Monday, December 21, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 5



பவித்ரா குழந்தையுடன் வீட்டுக்கு போனதும் கதவை திறந்த ஆதி மதுமிதாவை வாங்கிக்கொள்ள... குழந்தையும் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு ஆதிலட்சுமியின் கழுத்தை கட்டிக்கொண்டு “ பாட்டி நான் வந்துட்டேனே” என்று கொஞ்சினாள்..

ஆதியும் “ என் பேத்திய பார்க்கனும்னு சாமிகிட்ட நேத்து சொன்னேன்.... அதான் உன்னை கூட்டிட்டு வந்துட்டார்” என்று பதிலுக்கு கொஞ்சியபடி அவளை தன் இடுப்பில் இடுக்கிக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்

“ அச்சச்சோ சாமி கூட்டிட்டு வந்து விடலை பாட்டி.... எங்கப்பா முத்துகுமாது தான் கூட்டிவந்தாது ” என்று தனது மழலை தமிழில் கூறியதும் ஆதிக்கு தன் கவலையெல்லாம் மறந்தது....



“ உங்கப்பாவும் எங்களுக்கு சாமிதான்டி என் தங்கமே ” என்று கண்கலங்க உருகினாள்...

ஆஸ்பிட்டல் எடுத்துச்சென்ற பாத்திரங்களை கிச்சனில் கழுவிக்கொண்டிருந்த பவித்ராவின் காதுகளில் இவர்களில் பேச்சு விழுந்தது ... ‘ ஆமாம் சாமிதான்.... அந்த சாமிதான் என்னை இன்னைக்கு எவ்வளவு பெரிய அசிங்கத்துல இருந்து காப்பாத்துச்சு’ என்று எண்ணியபடி பாத்திரம் கழுவினாள்...

“ அய்யா அப்பா சாமியா?” என்று குதித்த மதுமிதா “ அப்படின்னா சாமிக்கு போடுத மாதிதியே அப்பாக்கும் பெரிய மாலை போடுவோமா?” என்றவள் ஆதி பதில் சொல்லும்முன் “ அப்பாக்கு மாலை நம்ம பவி ஆன்ட்டி போடட்டும்” என்று சொல்ல...

கிச்சனில் இருந்த பவித்ராவின் முதுகு தண்டு சில்லிட்டு விரைத்தது ..... குழந்தை ஏன் இப்படியெல்லாம் சொல்றா? என்று சங்கடமாக எண்ணியவாறு கிச்சனிலிருந்து வெளியே வந்து “ மது வரும்போதே தூங்கிகிட்டே வந்தா அத்தை... குடுங்க நான் தூங்க வைக்கிறேன்” என்று குழந்தையை வாங்கிக்கொண்டு தனது அறைக்குப் போய் குழந்தையை கட்டிலில் கிடத்தி இவளும் அருகில் படுத்து அணைத்துக்கொண்டு மெல்லிய குரலில் குழந்தைக்கு கதை சொல்ல ஆரம்பித்தாள்...

கதை கேட்டபடி பவித்ராவை அணைத்துக்கொண்டு உறங்கிவிட ... பவித்ராவுக்கு உறக்கம் வரவில்லை மருத்துவமனையில் நடந்ததே மறுபடியும் மறுபடியும் ஞாபகத்தில் வந்து அவளை கலங்க செய்தது .... தன் குரல் கேட்டு முத்து மட்டும் அப்போது வராமல் இருந்திருந்தால் என்று எண்ணும்போதே அவள் உடல் உதறியது...

நடந்ததை மறக்க முடியாமல் தவித்தவள்.... மனஉளைச்சலும் உடல் அயர்ச்சியும் சேர்ந்து அவளை பாடாய்ப்படுத்த தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக உடல் வலியாக மாறி காய்ச்சலில் போய் முடிய.... உடம்பு நெருப்பாய் தகிக்க ஆரம்பித்தது...

தன்னிடம் ஒட்டிக்கிடந்த குழந்தையை காய்ச்சல் தொற்றிவிடுமோ என்று சற்று நகர்த்தி படுக்க வைத்தாள்.... எழுந்துபோய் ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்டு தண்ணீருக்காக கிச்சனுக்கு போனாள்...

சோபாவில் படுத்திருந்த ஆதி இவளின் முகச்சிவப்பை பார்த்து பதறி எழுந்து வந்து நெற்றியில் கைவைத்துப் பார்த்து “ என்ன பவித்ரா இப்படி கொதிக்குது” என்று கேட்க..

“ ஆமா அத்தை இப்பதான் காயுது... மாத்திரை போட்டுகிட்டு தூங்குறேன் சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு மாத்திரைப் போட்டுக்கொண்டு மீண்டும் தனது அறையில் போய் படுத்துக்கொண்டாள்

அன்று மாலை குழந்தை எழுந்தபிறகும் பவித்ரா எழுந்திருக்கவில்லை.... உடல் நெருப்பாக தகித்தது.... குழந்தையை வைத்துக்கொண்டு பவித்ராவை எப்படி ஆஸ்பிட்டல்க்கு கூட்டிப் போவது என்ற குழப்பத்துடன் பவித்ராவுக்கு காபி போட்டு கொடுத்துவிட்டு அங்கேயே கவலையுடன் அமர்ந்திருக்க...

ஏழு மணிவாக்கில் முத்து வந்தான் மகளை அழைத்துச்செல்ல... ஆதி அவனுக்கு காபி எடுத்துவந்து கொடுக்க... பவித்ராவை காணாமல் “ பவித்ரா எங்கம்மா?” என்று கேட்டான்...

“ மதியம் ஆஸ்பிட்டல்ல இருந்து வந்ததில் இருந்து சரியான காய்ச்சல் முத்து... ரெண்டு முறை மாத்திரை போட்டும் கேட்கலை... நீ வந்ததும் பாப்பாவை அனுப்பிட்டு ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேன்” என்று ஆதி கூறியதும்...

பதட்டமானான் முத்து ... எதற்காக இந்த காய்ச்சல் என்று அவனுக்குப் புரிந்தது.... இந்த பவி எவ்வளவு மென்மையானவள் என்று அவன் இதயம் கசிந்தது... “ நான் போய் பார்க்கிறேன்மா” என்றவன் வேகமாக எழுந்து பவித்ராவின் அறைக்குள் போனான்...

போர்வையால் மூடிக்கொண்டு கட்டிலில் சுருண்டு கிடந்தவளைப் பார்த்ததும் உள்ளம் உருக கட்டிலை நெருங்கி நெற்றியில் கைவைத்துப் பார்த்து “ பவித்ரா வா ஆஸ்பிட்டல் போகலாம்” என்று மெல்லிய குரலில் அழைத்தான்....

கண்விழித்துப் பார்த்து எழுந்து அமர்ந்த பவித்ரா “ நீங்க பாப்பாவை அழைச்சிகிட்டு வீட்டுக்குப் போங்க.. நான் அத்தைகூட ஆஸ்பிட்டல் போறேன்” என்றுகூறி மறுத்தாள்

முத்து எதுவும் பேசவில்லை அப்படியே அமைதியாக நின்றிருந்தான்.... பவித்ராவும் சிறிதுநேரம் மவுனமாக அமர்ந்திருந்தாள்.. பிறகு எழுந்து களைந்த கூந்தலை சரிசெய்து கொண்டு “ வாங்க போகலாம்” என்று மென் நடையாக வெளியே வந்தாள்....

அவள் பின்னால் வந்த முத்து “ அம்மா மதுவை பார்த்துக்கங்க நான் பவித்ராவை ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்ட்டு வர்றேன்” என்றுகூறிவிட்டு பவித்ராவை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டல் கிளம்பினான்...

ஜீப்பில் செல்லும்போது இருவரும் ஒருவார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை... பவித்ரா தனது முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அமைதியாக வர.... பார்வை ரோட்டில் இருந்தாலும் முத்துவின் கவனம் மொத்தமும் பவித்ராவை விட்டு விலகவில்லை

ஆஸ்பிட்டல் வந்ததும்.... இருவரும் இறங்கி உள்ளே போக... துவண்டு போய் கால்கள் துவளத் துவள நடந்தவளை கைகளில் தாங்கிச் சென்று உள்ளே அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அடக்கிக்கொண்டு அவளுக்கேற்றார்ப் போல் தனது நடையின் வேகத்தை குறைத்துக்கொண்டு உடன் போனான்... 


பவித்ராவை சேரில் உட்கார வைத்துவிட்டு ஓபி சீட்டு வாங்கி வந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்து இவள் பெயர் சொல்லி அழைக்கும் வரை பொறுமையின்றி வெட்டியாய் நியூஸ் பேப்பரின் பக்கங்களை புரட்டினான்....

முத்து எரிச்சலுடன் “ ச்சே எவ்வளவு நேரம்” என்றதும்........ “ நமக்கு முன்னாடி ஆள் இருக்காங்களே? அவங்க போனதும்தான் நான் போகமுடியும்” என்றவள் “ உங்களுக்கு நேரமாச்சுன்னா கிளம்புங்க.... நான் டாக்டரைப் பார்த்துட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போய்க்கிறேன்” என்று மெல்லிய குரலில் சொல்ல...

முத்து அவளை கடுமையாக முறைத்தான்.... தன்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்ற ஆத்திரம் அவள் காதருகே திரும்பி “ நீ காய்ச்சலோட அவஸ்தைப் படுறியே என்ற ஆதங்கத்தில் தான் சொன்னேன்... மத்தபடி எனக்கு எதையும் புடுங்குற வேலையும் இல்லை” என்றான்...

அவன் மெல்லிய குரலில் கூறினாலும் அந்த குரலில் இருந்த அக்கறை கலந்த கோபம் பவித்ராவுக்கு இமைகளை நனைத்தது

கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழித்து பவித்ராவின் பெயர் அழைக்கப்பட.... அவளுக்கு முன்னால் பரபரப்புடன் எழுந்தான் முத்து.... டாக்டரின் அறைக்குள் பவித்ரா மட்டுமே அனுமதிக்கப் பட்டு முத்துவை வெளியே தடுத்து நிறுத்தினாள் நர்ஸ்..... முத்துவுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்தால் நர்ஸை எரித்திருப்பான்.... “ அவ ரொம்ப பலகீனமானவள் மயக்கம் வரும் ப்ளீஸ் என்னை உள்ளே விடுங்க...” என்று கெஞ்சியவனை சிரிப்புடன்ப் பார்த்த நர்ஸ்.

“ மயங்கி விழுந்தாக்கா உங்க மனைவியை தாங்க உள்ளே ஏழெட்டு நர்ஸ் இருக்காங்க .. அதனால நீங்க கவலைப் படாம போய் வெயிட் பண்ணுங்க சார்” என்றாள்...

முத்து நினைத்திருந்தால் ஏதாவது வம்பு பேசி உள்ளே சென்றிருக்கலாம்... ஆனால் காலையிலிருந்து தவித்து துடித்த அவன் இதயத்துக்கு அந்த நர்ஸ் பூவால் ஒத்தடமிட்டிருந்தாள்.... முகத்தில் திடீரென்று வந்து ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் லேசாய் தலை கவிழ்ந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்..

காலையிலிருந்து அவன் மனம் பவித்ராவிடம் மானசீகமாய் கேட்ட கேள்வியை இப்போதும் கேட்டது.... ஏன் இவளுக்காக நான் இப்படி தவிக்கிறேன் துடிக்கிறேன்?

அரைமணிநேரம் அவனது ஏக்கத்துடனேயே கழிந்தது.... அந்த நர்ஸ் அழைத்தாள்.... எழுந்து ஓடியவனின் கையில் மருந்து சீட்டை கொடுத்து “ இதை வாங்கிட்டு வாங்க சார்” என்றாள்..

முத்து மெடிக்கல் ஷாப் போய் மருந்துகளை வாங்கி வரும்போது பவித்ரா வெளியே வந்து அமர்ந்திருந்தாள்...... அவளைப்பார்த்தபடி நர்ஸிடம் சென்று மாத்திரைகளை எப்படி கொடுப்பது என்ற விபரம் கேட்டுவிட்டு பில்லுக்கான பணத்தை கட்டிவிட்டு வந்தான்..

“ இப்போ பரவாயில்லையா பவித்ரா?” என்றவனின் குரலில் இருந்த ஏதோவொன்று அவளை நிமிரவிடாமல் செய்தது..... “ ம்ம் பரவாயில்லை .... வீட்டுக்குப் போகலாம் மது வெயிட் பண்ணுவா” என்றாள் நிமிராமலேயே...

“சரி வா” என்று முத்து முன்னால் நடக்க..... அவனைவிட்டு பல அடி தூரம் பின்னால் வந்தாலும் அவள் பாதங்கள் மட்டும் அவன் காலடியைத் தேடித் தேடி பதிந்தது

வரும்போதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை... மவுனமாகவே வந்தனர்.... அப்பார்ட்மெண்ட்க்கு வந்து மாடிக்கு லிப்டில் பயணமாகும் போதும் முத்து அவளை பாதுகாப்பவன் போல் அருகிலேயே நின்றிருந்தான்....

வீட்டுக்குள் நுழைந்ததும் பவித்ரா தனது அறைக்கு சென்று கட்டிலில் படுத்துவிட.... முத்து ஆதிலட்சுமியிடம் மாத்திரைகளை கொடுத்து விபரங்களை சொல்லிவிட்டு “ சாதரணமான பீவர் தான்மா.... கஞ்சி அல்லது பிரட் பால் குடுக்க சொன்னாங... நாங்க கிளம்புறோம்மா” என்று கூறிவிட்டு பவித்ராவின் அறையிலிருந்த மகளை தூக்கிவர உள்ளே போனான்...

மதுமிதா பவித்ராவின் அருகில் அமர்ந்து பவித்ராவின் கன்னத்தை வருடிக்கொண்டிருக்க .... அந்த பிஞ்சின் அன்பில் நெகிழ்ந்த பவித்ராவின் கண்கள் நீரை சொரிந்தது.... முத்து அமைதியாக கட்டிலின் அருகில் நின்று இருவரையும் பார்த்தான்....




“ மதுக்குட்டி வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்று மகளை தூக்கினான்... அவளோ பவித்ராவின் மேல் ஏறி படுத்து அவளை இறுக்கி கட்டிக்கொண்டு “ ம்ஹூம் நான் ஆன்ட்டியை விட்டு வரமாட்டேன் டாடி நீ மட்டும் போ” என்று பிடிவாதம் செய்தது....

ம்ஹ்ம் என்று பெருமூச்சு விட்ட முத்து ‘ எனக்கும் ஆசைதான் இவள் காலடியில் கிடந்து உயிரை விடனும்னு..... ஆனால்.................................... ‘ இந்த ஆனால் என்ற உருவமற்ற அர்த்தமற்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தது? எத்தனை ஆனாக்கள் கடைசிவரை பொருளின்றி முடிந்துவிடுகிறது ...

“ இல்ல கண்ணம்மா நாளைக்கும் உனக்கு ஸ்கூல் லீவு தானே... நாளைக்கு மறுபடியும் ஆன்ட்டிகிட்ட கூட்டிட்டு வர்றேன்... இப்போ பாட்டி பாவம்ல நமக்காக வெயிட் பண்ணுவாங்க வாடா செல்லம்” என்று மகளிடம் கெஞ்சினான்...

மதுமிதாவை அணைத்தவாறே எழுந்த பவித்ரா அவளை முத்துவிடம் கொடுத்து “ நாளைக்கு மறக்காம பாப்பாவை கூட்டிட்டு வாங்க... நான் என் மது கண்ணம்மாவுக்கு நிறைய கதை சொல்லனும்” என்று குழந்தையை சமாதானம் செய்தாள்..

அவளிடம் வெறும் தலையசைப்புடன் பார்வையால் விடைபெற்று அறையின் வாசல் வரை போனவன் அங்கே நின்று திரும்பி “ நாளைக்கு சாப்பாடு எடுத்து ரெடியா வை பவித்ரா... நான் வந்து எடுத்துட்டுப் போறேன்... நீ ஆஸ்பிட்டல் வரவேண்டாம்” என்றான்...

உறுதியாக தலையசைத்து மறுத்த பவித்ரா “ ம்ஹும் நான் வரனும்.... மாமாகிட்ட நான் கொஞ்சம் பேசனும்” என்றாள்...

முத்துவுக்கு காரணமின்றி தன்மீதே கோபம் வந்தது... இயலாமையுடன் உடல் விரைத்து மனம் புழுங்கியவன் “ சரி ரெடியா இரு நான் வந்து கூட்டிட்டுப் போறேன்” என்று கூறி கதவை மூடிவிட்டு கிளம்பினான்....

பவித்ரா மூடிய கதவையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.... சமீபகாலமாக முத்துவின் பார்வையும் அவனுடைய அனுசரணையும் சொல்லும் சேதி அவளுக்கு புரியாமல் இல்லை.... மனைவி இறந்து இத்தனை வருடமாக விரதம் காத்தவன் தன்னைக் கண்டு மனம் தடுமாறுகிறான் என்று புரிந்தது..... ஆனால்.........................’

என் மாமா சத்யனை தவிர்த்து என் உள்ளம் வேறு யாரையும் நினையாது என்று தனக்குத்தானே தனக்குள் மின்சார வேலி போட்டுக்கொண்டு காத்திருந்தாள் பவித்ரா.... அந்த மின்சாரவேலிக்கு பவர் சப்ளை நின்றுபோய் பலநாட்கள் ஆகி அது இப்போது சாதரண நூல் வேலியாக மாறிவிட்டது என்று பவித்ரா உணரவில்லை...

மகளை அழைத்துக்கொண்டு ஜீப்பில் சென்ற முத்துவின் மனமோ பவித்ராவின் அறையிலேயே தங்கிவிட்டது.... அவள் எப்போது தன் மனதில் நுழைந்தாள் என்று அவனுக்கே தெரியவில்லை......

முதல் சந்திப்பில் தனது மாமனுக்காக கதறி துடித்து மயங்கி என் நெஞ்சில் விழுந்தாளே அப்போதா? இரவுநேரத்தில் நானும் அவளும் மட்டும் சத்யனுக்காக மருத்துவமனையில் காத்துகிடந்த போது ஒரு தாயன்போடு என்னை தூங்கச சொல்லிவிட்டு அவள் விழித்திருந்தாளே அப்போதா? அதன்பின் நான் ஒவ்வொரு முறையும் அவள் முகம் பார்த்து பேசும்போது அவள் நிலம் பார்த்தாளே அப்போதா? இந்த ஒரு வருடமாக அவளுக்கு ஏதாவது தேவையெனும் போது மற்றவர்களை விட்டுவிட்டு அவள் பார்வை என்னை தேடியதே அப்போதா? எப்போது அவள் நுழைந்தாள் என்று புரியாமலேயே மனம் முழுவதும் அவள் நினைவுகளை சுமந்துகொண்டு தவித்தான்..

தன் மனதை வெளிகாட்டமுடியாமல் சத்யன் மீதான பவித்ராவின் காதல் அவனை அடிக்கடி உடைத்துப் போட்டது.... சத்யனுக்கு பவித்ராதான் என்ற கல்யாண பேச்சு அவன் காதுகளில் விழும்போதெல்லாம் அவன் உருக்குலைந்தான்....

உயிர் நண்பனுக்கு தன்னுடைய காதல் துரோகம் செய்துவிடுமோ என்ற பயத்திலேயே அவன் இதயம் நாளுக்கு நாள் நலிவடைந்தது.... ஆனால் அந்த பயத்தையும் மீறிய அவனது காதல் நாளுக்கு நாள் பெரும் விருட்சமாக மாறி கிளை பரப்பியிருந்தது அவன் மனதில்




“ மயங்கி என் நெஞ்சில் விழுந்தாய்?

“ பரிதாபத்தோடு அணைத்தேன் அன்று !

“ இன்றும் மயங்கி விழுந்தாய் என் நெஞ்சில்?

“ பாதுக்காப்புடன் அணைத்தேன் !

“ மீண்டும் எப்போது மயங்கி என்

“ என் நெஞ்சில் விழுவாய் அன்பே?

“ உன்னை பாசத்தோடு அணைப்பதற்கு!

சென்னை மருத்துவக்கல்லூரியின் மகளிர் விடுதி.... இரண்டாவது தளத்தில் இருந்த ஏழாவது அறையின் உள்ளேயிருந்து கீச்சுக் கீச்சென்று கத்திக்கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்....

அந்த கத்தலை தொடர்ந்து அறைக்கதவை திறந்து கொண்டு கோபமாக வெளியே வந்த கொஞ்சம் புஷ்டியான அமுல்பேபி ஒருத்தி “ எக்கேடாவது கெட்டு ஒழிடி.... இனிமே நான் அந்த ரூமுக்கே வரமாட்டேன்.... பொண்ணா இவ சரியான பிசாசு” என்றபடி காரிடரில் மூச்சு வாங்க வாங்க நடந்தாள்....

அதே கதவு வழியாக வேகமாக வெளியே வந்தாள் அந்த அமுல் பேபி குறிப்பிட்ட பிசாசு.... மூச்சுவாங்க வேகமாக போனவளின் பின்னால் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டு “ ஸாரிடி குல்பி .... தெரியாம பேசிட்டேன் ... கோச்சுக்காதடி மோகி ” என்று கெஞ்சியபடி அந்த அமுல்பேபியை மீண்டும் அறைக்கு தள்ளிக்கொண்டு போனாள் அந்த அழகான பிசாசு....

பிசாசின் பெயர் மான்சி கமலகண்ணன்.... மருத்துவக்கல்லூரியின் இறுதியாண்டு மானவி.... அறுபது சதவிகிதம் குறும்பு... நாற்பது சதவிகிதம் திமிர்.... அவளது 53 கிலோ எடையை வைத்து கணக்கு சொல்லவேண்டும் என்றால் அழகும் கொழுப்பும் சரிவிகிதத்தில் கலந்து செய்த கலவை இவள்...

பெற்றோருக்கு திருமணம் முடிந்தவுடன் பிறந்த செல்ல மகள் மற்றும் செல்வ மகள்...... இவளுக்கப் புறம் வாரிசில்லாமல் போய் ஒற்றை மகளாக வளர்ந்த செல்லம் இவளை இப்படி மாற்றியிருக்கிறது .... போடும் உடைகளிலிருந்து சாப்பிடும் உணவு வரை எல்லாமே நேர்த்தி என்று சொல்வதைவிட அதிகமான ஊதாரித்தனம் என்று வேண்டுமானால் சொல்லலாம்...

தனது நீளமான கூந்தலில் ஆரம்பிக்கும் கர்வம் ... செர்ரிப்பழ துண்டுகளைப் போன்ற போன்ற தனது பாத விரல்களில் வந்து முடியும்.... அலட்சியமாக கூந்தலை சிலுப்பிக்கொண்டு இவள் நடக்கும் போது அந்த மருத்துவ கல்லூரியே இவளுடன் சேர்ந்து இடம்பெயரும்....

மான்சி என்ன உடை போட்டு வருவாள் என்று பசங்களுக்குள் அன்றாடம் பட்டிமன்றமே நடக்கும்.... ஜீன்ஸும் டாப்ஸும் போட்டு வந்தாள் என்றாள் அந்த டாப்ஸில் உள்ள வாசகங்களை படிக்க என்று அவளை பின்தொடர்ந்து சென்று கன்னத்தை பழுக்க வைத்துக்கொண்டு வரும் பசங்களும் உண்டு.....

இதுவரை அவளுக்கு வந்த காதல் கடிதங்களை அவள் சார்பாக இந்த அமுல்பேபி மோகனா தான் வாசித்து காட்டுவாள்.... மகாராணிக்கு எதிரி நாட்டு ஒற்றன் ஓலை வாசித்துக் காட்டும் ஸ்டைலில் இருவரும் படித்துவிட்டு சிரிப்பார்கள்...

மான்சி என்ற காளியின் பெயருக்கு ஏற்றார்போல் அவளுக்கு தேவையான சமயங்களில் அந்த அவதாரத்தை எடுக்கவும் தயங்கமாட்டாள்..... ஆனால் அவதாரம் அடிக்கடி எடுப்பதால் தான் அதற்கு பெயர் ராங்கிக்காரி என்று ஆகிவிட்டது....

கமலக்கண்ணன் என்ற அப்பாவி .... இவளைப் பெற்ற அபாக்கியசாலி பாவம் ஊரில் உழைத்து சம்பாதித்தது எல்லாம் மகளுக்கு அனுப்பி தனது ஒற்றை மகளை டாக்டருக்கு படிக்க வைத்தார்.... ஆனால் இந்த மான்சி என்ற அழகு பிசாசு இன்னும் படிப்பில் ஜீரோ தான்....

எப்போதாவது பார்க்க வரும் கமலகண்ணன் கவலையோடு “ என்ன பாப்பா இதெல்லாம்... படிப்புல கவனமா இருக்ககூடாதா” என்று பயந்து பயந்து கேட்டார் என்றால்...

“ கமலக்கண்ணனா உன்னை யாரு என்னை டாக்டருக்கு படிக்க வைக்க சொன்னது? நான் டாக்டராகனும்னு உன்கிட்ட கேட்டேனா? ஒழுங்க அந்த திமிர் பிடிச்சவன் மகனுக்கு என்னை கட்டி வை வருஷத்துக்கு ஒன்னுன்னு அஞ்சாறு புள்ளைய பெத்து குடுத்து உன்னை தாததாவாக்குறேன்னு சொன்னேன் ... நீ கேட்கலை?... இப்ப வந்து படிக்கலைன்னா நான் என்ன பண்றது? வந்தானே படிக்க முடியும்?... நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்” என்று மகள் கண்களை உருட்டிக்கொண்டு நீளமாக பேசும்போதே கமலக்கண்ணனுக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிடும்....

“ வேனாம் பாப்பா... அந்த குடும்பத்தோட சங்காத்தமே.... அவங்களால என் தம்பியை இழந்தது போதும்... நீயும் அந்த குடும்பத்துல கால் வைக்கக்கூடாது பாப்பா ” என்று தவிப்புடன் சொல்பவரை அலட்சியமாக பார்ப்பாள் மகள்....

“ கமலக்கண்ணனா உன் தங்கச்சி அதான் அந்த ஆதிலட்சுமி கிழவி பெத்து வச்சிருக்காளே ஒருத்தனை அவன்தான் எனக்கு புருஷன்... இதை நான் பத்து வருஷமா சொல்லிகிட்டு இருக்கேன்... நீ அதுக்கான வேலையைப் பார்க்காம ‘ அய்யோ பாப்பா அந்த குடும்பம் வேனாம் கண்ணுன்னு என்கிட்ட சீன் போடு’ அவனை கல்யாணம் பண்ணி என் சித்தப்பாவை கொன்ன அந்த ஜானகி குடும்பத்தை ஓடஓட விரட்டலை நான் மாயாண்டி த்தேவன் பேத்தி கமலக்கண்ண த்தேவன் மகள் மான்சி இல்லை... இதுல நீ தலையிட்ட அவ்வளவு தான்டா மவனே... உன் தங்கச்சி புருஷனோட உன்னையும் சேர்த்து காலி பண்ணிடுவேன் ” என்று ஆக்ரோஷமாய் மிரட்டும் மகளைப் பார்த்து மிரண்டு போய் அடுத்த பஸ்ஸில் ஏறி தாராசுரம் போய் சேர்வார்....

“ உன் மகளைப் படிக்க வச்சதுக்குப் பதிலா? ஒரு வெட்டு கத்தியும்... ரெண்டு வீச்சருவாளும்.... நாலு சைக்கிள் செயினும் வாங்கிக் குடுத்திருந்தா நம்ம குலத்தோட பெயரையாவது காப்பாத்திருப்பா” என்று தன் மனைவி வீரம்மாள் சொல்வது எவ்வளவு நிஜம் என்று இப்போதெல்லாம் அடிக்கடி யோசிக்க ஆரம்பித்து விட்டார் கமலக்கண்ணன்....

பத்து வருடத்திற்கு முன்பு இவளது பனிரெண்டாவது வயதில் அப்பா அத்தை எப்படியிருப்பாங்க என்று கேட்ட மகளுக்காக தாராசுரத்தில் இருந்து பஸ் ஏறி நன்னிலம் வந்து ரகசியமாக கோயிலுக்கு சென்று அங்கே சத்யனின் பிறந்த நாளுக்காக செல்வம் ஆதிலட்சுமி சத்யன் என மூவரும் சாமிக் கும்பிட வந்திருக்க அவர்களை மகளுக்கு காட்டினார் கமலக்கண்ணன்...

அன்று ஆரம்பித்தது தான் இந்த வெறி... சத்யனை கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்துக்குள் நுழைந்து.... செல்வத்தை பழிவாங்க வேண்டும்... ஜானகியை விரட்ட வேண்டும் என்று வைராக்கியத்தை பத்து வருடமாக வளர்த்து வருகிறாள்... இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் கம்பீரமாக மீசையை முறுக்கிக்கொண்டு நிற்கும் தம்பியின் படத்தைப் பார்த்துப் பார்த்து கண்ணீர் விடும் கமலக்கண்ணனின் கண்ணீர்தான்.....

ஒரு தாய் வயிற்றில் பிறந்த மூவரில் ஊருக்கே நியாயம் சொல்லும் தம்பி கிருஷ்ணத்தேவன் அவமானம் தாளாமல் தூக்குப்போட்டு இறந்துவிட ... அன்பாய் வளர்த்த ஒரே தங்கச்சி ஆதிலட்சுமி அதே மாவட்டத்தில் இருந்தும் கடல்கடந்து இருப்பது போல் பார்க்க முடியாது இருக்கும் தனது நிலையை எண்ணி கமலக்கண்ணன் கண்ணீர் விடாத நாளே இல்லை...

கிருஷ்ணன் அளவிற்கு கமலக்கண்ணன் வீரமில்லை... அன்புக்கு கட்டுப்படும் கோழை.... தம்பியின் இறப்புக்குப்பின் இரண்டு முறை தங்கையைக் காணச் சென்று இவர் கண்ணெதிரிலேயே ஆதியின் கன்னத்தில் செல்வம் அறைந்ததை கண்டு மனம் துடித்து... எங்கிருந்தாலும் தங்கை நல்லாருந்தா போதும் என்ற நினைப்போடு வாழ்பவர்....

ஆனால் இவரைப் போல் இல்லை இவர் மகள் மான்சி..... கிருஷ்ணன் இறக்கும்போது வீரம்மாளின் வயிற்றில் ஒன்பது மாத குழந்தை... கிருஷணனின் பதினாறாம் நாள் சடங்கு அன்று இந்த பூமியில் ஜனித்தவள் அப்படியே அச்சு பிசகாமல் கிருஷணனின் குணநலன்களோடு பிறந்திருந்தாள்... அதே அலட்சியம் அதே வீரமான பேச்சு... எதையும் சுலபமாக சமாளிக்கும் தைரியம்... என எல்லாமே கிருஷ்ணத்தேவன் தான் அந்த குடும்பத்துக்கு பெண் வாரிசாக பிறந்திருக்கிறான் என்று ஊர் சொல்லுபடி வளர்ந்தாள்

சத்யன் தஞ்சாவூரில் கல்லூரியில் படிக்கும் வரை மான்சியின் கண்பார்வையை விட்டு விலகாதவாறு பார்த்துக்கொண்டாள்.... அவளும் தஞ்சாவூரில் பிரபலமான பள்ளியில் படித்ததால் சத்யனை கண்கானிக்க வசதியாக இருந்தது....

சத்யன் கல்லூரிப்படிப்பு முடிக்க... இவள் பள்ளிப்படிப்பை முடித்தாள்... மாமன் நல்ல படிப்பாளி என்றதும் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு படித்து ப்ளஸ்டூவில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள்....

படிப்பு முடிந்து ஹாஸ்டலை காலி செய்து தாராசுரம் வந்தவள் கமலக்கண்ணனிடம் கேட்ட முதல் கேள்வி “ கமலா யாராவது பெரிய ரவுடியை தெரியுமா?” என்றுதான்...

ரவுடி என்ற வார்த்தைக்கே பயந்து போன கமலக்கண்ணன் “ அய்யய்யோ என்னப் பாப்பா யார்கூடயாவது பிரச்சனையா?” என்று பயத்துடன் கேட்க...

“ ஏன் இவ்வளவு பதட்டப்படுற கமலா? கூல்டவுன் கமலா.... எல்லாம் என் அத்தை மகன் ரத்தினம் அந்த வளந்து கெட்டவன் சத்யனை கடத்தத் தான்” என்று அலட்சியமாக சொன்னவளை அதிசயமாக பார்த்தவர்

“ ஏன் பாப்பா கடத்தனும்” என்று அப்பாவியாக கேட்டார்...

“ பின்ன நீயா போய் அவனை எனக்கு கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி கேட்கமாட்ட? அதான் ஆளை வச்சு கடத்தி ஏதாவது கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் அவன் கழுத்துல கத்தி வச்சு மிரட்டி என் கழுத்துல தாலி கட்ட வைக்கலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்” என்று அவள் தெனாவெட்டாக கூறியது கேட்டு கமலக்கண்ணனுக்கு உள்ளுக்குள் இருந்து கிளம்பிய ரெண்டு உருண்டைகள் வந்து தொண்டையில் அடைத்துக்கொண்டது...



கணவனின் பரிதாபமான முகத்தைப் பார்த்துவிட்டு “ ஏன்டி பொட்டச்சி மாதிரியா பேசுற நீ? என்னடி வயசாச்சு உனக்கு? இதுக்குள்ள கல்யாணம் கேட்குதா உனக்கு? ஒழுங்கா மேல படிக்கிற வழியப் பாரு?” என்று வீரம்மாள் ரொம்ப வீரமாகத்தான் மகளை அதட்டுவாள் ஆனால் அப்புறம்?....................

“ மேலதான படிக்கனும் உன் புருஷன மாடில எனக்கு ரூம் கட்டித்தர சொல்லு மேலபோய் படிக்கிறேன்” என்று நக்கலாக கூறிவிட்டு “ ஏன் வீரம்மா நீ மட்டும் பதினைஞ்சு வயசுல எங்கப்பனை கல்யாணம் பண்ணி பதினாறு வயசுல புள்ளை பெத்துக்குவ? நான் மட்டும் மே..................................ல மே.........ல படிக்கனுமா? என்னடி ஆத்தா இது அநியாயமா இருக்கு?” என்று தனது தாடையில் கைவைத்துக்கொண்டு தன் மகளைப் பார்த்து வாயை கையால் பொத்திக்கொண்டு உள்ளே போய்விடுவாள் வீரம்மாள்...

அன்று மாலை நடந்த சம்பவம்தான் மான்சியின் டாக்டர் படிப்புக்கே வித்திட்டது எனலாம்.... மாலையில் மகளை காணோமே என்று சமையலறை பக்கமாக தேடிப் போன கமலக்கண்ணனின் கண்ணில் பட்டது அந்த நிகழ்ச்சி....


No comments:

Post a Comment