Friday, December 25, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 19

ஒரு கட்டம் வரை தடுத்துப் பார்த்த சத்யன் ... செல்வத்தின் ஆத்திரம் எல்லை மீறுவதை கண்டு ஆவேசத்துடன் “ விடுங்கப்பா அம்மாவை?” என்றபடி அவர் கையை பிடித்து இழுத்த அதேவேளை.. கல்யாண வேலைகள் காரணமாக சரியாக சாப்பிடாதது... அன்று காலையிலிருந்து ஏற்ப்பட்ட அதிர்ச்சி மற்றும் மனஉளைச்சல் .. செல்வத்தின் உழைத்து உரமேறிய கையால் வாங்கிய அறை காரணமாக செல்வத்தின் கையிலேயே மயங்கி சரிய ஆரம்பித்தாள் ஆதிலட்சுமி...

முதலில் கவனித்து பதட்டமான சத்யன்... “ அம்மா அம்மா என்னாச்சும்மா” என்று கத்தியபடி ஆதியின் தாடையில் தட்ட.... கீதாவின் அழுகை அதிகரிக்க.... செல்வம் உண்மையில் பதறித்தான் போனார்...

கைகளில் துவண்டு கிடந்த மனைவியின் கன்னத்தை தட்டி “ ஆதி என்னாடி ஆச்சு உனக்கு?” என்று கலவரமாய் கத்தியவர் மகளின் பக்கம் திரும்பி “ ஏய் அழுதுகிட்டு இருக்காம மொதல்ல போய் தண்ணி எடுத்துகிட்டு வா கீதா?” என்று உரக்கச் சொல்ல.. கீதா அவசரமாக கிச்சனுக்குள் ஓடினாள்...



அதற்க்குள் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் அங்கே கூடிவிட... ஆதியின் மயக்கம் தெளியாதது செல்வதை ரொம்பவே கலவரப்படுத்தியது..... அப்படியே தரையில் அமர்ந்தவர் மடியில் ஆதியின் தலையை தாங்கி மகனை பயத்துடன் பார்த்தார்....

“ என்னப்பா இப்படியா நடந்துக்கிறது? உங்க அடியை தாங்குற அளவுக்கு அம்மா வலுவானவங்களா?” என்று சத்யன் குற்றம் சாட்டும் குரலில் கூற...

அவனுக்கு பதில் சொல்வதைவிட அப்போது கீதா எடுத்து வந்த தண்ணீரைத் தெளித்து மனைவியின் மயக்கத்தை தெளிவிக்க வேண்டும் என்று தோன்ற... தண்ணீரை வாங்கி ஆதியின் முகத்தில் தெளித்து கண்களை துடைத்து விட்டார் செல்வம்...

லேசாக கண்விழித்து தெளிந்த ஆதி.. சுற்றிலும் உள்ள கூட்டத்தையும்.. தான் தன் கண்வன் மடியில் இருப்பதையும் உணர்ந்து கொஞ்சம் அவசரமாக எழுந்தவள்... பக்கத்தில் இருந்த மகளின் தோளைப் பற்றிக்கொண்டு “ என்னை உன் ரூமுக்கு கூட்டிட்டுப் போ கீதா ” என்று கூறியதும்.. கீதாவும் சத்யனும் ஆளுக்கொரு பக்கமாக அம்மாவை தாங்கியபடி கீதாவின் அறைக்கு அழைத்துச்சென்றனர்...

செல்வம் மனைவியை இப்படி மயக்கம் வருமளவிற்கு அடித்துவிட்டோமே என்ற குற்றவுணர்வில் தன்னையே நொந்தபடி அவர்களின் பின்னாலேயே போனார்....

அறைக்குள் இருந்த கட்டிலில் ஆதியை கீதா படுக்க வைத்துவிட்டு “ அண்ணா அம்மாவுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்... நீ அப்பா ரூம்லேருந்து தைலம் எடுத்துட்டு வந்து அம்மாவுக்கு கைல பாதத்தில தேய்ச்சு விடு ”.... என்ற அவசரமாக வெளியே செல்ல ... சத்யன் தைலம் எடுத்து வர தனது அப்பாவின் அறைக்கு சென்றான்

செல்வம் மனைவியின் அருகில் கட்டிலில் அமர்ந்து... கைகளைப் பற்றிக்கொண்டு “ நீ எப்போ சாப்பிட்ட ஆதி?... ஏன் மயக்கம் வந்துச்சு? ” என்று கரகரத்த குரலில் கேட்டார் 

முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொண்ட ஆதி “ இதுக்கு முன்னாடி நீங்க அடிச்சப்பல்லாம் என் உடம்பில் வலு இருந்துச்சு.. தாங்குனேன்... இனிமேல் அவ்வளவுதான்... இப்படியே இன்னும் நாலு அறைவிட்டா சீக்கிரமே போய்ச்சேர வேண்டியதுதான்” என்றாள் விரக்த்தியுடன் ...

செல்வம் எதுவும் சொல்லவில்லை.. ஆதியின் கையை நெஞ்சில் வைத்துக்கொண்டார்.... ஆதி பிடிவாதமாக கையை இழுக்க .. அவர் விடாமல் “ பின்னே நீ மட்டும் அப்படி பேசலாமா புள்ள... இதுதான உன் குடும்பம்? .. இதை நாலுபேர் கேவலமா பேசினா அது உனக்கும் தானே அவமானம்... அதை மறந்து நீ தாறுமாறா பேசுனா நான் கேட்டுகிட்டு இருக்கனுமா?...” செல்வத்தின் குரலில் மறுபடியும் கோபம் தலைகாட்டியது...

ஆதி என்றுமில்லாமல் அப்படி பேசியது அவரை ரொம்பவே பாதித்திருந்தது... இதுவரை அவர் ஆதி ஜானகி சுப்பு இவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை இன்று எல்லோர் முன்பும் போட்டு உடைப்பதுபோல் தனது மனைவி பேசியது அவரை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கியது....

இன்று வரை தனது தங்கையின் ரகசியத்தை காப்பாற்றிய தனது மனைவி இன்று துணிச்சலுடன் பேசியதற்கு காரணம் அந்த வாயாடிதான்... அவதான் அப்படின்னா என் பொண்டாட்டியையும்ல எதிர்த்து பேசும்படி வச்சுட்டு போயிட்டா?’ என்று மான்சியை கறுவியது அவரது நெஞ்சம்

இருபத்தியிரண்டு வருஷத்துக்கு முன்பு நெல் வியாபாரியாக அறிமுகமான சுப்பிரமணியன்... செல்வத்துடன் நட்பாகி வீடுவரை வந்து அது ஜானகியுடன் காதலாக மாறிவிட... ஆளில்லாத நேரங்களிலும் சுப்புவின் வருகை அதிகரித்தது... அது காதலை கடந்த உறவுக்கு வழிவகுக்க ஜானகியும் காதனுக்காக தன்னை கொடுத்தாள்... ஆனால் ஆந்திராவுக்கு நெல் வியாபாரத்துக்கு சென்ற சுப்பு திரும்பி வர மாதக்கணக்கில் ஆனது... அதுவரை தாங்காத அவன் ஜானகிக்குள் விட்டுச்சென்ற அவனது அணுக்கள் ஜானகியின் வயிற்றில் கருவாக வளர.... முதலில் கண்டுபிடித்தது ஆதிலட்சுமிதான்... பிறகு செல்வத்துக்கும் அவரது அம்மாவுக்கும் தகவல் தெரிந்து அதிர்ந்து கலவரமாகி ... பிறகு சுப்புவைத் தேடிவிட்டு எங்கிருக்கிறான் என்று தெரியாமல்... மேலும் தேட அவகாசமில்லாமல் ஆதியிடம் சொல்லி அவளது அண்ணன் கிருஷ்ணனுக்கு ஜானகியை மணமுடிக்க கேட்டபோது அதிர்ந்துதான் போனாள் ஆதி..

எவன் பிள்ளைக்கோ தனது அண்ணன் தகப்பனாக முடியாது என்று அவள் மறுத்து பேச... செல்வத்தின் அம்மா “ அப்போ புருஷன் வீட்டு மானத்தை உன்னால காப்பாத்த முடியாதுன்னா..... நாங்க எல்லாரும் தூக்குல தொங்குறோம்.. நீ மட்டும் இருந்து நல்லா வாழுடி” என்று ஆத்திரத்தை உமிழ...

பூஞ்சையான மனம் கொண்ட ஆதி பயத்துடன் தனது கணவனின் மரியாதைக்காக ஒத்துக்கொண்டாள்.... ஜானகி கருவுற்ற விஷயம் மறைக்கப்பட்டு கிருஷ்ணனுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது... ஆனால் விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருந்தது... 


உடனடி திருமணம் என்றாலும் ஜானகியின் அழகால் கவரப்பட்ட கிருஷ்ணன் கர்வமாய் வளம்வர.... ஜானகி திருமணத்தின் கடைசி இரவுவரை சுப்புவுக்காக காத்திருந்தாள்... அன்று சுப்பு வந்திருப்பதாக அவன் நண்பன் வந்து தகவல் சொல்ல...அதிகாலை மண்டபத்தில் இருந்து வெளியேறி சுப்புவை திருமணம் செய்துகொண்டு அதே மண்டபத்துக்கு மாலையும் கழுத்துமாக வந்து நின்றாள் ஜானகி...

கிருஷ்ணனின் கர்வமே அவனுக்கு எதிரியாக... தன்னை ஒரு பெண் மணவறை வரை கொண்டு வந்து நிராகரித்த அவமானம் தாங்காமல் மணமகன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்...

ஆதிலட்சுமி நடந்தவைகளை நம்பமுடியாமல் அதிர்ந்து மயங்கி விழ... அப்போது மிக கவனத்துடன் செயல்பட்டது செல்வத்தின் அம்மா தான்.... தனது மகனை தனியாக அழைத்துச்சென்று “ டேய் ராசு இப்போ நாம இங்க இருந்தா ஜானகி குட்டு வெளிப்பட்டுப் போகும்... அப்புறம் உன் மச்சான் சாவுக்கு ஜானகி வயித்துல இருந்த குழந்தைதான்னு ஊர் நம்மளை காறித்துப்பிடும்... அதனால மொதல்ல உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு கிளம்பலாம்... நம்ம வீட்டுக்குப்போய் அவளை என்னப் பண்ணுவியோ ஏது பண்ணுவியோ விஷயம் வெளிய வரக்கூடாது... அவளும் அவ ஆத்தா வீட்டை நெனைக்க கூடாது.. என்று இராமயணத்து கூனியாக தன் மகனுக்கு போதனை செய்தாள்...

அன்று ஆதிலட்சுமியிடம் தனது மகளின் வாழ்க்கைக்காக கையேந்தி நின்று அதை ஏற்காமல் ‘ எனது அண்ணன் எவன் பிள்ளைக்கோ தகப்பனாக முடியாது’ என்று அலட்சியமாக பேசிய ஆதிலட்சுமியை அடக்கி ஒடுக்கி மூலையில் தள்ளவேண்டும் என்று ஆத்திரம் செல்வத்தின் அம்மாவுக்கு....

தன்னை அருவருப்பான பார்வையில் அளந்த அண்ணியை பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பமாக கருதிய ஜானகி கிட்டத்தட்ட பத்து வருடம் வரை ஒரே குடும்பமாக அண்ணன் வீட்டிலேயே தங்கிவிட்டாள் ... அவளும் அவளது தாயாரும் வைத்தது தான் சட்டம் என்று ஆனது... எப்பவுமே மென்மையான குணம் படைத்த ஆதிக்கு இவர்களுக்கு பணிந்து போவது பெரிய விஷயமாக தோன்றவில்லை...

பணிந்தாள் ஆதி.. தனது குடும்பத்துக்காக... தனது நெஞ்சு முழுக்க சுமக்கும் தனது கணவன் மீது கொண்ட காதலுக்காக... அவர்களுக்கு அதிகாரம் பழகிவிட்டது... இவளுக்கு அடிமைத்தனம் பழகிவிட்டது.... அத்தனையும் பொறுத்துக்கொண்டது படுக்கையறையில் தன்னை ஒரு மகாராணியைப் போல் உணர வைத்த தனது கணவனுக்காக... அந்த இரவுக்காகவே பகலெல்லாம் அவர்களுக்கு பணிந்து போனாள்...

அப்போதைய இளந்தாரி செல்வத்துக்கு தனது குடும்ப கௌரவமும் தனது தங்கையின் மானமும் மட்டுமே பெரிதாக தோன்றியது... நல்ல மகனாக நல்ல சகோதரனாக இருந்த செல்வம் நல்ல கணவனாக இருக்க தவறினார்... இரவுக்கு மட்டுமே மனைவி என்கிற ரீதியில் வாழ்ந்தார்... அவருக்கும் ஆதியின் மீதி காதல் இருந்தது.. அது இரவில் தான் வெளிப்படும்... ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழும் பெண்களுக்கு இது சகஜமான ஒன்றுதான்.... 


மனைவி தாய்வீட்டுக்கு போகவர இருந்தால்தனது குடும்ப ரகசியங்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் தனது மனைவியிடம் சத்தியம் பெற்றார்... ஒன்று நான்.. இல்லையென்றால் உன் தாய்வீடு என்று.... ஆதியும் சத்தியம் செய்தாள்.. தனக்கு கணவன் மட்டும் போதுமென்று.... இன்று வரை அதை காப்பாற்றியும் விட்டாள்

ஆதி நல்ல மனைவி... நல்ல தாய்... நல்ல மருமகள்... ஆனால் நல்ல மகளாக கணவனை எதிர்க்க துணிவின்றி இருந்துவிட்டாள்...

கொஞ்சமாக இருந்த குடும்ப பகை தேவையற்ற பொறாமைக்கார உறவினர்களால் வளர்ந்து விருட்சமானது... முற்றிலும் தாய்வீடு மறந்து போனது

செல்வத்தின் அம்மா சத்யனது பதினைந்தாவது வயதில் இறந்த பிறகுதான் ஆதிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது.... அதன் பிறகு ஜானகியும் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு.. கணவன் மற்றும் மகளுடன் வெளியேற... ஆதியிடம் பகலிலும் காதலை காட்டினார் செல்வம்... தாய் வீட்டைப் பற்றி பேசினால் எங்கே இந்த அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே அதைப்பற்றி பேசமாட்டாள் ஆதி ..

கமலக்கண்ணனின் தாயார் இறந்த போது கூட செல்வம் ஒற்றை வார்த்தையில் “ போ ஆதி” என்று சொல்லிவிட்டு போய்விட.... இத்தனை வருஷம் கழித்து கணவனின்றி தாய் வீடு செல்லக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தனது தாய்க்கான கண்ணீரை தனது வீட்டிலேயே சமர்ப்பித்தாள்...

இப்படிப்பட்ட ஆதியைதான் மான்சியின் துணிச்சல் கிளறிவிட்டு விட்டது.... செல்வதை எதிர்க்கும் துணிவை தந்தது... தனது மகனின் வாழ்வு நேராகவேண்டும் என்ற எண்ணத்தில் தான் கணவனை எதிர்த்து நின்றாள்... இதை எப்படி செல்வத்தால் தாங்க முடியும்?.

கீதா எடுத்து வந்த பழச்சாறை வாங்கி தனது அம்மாவை குடிக்க வைத்த சத்யன்... தைலத்தை பாதங்களில் சூடு பறக்க தேய்த்து விட்டான்...

“ எனக்கு ஒன்னுமில்ல சரியாபோயிரும் சத்யா... நீ போய் ஏதாவது சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடு” என்று மகனை வற்புறுத்தி அனுப்பி வைத்தவள் “ கீதா அண்ணனுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து மாத்திரை போட வைம்மா” என்று மகளையும் அனுப்பி வைத்தாள் ஆதி

இருவரும் வெளியேப் போனதும் “ இப்போ ஏன் இங்கே வந்து படுத்திருக்க? எழுந்து வந்து நம்ம ரூம்ல படுத்து ஓய்வெடு” என்று செல்வம் மனைவியின் கையைப்பிடித்து கட்டிலில் இருந்து எழுப்ப... 




அவர் கையை உதறிய ஆதி “ இனி நான் கீதா கூடவே தான் இருப்பேன்....அந்த ரூமுக்கு வரமாட்டேன்... என்னிக்கு என் மருமகள் வந்து என் மகன் கூட இந்த வீட்டுல சேர்ந்து வாழுறாளோ அன்னிக்குத்தான் நானும் உங்களுக்கு மனைவி... அது வரைக்கும் நான் இந்த வீட்டுல உங்களுக்கு ஒரு வேலைக்காரி தான்” என்று ஆதிலட்சுமி உறுதியுடன் கூறியதும்...

செல்வத்துக்கு திக்கென்றது.... “ ஏய் என்னடி வெளையாடுறியா?” என்று கோபத்துடன் கர்ஜித்தவரை அலட்சியமாகப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதி

சற்றுநேரம் மனைவியையே வெறித்துப் பார்த்தார் செல்வம்... “ ஓகோ நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு என் பலவீனம் தெரிஞ்சு அதுல கை வைக்கிறயா? சரிடி நீ இப்படியே இரு... எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்... ஆனா ஒன்னு அந்த வாயி சிறுக்கி மட்டும் இங்கே வரனும்னு கனவு காணதே... அது நடக்கவே நடக்காது” என்றவர் ஆத்திரமாய் கதவை திறந்து கொண்டு வெளியேறினார்...

கீதா கொடுத்த பாலை மட்டும் அருந்திவிட்டு “ கீதா நீ அம்மா கூடவே இரு” என்று உத்தரவிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்ற சத்யன்... மாத்திரையை விழுங்காமல் கட்டிலில் அமர்ந்தான்... அவன் நிறைய சிந்திக்க வேண்டும்... மாத்திரைகள் போட்டால் உறக்கம் தான் வரும்... கைகளை தலைக்கு கொடுத்து படுத்தான்...

கடந்த ஒரு மாதமாக தனது வாழ்க்கையில் நடந்தவைகளை மெல்ல நினைவுக்கு கொண்டு வந்தான்.... மான்சி மனநல மருத்துவமணைக்கு வந்தது தற்செயல் என்றாலும் அதன் பிறகு நடந்த அணைத்துமே அவள் திட்டமிட்டு அரங்கேற்றியது என்று தெளிவாக புரிந்தது... அத்தனையும் தனது அப்பாவையும் ஜானகியையும் பழிவாங்கத் தான் எனும்போது சத்யனுக்குள் சிறு கசப்பு பரவியது...

எவ்வளவு காதல்... விடியவிடிய எவ்வளவு பேச்சுக்கள்... எத்தனை முறை கொண்ட உறவு... உடல்கள் சோர்ந்து விழும் வரை ஓயாது கலவி செய்த நாட்கள்... இவை அத்தனையும் இப்போது செயற்கைத் தனமாக தெரிந்தது....என்மீதான காதல் இரண்டாம் பட்சமாக போய்விட்டதே? சத்யனுக்கு கழிவிரக்கத்தில் இதயம் கசிந்தது

அவளிடம் பேசிவிட்டு வந்த நாளில் இருந்து அவளுக்காக காத்திருந்த காத்திருப்பின் பலன் அவனுக்கு நல்லதாக முடியவில்லையே? .. இருவரும் வாழ்க்கையில் இணைந்தும் அடுத்த நொடியே உறவுமுறையால் பிரிந்து போனதே?

சற்றுமுன் அம்மா சொன்னது போல் ...அவளால் தான் நான் குணமடைந்தேன்.. அதை மறுக்கமுடியாது தான்... ஆனால் அதன்பிறகும் மான்சி உண்மையை மறைத்தது சத்யனுக்கு பிடிக்கவில்லை... என்னிடம் சொல்லிவிட்டு செய்திருக்கலாமே என்று சத்யன் எண்ணும்போதே “ அப்படி அவள் சொல்லிவிட்டு செய்திருந்தால் என் அப்பா அவமானப்படுவதை நான் ஏற்று இருப்பேனா?” என்ற கேள்வியும் கூடவே எழுந்தது...


இப்போது அப்பாவை மதிக்காமல் தானே மான்சியின் கழுத்தில் தாலி கட்டினேன்.. எனது செயல் மட்டும் சரியானதா? பவித்ராவை மறுத்தால் அப்பாவுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அதை செய்த எனக்கும் மான்சிக்கும் என்ன வித்தியாசம்? .. ஆக நடந்ததில் பாதி பங்கு எனக்கும் உண்டு

சத்யனுக்கு இன்னொன்றும் தோன்றியது.... மான்சி யாரென்று முன்பே தெரிந்திருந்தால் அவளை தன்னால் மறுத்திருக்க முடியுமா? அவள்தான் குடும்பத்தை காக்க காதலை பயண்படுத்தினாள்... நான் குடும்பத்துக்காக அவளை உதறிவிட முடியுமா? என்னோட காதல் அவ்வளவு சுயநலமானதா? கேள்விகள் வண்டாய் குடைந்தது

இப்போது மட்டும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறாய் சத்யா? என்று மனசாட்சி கேள்வி கேட்டது... குடும்பத்துக்காக அப்பாவுக்காக தாலி கட்டியும் உன் காதலியை பிரிந்து தானே வந்திருக்கிறாய்? மான்சி உன்னிடம் சொல்லாமல் செய்ததை நீ சொல்லிவிட்டு செய்திருக்கிறாய் அவ்வளவு தான்.... அவள் அப்பாவுக்காக தன் காதலை பயன்படுத்தி உன்னை தாலிகட்ட வைத்தாள்.... அதே அப்பாவுக்காக நீ உன் காதலியை மறுத்துவிட்டு வந்திருக்கிறாய்....

சத்யனின் யோசனைகளில் எல்லாம் மான்சியின் மீதும் தன்மீதும் தவறு சமபங்காக இருந்தது... அப்பாவுக்காக காதலை விட்டுத்தர முடியாது.... காதலுக்காக அப்பாவின் கௌரவத்தை விட்டுத்தர முடியாது.... சத்யனின் இதயம் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து துடித்தது...

மான்சியைப் பற்றிய ஏக்கங்கள் அவனை ரொம்பவே தவிக்க வைத்தது.... அந்த ஒரு மாத உறவு அவனை ஏங்க வைத்தது... என்னைப் பத்தி ஒரு நிமிஷம் கூட யோசிக்காம சவால் விட்டுட்டியே மான்சி? அப்பாகிட்ட சவால் விடாமல் இருந்திருந்தாலாவது எப்படியாவது சமாதானம் செய்து உன்னை இந்த குடும்பத்துக்குள் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே... இனிமேல் நாம சேரவே முடியாதா மான்சி? என்று வாய்விட்டு பிதற்றியவனின் பிதற்றல் வெளியே அவனது அறையை கடந்து சென்ற செல்வத்தின் காதுகளில் விழ....

செல்வம் மகனின் வார்த்தைகளில் திகைத்துப்போனார்.... அவள் மேல இவ்வளவு காதலை வச்சுக்கிட்டா என் அப்பாதான் முக்கியம்னு என் கூடவே வந்தான் என் மகன்?

எதுவும் தோன்றாமல் அமைதியாக தனது அறைக்கு சென்றார்.... மனைவியின் புறக்கனிப்பு ஒரு புறம்... மகனின் புலம்பல் மறுபுறம் என அவர் மூளையை செயலிழக்க செய்ய ... சோர்ந்துபோய் சோபாவில் அமர்ந்தார்

மனைவியின் தாய்வீட்டு பாசத்தை துச்சமாக மதித்த செல்வத்தால்.... இன்று மகனின் காதலை துச்சமென எண்ணி செயல் பட முடியவில்லை... ஆயிரம் பேருக்கு மத்தியில் கர்வமாய் காதலியை கைப்பிடித்தாலும் தனது தகப்பனை அவமானப்படுத்திய மனைவி எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு வந்த சத்யனின் உயர்ந்த மனது அவரை விழத்தட்டியிருந்தது...

அத்தனை பேர் கூடியிருக்கும் மண்டபத்தில் என் அப்பாவை அவமானப்படுத்திய மனைவி எனக்கு வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வந்த மகனுக்காக நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேள்வி கேட்டது செல்வத்தின் மனம்...

சத்யன் எனது காதலும் என் மனைவியும் தான் முக்கியம் என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால் அதன் பிறகு நான் என்னவாகியிருப்பேன் என்று அவர் எண்ணும்போதே உடல் சிலிர்த்து அடங்கியது...

கதவை தட்டிவிட்டு அறைக்குள் வந்தான் முத்து... செல்வம் மவுனமாக எதிர் இருக்கையை காட்டி உட்காரச் சொன்னார்... அமர்ந்த முத்து மண்டபத்து கணக்குளை மெல்லிய குரலில் சொல்லிவிட்டு மிச்சமிருந்த பணத்தை எடுத்து டீபாயில் வைத்தான்...


செல்வம் எதையுமே கண்டுகொள்ளாது அமைதியாக இருக்க “ அதை நினைச்சு மனசை குழப்பிக்காதீங்கப்பா.... காலப்போக்கில் எல்லாம் சரியாப் போகும்” என்றான்..

செல்வம் சற்றுமுன் சத்யனைப் பற்றி சிந்தித்ததை முத்துவிடம் கூற.... அவன் கேட்டுவிட்டு தலையத்து “ ஆமாப்பா அந்த இடத்தில் எனக்கு சத்யனை நெனைச்சு ரொம்ப பெருமையா இருந்தது... அவன் மட்டும் கொஞ்சம் மாத்தி பேசியிருந்தாலும் நானே அவனை நாலு அறை விட்டிருப்பேன்” என்று தனது மனநிலையை மறைக்காமல் சொன்னான்...

“ அடுத்து என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை முத்து.... அன்னிக்கு ஆதி விஷயத்துல சுயநலமா முடிவெடுக்க முடிஞ்ச என்னால இன்னிக்கு சத்யன் விஷயத்துல சுயநலமா இருக்க முடியலை முத்து... அவன் எனக்கு கொடுத்த கௌரவத்தை நான் காப்பாத்திக்கனும்... ஒரு நல்ல தகப்பனா நான் நடந்துக்கனும்னு தோனுது... ஆனா இத்தனை வருஷத்து பகையை மறந்து அவங்க வீட்டு வாசப்படி ஏற என் மனசு இடம் கொடுக்கலை முத்து” என்று முத்துவிடம் தனது மனதை மறையாமல் கூறினார் செல்வம்...

முத்துவுக்கு அவர் மனசு புரிந்தது அவரின் கையைப் பற்றி “ கொஞ்ச நாள் ஆகட்டும்பா போகவேண்டிய வழி தெளிவா தெரியும்... இப்போ குழப்பத்தில் எடுக்கும் எந்த முடிவும் நமக்கு சாதகமா அமையாது” என்று ஆறுதலாக பேசியவன் கொஞ்சம் குரலின் வேகத்தை குறைத்து “ ஆனா மான்சி ரொம்ப நல்ல பொண்ணுப்பா... பிளான் பண்ணி எல்லாம் சத்யன் இருந்த ஆஸ்பிட்டலுக்கு வரலை... தற்செயலா வந்த இடத்தில் சத்யனைப் பார்த்ததும் தனது திட்டத்தை செயல் படுத்திருக்கா... அவளோட அனுகுமுறை தவறு என்றாலும் நோக்கம் ரொம்ப சரியானது தானேப்பா?... அவளை பொருத்தவரை இரண்டு குடும்பமும் ஒன்னா சேரனும் அது மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது.... அவளும் சத்யனை பத்து வருஷமா லவ் பண்ணிருக்காப்பா... அந்த லவ் தான் தயங்காம சத்யனோட சேர்த்து வச்சிருக்கு.... அவள் இல்லைன்னா நம்ம சத்யனை இவ்வளவு தெளிவா பார்த்திருக்க முடியாது....” முத்து தெளிவாக சொல்ல... செல்வம் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டார்...

“ அப்புறம் இன்னொரு விஷயம்பா.... இத்தனை நாளா பெண் என்றால் என்னன்னு தெரியாமல் இருந்த சத்யன் இப்போ பெண்ணோடு உறவு எப்படியிருக்கும்னு முழுமையா தெரிஞ்சுகிட்டவன்... காதலியை பிரியும் ஏக்கத்தை விட காதலி கொடுத்த சுகத்தை மறக்குறது தான் ரொம்ப கஷ்டம்... ஒரு மாசமா மான்சி கூட வாழ்ந்தவன்... இனிமேல் அந்த சுகம் கிடைக்குமா என்ற கேள்வி அவனை பாதிக்க ஆரம்பிச்சா மறுபடியும் அவன் மனநிலையிலும் பாதிப்பு வரக்கூடும்.. அதனால குடும்பம் பகை விரோதம் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு சத்யனை மட்டும் மனசுல வச்சு முடிவெடுங்கப்பா .... ப்ளீஸ் நமக்கு நம்ம சத்யன் ரொம்ப முக்கியம்” என்று முத்து உருக்கமாக சொல்ல.....

வாய்விட்டு எதையும் சொல்லவில்லை என்றாலும் ... செல்வம் ஆமோதிப்பாக தலையசைத்தார்....

அதன் பின் பவித்ரா மறுபடியும் வேலைக்கு போவதற்கு தன்னிடம் விசாரிக்க சொன்னதை அவரிடம் கூறினான் முத்து...

நிமிர்ந்து அமர்ந்து ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட செல்வம் “ ம்ஹ்ம் நாம ஒன்னு நெனைச்சா தெய்வம் வேறொன்றை நடத்துது... ஆமா முத்து பவித்ரா இங்க இருந்தா எல்லாருடைய கேலி பார்வையையும் சந்திக்க வேண்டியிருக்கும் ... இப்போ இருக்குற சூழ்நிலையில் அவ சென்னையில் இருக்குறது தான் சரி... நீயும் அடிக்கடி போய் பார்த்துக்க... மதுவை அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... குழந்தை கூட இருந்தா பவித்ராவுக்கும் இதமா இருக்கும்.. நான் நாளைக்குப் போய் ஜானகி கிட்ட பேசுறேன்” என்றார்

முத்து மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அன்று இரவே சென்னைக்கு போகவேண்டும் என்றான்

செல்வத்திடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு முத்து பவித்ராவின் வீட்டுக்கு கிளம்பினான் மகளை அழைத்து வருவதற்காக...





“ நீ உன் முத்தத்தால் மருந்திடுவாய் என்றே....

“ என்னை நானே காயப்படுத்திக் கொண்டது...

“ கடந்த காலமாக புதைந்துபோக....

“ இப்போது நீயே ஏற்படுத்திவிட்டுச் சென்ற...

“ காயத்துக்கு மருந்தாக..

“ உன் முத்தத்தை காற்றிலாவது ....

“ அனுப்பி வைடி என் கண்மணி! 


No comments:

Post a Comment