Friday, December 25, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 18

அவன் விட்ட கையை உற்றுப் பார்த்துவிட்டு சத்யனை நிமிர்ந்து ஏளனமாகப் பார்த்த மான்சி “ என்ன சத்யா உன் அம்மாவோட உறவுகள் வந்திருக்கு... வாங்கன்னு கூப்பிட மாட்டியா?” என்று கேட்க...

சத்யன் செல்வதைப் பார்த்தான் ...செல்வம் முன்றாவது படியில் ஏறியவர் அப்படியே நின்றிருந்தார்... அவர் கண்கள் ரத்தமென சிவந்திருக்க நெற்றியில் வழிந்த வியர்வையை துடைக்கத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தார்... பலத்துக்காக படிகளில் ஏறும் கைப்பிடியைப் பற்றியிருந்தார்... கூட்டத்தை விலக்கிக்கொண்டு முத்து அவரருகே ஓடிவர... சத்யனும் மான்சியை விட்டுவிட்டு தன் தகப்பனிடம் ஓடினான்...

மான்சி அசையாமல் நின்று செல்வத்தைப் பார்த்தாள்

ஜானகி தனது அண்ணனை நெருங்கி “ என்னண்ணே இந்த சிறுக்கி பேசுறதை வேடிக்கைப் பார்த்துகிட்டு நிக்கிற? வந்து அவ கழுத்துல கிடக்குற தாலியை அத்து சத்யன் கையில குடுத்து என் மக கழுத்துல கட்டச் சொல்லுண்ணே... இதுக பொறந்ததுல நாம போட்ட முடிச்ச நேத்து வந்த சிறுக்கி அவுத்துட்டாளே... வாண்ணே” என்று கத்தலும் கதறலுமாக தனது அண்ணனை அழைக்க...

மான்சி பட்டுப்புடவையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு “ என்ன ஜானகி இன்னும் நீ திருந்தாமலேயே இருக்க? அன்னிக்கு என் குடும்பத்துக்கு நீ கொல்லி வச்சப்ப என் அத்தக்காரி புருஷன் தான் வேனும்னு எதிர்த்து நிற்க தெரியாத கோழையா உங்க பின்னாடி வந்தா... நானும் அப்படியிருப்பேன்னு நெனைச்சயா? என் கல்யாணத்துல பத்து தலை உருண்டே ஆகும்னு நான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணது... அதுல மொத தலை உன்னுதுதான்டி மவளே.... எங்க என் கிட்ட வந்து பாரு” என்று இடுப்பில் கைவைத்து சவாலாக நிற்க்க..

சத்யன் ஒன்றும் புரியாமல் அதிர்ந்து போய் நிற்க.... முத்து அவசரமாக மான்சியை நெருங்கி “ என்னங்க நீங்க... ஒரு டாக்டரா இருந்துகிட்டு இவ்வளவு கேவலமா நடந்துக்கிட்டீங்க? பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க ” என்று கோபமாக கேட்டான் ..

“ ஹலோ முத்து சார் உங்கமேல நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்.... இந்த கூட்டத்தோட சேர்ந்து உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க?... நான் டாக்டர்னா என் குடும்பத்தை விட்டு கொடுத்துட முடியுமா?.... இப்போ பெரியவங்களா இருக்குற இவங்கதான் அன்னிக்கு சின்னத்தனமான வேலை செய்து ஒரு உயிரையே கொன்னாங்க..... இவங்களுக்கு மரியாதை ஒரு கேடா? இப்பக்கூட பாருங்க என் கழுத்துல இருக்குற தாலியை அறுத்து அவ மக கழுத்துல கட்ட வைக்கனும்னு பார்க்கிறாங்க” என்று குமுறலாக பேசிய மான்சி சட்டென்று ஆதிலட்சுமியின் பக்கம் திரும்பி ...

“ என்ன அயித்த? உன் மகன் உன் அண்ணன் மக கழுத்துல தாலி கட்டிருக்கான்.. அதை அறுக்கச்சொல்லி உன் நாத்தனார் சொல்றா... நீ வேடிக்கைப் பார்த்துகிட்டு நிக்கிற... அன்னிக்கு உன் அண்ணன் செத்தப்பத்தான் ரோஷம் வரலை?.. இப்போ கூடவா உனக்கு ரோஷம் வரலை?.. தாய்மாமன் மகளுக்குத்தான்டி முதல் உரிமையிருக்குன்னு சொல்லி உன் நாத்தனார நாலு அறை வைக்காம வேடிக்கைப் பார்க்குறியே அயித்த” என்று நக்கலாக மொழிந்தாள்

மான்சி பேசிய மறுவிநாடி ஆதிலட்சுமி அப்படியே மடிந்து அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க... கீதா ஓடிவந்து தன் தாயை கட்டிக்கொண்டாள்

செல்வம் திரும்பி கமலக்கண்ணனை பார்த்து “ என்னடா பொட்டச்சியை பேசிவிட்டுட்டு அப்படியே நிக்கிற?.. என்ன உறவ புதுபிச்சுக்கலாம்னு வந்தியா? நடக்காதுடா... அந்த தாராசுரமே திரண்டு வந்தாலும் என்னை ஒன்னும் பண்ணமுடியாது” என்று கர்ஜிக்க...

கமலக்கண்ணனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ரோஷம் வந்ததோ “ ஆமாம்லே என் மக உங்க முகத்திரையை கிழிக்கிறத வேடிக்கைப் பார்க்கத்தான் என் சாதி சனத்தையெல்லாம் கூட்டிட்டு வந்தேன் ... உன்னை அசைக்க தாராசுரம் ஆளுக எதுக்கு? என் மக ஒருத்தி போதும்லே... அவள ஆம்பளை மாதிரி வளர்த்து வச்சிருக்கேன்லே... என் தங்கச்சி மாதிரி ஏமாந்தவன்னு நெனைச்சயா? இவ என் ஆத்தா மருதாயியோட மறு உருவம்... உங்களையெல்லாம் நார்நாராகக் கிழிச்சுப் புடுவா” என்று ஆவேசமாக பேசிய கமலா ... திடீரென்று கண்கள் குளமாக “ எங்காத்தா பெத்த ஒத்த மக ஆதிலட்சுமி... அவளை எங்காத்தா சாவுக்கு கூட வரவிடாத சதிகாரன்லே நீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லவேண்டிய நேரம் வந்துருச்சுலே” என்றார் குமுறலுடன்...

செல்வம் ஆத்திரமாய் கமலகண்ணனை பார்த்தார்... இவனுக்கு இவ்வளவு பேசத் தெரியுமா? என்று எண்ணியவர் “ நான் எவனுக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை... என் மகன் ஆம்பளைடா... அவனுக்கு நான் ஆயிரம் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்றவர் சத்யனிடம் திரும்பி...

“ டேய் சத்யா நீ இவளை காதலிச்சியோ இல்லையோ.. ஆனா இவ நெஞ்சுல வஞ்சத்தை வச்சிகிட்டு உன்னை ஏமாத்திருக்கா? வேனாம்டா இவ... வா போகலாம்” என்று மகனின் கையைப்பிடித்து இழுக்க....

“ இருங்கப்பா நான் அவகிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்” என்ற சத்யன் மான்சியை நெருங்கி அவள் கண்களை ஊடுருவினான்... மான்சி சலைக்காமல் நின்றாள் “ அப்போ நான் யாரு? எனக்கும் பவித்ராவுக்கும் நடக்கவிருந்த கல்யாணம்? என எல்லாமே உனக்குத் தெரியுமா?” என்று சத்யன் கேட்க...

நெஞ்சை நிமிர்த்தி மார்புக்கு குறுக்காக கைகட்டி விரைத்து நின்ற மான்சி “ இப்போ இல்ல சத்யா.... உன்னை பத்து வருஷமா பின்தொடர்ந்து வர்றேன்... உனக்குத் தெரியாமல் உன்னோட ஒவ்வொரு அசைவையும் கண்கானிச்சவ நான்... ஆனா எங்கப்பா தான் பயந்து போய் நீ வெளிநாடு போய்ட்டதா பொய் சொல்லி. என்னை சென்னையில் கொண்டு போய் டாக்டர்க்கு சேர்த்துட்டார்... நானும் நீ வெளிநாட்டுல இருக்கேன்னு நம்புனேன்... ஆனா ட்ரைனிங்குக்காக மெண்டல் ஆஸ்பிட்டல் வந்தப்ப உன்னைப் பார்த்து அதிர்ச்சியாத்தான் இருந்தது.. உடனே என்னை தேத்திக்கிட்டு உன்னை என்கிட்ட நெருங்க விட்டு காதலிக்க வச்சு.... நான் இல்லேன்னா நீ இல்லேன்னு நினைக்க வச்சு... இந்த கல்யாணத்தை உன்னை வச்சே நிறுத்த வச்சு... என் கழுத்துல தாலி கட்டிக்கிட்டேன்... எனக்கு எல்லாமே தெரியும்... இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் தான் சத்யா... நான் பொறந்ததில் இருந்தே என் அப்பாவோட கண்ணீரைப் பார்த்து பார்த்து நெஞ்சு இறுகிப் போய் வளர்ந்தவ... உன் அத்தை என் குடும்பத்துக்கு செய்த துரோகத்துக்கு பழிவாங்க தான் உனக்கும் பவித்ராவுக்கும் நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்தினேன்” என்று மிகத்தெளிவாக இத்தனை நாளாக மறைத்து வைத்து நாடகமாடிய விஷயங்களை போட்டுடைத்தாள்

சட்டென்று சத்யன் துவண்டு போனான்... அவனால் எல்லாம் நடிப்பு என்று ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை... நெஞ்சு காய்ந்து வரண்டு போக.... “ அப்போ இந்த ஒரு மாசமா நாம நாலு சுவத்துக்குள்ள புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தது? அதுவும் உன் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமா?” என்று சத்யன் வரண்ட குரலில் கேட்க...


மான்சி அவனை ஏளனமாகப் பார்த்தாள் “ என்ன சத்யா உன் காதல் மேல உனக்கே சந்தேகமா இருக்கா?.... நாம வாழ்ந்த வாழ்க்கை நடிப்பா.. காதலான்னு உனக்குப் புரியலையா? உன் அப்பாவையும் அத்தையையும் பழிவாங்க எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்திருக்க முடியும்.... ஆனா நான் உன்னைத் தேர்ந்தெடுத்ததுக்கு காரணம்? என்னோட பணிரெண்டாவது வயசுல உன் பிறந்தநாள் அன்னிக்கு கோயில் வச்சுப் பார்த்தேன் பாரு அப்போ இருந்து நீதான் என் புருஷன்னு வாழுறேன் சத்யா... அதனால்தான் எந்த கூச்சமும் இல்லாம என்னை உனக்கு தரமுடிஞ்சது... அப்போ சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்... நீ இல்லாத நான் வெறும் பிணம் சத்யா... உனக்கு நான் இன்னிக்குதான் பொண்டாட்டி.. ஆனா நீ எனக்கு பத்து வருஷத்துக்கு முந்தியே புருஷன் ஆயிட்ட.. ” மான்சி தனது பத்து வருட காதலையும் சத்யனுக்கு மிகத்தெளிவாக கூறிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்...

“ ஆனாலும் இவங்களைப் பழிவாங்க என்னை முட்டாளாக்கிட்டயே மான்சி” என்றவனின் விரக்திப் பார்வை மாறி வெறுப்பாக மாறியது ...

மான்சியை அந்த பார்வை வதைத்தது.. ஆனாலும் அவளது கொள்கை நிறைவேறவேண்டும்... மண்டியிட்டு கண்ணீர் விடும் ஆதிலட்சுமியின் கண்ணீருக்கு பதில் தெரியவேண்டும்... அதற்காக சத்யனைப் பிரிந்ததுதான் ஆகவேண்டும் “ நான் என் தரப்பை சொல்லிட்டேன்.. இதுக்கு மேல நீ நம்பலைன்னா நான் ஒன்னு பண்ண முடியாது சத்யா” என்று அலட்சியமாக கூறியவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு விலகிச்சென்றவனை கமலக்கண்ணனும் வீரம்மாளும் வந்து கையைப்பிடித்துக் கொண்டனர்

“ மாப்ள அது விளையாட்டுப் புள்ள மாப்ள.... அது சொல்றதை பெரிசு எமுத்துக்காதீங்க.... என்மேலயும் உன் அம்மா மேலயும் வச்சிருந்த பாசத்தால இப்படியெல்லாம் பண்ணிருச்சு மாப்ள.. நீங்க மன்னிச்சு ஏத்துக்கனும் மாப்ள” என்று ஒரு தகப்பனாய் மன்றாடினார்..

சத்யன் இன்றுதான் முதன்முதலாக தன் தாய்மாமனைப் பார்க்கிறான்... இப்படியொரு அப்பாவிக்கு இப்படிப்பட்ட மகளா? அவர் கைகளில் இருந்து தன் கையை உருவிக்கொண்டு நிமிர்ந்தான் சத்யன்... “ என்னதான் நான் உயிருக்குயிரா காதலிச்சு ஒரு மாசம் குடும்பம் நடத்தினவளா இருந்தாலும் என் அப்பாவை மதிக்காத மனைவி எனக்கு வேண்டாம்... அவ நம்பவச்சு ஏமாத்தினா என்னை முட்டாளாக்கினா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.... என் அப்பா தப்பே செய்திருந்தாலும் அவரை பழிவாங்க நினைக்கும் இவ எனக்கு எப்படி மனைவியாக முடியும்? உங்க தம்பி செத்தாருன்னா அது அவரோட முடிவு.. அதுக்காக இருபது வருஷம் கழிச்சு இவ வந்து பழிவாங்குறேன்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது.... என் அப்பா உங்களுக்கு வேனா நல்ல மருமகனா இல்லாம போயிருக்கலாம்... ஆனா எனக்கு எப்பவுமே நல்ல தகப்பனா இருக்கிறவர்... அவரை தரந்தாழ்த்தக் கூடிய எதுவுமே எனக்கு வேண்டாம்” என்ற சத்யன் மான்சியை திரும்பியும் பார்க்காமல் தனது அப்பாவை நோக்கிப் போக

“ வாடா நான் பெத்த சிங்கமே ” என்று பெருமையுடன் தனது மகனை இழுத்து அணைத்துக்கொண்டார் செல்வம்

மான்சி அலட்சியமான ஒரு புன்னகையுடன் அவர்களைப் பார்த்தாள் ‘ கூட்டிட்டுப் போ செல்வம்... ஆனா என் மீதான உன் மகனின் காதல் என்ன பாடுபடுத்தும்னு உனக்கு எப்படித் தெரியும்? உன் மகன் மனசுநொந்து மறுபடியும் மெண்டல் ஆஸ்பிட்டல் போகாம இருக்கனும்னா அன்னிக்கு என்னைத் தேடி என் வீட்டுக்கு நீ வருவ மாமோவ்’ என்று எண்ணிய மான்சி திரும்பி தனது அத்தையைப் பார்க்க...




அவள் செய்வதறியாது கண்ணீருடன் நின்றிருந்தாள்.... கணவனுடன் போவதா இல்லை அண்ணன் மகளுக்கு ஆதரவாக நிற்பதா என்று அன்றுபோலவே இன்றும் குழம்பி நின்று ... பிறகு தனது அண்ணனைப் பார்த்து பார்வையால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தனது கணவனை தொடர்ந்து போனாள்

செல்வம் குடும்பத்தினர் எல்லோரும் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வாசலை நோக்கி செல்ல “ ஓய் செல்வம் மாமோய்” என்று மான்சி நக்கலாய் உரக்க குரல் கொடுக்க...

அவளின் துணிச்சல் கண்டு எல்லோரும் வாய் பிளக்க.... செல்வம் கூட அந்த குரலில் சட்டென்று பூத்த புன்னகையை உடனே மறைத்து முகத்தை கோபமாக மாற்றிக்கொண்டு திரும்பினார்

மான்சி தனது புடவையை தூக்கி சொருகி குழாயடியில் சண்டைக்கு வருபவள் போலவே நின்றிருந்தாள்.... இவளையா டாக்டருக்கு படிக்க வச்சான் இந்த கேனைப்பய... பேசாம தாராசுரத்தில் ஒரு வட்டிக்கடை வச்சி குடுத்திருக்கலாம் என்று எண்ணமிட்ட செல்வம் .. அவள் கூப்பிட்ட குரலுக்கு தான் திரும்பி பார்க்கிறோம் என்ற உணர்வேயின்றி மான்சியை பார்த்தார்.... மான்சி மேடையில் நின்றிருந்தாள்... செல்வம் கீழே நின்று அவளை அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தார்

“ மாமோய் உன் பொண்டாட்டியை இருபத்திரெண்டு வருஷமா அடக்கி வச்சிருக்க மாதிரி என் புருஷனை உன் கட்டுப்பாட்டுல வச்சிருக்க முடியாது? ஏன்னா அவன் மனசுப் பூராவும் நான்தான் இருக்கேன்... உன்னால உன் மகனை கட்டுப்படுத்தமுடியும் மாமோவ் ஆனா அவன் மனசுல இருக்குற காதலை கட்டுப்படுத்த முடியாது... மான்சி என் மகனோட வந்து வாழுன்னு நீயே வந்து என் வீட்டுல முறையா வந்து கூப்பிடுற வரைக்கும் நான் உன் மகன் இருக்குற பக்கம் கூட வரமாட்டேன் ” என்று மான்சி சவாலாக கூற...

ஒரு சின்னப் பெண்ணிடம் பேசுகிறோம் என்ற நினைப்பின்றி “ நான் உன் வீட்டுக்கா? அது இந்த சென்மத்திலே நடக்காது புள்ள” என்று பதில் சவால் விட்டவர் தங்கையின் பக்கம் திரும்பி

“ ஜானும்மா நீ பவித்ராவை கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ நான் நாளைக்கு வந்து பேசிக்கிறேன்” என்றவர் முத்துவிடம் “ முத்து எல்லாரையும் அனுப்பிட்டு மண்டபத்து கணக்கை எல்லாம் செட்டில் பண்ணிட்டு வீட்டுக்கு வா” என்று கூறி ஒரு ஐநூறு ரூபாய் கட்டை எடுத்து முத்துவிடம் கொடுத்துவிட்டு தனது குடும்பத்துடன் வெளியேறி காரில் வீட்டுக்கு கிளம்பினார்..

முத்து பவித்ராவை பார்க்க.... அவள் கண்கள் கண்ணீரை சுமந்திருந்தது... அடிபட்ட வேதனையும் அவமானமும் முகத்தில் முகாமிட்டிருக்க தனது உடைகளை கலைந்துவிட்டு சாதரண புடவையில் மதுமிதாவை தூக்கிக்கொண்டு வேகவேகமாக வந்துகொண்டிருந்தாள்...

முத்து அவசரமாக அவளுக்கு முன்னால் ஓடிச்சென்று காரின் கதவை திறந்து அவள் ஏறி அமர்ந்ததும் தனது கையை உள்ளுக்குள் நீட்டி “ நடந்ததை நினைச்சு வருந்தி எந்த தவறான முடிவுக்கும் போகக்கூடாது” என்றான்..

சத்தியம் செய்யச் சொல்கிறான் என்று புரிய அவனை கூர்மையுடன் பார்த்து “ நான் சாகமாட்டேன் .... மான்சி சொன்ன மாதிரி பெத்தவங்க சேர்த்து வைக்கும் சொத்தை மட்டுமல்ல பாவத்தையும் பிள்ளைகள் தான் சுமக்கனும்... நான் சுமக்க தயாராயிட்டேன்” என்று பவித்ரா விரக்தியில் கூற...


முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜானகி கண்ணீர் குரலில் “ நீயும் ஏன்டி என்னை சித்ரவதை பண்ற? அந்தாள் சாவான்னு நான் என்ன நெனைச்சா பார்த்தேன்” என்று தனது தப்புக்கு நியாயம் சொன்னாள்

அம்மாவை தீவிரமாக பார்த்த பவித்ரா “ ஒருத்தனை மணவறையில் உட்கார வச்சிட்டு இன்னோருத்தர் கூட கல்யாணத்தை பண்ணிகிட்டு வந்து நின்னா எந்த மான ரோஷம் உள்ளவனும் செத்துத்தான் போவான்.. ஆனா அது தப்புன்னு நீ இன்னும் உணரலை பாரு இதுதான்மா ரொம்ப பெரிய பாவம்” என்று தாயின் தவறுக்கு மகள் விளக்கம் சொல்ல...

முத்து அமைதியாக நின்றிருந்தான்.. பவித்ரா முத்துவை ஏறிட்டுப் பார்த்து “ முத்து நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்றாள்...

பவித்ரா இப்போதுதான் அவனை பெயரிட்டு அழைக்கிறாள்... முத்து உற்சாகத்தை மறைத்து குனிந்து “ சொல்லு பவித்ரா” என்று அவளின் உத்தரவுக்காக காத்திருப்பவன் போல...

“ நீங்க சென்னைப் போனதும் நான் வேலை செய்த இன்சூரன்ஸ் கம்பெனியில் மறுபடியும் எனக்கு வேலை கிடைக்குமா பாருங்க... ரொம்ப சீக்கிரமா பாருங்க... நான் மறுபடியும் சென்னை வந்து வேலையில் சேருறேன்... மான்சி செய்ததை நான் தவறுன்னு சொல்லமாட்டேன்... அவ கொடுத்த தண்டனையை மத்தவங்க ஏத்துக்கிறாங்களோ இல்லையோ நான் ஏத்துக்கிறதா முடிவு பண்ணிட்டேன்...” என்றவள் தனது தாயை தீர்க்கமாகப் பார்த்து “ ஆமாம் நான் என்னை பெத்தவங்களுக்கு மகளா இப்படியே இருந்திட்டு போறேன்” என்றாள் தீர்க்கமாக..

பவித்ரா சென்னை வந்தாலே போதும் என்று நினைத்தான் முத்து... அதன் பிறகு தனது மகளின் பாசமும் தனது காதலும் அவளை மாற்றும் என்று நம்பிக்கை கொண்டான் “ சரி பவித்ரா நான் போனதுமே ஏற்பாடு பண்றேன்” என்றவன் டிரைவரைப் பார்த்து தலையசைத்து விட்டு சற்று விலகி நிற்க கார் கிளம்பியது...

முத்து மீண்டும் மண்டபத்துக்குள் வந்தான்... கல்யாண கூட்டம் மொத்தம் கலைந்து போயிருந்தது... மான்சி மேடையைவிட்டு இறங்கி வர அவள் பின்னால் அவளைப் பெற்ற அந்த அப்பாவிகள் துக்கம் கப்பிய முகத்துடன் வந்தனர்

“ இப்ப ஏன் ரெண்டுபேரும் இப்படி சாவு வீட்டுல இருந்து வர்ற மாதிரி வர்றீங்க? எனக்கு மட்டும் நல்லது நடந்தா போதுமா? அத்தைக்கு நல்லது நடக்க வேண்டாமா? உன் தங்கச்சி உன் வீட்டுக்கு வரவேண்டாமா கமலா?” என்று அவர்களிடம் பேசிக்கொண்டே வந்தவள் முத்துவைப் பார்த்ததும் தயங்கி நிற்க..
மான்சியின் செயலில் வார்த்தைகளில் குற்றம் தெரியாததால்.. அவள் மீது வருத்தமில்லாது மெல்லிய புன்னகையுடன் “ பெஸ்ட் ஆப் லக் மான்சி” என்றான்...

முத்து தன்னை புரிந்து கொண்டதில் மான்சியின் முகம் பட்டென்று மலர “ தாங்க்ஸ் முத்து சார்” என்றாள்....

அதற்குமேல் அங்கே நிற்காமல் அங்கிருந்து நகர்ந்தான் முத்து... அவனுக்கு மான்சி செய்திருக்கும் உபகாரத்துக்கு அவளுக்கு கோயிலே கட்டுவான்... ஆனால் இப்போது சூழ்நிலை சரியில்லை என்பதால் சிறு தலையசைப்புடன் நகர்ந்து விட்டான்...

மான்சி கழுத்தில் தொங்கும் தாலியை கர்வமாக பார்த்தபடி காரில் ஏறிக்கொண்டு “ ஓய் கமலா வா வீட்டுக்குப் போகலாம்” என்றாள்... ... சற்றுநேரத்தில் அவர்களது காரும் கிளம்பி போனது


“ காதல் என்பது சாதரணமான புயல் அல்ல....

“ மாமன்னன்... பேரரசன்... உலகசக்கரவர்த்தி...

“ வீரத்தலைவன்.... வெற்றிவேந்தன்..

“ என இன்றைய வரலாறு பூத்தூவும்...

“ அத்தனை பேரையும்...

“ காற்றோடு கலந்து..

“ கடலோடு மிதந்து...

“ விண்ணோடு மறைந்து...

“ முகவரியற்று அலையவிட்டு...

“ ஆயுளின் வேரையே களைந்து...

“ ஆதாரமற்று வீசியெறிந்துள்ளது! 

வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆதிலட்சுமி கூடத்தில் தரையில் அமர்ந்து முந்தானையால் தனது வாயை பொத்திக்கொண்டு கேவிக்கேவி அழ... கீதா தன் தாயை சமாதானம் செய்கிறேன் என்று அவளும் உடன் சேர்ந்து அழுதாள்

சமையலறை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்த செல்வம்.... அவர்களின் அழுகையைப் பார்த்து ரௌத்திரமாகி “ இப்ப ஏன்டி எளவு வீடு மாதிரி அழுதுகிட்டு இருக்க? இப்போ நீ சந்தோஷப்பட வேண்டிய நேரம்டி ஆதி.... உன் அண்ணன் மக உனக்கு மருமகளாயிட்டா ? ஆனா ஒன்னு ஆதி உங்கண்ணன் தன் மகளை இப்படியெல்லாம் பயன்படுத்துவான்னு நான் நெனைச்சுக்கூடப் பார்க்கலை..... பொண்ணாடி பெத்துருக்கான்? என் மகனை வளைச்சுப் போட மனநிலை சரியில்லாதவன் கூட ஒரு மாசம் குடித்தனம் பண்ணிருக்கா? ச்சே கருமம் இதெல்லாம் ஒரு பொழப்பாடி? ” என்று ஏளனத்துடன் கேட்க...

அழுதுகொண்டிருந்த ஆதி வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்து... விழிகளை உருட்டி விழித்து “ லட்சம் லட்சமா செலவு பண்ணீங்களே உங்க மகனுக்கு உங்களால குணப்படுத்த முடிஞ்சுதா? இப்போ கருமம்னு சொன்னீங்களே? அந்த கருமம் தான் உங்க மகனை இன்னிக்கு மனுஷனாக்கியிருக்கு? என் அண்ணன் மகள் மட்டும் வரலைன்னா சத்யன் இன்னும் எத்தனை வருஷமானாலும் சரியாயிருக்க மாட்டான்....” இத்தனை வருஷமா அடக்கி வைத்த கோபம் லேசாக புகைய ஆரம்பித்தது ஆதியின் குரலில்...

இதுவரை எதிர்த்துப் பேசாத மனைவியின் உயர்ந்த குரலில் ஆச்சர்யம் அடைந்த செல்வம்.... “ என்னடி பேசுற? ..... உனக்கு பேசக்கூட தெரியுமா?” என்று மறுபடியும் ஏளனத்தோடு கேட்க...

ஆதி எழுந்தே நின்றுவிட்டாள் “ ஏன் நான் என்ன ஊமையா? இத்தனை நாளா உங்களுக்கும் உங்க தங்கச்சிக்கும் பயந்து நான் அமைதியாயிருந்தது போதும்... இனிமேல் என்னால முடியாது.... எங்கண்ணன் வளர்ப்பை பத்தி நீங்க கேவலமா பேசாதீங்க... என் மருமகளாவது குடும்பம் ஒன்னு சேரனும் நீங்க செய்த தப்பை உணரனும்னு தான் சத்யனோட சேர்ந்து வாழ்ந்தா .....ஆனா உங்க தங்கச்சி?? இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க உங்க தங்கச்சிய என்ன லட்சனத்துல வளர்த்தீங்கன்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.... குடும்பம் கௌவரம் நாறிப்போயிக் கூடாதேன்னு இத்தனை வருஷமா பல்லை கடிச்சிக்கிட்டு இருந்தேன்... இனிமேல் என் தாய்வீட்டை பத்தி நீங்க கேவலமா சொன்னா பதிலுக்கு நானும் எல்லாத்தையும் சொல்லவேண்டியிருக்கும்” ஆதியில் குரலில் அடிபட்ட வேங்கையின் சீற்றம்...

ஆனால் அந்த சீற்றம் ஆண் வேங்கையை சீண்டிவிட..... அறைக்குள் இருந்து சத்யன் வந்து தடுப்பதற்க்குள் ஒரே பாய்ச்சலாக மனைவியின் மீது பாய்ந்தவர் ஆதியின் கன்னத்தில் தனது பலத்தையெல்லாம் திரட்டி ஒரு அறைவிட்டு கூந்தலை கொத்தாக பிடித்து முறுக்கியபடி “ என்னடி சொல்லுவ? நீ சொல்றவரைக்கும் உன்னை இங்கே விட்டு வச்சா தான... போடி உன் ஆத்தா வீட்டுக்கே.... அங்கே போய் சொல்லு எல்லாத்தையும்... எவன் வந்து என்னை புடுங்குறான்னு பார்க்குறேன் ” என்றவர் சத்யன் போராட்டமாக தடுக்க... கீதா பயத்துடன் ஒதுங்கி நின்று ஓவென்று கத்த... மனைவியின் கூந்தலைப் பற்றி இழுத்தவாறே வாசலை நோக்கிப் போக...



ஒரு கட்டம் வரை தடுத்துப் பார்த்த சத்யன் ... செல்வத்தின் ஆத்திரம் எல்லை மீறுவதை கண்டு ஆவேசத்துடன் “ விடுங்கப்பா அம்மாவை?” என்றபடி அவர் கையை பிடித்து இழுத்த அதேவேளை.. கல்யாண வேலைகள் காரணமாக சரியாக சாப்பிடாதது... அன்று காலையிலிருந்து ஏற்ப்பட்ட அதிர்ச்சி மற்றும் மனஉளைச்சல் .. செல்வத்தின் உழைத்து உரமேறிய கையால் வாங்கிய அறை காரணமாக செல்வத்தின் கையிலேயே மயங்கி சரிய ஆரம்பித்தாள் ஆதிலட்சுமி...

முதலில் கவனித்து பதட்டமான சத்யன்... “ அம்மா அம்மா என்னாச்சும்மா” என்று கத்தியபடி ஆதியின் தாடையில் தட்ட.... கீதாவின் அழுகை அதிகரிக்க.... செல்வம் உண்மையில் பதறித்தான் போனார்...


No comments:

Post a Comment