Thursday, August 13, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 1



சில்லென்று குத்தூசியை போல் முதுகெலும்பை ஊடுருவும் குளிர்ந்த காற்று வீசும் அதிகாலை,, அந்த குளிருக்கு பயந்து மரங்களும் செடி கொடிகளும் கூட தலையசைக்க மறுத்து சத்தமின்றி அமைதி காக்க... சில்வண்டுகளின் ரீங்காரத்தை தவிர அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்களின் சத்தமும் மட்டுமே கேட்டது

கோவை ரயில்நிலையம் இரவுநேர சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர்கள்,, ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையின் ஓரமாக குப்பைகளை எரித்து அந்த கடும் குளிருக்கு இதமாக குளிர்காய்ந்து கொண்டிருந்தனர்,,

கார் பார்க்கிங்கில் வந்து நின்ற வேகன் ஆர் காரில் இருந்து இறங்கிய சத்யன்,, பின்புறம் வந்து கதவை திறந்துவிட.. எழுபது வயது மதிக்கத்தக்க பழுத்த பழம் போல ஒரு பெண்மணியும்,, அவரை தொடர்ந்து இறங்கினாள் இன்னொரு ஐம்பது வயது பெண்ணும்

பாட்டியின் கையை பிடித்து இறக்கிவிட்ட சத்யன்,, பின் கதவை திறந்து இரண்டு லெதர் பைகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு காரை லாக் செய்தான்,, கீழேயிருந்த பைகளில் ஒன்றை கையில் எடுத்தான்

அவசரமாக அவனை நெருங்கிய அந்த ஐம்பது வயது பெண் “ தம்பி பையை குடுங்க நான் எடுத்துக்கிறேன்” என்று அவன் கையில் இருந்த பையை வாங்க முயன்றாள்



“ வேனாம் ராஜம்மா நீ சின்ன பையை எடுத்துக்க,, அப்புறம் பாட்டியை கவனமா பார்த்துக்கங்க உங்களை நம்பித்தான் அவங்களை அனுப்புறேன்,, வேலாவேலைக்கு கரெக்டா மருந்து மாத்திரைகளை குடுங்க,, ஏதாவது டவுட்னா எனக்கு போன் பண்ணுங்க,, நான் குடுத்த மொபைல் போனை எப்பவுமே கையில வச்சுக்குங்க,, மாமா வீட்டுல பாட்டிக்கு ஏத்த மாதிரி சமையல் பண்ணி குடுக்கச்சொல்லுங்க,, அப்படியில்லேன்னா நீங்களே சமையல் பண்ணுங்க,, போய் இறங்கினதும் என்னேரமா இருந்தாலும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க,, என்னோட நம்பரை தமிழில் என் பெயர் போட்டு சேவ் பண்ணி வச்சிருக்கேன் பாருங்க” என்று சொல்லிகொண்டே சத்யன் பாட்டியின் தோளில் கைப்போட்டு அணைத்தவாறு முன்னால் நடக்க......

அவன் சொல்வதற்க்கெல்லாம் “ சரிங்க தம்பி,, சரிங்க தம்பி” என்று பின்பாட்டு பாடிக்கொண்டே வந்தாள் ராஜம்மா

“ டேய் சத்யா இதையே இன்னிக்கு காலையிலேர்ந்து பத்தாவது முறையா சொல்ற,, பாவம் ராஜமும் தலையாட்டி தலையாட்டி நொந்து போய்ட்டா,, இன்னும் ஒரு வாட்டி சொன்னே நீயாச்சு உன் பாட்டியாச்சுன்னு ஓடப்போறா பாரு” என்று பாட்டி குறும்புடன் சொல்ல

“ அய்யோ நா ஏம்மா அப்படி சொல்லப்போறேன்,, தம்பி உங்கமேல வச்சிருக்க பாசம்தான் இந்த கோயமுத்தூருக்கே தெரியுமே,, இந்த காலத்து புள்ளைங்க யாரும்மா இந்த மாதிரி பெரியவங்கக்கு மரியாதை குடுக்குறாங்க,, ஏய் பெரிசுன்னு நக்கல்தான் பண்றாங்க” என்று ராஜம்மா சத்யன் தன் பாட்டி மீது வைத்திருக்கும் பாசத்தை தன் வார்த்தைகளில் சொன்னாள்

சத்யன் சிரித்தபடி பாட்டியுடன் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தான்,, அவனருகே பையை வைத்துவிட்டு “ தம்பி நான் போய் உங்களுக்கு பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிட்டு வர்றேன்,, நீங்க அம்மாகூட பேசிகிட்டு இருங்க ” என்று ராஜம்மா போய்விட

சத்யன் பாட்டியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ ஏன் பாட்டி இதோ இருக்குற திருச்சிக்கு கார்ல போயிருக்கலாம்ல,, ரயில்ல தான் போவேன்னு இவ்வளவு பிடிவாதம் பண்றியே பாட்டி” என்று சலிப்புடன் சொன்னான்


“ இல்லடா கண்ணா பாட்டிக்கு வயசாயிருச்சுல்ல,, ரயில்ல போனா பாத்ரூம் போகக்கொள்ள வசதியா இருக்கும்,, அதோட உனக்கும் நாளைக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னயே சத்யா,, அதை மொதல்ல கவனி,, அப்புறம் உன் தங்கச்சி அனிதா நேத்து வந்து யாரோ அவ ப்ரண்ட்டுக்கு நம்ம கம்பெனியில் வேலை வேனும்னு கேட்டாளே, அதுக்கு ஏற்பாடு பண்ணு சத்யா,, அனிதா இதுவரைக்கும் உன்கிட்ட எதுவுமே கேட்டதில்லை,, முதன்முதலா கேட்டுருக்கா அதை தட்டிகழிச்சுடாதே சத்யா” என்று பாட்டி சொன்னதும்

சட்டென்று முகம் மாறிய சத்யன் எதுவுமே சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்தான்,,

அவன் தலைமுடியை தன் விரல்களால் கோதிய பாட்டி “ என்னப்பா அமைதியாயிட்ட,, பாவம்பா அனிதா,, அவ என்ன தப்பு பண்ணா,, அவ உன் தங்கச்சிங்கறத உன்னால மறுக்கமுடியாது ராசா,, எல்லாம் காலப்போக்குல சரியாகனும் சத்யா,, நீ இன்னும் பழசையெல்லாம் மனசுல வச்சுகிட்டு வேதனைப்படாதே ராசா” என்று பாட்டி கலங்கிய கண்களுடன் பேச...........

தலைகுனிந்து அமர்ந்திருந்த சத்யன் “ நிச்சயமா அனிதாவோட ப்ரண்ட்க்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன் பாட்டி,, ஆனா நான் பழசையெல்லாம் மறக்கமாட்டேன் பாட்டி” என்று பாட்டியிடம் தீர்மானமாக சொன்ன சத்யன் சேரில் இருந்து எழுந்துகொண்டான்

மேற்க்கொண்டு குடும்பம் பற்றி அவனிடம் எதையும் பேசாது “ திருச்சிக்கு போற ரயில் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சத்யா” என்று கேட்ட பாட்டி

“ இன்னும் அரை மணிநேரம் இருக்கு பாட்டி,, இப்போ சென்னையில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் வரும் அதுக்கு அப்புறம்தான் நீங்க போற ட்ரைன் வரும் ,, என்று பாட்டிக்கு விளக்கம் சொன்ன சத்யன்,, நெற்றியில் விழுந்த சிந்தனை முடிச்சுகளுடன் பிளாட்பாரத்தில் நடந்தான்

அப்போது ஆலப்பி எக்ஸ்பிரஸ் வருவதற்கான அறிவிப்பு வர,, அதை தொடர்ந்து சிறிதுநேரத்தில் ரயிலும் வந்தது,, சத்யன் நின்றிருந்த இடத்தில் வந்து நின்ற இரண்டாம் வகுப்பு பெட்டியில் இருந்து சிலர் இறங்கி போனார்கள்

இறங்கியவர்கள் தங்களின் சுமைகளை சுமந்துகொண்டும்,, இழுத்துக்கொண்டும் விறுவிறுவென்று நடக்க,, கடைசியாக இறங்கிய ஒரு பொண்ணும் பையனும் மட்டும் ரயிலை விட்டு இறங்கி எங்கும் போகாமல், சத்யனின் பாட்டி அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரே கிடந்த வரிசை சேரில் அமர்ந்து கொண்டார்கள்

பிளாட்பாரத்தில் நடந்தபடி சத்யன் அவர்களை கவனித்தான்,, அந்த பெண் அழகியாக இருந்தாலும் ஒடிந்து விழுந்துவிடுவது போல் ஒல்லியாக இருந்தாள்,, முகம் ஒரு மாசு மருவின்றி துடைத்து வைத்த வெங்கல பாத்திரம் போல் பளபளப்பாக இருந்தது,, ஆனால் அந்த கண்களில் ஒரு பதட்டம், முகத்தில் ஒரு இனம் புரியாத சோகம் இருந்தது

அவளுடன் இருந்தவனுக்கு இவளைவிட இரண்டு அல்லது மூன்று வயதுதான் அதிகமாக இருக்கும்,, அவனும் ஒல்லியாக இருந்தான்,, அந்த பெண் அவனிடம் குனிந்து ஏதோ சொல்ல,, உடனே அந்த பையன் அவள் நெற்றியை பிடித்து அழுத்திவிட்டான்,, பிறகு அந்த பக்கமாக போன காபி விற்பவனை கூப்பிட்டு ஒரு கப் காபி வாங்கி அவளிடம் கொடுத்தான்..

அவள் காபி கப்பை இரண்டு கைகளில் பிடித்துக்கொண்டு சுடசுட காபியை குடித்தாள்,, அந்த பையன் அவள் முகத்தையே பார்த்தான்,, அவன் பார்வையில் அளவுகடந்த கரிசனம் தெரிந்தது,, அவனே காலி கப்பை வாங்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு வந்து அவளருகில் அமர்ந்து கொள்ள,, அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்,, மறுபடியும் அவள் தலையை இதமாக அமுக்கிவிட்டான் அந்த பையன்,

அவர்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக கவனித்த சத்யனுக்கு காரணமேயில்லாமல் எரிச்சல் வந்தது,, வீட்டைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடியாக இருக்கும் என்று கசப்புடன் எண்ணினான்,, ச்சே பொது இடம் என்றும் பாராமல் இப்படி நடந்துக்கிறாங்களே,, அவள் முகத்தில் இருந்த சோகம் சத்யனின் எண்ணம்தான் சரியென்று உறுதி செய்தது

சத்யனுக்கு அந்த பெண்ணை நினைச்சு கொஞ்சம் வருத்தமாக இருந்தது,, இந்த ஒல்லிப்பிச்சானை நம்பி வந்துருக்காளே என்று நினைத்தான்,, அந்த பெண்ணை பற்றியே சிந்திக்கும் தன்னை நினைத்து சத்யனுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது,,

இயல்பிலேயே சத்யன் பெண்களை தவறாக சிந்திக்க மாட்டான்,, பணிரெண்டு வயதுக்கு முன்பு அவன் தாயின் வளர்ப்பும் சரி,, அதன்பிறகு இந்த பதினாறு வருடமாக அவனை கவனித்துக் கொள்ளும் பாட்டியின் வளர்ப்பும் சரி அவனை பெண்களை மதிக்க மட்டுமே கற்றுக்கொடுத்தது,, அதுமட்டுமில்லாமல் அவனுக்கும் மூன்று தங்கைகள் இருந்தார்கள்,, அவன் அதைப்பற்றி பேச மறுத்தாலும் உண்மை அதுதான்,,

ஆனால் சற்று முன்பே பார்த்த அந்த பெண்ணை பற்றி அதிகம் சிந்திப்பது அவன் புத்தியில் உரைக்க,, சட்டென்று தலையை உதறிக்கொண்டு பாட்டியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான்

பாட்டியும் ராஜம்மாவும் ஏதோ உலக சமாதானம் பேசுவது போல் தலையை ஆட்டி அசைத்து பேசிக்கொண்டு இருக்க,, மறுபடியும் அந்த பெண்ணின் பக்கம் பார்வை போகாமல் தடுக்க சத்யன் ரொம்ப சிரமப்பட்டான், சுத்தமாக திரும்பி பாட்டியின் உபயோகமற்ற பேச்சில் தன் கவனத்தை செலுத்த முயன்றான்
அவனை ரொம்ப நேரம் சிரமப்படுத்தாமல் பாட்டி செல்லவேண்டிய ரயிலின் அறிவிப்பு வர,, சத்யன் சட்டென்று எழுந்துகொண்டான்,, பேக்கை கையில் எடுத்துக்கொண்டு “ பாட்டி வாங்க டிரைன் வருது” என்று சொல்லிவிட்டு போனான்

ரயில் வந்து நின்றதும்,, முதல் வகுப்பு பெட்டியில் ராஜம்மா முதலில் ஏறிக்கொள்ள,, சத்யன் பாட்டியை மெதுவாக ஏற்றிவிட்டு தானும் ஏறி அவர்கள் இருவரையும் சீட் நம்பர் பார்த்து உட்கார வைத்து ,, இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு கீழே இறங்கிக்கொண்டான்,,

காலையில் இருந்து அவ்வளவு பேசியவன் திடீரென்று அமையதியானது பாட்டியையும் ராஜம்மாவையும் குழப்பினாலும் ,, பாட்டியை பிரியமுடியாமல் சத்யன் தவிக்கிறான் என்று எண்ணிக்கொண்டார்கள்

பச்சை விளக்கு காட்டப்பட்டு ரயில் கிளம்ப சத்யன் வெளியே செல்லும் வழியே நடக்க ஆரம்பித்தான், சிறிது தூரம் சென்றபின் ஏதோ உந்துதலால் சட்டென்று திரும்பி அந்த பெண்ணை பார்க்க,, அவள் இன்னும் அந்த பையனின் தோளில் சாய்ந்தபடி இருந்தாள்,, அந்த பையன் அவள் தலையை பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தான்

ச்சே என்று எரிச்சலாக வாய்விட்டு சொன்ன சத்யன்,, வேகமாக அங்கிருந்து அகன்றான்

வீட்டுக்கு வந்த சத்யன் அந்த பெண்ணை மறந்து போனான்,, அந்த வீட்டில் பாட்டி இல்லாத வெறுமை முகத்தில் அறைந்தது,, அவன் எந்த நேரத்தில் வந்தாலும் ஹால் சோபாவில் அமர்ந்து “ வா ராசா” என்று வரவேற்கும் பாட்டி இல்லாதது சத்யனின் மனதை பிசைந்தது 


மாடியில் தனது அறையில் போய் படுத்த சத்யன் தனது மொபைலில் நேரம் பார்த்தான்,, மணி ஐந்தரை ஆகியிருந்தது,, “ம்ஹூம் இதற்குமேல் தூங்கினால் சரியா வராது,, கொஞ்சநேரம் ஜாகிங் போய்ட்டு ஆபிஸ்க்கு கிளம்பவேண்டியதுதான்,, என்று எண்ணி எழுந்த சத்யன் ஜாகிங் சூட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே வந்தான்

ஜாகிங்ன் போது மறுபடியும் அந்த பெண்ணின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது,, அவளின் மருண்ட விழிகள் அவன் கண்முன் வந்து செல்லும் பாதையை மறைத்தது,, அவளின் சோகம் சுமந்த முகம் அவன் கவனத்தை கலைத்து ஓட்டத்தை தடுமாற வைத்தது,, சிரமப்பட்டு தனது மனதை ஒருநிலை படுத்தினான்

அன்று சற்று சீக்கிரமாகவே மில்லுக்கு கிளம்பிய சத்யன்,, தனது ஆபிஸ் ரூமில் அமர்ந்து தனது மேசையில் இருந்த கம்பியூட்டரில் வந்த மெயில்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டு இருந்தான்

அந்த மில் ஆயத்த ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரு மிகப்பெரிய ஜவுளிமில்,, அவன் தாய்வழி பாட்டி அமிர்தம்மாள் தனது மகளுக்கு சீதனமாக கொடுத்த மில்,, தாய்வழி தாத்தாவின் மறைவுக்கு பிறகு இந்த மில்லையும் தன்னுடைய நூற்பாலையையும் சத்யனின் அப்பா கிருபானந்தன் கவனித்து வந்தார்,,

பாட்டி வீட்டில் வளர்ந்த சத்யன் டெக்ஸ்டைல்ஸ் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்து,, பாட்டி தன் தாய்க்கு சீதனமாக கொடுத்த மில்லை தனக்கு வேண்டும் என்று தனது அப்பாவுக்கு தகவல் அனுப்பினான் சத்யன்,, அவன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத சத்யனின் அப்பா தன் மனைவியின் மில் பொறுப்புகளையும் உரிமையையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கினார்

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக மில்லை திறம்பட நடத்தி ஜெயித்துக் காட்டினான் சத்யன்,, தனது தாய்வழி பாட்டியுடன் தனியாக வாழ்ந்த சத்யன் அப்பா இருக்கும் பங்களாவுக்கு போய் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆனது,, அவரை எங்குமே பார்ப்பதை எப்போதும் தவிர்த்துவிடுவான் சத்யன்

அப்பா மகனை சேர்த்து வைக்க பலரும் பலவழிகளில் முயன்று சத்யனின் பிடிவாதத்தின் முன்னால் தோல்வியை சந்தித்ததனர்,, ஆனால் அனிதா மட்டும் சத்யன் எப்படிதான் அலட்சியப்படுத்தினாலும் அவனை விடாமல் அடிக்கடி சந்தித்து குடும்ப நிலவரத்தை அவன் காதுக்கு கொண்டு வருவாள்,,

இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருபானந்தனுக்கு மைல்ட் அட்டாக் வந்து அவருடைய மில் பொருப்புகளை கவனித்துக்கொள்ளும் பொருப்பும் சத்யனிடம் வந்தது,, சத்யன் எவ்வளவு மறுத்தும் பாட்டியின் மன்றாடல் காரணமாக அந்த மில்லையும் சேர்த்து சத்யன் கவனித்துக்கொண்டாலும்,, அதில் வரும் வருமானத்தை நயாபைசா கணக்கோடு அனிதா மூலம் அப்பாவிடம் அனுப்பிவிடுவான்

தனது ஆபிஸில் மெயில்களுக்கு பதில் டைப் செய்த சத்யனின் கவனத்தை கதவை தட்டும் ஒலி கலைத்தது,, நிமிர்ந்து “ எஸ் கமின்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கம்பியூட்டரில் கவனத்தை செலுத்தினான்

அறைக்கதவை தள்ளி திறந்துகொண்டு உள்ளே வந்த சத்யனின் பர்ஸனல் மேனேஜர் கார்த்திக் “ பாஸ் உங்களைப் பார்க்க அனிதா மேடம் வந்திருக்காங்க,, உள்ளே அனுப்பவா?” என்று கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த சத்யன் “ ம் வரச்சொல்லு கார்த்திக்” என்றான்

அடுத்த சிலநிமிடங்களில் உள்ளே வந்த அனிதா அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து “ குட்மார்னிங் அண்ணா” என்று சொல்ல...

நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்காமலேயே “ ம்ம் குட்மார்னிங்” என்றவன் “ என்ன இவ்வளவு காலையிலயே ஆபிஸ்க்கு வந்துட்ட” என்று கேட்டான்

“ வீட்டுக்கு போன் பண்ணேன் , நீங்க ஆபிஸ் கிளம்பிட்டதா சொன்னாங்க,, அதான் நானும் உடனே கிளம்பி வந்துட்டேன்,, அண்ணா என் ப்ரண்டை கூட்டிட்டு வந்துருக்கேன்,, இது அவளோட பயோடேட்டா” என்று மேசையின் மீது ஒரு பைலை வைத்துவிட்டு “ என்கூடத்தான் பேஷன் டிசைனிங் படிச்சா அண்ணா,, வெளியே வெயிட் பண்றா வரச்சொல்லவா?” என்று சத்யனிடம் அனுமதி கேட்டாள் அனிதா

கம்பியூட்டரில் இருந்த பார்வையை திருப்பாமலேயே “ ம்ம் வரச்சொல்லு” என்றான் சத்யன்

அனிதா எழுந்து வெளியே போய் இன்னொரு பெண்ணுடன் உள்ளே வருவது நிழலாய் தெரிந்தாலும் சத்யன் நிமிரவில்லை

எதிரே வந்து நின்ற அனிதாவின் தோழி “ குட்மார்னிங் சார்” என்று சொன்னாள்,,
இதற்கு மேலும் கவனத்தை கம்பியூட்டரில் வைத்தால் அது மரியாதை இல்லை என்பதை உணர்ந்த சத்யன் ,, அந்த குயில் குரலுக்கு சொந்தக்காரியை நிமிர்ந்து பார்த்தான்


அவளை பார்த்தும் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்க மறுபடியும் கம்பியூட்டர் பக்கம் திரும்பிக்கொண்டான் சத்யன்.,, காலையில் ரயில்நிலையத்தில் பார்த்து சத்யனின் கவனத்தை கவர்ந்த அதே பெண்தான் அனிதாவுடன் வந்திருந்தாள்

‘அய்யோ இவளா அனிதாவோட ப்ரண்ட்,, ச்சே முதல்லயே இவளோட பைலை பார்த்திருக்கலாம்” என்று லேட்டாக யோசித்த சத்யன் “ ம் குட்மார்னிங், உட்காருங்க” என்றான்

“ தாங்க்யூ சார்” என்று சொல்லிவிட்டு அவனுக்கு எதிரே அனிதாவின் அருகில் இருந்த இருக்கையில் அவள் அமர்ந்தாள்,,

சத்யன் நிதானமாக அவளுடைய பைலை புரட்டினான்.. பெயர் மான்சி பரமேஸ்வரன் என்று இருந்தது,, படிப்பு தகுதி என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இன்டர்காமில் கார்த்திக்கை அழைத்தான்

உள்ளே வந்தவனிடம் பைலை கொடுத்து “ கார்த்திக் டிசைனிங் பிரிவில் இருக்கும் சூப்பர்வைசர் சுகன்யா டெலிவரிக்காக மூனு மாசம் லீவு கேட்டு இருந்தாங்களே, அவளுக்கு லீவை சாங்ஷன் பண்ணிட்டு இவங்களை சூப்பர்வைசரா அப்பாயின்மென்ட் பண்ணிரு,, சுகன்யா ஒரு வாரத்திற்கு இவங்க கூட இருந்து வேலையை கத்துக்கொடுக்க சொல்லு கார்த்திக்” என்று சத்யன் சொல்ல

கார்த்திக் மான்சியை பார்த்து புன்னகை “ வாங்க மேடம் அப்பாயின்மென்ட் ஆர்டர் டைப் பண்ண சொல்லிட்டு எல்லாருக்கும் உங்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் ” என்று செல்லிவிட்டு வெளியே போனான் ,,

‘சூப்பர்வைசர் வேலையா’ என்று அனிதா வாய் பிளக்க,, மான்சி கலவரமாக அனிதாவை பார்த்தாள்,, 





‘இரு நான் பேசுறேன்’ என்று சைகையில் சொன்ன அனிதா சத்யனை பார்த்து “ அண்ணா நானும் இவளும் இந்த வருஷம்தான் படிப்பு முடிச்சோம்,, மான்சிக்கு வேறெந்த கம்பெனியிலும் வேலை செய்த முன் அனுபவம் இல்லை,, முதல் போஸ்ட்டிங்கே சூப்பர்வைசர்னா இவளால மெயின்டைன் பண்ணமுடியுமான்னு பயமாயிருக்கு அண்ணா” என்று மான்சியின் பயத்தை தெரியப்படுத்தினாள் அனிதா

சட்டென்று நிமிர்ந்து பார்த்த சத்யன் “ அதனால என்ன இதே முதல் அனுபவமா இருக்கட்டுமே,, சூப்பர்வைசர் போஸ்டிங்கை தவிர இங்கே வேறெந்த போஸ்டிங்க்கும் காலியா இல்லை,, ஒருவாரத்துக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும் அப்புறம் சரியாபோயிரும்,, ஏதாவது சந்தேகம்னா கார்த்திக்கிட்ட கேட்டுக்க சொல்லு” என்று அனிதாவுக்கு பதில் சொன்னவன் .....

மான்சியை பார்த்து “ நீங்க போய் ஆர்டரை வாங்கிக்கங்க,, மத்ததெல்லாம் கார்த்திக் சொல்வான் அதன்படி செய்ங்க போதும்” என்று சொல்ல

சரியென்று அவசரமாக தலையசைத்த மான்சி அனிதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை நோக்கி நகர்ந்தாள்

“ சரி அண்ணா நானும் கிளம்புறேன்” என்று அனிதாவும் திரும்ப.... “ நீ கொஞ்சம் இரு அனிதா” என்றான் சத்யன்

கதவருகே காத்திருந்த மான்சியை பார்த்து “ சரி நீ முன்னாடி போ மான்சி நான் இதோ வர்றேன்” என்று சொல்ல,, மான்சி சரி என்றுவிட்டு கதவை திறந்து வெளியேறினாள்

அனிதா மறுபடியும் சேரில் வந்து அமர்ந்து “ என்னண்ணா” என்றாள்

என்ன கேட்பது என்று புரியாமல் தவித்தான் சத்யன்,, ஆனால் அவனுக்கு காலையில் மான்சியுடன் வந்தது யார் என்று தெரிந்தே ஆகவேண்டும்,, வேறு வழியில்லை அனிதாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான்


மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி “ இந்த பொண்ணுக்கு சொந்த ஊர் எது?” என்றான்

“ ஆம்பூருக்கு பக்கத்தில் ஒரு வில்லேஜ் அண்ணா,, ஆனா இவ பத்து வருஷமா ஈரோட்டில் ஹாஸ்டலில் தங்கிதான் படிச்சா,, படிப்பு முடிஞ்சதும் கிரமத்தில் போய் நாலு மாசம் இருந்தா,, அதுக்குள்ளே என்னனமோ நடந்து போச்சு,, அதான் நேத்து அவளை பத்தி சொன்னேனே அண்ணா,, அவ நிலைமை ரொம்ப பரிதாபம் அண்ணா” என்று மான்சியை

சத்யனுக்கு நேற்று அனிதா போனில் சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது,, ச்சே பாவம் எனக்குத்தான் இந்த நிலைன்னா இவளுக்குமா’ என்று மனதுக்குள் வருந்தினான்,, “ அங்கேருந்து தனியாவா வந்தாங்க?” என்று தனது அடுத்த கேள்வியை வீசினான்

“ இல்லண்ணா அவளோட அண்ணண் ஜெகன் அவளை கூட்டி வந்து விட்டுட்டு உடனே போய்ட்டான்,, நான்தான் காலையில ரயில்வேஸ்டேஷன் போய் கூட்டி வந்தேன்,, என் ப்ரண்ட் காயத்ரி வீட்டு மாடியில் ஒரு ரூம் இருந்தது அங்கே தங்க வச்சிருக்கேன்” என்று தனது அண்ணனுக்கு கூடுதல் தகவலை சொன்னாள் அனிதா

இந்த தகவல்கள் போதும் சத்யனுக்கு,, மான்சிக்கு அந்த பையன் அண்ணன் என்றதும் கன்னத்தில் யாரோ அறைந்தது போல் வலித்தது,, ச்சே கொஞ்ச நேரத்தில் இந்த பொண்ணை இப்படி தவறா நெனைச்சுட்டமோ,, ஏன் கூட இருந்தவன் அண்ணனாக இருக்கலாம்னு நான் யோசிக்கவே இல்லை,, என்று மனதுக்குள் வருந்தினான்

" சரி நீ கிளம்பு அனிதா" என்று சொல்லிவிட்டு எழுந்தவன் சற்று தள்ளியிருந்த போர்டில் இருந்த எம்டி கேன்வாஸில் பென்சிலால் ஏதோ ஒரு டிசைனை வரைந்தான்

எழுந்து நின்ற அனிதா சிறிது தயக்கத்திற்கு பிறகு " அண்ணா வீட்டுக்கு வந்து ஒரேயொரு முறை அப்பாவை பாருங்களேன்,, ப்ளீஸ் அண்ணா உங்களை நினைச்சு நினைச்சு அப்பா அழாத நாளே இல்லை" என்று கண்ணீர் ததும்பும் குரலில் சொன்னாள் ..

" உன்னை போகச்சொன்னேன் ,, நீ இன்னும் போகலையா?" என்று திரும்பி பார்க்காமலேயே இறுகிய குரலில் சத்யன் கூற

" இதோ போறேன்ண்ணா,, நாங்க அங்க இருக்கிறதாலதானே நீங்க வீட்டுக்கு வரலை நாங்க வேனா வேற எங்கயாவது போயிடுறோம் அண்ணா,, அப்புறமாவது நீங்க வருவீங்களா?" என்று பொங்கிய கண்ணீரை அடக்கிய வாறு அனிதா பேச

" ஆபிஸ்ல பர்ஸனல் பத்தி பேசாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது அனிதா,, மத்தவங்களை போல உன்னையும் ஆரம்பத்திலேயே ஒதுக்காமல் உள்ளே சேர்த்தது என் தப்புதான்" என்று சத்யன் சொல்லி முடிப்பதற்குள்

" சரி இதோ போய்ட்டேன் அண்ணா பை" என்றுவிட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவசரமாக அறையைவிட்டு வெளியேறினாள்

கண்களை துடைத்தபடியே பக்கத்தில் இருந்த கார்த்திக்கின் கேபினுக்குள் நுழைந்து அங்கே இருந்த சேரில் தொப்பென்று அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குமுறியவளை பார்த்து கார்த்திக் அவசரமாக எழுந்து அவளருகில் வந்தான்

சேரில் அமர்ந்திருந்தவள் தோளில் கைவைத்து " என்னம்மா என்னாச்சு,, பாஸ் ஏதாவது திட்டிட்டாரா ,, அவரோட குணம் உனக்கு தெரியும் தானே அப்புறமா ஏன் எதையாவது பேசிட்டு இப்படி திட்டு வாங்குற" என்று கேட்டவனின் நெஞ்சில் தன் முகத்தை வைத்துக்கொண்ட அனிதா அழுதாள்

தன் நெஞ்சில் இருந்த அனிதாவின் முகத்தை அனைத்துக்கொண்டு " சரி விடும்மா,, போகப்போக எல்லாம் சரியாயிடும்,, எனக்கு தெரிஞ்சு பாஸ்க்கு முன்னவிட இப்போ எவ்வளவோ கோபம் எல்லாம் குறைஞ்சிருக்கு,, இன்னும் கொஞ்சநாள் ஆனா எல்லாம் சரியாயிடும் பாரு" என்று ஆறுதல் சொன்னான்

அவனுடைய இதமான அணைப்பில் தனது துக்கத்தை மறந்த அனிதா கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்று " எங்க மான்சியை காணோம்" என்றாள்

" அவங்களை சுகன்யாகிட்ட ஒப்படைச்சுட்டு வந்தேன்,, இனிமேல் பிரச்சனை இல்லை" என்று கார்த்திக் சொல்ல

" அப்ப சரி நான் கிளம்புறேன்,,உங்களை நம்பித்தான் என் பிரண்ட்டை ஒப்படைச்சுட்டு போறேன் கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க,, அவ ரொம்ப பயந்த சுபாவம்,, எதுவாயிருந்தாலும் பொசுக்குன்னு அழுதுடுவா ,, ப்ளீஸ் கார்த்திக் கொஞ்சம் கேர் எடுத்து அவளை பார்த்துக்கங்க" என்று சொல்லிவிட்டு அனிதா போக

" ஏய் ஹனி உன் ப்ரண்ட்டை பார்த்துக்க எனக்கு கூலி எதுவும் கிடையாதா?" என்று குரலில் கேலி கொப்பளிக்க கேட்டவனை நெருங்கிய அனிதா " ஆமா நான் வந்ததை எங்க அண்ணன் கிட்ட எப்படி சொன்னீங்க,, அனிதா மேடம் வந்திருக்காங்கன்னு தானே?,, அதனால உங்களுக்கு இன்னிக்கு கோட்டா கட்,, ஆனா அதுக்கு பதிலா இது" என்றவள் அவன் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்துவிட்டு " என்னை மேடம்னு சொன்னதுக்கு இதுதான் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிப்போனாள்

தலையை தடவிக்கொண்டு அவள் போன திசையையே பார்த்த கார்த்திக்,, உதட்டில் புன்னகை மலர தனது இருக்கையில் போய் அமர்ந்தான் 






No comments:

Post a Comment