Saturday, December 12, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 23

ஆனால் சத்யனால் விலகமுடியவில்லை ... மான்சி கைகளால் அவனை சுற்றி வளைத்து தன் மீது சரிக்க முயன்றாள்... சத்யன் சந்தோஷம் கொப்பளிக்க நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.. அவள் செயலுக்கும் முகத்துக்கும் துளிகூட சம்மந்தமில்லாத வாறு முகம் பாறையாய் இறுகியிருந்தது...

சத்யனின் மூளையில் மின்னலடித்தது ... மீண்டும் சிரிப்புடன் அவள் உதட்டில் முத்தமிட்டு விலகியவன்... போர்வையை இழுத்து போர்த்திவிட்டு “ இல்ல மான்சி மதியம் நான் இருந்த சந்தோஷத்தில் அப்படி ஆச்சு... ஆனா இனிமேல் நமக்குள்ள உறவுன்னு ஒன்னு நடந்தா அது உன் கழுத்தில் நான் தாலி கட்டியப் பிறகுதான்” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினான்....



அடுத்து வந்த நாட்களில் சத்யனுக்கு விக்டரின் கல்யாண வேலையே சரியாக இருந்தது... எல்லாவற்றையும் சத்யனே ஏற்றுக்கொண்டான்... வருபவர்கள் தங்குவதற்கு தனது பங்களாவிலும் விக்டரின் பங்களாவிலும் உள்ள அறைகளை ஏற்பாடுகள் செய்தான்... அவர்களுக்கு சாப்பாடு மெனுவை சரியாக செய்ய இரண்டு பங்களாவிலும் சமையல்காரர்கள் மேலும் சில வேலைக்காரர்களை நியமித்தான்....

விக்டருடன் சேர்ந்து டாப்சிலிப்பின் எஸ்டேட் முதலாளிகள் வீடுகளுக்கு சென்று கல்யாணப் பத்திரிகை கொடுத்துவிட்டு வந்தான்... சர்ச் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விக்டர் கவனிக்க... மறுநாள் மருதமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருமண வேலைகளை சத்யன் கவனித்தான்....

முருகன் கோவிலில் திருமணம் முடிந்ததும் அன்று இரவும் மறுநாளும் மணமக்கள் மட்டும் தங்குவதற்காக கோவையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் டீலக்ஸ் சூட் ஒன்றை புக் செய்தான்.... எல்லா வேலைகளும் முடிந்த போது அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர்....

முதலில் வந்தது லதாவின் குடும்பத்தினர்... அனைவருக்கும் இந்த கல்யாணத்தில் எவ்வளவு சந்தோஷம் என்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது... அவர்களை தனது பங்களாவில் தங்க வைத்தான் சத்யன்... அடுத்ததாக விக்டரின் குடும்பத்தினர் வந்து விக்டரின் பங்களாவில் தங்கினர்....

அடுத்ததாக மான்சியின் குடும்பத்தினர் வந்தனர்... சத்யனின் பங்களாவுக்கு வர மறுத்து விக்டரின் பங்களாவில் தங்கினார்கள்... ஆனால் அங்கே குளித்து டிபனை முடித்துக்கொண்டு உடனடியாக சத்யனின் வீட்டுக்கு வந்துவிட்டனர் சத்யனுக்கும் மான்சிக்கும் பிறந்த அந்த குட்டி சொர்கத்தைப் பார்க்க...

அர்ச்சனாவும் ஆர்த்தியும் மான்சியைவிட நிறம் குறைவாக ஜாடை வேறாக இருந்தார்கள்... தகப்பன் ஜாடை போலிருக்கு... ஆனாலும் அழகில் குறைவில்லாமல் இருந்தார்கள் ஆனால் இந்த்ரஜித் அரும்பி வரும் மீசையை எடுத்துவிட்டால் மான்சியே தான்... அவ்வளவு உருவ ஒற்றுமையுடன் இருந்தான்... மான்சியின் தாயார் புவனா இளமையில் நானும் ஒரு மான்சி தான் என்பது போல் இருந்தாள்... உழைத்து உழைத்து நலிந்து போன உடலோடு இருந்தாள்...

“ நீங்கல்லாம் இங்கேயே தங்கியிருக்கலாமே?” என்று சத்யன் வருத்தமாக புவனாவிடம் கூற...

“ இல்லைங்க தம்பி மகளை கல்யாணம் பண்ணி கொடுக்குறதுக்கு முன்னாடி இங்க வந்து தங்குறது அவ்வளவா நல்லாருக்காது... அதான் விக்டர் வீட்டுலயே தங்கிட்டோம்..” என்று சமாதானமாக புவனா சொன்னதும் சத்யனால் மறுக்கமுடியாமல் போனது...

ஒரு கப் காபி குடிப்பதற்கு கூட தாயின் முகத்தைப் பார்த்த பிள்ளைகளைப் பார்த்து சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது... அன்று சொன்னாளே மான்சி என் தாயின் வளர்ப்பு என்று ... அது இதுதான் போல’ என்று சத்யன் எண்ணினான்...
அர்ச்சனா ஆர்த்தி இந்த்ரஜித் மூவருக்கும் கடும் சண்டை நடந்தது அந்த குட்டி தேவதையை யார் வைத்துக்கொள்வது என்று.... அவர்களை சமாதானம் செய்து ஆளுக்கு அரை மணிநேரம் என்று டைம்டேபிள் போட்டுக் கொடுத்தான் சத்யன்... மூவரும் மாமா மாமா என்று சத்யனிடம் உரிமை கொண்டாடினார்கள்... அதிலும் இந்த்ரஜித் சத்யனுடன் ரொம்பவே ஒட்டிக்கொண்டான்

புவனா சத்யனிடம் பழையவற்றை எதையும் கேட்கவில்லை... உங்கள் திருமணம் எப்போது என்று மட்டும் கேட்டாள்... “ அப்பா லதா கல்யாணத்துக்கு வர்றார் ஆன்ட்டி... அப்போ அவர்கிட்ட பேசி நாள் குறிக்கிறதா விக்டர் மச்சான் சொல்லிருக்கார்.... இந்த மாசத்திலேயே நிறைய நாள் நல்லாருக்காம்... அப்படியே ஏற்பாடு பண்ணலாம்னு மச்சான் சொல்லிருக்கார்” என்றான் சத்யன் மரியாதையாக 

மடியில் இருந்த பேத்தியின் விரல்களை வருடியபடி “ அர்ச்சனாவையும் பெண் கேட்டு வந்திருக்காங்க... மான்சி கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு நிச்சயம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்... மாப்பிள்ளை பையன் சென்னையில ஏதோ காலேஜ்ல லெக்சரரா வேலை செய்றார்... அர்ச்சனா காலேஜுக்கு ஏதோ செமினார்க்கு வந்தவர் இவள்தான் அந்த காலேஜ் பர்ஸ்ட் வந்திருந்தா... அதை அவர் பாராட்டிட்டு உடனே சென்னை போயிட்டார்.. ஆனா ஒரு வாரம் கழிச்சு அவங்க அப்பா அம்மா வந்து பெண் கேட்டாங்க... விக்டர் தம்பிகிட்ட சொன்னேன்.. அவரும் மாப்பிள்ளையைப் பத்தி விசாரிச்சிட்டு நல்ல இடம்னு சொல்லிருக்கார்... நீங்களும் நேரம் கிடைக்கும் போது ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க” என்று சத்யனிடம் சொல்ல...

சத்யன் சந்தோஷமாக தலையசைத்தான்... மூத்த மருமகனுக்கு உண்டான பொருப்பை அல்லவா மாமியார் கொடுத்திருக்கிறார்...

அன்று இரவு வந்த சுந்தரமும் எல்லோரிடமும் இயல்பாக இருந்தார்... எல்லாம் சுமுகமாக முடிந்ததில் அவருக்கு பயங்கர சந்தோஷம்.... பேத்தியின் அழகில் சொக்கிப்போய் அர்ச்சனா ஆர்த்தி இந்த்ரஜித்துடன் பேத்தியை தன்னிடம் கொடுக்கும் படி சம்மந்தி சண்டைப் போட்டார்

ஆனால் இது எதிலுமே கலந்துகொள்ளாமல் ஒரு மவுனச் சிரிப்புடன் வலம் வந்தாள் மான்சி.... வீட்டு உரிமைக்காரியாக வந்த விருந்தினரை நன்றாக கவனித்தாள்... அழகாக மறுநாள் காலை சர்சில் நடக்கும் திருமணத்திற்கு சத்யன் வாங்கிக் கொடுத்த புடவையை உடுத்தி அவனுடன் ஜோடியாக காரில் போய் இறங்கினாள்....

வந்திருந்தவர்கள் அனைவரும் இவர்களின் ஜோடிப்பொருத்தத்தை பார்த்து வியந்துபோய் பாராட்ட கர்வமாய் தோள் அணைத்த சத்யனை நெருங்கி நின்றாள்...

விக்டரும் லதாவும் மோதிரம் மாற்றி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் முடிந்ததும்.... மறுநாள் தாலிகட்டும் வைபவம் வரை லதா சத்யன் வீட்டில் அவள் குடும்பத்தினருடன் தங்கினாள்.... விக்டர் அன்று இரவு வரை லதாவுடன் சத்யன் வீட்டில் இருந்து விட்டு தனது பங்களாவுக்கு போகும்போது கண்களில் காதலை நிறைத்து லதாவிடம் இருந்து விடைபெற்று சென்றான்.....

அவர்களது கட்டுப்பாடும் காதலும் சத்யனை வியக்க வைத்தது... தனது மத வழக்கப்படி திருமணம் முடிந்து விட்டாலும் லதாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மறுநாள் தாலி கட்டும் வரை காத்திருக்க முடிவு செய்து விலகிப் போன விக்டர் சத்யன் மனதில் ரொம்ப உயர்ந்துவிட்டான்....

தனக்கு மட்டும் இந்த கட்டுப்பாடும் காதலும் ஏன் இல்லாமல் போனது என்று வேதனைப் பட்டான் .... நான் அன்று மான்சியின் உணர்வுகளை மதித்து நடந்திருந்தால் அன்றே இந்த அழகுப் பெட்டகம் எனக்கு மனைவியாகியிருப்பாளே? என்று வருந்தினான்.... எப்படியும் இன்னும் ஒருசில நாட்களில் மான்சி என் மனைவி ஆகிவிடுவாள் என்று மனதை தேற்றிக்கொண்டான்

மறுநாள் அதிகாலை எல்லோரும் தயாராகி ஏற்பாடு செய்யப்பட்ட வண்டிகளில் மருதமலை முருகன் கோயிலுக்கு சென்றனர்.... அங்கே அழகாக இந்து முறைப்படி விக்டர் லதாவின் கழுத்தில் தாலி கட்டினான்...

திருமணம் முடிந்த பிறகு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு எல்லோரும் டாப்சிலிப் கிளம்ப... எல்லோரையும் அழைத்துச்செல்லும் பொறுப்பை தனது அப்பாவிடம் ஒப்படைத்த சத்யன் மான்சியை அழைத்துக்கொண்டு மற்றொரு காரில் மணமக்களுடன் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு வந்தான்...

அறையில் மான்சியையும் லதாவையும் விட்டுவிட்டு சத்யனும் விக்டரும் ஹோட்டலின் பின்புறம் இருந்த பூங்காவுக்கு வந்தனர்.... விக்டர் மவுனமாகவே வந்தான்... பத்து வருடம் கழித்து தனது சொர்க்கம் தன் கைக்கு வந்தது அவனை மவுனமாக்கியிருந்தது...

இருவரும் இரண்டாவது சிகரெட்டை பற்ற வைக்கும்போது ஒருவரையொருவர் பார்த்து அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டனர்.... சத்யன் தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்துக் கொடுத்து “ மச்சான் ரொம்ப வழியுது தொடச்சிக்கங்க” என்று கேலி செய்ய...

சிகரெட்டை ஆழமாக இழுத்த விக்டர் “ அடப் போடா எனக்கே ரொம்ப டென்ஷனா இருக்கு.... அங்கே போனதும் என்னப் பேசுறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று கவலையாக கூற.....

சத்யன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “ அடப்பாவி மனுஷா இன்னிக்கும் பேசத்தான் போறீங்களா? அடக்கடவுளே பத்து வருஷமா காத்திருந்து இன்னிக்குத்தான் பேசப்போறாராம்ல இவரு.... இதுக்குத்தான் என்னைப்போல சீனியர் கிட்ட ஆலோசனை கேட்கனும்... என்கூட வாங்க எப்படி ஆரம்பிக்கிறதுன்னு மட்டும் சொல்றேன் மச்சான்... அதுக்கப்புறம் பிக்கப் பண்ணிக்க வேண்டியது உங்கப் பொருப்பு.... “ என்று சத்யன் விக்டரின் கையைப்பிடித்து எங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர வைத்தான்....

“ நீ சீனியரா? ம்ம் எல்லாம் நேரம்டா மாப்ள” என்றபடி விக்டர் சிரித்தான்

“ ஆமா பின்ன உங்களுக்கு முன்னாடியே குழந்தை பெத்துட்டோம்ல... அப்ப நாங்க தான சீனியர்” என்று சத்யன் பெருமையடித்தான்

“ சரிங்க சீனியர் நீங்க சொல்ற படியே கேட்கிறேன்... சொல்லுங்க” என்று கைக்கட்டிக் கொண்டு விக்டர் கேட்டுவிட்டு சிரிக்க... சத்யனும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டான் 




அறையில் குளித்துவிட்டு சந்தனநிறத்தில் நீலநிற பூக்கள் சிதறிக்கிடந்த சில்க் புடவையும் அதற்கு மேட்சான ரவிக்கையுடன் வந்த லதாவுக்கு எளிமையான அலங்காரங்களை செய்த மான்சி.... ஜாதிமல்லியை லதாவின் கூந்தலி வைத்துவிட்டு அவளைத் திரும்பி நிற்க வைத்து ஏற இறங்க பார்த்தாள் ...

திருமணம் ஆன இரண்டு நாளில் லதாவின் அழகு பல மடங்கு கூடிப் போயிருந்தது... மான்சி கன்னத்தில் கைவைத்து “ ம்ஹூம் எங்க அண்ணன் பார்த்தவுடன் ப்ளாட் ஆயிடுவார்னு நெனைக்கிறேன்... ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா” என்றாள் சந்தோஷத்துடன்...

லதா வெட்கச் சிரிப்புடன் தலை குனிய .. அவளை அழைத்துப்போய் உள் பக்கமாக இருந்த படுக்கையறையில் விட்டுவிட்டு வெளியே வந்தாள் மான்சி... அப்போது சத்யனும் விக்டரும் வந்துவிட்டார்கள் ...

சத்யன் சோபாவில் உறங்கிய மகளை தூக்கிக்கொண்டு “ சரி மச்சான் உங்க ரெண்டு பேருக்கும் நைட் டின்னர் ஆர்டர் பண்ணிட்டேன்... இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடும்... நாங்க கிளம்புறோம்” என்று சொல்ல...

“ என்ன சத்யா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலையா?” என்று விக்டர் சங்கடமாக கேட்க....

“ நாங்க கீழே போய் சாப்பிட்டுத்தான் போபகப்போறோம் ... அப்புறம் மச்சான் டிரைவரை நாங்க கூட்டிட்டுப் போறோம்... ரொம்ப டயர்டா இருக்கு என்னால கார் ஓட்ட முடியாது... டிரைவரை நாளைக்கு பஸ்ல அனுப்பி வச்சிர்றேன்....” என்று கூறிவிட்டு சத்யன் மான்சியை தோளோடு அணைத்துக்கொண்டு வெளியே வந்தான்....

இருவரும் சாப்பிட்டு விட்டு காரில் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள .. கார் டாப்சிலிப் நோக்கி புறப்பட்டது.... பாதிவழியில் மான்சி தூங்கி சத்யன் மீது சரிய... சத்யன் குழந்தையை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டு மான்சியை மடியில் சாய்த்துக்கொண்டான் ....

தூங்க வேண்டும் என்றுதான் சத்யன் காரை ஓட்டாமல் டிரைவரை அழைத்துவந்தது... ஆனால் மான்சி மகளும் தூங்கியதும் வேறு வழியின்றி ஒருகையால் மகளையும் மறுகையால் மான்சியையும் அணைத்தபடி தூங்காமல் வந்தான்.....

வந்த விருந்தினர்கள் எல்லோரும் மறுநாள் கிளம்ப ... சுந்தரமும் மான்சியின் குடும்பமும் மட்டும் சத்யன் மான்சிக்கு திருமணத்தேதி குறிக்க விக்டரை எதிர்பாத்து காத்திருந்தனர்...

மூன்றாவதுநாள் மாலை விகடரும் லதாவும் கோவையில் இருந்து வந்ததும் எல்லோரும் சத்யன் வீட்டில் அமர்ந்து நல்ல நாள் பார்த்தனர்

அதே மாதத்தில் அன்றிலிருந்து பதினோராவது நாள் நல்லா இருக்கிறது என்று முடிவு செய்து எல்லோரிடமும் ஒப்புதல் கேட்கப்பட்டது....

விக்டர் வந்து “ என்னம்மா இன்னும் பத்து நாள் இருக்கு அந்த தேதியிலேயே வச்சிரலாமா?” மான்சியிடம் கேட்க

மான்சி தலையசைத்து மறுத்து “ அதுக்கு இரண்டு நாள் முன்னாடி 21 ம் தேதி புதன் கிழமை தேதி வைங்க அண்ணா” என்றாள் பிடிவாதமாக.....

லதா எழுந்து அவளருகே வந்து “ இரண்டு நாள் முன்னாடி ஏன் மான்சி?” என்று கேட்க....

“ அன்னைக்கு எனக்கு பீரியட்ஸ் டேட் வருது அக்கா ... அதனால்தான் மாத்த சொல்றேன்” என்றாள்....

லதா சென்று மெல்ல விஷயத்தை சொல்ல .. “ சரி மான்சி சொல்ற அன்னைக்கும் நாள் நல்லாத்தான் இருக்கு... அதனால அன்னிக்கு மருதமலை கோயில்லயே இவங்களுக்கும் மேரேஜ் பண்ணிடலாம்” என்று சுந்தரம் சொல்ல....

மான்சி அதையும் மறுத்தாள் “ கோயில்ல வேனாம் அங்கிள்.... இங்கே வீட்டுலயே பண்ணிடலாம்.... தோட்டத்தில் பந்தல் போட்டு இதே பங்களாவில் எங்க கல்யாணம் நடக்கட்டும்” என்று உறுதியாக கூறினாள்...

எல்லோரும் அவளை வியப்பாக பார்த்தாலும் அதுவும் ஏற்றுக்கொள்ளப் பட்டது...

முடிவாக மான்சி சொன்ன அதே 21 ம் தேதி புதன் கிழமை காலை 7-00 மணிக்கு சத்யனின் பங்களாவின் ஹாலில் திருமணமும்... தோட்டத்தில் பந்தல் போடப்பட்டு சாப்பாடும் ரெடி செய்வது என்று எல்லோராலும் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது

திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக கூறிவிட்டு புவனா தனது குடும்பத்துடன் விருதாச்சலம் கிளம்பிவிட.... சுந்தரம் நெருங்கிய சொந்தங்கள் சிலரை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக கூறிவிட்டு சென்றார்....

லதா தான் இருந்த வீட்டையும் சேர்த்து க்ளினிக்காக மாற்றிவிட்டு தனது உடைமைகளுடன் விக்டரின் வீட்டுக்கு போய் தனது இனிமையான காதல் வாழ்க்கையை விக்டருடன் தொடங்கினாள்...

சத்யன் தனது திருமண நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தான்....

மான்சி அவனைவிட பேராவலுடன் காத்திருந்தாள்... அந்த நாளை நோக்கி...

காலமும் ஒவ்வொரு நாளாக விழுங்கி விட்டு அந்த நாளை நோக்கி வேகமாக வந்தது




" எல்லா வெற்றிகளும் சிகரங்களை நோக்கி ...

" எல்லா சிகரங்களும் பாதாளங்களை நோக்கி....

" தெரியும் என்ற ஒன்று தெளியும் போது...

" தத்துவம் பிறக்கின்றது!

" தெளிந்த ஒன்று தேரும் போது...

" தனித்துவம் பிறக்கின்றது!

" மான்சி தத்துவமா? தனித்துவமா? 


No comments:

Post a Comment