Thursday, December 24, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 15


“ ஒரு நந்தவனம் இலையுதிர்ந்த கதையை....

“ கடந்து வந்த இரவுகளோடு சொல்ல....

“ அதை கேட்ட இரவானது பனித்துளியாய்...

“ கண்ணீர் வடிப்பது தான் தாஜ்மஹாலின் சரித்திரம்!

“ இப்போது காதலிப்பவர்கள்....

“ இனி காதலிக்கப் போகிறவர்கள்...

“ என்றும் காதலை உணர்ந்தவர்கள்....

“ எப்போதும் காதலை மதிப்பவர்கள்...

“ என அணைவரும் பார்த்தவுடன்...

“ கண்களால் கண்ணீர் விடாமல் ...

“ உதடுகளால் புன்னைகை செய்யும்படி...

“ புன்னகையின் புது வடிவமாக...

“ புதியதோர் தாஜ்மஹாலை...

“ காதலிக்காக உருவாக்கப்போகும்....

“ புதிய காதலன் ஷாஜகானாக நீ இரு!



கார் சத்யனின் வீட்டை சென்று அடைய வீட்டுக்குள் நுழைந்தவனை வாசலில் தடுத்து ஆரத்தி சுற்றி அழைத்து சென்றாள் ஆதிலட்சுமி.....

வந்த கண்ணீரை அடக்கிபடி மகனை நேராக பாத்ரூமுக்கு அழைத்துச்சென்றவள் மூன்று எண்ணைகளை கலந்து எடுத்து வந்து கொடுத்து “ மொதல்ல தலை முழுகிட்டு வா சத்யா.. பூஜை செய்யனும்” என்றாள்

தாயின் வார்த்தையை மதித்து எண்ணையை வாங்கிக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்ற சத்யன் ... தலைமுழுகவில்லை.... எண்ணையை டாய்லட்டில் ஊற்றி தண்ணீரை திறந்துவிட்டான்... எதை தலைமுழுகுவது என்றால் மருத்துவமனையில் கிடைத்த என் தேவதை மான்சியையும் சேர்த்தா? ம்ஹூம்... சத்யன் வெறுமென தலைக்கு குளித்துவிட்டு வந்தான்...

ஆதிலட்சுமி பூஜையறையில் தயாராக இருக்க... சத்யன் பூஜை செய்துவிட்டு விழுந்து கும்பிட்டான்... சாமிக்கு படைத்த இலையை சத்யனுக்கு கொடுத்து சாப்பிடச் சொன்னாள் அம்மா... சத்யன் பூஜையறையிலேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு எழுந்து வந்தான்...

மருத்துவமனை சம்மந்தப்பட்ட எந்த பேச்சையும் பேசாமல் குடும்பத்தைப் பற்றியும் செய்திருக்கும் விவசாயத்தைப் பற்றியும் மட்டுமே பேசினார்கள்... சத்யனை சாதரணமாக நடத்தினார்கள்... மனநல மருத்துவமனையில் இருந்து திரும்பும் நோயாளிகளுக்கு இது தேவையான ஒன்று... திரும்பவும் அவர்கள் நோயைப்பற்றி பேசக்கூடாது...

அன்று மாலை ஐந்து மணிக்குதான் டாக்டரிடம் அப்பாயின்மென்ட் என்பதால் சத்யன் அவன் அறைக்கு உறங்க சென்றான்... சிலநாட்களாக இரவில் மான்சியின் அணைப்பிலும் பகலில் அவள் நினைவுகளின் அணைப்பிலும் உறங்கிய சத்யன்.. இன்றும் அவளை தன் நினைவுகளால் அணைத்துக்கொண்டு உறங்கினான்...

அன்றுமாலை முத்துவும் செல்வமும் சத்யனை அழைத்துக்கொண்டு டாக்டரைக் காணச் சென்றனர்...

டாக்டர் சத்யனிடம் நிறைய பொது விஷயங்களையும் குடும்பம் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் பேசினார்... அவர் கேட்ட கேள்விகளுக்கு சத்யன் தெளிவாக பதில் சொல்லிக்கொண்டே வந்தான்... எல்லாவற்றையும் ஒரு பைலில் குறித்துக்கொண்ட டாக்டர்.. திருப்தியாக புன்னகைத்து விட்டு சத்யனை வெளியே இருக்கும்படி கூறினார்

சத்யன் தலையசைத்துவிட்டு வெளியே சென்றான்

டாக்டர் செல்வத்திடம் திரும்பி “ சத்யனிடம் நல்ல முன்னேற்றம் தெரியுது செல்வம்... இன்னும் சில டெஸ்டுகளை எடுத்துட்டு சில மெடிசன்களை அவனுக்குள் செலுத்தி அந்த மெடிசன் எல்லாம் சத்யனுக்கு ஒத்துக்கொண்டது என்றால்.. தொடர்ந்து சில வருடங்கள் அந்த மருந்துகளை எடுத்துக்கனும்... அந்த மருந்துகள் இனிமேல் அவன் மூளை எப்போதுமே பலகீனப்படாமல் இருக்க உதவும்... அது சம்மந்தமான டெஸ்டுகள் எடுக்க ஒரு வாரம் இங்கே தங்கவேண்டியிருக்கும் செல்வம்” என்று தெளிவாக டாக்டர் கூறியதும்...

செல்வமும் முத்துவும் ஒத்துக்கொண்டனர்..... இது இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லப்பட்ட தகவல் தானே? முன் ஜென்மத்தில் டாக்டருக்கு பட்ட கடனை தீர்க்காமல் எப்படி போகமுடியும்?...

சத்யனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணத்தைப் பற்றி கூறிய போது... தாராளமாக திருமணம் செய்யலாம்... ஆனால் அதைப்பற்றி சிகிச்சை முடிந்தததும் சொல்லலாம் என்று டாக்டர் கூறிவிட்டார்...

மகனை நேராக கல்யாண வீட்டிற்கு அழைத்துச்சென்று மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க செல்வத்திற்கும் ஆசையாக இருந்தது... இந்த மருத்துவமனையில் டெஸ்ட்டுகள் முடிந்து வீட்டுக்கு செல்லும் நாளிலிருந்து ஐந்தாவது நாள் சத்யனுக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது...

சத்யன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட... முத்து அவனுடன் இருந்தான்... செல்வம் பணம் எடுத்துவருவதாக மறுபடியும் ஊருக்கு கிளம்பினார்...... ஆதியும் முத்துவும் மாற்றி மாற்றி சத்யனை கவனித்துக்கொள்ள அனைத்து பரிசோதனைகளும் முடிந்து செலுத்தப்பட்ட மருந்தை சத்யனின் உடல் ஏற்றக்கொண்டதும்.. அந்த மருந்துகள் மாத்திரை வடிவத்தில் சத்யனுக்கு தரப்பட்டது...

மருத்துவமனையில் வந்து பார்ப்பதாக கூறிய மான்சி வரவேயில்லை... சத்யன் தவிப்புடனே தனது பொழுதை கழித்தான்... அவன் மனதில் நம்பிக்கையிருந்தது... மான்சி நிச்சயம் தன்னை தவிக்க விடமாட்டாள் என்று.... அவளை தன் மனைவியாக காணும் நாளுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தான் சத்யன்

முற்றிலும் குணமடைந்த சத்யனை அழைத்துப்போக செல்வம் ஆதிலட்சுமி முத்து மூவரும் வந்தனர்... டாக்டர் தனது அறைக்கு அவர்களை அழைத்து பில் செட்டில் செய்துவிட்டார்களா என்று கேட்டுக்கொண்டு பிறகு உயர்ந்த ரக பழச்சாறு வரவழைத்து மூவருக்கும் கொடுத்தார்....

மூவரும் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து பிறகு “ சத்யன் இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட் செல்வம்... இனிமேல் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் மருந்துகள் அவர் உட்கொள்ள ஆரம்பித்து சிலநாட்களுக்கு அவருக்கு மன அழுத்தம் தரக்கூடிய எதையும் செய்யாதீர்கள் .. கவலை தரும் விஷயங்களை சொல்லாதீர்கள்... இந்த உத்தரவு சில வாரங்களுக்கு மட்டுமே... அதன்பிறகு நாளாக நாளாக சரியாகிவிடும்.. மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நிறைய பசிக்கும்... அடிக்கடி ஏதாவது ஆகாரம் கொடுத்துக்கொண்டே இருங்கள் .” என்று இன்னும் சில விபரங்களை கூறி அவர்களை இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தார்...

சத்யன் சென்னை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான்... அவனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அன்று இரவே அனைவரும் நன்னிலம் புறப்பட்டார்கள்... முத்து அவர்களை வழியனுப்பி வைக்க ரயில்நிலையம் வந்தான்...

அன்று பவித்ராவை கண்ணீருடன் அனுப்பியது ஞாபகம் வர கஷ்டப்பட்டு தனது முகம் மாறாமல் காத்தான்... திருமணத்திற்கு முதல்நாள் வருவதாக செல்வத்திடம் கூறிவிட்டு அவர்களை வழியனுப்பினான்...

இப்போதெல்லாம் பவித்ரா தினமும் காலையும் இரவும் போன் செய்துவிடுகிறாள்... மணிக்கணக்கில் பேசுகிறாள்... ஆனால் அத்தனையும் மதுமிதாவுடன் மட்டுமே... முத்துவுடன் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை...

இரவு கதை சொல்லி பாட்டுப் பாடி தூங்கவைக்கும் பவித்ரா மறுநாள் காலை மது ஸ்கூல் செல்லும்போது போன்செய்து என்ன சாப்பிட்டாள்? ஹோம்வொர்க் செய்தாளா? என்று விசாரித்து போனிலேயே ஸ்கூலுக்கு வழியனுப்புவாள்... மொத்தத்தில் போனிலேயே மதுமிதாவை இயக்கினாள் பவித்ரா... தனக்கு கிடைக்காதது மகளுக்காவது கிடைத்ததே என்று மனதை தேற்றிக்கொண்டு வாழ பழகிவிட்டான் முத்து...

இப்போதெல்லாம் பவித்ராவைப் பற்றி முத்து நினைத்தாலே சத்யனுடனான நட்பு கூடவே வந்து அவனை பயமுறுத்தியது... பவித்ராவை நினைத்தால் அது நண்பனுக்கு செய்யும் துரோகம் என்று எண்ணி தன்னை அடக்கிக்கொள்ள பழகிக்கொண்டான்..

இப்போது அவன் மனதில் சத்யன் பவித்ரா வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே இருக்கிறது...

ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி இரவும் தனிமையும் சேர்ந்து வருமே அப்போது அவனின் ஏக்கங்களை தலையணையில் முகம் புதைத்து கண்ணீராய் கரைக்க ஆரம்பித்தான்... சிலநாட்கள் பவித்ராவின் ஞாபகங்களை துறக்க மதுவின் உதவியை நாடினான்... மெல்லிய போதை மயக்கத்தில் உறக்கம் சிந்தனையின் சிதறல்கள் இன்றி எந்த தடையுமின்றி தானாக வந்தது..

“ எனக்குள் கொந்தளிக்கும் கடல்......

“ என் கண்களில் எப்போதும் குளம்....

“ இனி மரணமே நன்று என்பேன்....

“ ஓ............ பிரபஞ்சமே....

“ எந்த ஓசையும் கேட்கா தூரம்...

“ எந்த செய்தியும் எட்டா தொலைவு....

“ நானும் என் காதலும் செல்லவேண்டும்...

“ வழிகாட்டு!



சத்யனின் குடும்பம் ரயிலைவிட்டு இறங்கியதும் ஊரில் பாதி திரண்டு ரயில் நிலையம் வந்திருந்தது... ஜானகி ஓடி வந்து அண்ணன் மகனை அணைத்துக்கொள்ள... சுப்பிரமணி மருமகனின் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டார்..

சத்யனின் தங்கை கீதா கோவிலுக்குப் போய்விட்டு தாமதமாக வந்தவள் மூச்சு வாங்க வாங்க ஓடி வந்து சத்யனின் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு கண்ணீருடன் அண்ணனை கட்டிக்கொண்டாள்

பவித்ராவை மட்டும் காணவில்லை.... சரி வீட்டில் இருப்பாள் என்று சத்யன் எண்ணினான்.... ஆனால் கல்யாணத்திற்கு காப்பு கட்டி பந்தக்கால் நட்டபின் கல்யாணப் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது சத்யனுக்கு எங்கே தெரிந்தது..

சத்யனுக்கு அனைவரின் அன்பும் நெகிழ்ச்சியாக இருந்தது.. மான்சியும் உடனிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று ஏக்கமாக நினைத்தான்...

எல்லோரும் சந்தோஷமும் சிரிப்புமாக சத்யனின் வீட்டுக்கு சென்றனர்... வாசலிலேயே நிறுத்தப்பட்டு சத்யனுக்கு சுமங்கலி பெண்கள் ஆரத்தி சுற்றினார்கள் சத்யன் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த பந்தலைப் பார்த்தான்... நான் வர்றேன்னு இவ்வளவு ஆர்பாட்டமா? என்று நினைத்தவனுக்கு ஏன் அது கல்யாணப் பந்தலாக இருக்கக்கூடாது என்று புரியாமல் போனது.....

வீட்டுக்குள் நுழைந்தவனை நடு முற்றத்துக்கு அழைத்து வந்து அங்கே போடப்பட்டிருந்த மனையில் சத்யனை அமர்த்தி அவன் எதிரே குத்துவிளக்கேற்றி, நலங்கு பொருட்களை முக்காலியில் கொண்டு வந்து வைக்கவும் தான் சத்யனுக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தது...

கீதா புன்னகையுடன் சத்யன் அருகில் வந்து நிற்க ... சத்யன் அவன் கையைப்பிடித்து “ என்ன கீதா இதெல்லாம்?” என்று ரகசியமாக கேட்க....

கீதா தனது உதட்டில் விரல் வைத்து “ ஸ்ஸ்ஸ் அமைதியா இருண்ணா... என்ன செய்யப் போறாங்கன்னு பார்க்கலாம்” என்றாள் குழந்தையின் குதூகலத்துடன்..

வயதான ஒரு சுமங்கலிப் பெண் சத்யனின் கழுத்தில் மாலையைப் போட்டு நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு அருகம்புல்லால் எண்ணை தொட்டு தலை உச்சியில் மூன்றுமுறை தடவிவிட்டு... அவரை இலை, தும்பைப்பூ, மஞ்சள் ,வெந்தயம், எல்லாம் சேர்த்து அரைத்த கலவையை அள்ளி சத்யனின் கன்னத்திலும் தலையிலும் பூசிவிட்டு இறுதியாக ஆரத்தியை சுற்றிவிட்டு நகர... அடுத்தடுத்து வந்த பெண்களும் அதையே செய்தனர்... கிட்டத்தட்ட பதினைந்து பெண்கள் சத்யனுக்கு நலங்கு செய்தபிறகு அவர்களுக்கு புது ரவிக்கை துணியும் தாம்பூலமும் கொடுத்தனுப்பினாள் ஆதிலட்சுமி...

சத்யன் நெருப்பின் மீது அமர்ந்திருப்பவன் போல் அமர்ந்திருந்தான்... இதெல்லாம் எதற்க்கு என்று தெரியும்... கல்யாணத்திற்கு பந்தக்கால் நட்டதும் மணமகனுக்கு நடத்தப்படும் சடங்குகள் இவையெல்லாம்...

எல்லோரும் சென்றபின் அவசரமாக எழுந்து தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தவன் வீடுமுழுக்க இருந்த உறவு கூட்டத்தை அப்போதுதான் பார்த்தான்... என்ன நடக்கிறது.. என்ன நடக்கப்போகிறது என்று அவனுக்குள் ஓரளவுக்கு நிச்சயப்படுத்தப் பட்டது ...

மான்சி மான்சி என்று உள்ளம் ஓராயிரம் முறை காதலியின் பெயரை உச்சரிக்க... செல்வத்தைத் தேடி தோட்டத்து பக்கம் போனான்... சமையல் செய்வதற்காக தோட்டத்தில் தென்னங்கீற்று பந்தல் போடப்பட்டிருக்க செல்வமும் சுப்பிரமணியும் நின்று எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள்..

சத்யன் செல்வம் அருகில் சென்று “ அப்பா உங்ககூட பேசனும் கொஞ்சம் உள்ளே வர்றீங்களாப்பா” என்று அழைக்க ...

பச்சை தழைகளை கொண்டு நலங்கு வைத்ததால் புது மெருகுடன் மிளிரும் மகனை புன்னகையுடன் பார்த்த செல்வம் “ என்ன சத்யா திகைப்பா இருக்கா? உனக்கு இன்ப அதிர்ச்சியா இருக்கட்டும்னு தான் எதுவுமே சொல்லலை...” என்றவர் சுப்பிரமணியின் பக்கம் திரும்பி “ இரு சுப்பு என்னான்னு கேட்டுட்டு வர்றேன்” என்றுவிட்டு மகனுடன் வீட்டுக்குள் வந்தார்...

இரண்டு தெருக்களை இணைக்கும் பழையகாலத்து பிரமாண்டமான கருங்கல் வீடு... அவரவர் வசதிக்கேற்ப காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டது.... அவரவர்க்கு தனித்தனி அறையும் அதனுடன் பாத்ரூம் வசதியும் இணைந்திருந்தது...

சத்யன் தனது அறைக்குள் போனான்... பின்னால் வந்த செல்வம் “ உனக்கு எடுத்த துணியெல்லாம் பார்த்தியா ராசு... எல்லாம் உன் தங்கச்சி கீதா செலக்ஷன் தான்... நல்லாருக்கான்னு பார்த்து சொல்லுப்பா” என்று அன்பாக கூற....

“ எல்லாம் நல்லாத்தான் இருக்கும்ப்பா... ஆனா என்னை ஒரு வார்த்தை கூட கேட்காம ஏன்பா இந்த ஏற்பாடுகள் எல்லாம்?” என்று வேதனை கப்பிய குரலில் சத்யன் கேட்க...

“ ஏன் ராசு? நீ சொல்லித்தானே இந்த ஏற்பாட்டையே செய்தோம்... பவித்ரா உன்கிட்ட உறுதியா கேட்ட பொறவு தானே இங்கே கிளம்பி வந்து எங்ககிட்ட சொல்லி.. அப்புறம் நம்ம குலசாமி கோயில்ல குறிகேட்டு... பூசாரி கரகம் வச்சு ஆடி குறி சொல்லி நல்லநாள் குறிச்சு குடுத்ததுக்கு அப்புறம் தானே கல்யாணத்துக்கு நாள் வச்சோம்... இப்போ என்னாப்பா இப்படி கேட்குற” என்று வருத்தமாக கூறினார்...

தகப்பனின் வருத்தம் சத்யனை வேதனைப்படுத்தியது.... ஆமாம் அன்றொருநாள் பவித்ராவிடம் நான்தானே கூறினேன்? ... கல்யாணத்துக்கு சம்மதம் என்று? அதன்பிறகு தானே மான்சி என்ற தென்றல் எனக்குள் வீசியது... அய்யோ இப்போது என்ன செய்வேன்? சத்யனுக்கு மூளையே ஸ்தம்பித்தது...

இப்போது திருமணம் வேண்டாம் என்று சொன்னால் வந்திருக்கும் உறவு கூட்டம் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை... புத்தி சரியில்லாதவனுக்கு கல்யாண ஏற்பாடு செய்தா இப்படித்தான் ஆகும் ..... என்று நாக்கூசாமல் பேசுவார்கள் என்று சத்யனுக்குத் தெரியும்... அதுமட்டுமல்ல கல்யாணம் வேண்டாம் என்றால்... அதற்கு காரணமாக மான்சியின் மீதுள்ள காதலைப்பற்றி கூறவேண்டும்... அதற்கு மான்சயின் அனுமதி வேண்டும்.. செய்து கொடுத்த சத்தியத்தையும் மீற முடியாது... கடவுளே இதென்ன இப்படியொரு நெருக்கடியில் நிறுத்திட்ட? அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்து நின்றான் சத்யன் ...

செல்வம் மகனின் தவிப்பை உணர்ந்தவராக “ கொஞ்சநேரம் தூங்கி ரெஸ்ட் எடு சத்யா.. குழப்பமெல்லாம் தீர்ந்து போகும்... இன்னும் நாலுநாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு... நல்லா கல்யாண மாப்பிள்ளையா தெம்பா இருடா சத்யா எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ” என்று மகனின் தோளில் தட்டி ஆறுதல் கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்

சத்யன் தனது கட்டிலில் அமர்ந்தான்... பயண அலுப்பில் தூக்கம் வரவில்லை... இந்த இக்கட்டில் இருந்து எப்படி வெளியே வருவது என்று பலவாறாக யோசித்தான்... அவன் யோசித்த விதத்தில் திருமணத்தை நிறுத்தும் வழிமுறைகள் எதுவுமே சரியாக வரவில்லை... இறுதியாக மான்சி தன் அருகில் இருந்தால் மட்டுமே இந்த கல்யாண ஏற்ப்பாட்டை நிறுத்தவோ.... வேறு ஏதாவது மாற்றி யோசிக்கவோ முடியும் என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது

அன்று மாலை மீண்டும் செல்வத்தை சந்தித்து “ நான் சென்னைக்கு ஒரு அவசர வேலையாக போய்ட்டு வரனும்... இரண்டே நாளில் திரும்பிடுவேன்பா” என்று அனுமதி கேட்க..

செல்வத்தின் அனுமதி அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.... நலங்கு வைத்தபின் எல்லை தாண்டி பயணம் போகக்கூடாது என்று மறுத்தார்... “ அப்படியென்ன முக்கியமான வேலை ... எதுவானாலும் சொல்லு முத்துவை பார்க்க சொல்றேன்” என்று வாதாடினார்...

சத்யன் மான்சியை மட்டுமே மனதில் நிறுத்தி ஒரே பிடிவாதமாக நிற்க்க... கொஞ்சநாட்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்று டாக்டர் சொன்னது ஞாபகம் வர செல்வத்தின் பிடிவாதம் தளர்ந்தது....

அரை மனதாக சத்யனை சென்னைக்கு அனுப்பி வைத்தார்... உடன் வருவதாக கூறிய சுப்பிரமணியை மறுத்துவிட்டான் சத்யன்

செல்வம் சத்யனை அனுப்பிவிட்டு உடனடியாக முத்துவுக்கு போன் மூலமாக தகவல் சொல்ல... முத்துவும் குழப்பத்துடன் “ அப்படியென்னப்பா முக்கியமான வேலை?.... சரி சரி நீங்க கல்யாணத்துக்கான வேலையைப் பாருங்க நான் அவனை பிக்கப் பண்ணி என்கூடவே கூட்டிட்டு வர்றேன்” என்று தைரியம் கூறினான்...

மனம் முழுக்க காதலை சுமந்து கொண்டு சத்யன் மட்டும் தனித்து கிளம்பினான் மான்சியைத் தேடி

...................

" ஒரு கட்டத்தில் கடலும் காதலும்....

" கண்ணுக்கு தெரியாமல் பயணமாகிறது....

" கடலின் பயணம்.....

" மேல் நோக்கி ஆவியாக,

" மேகத்தை உருவாக்கும் நீராவியாக...

" காதலின் பயணமும் ...

" மேல் நோக்கி உயிர் மூச்சின் ஆவியாக...

" தனது சுவாசத்தின் வாசத்தைத் தேடி....


" இதோ சத்யனும் தேடித்தான் போகிறான்...

" தன் உயிர் காதலைத் தேடி....

" தன் மண வாழ்க்கையைத் தேடி....

" தன் உடல் கூட்டிற்கான சுவாசத்தை தேடி....

" அவன் பயணம் மான்சியைத் தேடி!!!


No comments:

Post a Comment