அமர்ந்திருந்த சத்யன் ஏதோ தோன்ற எழுந்து ஓடி வந்து சுந்தரம் பின்னால் போன மான்சியின் கையைப் பிடித்துக்கொண்டு “ உன்னை எந்த தொல்லையும் பண்ணமாட்டேன் மான்சி ப்ளீஸ் இங்கயே இரேன்” என்று முதன்முறையாக மான்சியிடம் கெஞ்சினான்...

மான்சி நின்று திரும்பினாள் ... அவனைத் தீர்கமாக பார்த்து “ இனிமேல் நீங்க நடிச்சு வாங்குறதுக்கு என்கிட்ட ஒன்னுமே இல்லைங்க... என்னை நிம்மதியா வாழவிடுங்களேன்” என்று மான்சி கைகூப்பி அவனிடம் கெஞ்ச... அவளைப்பற்றியிருந்த சத்யனின் கரம் தளர்ந்தது...

மான்சியின் கண்களில் இருந்த வலி உண்மை... துடித்த உதடுகள் சொன்ன வார்த்தைகள் உண்மை... அப்படியானால் என்னைப் பிரிந்தால்தான் இவளுக்கு நிம்மதி என்று சொல்றாளா? அப்படியென்ன நான் என்ன செய்தேன்? இவளுக்காக எனக்குப் பிடிக்காததை ஒன்றை நான் செய்யவேண்டுமா என்ன? இவளுக்காக எனது கொள்கைகளை விட்டுத்தரவேண்டுமா என்ன? நெவர்.... என்று கர்வமாக நிமிர்ந்தான் சத்யன்..

வாசலைத்தான்டி தோட்டத்திற்கு செல்லும் வழியில் திரும்பினாள் மான்சி... பக்கவாட்டு தோற்றத்தில் அவளின் பெரிய வயிறு தெரிந்தது... அய்யோ இவ்வளவு பெரிய வயிறா இருக்கே? இதோட அந்த சின்ன ரூம்ல எப்படி இருப்பா?.... சத்யன் சற்றுமுன் கர்வமாய் நிமிர்ந்ததை மறந்து அவள் பின்னால் ஓடினான்...

மான்சியின் எதிரில் நின்று “ மான்சி குழந்தை பிறக்கிற வரைக்குமாவது பங்களாவிலேயே இரேன்... அது ரொம்ப சின்ன ரூம் மான்சி” என்று மறுபடியும் கெஞ்சினான்...

அவனை ஏளனமாகப் பார்த்த மான்சி... கன்னி மேரிக்கு பிறந்து உலகுக்கே கடவுளான ஏசுபிரான் ஒரு மாட்டு தொழுவத்தில் தான் பிறந்தார்... அதேபோல் என் குழந்தையும் இந்த சின்ன வீட்டுலயே பிறக்கட்டும்” என்று கூறிவிட்டு அந்த சிறிய வீட்டை திறந்து உள்ளே போய் சுந்தரத்திடம் பையை வாங்கிக்கொண்டு “ நீங்க கிளம்புங்க சார்” என்றாள்

வாசலிலேயே நின்ற சுந்தரம் “ உன்னோட நிமிர்வும் வைராக்கியமும் எனக்குப் பிடிச்சிருக்கும்மா... உனக்கு எந்த உதவி வேனும்னாலும் என்கிட்ட தயங்காம கேளும்மா நான் செய்ய காத்திருக்கேன்” என்றவர் மகன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் தனது பையுடன் தான் வந்த காரை நோக்கி சென்றார்...

முதன்முறையாக அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மான்சியின் சிறிய வீட்டின் முன்பு கோழையாக நின்றிருந்தான் சத்யன்... உள்ளே சென்ற மான்சி சுந்தரம் போனதும் கதவை அடைத்தாள்


“ என் நிழலாய் நீ வரவேண்டும் என...

“ நான் நினைத்தேன்...

“ இப்போது என் நிஜமே என்னைவிட்டு..

“ தொலை தூரம் போனதேன் !

உண்மையிலேயே கதவை மூடிட்டாளா? சத்யன் மூடிய கதவையேப் பார்த்தான்... பிறகு நெஞ்சை அடைத்த எதையோ விரலால் நீவியபடி தனது பங்களாவை நோக்கிப் போனான்... இன்றைய விடியல் தனக்கு நல்லதாக அமையவில்லை என்று புரிந்தது..

இதோ கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும்.. மான்சி அவனைவிட்டு தொலைதூரம் போய்விட்டாள் என்று அவள் வார்த்தைகளும் கண்ணீரும் அவனுக்கு சொல்லாமல் சொன்னது... இரவெல்லாம் அணைத்துத் தூங்கியவள் காலையில் நீ இல்லாத இடம்தான் எனக்கு நிம்மதி என்று போய்விட்டாள்...

இதுவே நிரந்தரமா என்று அஞ்சியது சத்யனின் மனம்... நான் செய்தது தவறா? என்ற கேள்வியை வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வடிவத்தில் அவன் மனசாட்சி அவனிடம் கேட்டுக்கொண்டே இருந்தது .... அதற்கு இவனுடைய பதில் ‘ நான் என் வழியிலிருந்து தவறவில்லை’ என்பதுதான் ...

கட்டிலில் கவிழ்ந்து படுத்தான் ... மான்சி சொன்ன வார்த்தைகளை மனதில் ஓட விட்டான்... எந்த இடத்தில் அவளை எதிர்க்க முடியாமல் தன்னுடைய மனம் கோழையானது என்று யோசித்தான்... இறுதியில் அவள்விட்ட கண்ணீர் தான் தன்னை கோழையாக்கியது என்று யோசனையின் முடிவில் தெளிவானது

நேற்றுவரை விக்டருக்கு முடிவு சொல்லாமல் என்மீது நம்பிக்கையோட காத்திருந்தாளா? அதனால்தான் இரவு என் அணைப்பில் அடங்கினாளா? இதை நினைக்கும்போதே இரவு வயிறு இடிக்கிறதே என்று பின்புறமாக அணைத்துப் படுத்தது ஞாபகம் வந்தது... இன்னக்கு நான் தூங்க என்ன பண்றது? .... என்று மனம் குழந்தையாய் கேள்வி கேட்க... அவள் ரூமுக்கு போய் ‘ எனக்கு தூக்கம் வரலை என்னை தூங்க வை மான்சி என்று கேளடா என்று அறிவு பதில் சொன்னது..

கோபமாக விரட்டினாள் என்ன பண்றது? என்றது மனம்.... அவ வீட்டு வாசற்படியிலேயே வீழ்ந்து கிட..... என்றது அறிவு.... முதன்முறையாக மான்சியின் கோபம் தன்னை பாதிப்பதை உணர்ந்தான் சத்யன்....

ஆனாலும் சுயகௌரவம் என்ற பெயரில் ஒட்டிக்கிடந்த தலைக்கனம் அதை ஒத்துக்கொள்ள மறுத்தது...

தனது அப்பா கோபமாக கிளம்பி தொலை தூரம் போனதை பற்றி சத்யனுக்கு கவலையில்லை... ஆனால் மான்சி கோபமாக கிளம்பி இதோ இருக்கும் இருபதடி தூரத்தில் வசிப்பது அவனை ரொம்பவே பலகீனப்படுத்தியது...

சத்யன் எழுந்து அமர்ந்தான்... மான்சியை எப்படி சமாதானப்படுத்துவது என்று நெற்றியை தடவியபடி யோசித்தான்.... தனக்குள் எந்த இடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தது என்று கவனமாக வரிசைப்படுத்தினான்... மான்சியை தொட்டபின் வேறு பெண்களை தன்னால் தொடமுடியாது போனது எதனால் என்று அவன் மனதுக்குள் ஓரளவு தெளிவு இருந்தது... ஆனால் அது காதலென்று சத்யனால் ஒரே முடிவுடன் ஒத்துக்கொள்ள முடியவில்லை...

அதேசமயம் அவன் மனம் அவனை வேறொரு கோணத்திலும் யோசித்தது ‘என் அம்மாவை உயிராக நேசித்த என் அப்பா அம்மா இறந்ததும் காதல் என்ற பெயரில் வேறு ஒருத்தியை நாடியிருக்கிறார்... ஆனால் நான் திருமணமே ஆகாமல் ஒரேயொரு இரவு மட்டும் உறவு கொண்ட மான்சியை விட்டுவிட்டு வேறு எவளையுமே தொடமுடியாமல்.. ஏன்.... நினைத்துப் பார்க்ககூட முடியாமல் தவிக்கின்றேனே இதற்கு பெயர் என்ன?... இதுதான் காதலா? அப்படி இதுதான் காதலென்றால் இதுவும் சுகமாகத்தானே இருக்கிறது... இப்படியே இருந்துவிட்டு போனால் தான் என்ன?


No comments:

Post a Comment