Saturday, December 26, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 22

அது ஒற்றை படுக்கையறை கொண்ட போலீஸ் குவாட்டர்ஸ் என்பதால் அன்று இரவு தனது படுக்கையறையில் மதுவுடன் பவித்ராவை படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு முத்து ஹாலில் படுத்துக்கொண்டான்

மறுநாள் காலை மது ஸ்கூலுக்குப் போனதும் இருவரும் பவித்ரா வேலை செய்த இன்சூரன்ஸ் அலுவலகம் சென்றனர்... சிறிதுநேர காத்திருப்புக்குப் பின் மேனேஜர் அறைக்குள் அழைக்கப்பட்டாள் பவித்ரா

முத்துவின் மனம் சுயநலமாக பிரார்த்தனை செய்தது.... வேலை எதுவும் காலி இல்லை என்று சொல்லவேண்டும் இறைவா என்று தான் ...

அவன் வேண்டுதல் பலித்தது..... முகம் சோர்வுற திரும்பி வந்தவளிடம் ரொம்ப அக்கரையாக விசாரித்தான் முத்து...



“ இப்போ எந்த வேகன்ட்டும் இல்லையாம்.... எந்த பிராஞ்ச்ல இடம் காலியானாலும் உடனே லட்டர் அனுப்புறதா சொல்லிருக்காங்க” என்று அவள் சோகமாக சொல்ல முத்துவும் போலியாக அவள் வருத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு “ வந்த அன்னிக்கே வேலை கிடைச்சுடுமா? இரு கொஞ்சம் நாள் வெயிட் பண்ணி பார்க்கலாம்.... இந்த காலத்தில் வேலை கிடைக்கிறது குதிரை கொம்புன்னு உனக்கு தெரியாதா? ” என்று ஆறுதலாக கூறியபடி தனது ஜீப்பை நோக்கி சென்றான்....

இருவரும் ஏறி ஜீப் பாதி தூரம் சென்றதும் “ ஹாஸ்டல்ல விசாரிக்காம போறமே?” என்றாள் பவித்ரா

வெடுக்கென்று திரும்பிப் பார்த்த முத்து “ வேலைக்கு சேர்ந்த சான்றிதழ் இல்லாம எந்த ஹாஸ்டல்ல இடம் குடுப்பாங்க பவி? ... வேலை கிடைச்சதும் போய் விசாரிக்கலாம்...” எனறான்..... அவன் குரலில் இருந்த மெல்லிய கோபம் பவித்ராவை சுட்டது....

வீடு வந்ததும் “ நீ இறங்கி போ... நான் ஸ்டேஷன் போறேன்” என்றான் முத்து....

“ சாப்பாட்டு நேரம் தானே வாங்க சாப்பிட்டு போகலாம்” என்று பவித்ரா அழைக்க..... “ எனக்கு பசியில்லை” என்று முத்து சொல்ல.... இறங்காமல் பிடிவாதமாக ஜீப்பிலேயே அமர்ந்திருந்தவளைப் பார்த்து சிறு சிரிப்புடன் “ சரி வா சாப்பிடலாம்” என்றதும் வேகமாக இறங்கி உள்ளே போனாள் பவித்ரா...

இப்படி பிடிவாதம் செய்யும் பவித்ரா புதியவள்... ஆனால் இவளை ரொம்ப பிடித்தது முத்துவுக்கு .... புன்னைகையுடன் சாப்பிட சென்றான் முத்து ...

அதன் பிறகு வந்த நாட்களில் பவித்ரா அந்த வீட்டில் மிகச் சரியாக பொருந்திப்போனாள்.....

அக்கம்பக்கம் கேட்பவர்களிடம் என் தம்பி மகள் என்றார் முத்துவின் அம்மா.... அவரது வேலைகள் முக்கால்வாசி குறைய கோயில் குளம் என்று செல்லத் தொடங்கினார்... முத்து பவித்ரா இருவரையும் ஓரளவுக்கு கண்டு கொண்டார் ... ஆனால் அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்... நாம் தலையிட்டு எதையும் குழப்பிவிடக் கூடாது என்று மவுனமாக இருந்தார்...

மதுவுக்கு சகலமும் என்ற நிலையோடு முத்துவுக்கும் அவள் இல்லாது எதுவும் அசையவில்லை.... தனது பெல்ட்டை கூட எங்கே வைத்தோம் என்று மறந்து “ பவி என் பெல்ட் பார்த்தியா?” என்று கேட்கும் நிலையில் இருந்தான் ..... “ பவி அயர்ன்காரன் வரலை என் யூனிபார்மை கொஞ்சம் தேய்ச்சு குடேன்” என்று ஒரு நாள் உதவி கேட்டான் முத்து

மறுநாளிலிருந்து அவனது யூனிபார்ம் அயர்ன் பண்ணும் வேலை அன்றாட கடமைகளில் ஒன்றானது.... அயர்ன் செய்பவன் வந்தும் கூட முத்துகுமாரின் யூனிபார்மை தவிர மற்ற எல்லாம் அவனிடம் போனது.... முத்து சம்மந்தப்பட்ட வேலைகளை காதலுடன் செய்தாள் முத்துவுக்கும் அது புரிந்தேயிருந்தது....

வேண்டுமென்றே எதையாவது மறந்தான் தினமும் பவித்ரா தேடித்தர வேண்டும் என்பதற்காகவே.... ஆனாலும் அவளிடம் ஒரு ஒதுக்கம் இருந்தது.. தனியாக இருக்கும்போது முத்து அந்த அறைக்குள் வந்தான் என்றாள் பதறி எழுந்து வெளியே வருவது... அவன் எதிரே வந்தால் அவசரமாக வழிவிட்டு ஒதுங்கி நிற்பது.... என்று அடிக்கடி முத்துவின் மனதை வலிக்க செய்தாள்

பவித்ராவின் தயக்கத்திற்கு காரணம் எதுவென்று முத்துவுக்கு புரிந்தது... அந்த தயக்கம் மான்சியால் தான் உடைக்கமுடியும் என்பதால்... நன்னிலத்தில் இருந்து பவித்ராவை அழைத்து வந்த பத்தாவது நாள் மாலை ஐந்து மணி மான்சியைத் தேடி சென்றான் முத்து

அவனுக்குத் தெரியும்.... இது பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் முடியும் காலமென்று... அதனால் மான்சி நிச்சயம் கல்லூரியில் தான் இருப்பாள் என்பதால்.... நேராக ஹாஸ்டல் சென்று தனது கார்டை காட்டினான்....போலீஸ்காரன் என்றதும் பரபரப்புடன் எழுந்த வார்டனைப் பார்த்து சிறு புன்னகையுடன் “ நான் மான்சிக்கு தூரத்து உறவு” என்றான்...

சிறு நிம்மதி பெருமூச்சுடன் ஆயாவிடம் தகவல் சொல்லி அனுப்பினாள்.....

சற்றுநேரத்தில் வேகமாக படியிறங்கி வந்த மான்சி சற்றுத்தொலைவில் நின்று தலைசாய்த்து முத்துவை ஏறஇறங்க பார்த்து விரைப்பாக நின்று ஒரு சல்யூட் அடித்து “ வாங்க வால்டர் வெற்றிவேல் சார் ” என்று கேலியாக அழைக்க..

முத்து அவளது குறும்பை கண்டு சிரித்தபடி விரலைகாட்டி எச்சரித்து “ என்ன போலீஸ்காரனைப் பார்த்து நக்கலா? உதை வாங்குவ?” என்றான் பதிலுக்கு குறும்பாக...

“ இது நக்கலா? ஏன் பேர் பிடிக்கலையா? சரி காக்க காக்க சூர்யான்னு வச்சுக்கலாமா?” என்று மீண்டும் கேலி செய்தபடி வெளியே வந்தவள் “ என்ன சூர்யா சார் கூடவே ஜோதிகாவையும் கூட்டிட்டு வந்துட்டீங்க போலருக்கே?” என்று புருவம் உயர்த்தினாள்

முத்து ஆச்சரியமாக பார்த்து “ உனக்கெப்படி தெரியும் மான்சி” என்று கேட்க...

தனது டாப்ஸின் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு “ நாங்கதான் நன்னிலத்துல தெருவுக்கு தெருவு ஸ்பை வச்சிருக்கம்ல….. அந்த ஊர்ல எவன் எத்தனை வாட்டி ஊச்சாப் போனான்னு கூட எனக்கு உடனடி தகவல் வந்துருமே” என்று கூந்தலை சிலுப்பியபடி அலட்சியமாக பேசியவளைப் பார்த்து முத்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்....


அவன் சிரிப்பதையே புன்னகையுடன் பார்த்தவள் “ ம்ம் சொல்லுங்க முத்து என்னப் பண்றான் என் புருஷன்?” என்று கேட்க..

“ பரவாயில்லை கட்டின புருஷனுக்கு முறையான மரியாதை குடுக்க உன்கிட்ட தான் கத்துக்கனும்” என்று இன்னும் சிரிப்பை அடக்கமுடியாமல் கூறினான் முத்து...

“ அட நீங்க வேற நான் என் மாமனாரையே செல்வம்னு தான் இதுக்கு முன்னாடி கூப்பிட்டேன்.... இப்போ அந்த வீட்டுக்கு மருமகளா போய்ட்டேன் இனிமே எப்படி கூப்பிடுறதுன்னு குழம்பி போயிருக்கேன்” என்று பொய்யாய் கவலைப்பட்டாள் மான்சி..

“ அம்மா தாயே அந்த குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு.... அதை காப்பாத்தும்மா தாயே” என்று முத்து சிரிப்புடன் கூறிய முத்து முகத்தை சீரியஸாக மாற்றிக்கொண்டு “ மான்சி உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் அதுக்குத்தான் வந்தேன்” என்றான்..

அவன் முகத்தைப் பார்த்து விஷயத்தின் தீவிரம் உணர்ந்து “ சொல்லுங்க சார் என்ன செய்யனும்?” என்று அவள் கேட்ட தோரணை ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன் என்று போலீஸ்காரனுக்கே சொல்வது போல் இருந்தது...

மறுபடியும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ கொஞ்சம் வெளியே வா மான்சி நிறைய பேசனும்” என்று கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த காபி ஷாப்பிற்கு சென்று அமர்ந்தனர் இருவரும்.....

திருமணம் முடிந்த பிறகு நடந்தவைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்... ஜானகியும் சுப்புவும் தன்னிடம் கூறியவற்றை கூறினான்..... திருமணம் நின்று போனதும் பவித்ரா கூறியதை கூறினான்..... கிளம்பும்போது மகளுக்காக பவித்ராவையும் உடன் அழைத்து வந்ததை பற்றிக்கூறினான்... எல்லாவற்றையும் கூறிவிட்டு மான்சியின் பதிலுக்காக அவள் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்...

மான்சி தன் இயல்புக்கு மாறாக அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.... “ என்ன மான்சி எதுவுமே பேசலை?” என்று முத்து கேட்டதும் நிமிர்ந்தவள் .... “ இல்ல நான் எதையோ நினைச்சு பண்ணது இப்போ வேற மாதிரி நடக்குது” என்றாள்....

“ நீ செய்ததெல்லாம் உன் தரப்பில் ரொம்ப சரிதான் மான்சி.... ஆனா இப்போ அவங்களோட சூழ்நிலை புரிஞ்ச பிறகு உன்னோட முடிவு என்ன?” முத்து தெளிவாக கேட்டான்...

“ இனிமேல் முடிவு சொல்ல என்ன இருக்கு சார்?.... பதினாறு வயசுல வயித்துல குழந்தையோட இருந்த ஜானகியம்மாவோட நிலைமையை என்னால இப்போ புரிஞ்சுக்க முடியுது..... கடைசி நிமிஷம் வரை அவங்க காதலனுக்காக காத்திருந்ததை என்னால தப்பு சொல்ல முடியலை.... தன் காதலியை தேடி வந்து கல்யாணம் பண்ண பவியோட அப்பாவையும் குற்றம் சொல்லமுடியலை.... ஆகமொத்தம் இங்கே வில்லன் வேலை செய்தது அந்த கிழவியும் என் அத்தை புருஷனும் தான்.... அவங்க பண்ணதுதான் இவ்வளவுக்கும் காரணம்” என்று மான்சி கோபமாக கூற




“ இல்ல மான்சி அவங்களும் சூழ்நிலை கைதிதான்... வீட்டுப் பெண் கர்பிணி என்றதும் ஒன்னும் புரியாம உறவிலே ஒருத்தன் இருக்கவும் உண்மையை மறைச்சு கல்யாணம் செய்ய முயற்சி பண்ணிருக்காங்க.... ஆனா அது இப்படி விபரீதமா போய் முடியும்னு அவங்களும் நினைச்சுப் பார்க்கலை....” என்று அவர்கள் தரப்பில் முத்து விளக்கம் கூற...

“ நீங்க சொல்றது சரிதான் முத்து ஆனா இழப்பு எங்களுக்கு தானே? தன் தம்பியை பிரிந்த என் அப்பா எவ்வளவு அழுதார் தெரியுமா? அவர் யாரையும் எதிர்க்க தெரியாத அப்பாவியா இருந்ததால்தான் அன்னிக்கு தம்பி சாவுக்கு நியாயம் கேட்காம தன்னோட தங்கச்சி வாழ்க்கை முக்கியம்னு ஒதுங்கி போனார்.” என்று மான்சி பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு சிறு குரலில் கூறினாள்..

அவளை நிமிர்ந்து தீர்க்கமாக பார்த்த முத்து “ அவங்க மட்டுமா? இப்போ நீயும் உன் அப்பாவை அழத்தான் விட்டுருக்க? ஒரு மகள் கல்யாணம் முடிஞ்ச உடனே வாழாவெட்டியா வீட்டுக்கு வர்றது பெத்தவங்களுக்கு எவ்வளவு வலியை கொடுக்கும் தெரியுமா? நீ அசால்ட்டா எல்லாத்தையும் செய்துட்டு வந்துட்ட... ஆனா அவங்க என்ன வேதனையில இருக்காங்களோ?” முத்து உண்மையான வருத்தத்துடன் கூறியதும்..

மான்சி மெல்ல விசும்ப ஆரம்பித்தாள்.... “ ஆமா ரெண்டும் சரியா சாப்பிடுறது கூட இல்லையாம்..... வேலைக்காரம்மா சொன்னாங்க.... மண்டபத்துல இருந்து நேரா வீட்டுக்குப் போனதும் அதுகளை சமாதானம் பண்ணி விட்டுட்டு நான் மறுநாளே கிளம்பி சென்னை வந்துட்டேன்... எனக்கு இது கடைசி செமஸ்டர்... அதனால லீவு போடமுடியலை.... ஆனா அப்பா கூட இருக்கனும்னு தோனுது” என்று கண்ணீருடன் கூறியவளைப் பார்த்ததும் முத்துவுக்கு ஏனோ தன் மகள் மதுமிதாவைப் பார்ப்பது போல் இருந்தது...

மேசையிலிருந்த அவள் கையை எடுத்து ஆறுதலாக தட்டி “ என்னம்மா இது நீ ரொம்ப தைரியசாலின்னு நெனைச்சேன்... சின்ன குழந்தைமாதிரி அழறியே?” என்றான் ஆறுதலாக..

உண்மையாகவே சின்ன குழந்தை போல தன் தோளில் கண்ணீரை துடைத்துக்கொண்டு “ இல்லங்க என் கழுத்துல சத்யன் தாலி கட்டி அவங்க எல்லாருக்கும் நான் யாருன்னு சொல்லி பேசினதுமே எனக்குள்ள இருந்த வெறி ஆத்திரம் பழிவாங்கும் உணர்வு எல்லாமே அடங்கிப் போச்சு.... அதுக்கப்புறமும் நான் சத்யனை விட்டு விலகி வந்ததுக்கு காரணம் என் அத்தைதான்... செத்துப்போன என் சித்தப்பாவை திரும்ப கொண்டுவந்து என் அப்பாவுக்கு தரமுடியாது... ஆனா என் அத்தையை வரவழைக்கலாம்ல? அதான் சவால் விட்டுட்டு வந்தேன்....” என்றவள் தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தை துடைப்பது போல் மூடிக்கொண்டு “ வந்துட்டேனே தவிர என் சத்யனை பிரிஞ்சு என்னால இருக்க முடியலை முத்து சார்.... அவனை நான் ரொம்ப லவ்ப் பண்றேன் சார்” என்று கர்சீப்பால் மூடிக்கொண்டு குமுறியவளைப் பார்த்து வேதனைப் பட்டான் முத்து...

சுற்றியிருந்தவர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியதும் “ மான்சி எல்லாரும் வேடிக்கைப் பார்க்கிறாங்க... கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கமா.... வா வெளியே போகலாம்” என்று எழுந்துகொள்ள... மான்சியும் முகத்தை துடைத்தபடி எழுந்தாள்...

வெளியே வந்ததும் கல்லூரியின் பூங்காவில் நடந்தபடி “ சரி என் மேட்டர் விடுங்க... அத்தையும் அவ புருஷனும் எங்க வீட்டுக்கு வந்ததும் எல்லாம் சரியாப்போகும்... உங்க மேட்டர்க்கு வாங்க சார் மொதல்ல....” என்றவள் சண்டைக்காரி போல் இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைத்தபடி “ ஆமா கல்யாணம் ஆகாத எங்க வீட்டுப் பொண்ண கொண்டு வந்து உங்க வீட்டுல வச்சிருக்கீங்களே இது எந்த ஊர் பழக்கம்? உங்ககூட அனுப்பிட்டு அந்த ஜானகியும் சுப்புவும் வேணா அங்க ஜாலியா இருக்கலாம்ஆனா நான் சும்மா இருக்கமாட்டேன்... நான் அவளுக்கு அக்கா தெரியுமா?” என்று மிரட்டியவளைப் பார்த்து முத்து அசந்து போய் தலையில் கை வைத்தபடி மரத்தடியில் தொப்பென்று அமர்ந்தான்.... 


 அடிப்பாவி மச்சினி சேம்சைட் கோல்னு சொல்வாங்களே அது இதுதானா? ம்ஹூம் உன்னை மாதிரி ஒருத்திய நான் பார்த்ததேயில்லை....” என்று முத்து அதிசயிக்க...

“ ரொம்ப புகழாதீங்க சார் எனக்கு கோல்ட் ஆகாது” என்று சட்டை காலரை உயர்த்திக்கொண்டாள் மான்சி

“ சரிங்க மச்சினி என் பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க” என்று முத்து கேட்டதும்....

“ மொதல்ல உங்க கதையை முழுசா சொல்லுங்க.... இந்த ஆத்மார்த்தமான லவ் எப்பலேருந்து... சத்யன் தாலி கட்டலைன்னு பரிதாபத்தால் வந்ததா? ஏன் கேட்குறேன்னா... இப்படியொரு பரிதாபத்தால் வந்த காதல் அந்த பொண்ணுக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா?” என்று மான்சி குரலில் புரிதலோடு கேட்க...

முத்துவுக்கு அவளைப் பார்க்கவே பெருமையாக இருந்தது... சில நாட்கள் முன்பு வரை எதிரியாக நினைத்த ஒரு குடும்பத்தை புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு பெரிய மனம் வேனும்.... தனது காதல் உயிர்பெற்ற நாளை மான்சிக்கு சொன்னான்... பவித்ராவுக்கும் தன்மீது காதல் இருந்ததை சொன்னான்.... ஆனால் அன்று தாய் செய்த அதே தவறை செய்து அத்தை ஆதியின் வெறுப்பிற்கு ஆளாக கூடாது என்று எண்ணத்தில் தனது காதலை மனதிற்குள் புதைத்துவிட்டு மணமேடை ஏறிய பவித்ராவின் கதையை சொன்னான்.... இருவரும் சொல்லாமல் தவித்து கண்ணீர்விட்ட தருணங்கள் ஒவ்வொன்றாக கண்கலங்க அவன் சொல்லி முடித்தபோது மான்சி அழுதுவிட்டாள்...

அவர்களின் காதல் மான்சியை குமுறி கதற வைத்தது... ஆனால் அடக்கிக்கொண்டாள்.... கண்ணீர் ததும்பும் விழிகளுடன் “ அய்யோ இதெல்லாம் புரியாம நான் பவித்ராவை எவ்வளவு வலிக்க வச்சிட்டேன்” என்று வருந்தினாள்...

“ சரி நீ செய்ததும் ஒருவிதத்தில் நண்மைலதான் முடிஞ்சிருக்கு.... இல்லேன்னா மனசுல என்னை வச்சுகிட்டு சத்யன் கூட வாழ முடியாம குற்றவுணர்ச்சியாலயே பவி செத்திருப்பா.... என் காதலியை நண்பனின் மனைவியா பார்க்க முடியாம நானும் கொஞ்சம் கொஞ்சமா செத்திருப்பேன்” என்று வேதனையுடன் முத்து சொன்னதும்

அவன் கையைப்பிடித்து “ ம்ஹூம் அதையெல்லாம் நெனைக்காதீங்க முத்து.... நான் நாளைக்கு காலையில உங்க வீட்டுக்கு வர்றேன்... வந்து பவித்ரா கிட்ட பேசுறேன்.... எனக்கு எந்த வருத்தமும் இல்லைன்னு புரியவைக்கிறேன்....” என்று மான்சி உற்சாகமாய் கூற...

“ நாளைக்கே வர்றியா?” என்று ஆச்சர்யமாக கேட்டான் முத்து...

“ ஆமாம்... எனக்கு இன்னிக்கோட காலேஜ் முடியுது... நாளைக்கு ஹாஸ்டல் ரூமை வெகேட் பண்ணிட்டு நைட் ட்ரைன்ல அரியலூர் போய் அங்கிருந்து பஸ்ல தாராசுரம் போகனும்.... அதனால காலையிலயே வர்றேன்” என்று மான்சி கூறியதும்...

சரியென்று தலையசைத்துவிட்டு கிளம்பினான் முத்து....

அவன் பின்னாலேயே வந்தவள் “ ஹலோ போலீஸ்கார் ஒரு விஷயம்” என்று தடுத்தவள் “ நீங்க சத்யனுக்கு அண்ணன் மாதிரி... ஆனா பவித்ரா என்னைவிட ஆறு மாசம் சின்னவ... அப்போ நீங்க தங்கச்சி புருஷன்... இப்போ நான் புருஷனுக்கு அண்ணனான உங்களை மாமான்னு கூப்பிடுறதா?... இல்லை தங்கச்சி புருஷனா நினைக்கிறதா?... ஒரே கன்பியூஸனா இருக்கே” என்று குழப்பமாக கேட்க


முத்து நின்று திரும்பி தனது கையை தலைக்கு மேலே உயர்த்தி அவளை கும்பிட்டு “ அம்மா தாயே எதாவது கூட்டத்தில் என்னைப் பார்த்து டேய் மாமான்னு கூப்பிட்டு என் மானத்தை வாங்கிடாதே... நீ என்னை முத்துன்னே கூப்பிடு.. அது போதும்”. என்று முத்து கவலையாக கூறியதும்

யோசனையாக புருவம் உயர்த்தியவள் “ அப்படியா சொல்றீங்க? சரி போங்க போங்க.. நீங்க குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்று பொய்யாய் பரிதாபப்பட்டவளைப் பார்த்து “ ஆனா மான்சி எனக்கு சத்யனை நெனைச்சா ரொம்ப பயமாயிருக்கும்மா.... பாவம் அவன் தயவுசெய்து அவனை கண்கலங்காம பாத்துக்க மான்சி” என்று போலியான விரக்த்தியுடன் கூறிவிட்டு சோகமாக நடப்பவன் போல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு போனான்

முத்து தன் வீட்டுக்கு வரும்போது மது உறங்கி விட்டிருக்க... அம்மாவும் மாத்திரை எடுத்துக்கொண்டு ஹாலில் இருந்த சிறிய திவானில் படுத்துவிட்டிருந்தார்... பவித்ரா டிவி பார்த்தபடி இவனுக்காக காத்திருந்தாள்....

முத்து உள்ளே வந்ததுமே தனது அறையில் பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு வரும்போதே டவலுடன் நின்றிருந்த பவித்ரா அலமாரியை திறந்து அவனது கைலியை எடுத்து கட்டில் மேல் வைத்துவிட்டு “ என்னாச்சு இவ்வளவு நேரம்” என்றாள்

முகத்தை துடைத்துக்கொண்டு கைலியை எடுத்து தலை வழியே கழுத்தில் மாட்டிக்கொண்டு பேன்ட்டை அவிழ்த்தவன் பவித்ரா சுவர் பக்கமாக திரும்பியிருப்பதை கண்டு உள்ளுக்குள் சிரித்தபடி “ ஒரு ப்ரண்ட்டை பார்க்க போயிருந்தேன்” என்றான்...

“ சரி சாப்பிட வாங்க” என்று வெளியே போனாள்....

அவளை பின்தொடர்ந்து சென்றவனின் மொபைல் அடிக்க எடுத்து நம்பரை பார்த்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான்.... சத்யனின் புதிய நம்பர்தான்.... “ சத்யா நல்லாருக்கியாடா?” என்று ஆரம்பித்தான் முத்து...

பவித்ரா தட்டில் சப்பாத்தியை வைத்து குருமாவை ஊற்றினாள்

“ ம்ம் நல்லாருக்கேன் முத்து... இப்போ ட்ரைன்ல சென்னைக்கு வந்துகிட்டு இருக்கேன்” என்றான்..

முத்து வாயில் இருந்த சப்பாத்தியை அவசரமாக விழுங்கிவிட்டு “ என்னடா ஆச்சு திடீர்னு கிளம்பிட்ட?” என்றான் பதட்டமாக ...

“ இல்ல முத்து எவ்வளவு நாளைக்கு தான் சும்மாவே இருக்குறது... மறுபடியும் வேலை கேட்டு ஹெட்ஆபிஸ்ல பேசினேன்... என்னோட மெடிக்கல் சர்டிபிகேட்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு நாளைக்கு வரச்சொன்னாங்க அதான் கிளம்பிட்டேன்... நாளைக்கு காலையில நேரா உன் வீட்டுக்கு தான் வருவேன்... பத்து மணிக்குதான் ஆபிஸ் போகனும்“ என்றான் சத்யன்

“ சரிடா நாளைக்கு காலையில நான் ரயில்வே ஸ்டேஷன் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்ற முத்துவை தடுத்து “ விடியகாலையில நீ வரவேண்டாம்.. நானே ஆட்டோ பிடிச்சு வந்துர்றேன்” என்ற சத்யன் “ சிக்னல் சரியா வரலை முத்து பிறகு பேசுறேன்” என்று வைத்துவிட்டான் 


போனை ஆப் செய்து மேசையில் வைத்த முத்து “ அய்யோ” என்று கவலையாய் தன் நெற்றியில் தட்டிக்கொள்ள... “ என்னாச்சு” என்றாள் பவித்ரா

இதற்கு மேலும் மறைக்க முடியாதே ..... “ அது வந்து பவி..... நான் இப்போ பார்க்கப் போனது மான்சியைத்தான்” என்றான் அசடு வழிய...

அவனை ஆச்சர்யமாக பார்த்த பவித்ரா “ எதுக்கு மான்சியைப் பார்க்கனும்?” என்று கேட்க...

முத்து மெல்ல தலையை கவிழ்ந்து “ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது.... அதான் மான்சிகிட்ட எல்லாத்தையும் சொல்லி யார் மேலயும் எந்த தப்பும் இல்லை... எல்லாம் சந்தர்பமும் சூழ்நிலையும் தான்னு சொல்லி உன் கிட்ட பேசச் சொல்லி சொன்னேன்.... ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடியே அவளே உன்னை வந்து பார்க்கறேன்னு சொன்னா...” என்றான் சமாளிப்பாக...

“ ஆக எனக்கு வந்து ரெக்கமண்ட் பண்ணுன்னு அவகிட்ட சொல்லிட்டு வந்துருக்கீங்களா?” என்று பவித்ரா நக்கலாக கேட்க....

“ இல்ல பவி” என்று உதடுகள் சொல்ல தலை ஆமாம் என்று அசைந்து அவனை காட்டி கொடுத்தது...

பவித்ரா தனது நெற்றியில் தட்டிக்கொண்டு “ அவளுக்கு ஏற்கனவே எங்க குடும்பத்தையே பிடிக்காது.... இதுல நீங்கவேற இப்படி சொல்லிட்டு வந்திருக்கீங்களே” என்று கோபமாக கூற...

அவசரமாக எழுந்து அவளை நெருங்கிய முத்து “ அய்யோ நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் இல்லை மான்சி...” என்றவன் மான்சி கூறியவற்றை பவித்ராவிடம் கூறினான்... பவித்ராவிடம் உரிமையுடன் மான்சி பேசியதை முத்து சொல்ல... பவித்ரா ஆச்சரியமான திகைப்புடன் அப்படியே அசந்து போய் நின்றாள்...

அவள் அசந்த நேரத்தை பயன்படுத்தி அவளை பக்கவாட்டில் நெருங்கிய முத்து அவள் கழுத்தில் மெல்ல தன் இதழ்களைப் பதித்து “ ஆமாம் பவி மான்சி ரொம்ப நல்ல பொண்ணு... நம்ம சூழ்நிலையை நான் சொல்லாமலேயே அவ புரிஞ்சிகிட்டா.. நீயே சொல்லு இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம இப்படியே இருக்குறது.... உன்னை விரலாலக் கூட தொடமுடியாத இந்த நெருக்கம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பவி.... சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு தெரியனும் ” என்று முதன்முறையாக தனது தாபத்தை வெளிப்படையாக பவித்ராவிடம் கூறினான்

பவித்ராவின் தோளில் உரசியபடி பேசிய முத்துவின் வார்த்தைகளில் இருந்த தாபம் எனும் நெருப்பு பவித்ராவையும் சுட்டது.... அந்த மெல்லிய உரசலில் மெல்லக் கிரங்கிய மனதை அடக்கமுடியாமல் விரல்கள் அவள் அனுமதியின்றி மெல்ல எழுந்து அவன் தலைமுடியை கோதிவிட..... அவளின் இந்த வருடலை எதிர்பார்க்காத முத்து “ பவித்ரா” என்று அழைத்தபடி குழந்தாய் அவள் தோளில் துவண்டான்...

முத்துவின் கைகள் அவள் இடுப்பை வளைக்கும் நோக்குடன் வயிற்றுப்பக்கம் ஒரு கையும்... முதுகுபக்கம் ஒரு கையும் செல்ல.... அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில் மீண்டும் அவன் செல்போன் அலறியது... முத்து அதை அலட்சியம் செய்தான்.... 


பவித்ராவின் கால்கள் வலுவிழந்து துவள... தன் தோள்களை வருடிய அவன் உதடுகள் மெல்ல முன்னேறுவதை தடுக்க முடியாமல் அவன் தலைமுடியை கொத்தாகப் பற்றிக்கொண்டு “ போன் அடிக்குது பாருங்க” என்று சன்னமான குரலில் அவனுக்கு தகவல் சொன்னாள்...

“ ம்ம்ம்....” என்றானே தவிர முத்துவின் உதடுகள் இப்போது அவள் காது மடலை கவ்வியிருந்தது.... பவித்ரா கிரங்கி மயங்கினாள்.... முத்துவின் முரட்டு உதடுகள் பவித்ராவின் மென்மையான கன்னத்தை அடைந்தன... அங்கேயே அழுத்தி வைத்துக்கொண்டான்....

நின்றுபோன மொபைல் மீண்டும் அடிக்க ஆரம்பிக்க.... முதலில் சுதாரித்த பவித்ரா யாருக்கு என்ன அவசரமோ என்று எண்ணி ..... அவனை பட்டென்று விலக்கிவிட்டு அவசரமாக மேசையில் இருந்த போனை எடுத்து முத்துவிடம் கொடுத்து “ மொதல்ல பேசுங்க?” என்று கூற....

அவளையே பரிதாபமாகப் பார்த்தபடி போனை ஆன் செய்து “ யார்?” என்று கோபமாக அதட்டினான்...

“ ஹலோ ஹலோ போலீஸ்கார் என்ன இவ்வளவு கோபம்? நான்தான் மான்சி” என்றாள்

நல்ல சமயத்தில் கெடுத்துட்டாளே என்று கோபம் அடங்காமல் “ ம்ம் சொல்லு” என்றான்...

“ என்ன போலீஸ் கிஸ்ஸடிச்சுகிட்டு இருந்தீங்களா? நல்ல நேரத்துல கெடுத்துட்டேனா?” என்று கிசுகிசுப்பாக பேசி முத்துவின் ப்ரஸரை கூட கொஞ்சம் ஏற்றினாள்...

“ ஆமா அது ஒன்னுதான் எனக்கு குறை..... கிட்டத்தட்ட ஒருவருஷமா மனசுக்குள்ள புதைஞ்சு கிடந்த ஆசைக்கு இப்பத்தான் பிள்ளையார் சுழி போட்டேன்... அதுக்குள்ள உனக்கு மூக்குல வேர்த்துடுச்சா?” என்று முத்து சலிப்புடன் சொல்ல...

“ அடப்பாவிங்களா இது உங்களுக்கே அநியாயமா இல்ல? இங்க நானு கல்யாணம் ஆகி மறுநாளே புருஷனைப் பிரிஞ்சு வந்து தவிக்கிறேன்... நீங்க ரெண்டு பேரும் முத்தம் குடுத்து ஒத்திகையா பார்க்குறீங்க” என்று மான்சி கேலியாக கூற....

“ ஓய் மச்சினி பிசாசு நிறுத்து நிறுத்து .....யாரு நீ பிரிஞ்சு இருக்கியா? அடிப்பாவி ஒரு அப்பாவிய ஏமாத்தி ஒரு மாசம் குடும்பம் நடத்திட்டு இப்போ என்னமோ ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி பேசுற” என்று முத்து சொல்ல...

“ யாரு அவனா அப்பாவி ... நான் சின்னதா ஒரு கோடுதான் போட்டேன்... அவன் அதுல நேஷனல் ஹவேயே போட்டான்... அவன் அப்பாவியாம்.... எல்லாம் நேரம்டா சாமி... சரி சரி ரொம்ப அழாதீங்க... போய் நான் சொன்னேன்னு நீங்க ரெண்டு குடுத்துட்டு... அப்படியே ரெண்டு திருப்பி வாங்கிகிட்டு அப்புறமா எனக்கு போன் பண்ணுங்க” என்று மான்சி சொன்னதும்...

இவர்களின் பேச்சை புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்த பவித்ராவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “ மறுபடியும் கிட்டப் போன உதைதான் குடுப்பா... மொதல்ல நீ எதுக்கு கால் பண்ண அதை சொல்லு” என்று கேட்டான் முத்து...

“ அது இப்பத்தான் தகவல் வந்தது என் புருஷன் சென்னை கிளம்பி வர்றானாமே.... உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா?” என்று மான்சி கேட்க.....

“ ஆமாம் மான்சி பழைய வேலைக்கு ஆபிஸ்ல கேட்டானாம் நாளைக்கு வரச்சொல்லிருக்காங்கலாம் அதான் வர்றான்”

“ அப்போ நான் நாளைக்கு எப்படி வர்றது?.... அவன் வர்றது தெரிஞ்சு நீங்க என்னை ப்ளான் பண்ணி வரவச்ச மாதிரி ஆயிடுமே? ” என்று மான்சி கவலையுடன் கூற...

“ ஆமாம் மான்சி... ஆனா அது ஒன்னும் பிரச்சனையில்லை... சத்யன் புரிஞ்சுக்குவான்... அப்புறம் எனக்கு ஒரு யோசனை தோனுது.... நீ உன் ரூமை எல்லாம் காலி பண்ணிட்டு நேரா இங்க வந்துடு அப்புறம் இங்கிருந்தே நீ ஊருக்கு கிளம்பு..” என்று முத்து சொன்னதும்..

“ ம் சரி..... ஆமா உங்க வீட்டுலயே எங்களுக்கு பர்ஸ்ட்நைட் ஏற்பாடு பண்ணப் போறீங்களா?” என்று மான்சி ரகசியமாக கேட்க...முத்து தன் தலையில் அடித்துக்கொண்டு “ தம்பி சத்யா இவளை எப்புடிடா சமாளிக்கப் போற” என்றவன்

ரிசீவரில் “ ஏய் பிசாசு அலையாத... எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க... பிள்ளையாரே காஞ்சுபோய் கிடக்காராம் இதுல பெருச்சாளிக்கு கொழுக்கட்டை கேட்குதாம்..... ஒழுங்கா நாளைக்கு வந்து அடக்க ஒடுக்கமா இரு” என்றான்

“ ம்ம் வர்றேன்.... ஆனா ஒரு விஷயத்தை க்ளியர் பண்ணிட்டு போங்க மாம்ஸ் ...... இதுல அந்த பெருச்சாளி நீங்க தானே?” என்று மான்சி கேட்க...

“ மொதல்ல போனை வைடி பிசாசு ” என்று கத்தி போனை வைத்துவிட்டு “ ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா இவ கூட பேசினதுல சாப்பிட்டதே ஜீரணம் ஆகி போச்சு... இன்னும் சப்பாத்தி இருந்தா எடுத்துட்டு வா பவி” என்று மறுபடியும் சேரில் அமர்ந்தான்....

பவித்ரா சிரித்தபடி மீண்டும் தட்டு வைத்து அதில் சப்பாத்தி வைத்தபடி “ மான்சி சரியான வாயாடி போல” என்று கூற...

“ ஆமாம் பவி.... ஆனா அவ பேசுறது சிரிக்கிறது அழுகுறது... எல்லாமே எனக்கு நம்ம மதுவைத்தான் ஞாபகப்படுத்துது.... உண்மையிலேயே மான்சி ஒரு குழந்தை மாதிரி பவி..... எதையுமே மனசுல வச்சுக்கத் தெரியலை... எல்லாத்தையும் கொட்டிடுறா ” என்றபடி சாப்பிட்டவனை பெருமையுடன் பார்த்தாள் பவித்ரா...

தனது மனைவியின் வயதை ஒத்த ஒரு பெண்ணை தன் மகளாக நினைக்கும் மனபக்குவம் எத்தனை ஆண்களுக்கு இருக்கும்... முத்துவின் ஒவ்வொரு செயலுமே அவனை இமயத்திற்கு உயர்த்தியது....

மவுனமாக சாப்பிட்டுவிட்டு முத்து கைகழுவ போக.... பவித்ரா படுக்கையறையை நோக்கி சென்றாள்... முத்து கைகழுவி விட்டு அவசரமாக அவள் பின்னோடு போக..... கட்டிலருகே போய் நின்று திரும்பியவள்... என்ன என்று பார்வையாலேயே கேட்க...

“ இல்ல சும்மாதான்” என்று வழிந்தான் முத்து... “ ம்ம் போகும்போது கதவை சாத்திட்டு போங்க” என்று பவித்ரா அலட்சியமாக கூற..... அவளையே முறைப்புடன் பார்த்தவன் “ ராட்சசி” என்றபடி சுவற்றில் ஓங்கி குத்தினான்...

பவித்ரா பொங்கி வந்த வாய்கொள்ளா சிரிப்புடன் “ மான்சி பிசாசு... நான் ராட்சசியா? பொண்ணுங்களை நல்ல பேர் சொல்லி கூப்பிடத் தெரியாதா” என்று கேலியாக பவி கேட்க...

“ அது நல்ல பொண்ணுங்களை நல்ல பேர் சொல்லி கூப்படலாம்..... நீங்கல்லாம் ஆம்பிளைகளை சுத்தல்ல விட்டு வேடிக்கை பார்க்குறீங்களே அதான் இந்த பெயர்” என்று விளக்கம் சொன்னவன் “ எனக்கும் மானே தேனே .. கண்ணே மணியேன்னு.. கொஞ்ச ஆசையாத்தான் இருக்கு இங்க விட்டாத்தானே?” என்று ஏக்கமாக கூற....

சற்றுநேரம் மவுனமாக இருந்த பவித்ரா “ உங்க மனசு இப்பதானா எனக்கு தெரியும்? நாம எப்பவோ புரிஞ்சுகிட்டது தானே... ஆனாலும் சில விஷயங்கள் பேசி முடிவெடுக்கனும்... அதுவரை காத்திருங்க” என்றாள் மெல்லிய குரலில்....

மேலும் பேசி தற்போதைய சூழ்நிலையை கெடுத்துக்கொள்ள விரும்பாத முத்து அறைக்குள் வந்து தூங்கும் மகளுக்கு முத்தமிட்டு விட்டு... அறையிலிருந்து வெளியேறினான்...

மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே சத்யன் வந்துவிட்டான்.... கதவை திறந்த முத்து சத்யனின் பையை வாங்கிக்கொள்ள.... காலிங்பெல் சத்தம் கேட்டு விழித்து எழுந்து வந்த பவித்ரா சிறு புன்னகையுடன் சத்யனை வரவேற்றாள்...

படுக்கையறையில் மதுமிதாவுடன் சத்யனை படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு பவித்ரா அம்மா படுத்திருந்த திவானுக்குப் பக்கத்தில் ஒரு பெட்சீட்டை விரித்து படுத்துக்கொண்டாள்

காலையில் எழுந்ததும் பக்கத்தில் உறங்கிய சத்யனைப் பார்த்ததும் உற்சாகத்துடன் அவன் மீது ஏறிய மதுமிதா சத்யனின் முதுகில் படுத்துக்கொண்டு “ சித்தப்பா என்ன வாங்கிட்டு வந்த?” என்று மெல்ல காதை கடிக்க...

கவிழ்ந்து படுத்தப்படி சத்யனும் ரகசியமாக “ என்னோட பேக் கட்டிலுக்கு அடியில இருக்கு... அதுல சைடு ஜிப்ல நிறைய சாக்லேட் இருக்கு எடுத்துக்கடா செல்லம்” என்று கூற...

அவர்களுக்குப் பின்னால் நின்ற முத்து “ பவி இங்கே பயங்கர கடத்தல் கும்பல் ஒன்னு சாக்லேட்டை கடத்துது.... சீக்கிரமா வந்து தடுக்கப் பாரு .... அப்புறம் நான் இம்பர்மேஷன் சொல்லலேன்னு சொல்லக்கூடாது”என்று நல்லவனாய் மாறி பவித்ராவுக்கு உரத்த குரலில் தகவல் சொன்னான்...



கையில் தோசை கரண்டியுடன் வந்த பவி படுத்திருந்த சத்யனின் பாதத்தில் ஒரு அடி வைத்து “ ஓய் மாமா.... அவளுக்கு டாக்டர் சாக்லேட்டே குடுக்க கூடாதுன்னு சொல்லிருக்கார்... நீ என்னடான்னா சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கியா?” என்று அதட்டினாள்...

புரண்டு படுத்த சத்யன் மதுமிதாவை நெஞ்சில் போட்டு அணைத்தபடி “ அவன் கெடக்கான் டாக்டர்னாலே அப்படித்தான் சொல்லுவாங்க... நீ அம்மாகிட்ட எல்லாத்தையும் குடுத்துட்டு தினமும் ஸ்கூல் போகும்போது ஒன்னு ஒன்னா வாங்கிட்டு போகனும் கண்ணம்மா” என்று சத்யன் சொல்ல...

“ என்னது அம்மாவா? யாரு சித்தப்பா அம்மா?” என்று மதுமிதா குழப்பத்துடன் கேட்க...

பவித்ரா இன்னும் மதுமிதாவுக்கு அம்மாவாக அறிமுகப்படுத்தப் படவில்லை என்று சத்யனுக்கு அப்போதுதான் புரிய... முத்துவை நிமிர்ந்துப் பார்த்தான்.. அவன் தலையசைத்து மறுத்தான்.... பவித்ரா தலையை நிமிரவே இல்லை...



No comments:

Post a Comment