Monday, August 17, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 8

“ ஓ அப்படியா” என்ற மான்சியின் குரலில் மறைக்க முடியாத ஏமாற்றம் இருந்தது,, இனிமேல் கேன்டீனில் கூட சத்யனை பார்க்கமுடியாது போலருக்கே, என்று எண்ணி மனதுக்குள் குமுறியவாறு அவளுடைய வேலைகளை தொடர்ந்தாள்

அடுத்த நான்கு நாட்கள் எந்த மாற்றமும் இன்றி போனது,, நான்கு நாட்களும் சத்யனை மில்லில் எங்கேயும் பார்க்க முடியவில்லை,, ஒருநாள் மட்டும் இவள் இருக்கும் பகுதிக்கு வந்தவன் அவளை பார்க்காமலேயே போய்விட்டான்

வேலை செய்யும் பெண்களிடம் சலசலப்பை உணர்ந்து மான்சி திரும்பி பார்ப்பதற்குள் சத்யன் போய்விட்டான்,, மான்சியால் அவன் முதுகை தான் பார்க்க முடிந்தது

இப்போதெல்லாம் மான்சிக்கு பயம் வந்தது,, அனிதா சொன்னது போல்,, சத்யன் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவானோ என்ற பயம் வந்தது,,

தான் எடுத்த முடிவு தவறானதோ என்று பயந்தாள்,, இந்த பிரிவு நிரந்தரமாகி விடுமோ என்று கலங்கினாள்


ரஞ்சனா தங்களது வீட்டுக்கு வரச்சொன்னது ஞாபகம் வந்தது,, தனது பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு ரஞ்சனாவிடம் தான் இருக்கிறது என்று நினைத்த மான்சி,, மனசுக்குள் வைத்து புரியாமல் தவிப்பதைவிட நேரடியாக கேட்டுவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்தாள்

அன்று மாலை மில்லில் இருந்து நேராக அனிதாவின் வீட்டுக்கு போனாள் மான்சி
வசுவின் விசேஷத்திற்கு வந்திருந்த அனைத்து விருந்தாளிகளும் போய்விட்டிருந்தனர்,, வீட்டினர் அனைவரும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க,, அனிதா மான்சியை பார்த்ததும் எழுந்து வந்து கையைப்பிடித்து அழைத்துச்சென்றாள்

வசு அனிதா இவர்களுக்கு நடுவே மான்சி அமர்ந்துகொண்டாள்,,
“ வாம்மா மான்சி” என்றழைத்த ரஞ்சனா மான்சிக்கு காபி எடுத்துவர உள்ளே போய்விட,, எதிர் சோபாவில் இருந்த கிருபானந்தன் மான்சியை பார்த்து புன்னகையோடு “ அன்னிக்கு வசு விசேஷத்தப்ப நீ இங்கயே தங்கியிருக்கலாம்,, நைட்ல உன்னை அனுப்பவே எங்களுக்கு மனசில்லைம்மா” என்றார்


மான்சி எதுவும் பேசாமல் , அவருக்கு பதிலாக ஒரு புன்னகையை மட்டும் தந்தாள் ,, நோயின் தீவிரம் கிருபாவின் முகத்தில் தெரியவேயில்லை,, சத்யனுக்கு வயதானால் எப்படியிருப்பான் என்று இவரைப் பார்த்து யூகிக்கலாம்,, தலையில் இருக்கும் நரையையும், நெற்றியில் இருக்கும் சுருக்கத்தையும் சரி செய்தால் சத்யனின் சகோதரன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார் கிருபா

காபி எடுத்துவந்த ரஞ்சனா அதை மான்சியிடம் கொடுக்க, அவள் அதை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்,, அவளுக்கு இப்போது சூடான காபி தேவையாயிருந்தது,, காபியை ஊதி ஊதி ஒரே மூச்சில் குடித்துவிட்டு டம்ளரை டீபாயில் வைத்தாள்

“ என்னம்மா உடம்பு எதுவும் சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்க” என்று வசுவை தள்ளி அமரச்சொல்லி விட்டு மான்சியின் அருகில் அமர்ந்தாள் ரஞ்சனா
ரஞ்சனாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்ட மான்சி “ காலையிலேர்ந்து கொஞ்சம் தலைவலி ஆன்ட்டி அதான் சோர்வா இருக்கு” என்ற மான்சி ரஞ்சனாவின் முகத்தை நேரடியாக பார்த்து “ ஆன்ட்டி நான் உங்ககூட கொஞ்சம் தனியா பேசனும்” என்றாள் சங்கடமாக...

“ என்னம்மா பேசனும் பேசும்மா,, வா என் ரூமுக்கு போகலாம்” என்று மான்சியை கைப்பற்றி எழுப்பினாள் ரஞ்சனா

மான்சி அருகில் இருந்த அனிதாவை பார்த்தாள்,, அவள் முகத்தில் குழப்பம் தெரிந்தது,, வசு முகத்தில் புரியாத பாவனை இருந்தது ,, மான்சி எதுவும் சொல்லாமல் ரஞ்சனாவின் பின்னால் போனாள்,,

ரஞ்சனா தனது அறைக்கு போய் கதவை மூடிக்கொண்டு,, “ இங்கே உட்காரும்மா” என்று அங்கிருந்த சோபாவை காட்டிவிட்டு , தானும் அமர்ந்தாள்

“ சொல்லும்மா என்ன பிரச்சனை,, மறுபடியும் உன் மாமா வீட்டு ஆளுங்க உங்க வீட்டுக்கு வந்து ஏதாவது தகராறு பண்றாங்களா?,, அப்படின்னா உடனே சொல்லு நம்ம அனிதா அப்பாவுக்கு கோயமுத்தூர் ஐஜியை தெரியும், ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்” என்றாள் ரஞ்சனா

“ அய்யோ அதெல்லாம் இல்லை ஆன்ட்டி” என்று அவசரமாக மான்சி கூற ..

“ பின்னே வேரென்ன பிரச்சனை,, எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு மான்சி” என்று ரஞ்சனா ஊக்குவிக்க...

பெரும் தயக்கத்திற்கு பிறகு “ எனக்கு உங்களைப்பத்தி தெரியனும்,, அதாவது நீங்க எப்படி கிருபா அங்கிள் வாழ்க்கையில் நுழைஞ்சீங்கன்னு தெரியனும்” என பட்டென்று போட்டு உடைத்தாள் மான்சி

இதை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சனா அதிர்ச்சியில் திகைத்துப் போய் மான்சியை பார்த்தாள்

“ ஆமாம் ஆன்ட்டி எனக்கு உங்களை பத்தி தெரியனும்,, வசந்தி ஆன்ட்டி உயிரோட இருக்கும்போதே நீங்க எப்படி கிருபா அங்கிள் வாழ்க்கையில் வந்தீங்க,, அதுவும் இரண்டு வயது அனிதாவோட இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கீங்க,, அது எப்படி” என்று மான்சி சரமாரியாக கேள்விகளை வீச....
என்ன சொல்வது என்று புரியாதது மாதிரி ரஞ்சனா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்

“ ஆன்ட்டி நான் ஒன்னும் உங்களை தவறா நெனைச்சு இதை கேட்கலை,, எனக்கு சத்யனின் பிடிவாதத்தை உடைக்க ஒரு ஆயுதம் வேனும் அது நீங்க சொல்லப்போறதுல தான் இருக்கு ஆன்ட்டி,, நீங்க என்ன சொல்றீங்க என்பதை வச்சுத்தான் சத்யன்கிட்ட என்னால வாதாட முடியும்,, ஏன்னா இது என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு,, சத்யன் கிட்டே தைரியமா பேசிட்டாலும் உள்ளுக்குள்ளே ரொம்ப தவிப்பா இருக்கு ஆன்ட்டி,, ப்ளீஸ் சொல்லுங்க ” என்று கலங்கிய விழிகளுடன் மான்சி கலக்கமாக பேசினாள்

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் தனது செவியில் வந்து அறைவது போல் இருக்க,, சற்றுநேரத்தில் சுதாரித்த ரஞ்சனா “ இதை பத்தி பேசனும்னா அங்கிளும் கூட இருக்கனும் மான்சி,, என்று ரஞ்சனா தீர்கமாக கூற

“ அய்யோ ஆன்ட்டி,, அங்கிள் முன்னாடி என்னால இதைப்பத்தி பேசவும் முடியாது,, கேட்கவும் முடியாது,, நான் நீங்க சொல்றதை நம்புறேன் ஆன்ட்டி” என்று மான்சி பிடிவாதமாக கூறினாள்

இவ்வளவு நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்த தனது திருமணவாழ்வின் ஆரம்பத்தை,, தனது வருங்கால மருமகளிடம் சொல்ல ஆரம்பித்தாள் ரஞ்சனா....

ரஞ்சனா சொல்வதை திகைப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருந்தாள் மான்சி



இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ரஞ்சனாவும் ஒரு பேரழகி தான்,, ஆந்திரா தமிழ்நாட்டுக்கும் நடுவே குடியாத்தம் சித்தூர் சாலையில், வரதரெட்டிப்பள்ளி ரஞ்சனாவின் சொந்த ஊர்,, அது ஊர் என்பதைவிட பெரிய கிராமம் என்று சொல்லலாம்,

ரஞ்சனாவின் அப்பா சபாபதிரெட்டி வேலூர்மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஓடிய லக்ஷ்மி சரஸ்வதி பஸ்சர்வீஸில் செக்கிங்காக பணி செய்தார், அம்மா வரதம்மாள் பெயரைப் போலவே அமைதியானவள்,, கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து ரஞ்சனாவை பெற்றாள்

சபாபதி உத்யோகத்தில் நல்லபெயர் வாங்கினாலும் நடத்தையில் மிகக் கேவலமானவர் என்ற பெயர் வாங்கியவர், பலவருட செக்கிங் ஆபிஸர் அனுபவம் வயது வித்தியாசமின்றி பல பெண்களின் அறிமுகத்தை கொடுத்தது, ரஞ்சனாவிற்க்கு எட்டு வயதாக இருக்கும்போது ஒருநாள் காய்ச்சலில் படுத்த சபாபதியை மருத்துமனையில் அனுமதித்தார்கள்

மருத்துவப் பரிசோதனையில் சபாபதிக்கு ஹெச் ஐ வி தொற்று இருப்பதாக கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்,, நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் கொஞ்சநாளில் சபாபதி இறந்துவிட, அந்த நோயின் தாக்குதல் வரதம்மாளுக்கும் இருப்பது தெரிந்ததும், ரஞ்சனாவும் அவள் அம்மாவும் எக்கச்சக்கமான உறவுகள் இருந்தும் அனாதைகள் ஆக்கப்பட்டனர்,

சொந்த சகோதரனின் வீட்டில் இரவு தங்கி காலையில் எழுந்தபோது தாயும் மகளும் படுத்திருந்த தலையனை பாய் எல்லாம் தோட்டத்தில் நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டதை பார்த்ததும் மனம் நொந்த,, வரதம்மாள் தன் மகளை நல்லூரில் இருக்கும் ஒரு அனாதை விடுதியில் சேர்த்துவிட்டு தானும் அங்கேயே உயிர் இருக்கும் வரை சேவை செய்வதாக சொல்லி தங்கினாள்

சபாபதி இறந்து ஒருவருடம் கூட ஆகாத நிலையில் வரதம்மாளும் இறந்துபோனாள்,, முற்றிலும் அனாதையாக்கப்பட்ட ரஞ்சனா, அனாதை விடுதியில் தங்கி தனது படிப்பில் கவனம் செலுத்தினாள்,, வெளியுலகில் இவளை ஒதுக்கியது போல விடுதியில் யாரும் ஒதுக்கவில்லை,, ஏனென்றால் இங்கே இவளைப் போல பலர் இருந்தனர்

ரஞ்சனா பள்ளிப்படிப்பை முடித்ததும் ஒரு ஸ்பான்சரின் தயவில் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது,, கல்லூரியில் கால் வைத்ததுமே எல்லோருக்கும் வழக்கமாக வரும் காதல் வியாதி இவளையும் தொற்றிக்கொண்டது.

அதே கல்லூரியில் மேற்ப்படிப்பு படித்த குருமூர்த்தியிடம் மனசை பறிகொடுக்க, அவனு ரஞ்சனா எனும் ஆந்திரா அழகியின் அழகில் மயங்கினான்,, இருவரும் ஈருடல் ஓருயிர் என்று பழகினாலும், பிற்காலத்தில் வாழ்க்கைக்கு படிப்பு இருவருக்கும் அவசியம் என்று உணர்ந்து படிப்பிலும் கொஞ்சம் கவனத்தை செலுத்தினார்கள்
குருமூர்த்திக்கு ரஞ்சனாவின் அழகு ஒன்றே குறிக்கோளாக இருந்தது,, கல்லூரியின் கனவுக்கன்னியாக இருக்கும் ரஞ்சனா தன்னிடம் மயங்கியதை நினைத்து கர்வப்பட்டான்,, அவனுடைய படிப்பு முடிய சிலநாட்களே இருந்த நிலையில் எப்படியாவது ரஞ்சனாவை அடைந்துவிடும் முயற்ச்சியில் இறங்கினான்

அவனுடைய நண்பனின் வீட்டில் ஊருக்குப்போய் இருக்க,, அரைநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, “ நமது திருமணம் பற்றி பேசவேண்டும் வா போகலாம்” என்று அழைத்துக்கொண்டு நண்பனின் வீட்டுக்கு வந்தான்,

திருமணம் என்ற மகுடியை ஊதியதும்,, ரஞ்சனா எனும் பாம்பு மகுடிக்கு மயங்கியது,, இது தவறு என்று புத்தி எச்சரிக்கை செய்தாலும், காம வயப்பட்ட உடலும்,, காதல் வயப்பட்ட மனமும் அதை ஏற்க்க மறுத்தது,, தன்னை திருமணம் செய்யப்போகிறவன் தானே என்ற தைரியம் குருமூர்த்திக்கு இணங்க வைத்தது

திருமணத்தை இப்படி செய்யவேண்டும், இந்த பொன்னுடலுக்கு இந்த நிறத்தில் பட்டுப்புடவை எடுத்தால் பொருத்தமாக இருக்கும்,, தாலியை தங்க சங்கிலியில் கோர்த்து கட்டவேண்டும்,, ஹனிமூனுக்கு இந்தந்த ஊர்களுக்கு போகவேண்டும், என்று ஆசை வார்த்தைகள் பேசிப்பேசி ரஞ்சனாவை தன் வசப்படுத்திய குருமூர்த்தி,, அவள் மறுக்கும் நேரத்தில் “ என்மேல் உனக்கு நம்பிக்கையில்லையா ரஞ்சு ? இப்ப என்ன உனக்கு கல்யாணம் தானே வேண்டும், சரி எழுந்து வா பக்கத்துல இருக்குற கோயிலுக்குப்போய் இப்பவே உனக்கு தாலி கட்டுறேன்” என்று கோபமாக கூறியதும்....

அவன் கோபப்படும் அழகை ரசித்தபடியே அவனுக்கு இணங்கினாள் ரஞ்சனா, தனது ஆசையை தீர்த்துக்கொண்டு அவன் தனியாக விழுந்தபோது ரஞ்சனா செய்த தவறை எண்ணி கண்ணீரில் கரைந்தாள்

“ ச்சு ஏன் இப்படி அழுவுற செல்லம்,, நான் என்ன வேத்தாளா? என்னிக்கி இருந்தாலும் உனக்கு நான் எனக்கு நீன்னு முடிவு பண்ணதுதானே ரஞ்சு,, நீ இப்போ அழுவுறதை பார்த்தா நான் என்னமோ உன்னை ஏமாத்திட்ட மாதிரி பீலிங்கா இருக்கு” என்று குருமூர்த்தி வார்த்தைகளில் தேனை குழைத்து கூற

முன்பைவிட அதிகமா மயங்கிப்போனாள் ரஞ்சனா,, அன்று மாலை அவளது விடுதி இருக்கும் தெருமுனையில் விட்டுட்டு ரஞ்சனாவின் தோளை தொட்டு “ நமக்குள் நடந்ததை யார்கிட்டயும் சொல்லாதே ரஞ்சு,, கூடிய சீக்கிரமே ஒரு வேலையில ஜாயின் பண்ணிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்

அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, பல கனவுகள் கண்ட ரஞ்சனா,, அடுத்த வாரமே அவன் படிப்பு தங்கியிருந்த அறையை காலிசெய்துவிட்டுஊருக்கு போவதாக கூற கண்ணீருடன் விடைகொடுத்தாள்


இவளுக்கும் பரிச்சை முடிந்தது.,இனிமேல் படிப்பு படிக்கவேண்டும் என்றால் வெளியே தங்கி வேலை தேடிக்கொண்டு தான் மேலே படிக்கவேண்டும் என்று அனாதை விடுதியின் காப்பாளர் கூறிவிட,, ரஞ்சனா அங்கிருந்து வெளியேறினாள்,, என்ன செய்வது மேற்கொண்டு படிப்பதா? அல்லது வேலை தேடுவதா என்று குழம்பிய ரஞ்சனா இதுவரை தனக்கு கல்லூரி படிப்புக்கு உதவிய அந்த முகம் தெரியாத ஸ்பான்ஸரிடமே உதவி கேட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்

ஸ்பான்சர்க்கு போன் செய்தபோது அவரது மேனேஜர் தான் எடுத்தார்,, ஐயாவிடம் பேச அரைமணிநேரம் கழித்து கூப்பிடுமாறு கூற,, ரஞ்சனா அரைமணிநேரம் கழித்து போன் செய்தாள்,, இவள் பெயரை கேட்டுவிட்டு உடனடியாக முதலாளிக்கு இணைப்பு கொடுத்தார்கள்

வயதான ஒருவரின் குரலை எதிர்பார்த்த ரஞ்சனா,, இளமையான ஒரு குரலைக்கேட்டு திகைத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ சார் நான் ரஞ்சனா,ஹிமாலயா அனாதை ஆசிரமத்தை சேர்ந்தவள்,, பர்வதம்மாள் டிரஸ்ட் மூலமா நீங்கதான் என்னுடைய கல்லூரி படிப்புக்கு உதவி செய்தீங்க” என்று தன்னைப்பற்றி சொல்லி அறிமுகம் செய்துகொண்டாள்

“ ஓ அப்படியா?’ டிரஸ்ட் எனது தாயார் பெயரில் நடக்குது,, எங்க டிரஸ்ட் மூலம் வருஷத்துக்கு பத்து பேரை தேர்தெடுத்து மூன்று வருஷ கல்லூரி படிப்புக்கு உதவி செய்றது வழக்கம்,, அதுல நீங்க யாருன்னு தெரியலை,, இப்போ என்ன விஷயமா போன் பண்ணீங்க?” என்று கம்பீரமாக கேட்டது அந்த குரல்

“ என்னோட மூன்று வருட படிப்பு முடிஞ்சுபோச்சுங்க சார்,, ஆசிரம ரூல்ஸ் படி இதுக்குமேல அங்கே தங்கமுடியாது,, மேல் படிப்பு படிக்க எனக்கு ஆர்வமாக இருக்கு, ஆனா அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை,, என்னோட தோழி ஒருத்தி வீட்டில் தங்கியிருக்கேன்,, உங்கள் டிரஸ்ட் மூலம் எனக்கு மறுபடியும் உதவ முடியுமா?” என்று தனது நிலைமையை தெளிவாக கூறி ரஞ்சனா உதவி கேட்டாள்

எதிர்முனையில் சிறிது நேர அமைதிக்கு பிறகு “ இல்லம்மா டிரஸ்ட் ரூல்ஸ் மாத்த முடியாது,, நீங்க ஏதாவது வேலை தேடிக்கொண்டு பிறகு மேல் படிப்பை தொடருங்கள்” என்றது அந்த குரல்

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் குழம்பி போய் நின்றாள்,, அதற்க்குள் எதிர்முனையில் இருந்த நபர் “ ஓகே நான் வச்சிரட்டுமா?” என்றார்

அய்யோ என்ற பதட்டத்துடன் “ சார் சார் வச்சிராதீங்க,, எனக்கு படிக்க உதவிய நீங்க இன்னொரு உதவியும் செய்யனும்னு உங்களை வணங்கி கேட்கிறேன் சார்” என்று வேதனையில் மெலிந்த குரலில் ரஞ்சனா கூறினாள்

அந்த குரல் அந்த நபரை ஏதோ செய்திருக்கவேண்டும் “ சொல்லுங்க ரஞ்சனா என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்” என்றார்

“ சார் எனக்கு யாரையும் தெரியாது ,, எனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தால் உங்களை மறக்கமாட்டேன்,, விடுதியை விட்டு வெளியே வந்து இரண்டு நாள் ஆச்சு,, தோழியோட அறையில் தங்கியிருக்கேனெ்,, ஒரு வேலை கிடைத்தால்தான் அடுத்தவேளை உணவு எனும் நிலையில் இருக்கிறேன் ” என்று ரஞ்சனா சொல்வதற்குள் கண்ணீர் கன்னங்களில் வழிந்தது

அந்த மனிதர் சிறிதுநேரம் யோசித்துவிட்டு “ சரி நீங்க உடனே கிளம்பி கோவை வரமுடியுமா? இங்கே ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று ஆறுதலாக கூறினார்

ரஞ்சனாவின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே “ இதோ உடனே கிளம்பி வருகிறேன் சார் ,, ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று தடுமாற்றத்துடன் கூற

“ இட்ஸ் ஓகே கிளம்பி வந்து இதே நம்பருக்கு கால் பண்ணுங்க எங்க வரனும்னு சொல்வாங்க ” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்
மறுநாள் அதிகாலை ரஞ்சனா தன் தோழியிடம் சொல்லிவிட்டு சேலம் வழியாக கோவை சென்றாள்

அந்த நம்பருக்கு போன் செய்தபோது, ஒரு முகவரியை கொடுத்து அங்கே வரச்சொன்னார்கள்,, ரஞ்சனா ஒரு ஆட்டோவில் ஏறி அவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்றாள்

பர்வதம்மாள் டெக்ஸ்டைல் மில் என்று நியான் எழுத்துக்கள் மின்ன,, மிக பிரமாண்டமாக இருந்த அந்த மில்லை பார்த்து பிரம்மித்துப்போன ரஞ்சனா வாட்ச்மேனிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்

முன்பாகவே இருந்த அழகான வரவேற்பு அறையில் ஒரு மூலையில் இருந்த மேசையருகே போய் அதன் பின்னால் இருந்த பெண்ணிடம் தனது பெயரைச்சொல்லி “ ஒரு ஜாப் விஷயமா என்னை வரச்சொன்னாங்க” என்றாள்
பெண் அவளை சிறிதுநேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பக்கவாட்டில் இருந்த அறைக்குள் போனாள்,, ரஞ்சனா அந்த வரவேற்பு அறையை நோட்டம் விட்டாள் அங்கிருந்த அத்தனை பொருட்களிலும் ஒரு நேர்த்தி இருந்தது,, பணத்தின் செழுமை இருந்தது

ரஞ்சனா பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அந்த பெண் வந்து “ நீங்க உள்ளே போகலாம்,, லெப்ட் சைட் பர்ஸ்ட் ரூம்” என்று கைக்காட்டினாள்

“ தாங்க்யூ” என்று புன்னகையுடன் கூறிவிட்டு ரஞ்சனா அந்த அறையை நோக்கி போனாள்

கிருபானந்தன் MA என்ற எழுத்துக்கள் கதவில் மின்ன,, தான் சந்திக்கப்போகும் நபரின் பெயர் கிருபானந்தன் போலருக்கு,, என்று மனதில் யூகித்தபடி ஆள்காட்டிவிரலால் கதவை மெதுவாக தட்டி “மே ஐ கமின் சார்” என்றாள்

“ உள்ளே வாங்க” என்று தொலைபேசியில் இவளுடன் உரையாடிய அதே கம்பீரக் குரல் தமிழில் அழைக்க,, ச்சே நாமளும் தமிழிலேயே கேட்டிருக்கலாமோ, என்று எண்ணியபடி கதவை திறந்துகொண்டு உள்ளே போனாள்

அந்த அறை எளிமையாக இருந்தாலும் அழகாக இருந்தது,, அந்த அறையின் நடுவே இருந்த பெரிய மேசைக்கு பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மனிதரை வணங்கினாள் ரஞ்சனா

“ ம் உட்காருங்க ரஞ்சனா,, மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஆசிரமத்தில் இருந்து அனுப்பிய உங்களோட பயோடேட்டாவில் உங்கள் போட்டோவில் பார்த்தது,, அதுல ரொம்ப சின்னப்பிள்ளயா இருந்தீங்க ” என்று கூறி அறிமுகமாக கிருபா புன்னகைக்க...

அந்த புன்னகையை கண்டு ரஞ்சனா வியந்து போனாள் ,, பணக்காரர்களுக்கு இப்படி புன்னகைக்க கூட தெரியுமா? அவளுக்கு விபரம் தெரிந்த வரை அவளிடம் யாருமே இதுபோல நேசத்துடன் புன்னகை செய்ததேயில்லை,, குருமூர்த்தியும் சிரிப்பான் அதில் விஷமம் தான் அதிகமிருக்கும்

“ என்னாச்சு மிஸ் ரஞ்சனா, அப்படியே ப்ரீஸ் ஆயிட்டீங்க” என்று கிருபா அவளின் நினைவுகளை கலைத்தான்

கிருபாவுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து “ ம் ஒன்னுமில்லங்க சார்,, எனக்கு படிப்பை குடுத்த ட்ரஸ்ட் உரிமையாளர் வயதானவராக யூகித்திருந்தேன்,, அதான்” என்று ரஞ்சனா சொல்லவந்ததை முடிக்காமல் இழுக்க...

“ ஓ... அப்போ என்னை சின்னப்பையன்னு சொல்றீங்களா ரஞ்சனா,, என்று கூறி பளிச்சென்று சிரித்த கிருபா “ ம்ஹூம் எனக்கு முப்பத்தைந்து வயது ஆகுது,, திருமணம் ஆகி அழகான மனைவியும் ஒன்பது வயதில் மகனும் இருக்கான்,, அதனால என்னையும் பெரியமனுஷன் லிஸ்ட்டில் சேர்த்துக்கங்க ரஞ்சனா” என்று சிரிப்பை அடக்கியவாறு கிருபா கூறியதும்

ரஞ்சனா பக்கென்று சிரித்துவிட்டாள்,, சிலநாட்களாக சிரிப்பதை தான் மறந்துவிட்டோம் என்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது,, இன்னும் கொஞ்சம் சிரிக்கவேண்டும் என்ற ஆவலை அடக்கிக்கொண்டாள்

“ ஓகே மிஸ் ரஞ்சனா, எங்களின் ட்ரஸ்ட் மூலம் படிக்கும் பெண்கள் யாருக்குமே நாங்கள் மீண்டும் உதவுவது கிடையாது,, காரணம் அவர்கள் அடித்தளமாக படிப்பை கொடுத்த பிறகு அவர்களின் பிற்காலத்தை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதால்தான்,, அதுவுமில்லாமல் மறுபடியும் அவர்களுக்கு செலவிடும் தொகைக்கு இன்னும் சில பெண்களுக்கு படிப்பை தரலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்,, அதனால் நீங்கள் மேற்படிப்புக்கு கேட்டபோது உங்களுக்கு எங்களால் உதவ முடியவில்லை ” என்று தனது நிலையை தெளிவாக கிருபா எடுத்து சொல்ல...

“ இதுவும் நல்லதுதான் சார் பல பெண்கள் பயன் பெறவேண்டும் என்பதே எனது ஆசையும்,, எனக்கு ஏதாவது வேலைகிடைத்தால் அதை வைத்து நான் பிழைத்துக்கொள்வேன் சார்”

அப்போது தொலைபேசி ஒலிக்க, எடுத்து பேசினான் கிருபா “ சொல்லும்மா” என்றவர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தால் எதிர்முனையில் இருப்பவர் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தாள் ரஞ்சனா

அவளிடம் காத்திருக்குமாறு சைகையில் சொல்லிவிட்டு “ இல்ல வசி நான் மறக்கலை இதோ கிளம்பி வந்துர்றேன்,, சத்யன் கிட்ட அழவேனாம்னு சொல்லு” என்று சமாதானம் பேசியவர் எதிர்முனையின் பதிலுக்கு பிறகு “ சரிம்மா அவன்கிட்ட குடு நான் பேசுறேன்” என்றார்

சிறிது அமைதிக்கு பிறகு “ ஏய் சத்யா செல்லம் எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை இதோ இன்னும் அரைமணிநேரத்தில் வீட்டுல இருப்பேன்,, நீ அழாதேடா அப்புறம் அம்மாவும் அழுவா,, இதோ வந்துர்றேன் ” என்று கூறிவிட்டு போனை வைத்தார்

எதிரில் இருந்த ரஞ்சனாவை பார்த்து புன்னகை செய்து “ ஸாரிம்மா,, வீட்டிலிருந்து போன்,, பையனை சயின்ஸ் எக்ஸிபிஷன் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்தேன்,, நான் இன்னும் வரலைன்னு அழுது ஆர்பாட்டம் பண்றான் போலருக்கு,, நான் உடனே போகனும்,, உங்களை இங்கே ஸ்டெனோவாக அப்பாயின்மென்ட் பண்ணச்சொல்லி இருக்கேன்,, நீங்க ரிசப்ஷனில் வெயிட் பண்ணுங்க,, ஆர்டரை குடுத்து வேலையைப் பற்றியும் சொல்வார்கள்” என்று மகனை காணும் ஆவலில் கிருபா படபடவென்று பேசினான்

அதற்க்கு மேல் பேச எதுவுமில்லை என்பதால் எழுந்துகொண்ட ரஞ்சனா கிருபாவை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு “ ரொம்ப நன்றிங்க சார்” என்று கூறிவிட்டு கதவை நோக்கி போனாள்

“ கொஞ்சம் நில்லுங்க மிஸ் ரஞ்சனா” என்று கிருபா அழைக்க

நின்று திரும்பி “ சொல்லுங்க சார்” என்றாள் ரஞ்சனா

“ நீங்க எங்கே தங்கப்போறீங்க,, என்றான்

முகத்தில் சட்டென்று ஒரு கவலை வந்து அமர “ இன்னும் எதுவும் ஏற்பாடு செய்யலை சார்,, ரயில் இருந்து இறங்கி அங்கேயே முகம் கழுவி ப்ரஷாகி நேரா இங்கதான் வந்தேன்” என்றாள் ரஞ்சனா

“ அப்படின்னா வெளியே ரிசப்சனிஸ்ட் ஷீலா இருக்காங்களே அவங்ககிட்ட கேளுங்க,, அவங்க லேடிஸ் ஹாஸ்டலில் தான் தங்கியிருக்காங்க,, அங்கேயே ரூம் இருக்குதான்னு கேளுங்க,, நான் ஷீலா கிட்ட பேசுறேன்” என்று கூறிவிட்டு கிருபா தொலைபேசியை எடுக்க...

மறுபடியும் ஒரு உணர்ச்சிபூர்வமான நன்றியை தெரிவித்துவிட்டு ரஞ்சனா அங்கிருந்து வெளியே வந்தாள்

ரிசப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்,, ரிசப்சனிஸ்ட் ஷீலா இவளைப் பார்த்து சினேகமாக புன்னகை செய்ய, அவள் மேசையில் இருந்த தொலைபேசி அவளை அழைத்தது எடுத்து சிறிதுநேரம் பேசிவிட்டு ரஞ்சனாவை அழைத்தாள்

அருகில் வந்த ரஞ்சனாவின் கைகளை பற்றி குலுக்கி விட்டு “ வேலை கிடைச்சதுக்கு இன்னிக்கு எனக்கு ட்ரீட் வைக்கனும்” என்றாள் நேசத்துடன்




No comments:

Post a Comment