Saturday, December 19, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 2

பவித்ராவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு தனது வண்டில் மின்னலாய் பறந்தவன் போலீஸ் ஸ்டேஷன் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதற்கு முன்பே உள்ளிருந்து வந்த எஸ் ஐ முத்துகுமார் “ வாங்க சத்யன் ” என்று சத்யனின் தோளில் கைப்போட்டு உள்ளே அழைத்துச் சென்றான்...

கடந்த சில நாட்களாக இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட காரணத்தால் நல்ல நண்பர்களாக மாறியிருந்தனர் இருவரும்... சத்யனும் தோழமையோடு முத்துகுமாருடன் போனான்..

தனது அறைக்குச் சென்று சத்யனுக்கு ஒரு நாற்காலியை காட்டிவிட்டு தனது சீட்டில் போய் அமர்ந்து முத்து “ இன்னும் ஒன்றரை மணி நேரத்துல லாரிகள் சென்னைக்குள்ள நுழையும் சத்யன்.... செக்போஸ்ட்டில் கொஞ்சநேரம் வண்டிகளை மடக்கி வைக்க சொல்லிருக்கேன்... அதுக்கப்புறம் நாம வண்டிகளை பின் தொடர சரியாக இருக்கும்” என்று சொல்ல...

“ இப்போ நாம எத்தனைபேர் போகப்போறோம் சார்” என்று சத்யன் கேட்க...



“ இல்லை சத்யன் இந்த மாதிரி விஷயங்களுக்கு நம்மக்கூட ஒரு டீமை கூட்டிட்டுப் போகமுடியாது அதேபோல காரோ ஜீப்போ எடுத்துட்டுப் போகமுடியாது... பைக்தான் வசதி.... ஒரு லாரியின் பின்னால ரெண்டுபேருன்னு மொத்தம் ஆறு பேர் மூனு பைக்ல போகப்போறோம்... நான் நீங்க ஏட்டு அப்புறம் மூனு கான்ஸ்டபிள்கள் அவ்வாறுதான்... அதுக்கப்புறம் தேவைப்பட்டா எங்க ஆட்களை வரவழைச்சுக்கலாம்” என்று விளக்கினான் முத்துக்குமார்...

“ ஓகே சார் இப்போ புரியுது... யார் யார் எப்படி போகனும்... உங்களுக்கு எப்படி தகவல் சொல்லனும் அப்படிங்கறதை மட்டும் விபரமா சொல்லிடுங்க சார்” என்று சத்யன் ஆர்வமாக கேட்க....

அப்போது மற்ற நால்வரும் முத்துகுமாரின் அறைக்குள் வந்து விரைப்பாய் ஒரு சல்யூட் வைத்துவிட்டு பனிவாக நின்றனர்....

முத்துகுமார் எல்லோருக்கும் பொதுவாக பேச ஆரம்பித்தான் “ சத்யன் நீங்களும் கான்ஸ்டபிள் வரதனும் ஒரு பைக்ல போங்க சத்யன்... நானும் இன்னொரு கான்ஸ்டபிளும் ஒரு பைக்ல வர்றோம்... ஏட்டும் நீங்களும் கான்ஸ்டபிள் ராமுவும் ஓரு பைக்ல வாங்க... எல்லாரும் மொபைலை சைலன்ட்ல போட்டுக்கங்க... எந்த தகவலாயிருந்தாலும் மெசேஜ் மூலமா சொல்லுங்க.. பைக்ல பெட்ரோல் ஃபுல்லா இருக்கட்டும்.... என்னைக் கேட்காம தமிழ்நாடு பார்டர் தாண்டக்கூடாது.” என்றவன் சத்யன் பக்கமாக திரும்பி “ சத்யன் உங்க மொபைல்ல நெட் கனெக்ஷன் இருக்கா?” என்று கேட்க...

“ இருக்கு சார் “ என்றான் சத்யன்

“ நல்லதா போச்சு.... யாருக்கு என்ன தகவல் கிடைச்சாலும் அதை மெயில் பண்ணிடுங்க... போட்டோஸ் எடுக்க வேண்டியிருந்தால் மொபைல் மூலமா எடுத்து உடனே இங்கே ஸ்டேஷனுக்கும் கமிஷ்னர் ஆபிஸ்க்கும் மெயில் பண்ணுங்க” என்று தெளிவாக கூறிவிட்டு அவரவருக்கு தேவையான மெயில் ஐடிக்களை கொடுத்துவிட்டு “ ஓகே டன்.... எல்லாரும் கிளம்புவோம்” என்றுவிட்டு தனது ஹெல்மேட்டை எடுத்துக்கொண்டு சத்யனுடன் வெளியே வந்தான்....
பைக் அருகே வந்து சத்யனுடன் நின்றவன் “ உங்களோட ஆர்வத்தைப் பார்த்து எனக்கு ஆச்சரியமா இருக்கு சத்யன்... சொல்லப்போனா உங்களைப் பார்த்துதான் எனக்கே இந்த கேஸ்ல ஆர்வம் அதிகமாச்சு... இல்லேன்னா இந்த ஒரு வாரமா எல்லா லாரி பின்னாலயும் அலைஞ்சதுக்கு சரிதான் போங்கடான்னு பைலை குளோஸ் பண்ணிட்டு போயிருப்போம்.... பார்க்கலாம் நீங்க வர்ற ராசியாவது எவனாவது மாட்டுரானான்னு.. மாட்டுனா உங்களுக்கும் பிரமோஷன்.. எனக்கும் இன்ஸ்பெக்டரா பிரமோஷன் வரும்.... ஏன்னா இது பலநாள் பிரச்சினை சத்யன் ” என்றவன் ஒரு பையன் எடுத்து வந்து கொடுத்த டீ கப்பை எடுத்து சத்யனிடம் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்....

சத்யன் டீயை உறிஞ்சியபடி “ சார் நான் எப்படியும் உங்களைவிட ரெண்டு மூனு வயசு சின்னவனாத்தான் இருப்பேன்... அதனால என்னை வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம் ஒரு மாதிரியா இருக்கு சார்” என்று சங்கடமாய் சொல்ல...

குடித்த கப்பை கீழே போட்டுவிட்டு “ சரி நான் சத்யன்னு கூப்பிடுறேன்... நீயும் வெறும் முத்துன்னு கூப்பிடு... நான் என்னமோ நாற்பது வயசு ஆள் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை சார் போடுற... எனக்கும் முப்பது தான் ஆகுது சத்யன்” என்று இலகுவாக சிரித்தபடி கூறினான் முத்துகுமார்...

சத்யனும் “ ஓகே முத்துகுமார் இனிமேல் பெயர் சொல்லியே கூப்பிடுறேன்” என்று சினேகமாக சிரித்தான் சத்யன்...

அதற்குள் மற்றவர்களும் மப்டியில் தயாராகி வந்துவிட... எல்லோரும் மூன்று பைக்கில் புறப்பட்டார்கள்... தாம்பரம் தாண்டியதும் இருந்த செக்போஸ்ட் அருகே பைக்கை நிறுத்திவிட்டு காத்திருந்தனர்.... இவர்களை அதிகநேரம் காக்க வைக்காமல் அந்த மூன்று கன்டெய்னர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது

சத்யன் மனதுக்குள் ஏற்பட்ட பரபரப்புடன் முத்துகுமாரைப் பார்க்க... அவன் நெஞ்சில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு அந்த லாரிகளின் நம்பர்களை ஒரு சீட்டில் எழுதி சத்யனிடமும் ஏட்டிடமும் கொடுத்து விட்டு... “ நீங்க இந்த வண்டிகள் பின்னாடி பாளோப் பண்ணுங்க... ஆந்திரா பார்டர் போனதும் மறுபடியும் சந்திக்கலாம்” என்றவன் சத்யனின் அருகே வந்து அவனை தோளோடு அணைத்து ...

“ சத்யா உன்னோட ஆர்வம் நல்லதுதான் என்றாலும்... இதுபோல கிரிமினல் வேலை செய்றவங்க எதுக்கும் துணிஞ்சு நிப்பானுங்க.. அதனால நீ எப்பவுமே ஜாக்கிரதையா இருக்கனும்... ஏதாவது ஆபத்துன்னா எனக்கு உடனே கால் பண்ணு சத்யா நான் முடிஞ்சளவு சீக்கிரமா ஸ்பாட்டுக்கு வந்துர்றேன்.... நீயா தனியாப் போய் மாட்டிக்காத சத்யா ” என்று அன்பும் கவலையும் கலந்த குரலில் கூற...

சத்யன் பதிலுக்கு அவன் தோளைத் தட்டி “ கவலையே வேனாம் முத்து ... உங்களை கேட்காம நான் எதையுமே செய்யமாட்டேன்” என்று அவனுக்கு நம்பிக்கையளித்துவிட்டு தயாரானான்...

லாரிகள் புறப்பட இவர்களும் ஹெல்மேட் அணிந்துகொண்டு பைக்கில் தொடர்ந்தார்கள்... தாம்பரம் பைபாஸ் வரை ஒன்றாக சென்ற வண்டிகளில் இரண்டு லாரிகள் திருவள்ளுவர் செல்லும் சாலையில் பிரிய.... சத்யன் தொடர்ந்த லாரி மட்டும் கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் சென்றது....

முத்துகுமார் சத்யனைப் பார்த்து பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு திருவள்ளுவர் சாலையில் செல்ல... சத்யன் கும்மிடிப்பூண்டிக்கு பைக்கை திருப்பினான்.. ஆனால் அந்த லாரி கும்மிடிப்பூண்டி பக்கத்தில் சத்யவேடு செல்லும் கிளைச் சாலையில் பயணிக்க சத்யனுக்கு உள்ளுக்குள் அலாரம் அடித்தது...

பின்னால் இருந்த கான்ஸ்டபிள் சத்யனின் தோளை அழுத்தி “ சார்” என்று உற்சாகமாக குரல்கொடுக்க... அவருக்கு ஒரு தலையசைப்பை பதிலாக சொல்லிவிட்டு மறைந்து மறைந்து அந்த கன்டெய்னரை பின்தொடர்ந்தான் சத்யன்... எதையோ சாதிக்கப் போகும் பரபரப்பு அவனிடத்தில்...

சத்யவேடை தாண்டி வலது பக்கமாக பிரிந்து சென்ற மண் சாலையில் லாரி திரும்ப... நெஞ்சு படபடக்க பின்தொடர்ந்த சத்யன் லாரி ஒரு பிரமாண்டமான செட்டின் கீழ் போய் நிற்க... சத்யனும் தனது பைக்கை காட்டுக்குள் ஓரங்கட்டி ஒரு மறைவான இடத்தில் விட்டுவிட்டு மரங்களின் மறைவில் இருந்தபடியே தனது மொபைலை எடுத்து ப்ளாஸை ஆப் செய்துவிட்டு செட்டில் நடப்பவற்றை படம் எடுத்தபடியே பார்வையிட்டான்.... 



அந்த செட் முழுவதும் ஜெகஜோதியாக லைட்டுகள் எரிய... அந்த வெளிச்சத்தில் நடப்பவற்றை துள்ளியமாக படமெடுக்க முடிந்தது சத்யனால்....

லாரி டிரைவர் இறங்கி செட்டின் ஓரமாய் இருந்த அறைக்குள் நுழைந்து சற்றுநேரம் கழித்து வெளியே வரும்போது அவனுடன் திபு திபுவென பத்து பதினைந்து பேர் வந்து லாரியை சுற்றிலும் நின்றார்கள்... நான்குபேர் லாரிக்கும் அதில் ஏற்றப்பட்டிருந்த கன்டெய்னருக்கும் இருந்த பிணைப்புகளை விடுவிக்க... எங்கிருந்தோ இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வந்து அந்த புத்தம்புதிய கன்டெய்னரை கவ்வி தூக்கி சற்று தொலைவில் வைத்துவிட்டு மற்றொருபுறம் இருந்த இத்துப்போன பாடவதியான கன்டெய்னரை தூக்கி இந்த லாரியில் வைத்துவிட்டு இயந்திரங்கள் நகர்ந்துவிட்டது ...

உடனே அங்கிருந்தவர்கள் பாதியாக பிரிந்து லாரியின் அடியில் போய் கழட்டி விற்கக்கூடிய... எளிதில் மாற்றக்கூடிய லாரியின் பார்ட்ஸ் எல்லாவற்றையும் அவசர அவசரமாக கழட்டினார் ... அதற்கு பதிலாக பழைய கயலான் கடை பொருட்களை எடுத்து வந்து மாட்டினார்கள்... இன்னும் சிலர் லாரியில் இருந்த பத்து புத்தம்புதிய டயர்களை கழட்டி விட்டு ரீடெய்டு செய்யப்பட்ட பழைய டயர்களை மாட்டி அவசரமாக வீல் போல்ட்டை டைட் செய்தார்கள்....

ஆக அந்த கன்டெய்னர் லாரியின் சேஸ் மற்றும் இன்ஜின் இரண்டைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் மாற்றப்பட்டு ஒரு மணிநேரத்தில் அந்த புத்தம்புதிய லாரி கிட்டத்தட்ட முப்பது வருடம் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இத்துப்போன வண்டியாக மாறிவிட்டது....

அடுத்ததாக கன்டெய்னரின் கதவு திறக்கப்பட்டது.... செட்டின் பின்புறமாக மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பயன்படாத டயர்கள் கடகடவென உருட்டி வரப்பட்டு கன்டெய்னரில் ஏற்றப்பட்டு ஒரிஜினல் டயர்களைப் போல் நேர்த்தியாக அடுக்கப்பட்டது...

சத்யன் அத்தனையையும் பயங்கர அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.... ‘ எத்தனை நேர்த்தியான திருட்டு.... தன் பொருளை தானே திருடிவிட்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனின் தலையில் மிளகாய் அரைக்கும் பக்காவான திருட்டு....

சத்யன் தனது மொபைல் மூலமாக எடுத்த அத்தனை படங்களை whats app .. மூலமாக கமிஷனர் அலுவலகம் மற்றும் தனது ஹெட் ஆபிஸ் பிறகு முத்துகுமாருக்கும் அனுப்பினான்... நடந்தவற்றை விபரமாக டைப் செய்து எல்லோருக்கும் மெயிலில் அனுப்பினான்.....

பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் சத்யனின் தோளில் சீண்டி “ எப்படி சத்யன் இவ்வளவு கரெக்டா ப்ளான் பண்றானுங்க?” என்று வியப்புடன் கேட்க...

“ இது நானும் முத்துகுமாரும் எதிர்பார்த்தது தான்.... ஒரு வாகணம் நெருப்பில் எரிந்து போனால் அந்த வாகனத்தோட சேஸ் மற்றும் இன்ஜின் நம்பர் மட்டும் போதுமானது இன்சூரன்ஸ் க்ளைம் பண்ண.... ஏன்னா அது மட்டும் அழியாது.... அதனால்தான் இவனுங்க அது ரெண்டை மட்டும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் மாத்திட்டானுங்க .... கன்டெய்னர்ல ஏத்தின டயரும் மாட்டு வண்டிக்கு கூட பயன்படாத பொத்தல் டயர்கள்.. ஆகமொத்தம் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கற மாதிரி... இன்சூரன்ஸ்க்கு இன்சூரன்ஸ்ம் கிடைச்சிடும்... லட்சக்கணக்கில் மதிப்புள்ள லாரியோட பார்ட்ஸ் கிடைச்சிடும்... கோடிக்கணக்கில் மதிப்பான புது டயர்களும் கிடைச்சிடும்... எப்படிப்பட்ட பக்காவான ப்ளான் இது... இது தெரியாம நீங்களும் ஒரு எப் ஐ ஆரை தூக்கி குடுத்துடுறீங்க நாங்களும் கேனையனுங்க மாதிரி இன்சூரன்ஸை க்ளைம் பண்ணி தந்திடுறோம்... எப்படிப்பட்ட முட்டாள்தனம்” என்று கூறிய சத்யன் ஆத்திரத்தில் கொதித்தான்.....

குரல் தனிந்து வந்தாலும் அதில் கோபம் உச்சத்தில் இருந்தது.... அப்போது முத்துகுமாரிடம் இருந்து பதில் மெயில் வர சத்யன் அதை வாசித்தான்..

“ சத்யா நான் இன்னும் கொஞ்சநேரத்தில் போலீஸ் போர்ட்ஸோட ஸ்பாட்டுக்கு வர்றேன் .. நீ என்ன செய்றேனா? அந்த புது கன்டெய்னர் இறக்கி வச்சது அங்கேயே இருக்கா அல்லது வேற ஏதாவது லாரியில ஏத்திக்கிட்டு போறாங்களான்னு பார்த்து எனக்கு மெசேஜ் பண்ணு’ என்றுதான் மெயில் வந்திருந்தது...

சத்யனுக்கும் அப்போதுதான் இறக்கி வைத்த கன்டெய்னரின் ஞாபகம் வர மரங்களின் மறைவிலிருந்து விலகி சற்று தள்ளியிருந்த வேறொரு மரத்தின் மறைவில் நின்று அந்த புதிய டயர்கள் வந்த புது கன்டெய்னரை பார்க்க... அதே பொக்லைன் இயந்திரங்கள் அதைத் தூக்கி மற்றொரு லாரியில் வைத்துக்கொண்டிருந்து...

சத்யன் பார்த்தவற்றை வேகமாக டைப் செய்து முத்துகுமாருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்..... ஆனால் பதில் மெசேஜ்க்கு பதிலாக கால் செய்தான் முத்துகுமார்....

டிஸ்ப்ளேயின் வெளிச்சத்தை கையால் மறைத்துபடி செல்லை ஆன்செய்து “ சொல்லுங்க முத்து.. அடுத்து என்ன செய்யனும்” என்று கேட்டான் சத்யன்....

எதிர்முனையில் இருந்த முத்து பரபரப்புடன் “ சத்யா நாங்க வந்துகிட்டு இருக்கோம்.. ஆனா நீங்க இருக்கிறது சென்னையின் கடைசி... நாங்க அங்கே வந்து சேர கொஞ்சம் நேரமாகும்... இப்போ நமக்கு முக்கியம் அந்த புது டயரெல்லாம் எங்கே போகுதுன்னு கண்டு பிடிக்கனும்... இப்போ விட்டுட்டா பிறகு கண்டுபிடிக்க நமக்கு சிரமமாகிவிடும் ..... நீங்க கான்ஸ்டபிள இங்கேயே விட்டுட்டு அந்து லாரியை தொடர்ந்து போங்க சத்யன்... நீங்க எங்க இருக்கீங்கன்னு அடிக்கடி தகவல் சொன்னா நாங்க பாதியாக பிரிஞ்சி நீங்க இருக்குற இடத்துக்கு வந்துர்றோம்” என்று சொல்லி முடிக்க...

“ ஓகே சார் அந்த புது டயர்களை எங்க கொண்டு போறாங்கன்னு நான் போய் பார்க்கிறேன்... வழியில நிறுத்தி நிறுத்தி உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்ற சத்யன் இணைப்பை துண்டித்து விட்டு கான்ஸ்டபிளிடம் விபரம் கூறி அவரை மறைவாக இருக்கும்படி கூறிவிட்டு புதிய கன்டெய்னர் ஏற்றப்பட்ட லாரியை பின் தொடர பைக்கில் ஏறியமர்ந்து தயாராக இருந்தான் ...

ஒருபக்கம் இவர்கள் பின்தொடர்ந்து வந்த லாரியில் இன்னும் எதைஎதையோ கழட்டி மாட்டிக்கொண்டிருக்க .... மறுபக்கம் புதுடயர்கள் ஏற்றிய கன்டெய்னரை கூலியாட்கள் லாரியுடன் பிணைத்ததும் அந்த லாரி சற்றுநேரம் கழித்தே கிளம்பியது.... சத்யன் சற்று இடைவெளி விட்டு அந்த லாரியை பின்தொடர்ந்தான்

நல்ல கும்மிருட்டு... லாரி கிளைச் சாலையை கடந்து சத்யவேடு செல்லும் மெயின்ரோடுக்கு சென்றடைய இன்னும் சற்று தொலைவே எனும் நிலையில் முன்னால் சென்ற லாரி ஓரங்கட்டி நின்றது... சத்யனும் மறைவாக பைக்கில் நிறுத்தினான்....

‘ ஏன் லாரி நின்றுவிட்டது?’ என்ற குழப்பத்துடனேயே காத்திருந்தான் சத்யன்.... அப்போது சத்யன் மொபைலில் மெசேஜ் ... ‘ முத்துகுமார் டீம் சத்யவேடு வந்துவிட்டதாக மெசேஜ்.... சத்யன் நிம்மதி பெருமூச்சுடன் ஓகே என்று பதில் அனுப்பிவிட்டு ‘ என்னாச்சு இன்னும் வண்டி கிளம்பவில்லை?” என்று எண்ணியபடியே அந்த லாரியைப் பார்த்தான்

முன்னால் நின்ற லாரியின் மீது வைத்திருந்த கவனத்தை சற்று பின்னாலும் செலுத்தியிருந்தால் அந்த சம்பவத்தில் இருந்து சத்யன் தப்பியிருக்கலாம்....

சத்யனுக்குப் பின்னால் ஹெட்லைட்டை ஆப் செய்துவிட்டு சத்தமின்றி வந்து நின்ற பைக்கிலிருந்து இறங்கிய இருவர் கையில் வைத்திருந்த வீல் ஸ்பேனருடன் சத்யனை நெருங்கினர்....

சத்யனின் உள்ளுனர்வு உந்த சட்டென்று திரும்பினான்.....

அவன் திரும்பவும் வந்தவன்களில் ஒருவன் “ என்னடா போலீஸ்கார நாயே வேவு பார்க்க வந்தியா?” என்றபடி வீல் ஸ்பேனரை ஓங்கி சத்யனின் வலதுபக்க மண்டையில் இறக்கவும் சரியாக இருந்தது....

சத்யன் துள்ளவில்லை துடிக்கவில்லை... தொண்டியிலிருந்து வெளிப்பட்ட ஹக் என்ற ஒலியுடன் அப்படியே தரையில் மல்லாந்து விழுந்தான்....

சத்யன் நினைவு தப்புவதற்கு முன்பு காதுகளில் இறுதியாக ஒலித்தது “ டேய் நிறைய போலீஸ் வண்டி வருது அய்யாவுக்கு தகவல் சொல்லுடா?” என்ற அலறலும் அதைத் தொடர்ந்து வந்த போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலியும் மட்டும் தான்.......

சற்றுநேரத்தில் அங்கே இரண்டு போலீஸ் ஜீப்புகளும் ஒரு போலீஸ் வேனும் வந்து நிற்க முதலில் இறங்கிய முத்துக்குமார் சத்யனின் பைக் அருகில் ஓடி வந்தான்

தனது டார்ச்சை அடித்து சுற்றிலும் பார்த்தவன் ரத்தவெள்ளத்தில் கிடந்த சத்யனைப் பார்த்ததும் ரத்தம் உறைந்து போனவனாக “ அய்யோ சத்யா” என்ற கதறலுடன் குனிந்து சத்யனை அள்ளினான்....

சத்யனுக்கு துடிப்பு இருக்கிறது என்று உணர்ந்த முத்துகுமார் .... சத்யனை ஒரு ஜீப்பின் பின்புறத்தில் கிடத்திவிட்டு மற்றவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு சத்யனுடன் மருத்துவமனை நோக்கி ஜீப்பில் விரைந்தான்......

சற்றுநேரத்தில் அந்த ஒரு வேன் போலீஸாரும் மொத்த கூட்டத்தையும் சுற்றி வளைத்தனர்.... இரண்டு லாரிகளும் கைப்பற்றப்பட்டது.... அனைவரையும் கைதுசெய்து வேனில் ஏற்றினார்கள்.... அந்த இடம் முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டில் வந்தது....

மருத்துவமனைக்கு விரைந்த முத்துகுமார் சத்யனை கைகளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் ஓடினான்.... எதிரே ஒருவர் ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு வர அதில் சத்யனை கிடத்திவிட்டு அந்த நபரை ஒதுக்கிவிட்டு இவனே தள்ளிக்கொண்டு ஓடினான் ..

எமர்ஜென்சி வார்டில் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட முத்துகுமார் அங்கிருந்து பெஞ்சில தொப்பென்று விழ.... சத்யன் உள்ளே எடுத்துச்செல்லப் பட்டான்

சத்யனை எடுத்துச்சென்ற ஸ்ட்ரெச்சர் வெளியே எடுத்துவந்து விடப்பட்டது... அந்த ஸ்ட்ரெச்சரின் நடுவே இருந்த பள்ளமான பகுதியில் சத்யனின் ரத்தம் குளம் போல் தேங்கி ... தேங்கிய நிலையிலேயே உறைய தொடங்கியது

அதைப் பார்த்ததும் முத்துகுமாரின் நெஞ்சம் குலுங்கியது... வயிறு கலங்கியது... இந்த எட்டு வருட போலீஸ் வாழ்க்கையில் யாருக்காகவும் எதற்காகவும் கலங்கியதில்லை .... ஆனால் இன்று சத்யனுக்காக தனது தலையிலடித்துக்கொண்டு ஓவென்று கத்தியவனை அந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் அத்தனை பேரும் பார்த்து கண்கலங்கினார்கள் 

" நிறைய அறிவு...

" நிறைய திறமை ...

" நிறைய விவேகம்...

" நிறைய ஆற்றல்...

" கொஞ்சம் அழகு....

" இப்படி ஒரு ஆண் மகனை பூமியின்...

" கடைசி புள்ளிக்குத் தள்ளிவிட்டால்...

" அவன் நிச்சயம் மரித்துவிடுவான்!

கிட்டத்தட்ட ஒருவருடம் கழிந்த நிலையில்.... சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை..... பல ஏக்கர் பரப்பளவில் முகப்பில் மருத்துவமனையும் பின்புறம் பலதரப்பட்ட மரங்களை உள்ளடக்கிய வனப்பகுதியும் கொண்டது அங்கிருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் போர்ச்சுகீசியர்கள் முறைப்படி கட்டப்பட்ட பழங்கால கட்டிடங்கள்....

கீழ்பாக்கம் அரசுமனநல மருத்துவமனையில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதி தான்...... முன்புறத்தில் மட்டும் தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்ட வார்டுகள்.... சற்று தொலைவில் பெண்களுக்கான பகுதி.....

அதையும் கடந்து சென்றால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் குவாட்டர்ஸ்கள் ..... அடர்ந்த மரங்களின் நடுவே சிறுசிறு குடில்கள் போல் அமைக்கப்பட்டிருக்கும் அந்த குவாட்டர்ஸ்கள்..

.சில வசதியான நோயாளிகள் பணம் செலுத்திவிட்டு துணைக்கு ஒரு ஆளுடன் அந்த குடில்களில் தங்கி சிகிச்சை பெறலாம்.... மற்றபடி எல்லோருக்கும் சராசரியாக நாநூறு ரூபாய் தான் .... அந்த பணத்தை கட்டியதும் பச்சைநிற யூனிபோமும் ஒரு தட்டும் தரப்படும்.....

எத்தனையோ நோயாளிகளை விட்டுவிட்டு செல்லும் உறவினர்கள் திரும்ப வந்து அழைத்துச்செல்லது இல்லை.... வருடக்கணக்கில் அங்கேயே கிடந்து உயிரை விடுபவர்களும் உண்டு.....

அதேபோல் முதல் நாள் கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறாவது நாளே ஓடி வந்து செத்தாலும் என் வீட்டுலேயே கிடக்கட்டும் என்று கண்ணீருடன் அழைத்துச் செல்லும் உறவுக்கூட்டமமும் உண்டு....

முரட்டுத்தனம் செய்யாதவரை பகலில் சுதந்திரமாக உலாவலாம்.... சற்று பயங்கரமான மனநோயாளிகளை தனியாக பிரித்து சங்கிலியால் பிணைத்து தனியறையில் போட்டு வைப்பார்கள....

.இங்கே இருப்பவர்களின் என்பது சதவிகிதம் பேர் மனநோயாளி என்றால் இருபது சதவிகிதம் பேர் மனநோயாளியாக நடிப்பவர்கள் தான்.... அதிலும் பாலியல் சம்மந்தப்பட்ட மனநோயாளிகளுக்கு பைத்தியம் என்ற அங்கீகாரம் ஒரு போர்வை போல.... நினைத்த இடத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும் வக்கிரம் பிடித்த நோயாளிகளும் உண்டு

பார்க்க மருத்துவமனை என்றாலும் இதுவும் ஒரு ஜெயில் தான்.... அங்கே இருப்பது போலவே பீடி சிகரெட் மது கஞ்சா என்று சகலவிதமான பொருட்களின் புழக்கமும் உண்டு..... வார்டனை சரிகட்டினால் எதைவேண்டுமானாலும் உள்ளே கொண்டு வரலாம்.....நாற்பது பேர் அடங்கிய ஒரு வார்டுக்கு இரண்டு வார்டன்கள்....

நோயாளிகளின் உறவினர்கள் கொண்டுவந்து தரும் உணவுப் பொருட்களில் பாதிகூட இவர்களை கடந்து நோயாளிகளுக்கு போகாது.... மிகக்கேவலமான பிணந்தின்னிக் கழுகுகள்

மருத்துவமனை என்றதும் வார்டில் கட்டிலில் மெத்தையுடன் ஃபேன் காற்றில் படுக்க வைத்து குளுகோஸ் ஏற்றுவார்கள் என்று எண்ணிவிடக்கூடாது..... அதெல்லாம் சிலநாள் மட்டுமே தங்கி சிகிச்சை பெரும் புறநோயாளிகளுக்கு மட்டும் தான்.... வருடக்கணக்கில் அங்கேயே கிடக்கும் நாள்பட்ட நோயாளிகளுக்கு கந்தலாகிப் போன பாயும் ஒரு அலுமினிய தட்டும் தான்....

அரசு மருத்துவமனையாக இருந்தாலும் இங்கேயும் பணத்தைப் பொறுத்துத்தான் வைத்தியமும்.... மற்றபடி எல்லோருக்கும் வழங்கப்படும் ஒரே மாதிரியான மாத்திரைகள் தான்

தினமும் ஒட்டு மொத்தமாய் குளிக்க வைத்தாலும் தீராத அழுக்கு..... கழிவறையைகூட நோயாளிகளே சுத்தம் செய்துகொள்ளும் அவலமும் இங்கே உண்டு.... கையில் பிரம்புடன் சுற்றும் முரட்டுத்தனமான வார்டனை கண்டு மூத்திரம் போகாதவர்கள் ஒஷு சிலரே.....

வார்டன்களுக்கு பிடிக்காததை செய்தவனை அந்த பிரம்பால் விளாசும் போது பார்ப்பவன் மறுபடியும் தப்புசெய்ய மாட்டான்.... தப்பிக்க முயற்சிப்பவனுக்கும் இதே கதிதான்


No comments:

Post a Comment