Saturday, December 19, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 3

வீட்டிலிருந்து எடுத்து வந்து தரப்படும் தலையணைகள் அடுத்தநாளே பஞ்சாய் பறந்துவிடும்.... யார் வந்தாலும் மறாவது நாளே கிடைக்கக்கூடிய ஒரே பரிசு தலையில் புழுத்து வழியும் சீலைப்பேன் தான்.... நெருப்பால் தலையை சுட்டால் கூட இந்த பேன்களை ஒழிக்க முடியாது...... பேனுக்கு பயந்து மொட்டையடித்துக் கொண்டு சுற்றுபவர்களும் உண்டு......

இங்கே பைத்தியம் என்ற பெயரில் விட்டத்தை வெறிக்கும் ஞானிகளும் ஏராளம்.... தங்களின் பைத்தியக்காரத்தனத்தை பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகளும் ஏராளம்.....

மொத்தத்தில் உணவின்றி திரியும் பிச்சைக்காரனையும் இங்கே பார்க்கலாம்.... உறவுகளால் துரத்தப்பட்ட பணக்காரனையும இங்கே பார்க்கலாம்..... நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நிலையை அறிந்துகொள்ள இங்கே ஒரு நாள் தங்கினால் போதும்



இப்படிப்பட்ட மருத்துவமனையின் பிரமாண்டமான இரும்பு கேட்டின் அருகே அந்த இடத்துக்கு சற்றும் பொருந்தாத இரண்டு நோஞ்சான் காவலாளிகள்.... நோயாளிகளைப் பார்க்கவரும் நொந்துபோன மக்களிடம் ரகசியமாக கை நீட்டி காசு வாங்கிக்கொண்டு சிறு கேட் வழியாக உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.....

அப்போது அங்கே ஒரு ஆட்டோ வந்து நிற்க்க ... அதிலிருந்து இறங்கிய பவித்ரா ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு கேட்டருகே வந்தபோது காவலாளிகள் இருவரும் ஈயென இளித்தபடி நீங்க போங்கம்மா என்றனர்

அவளிடம் பணம் வாங்கினார்கள் என்றால் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் அவர்களை துவட்டி எடுத்துவிடுவான் என்று அவர்களுக்கு தெரியும்.... ஆமாம் இப்போது முத்துகுமார் எஸ் ஐ பதவியில் இருந்து பிரமோஷன் ஆகி இன்ஸ்பெக்டர் ஆகியிருந்தான்..... எல்லாம் சத்யன் கண்டுபிடித்த அந்த போர்ஜரி கும்பலின் உபயத்தால் தான்

பவித்ரா உள்ளே நுழைந்ததும் சற்று தொலைவில் கேன்டீனுக்கு எதிரே வலதுபுறமாக செல்லும் பாதையில் திரும்பினாள்.... இருபுறமும் மரங்கள் அடர்ந்த நீண்ட பாதை.... கையிலிருந்த பையை சுமந்துகொண்டு வேகவேகமாக நடந்தாள்.....

எதிரே வந்த பைத்தியங்கள் எனப்படும் நம்நாட்டின் சுதந்திர பிரஜைகளின் சேஷ்டைகளை பார்த்து மனம் குமுறியபடி வேகவேகமாக நடந்தாள்.....

சற்று தொலைவில் இருந்த கம்பிப் போட்ட கதவுகளும் ஜன்னல்களும் அடங்கிய கட்டிடத்தை அவள் நெருங்கும்போதே பக்கவாட்டில் இருந்து “ டேய் சத்யா அசையமா இருடா இல்லேன்னா பிளேடு கிழிச்சிரும்” என்ற முத்துகுமாரின் குரல் கேட்டு திரும்பியவள் உடனே முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு பக்கென்று சிரித்துவிட்டாள்.... அவள் கண்ட காட்சி அப்படி

நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய சிமிண்ட் குடைக்கு கீழே இருந்த கல் பெஞ்சின் ஒன்றில் சத்யன் அமர்ந்திருக்க முத்துகுமார் தனது ஆறடி உயரத்தையும் அவனுக்காக வளைத்து குனிந்து தன் கையிலிருந்த ரேசரால் சத்யனின் தாடையில் இருந்த சோப்பு நுரையை தாடியுடன் வழித்தெடுத்துக் கொண்டிருக்க... சத்யன் தனக்கு அருகில் இருந்த முத்துவின் சட்டை காலரை இரண்டு கையாலும் பற்றியிருந்தான்....

தன் கால்களை அவர்கள் பக்கமாக திருப்பிய பவித்ரா அங்கிருந்த மற்றொரு பெஞ்சில் தன் கையிலிருந்த பையை வைத்துவிட்டு முந்தானையால் நெற்றி வியர்வையை துடைத்துக்கொண்டு “ நீங்க எப்ப சார் வந்தீங்க?” என்று முத்துகுமாரைப் பார்த்து கேட்க...

சத்யனின் தாடையை வழிப்பதில் கவனமாக இருந்த முத்துகுமார் கொஞ்சம் இரு என்பதுபோல் தலையசைத்தான்.... சுத்தமாக வழித்தப் பிறகு பக்கத்தில் இருந்த டவலால் சத்யனின் தாடையை துடைத்துவிட்டு சிறு கண்ணாடியை எடுத்து சத்யனுக்கு காட்டி “ இப்பப் பாரு சத்யா எவ்வளவு சூப்பரா இருக்கேன்னு” என்று புன்னகையுடன் கூற....

சத்யன் தாடையை கையால் தடவியபடி கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்து “ ம்ம் நல்லாதான்டா பண்ணிருக்க பேசாம உன் போலீஸ் வேலையை எனக்கு குடுத்துட்டு நீ பார்பர் ஷாப் வச்சுக்கோயேன்டா” என்று சொல்லிவிட்டு தனது வாயைப்பொத்திக் கொண்டு சிரித்தான்...

அவன் சிரிப்பதையே ஆசையாக முத்துகுமார் பார்க்க... கண்கலங்க பார்த்தாள் பவித்ரா....

“ சரி முத்து அந்த பிளேட கொஞ்சம் குடேன் ... இந்த வார்டன் ரொம்ப அராஜகம் பண்றான்... அவனை ஒரே கிழியா கிழிச்சிர்றேன்” என்றபடி சத்யன் அந்த ரேசரை எடுக்க கைநீட்ட... முத்துகுமார் அதை எடுத்து பவித்ராவிடம் கொடுத்து கண்ணசைத்தான்.... பவித்ரா அந்த ரேசரை பெஞ்சின் கீழ் மறைத்து வைத்தாள்....

சத்யனின் பச்சைநிற உடையிலிருந்த சோப்பு நுரையை துடைத்த முத்துகுமார் “ உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் சத்யா.... வார்டனை எல்லாம் அடிக்கக்கூடாதுன்னு... அப்புறம் மறுபடியும் கைகால்ல சங்கிலி போட்டு கட்டிடுவாங்க சத்யா” என்ற முத்துகுமார் சத்யனின் கைகளைப் பற்றி மணிக்கட்டைப் பார்த்தான்...


சங்கிலி போட்டு கட்டியதால் உண்டான புண்கள் ஓரளவுக்கு ஆறியிருந்தது... முத்துகுமார் பவித்ராவை நோக்கி கையை நீட்ட அவள் தனது கைப்பையில் இருந்து ஒரு டியூப் மருந்தை எடுத்து கொடுக்க... அதை பிதுக்கி சத்யனின் மணிக்கட்டுகளில் தடவியவன் “ சத்யா போன ரெண்டு முறை நீ கலாட்டா பண்ணி வார்டனை அடிச்சதுக்கு உன்னை சங்கிலி போட்டு கட்டிட்டாங்க.... நான் யார் யாரையோ சிபாரிசு பிடிச்சு உன்னை மறுபடியும் இந்த வார்டுக்கு கொண்டு வந்தேன்... நீ மறுபடியும் கலாட்டா பண்ணேன்னா என்னால உதவமுடியாதுடா... ப்ளீஸ் சத்யா இன்னும் கொஞ்சநாளைக்கு அமைதியா இருடா” என்று கெஞ்சினான்...

“ சரி சரி அழுவாதடா நான் அமைதியா இருக்கேன்” என்றவன் பவித்ராவிடம் திரும்பி “ ஏய் பவித்ரா பீடி வாங்கிட்டு வந்தியாடி? ” என்று கேட்க... பவித்ரா தனது பையிலிருந்து ஒரு கட்டு பீடியை எடுத்து சத்யனிடம் நீட்டினாள்.....

“ என்ன அநியாயம் ஒரே ஒரு கட்டு பீடி தானா? என் தோழர்களுக்கு யார் கொடுப்பது” என்று நெஞ்சை நிமிர்த்தி கம்னிஸ்டு கட்சிகாரன் போல தோழர்களுக்காக உரிமையோடு கேட்டான்....

“ ஆமா இங்க இருக்குறவனுக்கு எல்லாம் கொடுக்க நீ பெரிய வள்ளலாடா? டேய் சத்யா தினமும் பவித்ரா எவ்வளவு சிரமப்பட்டு வந்து எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து குடுக்குறா? அவ பாவம்லடா... உன் பவித்ராடா” என்று முத்துகுமார் தன்மையாக கூறினான்...

சத்யன் வீரனைப் போல் எழுந்து நின்று “ டேய் முத்துகுமார் எனக்கு எந்த உறவுமில்லை சொந்தமுமில்லை.... நான் அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுப்பவன்.... அராஜகத்தை ஒழிக்கப் பிறந்தவன்... சமூகத்தை நான்தான் சரி செய்யப்போகிறேன் ” என்று உரக்க பேசியவன் சட்டென்று முத்துக்குமாரின் சட்டை காலரைப் பற்றி “ டேய் உன்கிட்ட துப்பாக்கி கேட்டு எத்தனை நாள் ஆச்சு? எப்படா எனக்கு தூப்பாக்கி எடுத்துட்டு வந்து குடுப்ப?” என்று கேட்க....

வழக்கம்போல முத்துகுமாரின் கண்கள் கலங்கி நீரை சொரிந்தது.... பவித்ரா “ சார் ப்ளீஸ் ” என்று அவன் தோளில் கைவைக்க....

சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் கர்சீப்பை எடுத்து கண்ணீரை துடைத்துக்கொண்டு “ நாளைக்கு வரும்போது கண்டிப்பா தூப்பாக்கி வாங்கிட்டு வர்றேன் சத்யா” என்றான்

“ ம்ம் இதுக்கு ஏன் அழற? நீ போலீஸ் வேலைக்கே லாயக்கில்லைடா... எப்பபார்த்தாலும் அழுவுற? நான் உன் வேலையில இருந்தா எவன் தப்பு செய்தாலும் என்கவுண்டர் தான்... போலீஸ்காரன்னா தில்லு இருக்கனும்டா முத்து ” என்று சத்யன் கூறியதும் அதற்குமேல் பொறுக்கமுடியாமல் கர்சீப்பால் தன் முகத்தை மூடிக்கொண்டு பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டான் முத்துகுமார்

பவித்ரா எழுந்து சத்யன் அருகில் வந்து “ மாம நேரமாச்சு சாப்பிடலையா? கைகழுவிவிட்டு வா சாப்பிடலாம்” என்றாள்...

சாப்பாடு என்றதும் சத்யன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பக்கத்தில் இருந்த குழாயை நோக்கி ஓடினான்....

குனிந்தவாறு குலுங்கிக் கொண்டிருந்த முத்துகுமார் அருகில் வந்து நின்ற பவித்ரா “ என்ன சார் இது நீங்க இருக்கிற தைரியத்தில் தான் எங்க மொத்த குடும்பமும் உயிரோட இருக்குறோம்... நீங்களே இப்படி அடிக்கடி கலங்கினா எப்படிங்க சார்” என்று கண்ணீரை உள்ளிழுத்தபடி பேச...

மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்த முத்து “ இல்லை பவித்ரா என்னால இவனை இப்படி பார்க்கவே முடியலை.... அன்னிக்கு மட்டும் நான் இவனை எங்ககூட கூட்டிட்டுப் போகாம இருந்திருந்தா இபபடி ஆகியிருப்பானா? எல்லாம் என்னால வந்தது” என்று நெற்றியில் அடித்துக்கொள்ள... அப்போது வந்த சத்யனைப் பார்த்து முகத்தை அவசரமாக துடைத்துவிட்டு புன்னகையை பூசிக்கொண்டு “ ம்ம் பவித்ரா எனக்கும் பசிக்குது இன்னிக்கு சத்யன் கூடவே சாப்பிடப் போறேன்.. எனக்கும் போடு” என்றபடி ஒரே பெஞ்சில் சத்யனுக்கு எதிராக அமர்ந்தான்....




பவித்ராவும் சிறு புன்னகையுடன் சத்யனுக்கு தட்டு வைத்துவிட்டு “ ஒரு தட்டுதான் இருக்கு இப்போ என்னப் பண்றது மாமா?” என்று சத்யனை கேட்க...

“ சட்டென்று கோபமான சத்யன் “ என்னடி எனக்கு பைத்தியமான்னு செக்ப் பண்றியா? ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடுவோம்னு உனக்கு தெரியாதா ?” என்றபடி கோபமாக எழுந்தவனை கையைப்பிடித்து அமர வைத்த முத்துகுமார்...

“ விடுடா பாவம் சின்னப் பொண்ணு.... அவளுக்கெப்படி நம்ம நட்பை பத்தித் தெரியும்? .... நீ வா நாம ரெண்டுபேரும் ஒரே தட்டுல சாப்பிடலாம்” என்று அவனை சமாதானம் செய்தவன் பவித்ராவுக்கு ஜாடை காட்ட.... அவள் அவசரமாக சோற்றை தட்டில் போட்டு குழம்பை ஊற்றினாள்...

சாதத்துடன் குழம்பை சேர்த்து பிசைந்த முத்துகுமார் “ டேய் சத்யா உனக்குப் பிடிச்ச மீன் குழம்புடா” என்று ஆர்வமாய் சொன்னவாறு சாதத்தை உருட்டி சத்யனின் வாயருகே எடுத்துச் செல்ல... சத்யன் வாயை ஆவென்று திறந்து வாங்கிக்கொண்டான்....

முதலில் சத்யனுக்கு ஊட்டிய பிறகு மறுபடியும் சாதமும் குழம்பும் வாங்கி முத்துகுமார் சாப்பிட .... அதை கவனித்த சத்யன் “ ஓ நீயாவே சாப்பிடுறயா? நான் ஊட்ட வேண்டாமா? சரி சரி நீ எனன்ன பாப்பாவா? “ என்றபடி எழுந்தவன் பவித்ரா கொடுத்த பீடி கட்டிலிருந்து ஒன்றை உருவி உதட்டில் வைத்துவிட்டு முத்துகுமாரை பார்க்க... அவன் தன் பாக்கெட்டில் இருந்து தீப்பொட்டியை எடுத்து கொடுத்துவிட்டு சாப்பாட்டில் கவனமானான்...

சிகரெட் வாசனையே ஒத்துக்கொள்ளாது என்று தூர ஓடும் சத்யன் பீடியை பற்றவைத்து ஆழமாக புகையை இழுத்து ஊதினான்.... “ ஆமா உன் டிபார்ட்மெண்ட்ல சீக்ரெட் ஆபிஸர் மாதிரி எனக்கு ஒரு போஸ்டிங் வாங்கி தர்றதா போன வாட்டி வந்தப்ப சொன்னியே? வாங்கிட்டயா?” என்று சத்யன் கேட்க...

மீனிலி முள்ளை கவனமாக எடுத்துவிட்டு சாப்பிட்ட முத்துகுமார் “ ஏ சி வெளியூர் போயிருக்கார் வந்ததும் உனக்கு போஸ்டிங் போடச்சொல்றேன்” என்றான் ...

“ ம்ம் சீக்கிரமா ஏற்பாடு பண்ணு.... ஆமா அந்த டயர் திருட்டு கும்பல் தலைவனுக்கு என்ன தண்டனை வாங்கி குடுத்த?” சத்யனின் அடுத்த கேள்வி...

தட்டிலிருந்த சோற்றை வழித்து வாயில் போட்டுக்கொண்டே “ அவனை தூக்குல போட்டாச்சு” என்றான் முத்துகுமார்... உண்மையென்னவோ அந்த ஆள் இப்போது ஜாமீனில் வெளியே வந்து கேரளாவில் ஜாலியாக செட்டிலாகி விட்டான்... அந்த சம்பவத்தால் முத்துக்குமாருக்கு இன்ஸ்பெக்டராக பிரமோஷன் கிடைத்ததும்... சத்யன் இங்கே வந்ததும் தான் மிச்சம்...

“ ம்ம் தட்ஸ் குட் மிஸ்டர் முத்துகுமார்.... இப்படித்தான் அராஜகத்தை தட்டிக்கேட்கனும்” என்றவாறு தன் விரலில் இருந்த பீடியை கடைசியாக இழுத்துவிட்டு சுண்டி எறிந்தான் சத்யன்

பவித்ரா கைகட்டிகொண்டு இவர்களின் பேச்சை கேட்டபடி அமைதியாக நின்றிருந்தாள்... அவளுக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக பழகிப்போன கேள்விகள் பழகிப்போன பதில்கள் இவை ...

முத்துகுமார் கையையும் தட்டையும் கழுவிவிட்டு வந்து பவித்ராவிடம் கொடுத்து விட்டு தனது பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தனது தலையை வாரிக்கொண்டு சத்யனின் அருகே போய் அவன் தலையை வாரிவிட்டவன் “ பவித்ரா நேத்து மெடிக்கர் ஷாம்பு எடுத்துட்டு வரச் சொன்னேனே எடுத்துட்டு வந்தியா?” என்று கேட்க

“ ம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று எடுத்து கொடுத்தாள் பவித்ரா...

அதை வாங்கி சத்யனிடம் கொடுத்த முத்துகுமார் “ இங்கபாரு சத்யா இந்த ஷாம்புவை பத்திரமா வச்சிக்கிட்டு தினமும் தலைக்கு போட்டு குளிக்கனும் ... இல்லேன்னா தலை முழுக்க பேன் பிடிச்சுக்கிட்டு போகாதுடா.... அப்புறம் எல்லாரையும் மாதிரி உனக்கும் மொட்டை அடிச்சு விட்டுடுவாங்க” என்று முத்துகுமார் எச்சரிக்கை செய்ய...

“ ம்ம் சரி குடு” என்று வாங்கிக்கொண்டவன் தனது பச்சைநிற பேன்டில் பாக்கெட்டை தேடி அது இல்லாமல் போகவே நிமிர்ந்து பார்த்து முத்துகுமாரை முறைத்தான்.... “ இந்த டிரஸ் வேனாம்னு சொன்னேனே முத்து” என்று கர்ஜித்தவனை கண்டு இரண்டடி பின்னால் போனாள் பவித்ரா..

முத்துகுமார் இலகுவாக அவன் தோளில் கைப்போட்டபடி அங்கிருந்து இறங்கி மரங்களுக்கு நடுவே நடந்துகொண்டே “ இரு சத்யா உனக்கு போலீஸ் யூனிபார்ம் தைக்க சொல்லிருக்கேன்... அது வர்றவரைக்கும் நீ இந்த டிரஸ்தான் போட்டுக்கனும்” என்றான் 


உடனே பரபரப்பான சத்யன் “ ஓ போலீஸ் டிரஸ் ரெடியாயிடுச்சா... வெரிகுட்” என்று கூறிவிட்டு யோசனையுடன் தாடையை சொரிந்தவனை மெதுவாக தள்ளிக்கொண்டே அவனது பிளாக் அருகே வந்துவிட்டான் முத்துகுமார்...

அப்போதுதான் எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தார்ப் போல சத்யன் விலுக்கென்று நிமிர்ந்து அங்கிருந்து ஓட எத்தனிக்க.... முத்துகுமார் அவனை வளைத்துப் பிடித்துக்கொண்டான்... அதை கவனித்த வார்டன் ஓடிவந்து மறுபுறம் பிடித்துக்கொள்ள.....

“ முத்து இன்னிக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னியேடா... என்னை விட்டுட்டுப் போகாதடா முத்து” என்று முத்துவின் சட்டை காலரைப் பிடித்துக்கொண்டு சத்யன் கெஞ்ச.....

“ நாளைக்கு வந்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் சத்யா..... இன்னிக்கு நான் நம்ம மதுமிதா பாப்பாவ ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்டா... நாளைக்கு கண்டிப்பா வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுறேன் சத்யா” என்று குழந்தைக்கு சொல்வதுபோல் முத்துகுமார் சொல்ல...

சத்யன் அதை கேட்கும் நிலையில் இல்லை... முத்துவின் சட்டை காலரை பிய்த்து எடுப்பவன் போல் பற்றிக்கொண்டு “ முடியாது நான் இங்க இருக்கமாட்டேன் என்னை கூட்டிட்டுப் போடா” என்று மூர்க்கமாய் கத்தியவனை வார்டன்கள் முத்துகுமாரிடம் இருந்து பிய்த்து இழுத்துச்சென்று வார்டின் கதவைத் திறந்து சத்யனை உள்ளே தள்ளி கதவை அடைத்து இரும்பு பூட்டு ஒன்றால் பூட்டினர்...

சத்யன் கம்பியைப் பிடித்துக்கொண்டு கத்த..... வார்டன் ஒருவன் கையிலிருந்த பிரம்பால் கம்பியைப் பற்றியிருந்த சத்யனின் கையில் ஒங்கி அடித்து “ போடா உள்ள” என்று அதட்ட... சத்யன் வலியுடன் கைகளை எடுத்துக்கொண்டு முத்துகுமாரைப் பார்த்தான்.... எவ்வளவு வலியென்றாலும் அழமாட்டான் சத்யன் .... வீம்பாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்ப்பான்.... அதனாலேயே வார்டன்களுக்கு சத்யனை கண்டால் கூடுதல் ஆத்திரம் வரும்....

முத்து வேதனையுடன் வார்டனைப் பார்க்க ... அவனோ “ என்ன சார் நீங்க? டிபார்ட்மெண்ட்ல இருக்கீங்க இதுக்கெல்லாம் கலங்கிகிட்டு.... நாங்க என்ன சார் பண்றது அடங்கலைன்னா அடிச்சு தான் ஆகனும்” என்று சொல்ல...

முத்துகுமார் இயலாமையுடன் கர்சீப்பால் கண்களை ஒற்றிக்கொண்டு அங்கிருந்து அகன்றான்....

பவித்ரா வழக்கம் போல அழுதுகொண்ட அமர்ந்திருந்தாள் .... முத்துகுமாரைப் பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்...

“ வா பவித்ரா உன்னை வீட்டுல விட்டுட்டுப் போறேன்” என்று முன்னால் நடந்தான் முத்துகுமார்

“ பரவாயில்லைங்க சார் நான் ஆட்டோவில போய்கிறேன்... நீங்க பாப்பாவை ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகனும்னு சொன்னீங்களே” என்றாள் பவித்ரா...

“ இல்ல சத்யனுக்காக அப்படி சொன்னேன்... மதுமிதா ஸ்கூலுக்குப் போயிருக்கா பவித்ரா” என்றபடி தனது ஜீப் பார்க் செய்திருந்த இடத்துக்குப் போய் வண்டியில் ஏறிக்கொண்டு எட்டி கைநீட்டி பவித்ராவுக்கு கதவை திறந்து விட்டான்...

அவள் ஏறியமர்ந்ததும் ஜீப் கிளம்பியது.... முத்துகுமார் பவித்ரா இருவரின் கண்களிலும் கண்ணீர்.... இருவரின் மனதிலும் சத்யனைப் பற்றிய எண்ணங்கள்.... தொடர்ந்தது பயணம்



“ இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும்.....

“ இந்த பூமி சுற்றும்...

“ ஆனால் இன்றிருப்போர் யாரும்..

“ அன்றிருக்கப் போவதில்லை!



“ இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும்.....

“ காற்று வீசும்...

“ ஆனால் இன்று சுவாசிப்போர் யாரும்...

“ அன்று சுவாசிக்கப் போவதில்லை!



“ இன்று இருக்கும் அந்த ஒருவன்...

“ நாளை இல்லாமல் போவான்....

“ நம் வாழ்வே நிலையற்றது எனும்போது..

“ பைத்தியங்கள் என்று இவர்களை

“ தனியாகப் பிரித்து வைக்க நாம் யார்?...

முத்துகுமாரின் ஜீப் மருத்துவமனையை விட்டு வெளியேறி சந்தடி நிறைந்த சாலையில் மெதுவாக ஊர்ந்தது... முத்துகுமார் இறுகிப்போன முகத்துடன் ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான்....

ஏதோ யோசனையுடன் வெளியே வேடிக்கைப் பார்த்தவாறு வந்த பவித்ரா... முத்துவின் பக்கமாக திரும்பி “ நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்” எனறாள் மொட்டையாக....

புருவங்கள் முடிச்சிட அவள் பக்கமாக திரும்பிய முத்து “ என்ன யோசனை?” என்றான்...

முகத்தை கவிழ்த்த பவித்ரா “ மாமாவை இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே வச்சிருக்குறது? அதனால சீக்கிரமா ஒரு நல்லநாள் பார்த்து மாமாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஊருக்கே போய்டலாம்னு நெனைக்கிறேன் .... அப்பாகிட்டயும் பெரிய மாமாகிட்டயும் இது பத்தி பேசலாம்னு இருக்கேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள்....

சற்றுநேரம் அமைதியாக இருந்த முத்து “ நீ சொல்றது சரிதான் பவித்ரா.... ஆனா ஏற்கனவே சத்யனை ஊர்ல கூட்டிட்டுப் போய் வச்சிருந்து பட்டதெல்லாம் போதாதா? அதுவுமில்லாம உன்னை கண்டாலே எரிஞ்சு விழுறான்... நீ எது சொன்னாலும் கோபப்படுறான்... இதுல கல்யாணம் பண்ணா அவன் உனக்கு கட்டுப் படுவானா?” என்று கேட்க...

பவித்ராவிடம் பதிலில்லை..... “ இவ்வளவு நாள் பொருமையா இருந்துட்ட... இன்னும் கொஞ்சநாள் வெயிட் பவித்ரா..... அதுக்குள்ள கீதாவோட கல்யாணமும் முடிஞ்சிடட்டும்.... சத்யனுக்கு சரியாகிவிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... காத்திருப்போம்” என்ற முத்துவின் கைகள் ஜீப்பை முன்னோக்கி செலுத்த... அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது

அன்று சத்யனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கதறிக்கொண்டிருந்தவனிடம் சத்யனின் பாக்கெட்டுகளில் இருந்த அவனது பொருட்கள் கொண்டு வந்து தரப்பட்டு.... அவனிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டது.......

மனதை திடப்படுத்திக் கொண்டு சத்யனின் பொருட்களை பார்த்தான்..... அதிலிருந்த செல் போனை எடுத்துப் பார்த்தான்.... சற்றுமுன் நடந்த நவீன கொள்ளையைப் பற்றிய மொத்த தகவல்கலும் இருந்தது... எல்லாவற்றையும் அவன் மேலிடத்துக்கு அனுப்பியிருப்பதையும் பார்த்துவிட்டு ‘ இந்த அதிகப்படியான ஆர்வமும் வேகமும் தான் சத்யனின் இந்த நிலைமைக்கு காரணமோ?’ என்று வேதனைப்பட்டான்...

அப்போது சத்யனின் மொபைல் அடித்து அதில் அழகான பெண்ணின் படம் ஒன்று வர..... ஆன்செய்து காதில் வைத்தான்....

“ மாமா இப்போ எங்கயிருக்க? நீ நல்லாருக்க தானே?” என்று ஒரு பெண்ணின் பதட்டமான குரல் கேட்க....

சத்யனின் உறவு போலிருக்கு என்று எண்ணிய முத்து “ சத்யனை ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம் தலையில சின்ன காயம்” என்று மெல்ல சொன்னான்.....

ஆனால் எதிர்முனையில் பதட்டம் அதிகரிக்க “ அய்யோ என்னாச்சு என் மாமாவுக்கு?” என்று அலறியவளை எப்படி சமாதானம் என்று புரியாமல் தவித்து பிறகு மருத்துவமனையின் பெயரை மட்டும் சொல்லி அங்கே வரும்படி கூறிவிட்டு போனை கட் செய்தான்.....

அடுத்த ஒரு மணிநேரத்தில் கிட்டத்தட்ட முத்து செத்து பிழைத்தான்.... உள்ளே எடுத்துச்செல்லப் பட்ட சத்யனைப் பற்றி யாரும் எந்த தகவலும் சொல்லவில்லை..... தவிப்புடன் கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தவனுக்கு துணையாக பவித்ரா வந்து சேர்ந்தாள்....

அவளின் கதறலிலேயே சத்யனுக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று முத்துவுக்கு புரிந்தது.... கதறிக்கொண்டிருந்தவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் விழி பிதுங்கி நின்றான்...

அப்போது ஒரு நர்ஸ் வந்து இவர்களை அழைக்க... முத்துவும் அவனை தொடர்ந்து பவித்ராவும் இடைவெளி விடாமல் படபடவென்று துடிக்கும் இதயத்துடன் டாக்டரின் அறைக்குள் சென்றார்கள்

அவர்களை எதிர் இருக்கையில் அமர சொல்லிவிட்டு “ நீங்க ரெண்டு பேரும் பேஷண்ட்டுக்கு என்ன உறவு?” என்றார்....

“ நான் அவனோட ப்ரண்ட்” என்றான் முத்து .... “ நான் அவருக்கு அத்தை மகள் சார்” என்றாள் பவித்ரா...

“ ம்ம்..... சத்யனோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று டாக்டர் சொல்ல....

உணர்ச்சி கொந்தளிப்பில் முத்து அவரைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்..... பவித்ரா டாக்டரை நன்றியுடன் பார்த்து கண்ணீர் விட்டாள்...

“ இருங்க நான் சொல்லவந்ததை முழுசா கேளுங்க”என்றவர்..... முத்துவிடம் பார்வையை செலுத்தி “ உயிருக்கு ஆபத்தில்லையேத் தவிர அவரோட மூளைப் பகுதியில் பயங்கர அடி விழுந்திருக்கு.... நாங்க இதுவரைக்கும் எடுத்த டெஸ்டுகளில் அவருடைய மூளை இன்னும் உயிரோடதான் இருக்கு... ஆனா அது எந்த நிமிஷம் வேனும்னாலும் செயலிழந்து போகலாம்... அதாவது கோமாவுக்கு போக வாய்ப்பிருக்கு” என்று டாக்டர் சொல்லும்போதே..

“ அய்யோ மாமா............” என்ற அலறலுடன் எழுந்த பவித்ரா நிற்க்க முடியாமல் அப்படியே சரிந்து விழ.... இதை எதிர்பார்க்காத முத்து நிமிடத்தில் சுதாரித்து அவசரமாக அவளை தாங்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டு டாக்டரை கண்ணீருடன் பார்க்க...

அவர் “ நர்ஸ்....... ” என்று உரக்க அழைக்க... உடனே வந்த நர்ஸிடம் “ இந்த பொண்ணை வெளியே கூட்டிட்டுப் போய் படுக்க வைங்க” என்று கூற....

நர்ஸ் உதவியுடன் பவித்ராவை வெளியே இருந்த பெஞ்சில் கிடத்திவிட்டு பவித்ராவின் முகத்தைப் பார்க்க ... வெயிலில் வாடிய கீரைத் தண்டாய் வதங்கி கிடந்தாள்... “ தைரியத்துக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்” என்று நர்ஸிடம் கெஞ்சுதலாய் கேட்டான்....

“ ம்ம் இன்ஜெக்ஷன் போடுறேன் சார்” என்று கூறிவிட்டு “ நீங்க போய் டாக்டரைப் பாருங்க... நான் இவங்களை பார்த்துக்கிறேன்” என்றாள்...

சரியென்று தலையசைத்துவிட்டு மீண்டும் டாக்டரின் அறைக்கு சென்றான்... இருக்கையில் அமர்ந்த முத்து “ இப்போ என்ன செய்றதுங்க சார்?” என்று கேட்க...

“ சத்யனுக்கு உடனடியா தலையில ஆப்ரேஷன் செய்யனும்.... அதுக்கான மருத்துவ வசதிகள் இங்கே இருந்தாலும் ஆப்ரேஷன் செய்ய நியூரோ ஸ்பெஷலிஸ்ட் இங்கே இல்லை.... அவர் வந்து சத்யனுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்குள்ள சத்யன் நிரந்தர கோமாவுக்கு போனால் கூட ஆச்சரியப்பட முடியாது.... அதனால நீங்க சத்யனை ஏதாவது ப்ரைவேட் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி உடனடியா ஆப்ரேஷனுக்கு ஏற்படு பண்றது நல்லது.... ஆப்ரேஷனுக்குப் பிறகு சத்யனின் நினைவுகள் திரும்பி நார்மலாக என்பது சதவிகிதம் வாய்பிருக்கிறது.... பணம் நிறைய செலவாகும்... சத்யனோட பேரன்ட்ஸை வரவழைச்சு கேட்டுகிட்டு ஒரு முடிவு பண்ணுங்க ” என்று டாக்டர் சொல்லி முடிக்க....



முத்துவுக்கு டாக்டர் சொன்ன என்பது சதவிகித வாய்ப்பு மட்டுமே காதில் விழுந்தது... அதன் பிறகு பணம் பற்றி கூறியதை அலட்சியமாக உதறினான்.... ஏனோ தெரியவில்லை இதுவரை நட்பு உறவு என்று யாரிடமும் ஒட்டி உறவாடாத முத்துவுக்கு சத்யனை மட்டும் ரொம்பவே பிடித்து போயிருந்தது சத்யனின் மீதான நட்பையும் மீறி ஒரு சகோதர பாசம் உருவாகியிருந்தது....

சத்யனை காப்பாற்றி அவனை முன்புபோல சிரிப்பும் சந்தோஷமுமாக நடமாட வைப்பேன் என்ற உறுதியுடன் எழுந்தவன் “ பணத்தைப் பத்தி கவலை இல்லை சத்யனை பாதுகாப்பாக கொண்டு போக மட்டும் ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்.... நான் அவனை மீட்டுக் கொண்டு வருவேன்னு நம்பிக்கை இருக்கு” என்று தைரியமாக கூறினான்...

டாக்டர் எழுந்துவந்து அவன் தோளில் கைவைத்து “ நீங்க நண்பனா கிடைக்க சத்யன் கொடுத்து வச்சிருக்கனும்... நாங்க சத்யனை பாதுகாப்பா கொண்டு போக ஏற்பாடு பண்றோம் நீங்க தயாரா இருங்க” என்றவர்... மூளை சம்மந்தப்பட்ட வைத்தியத்துக்கு சிறந்தது என்று ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச்சொல்லி அங்கே அழைத்துச்செல்லுமாறு கூறிவிட்டு சென்றார்....

முத்து வெளியே வந்தான்... பவித்ரா பெஞ்சில் சுருண்டு கிடந்து அழுதுகொண்டிருந்தாள்.... முத்து அவளருகே போய் நிற்க்கவும் எழுந்து அமர்ந்து துப்பட்டாவால் முகத்தை துடைத்துக்கொண்டு “ டாக்டர் என்ன சொல்றார்” என்று கலங்கிய குரலில் கேட்டாள்..


No comments:

Post a Comment