Saturday, December 12, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 21

அடுத்த நாளும் இயல்பாகவே போனது... காலையும் மாலையும் விக்டர் வந்தான்... தினா நேரம் கிடைத்தபோது வந்து பார்த்துவிட்டு போனான்... சாமுவும் வந்து பார்த்துவிட்டு போக சியாமா மான்சியின் உடனிருந்தாள்...

சத்யன் எஸ்டேட் செல்ல இரண்டு மணிநேரம் மட்டும் ஒதுக்கி விட்டு மிச்ச நேரத்தில் மான்சியுடனும் தன் மகளுடனும் கழித்தான்... அடிக்கடி வீட்டு ஓடி போய் வந்தான்... இரவு மான்சி எவ்வளவு வற்புறுத்தி சொல்லியும் வீட்டுக்கு போகாமல் க்ளினிக் ஹாலில் கிடந்த சோபாவில் படுத்துக் கொண்டான்

மூன்றாம் நாள் காலை மான்சி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.... சத்யனின் கார் பங்களாவின் வாசலில் நின்றதும் அவர்களுக்கு முன்பே தினாவும் விக்டரும் அங்கே காத்திருந்தார்கள்....

எல்லோர் மனதிலும் இருந்த ஒரே கேள்வி “அந்த சிறிய அறையில் மான்சி குழந்தையுடன் எப்படியிருப்பாள்?’ என்பதுதான்

சத்யன் காரை விட்டு இறங்காமல் பின்பக்கமாக திரும்பி “ மான்சி நீயும் நானும் எங்க வேனும்னாலும் இருக்கலாம்... ஆனா பாப்பா அந்த சின்ன வீட்டுல எப்படியிருக்கும்?... அதனால நம்ம வீட்டுலயே நீயும் பாப்பாவும் தங்க ஏற்பாடு பண்ணிருக்கேன்... மறுக்காதே மான்சி பாப்பாவுக்காக” சத்யனின் குரல் பெரிதும் இறங்கி வந்து கெஞ்சியது.....

மான்சி இதை எதிர்பார்த்தவள் போல் சற்றுநேர அமைதிக்குப் பிறகு சரியென்று தலையசைத்தாள்....

சத்யன் எகிறி குதிக்காத குறைதான்.... கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்கினான்.... சியாமா ஆரத்தி சுற்ற மான்சியும் அவள் மகளும் சத்யனின் வீட்டுக்குள் அழைத்துச்செல்லப் பட்டனர்

மான்சி எப்போதும் தங்கியிருக்கும் கீழ் அறையையே இப்போதும் ஏற்பாடு செய்திருந்தான் சத்யன்....... குழந்தையும் அவளும் தங்குவதற்கான சகல வசதியும் செய்யப்பட்டிருந்தது... குழந்தைக்காக அந்த அறையில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தான்....

“ ஓ.......... இதற்காகத்தான் அடிக்கடி வீட்டுக்கு வந்து வந்து போனானா?” என்று எண்ணியபடி கட்டிலில் அமர்ந்தாள்... குழந்தை அவள் மடியில் கிடத்தப்பட்டது.... விக்டரும் தினாவும் மான்சியிடம் சொல்லிகொண்டு விடை பெற்றனர்

சத்யன் உரிமையோடு மான்சியின் அருகில் அமர்ந்து தன் வீட்டுக்கு வந்த மகளை பூரிப்புடன் பார்த்தான்... குனிந்து அவளின் சின்ன பிஞ்சு பாதங்களை எடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டான்... பாதங்களில் மாறி மாறி முத்தமிட்டான்... அவன் கண்கள் கலங்கியிருந்தன ....

நிமிர்ந்து மான்சியைப் பார்த்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து “ இந்த நிமிஷம் இந்த உலகிலேயே மிக சந்தோஷமானவன் நான்தான் மான்சி” என்றான்...

மான்சி விலகவில்லை அவன் நெஞ்சில் சாய்ந்தபடி “ எனக்கும் பாப்பா பிறந்ததால் ரொம்ப சந்தோஷம்... பெண் குழந்தைதான் வேனும்னு தினமும் முருகனை கும்பிட்டேன்” என்றாள் ...

அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி குறும்பாக அவள் விழி நோக்கி “ அதென்ன ஸ்பெஷலா பெண் குழந்தைதான் வேனும்னு பிரார்த்தனை பண்ணிருக்க? ஏதாவது விஷேச காரணம் இருக்கா?” என்று சத்யன் கேட்க...
ஏதோ சொல்ல வாய் திறந்தவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டு ... ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள்...

“ இல்ல ஏதோ சொல்ல வந்த? பரவாயில்லை மான்சி சொல்லு... அன்றைய உன் மனநிலை வேற தான?” என்று சத்யன் வற்புறுத்த....

சற்றுநேர அமைதிக்குப் பிறகு அவனிடமிருந்து விலகி அமர்ந்து “ பெண்களை மதிக்காத... பெண்களை தன் தேவைக்கு இணங்க வைக்க எவ்வளவு வேனும்னாலும் இறங்கி போற உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து.... பெண் என்றால் யார்னு அந்த ஆண்டவன் புரியவைக்கனும்னு நெனைச்சேன்”... என்று மான்சி சொன்னதும் சத்யன் அமைதியாக இருந்தான்....

மான்சியின் மடியிலிருந்த மகளை கவனமாக தூக்கி தன் நெஞ்சொடு அணைத்து “ என் மக வர்றதுக்கு முன்னாடியே பெண் என்றால் என்னன்னு நான் புரிஞ்சிகிட்டேன் மான்சி... என் அம்மா இறந்த போது கூட அவங்களை குழிக்குள்ள வைக்கும்போது மட்டும் தான் நான் அழுதேன் மான்சி... ஆனா இப்பல்லாம் தினமும் அடிக்கடி அழறேன் மான்சி... ஆனா என் கண்ணீர் மொத்தமும் உன் காலடியில் சிந்தப்படவேண்டியவை மான்சி... நான் யாருன்னு என்னை எனக்கே புரியவைச்சவ நீ.... நான் திருந்திட்டேன் மான்சி இனிமேல் நான் வந்த பாதையில் திரும்பி போகமாட்டேன்... என் மகளும் நீயும் மட்டும் தான் என் வாழ்க்கை” என்று சத்யன் பேசப் பேச மான்சி முகத்தில் எந்த மாற்றமுமின்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.....

அதன்பின் வந்த நாட்களில் சத்யன் அந்த அறையே சொர்க்கம் என்பதுபோல் வாழ்ந்தான்.... தன் மகள் பிறந்த அன்றுதான் தானும் பிறந்ததாக உணர்ந்தான்... எஸ்டேட் வேலைகளை கூட வீட்டுக்கு எடுத்து வந்து செய்தான்... தினமும் மான்சிக்குநெற்றியிலும் தன் மகளுக்கு பாதத்திலும் முத்தமிட்டே தன்னை புதுபித்துக் கொண்டான்

மகள் சுண்டு விரலை அசைத்தாள் கூட அது உலக லெவலில் பேசப்படவேண்டும் என்றான்.... அவன் பார்க்கும் நேரங்களில் மகள் சின்ன கண்களை திறந்து அவனை பார்த்துவிட்டால் போதும் அன்று அந்த வீட்டில் திருவிழாதான்... இருபதாவது நாளில் படுத்திருந்த இடத்தைவிட்டு சற்று நகர்ந்தாள் சத்யனின் மகள்... அன்று எஸ்டேட் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு அழித்தான்....

குட்டிம்மா... சின்னபாப்பா.. புஜ்ஜிம்மா... அம்முக்குட்டி.. என்று பலரு பலவிதமாக அழைத்தாலும் சத்யன் அழைப்பது என்னவோ என் அம்மா என்றுதான்... “ என் அம்மா என்னப் பண்றீங்க... என் அம்மா ங்கா குடிச்சீங்களா” என்று கொஞ்சுவான்...

குழந்தைக்கே இப்படியென்றால்... தன் தாயை மகளாக பெற்றுத்தந்த மான்சிக்கு சொல்லவே தேவையில்லை... தன் அன்பினால் குளிப்பாட்டினான்... குழந்தையை குளிக்க வைக்கும் சியாமாவை வெளியே நிறுத்திவிட்டு இவர்கள் இருவரும் மகளை குளிக்க வைத்தனர்...

மகளுக்கு பவுடர் போட்டு மை தீட்டி தினமும் ஒரு புது உடை போட்டு மகளை கொஞ்சி கொஞ்சி தூங்க வைத்துவிட்டு தான் எஸ்டேட்க்கு கிளம்புவான்... எஸ்டேட்டில் யாருக்காவது புதிதாக குழந்தை பிறந்தால் ... பிறந்த குழந்தையை எப்படிப் பார்த்துக்கொள்வது என்று பிஹெச்டி முடித்தவன் போல் பேசுவான்... அவர்களும் முதலாளிக்கு என்னவோ ஆகிபோச்சுப்பா என்று எண்ணியபடி அவன் சொல்வதை கேட்டுவிட்டு போவார்கள்... வீடு முழுவதும் மகளுக்கான மகளுக்கான விளையாட்டுப் பொருட்களை வாங்கி நிறைத்தான்...

மகளுக்கு தன் பெயரும் மான்சியின் பெயரும் தனது தாயாரின் பெயரான சாரதாதேவி என்ற பெயரையும் இணைத்து சம்யுக்தாதேவி என்ற பெயரை தேர்வு செய்து சிலரை மற்றுமே வரவழைத்து பெயர்சூட்டு விழா நடத்தினான்...
மான்சியின் கழுத்தில் தாலி கட்டியப் பிறகு தர்மபுரியில் மனைவிக்காக மகளுக்காக பெரிய விழா நடத்தவேண்டும் என்று எண்ணத்தில்.. இப்போது எளிமையாக பெயர் சூட்டு விழாவை நடத்தினான்

விக்டர் ஏகப்பட்ட பரிசு பொருட்களுடன் வந்தான்... நிறைய வேலைபாடுகளுடன் கூடிய அழகான பால் ரோஸில் புடவை மான்சிக்கு.... அதே நிறத்தில் குழந்தை கவுன்... இன்னும் நிறைய பொம்மைகள்... என அள்ளிக்கொண்டு வந்திருந்தான்... சத்யன் குமுறிய மனதை காட்டாமல் வரவேற்றான்..

சுந்தரம் தன் பேத்திக்கு பெயர்சூட்டும் அன்று வந்திருந்தார்... மகாலிங்கம் தன் பேரன் தன் காதலியை அவன் மனைவியாக அழைத்துக்கொண்டு தர்மபுரி வந்தால் மட்டுமே தனது கொள்ளு பேத்தியை பார்ப்பது என்ற வைராக்கியத்துடன் இருப்பதாக சுந்தரம் தெரிவிக்க...

“ அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லைப்பா.. கூடிய சீக்கிரம் என் மனைவி குழந்தையோட தர்மபுரிக்கு வர்றேன்னு தாத்தாகிட்ட சொல்லுங்க” என்று சந்தோஷமாக தகவல் சொல்லி அனுப்பினான் சத்யன் 


மான்சியின் அம்மா மற்றும் தம்பி தங்கைகள் எல்லோரும் அடிக்கடி போன் செய்து விசாரித்தாலும் வந்து நேரில் பார்க்கவில்லை...

குழந்தை பெற்ற தாய்மையின் பூரிப்பில் மான்சியின் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது ஒவ்வொரு முறையும் அவளை நெருங்கி நிற்க்கும் போது நெருப்பாய் தகித்தான் சத்யன்... சில சமயம் கட்டுப்படுத்த முடியாமல் அவளை இறுக்கி அணைத்துவிட்டு அணைத்த அதே வேகத்தில் விட்டுவிட்டு அவசரமாக வெளியேறுவான்...

மான்சி எதையும் எதிர்க்கவுமில்லை எதையும் ஆதரிக்கவும் இல்லை... அவன் மகளைப் பற்றி பேசி சிரிக்கும்போது கூட சேர்ந்து சிரித்தாள்... அவன் உணர்ச்சிவசப்படும் போது அமைதியாக அவன் முகத்தைப் பார்த்திருந்தாள்.... சந்தோஷமான தருணங்களில் நெற்றியிலும் கன்னத்திலும் சத்யன் முத்தமிடும் போது கண்மூடி வாங்கிக்கொள்பவள் அவன் ஆர்வத்தோடு உதட்டை நெருங்கும் போது நாசுக்காக தவிர்த்தாள்... சத்யனுக்கு பெரும் புதிராக இருந்தாள் மான்சி

சிலநேரங்களில் அவளது வெறித்தப் பார்வை சத்யனை கலவரப்படுத்தும்... விக்டர் வந்தான் என்றால் எல்லோரும் தன்முன் ரொம்ப கவனமாக பேசுவதுபோல் தெரியும்... அடுத்து என்ன? என்ன? என்று சத்யன் இரவெல்லாம் தவிக்கும்படி ஆனது... அவனது சிந்தனைகள் எல்லாம் விக்டர் தான் நிறைந்திருந்தான்...

அவன் உண்மையாகவே மான்சியை காதலிக்கிறான் என்றால்.. துரோகி மான்சி என்றல்லவா ஆகிவிடும்... மனதில் ஒருவனையும் வெளியே ஒருவனிடமும் காதல் வேஷம் போட்டவள் என்ற அவப்பெயர் அல்லவா மான்சிக்கு வந்துவிடும்?

சத்யனின் ஒட்டுதலை மான்சி வெறுத்து ஒதுக்கவில்லை என்பது சத்யனுக்கு ஓரளவுக்கு வெளிச்சமானது... அப்படியானால் விக்டர் ஏமாறக்கூடாதே? அல்லது குழந்தைக்காக என்னைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறாளா மான்சி? விக்டரும் மான்சியும் அடிக்கடி ஏதோ ரகசியம் பேசுவது போல் அவன் கண்களுக்கு தெரிந்தது.. சிலசமயம் மான்சி செல்போனில் பேசும் பேச்சு சத்யன் அவள் அறைக்குள் போனதுமே “ சரி அப்புறமா பேசுறேன் விக்டர்” என்று நின்றுபோகும்...

அன்றெல்லாம் சத்யனின் மனம் அனலில் இட்ட புழுவாய் துடிக்கும்.. இல்லை இல்லை என் மான்சி எப்போதும் தூய்மையானவள்... இந்தப் பிரச்சினையை நான் தீர்பேன் என்று எண்ணிக்கொள்வான்

விக்டர் வந்துபோகும் நாட்களில் ஏகப்பட்ட கேள்விகள் சத்யன் மனதை குழப்ப... இதற்க்கெல்லாம் முடிவு என்ன என்று யோசித்து விக்டரை நேரில் சந்தித்து மான்சி தனக்கு எவ்வளவு தேவை என்பதை எடுத்துச் சொல்லி புரிய வைப்பது என்று முடிவு செய்தான்....

பழைய சத்யனாக இருந்தால் மான்சியையும் சம்யுக்தாவையும் விக்டரின் கண்ணில் படாமல் மறைத்திருப்பான்.... ஆனால் இந்த சத்யன் மான்சியின் உணர்வுகளை மதிக்கும் மென்மையானவனாக மாறியிருந்தான்....

ஒரு மாலை நேரத்தில் விக்டரை சந்திக்க அவன் பங்களாவுக்கு போனான் சத்யன்... ஹாலில் அமர்ந்திருந்த விக்டர் சத்யனை ஆச்சர்யத்துடன் பார்த்து “ வாங்க சத்யன்.... என்ன இவ்வளவு தூரம்? சொல்லியனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே?” என்று அன்பாக பேசி வரவேற்று சத்யனை அமர வைத்துவிட்டு கிச்சனைப் பார்த்து “ சுப்பு ரெண்டு மசாலா டீ எடுத்துட்டு வாங்க” என்று குரல் கொடுத்தான்....




இப்படி அன்பாக வரவேற்பவனிடம் என்னவென்று பேச்சை ஆரம்பிப்பது என்று சத்யன் குழப்பத்துடன் அமர்ந்திருக்க... நல்ல வாசனையுடன் மசாலா டீ வந்தது...

“ எடுத்துக்கங்க சத்யன் உங்களுக்கு மசாலா டீதான் பிடிக்கும்னு மான்சி சொல்லிருக்கா... எனக்கும் பிடிக்கும்... கிட்டத்தட்ட நம்ம ரெண்டு பேர் டேஸ்ட்டும் ஒத்து போகுது” என்று கூறிவிட்டு சிரிக்க...

டீயை உறிஞ்சிய சத்யன்.... விக்டர் எதைப் பற்றி சொல்கிறான் என்று ஆத்திரமாக நினைத்தான்.... ஆனால் ஆத்திரத்தை காட்டும் நேரம் இதுவல்ல என்று அடங்கினான்...

இருவரும் டீ குடித்ததும் டீ கப்புகளை வேலையாள் சுப்பு எடுத்து போனான் .... விக்டர் மறுபடியும் அவனை கூப்பிட்டு “ சுப்பு நைட் சமையலுக்கு முட்டை இல்லைன்னு சொன்னியே... அதைப் போய் வாங்கிட்டு வா” என்று பணத்தை கொடுத்து அவனை அனுப்பி வைத்தான்...

தான் என்ன பேச வந்திருக்கிறோம் என்று விக்டருக்கு புரிந்திருக்கிறது... அதனால்தான் வேலைக்காரனை வெளியே அனுப்புகிறான் என்று சத்யனுக்கு தெளிவானது....

விக்டரின் முன்பு தன் காதலை பிச்சையா கேட்க வந்திருக்கிறோம் என்ற எண்ணமே சத்யனை கொல்லாமல் கொன்றது.... சரி வந்ததை பேசித்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு நேராக அமர்ந்தான் சத்யன் ....

அப்போது விக்டரின் மொபைல் ஒலிக்க... சத்யனைப் பார்த்து “ கொஞ்சம் இருங்க சத்யன் பேசிட்டு வர்றேன்” என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு மொபைலை ஆன் செய்து “ சொல்லும்மா.... என்னப் பண்ணிக்கிட்டு இருக்க” என்றான்” என்றான்...

“ .............................. “

சற்றுநேரம் மொபைலில் எதுவும் பேசாமல் கண்மூடி சோபாவில் சாய்ந்த விக்டர் பிறகு “ என்னாச்சும்மா........ இப்ப ஏன் தேவையில்லாம இந்த அழுகை.... இத்தனை நாளா காத்திருந்தது போதும்... இனிமேல் என்னால முடியாது... நான் சொன்னால் சொன்னதுதான்... நம்ம மேரேஜ் பத்தி சர்ச்ல அலவுன்ஸ் பண்ண சொல்லிட்டேன்... மறுநாள் முருகன் கோயில்ல திருமணம் செய்ய எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்... இன்விடேஷன் கார்டுகள் கூட பிரிண்ட்டாகி வந்தாச்சு கண்ணம்மா.......... இப்போ போய் அழறியேடா ” என்ற விக்டரின் வார்த்தைகளில் கடலளவு நேசமிருந்தது....

“...................................... “

எதிர்முனையில் என்ன சேதி வந்ததோ.. சட்டென்று கோபமானான் விக்டர் “ ஏய் மறுபடியும் சமூகம் சாதி மதம் அந்தஸ்து அது இதுன்னு ஏதாவது சொல்லாதே... பைத்தியமாடி உனக்கு... நீயும் என்னை விரும்புற நானும் உன்னை விரும்புறேன்... அப்புறம் எதுக்கு இந்த சாதி மதம் அந்தஸ்து எல்லாம்? தூக்கியெறிஞ்சிட்டு வா.... இதோபார் இந்த சமூகம் என்ன சொல்லும்னு நீ பயப்படாதே... அது வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.... நம்மைப்பற்றி நாம்தான் முடிவு செய்யனும்.... இதுக்கு மேல நீ பயந்தால் பேசாம வா ரெண்டு பேரும் சேர்ந்து செத்துப்போகலாம்.... நான் அதுக்கும் ரெடி” என்று விக்டர் கோபமாக அறிவிக்க...

“............................................”

“ சரி சரி இனிமேல் இதுபோல பேச மாட்டேன்.... வேனாம்மா அழாதே.... ப்ளீஸ் அழாதே கண்ணம்மா....” என்ற விக்டரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது

“.....................................”

எதிர்முனையில் இருந்து என்ன சொல்லப்பட்டதோ விக்டரின் முகத்தில் புன்னகையின் சாயல் “ பின்ன இவ்வளவு காத்திருந்து இப்போதான் நமக்கு நல்லது நடக்கப்போகுது .. இந்த சமயத்தில் போய் இந்த சமுதாயம் என்ன சொல்லும்னு பயப்படுறியே? எல்லாத்துக்கும் நான் இருக்கேன்டா... அப்படியொரு சூழ்நிலையில் உன்னை விடமாட்டேன்.... ம்ம் சரிம்மா அழாதே... இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் .. கல்யாணப் பொண்ணா சந்தோஷமா இரு... இப்போ முக்கியமான ப்ரண்ட் ஒருத்தர் வந்திருக்கார் அவர்கிட்ட பேசிட்டு அவர் போனதும் மறுபடியும் கால் பண்றேன் ” என்று கூறிவிட்டு செல்லை கட் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்ட விக்டர் “ ஒரு நிமிஷம் சத்யன் முகம் கழுவிவிட்டு வந்திர்றேன்” என்று கூறிவிட்டு உள்ளே போனான்...


சத்யன் துண்டு துண்டாக சிதறிப்போயிருந்தான்......... விக்டரின் கண்ணீரில் சத்யனின் காதல் மூழ்கிகொண்டிருந்தது....... விக்டர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காய்ச்சிய ஈயமாய் இவன் காதுகளில் இறங்கி இதயத்தை பொசுக்கியிருந்ததது....

விக்டரின் கண்ணீரில் பொய்யில்லை... ஏனென்றால் ஒரு ஆணின் கண்ணீருக்கு என்னென்ன அர்த்தங்கள் உண்டு என்று இப்போதைய சத்யனுக்கு நன்றாகவே தெரியும்....

சில நாட்களாக நான் பயந்து பயந்து தவித்தது இறுதியில் நடக்கத்தான் போகிறதா? இப்படி கண்ணீர் விடுபவனிடம் எதை பேசுவது? என்னவென்று பேசுவது? அப்படியானால் மான்சி சமூகத்துக்குப் பயப்படுகிறாளா? இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்களா? அப்படியானால் இனி நான்? சத்யனுக்கு சில நாட்களாக மறந்திருந்த கண்ணீர் மீண்டும் தன்னை அறிமுகம் செய்துகொண்டது

கர்சீப்பை எடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் எதிரில் விக்டர் வந்து அமர்ந்தான்.... சத்யன் தடுமாறி எழுந்து “ நா கிளம்புறேன் விக்டர்” என்றபடி வாசலை நோக்கி நடந்தான்.....

“ என்ன சத்யன் ஏதோ பேச வந்து எதுவுமே சொல்லாம போறீங்க?” என்று விக்டர் சத்யனின் கையை பற்றி இழுத்து வந்து மறுபடியும் சோபாவில் உட்காரவைத்து அவர்களுக்கு நடுவே இருந்த டீபாயில் மேல் இருந்த பார்ஸலை பிரித்து அதிலிருந்து ஒரு கார்டை எடுத்து சத்யனிடம நீட்டினான்

சத்யன் அதை வாங்காமல் விக்டரை வேதனையுடன் பார்த்தான்... சத்யனின் உலகம் சுற்றுவதை நிறுத்தி பல நிமிடங்கள் ஆகியிருந்தது... நான் ஏன் இன்னும் சுவாசிக்கிறேன் என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தான்...

விக்டர் பிடிவாதமாக அந்த இன்விடேஷன் கர்டை சத்யனின் மடியில் வைத்துவிட்டு “ இது என்னோட மேரேஜ் கார்டு... ரொம்ப சிம்பிளா பண்ணத்தான் ப்ளான் பண்ணோம்... ஆனா முக்கியமான சிலருக்கு அழைப்பு குடுக்கனுமே? அதுக்காக வெறும் இருநூறு கார்டு மட்டும் பிரிண்ட் பண்ணோம்... உங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு மான்சியோட உத்தரவு... ஆனா உங்களுக்குத்தான் முதல் கார்டு கொடுக்கனும்னு நான் நினைக்கிறேன்... எனக்காக வாங்கிக்கங்க சத்யன்” என்று விக்டர் வற்புறுத்தி சொல்ல....

சத்யன் நடுங்கும் விரல்களால் அந்த கார்டை எடுத்துப் பிரித்து அதிலிருந்த அழகான அட்டையில் தனது பார்வையை ஓட்டினான்... சில வரிகளுக்கு மேல் சத்யனுக்கு தெரியவில்லை... கண்களில் தேங்கிய கண்ணீர் எழுத்துக்களை மறைத்தது....

படித்தவரை புரிந்தது... நிமிர்ந்து விக்டரைப் பார்த்தான் சத்யன்.... புன்னகை மாறா முகத்துடன் அமர்ந்திருந்தான் விக்டர்....

அதற்கு மேல் பொறுக்க முடியாத சத்யன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் விக்டரின் மேல் பாய்ந்து அவன் சட்டையை கொத்தாகப் பற்றி தூக்கினான்...




“ காதல் யார் தலைக்கு வேண்டுமானாலும் கிரீடமாகும்....

“ அந்த கிரீடம் எப்போது வேண்டுமானாலும் உருண்டு விழும்....

“ விழுந்த கிரீடம் யார் தலையில் வேண்டுமானாலும் மீண்டும் ஏறும்....

“ காதலில் வெற்றிகளும் நிரந்தரமல்ல...

“ காதலில் தோல்விகளும் நிரந்தரமல்ல....

“ இரண்டுக்கும் இடையே நடக்கும்....

“ போராட்டங்கள் மட்டும் என்றும் நிரந்தரம்! 



No comments:

Post a Comment