Saturday, December 19, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 4


அவளுக்கு சற்று தள்ளி அமர்ந்த முத்து டாக்டர் கூறிய மொத்த விபரங்களையும் கூறினான்.... கவனமாக கேட்ட பவித்ரா “ அப்போ நான் ஊருக்கு தகவல் சொல்லி எல்லாரையும் உடனே கிளம்பி வரச்சொல்றேன்” என்று தனது மொபைலை எடுத்து நம்பர்களை அழுத்த...

முத்து எழுந்து சற்றுத்தள்ளி போய் நின்றுகொண்டு தனது மொபைலை ஆன் செய்து.... சத்யன் உயிரைக்கொடுத்து போராடிய அந்த போராட்டம் எந்தளவுக்கு வெற்றிப்பெற்றது என்று ஏட்டுவுக்கு போன் செய்து விசாரித்தான்...

அத்தனை பேரையும் கைது செய்து மொத்தத்தையும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தகவல் சொன்னார் ஏட்டு.....

சத்யன் மாட்டிக்கொண்டதுக்கு காரணம் லாரியை தொடர்ந்து சென்றதை லாரி டிரைவர் கவனித்து விட்டு தனது முதலாளிக்கு செல்லில் தகவல் சொல்ல... அவர்கள் உடனே பைக்கில் வந்து சத்யனை தாக்கியுள்ளார்கள் என்ற தகவலையும் சேர்த்து சொன்னார் ஏட்டு...

அடுத்து செய்யவேண்டிய வற்றை உத்தரவிட்ட முத்து ...

சத்யனின் நிலைமையை சொல்லிவிட்டு போனை கட் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ... பவித்ராவிடம் வந்தான்...

அவள் முகத்தில் ஓடிய கண்ணீர் அருவிகள் இன்னும் காயவில்லை.... இவனைப் பார்த்ததும் “ பெரிய மாமாவுக்கு சொல்லிட்டேன்... எல்லாரும் பயங்கரமா கத்தி அழுவுறாங்க... இப்பவே கிளம்பி வர்றதா சொல்லிருக்காங்க” என்றாள்....

சரியென்று தலையசைத்தவன் “ நீங்க இங்கேயே இருங்க.. நான் போய் ஆம்புலன்ஸ் தயாரா இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு வெளியே போனவன் கொஞ்சநேரத்தில் திரும்பி வந்து “ ஆம்புலன்ஸ் ரெடியாத்தான் நிக்குது” என்றான்

அப்போது சத்யனை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார்கள்... சத்யனின் உடைகள் களையப்பட்டு பச்சைநிற துணி போர்த்தப்பட்டிருந்தது.... தலையில் பிரமாண்டமான கட்டு... கட்டையும் மீறி வழிந்த உதிரம்.... மூக்கிலும் வாயிலும் சொருகப்பட்டிருந்த டியூப்கள்.... அவன் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசத்திற்கான கருவிகள்.... முத்துவுக்கு நெஞ்சை அடைத்தது.. அவசரமாக திரும்பி பவித்ராவைப் பார்த்தான்...

சத்யனை அந்த கோலத்தில் பார்த்து திக்பிரமை பிடித்து அப்படியே நின்றிருந்தாலும் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.....

தன்னால் அவள் கண்ணீரை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற இயலாமையுடன்.... ஊழியர்களுடன் ஸ்ட்ரெச்சரை தள்ளியபடி ஆம்புலன்ஸ் நோக்கி போனான் முத்து...

அந்த பிரபல மருத்துவமனையின் நுழைவு வாயிலில் கால் வைப்பதற்கு முன்பே ஒரு பெரியத் தொகையை கட்டச் சொல்லி சிரித்த முகமாக தேன் சிந்தும் ஆங்கிலத்தில் கூறினாள் ரிசப்சனிஸ்ட்....

முத்து தனது வங்கி கார்டை கொடுத்து அதிலிருக்கும் பணம் மொத்தத்தையும் கணக்கில் வைத்துக்கொள்ளுமாறு கூற... அடுத்த சில நிமிடங்களில் முத்துவின் சேமிப்பு ஐந்து லட்சமும் மருத்துவமனையின் கணக்கில் சேர்க்கப்பட்டது....

பணம் கட்டியாகிவிட்டது என்றதும்தான் சத்யன் மேல் கைவைத்தனர் டாக்டர்கள்...

அதன்பின் விடியவிடிய சத்யனுக்கு ஆப்ரேஷன் நடந்தது.... இது ரொம்ப சிக்கலான கேஸ் அதனால் மொத்த மருத்துவ செலவுத்தொகை கால் கோடி வரை வரும் என்று முத்துவை அழைத்து தகவல் சொன்னார்கள்.....

சரியென்று ஒத்துக்கொண்ட முத்து பவித்ராவிடம் தகவல் சொல்லிவிட்டு தனது வீட்டுக்கு வந்து மனைவியின் நகைகளை அள்ளிக்கொண்டு அவனுக்கு தெரிந்த சேட் வட்டிக்கடை போய் அந்த அதிகாலை நேரத்தில் அவரை எழுப்பி நகைகளை அடமானம் வைத்து பணத்தோடு வந்து மறுபடியும் மருத்துவமனையில் கட்டினான்...

காலை விடிந்ததும் வந்து சேர்ந்தனர் சத்யனின் குடும்பத்தினர்... பாவம் சென்னையில் வைத்தியத்தின் விலை தெரியாமல் அவர் அடுத்து வந்திருந்த சில ஆயிரங்கள் கைச்செலவுக்கு தான் ஆனது.... அந்த இரவில் நிலத்தையும் வீட்டையுமா விற்க்கமுடியும்,,, வீட்டில் இருந்ததை எடுத்து வந்திருந்தார்கள்....

ஆளுக்கொரு பக்கமாக சுருண்டு விழுந்து கதறிக்கொண்டிருந்தவர்களுக்கு எந்த ஆறுதலும் சொல்லமுடியாமல் கலங்கிப்போய் அமர்ந்திருந்தான் முத்து...

சத்யன் ஆப்ரேஷனுக்கு முத்து பணம் கட்டிவிட்ட விஷயத்தை பவித்ரா மூலமாக தெரிந்துகொண்ட சத்யனின் அப்பா செல்வம் க்ணீருடன் தடாலென்று முத்துவின் கால்களில் விழுந்தார்

பதறிப்போய் அவரை தூக்கிய முத்து “ எனக்கு கூடப்பிறந்தவங்க யாருமில்லைங்க ... ஏனோ சத்யனைப் பார்த்ததும் ப்ரண்ட் என்ற உணர்வையும் மீறி என் தம்பி இவன்னு தோனுச்சு... இப்போ என் தம்பிக்குத் தான் நான் செய்திருக்கேன்....” என்றான்

அன்று பிற்பகல் நான்கு மணிக்கு சீப் டாக்டரின் அறைக்கு அழைக்கப்பட்டனர் முத்துவும் சத்யனின் அப்பா செல்வமும்.....

ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டதாக டாக்டர் சொல்ல... இருவருக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது.... இன்னும் ஏழு நாட்கள் வரை ICU வில் இருக்க வேண்டும்... அதன் பிறகு வார்டுக்கு மாற்றி விடலாம் என்றார் டாக்டர்...

அதன்பிறகு தான் அங்கிருந்தவர்களுக்கு பசி என்ற உணர்வே வந்தது.... முத்து எல்லோரையும் வற்புறுத்தி அழைத்துச்சென்று கேன்டீனில் உணவு வாங்கி கொடுத்தான்....

எல்லோரும் ஓரளவுக்கு மனதை திடப்படுத்திக் கொண்டு அரைகுறையாக சாப்பிட்டாலும்... சத்யனின் தாய் ஆதிலட்சுமி தன் மகனை கண்ணால் பார்க்கும் வரை தண்ணீரை கூட தொட மறுத்தாள்....

“ அம்மா நானும் உங்க மகன்தான்... எனக்கும் சத்யன் மேல அக்கரையிருக்கு.... அவனை பார்க்கும் போது நீங்க மயங்கி விழாம இருக்கனுமே அதுக்காவதது கொஞ்சம் சாப்பிடுங்கம்மா” என்று முத்து எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்துவிட்டாள் ஆதிலட்சுமி...

அதற்குமேல் முத்து வற்புறுத்தவில்லை... அவனுக்குத் தெரியும் அம்மா என்றாலே இப்படித்தான் என்று.... அவனது அம்மாவும் இப்படித்தான் இவனுக்காக வாரக்கணக்கில் பட்டினி கிடப்பாள்.....

மறுநாள் காலை ஒவ்வொருவராக சத்யனை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.... இன்னும் நினைவு திரும்பாத நிலையில்.... அவனை கண்ணீருடன் கண்டுவிட்டு வந்தனர் அனைவரும்.....

கிட்டத்தட்ட மூன்று நாள் கழித்து வீட்டுக்குப்போய் குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்த முத்து... மருத்துவமனையில் இருவருக்கு மேல் தங்க அனுமதியில்லை என்று சத்யன் குடும்பத்தினரை அவன் பிளாட்டுக்கு அனுப்பி வைத்தான்... காலை மாலை இரவு எனறு மாற்றி மாற்றி இரண்டு பேர் மருத்துவமனையில் இருக்குமாறு ஏற்பாடு செய்தான்....

இவன் பகல் நேரத்தில் தனது அலுவல்களை கவனித்துக்கொண்டு இரவில் மருத்துவமனைக்கு வந்து சத்யனுடன் இருந்தான் ...

ஐந்துநாள் கழித்துதான் சத்யனுக்கு முழுமையாக நினைவு திரும்பியது... எல்லோரையும் அடையாளம் தெரிந்து புன்னகைத்தான்... ஓரிரு வார்த்தைகள் கூட பேசினான்.... முத்துவைப் பார்த்தால் மட்டும் அவன் முகம் பிரகாசமாகிவிடும்... பளிச்சென்று சிரிக்கும் சத்யனை கண்டு சந்தோஷப்பட்ட முத்து தனது அலுவல்களை குறைத்துக்கொண்டு சத்யனுடன் அதிக நேரம் செலவிட்டான்.....

சத்யனை வார்டுக்கு மாற்றியதும் பவித்ராவையும் ஆதிலட்சுமியையும் மட்டும் சென்னையில் விட்டுவிட்டு மற்றவர்கள் நன்னிலம் கிளம்பினார்கள்...


முதலில் சத்யனிடம் மாற்றத்தை கண்டுபிடித்தது பவித்ரா தான்... சத்யனின் பார்வையில் காதல் இல்லை... அன்பாய் ஒரு வார்த்தையில்லை.... அதற்கு பதிலாக எப்போதும் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வமான பேச்சு... பவித்ரா கலக்கத்துடன் முத்துவிடம் சொல்ல.... முத்துவும் சத்யனின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்....

சத்யனின் பேச்சு மொத்தமும் க்ரைம் சம்மந்தப்பட்டதாகவே இருந்தது... செய்திதாளில் படிக்கும் சம்பவங்களைப் பற்றி விலாவாரியாக பேச ஆரம்பித்தான்... நாட்டில் சட்டதிட்டங்கள் சரியில் எனுமளவுக்கு அவன் பேச்சு இருந்தது... தான் மட்டும் போலீஸாக இருந்தால் இப்படி செய்திருப்பேன் அப்படி செய்திருப்பேன் என்று வீரமாக பேச ஆரம்பித்தான்..... அதுபோல் பேசும் தருணங்களில் அவனுக்கு மயக்கம் செலுத்தும் அளவுக்கு பேச்சு வளர்ந்தது...

பவித்ராவைப் பொருத்தவரை அவள் என் அத்தை மகள்... என் உறவுக்காரி என்ற அளவுக்கு மட்டுமே சத்யனின் நடவடிக்கைகள் இருந்தது.... அவளை காதலித்தோம் என்பதைப் பற்றிய எண்ணமே இல்லாதவன் போல் நடந்துகொண்டான்.... அவளிடம் மட்டுமல்ல அம்மா அப்பா இன்னும் மற்ற உறவினர்கள் எல்லோரிடமும் நன்றாக பேசினான்... ஆனால் ஒட்டுதல் இல்லாத பேச்சு... எல்லோரையும் அடையாளம் தெரிந்துகொண்டான்... ஆனால் அவர்களை மனதில் பதிய வைக்க மறுத்தான்.... வந்தாயா? வா... போறயா? போ.. என்றான்...

அவன் நினைவுகள் மொத்தத்தையும் ஆக்கிரமித்தது அவன் கண்டுபிடித்த அந்த கொள்ளை கூட்டம் மட்டும் தான்...

சத்யனின் இந்த மாற்றங்கள் கண்டு முத்து அதிர்ந்து போனான்... டாக்டரை அனுகி விளக்கம் கேட்டபோது.... “ அறுவைசிகிச்சையில் எந்த குறைபாடுகளும் இல்லை.. அது நூறுசதம் வெற்றிதான்.... சத்யனுக்கு இப்போ வந்திருப்பது மனம் சம்மந்தப்பட்டது.... இதுக்கு தனியாக ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியா போய்விடும்” என்று கூறிவிட்டு சைகாற்றிஸ்ட் ஒருவரை வரவழைத்தார்கள்....

அவர் தொடர்ச்சியாக கொடுத்த ட்ரீட்மெண்ட்க்குப் பிறகு கண்டுபிடித்து சொன்னது இதுதான் “ சாதரணமா ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்து... ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த மிக சாதரணமான சத்யனுக்குள்ளே போலீசார் போல துப்பறிவது கண்டுபிடிப்பது போன்ற ஆர்வம் இருந்திருக்கு.... அதற்கேற்றார் போல நீங்களும் அவருக்கு மிகப்பெரிய பொருப்பை கொடுக்கவும் அதை சக்ஸஸ் பண்ணிய சத்யனுக்கு.... தன்னால் எதுவும் முடியும்... தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு எண்ணம் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சு போச்சு.... அதன் விளைவுகள் தான் இது ... இது ஒருவகையில் மனோவியாதி தான்.. தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டா நாளைடைவில் குணமடைந்து விடும்” என்று விளக்கமாக சொன்னார்....

ஆனால் எந்த முன்னேற்றமும் இன்றி சத்யன் அப்படியே இருக்க... சலிக்காமல் தனது ஒற்றை மகனுக்காக நிலங்களை விற்று செலவு செய்தார் செல்வம்... முத்துவின் பணத்தை அவனிடம் கொடுக்க அவன் வாங்கிக்கொள்ள மறுத்ததும் அவனது வங்கி கணக்கில் செலுத்தினார்...

இனிமேலும் வைத்தியம் தேவையில்லை... வீட்டுக்கு அழைத்துச்சென்று அவன் மனதை மாற்றும் விஷயங்களில் கவனத்தை திருப்புங்கள் என்று டாக்டர் கூறிவிட இரண்டு மாதம் கழித்து சத்யன் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான்....

ப்ளாட்டில் எப்போதும் போலவே நார்மலாக இருப்பவன்.. அக்கம்பக்கம் ஏதாவது பிரச்சினை என்றால் தேவையில்லாமல் ஆஜரானான்... சில சமயம் இவனது இந்த நடவடிக்கைகளால் பிரச்சனை பெருசானது... வீட்டில் இருப்பவர்கள் அசரும் சமயம் வீட்டைவிட்டு வெளியேறும் சத்யன் வெளியிடங்களுக்குச் சென்று நியாயம் கேட்கிறேன் என்று வம்பை விலைக்கு வாங்கி வந்தான்... சில இடங்களில் அடிதடி கூட நடந்து ரத்த காயத்துடன் வீடு வருவான்..

இங்கே தான் இப்படி செய்கிறானே என்று ஊருக்கு அழைத்துச்சென்றார்கள்... அங்கேயும் நிலத்தில் வேலை செய்த கூலியாட்களுக்க சரியாக சம்பளம் தரவில்லை என்று ஒரு பணக்காரனிடம் சண்டைக்கு போய் அது கலவரமாக வெடிக்க... சத்யன் மனநோயாளி என்பது மாறி ... சத்யன் பைத்தியக்காரன் என்றானான்....




அடிக்கடி முத்து சென்று பார்த்துவிட்டு வந்தான்... சத்யனின் நிலைமை மோசமானதை கண்டு செல்வத்தை அழைத்துக்கொண்டு மறுபடியும் அவனுக்கு மனஇயல் வைத்தியம் செய்த மருத்துவரை அனுகி ஆலோசனை கேட்டபோது அவர் கூறிய யோசனைதான் சத்யனை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்ப்பது என்று....

“ கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் ட்ரீட்மெண்ட் கம்மியா இருக்கும்னு நாம நினைச்சாலும்.. சில நோயாளிகள் அங்கே போய்தான் குணமாவாங்க,, அங்கே இருக்கும் சூழ்நிலை... அடக்குமுறை இன்னும் அங்கிருக்கும் பிற விஷயங்கள் சில நோயாளிகளை மருந்தவிட வேகமாக குணப்படுத்தும்... அதாவது அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்ற பழமொழி இருக்கே அந்த மாதிரி... வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளை கட்டுப்பாடு மிகுந்த ஹாஸ்டலில் தங்கவச்சு படிக்கை வைக்கிற மாதிரி தான் இதுவும்... நமக்கு நம்ம பிள்ளை முக்கியம் அவ்வளவுதான்.... சத்யன் விஷயத்துல அவனோட அதிகமான தன்னம்பிக்கையும்,, தைரியமும் தான் இந்த நிலைமைக்கு காரணமே,, தன்னாலயும் புரிந்துகொள்ள முடியாத... சமாளிக்க முடியாத... எதுவென்றே தெரியாத பலவிஷயங்கள் இருக்குன்னு அவனுக்கு தெரிய வரும்போது சத்யனின் மனசு இப்போதைய நிலையிலிருந்து மாற வாய்ப்பிருக்கிறது ... அதனால நீங்க அவனை அங்கே சேர்ப்பது தான் நல்லது... அவனது மனநிலையில் மாற்றம் தெரியும் போது உடனே என்னிடம் கூட்டிட்டு வாங்க.. அதன் பிறகு என் வேலை சுலபமாக முடியும்” என்று டாக்டர் தெளிவாக எடுத்து கூறியதும் ..

அவர் கருத்தில் உள்ள நியாயமும் நிதர்சனமும் புரிய செல்வமும் முத்துவும் குடும்பத்தினரின் பயங்கர கதறலுக்கிடையே சத்யனை இங்கே கொண்டு வந்து அனுமதித்தார்கள்....

அதன் பின் முத்து தினமும் தவறாமல் வந்து சத்யனை பார்த்துவிட்டு செல்வான்... பலரையும் சிபாரிசு பிடித்து சத்யனுக்கு மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுக்க அனுமதி வாங்கியிருந்தான்.... செல்வம் ஊருக்குப் போய் தன் மகளுடன் இருக்க... ஆதி பவித்ராவுடன் சென்னை பிளாட்டிலேயே தங்கிவிட்டாள்... பவித்ரா மட்டும் சாப்பாடு எடுத்து வந்தாள் என்றால் அந்த உணவை சாப்பிட வைப்பதற்குள் பெரும் போராட்டமாக இருக்கும்....

அவளது நிலையை உணர்ந்த முத்து தினமும் மதிய உணவுக்கு பவித்ரா உணவு எடுத்துவரும் வேளைக்கு மருத்துவமனைக்கே வந்துவிடுவான்... எப்படி எப்படியோ பேசி சமாளித்து சத்யனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தான் போவான்,, இன்னும் சத்யனுக்கு சவரம் செய்வது... மாதத்தில் இருமுறை எண்ணை தேய்த்து குளிக்க வைப்பது என்று சகலமும் முத்துதான்.... சத்யன் மனநோயாளியாக இருந்தாலும் தனது கம்பீரத்தை தொலைக்காதவாறு பார்த்துக்கொண்டான்... அவனுக்குப்பிடித்த உணவுவகைகள்... இன்னும் என்னென்ன தேவையோ எல்லாம் வாங்கிவந்து கொடுப்பான்... தன்னால்தான் சத்யனுக்கு இந்த நிலைமை என்ற குற்றவுணர்வு மாறி சத்யனை தன் குழந்தையாகவே பார்க்க ஆரம்பித்தான் முத்து

ஆதிலட்சுமி வாரம் ஒருமுறை மட்டும் வந்து தன் மகனை பார்த்துவிட்டு போவாள்... அவளுக்கு கம்பீரமான தனது மகனை அந்தநிலையில் பார்க்க பொறுக்காத... என் மகன் குணமடைவான் என்ற நம்பிக்கையை வைராக்கியமாக நெஞ்சில் வளர்த்துக்கொண்டு கோயில் கோயிலாக வலம்வருவாள்.... அவள் அடிமனதில் தனது அண்ணனின் அகாலமரணம் தான் தன் குடும்பத்தை இப்படி பழிவாங்குகிறது என்ற எண்ணமும் உண்டு... ஆனால் செல்வத்துக்கு பயந்து வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள்... திருமணநாள் வரை மவனமாக இருந்து கடைசியில் நம்பிக்கை துரோகம் செய்த ஜானகியை வெறுத்தாலும் அதையும் மறைத்து வைத்தாள்...

இங்கே அனுமதிக்கப்பட்டப் பிறகு சத்யனின் மூர்க்கத்தனம் குறைந்ததே தவிர அடாவடித்தனம் குறையவில்லை.... இதோ இப்படியே ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டது...

“ சார் வீடு வந்துருச்சு” என்ற பவித்ராவின் குரல்கேட்டு நடப்புக்கு வந்தான் முத்து .....


ஜீப்பை அப்பார்ட்மெண்ட்டில் நிறுத்தி பவித்ரா இறங்கியதும் அவள் பையை எடுத்துக்கொடுத்தவன் “ பவித்ரா வரும்போ நீ சொன்ன விஷயத்தை இப்போதைக்கு யார்கிட்டயும் சொல்லாத... சத்யன் இன்னும் கொஞ்சம் தெளிவானதும் பெரியவங்க கிட்ட பேசலாம்” என்று முத்து மெல்லிய குரலில் கூறினான்....

இவர் குரல் ஏன் இப்படி சுரத்தே இல்லாமல் இருக்கு என்று யோசித்தபடி சரியென்று தலையசைத்த பவித்ரா “ நாளைக்கு சனிக்கிழமை தானே பாப்பாவையும் கூட்டிட்டு வர்றீங்களா” என்று கேட்க....

“ ம் சரி கூட்டிட்டு வர்றேன் ” என்றுவிட்டு ஜீப்பை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்....

சத்யனின் அப்பார்ட்மெண்ட்டுக்கு போன பவித்ராவிடம் எதிர் பிளாட் ஜயர் வீட்டு பெண்மணி சாவை எடுத்துவந்து கொடுத்து “ இன்னிக்கு பிரதோஷம்டி பவித்ரா.. உன் அத்தை கோயிலுக்கு போயிருக்கா... உன்கிட்ட சாவியை கொடுக்க சொன்னா” என்றாள்

பவித்ராவுக்கு தெரியும் என்பதால் மவுனமாக சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே போய் சோர்ந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்தாள்....

நாளுக்கு நாள் சத்யனின் நடவடிக்கை அவளை ரொம்பவே பயமுறுத்தியது... இப்போதெல்லாம் பேச்சிலும் நடத்தையிலும் தெளிவிருந்தாலும் தன்மீது துளியளவு கூட காதலே இல்லை என்று அவளுக்கு புரிந்தது.....

இப்போது அவள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது “ ஒரு துப்பறிந்து கண்டுபிடித்த வேலை மனதில் ஆழமாக பதிந்த அளவுக்கு கூட என் நினைவுகளும் என்மீதான காதலும் ஆழமாக பதியவில்லையா?.... உண்மையான காதலாக இருந்தால் எல்லாவற்றையும் தெளிவாக பேசும் மாமா என்னிடம் மட்டும் ஏன் காதலாக பேசுவதில்லை? அப்படியானால் இது எந்த மாதிரியான காதல்... அல்லது காதலே இல்லையா? வெறும் அத்தைமகள் மாமன் மகன் என்ற உறவினால் ஏற்ப்பட்ட கவர்ச்சியா? ” பவித்ரா தலையைப் பிடித்துக்கொண்டாள்....

ஆதிலட்சுமி கோவிலில் இருந்து வந்ததும் பவித்ராவின் நெற்றியில் விபூதியை வைத்துவிட்டு “ நாளைக்கு போகும்போது இந்த விபூதியை எடுத்துட்டுப் போய் சத்யன் நெற்றியில் வச்சுவிடு.... இன்னிக்கு கோயில்ல சாமி கும்பிட்டு விட்டு வரும்போது பிச்சைகாரர்கள் கூட்டத்தில் ஒரு வயசான சாமியாரை பார்த்தேன் பவித்ரா....” என்று ஆதி சொல்ல ..

பவித்ரா பரபரப்புடன் “ அவர் ஏதாவது சொன்னாரா அத்தை” என்றாள்

“ ம்ம் ... நான் தட்டில காசு போட்டதும்... அவராவே என்கிட்ட ‘ இன்னும் நாற்பத்தெட்டு நாள்ள உன்னோட பிரச்சனைகளுக்கு ஒரு வழிபிறக்கும்னு சொன்னார் பவித்ரா... அதுவரைக்கும் தினமும் தவறாமல் குருபகவானுக்கு விளக்கேத்த சொன்னார்... நான் சரின்னு சொல்லிட்டு வந்தேன் ” என்றவளின் குரலில் ஒரு எதிர்பார்ப்பு...

அந்த வார்த்தைகள் பவித்ராவுக்கும் நிம்மதியை கொடுத்தது...

மறுநாள் காலை முத்துகுமாரின் மகள் மதுமிதாவை கானும் பரபரப்புடனேயே எழுந்தாள் பவித்ரா.... நான்கு வயது குழந்தை இந்த வயதில் தாயை இழந்தது எவ்வளவு பெரிய சோகம் என்று பவித்ராவுக்கு தெரியும்...

அதிலும் முத்துக்குமாரின் மனைவியைப் மிக உயர்ந்த அபிப்ராயம் உண்டு பவித்ராவுக்கு... ஒருமுறை சத்யனைப் பார்க்க வந்த முத்துவின் தாயார் சொல்லித்தான் மதுமிதாவின் அம்மா இறந்தது எல்லோருக்கும் தெரியும்... அதுவரை முத்துகுமார் சொல்லவில்லை...

ஒரு டிராபிக்கான ரோட்டில் ஒரு வயது மகளை மடியில் வைத்துக்கொண்டு பைக்கில் கணவன் பின்னால் அமர்ந்து ஷாப்பிங் செய்யப் போனவள் திரும்பியது என்னவோ உயிரற்று தான்...

பின்னால் வந்த ஆட்டோவிற்கு வழிவிட்டு ஒதுங்கிய முத்துகுமார் பேலன்ஸ் தவறி பைக்கோடு சரிய அவன் மனைவி மடியில் குழந்தையுடன் பைக்கின் அந்தபக்கமாக சரிந்தாள்... அடுத்தடுத்து சீறிவந்த வாகனங்களை எண்ணி மடியிலிருந்த மகளை தூக்கி பைக்குக்கு அந்தபக்கமாக வீசிய அடுத்த நிமிடம் ஒரு ஸ்கூல் பஸ் அவள்மீது ஏறியிறங்கியது... அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் பிரிய ... கண்ணெதிரே துடித்து உயிர்விட்ட மனைவியை கண்டு கதறவும் முடியாமல் மயங்கி சரிந்தான் முத்துகுமார்...

தன் குழந்தையை காப்பாற்றி தன்னுயிரை நீத்த அந்த தாய் பவித்ராவின் மனதில் ரொம்ப உயர்ந்த இடத்தில் இருந்தாள்...


மதுமிதாவுக்கு சப்பாத்தி ரோல் பிடிக்கும் என்று ஒரு முறை முத்துகுமார் சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு தேங்காய் துருவலும் சர்கரையும் கலந்து நடுவில் வைத்து நெய் மணக்க சப்பாத்தி ரோல் தயார் செய்து எடுத்து வைத்துக்கொண்டு சத்யனுக்கும் முத்துகுமாருக்கும் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள் பவித்ரா

மருத்துவமனைக்குள் நுழையும்போதே வழக்கமாக முத்துகுமாரின் ஜீப் நிற்க்கும் இடத்திற்கு தனது பார்வையை திருப்பினாள் பவித்ரா.... அப்போதுதான் ஜீப்பை நிறுத்திவிட்டு மகளை ஒரு கையால் தூக்கிக்கொண்டு இறங்கினான் முத்துகுமார்...

பவித்ரா வேகமாக அவர்களை நெருங்கி “ ஹாய் மது குட்டி” என்று மதுமிதாவை அவன் கையில் இருந்து வாங்க... அவன் மகளை பவித்ராவிடம் கொடுத்துவிட்டு அவளிடமிருந்த பையை இவன் வாங்கிக்கொண்டு முன்னால் நடந்தான்....

மதுமிதாவை கொஞ்சியபடி வந்தவளின் எதிரே ஒரு பச்சை யூனிபார்ம் அணிந்த இளைஞன் மறித்து நின்று “ உன்கிட்ட நோட்டும் பேனாவும் கேட்டு எத்தனை நாளாச்சு? வாங்கிட்டு வந்தியா?” என்று அதிகாரமாக கேட்க....

பவித்ரா சிறு புன்னகையுடன் “ இன்னிக்கு மறக்காம வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று அவனுக்கு கூறிவிட்டு முன்னால் சென்ற முத்துவிடம் இருந்த பையை வாங்கி அதிலிருந்து ஒரு நோட்டும் பேனாவும் எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்தாள்..

நோட்டை வாங்கி புரட்டிப் பார்த்துவிட்டு “ ம்ம் தாங்க்ஸ் சிஸ்டர்.... என்னோட கவிதைகள் சினிமாவில் பாடலாக வந்ததும் உங்களை ஒரு பாடகியாக அறிமுகம் செய்கிறேன்” என்று வசனம் பேசிவிட்டு சென்றான்..

முத்துகுமார் பக்கென்று சிரித்துவிட்டு “ நீ பாட்டு பாடினா கழுதைகளுக்கு எல்லாம் வாய்ப்பு குறைஞ்சிடுமே பவித்ரா?” என்று கேலி செய்ய...

அவன் சிரித்தே பார்த்தறியாத பவித்ராவுக்கு இந்த கேலி புதிதாக தெரிய... பதில் கூறாமல் மெல்ல சிரித்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்...

வழக்கமாக இவர்கள் அமரும் நிழல் குடையின் கீழ் இருந்த சிமிண்ட் பெஞ்சில் பையை வைத்து “ நான்போய் சத்யனை கூட்டிட்டு வர்றேன் பவித்ரா” என்று கூறிவிட்டு வார்டை நோக்கிச்சென்றான்....

பவித்ரா மதுமிதாவை தன் மடியில் வைத்துக்கொண்டு “ பாப்பாவுக்கு பிடிச்சது ஒன்னு ஆன்ட்டி எடுத்துட்டு வந்திருக்கேனே... என்ன சொல்லு பார்க்கலாம்?” என்று கேட்க

பவித்ராவின் மூக்கோடு தன் மூக்கை உரசியபடி “ சப்பாத்தி ரோல் தானே?” என்று கேட்க....

ஆச்சர்யத்துடன் விழிவிரித்த பவித்ரா “ குட்டிம்மாவுக்கு எப்படித்தெரியும்?” என்று கேட்டாள்....

“ அப்பாதான் உங்க வீட்டுல இருக்குற பாட்டிம்மாவுக்கு போன் பண்ணி நீங்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பியாச்சான்னு கேட்டாங்க... அப்புறம் பாட்டிகிட்ட பேச சொல்லி என்கிட்ட போன் குடுத்தாங்க... அப்போ பாட்டிதான் சொன்னாங்க... நீங்க எனக்கு சப்பாத்தி ரோல் செஞ்சி எடுத்துட்டு வர்றீங்கன்னு” என்று நிறுத்தி நிதானமாக தனது மழலையில் கூறிய மதுமிதாவை “ என் செல்லக் கண்ணம்மா” என்று தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் பவித்ரா...

அப்போது சத்யனுடன் முத்துக்குமார் அங்கே வர... மதுமிதா பவித்ராவை விட்டுவிட்டு சத்யனிடம் ஓடிச்சென்று தாவி ஏறினாள்.... சத்யன் குனிந்து அவளைத் தூக்கி தன் தோளில் வைத்துக்கொண்டு “ மது பாப்பா எப்ப வந்தாங்க?” என்று கொஞ்ச...

மதுமிதா சத்யனின் தலைமுடியை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு “ மது பாப்பா இப்பதான் சத்யா பையனை பார்க்க வந்தாங்க” என்று தன் மழலையில் கூறியதும் சத்யன் “ ஏய் மது நான் உனக்கு பையனா?” என்று பொய்யாய் மிரட்டினான்...

எழுந்து வந்து மகளை வாங்கிய முத்துகுமார் “ குட்டிம்மா சித்தப்பாவை பையன்னு சொல்லக்கூடாது.. சித்தப்பான்னு தான் கூப்பிடனும்” என்று மகளுக்கு சொல்ல....

“ விடு முத்து நம்ம மது தானே....” என்ற சத்யன் மதுவிடம் “ நீ என்னை பையன்னே கூப்பிடுமா” என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தான்..


பவித்ரா முதலில் குழந்தைக்கு ஒரு தட்டில் சப்பாத்தி ரோலை வைத்துக் கொடுத்துவிட்டு வேறு ஒரு தட்டில் சாதத்தை போட்டு குழம்பை ஊற்றி முத்துவிடம் கொடுக்க...

முத்து சாதத்தை பிசைந்து சத்யனின் வாயருகே எடுத்துப் போகும்போதே மதுவும் சப்பாத்தி வில்லையை எடுத்து “ சித்தப்பாக்கு நான்தான் பர்ஸ்ட் குடுப்பேன்” என்று சத்யனுக்கு ஊட்டினாள்

மூவரும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு ஒருவழியாக சாப்பிட்டு முடித்தனர்... முத்து வழக்கம் போல சத்யனின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் கூறியவண்ணம் சாப்பாட்டை ஊட்டினான்....

பவித்ரா ஒரு கவரில் ஒரு சாப்பாட்டு பார்சலை போட்டு சத்யனிடம் கொடுத்து “ மாமா இதுல வெஜிடபிள் ரைஸ் இருக்கு... நைட் இதையே சாப்பிடு மாமா.. அவங்க குடுக்குறது சாப்பிட வேனாம்” என்று கெஞ்சினாள்...

“ ம்ம் எனக்கும் அந்த சாப்பாடு பிடிக்கலை” என்றபடி பார்சலை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டான்

அப்போது ஒரு வெள்ளையான வடநாட்டு இளைஞன் வந்து இவர்கள் அருகில் நின்றான்.. சத்யனைப் பார்த்து “ சத்யா அண்ணே சோறு போடு” என்று சொன்ன வார்த்தையையே திரும்ப திரும்ப கூற....

சத்யன் பவித்ரா கொடுத்த பார்சலை அவனிடம் கொடுத்துவிட்டு... “ இதோ இவங்க பேரு பவித்ரா” என்று மட்டும் தான் சொன்னான்...

உடனே அந்த இளைஞன் “ பவித்ரா அக்கா சோறு போடு” என்று அதையே திரும்ப திரும்ப சொல்ல... சத்யன் அடுத்ததாக மதுமிதாவின் பெயரை சொன்னதும்... “ மதுமிதா அக்கா சோறு போடு” என்று ஆரம்பித்தான்...

பெரியவன் ஒருவன் தன்னை அக்கா என்று கூப்பிட்டதும் மதுமிதாவுக்கு கொண்டாட்டம் தாங்கவில்லை... கைத்தட்டி சிரித்தாள்....

அந்த இளைஞன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட... “ இவன் நேத்துதான் வந்தான் முத்து... யார் பெயரை சொல்றோமோ அவங்க பெயரை அடுத்த பெயர் ஞாபகம் வரும்வரை ஞாபகம் வச்சிகிட்டு சோறு போடுன்னு சொல்லுவான் .. வேற எதுவுமே பேசமாட்டான்” என்று சத்யன் அந்த இளைஞனைப் பற்றி முத்துவிடம் கூறினான்...

முத்து சாப்பிட்டபடி அவன் சொல்வதற்கு தலையசைத்துக் கொண்டிருந்தான்....

“ அப்புறம் முத்து ஒரு முக்கியமான விஷயம்... இன்னிக்கு என்னைய வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னியே?...... என்னால இன்னிக்கு வரமுடியாது... ஏன்னா இங்கே மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் இருபது பேர் இங்கே இருக்குறவங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்க வர்றாங்களாம்... அவங்க பாதுகாப்பு தங்கும் வசதி இதையெல்லாம் நான் கவனிக்க வேண்டியிருக்கு... அதனால ஒரு மாசத்துக்கு நான் ரொம்ப பிஸி... என்னால வீட்டுக்கு வரமுடியாது” என்று பந்தாவாக கூற...

‘ அப்பா இன்னிக்கு இவனை உள்ள அனுப்ப போராடவேண்டியது இல்லை’ என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டான் முத்து...

“ டாக்டர்ஸ் பாதுகாப்பு விஷயமா அடிக்கடி உன்கிட்ட செல்லுல பேசனும் முத்து.. எனக்கு உடனே ஒரு செல்போன் ஏற்பாடு பண்ணி குடு” என்று சத்யன் ஆரம்பிக்க...

“ இவங்களை வீட்டுல விட்டுட்டு செல்போன் வித் சிம்கார்டும் சேர்த்து வாங்கிட்டு வர்றேன் சத்யா” என்று சத்யனை சரி கட்டினான் ....

முத்துவும் சாப்பிட்டதும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கழுவுவதற்காக போனாள் பவித்ரா ... பக்கத்தில் இருந்த குழாயில் தண்ணிர் வராமல் சற்று தொலைவில் இருந்த குழாயைத் தேடிச்சென்றாள்

முத்து சீப்பை எடுத்து சத்யனின் தலைமடியை வாரினான்... அவன் மகள் அதைப் பார்த்து சிரிக்க... மகளை செல்லமாக முறைத்தபடி சத்யனுக்கு தலைவாரினான்

அப்போது பவித்ராவின் வீல் என்ற அலறல் கேட்டு சத்யனையும் மகளையும் அப்படியே விட்டுவிட்டு சத்தம் வந்த இடத்துக்கு ஓடியவன் அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்...


கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயது ஆள் ஒருத்தன் தனது பச்சைநிற பேன்ட்டை கீழே இறக்கிவிட்டு தனது உறுப்பைப் கையில் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்க... அவனுக்கு எதிரே கண்களை இறுக மூடி அதிலிருந்து கண்ணீர் வழிய.. உதடுகள் துடிக்க உடம்பெல்லாம் உதறலெடுக்க இறுகிப் போய் நின்றிருந்தாள் பவித்ரா....

முத்துவுக்கு அவளை அப்படிப் பார்த்ததும் நெஞ்சம் துடிக்க அந்த ஆளின் இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டான்... அவன் அலறியடித்துக்கொண்டு பத்தடி தள்ளி விழுந்து மீண்டும் எழுந்து ஓட ஆரம்பித்தான்...

முத்து வேகமாக பவித்ராவின் அருகில் சென்று... அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து பதட்டத்தை தணிவிக்க முயன்றான் .... அவளோ ஒருமாதிரி பெருங்குரலெடுத்து அலறியபடி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்....

அவளை விடாமல் அணைத்தபடி “ பவி பவி நான்தான் முத்து.. அவனை அடிச்சு விரட்டிட்டேன் பவி... கண்ணைத்திறந்து பாரும்மா” என்று பலவாறாக பேசி அவளை தெளிவிக்க அவன் செய்த முயற்சியின் பலனாக அவள் மெல்ல துவண்டு மயங்கி அவன் கைகளுக்குள்ளேயே சரிந்தாள்....

அவள் கீழே விழாத வாறு கையில் தாங்கியபடி குழாயை திறந்து தண்ணீரைப் பிடித்து பவித்ராவின் முகத்தில் தெளித்தான்... பிறகு தனது கைகுட்டையால் அவள் முகத்தை துடைக்க...

பவித்ரா மெல்ல மயக்கம் தெளிந்தாள்... ஆனால் அருவருப்பில் அவள் உடல் பதறியது... ஒவ்வாமை போல் சற்றுமுன் மதுவுடன் சாப்பிட்ட சப்பாத்தியை வாந்தியாக எடுத்தாள்...

முத்துவுக்கு அவள் மனநிலை புரிந்தது... “ வேண்டாம் பவி அதைப்பற்றியே யோசிக்காதே... மறந்துடும்மா” என்று அவளுக்கு ஆறுதல் கூறியவாறு மீண்டும் தண்ணீரை பிடித்து அவள் முகத்தை கழுவிட்டு அணைப்பை விடாமலேயே அங்கிருந்து அழைத்து வந்தான்...

சத்யனும் மதுவும் விளையாடிக்கொண்டிருக்க... முத்து பவித்ராவை சிமிண்ட் பெஞ்சில் அமர வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்து “ கொஞ்சம் குடி பவித்ரா” என்றான்...

பிடிவாதமாக தலையசைத்து மறுத்தவளின் பார்வை சத்யனிடம் போனது... என்ன நடந்தது என்றே உணராமல் மதுவிடம் கதையளந்து கொண்டிருந்தான்....



‘ எங்கிருந்தோ வரப்போகும் டாக்டர்களின் பாதுகாப்பு பற்றி யோசிப்பவன்... பக்கத்தில் இருக்கும் என் அலறலை கேட்டு ஓடி வரவில்லையே ஏன்?’ என்று கேள்வி நெஞ்சை குடைய... மறுபடியும் கண்ணீர் விட்டாள்..

அவள் மனதில் ஓடுவதை படித்தது போல “ அவன் நல்லபடியா இருந்திருந்தா இப்படியா இருப்பான்... அவன் நிலையை புரிஞ்சுக்க பவித்ரா” என்று ஆறுதலாக முத்து கூற... மறுப்பாக தலையசைத்தாள் பவித்ரா...

“ வாங்க போகலாம்... என்னால இங்கே இருக்கமுடியலை” என்று முத்துவைப் பார்த்து கெஞ்சினாள்...

அதன்பின் என்ன பேசுவது என்று புரியாமல் மகளை தூக்கிக்கொண்டு சத்யனை கொண்டு போய் வார்டில் விட்டுவிட்டு வந்தான் முத்து...

பவித்ரா எல்லாவற்றையும் எடுத்து பையில் வைத்துக்கொண்டு தயாராக இருந்தாள்... மூவரும் ஜீப்பில் கிளம்பினார்கள்...

பவித்ரா வழியெல்லாம் தூங்கும் மதுவை நெஞ்சோடு அணைத்தபடி வந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை...

சத்யன் அப்பார்ட்மெண்ட்டில் இறக்கிவிட்ட முத்து “ பவித்ரா “ என்று அழைக்க... நின்று திரும்பியவளிடம் மகளை தூக்கி கொடுத்து “ பாப்பாவையும் தூக்கிட்டு போய் வச்சிரு... மனசுக்கு இதமா இருக்கும்... நான் நைட் வந்து மதுவை அழைச்சிட்டுப் போறேன்...” என்று கூறிவிட்டு கிளம்பினான்

அந்த குழந்தைதான் தனக்கு பாதுகாப்பு என்பது போல் நெஞ்சோடு அணைத்தபடி லிப்டில் பயணித்தாள் பவித்ரா.....


" கொஞ்சம் அறிவு...

" கொஞ்சம் திறமை...

" கொஞ்சம் விவேகம்...

" கொஞ்சம் ஆற்றல்..

" நிறைய அழகு...

" இப்படி ஒருப் பெண்ணை உலகின்...

" இறுதிப்பகுதியில் கொண்டு விட்டாலும்..

" அவள் நிச்சயம் ஜெயிப்பாள்!


No comments:

Post a Comment