Friday, December 25, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 17

தன் கண்ணீருக்கான பலன் கைமேலேயே கிடைத்துவிட்டது என்று எண்ணிய மான்சி ... அமைதியாக இருக்க...

“ சொல்லுடா நான் என்ன செய்யனும்?” என்று சத்யன் அவளை உலுக்கினான்

மான்சி ஒரு முடிவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ நீ ஊருக்குப் போகாம இங்கேயே தங்கிட்டா சத்யனுக்கு பைத்தியம் முத்திடுச்சு அதான் ஊரைவிட்டு போய்ட்டான்னு சொல்லுவாங்க... இப்பவே யாருக்கும் தெரியாம நாம கல்யாணம் பண்ணிகிறையும் நான் விரும்பலை.. நம்ம உறவுதான் நாலு சுவத்துக்குள்ள முறையில்லாமல் நடந்தது... கல்யாணமாவது ஊரறிய எல்லார் முன்னாடியும் நடக்கனும் சத்யா” என்று குரலில் காதல் வழிய வழிய பேசினாள் மான்சி...



சத்யனுக்கு மான்சி காதல் குரலில் பேசினாலே கவிதையாக தோன்றும்... இப்போது வழியும் காதலில் இன்னும் அவள் பக்கமாக ஈர்க்கப்பட்டு அவள் கையைப் பற்றியவன் “ நீ சொல்றதும் ரொம்ப சரி மான்சி ... அப்படின்னா இப்பவே கிளம்பி வா... நன்னிலம் போய் எல்லார்கிட்டயும் நம்ம விஷயத்தைப் பத்தி பேசி.. பவித்ராவுக்கும் நம்மளைப் பத்தி புரிய வச்சு... அதே தேதியில் நம்ம ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணசொல்லி கேட்போம்” என்று அழைத்தான் காதலியை.... மான்சியின் கண்ணீரும் கதறலும் அவனைப் புரட்டிப்போட்டிருந்தது

“ புரியாம பேசாதீங்க சத்யன்.... சின்ன வயசுலேர்ந்தே ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்னு நிச்சயம் பண்ணவங்க, இப்போ என்னை கொண்டு போய் நிறுத்தினா ஏத்துக்குவாங்களா? இல்லை நாம சொல்றதை ஒத்துக்கத்தான் செய்வாங்களா? வீனான கேள்விகளும் கலவரங்களும் வரும்.... உறவு விடடுப் போகக்கூடாதுன்னு நம்மளை பிரிக்கத்தான் நினைப்பாங்க.... இல்லை நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்னு நமக்குள்ள நடந்ததை எல்லாரிடமும் சொல்லி வழி கேட்டால்..... நாலு சுவத்துக்குள்ள நமக்குள்ள நடந்த நீங்க சொன்ன அந்த புனிதம் நாலுபேர் மத்தியில அசிங்கமா பேசப்படும் இதெல்லாம் தேவையா?” என்று கேள்வி கேட்டாள் மான்சி

சத்யன் குழம்பினான்.... மான்சி சொல்வது அத்தனையும் நியாயமானது... உண்மையும் கூட... ஆனால் அப்புறம் எப்படித்தான் இவளுடன் எனக்கு கல்யாணம் நடக்கும்?.. அதை அவளிடமே கேட்டான்

“ எந்த பிரச்சனையும் இல்லாம நமக்கு கல்யாணம் நடக்க எனக்கு ஒரேயொரு யோசனைதான் தோனுது.... அதைத்தவிர வேற வழியில்லை சத்யா” என்றாள் மான்சி

“ என்ன செய்யனும் மான்சி?” சத்யன் பரபரப்புடன் கேட்டான்

மான்சி சிறிதுநேரம் அவனையே உற்றுப் பார்த்தாள் பிறகு “ உனக்கும் பவித்ராவுக்கும் நடக்கவிருக்கும் நீ அவ கழுத்துல தாலி கட்டப் போற கடைசி நிமிஷம் வரை மாறக்கூடாது... அப்படியே நடக்கட்டும்... ஆனா தாலி கட்டும் போது அது என் கழுத்துல ஏறனும் சத்யா” என்றாள்...

சத்யன் திகைப்புடன் மான்சியின் முகத்தைப் பார்த்தான் ... அவன் பழகிய மான்சியின் முகத்தில் இப்படியொரு குரோதத்தை இதுவரை சத்யன் பார்த்ததில்லை... ஆனால் அவன் பார்த்தது பொய்யோ எனும்படி உடனே காதலால் செய்த கற்சிலை போல் அவள் முகம் மாறிவிட்டது

“ அது எப்படி மான்சி முடியும்?” என்று தனது சந்தேகத்தை கேட்டான் சத்யன்...

“ ஏன் முடியாது? நான் சொல்ற மாதிரி செய் சத்யா... இப்போ ஊருக்குப் போய் எதுவுமே நடக்காதது மாதிரி இயல்பா இரு... கல்யாணம் நடக்கிற அன்று கூட அமைதியா இரு... எல்லோர் இஷ்டப்படி மணவறையில் வந்து உட்கார்... கல்யாணப் பெண் புடவை கட்டிக்கொண்டு வர டைம் குடுப்பாங்கல்ல.. அந்த கேப்ல நான் உன் பக்கத்துல நான் வந்து உட்காருவேன்... அப்போ அந்த ஊரே பார்க்கும் படி என் கழுத்துல நீ தாலி கட்டனும் சத்யா... நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னா அதுக்கப்புறம் யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்தாலும் நம்மளை ஒன்னுமே பண்ண முடியாது” என்று மான்சி ஆவேசத்துடன் பேச...

சத்யன் அவளை வியப்புடன் பார்த்து “ ஆனா ஏன் இப்படி மான்சி?” என்று கேட்க..

மான்சி சட்டென்று கோபமானாள்... “ டேய் இந்த மணிரத்னம் படத்து கதாநாயகன் மாதிரி ஒரு வார்த்தையில கேட்டு கேட்டு என்னை டென்ஷன் ஆக்குன.. அப்புறம் சரிதான் போடான்னுட்டு போய்கிட்டே இருப்பேன்..” என்று கத்தினாள்

அவ்வளவு நெருக்கடியிலும் சத்யன் சிரித்துவிட்டான் “ சரி சரி டென்ஷன் ஆகாத... நான் கேட்குறது.... ஏன் இந்த சினிமா மாதிரி திடுக்குன்னு நாம கல்யாணம் பண்ணிக்கனும்.. பவித்ராகிட்ட சொன்னா அவள் என்னை புரிஞ்சுக்குவா மான்சி... அவ சம்மதத்தோடயே நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. நல்லா யோசிச்சுப் பாரு மணவறை வரைக்கும் வந்து பவித்ராவோட கல்யாணம் நின்னுட்டா அப்புறம் அவளோட கதி என்ன மான்சி?” என்று சத்யன் கேட்க...

அடப்பாவி அவளும் அவ அம்மாவும்... உன் அப்பாவும் கூனிக்குறுகி அந்த நிற்க்கனும் தானே நான் இவ்வளவு ஏற்பாடுகளும் செய்றேன்... இப்போ நீயே காரியத்தை கெடுக்குறியா? என்று மனதுக்குள் எண்ணியவாறே “ அப்போ பவித்ரா உன் அத்தை பொண்ணு என்பதால் தானே நீ அவளோட கதி என்னாகும்னு யோசிக்கிற.... ஆனா நான் ஒரு மாசமா உன்கூட குடும்பம் நடத்தி .. இப்போ நான் யாரோ மாதிரி பேசுறியே?” என்று மான்சியின் கண்ணீர் அவள் டாப்ஸை நனைக்க..

சத்யன் பதறிப்போனான் “ வேணாம் மான்சி அழாதே... பவித்ரா என்ன பாவம் பண்ணா? அவ ஏன் எல்லார் முன்னாடியும் அவமானப் படனும்னு தான் கேட்டேன் மான்சி”... என்று சத்யனின் குரல் மனிதாபிமானத்தோடு கெஞ்சிற்று...

விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்த மான்சி “ நீ எந்த காலத்தில் இருக்க? பவித்ராவோட கல்யாணம் நின்னா அடுத்து ஆயிரம் மாப்பிள்ளை அவளுக்காக வரலாம்.. அதில் ஒரு நல்லவனை தேர்தெடுத்து நாமளே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்... ஆனா நான்?... என்னை உங்க வீட்டுல ஏத்துக்காம போனா? அப்புறம் என்னோட கதி? நீ கட்டுற தாலிக்கயிறுக்கு பதிலா நான் தூக்கு கயிறைததான் தேடி போகனும்” என்று தனது முடிவை தீர்க்கமாக சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்...

சத்யன் அமைதியாக யோசித்தான்... வழக்கம் போல இப்போதும் மான்சியின் வாதம்தான் ஜெயித்தது... பிறந்ததில் இருந்து பேசி முடிவு பண்ண பவித்ராவை ஒதுக்கிவிட்டு மான்சியை ஏற்றுக்கொண்டு கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்க்க முடியாது தான்.. அதற்கு மான்சி சொன்ன வழிதான் சரி’ சத்யன் தனது நிலைப்பாட்டை மான்சிக்கு புன்னகையுடன் தெரியப்படுத்தினான்..

மான்சி சந்தோஷத்துடன் சிறு கூச்சலுடன் அவனைக் கட்டிக்கொண்டு முகமெங்கும் முத்தமிட்டு “ நம்ம கல்யாணம் நடந்துடுச்சுன்னு நெனைச்சுக்கிட்டு சந்தோஷமா இரு சத்யா... நான் கரெக்டா வந்து சேருவேன்... என் சத்யனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்...” என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கொஞ்சினாள்.... சத்யனுக்கு மான்சியின் வெளிப்படையான சந்தோஷத்தைப் பார்த்து சொர்கத்தையே நேரில் பார்த்தது போல் இருந்தது...

அதன்பிறகு மான்சி எப்படி வருவாள் என்று கேட்ட சத்யனுக்கு... ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு “ வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் சத்யா... நீ தாலியோட ரெடியா இரு” என்றாள் மான்சி

இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்... மதியம் ஆகிவிட்டதால்... மீண்டும் ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டார்கள் சத்யன் அவளை கல்லூரியில் விட்டுவிட்டு... அவள் கொடுத்த எண்ணற்ற முத்தங்களை தன் இதய அடுக்குகளில் சேகரித்துக் கொண்டு முத்துவின் வீட்டுக்கு கிளம்பினான்.....

முத்துவின் வீட்டுக்குள் நுழைந்ததுமே கோபமாக எதிர்கொண்ட முத்துவை சந்தோஷமாக கட்டிக்கொண்ட சத்யன் “ ஸாரிடா ஒரு முக்கியமான ப்ரண்ட்ட பார்க்கனும்னு வந்தேன்... பார்த்து பேசிட்டேன்... தயவுசெஞ்சு திட்டாதடா?” என்று கெஞ்சுவது போல் கொஞ்சினான்...
மூத்தவனாக முத்துவுக்கு கோபம் வந்தாலும்.. இப்படி கொஞ்சுபவனை என்ன செய்யமுடியும்? “ அப்படி எந்த பிரண்ட்டு டா எனக்கு தெரியாம?” என்று கேட்க..

“ முன்னாடி ஆபிஸ்ல என்கூட வேலை செய்த ப்ரண்ட்... கல்யாணத்துக்கு கூப்பிட வந்தேன்... கண்டிப்பா கரெக்ட் டைமுக்கு வர்றதா சொல்லிட்டாங்க” என்று சத்யன் உற்சாகத்துடன் கூறியதும்.. முத்துவும் நம்பிவிட்டான்...

அன்று இரவு சத்யன் முத்து மதுமிதா.. முத்துவின் அம்மா என நால்வரும் தஞ்சாவூர் நன்னிலம் கிளம்பினார்கள்




சத்யனின் திருமணம் கோலாகலமாக கலைக்கட்டியது.... செல்வத்துக்கு துணையாக முத்துவும் வந்து சேர அனைத்து வேலைகளும் மிகச்சிறந்த முறையில் நடந்தது.... சத்யன் ஓய்வு என்ற பெயரில் தனது அறையிலேயே அடைந்து கிடந்தான்...

மான்சி கரெக்டாக வந்து சேருவாளா? அவளுக்கும் தனக்கும் திருமணம் நடக்குமா? அதன் பிறகு ஏற்ப்படக்கூடிய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது? சத்யன் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் வண்டாய் குடைந்தது....

மதுமிதா பவித்ராவின் வீட்டில் இருந்து கொண்டு சத்யன் வீட்டுக்கே வரவில்லை... முத்துவோ மறந்தும் பவித்ராவின் வீட்டுப் பக்கம் போகவில்லை.... முத்துவின் மனம் பவித்ராவின் நினைவுகளை அடியாழத்தில் புதைத்துவிட்டு அதன் மேலே சத்யனின் நட்பை நிலைநாட்டியிருந்தது...

ஆதிலட்சுமிக்கு மகனின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் ஓடுவதை கண்டுகொண்டது... என்ன சத்யா என்று கேட்ட அம்மாவிடம் “ ஒன்னுமில்லம்மா மருந்து சாப்பிடுறதால சோர்வா இருக்கு” என்று கூறி சமாளித்தான்...

திருமணத்திற்கு முதல் நாள் இரவு எல்லோரும் திருமண மண்டபத்திற்கு கிளம்பினார்கள்... சத்யன் மனம் முழுவதும் பதட்டத்துடன் மணமகனாக அலங்கரித்துக்கொண்டு காரில் சென்று இறங்கிறான்....

அங்கே பவித்ராவை மணமகள் அலங்காரத்தில் பார்த்ததும் சத்யனின் பயம் இன்னும் அதிகரித்தது.... படுபாவி இந்த மான்சி தன்னோட மொபைல் நம்பரைக் கூட தரவில்லையே என்று சத்யன் உள்ளம் கொதித்தான்...

முத்து மணமகள் இருக்கும் திசையில் கூட தனது பார்வையை திருப்பாமல் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான் ....

கீதாவுக்கு கூட அண்ணன் கல்யாணத்தை முன்னிட்டு முதுகில் இறகுகள் முளைத்திருந்தது.... ஒரிடத்தில் நிற்காமல் பறந்தபடி ஒரு குட்டி எஜமானியாக எல்லோரையும் ஏவிக் கொண்டிருந்தாள்... அவள் அழகில் சொக்கிப்போன ஒரு இளவட்ட கூட்டமும் அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தது...

சத்யன் தவிப்புடன் அனைத்து சடங்குகளிலும் பங்கேற்றான்... அவனுக்கு இருந்த மனநிலையில் இரவோடிரவாக அங்கிருந்து ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தான்.... ஆனாலும் மான்சியின் வாக்கில் இருந்த நம்பிக்கை அவனை கட்டிவைத்திருந்தது...

பவித்ரா ஒரு பதுமையைப் போல் இவனருகில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தாள்... அவள் முகத்தில் கல்யாணக் கலை என்பது மருந்துக்கும் இல்லாமல் யாருக்கோ வந்த விருந்து என்பது போல் பற்றே இல்லாமல் பக்கத்தில் இருப்பவர்கள் சொன்னதை செய்தாள்...

இந்த திருமணத்தில் அளவுக்கதிகமான சந்தோஷத்தில் திளைத்தது செல்வமும் ஜானகி சுப்பிரமணியன் தம்பதியினரும் தான்.... மகளின் கண்களில் நிரந்தரமாக தேங்கிவிட்ட சோகத்தை கூட அறியாமல் சந்தோஷமாக வளம் வந்தாள் ஜானகி

ஆதிலட்சுமிக்கு கூட இப்போது மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்... முதலில் மணவறையில் கூட மதுமிதாவின் கையைப்பிடித்துக் கொண்டு முகத்தில் சந்தோஷத்தின் சாயலின்றி நிற்கும் பவித்ராவின் மீது குழப்பம்... கல்யாண வேலையை கவனத்துடன் பார்த்தாலும் எப்போதாவது மணவறையை பார்க்கும் தருணத்தில் பவித்ராவை கண்டு நிமிடநேரம் கண்கலங்கி நின்று தடுமாறும் முத்துவின் கண்ணீர் கண்டு குழப்பம்.... பக்கத்தில் நிற்கும் பவித்ராவை பார்க்காமல் கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரையும் பதற்றத்துடன் பார்க்கும் தன் மகனின் பார்வையில் குழப்பம்... மொத்தத்தில் இளையவர்கள் ஏதோ கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது.. ஆனால் அதை வெளியே சொல்ல பயந்து வாயை இறுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் ஆதிலட்சுமி


இரவுக்கான திருமண சம்பிரதாயங்களும்.... வந்திருந்த உறவினர்களோடு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதும்... என எல்லாம் முடிந்து இரவு பதினோரு மணிக்கு தனது அறைக்கு வந்த சத்யன் பதட்டத்தை மறைக்க அவசரமாக ஒரு சிகரெட்டை பற்றவைக்க...

இரண்டு தம் இழுத்திருப்பான்... கதவு அவசரமாக கதவு தட்டப்பட்டது.... ச்சே என்று கையிலிருந்த சிகரெட்டை பாத்ரூமுக்குள் வீசிவிட்டு கதவை திறந்தான்... இருவர் தோளில் தாங்கியிருக்க முத்து தள்ளாட்டமாக நின்றிருந்தான்... பார்த்ததுமே புரிந்து போனது.... குடித்திருக்கிறான் என்று...

சத்யன் முத்துவை தன் தோளில் தாங்கிக்கொண்டு அழைத்து வந்தவர்களை அனுப்பி கதவை மூடிவிட்டு முத்துவை தாங்கியபடி வந்து அவனை கட்டிலில் படுக்க வைத்தான்... முத்து குடிப்பான் என்று தெரியும்... ஆனால் இவ்வளவு குடிப்பான் என்பதை இப்போதுதான் கண்டுகொண்டான் சத்யன்...

முத்துவின் சட்டையை கழட்டிவிட்டு.. பேன்ட் பட்டனை விடுவித்து தலை வழியாக ஒரு கைலியை மாட்டி பேன்டையும் கழட்டி நேராக படுக்க வைத்தான்... ஒரு டவலை நனைத்து எடுத்து வந்து முத்துவின் முகத்தை துடைத்துவிட்டான்

சத்யன் முத்துவின் உடைகளுடன் கட்டிலை எழுந்தபோது அவன் கையைப் பற்றிய முத்து “ ஸாரி சத்யா.. குடிக்க கூடாதுன்னுதான் நெனைச்சேன்.... ஆனா ஏதேதோ ஞாபகங்கள் வந்து என்னை குடிக்க வச்சிருச்சு சத்யா. என்னை மன்னிச்சிடுடா” என்று கூற

சத்யன் மீண்டும் அவனருகில் அமர்ந்து “ எனக்கு புரியுது முத்து.... நான் தவறா நினைக்கலை... நீ நல்லா தூங்கு சரியாபோயிரும்” என்று கூறிவிட்டு முத்துவை விட்டு எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தான்,...

அவனுக்கும் தூக்கம் வரவில்லை பால்கனியில் நின்றபடி மறுபடியும் ஒரு சிகரெட்டை பற்றவைத்தான்..... மான்சி வருவாளா? என்று கேள்வி மட்டுமே இறுதியாக அவன் இதயத்தில் தேங்கியது... மணி சரியாக இரவு ஒன்று இருக்கும்போது மணப்பெண் அலங்காரம் கலைந்து ஒரு காட்டன் புடவையுடன் தோளில் மதுமிதாவை சுமந்தபடி பவித்ரா மாடிப்படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தாள்..

வெளியே நின்ற சத்யனை பார்த்துவிட்டு “ மது தூக்கத்தில் அப்பா அப்பான்னு புலம்பினா.. அதான் தூக்கிட்டு வந்தேன்” என்றாள் மெல்லிய குரலில்....

சத்யன் தலையசைத்து விட்டு உள்ளே போக அவன் பின்னால் வந்த பவித்ரா தன் தோளில் இருந்த மதுமிதாவை முத்துவின் பக்கத்தில் கிடத்திவிட்டு முத்துவையே சிறிதுநேரம் பார்த்தாள் “ குடிச்சிட்டு கீழே விழுந்துட்டார்னு கீழே சொன்னாங்க... அடி எதுவும் பட்டிருக்கா?” என்று கேட்க...

“ அடியெல்லாம் இல்லை நல்லாத்தான் இருக்கான்... நீ போய் தூங்கு” என்று அவளை அனுப்பிவிட்டு கதவை சாத்தியவனுக்கு புதிதாய் ஒரு குழப்பம்... போகும்போது பவித்ரா அழுதாளோ ?

மறுநாள் கல்யாண காலை விடிந்தது... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை... குளித்துவிட்டு பட்டுவேட்டி சட்டையுடன் வந்து மணவறையில் அமர்ந்த சத்யனின் பார்வை மட்டும் மண்டபத்தின் வாசலையே நோக்கியது...

அய்யர் மணப்பெண்ணை அழைத்து கூரைப்புடவையை மாலையுடன் கொடுத்து கட்டிக்கொண்டு வரும்படி கூற... சத்யன் பரபரப்புடன் அமர்ந்திருந்தான்... ஆதிலட்சுமி மகனின் மீதிருந்த கண்களை அகற்றவில்லை....

மண்டபத்தின் வாசலையே பார்த்த சத்யனுக்கு வாழ்க்கையே வெறுக்கும் தருணத்தில் அவன் பக்கத்தில் யாரோ அமர்வது போல் சட்டென்று திரும்பினான்...

அவன் தேவதை மான்சிதான் பட்டுப்புடவையில் அவனருகில் அமர்ந்து அவனைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்...

அவள் எப்படி வந்தாள்? எங்கிருந்து வந்தாள்? என்றெல்லாம் சத்யன் யோசிக்கவே இல்லை... பதிலுக்கு புன்னகைக்க கூட மறந்து.... தன் முன் தாம்பாளத்தில் இருந்த முகூர்த்த தேங்காயில் சுற்றப்பட்டிருந்த தாலிகயிற்றை உருவி எடுத்தவன்.... அதிர்ச்சியுடன் பார்த்தவர்கள் சுதாரிக்குமுன் மான்சியின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சுகளை வலுவாக போட்டான்



" ஓர் இலையின் நுனியில் இருக்கும்....

“ பனித்துளிகள் சருக்கி விழும் நேரத்திற்குள்...

“ முடிந்து போன காதல் சரித்திரங்களும் உண்டு!

“ விண் கற்களின் வயதைப் போல...

“ காலம் கடந்தும் வாழும்...

“ காதல் காவியங்களும் உண்டு!

“ சத்யன் மான்சியின் காதலும்...

“ காலம் கடந்து பேசப்படும்...

“ காவியமாக! 

அவன் தேவதை மான்சிதான் பட்டுப்புடவையில் அவனருகில் அமர்ந்து அவனைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்... அவள் எப்படி வந்தாள்? எங்கிருந்து வந்தாள்? என்றெல்லாம் சத்யன் யோசிக்கவே இல்லை... பதிலுக்கு புன்னகைக்க கூட மறந்து.... தன் முன் தாம்பாளத்தில் இருந்த முகூர்த்த தேங்காயில் சுற்றப்பட்டிருந்த தாலிகயிற்றை உருவி எடுத்தவன்.... அதிர்ச்சியுடன் பார்த்தவர்கள் சுதாரிக்குமுன் மான்சியின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சுகளை வலுவாக போட்டான்

சுற்றியிருந்த அத்தனைபேரும் அதிர்ச்சியுடன் பார்க்கும்போதே சத்யன் மான்சியை தன் மனைவியாக மாற்றிவிட்டுருந்தான்.... உயிர் காதலியை மனைவியாக அடைந்ததில் சத்யனின் முகத்தில் சந்தோஷமும் பெருமையும் தாண்டவமாட... தனது பத்து வருட கனவு நனவானதால் மான்சியின் முகத்தில் கர்வம் கொப்புளித்தது...

அய்யர் கூட அதிர்ச்சியில் வாய்ப்பிளந்து அமர்ந்திருக்க... முதலில் சுதாரித்தது ஆதி லட்சுமிதான்.... அவள் கண்கள் மகனின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை கவனித்தது... அப்படியானால் இவள் என் மகன் தேர்ந்தெடுத்த மனைவியா? பவித்ராவை மறந்த அந்த தாய் சட்டென்று சுயநலமாக சிந்தித்து தன் கையில் இருந்த அட்சதையை அள்ளி யாரும் கவனிக்கும் முன் மணமக்கள் மீது வீசிவிட்டு மறுபுறம் திரும்பி கொண்டாள்...

கழுத்தில் மாலையும்.. இடையில் கூரைப்பட்டுமாக வந்த பவித்ரா மான்சியை சத்யன் அருகில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நிற்க...

இரவு போதையில் உறங்கியதால் தாமதமாக எழுந்த முத்து அப்போதுதான் குளித்து உடைமாற்றிக்கொண்டு வந்தான்.. வந்தவன் பார்வையில் முதலில் பட்டது அதிர்ச்சியுடன் நின்றிருந்த பவித்ரா தான்... என்னாச்சு என்ற குழப்பத்துடன்.... மணவறையை நோக்கியவன்.. அங்கே மான்சியையும் சத்யனையும் மணமக்களாக பார்த்து திகைப்புடன் “ சத்யா.........” என்று அவனுக்கே கேட்காது முனங்கினான்

இதில் முற்றிலும் சிந்திக்க முடியாமல் இறுகிபோய் நின்றிருந்தது ஜானகியும் அவளின் அன்புச் சகோதரன் செல்வமும் தான்.... சுப்பிரமணியன் சுதாரித்து செல்வத்தை நெருங்கி “ என்ன மச்சான் இதெல்லாம்?” என்று வெறுப்புடன் கேட்க...

எனக்கும் எதுவும் தெரியாது என்பதை போல் தலையை மட்டும் அசைத்தார் செல்வம்... அவரது பார்வை மகனை விட்டு நகரவில்லை.. என் மகனுக்கு இவ்வளவு தெரியுமா? என்ற அதிர்ச்சி நிறைந்த கேள்விதான் அவர் பார்வையில்...

சத்யன் தனக்கு முன்னால் இருந்த குங்குமத்தை எடுத்து மான்சியின் நெற்றியிலும் வகிட்டிலும் வைக்க.... ஆனது ஆச்சு இனிமேல் என்னப் பண்றது என்பதுபோல் “ திருமாங்கல்யத்திலேயும் வைங்கோ” என்று ஐயர் சொல்ல.. சத்யன் இடது உள்ளங்கையில் திருமாங்கல்யத்தை தாங்கி.. வலது மோதிர விரலால் குங்குமத்தை தொட்டு அதில் வைத்தான்...

நிமிர்ந்தவனைப் பார்த்து புன்னகைத்து “ எழுந்திருக்கலாம் சத்யா” என்றாள் மான்சி..
முதன்முதலாக அவளைப் பட்டுப்புடவையில் பார்த்து சொக்கிப்போயிருந்த சத்யன்.. பொம்மையாய் தலையசைத்து எழுந்து நின்றவனின் கையைப்பிடித்து மணவறையில் இருந்து வெளியே வந்தவள் நேராக ஜானகியின் எதிரே போய் நின்றாள்...

ஜானகி இருவரையும் எரித்துவிடுவது போல் பார்த்து “ என் குடும்பத்துக்கு கொல்லி வைக்கனும்னு எத்தனை நாளாடா காத்திருந்த?” என்று சத்யனைப் பார்த்து கேட்க...

அவன் சங்கடமாக நெளிந்து “ இல்ல அத்தை.........” என்று ஆரம்பிக்கும் போதே தடுத்த மான்சி “ என்ன ஜானகியம்மா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? இப்போ உங்களுக்கும் அதுதான் நடந்திருக்கு.. அன்னிக்கு நீ ஒருத்தனை மணவறையில் உட்கார வச்சிட்டு இன்னோருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நின்னயே அதேதான் இப்போ உன் மகள் வாழ்க்கையில் நடந்திருக்கு... இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீ விதைச்சதை இன்னிக்கு உன் மகள் அறுவடை பண்ணிருக்கா... பெத்தவங்க சம்பாதிச்சு வைக்கிற சொத்து மட்டும் இல்லை அவங்க செய்ற பாவமும் கூட பிள்ளைகளைத்தான் வந்து சேரும்...” என்ற மான்சி ஏளனமாக சிரித்து “ உன் கல்யாணத்துல நடந்ததுக்கு இன்னிக்குதான் கணக்கு தீர்ந்திருக்கு ஜானகியம்மா” என்று உரக்க சொல்ல..

கூட்டத்தில் பெரும் சலசலப்பு.... ஆளாளுக்கு ஒன்று பேசினார்கள்... ஆனால் சில வயதான சொந்தங்களின் “ ஆமா அந்த புள்ள சொல்றது கரெக்ட் தான்... மணவறை வரைக்கும் வந்துட்டு கடைசில இவ வேற ஒருத்தனைப் பிடிச்சிக்கிட்டு வந்துட்டா... பாவம் அந்த மாப்பிள்ளை அவமானம் தாங்காம தூக்குப்போட்டு செத்துட்டான்.... அந்த பாவம்லாம் சும்மா விடுமா? அதான் இத்தனை வருஷம் கழிச்சு வந்து கேள்வி கேட்குது” பேச்சு இப்படித்தான் இருந்தது...

செல்வம் கூட்டத்தைப் பார்த்து ஒரு முறை முறைக்க கூட்டத்தின் சலசலப்பு ஓரளவுக்கு அடங்கியது... மெல்ல மேடையேறினார் செல்வம்

ஜானகியின் காதில் கூட்டத்தின் சலசலப்பு கேட்டதும் கோபத்தில் முகம் ஜிவ்வென்று சிவக்க... “ ஏய் நாயே யாருடி நீ?” என்று ஆக்ரோஷமாக கத்தினாள்..

மான்சி ஒருமுறை திரும்பி சத்யனை பார்த்தாள்... மான்சியின் வார்த்தைகளில் சத்யனும் உறைந்து போயிந்தான்... அவன் பார்வையிலும் “ யார் நீ?” என்ற கேள்வி

மான்சி கூட்டத்தையும் படியேறி வரும் செல்வத்தையும்... கோபத்தின் உச்சியில் நின்று கொந்தளிக்கும் ஜானகியையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாள் பிறகு ஆதிலட்சுமியைப் பார்த்து “ அத்தை இவ்வளவு சொன்னப்பிறகு உனக்குமா நான் யாருன்னு தெரியலை?” என்று கேட்க..

ஆதிலட்சுமியின் கண்களில் கண்ணீர் கலந்த ஆர்வம்... “ என் தாய்வீட்டு வித்தோ இவள்?” அவள் பார்வையும் கேள்விதான் கேட்டது...



மான்சி மீண்டும் ஜானகியிடம் திரும்பினாள் “ நான் யாரா? நான் மான்சி.... கமலக்கண்ணனோட மகள் மான்சி... கமலக்கண்ணன் யாருன்னு கேட்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்... இங்கேருக்குற உறவுமுறை சாதி சனம் எல்லாருக்கும் மாயாண்டித்தேவன் பரம்பரைய தெரியாம இருக்காதே? ஆமாம் நான் என் அத்தை ஆதிலட்சுமிக்கு அடுத்ததா அந்த குடும்பத்தில் வந்த பெண்வாரிசு... இந்த ஜானகியால செத்துப்போன கிருஷ்ணதவனோட அண்ணன் மகள் மான்சி.... இந்த சத்யனுக்காகவே பொறந்து இவனுக்காகவே வளர்ந்த தாய்மாமன் மகள்...” என்று உரக்க பேசிய மான்சி மண்டபத்தின் வாசலை நோக்கி “ அப்பா” என்று குரல் கொடுக்க....

இவ்வளவு நேரம் எங்கிருந்தார்கள் என்று புரியாமல் கமலக்கண்ணன் வீரம்மாள் முன்னால் வர அவர்களின் பின்னால் பங்காளிகள் மாமன் மச்சான் என்று ஒரு பெரிய கூட்டமே வந்தது...

சத்யன் அவ்வளவு நேரம் மான்சியை பற்றியிருந்த கையை பட்டென்று விட்டுவிட்டு அதிர்ச்சியா ஆத்திரமா என்று புரியாத பார்வையுடன் நின்றிருந்தான்....

No comments:

Post a Comment