Tuesday, August 25, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 2

இன்ஸ்பெக்டர் ராமகோபாலன் தனது விசாரணையை முடித்து இருக்க, அந்த தியேட்டர் ஊழியன் சுரேசை கைது செய்து சிவாவிடம்,"சார் மேற்கொண்டு விசாரனைல எதாவது தேவைனா நீங்களோ இல்லை உங்க தங்கையோ வந்து பேச வேண்டி இருக்கும்" என்று சொல்ல "சரி" என்றுதலை அசைத்தான் சிவா.

அதற்கு மேல் திரைபடம் பார்க்க விருப்பம் இல்லாததால் சிவா, சந்தோஷ், தீபக் மூவரும் சாந்தி அவள் தோழிகள் அனைவரையும் ஆட்டோவில் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தீபக் சிவாவை திட்ட ஆரம்பித்தான். 

"ஏண்டா பேசிகிட்டே இருக்கும்போது அவனை அடிக்க ஆரம்பிச்ச. கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ண கூடாதா?"



"தீபக் உனக்கு இந்த விஷயம் சாதாரணமா இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை. அவன் கைய காலை ஓடைச்சு போட்டு இருக்கணும்.மிஸ் ஆய்டுச்சு"பல்லை கடித்தான் சிவா.

அருகில் இருந்த சந்தோஷ், "டேய் சிவா கூல்டா" என்று அவனை சமாதான படுத்தி விட்டு, தீபக்கை பார்த்து 

"ஏண்டா அவனை பத்தி உனக்கு தெரியாதா, கண் முன்னால ஏதாவது அநியாயம் நடந்தா அவனால பொறுக்க முடியாது. பாதிக்கபட்டது யாருடா, நம்ம தங்கச்சி"என்று சொல்ல

"எனக்கு புரியுது சந்தோஷ். அதுக்காக இப்படியா சண்டை போடுறது, சரி விடு,"

சிவா ஒன்றும் பேசவில்லை, அவன் செல்போனில் கால் வர எடுத்து,

"ஓகே சார், இதோ வர்றேன்" என்று சொல்லி விட்டு தீபக், சந்தோஷிடம், "இன்ஸ்பெக்டர் ராமகோபாலன் கூப்பிடுறார். நான் அவரை பாத்துட்டு வீட்டுக்கு போறேன்" என்று சொல்ல, தீபக் "இல்லைடா நானும் வரேன்" என்று சொன்னான்.

'சொன்னால் கேட்க மாட்டான், அதனால் கூட்டி செல்லலாம்' என்று முடிவு செய்தபடி, சந்தோஷிடம் "நீ வீட்டுக்கு கிளம்பு,நானும் தீபக்கும் போலிஸ் ஸ்டேஷன் போயிட்டு உனக்கு போன் பண்ணுறோம்."

அடுத்த பத்து நிமிடத்தில் Fair Lands போலிஸ் ஸ்டேஷன் வந்தடைந்தனர்.

உள்ளே நுழைந்த சிவா மற்றும் தீபக்கை பார்த்து ராமகோபாலன் "வாங்க சிவா" என்று தனக்கு எதிரே இருந்த நாற்காலியில் இருவரையும் உட்கார சொல்லி விட்டு "நான் விசாரிச்சுட்டேன். அவனா இதை செய்யலை இதுல, நிறைய பேர் சம்பந்த பட்டு இருக்காங்க.நீங்க உறுதியாய் இருந்து, கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திங்கன்னா நான் நடவடிக்கை எடுப்பேன். உங்களுக்கு பயம் இல்லையே" என்று கேட்க, 

"எனக்கு எதுக்கு சார் பயம், என்ன வேணாம் கேளுங்க, எழுதி தர்றேன். அவங்க எல்லாரையும் உள்ளே தள்ளனும்".

தீபக் "சார் ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு சிவாவை தனியாக அழைத்து சென்றான்.


யங்கியபடி இன்ஸ்பெக்டர் அருகில் வந்து "சார் நான் என்ன கம்ப்ளைன்ட் வேணும்னாலும் எழுதி தரேன். ஆன தங்கச்சி பேர் மட்டும் வராம பாத்துக்கிடனும்" என்று கெஞ்சியபடி கேட்க, இன்ஸ்பெக்டர் யோசித்தார்.

"சரி அப்படின்னா, நான் ஒண்ணு பண்றேன் சிவா, பேப்பர்ல இந்த நியூஸ் கொடுத்தா, நம்ம CM-க்கு நியூஸ் போய்டும். அதுக்கு அப்புறம் கேஸ் தானா நடக்கும். நான் ஏதும் வெளியே வராம பாத்துக்கிறேன்."

"ஆமா உங் கூட இருக்க இவர் யாரு?" என்று தீபக்கை கை காண்பித்து கேட்க, "சார் இவன்தான் சாந்தியோட அண்ணன், நான் அவன் பிரெண்ட்" சிரிக்க ஆரம்பித்தார். 

"அட பாவிகளா, நீ அவனை புரட்டி போட்டதை பார்த்து, நான்தான் உன்னை அந்த பொண்ணோட அண்ணன்னு நினைச்சுட்டேன். சரி ரெண்டு பேரும் கிளம்புங்க" என்று சொல்லி விட்டு, சுரேசை விசாரிக்க ஆரம்பித்தார். 

வெளியே வந்த தீபக் முதலில் சந்தோஷை கூப்பிட்டு விஷயத்தை சொன்ன பிறகு, சிவா உடன் அருகில் இருந்த மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு திரும்பினர்.

வீட்டுக்கு வெளியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு மெதுவாக தள்ளி வந்து கதவை சத்தம் போடாமல் திறந்து வண்டியை நிறுத்தி, பூட்டி விட்டு பின் பக்கம் வழியாக சிவாகதவை திறக்க, உள்ளே அவன் அக்கா வசந்தி இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

அசடு வழிந்தான் சிவா. "என்ன அக்கா தூங்காம முழிச்சுகிட்டு இருக்க, உடம்பு கெட்டு போக போகுது" என்று அக்கறையுடன் விசாரிக்க,

"என் உடம்பை பத்தி கவலைபட்ட மாதிரி நடிச்சது போதும். இப்போ மணி எத்தனை."

"என்ன அக்கா இது கூடவா தெரியலை. அங்கே பாரு"சுவர் கெடிகாரத்தை காண்பித்து, "இன்னும் பதினோரு மணி ஆகலை" என்று சொல்ல,

"ஏண்டா, இப்படி தினமும் லேட்டா வந்தா என்ன அர்த்தம். இன்னைக்கு சண்டே, இன்னைக்காவது வீட்ல ரெஸ்ட் எடுக்காம ஊர் சுத்திட்டு வர.தினமும் வேலை முடிக்க பத்து மணிக்கு மேல ஆரம்பிக்குது, இன்னைக்காவது ரெஸ்ட் எடுக்கலாம்ல."

தலை குனிந்தவாறே, "இல்லை அக்கா தீபக், சந்தோஷ் ரெண்டு பேரும் ஒரு மாசமா படத்துக்கு கூப்பிடுரானுங்க. நான்தான் இன்னைக்கு போகலாம்னு சொன்னேன். படம் முடிஞ்சு சாப்பிட்டு வர்றேன்" என்று சொல்ல

"ஓ துரை வெளில சாப்பிட்டு வரியா, வீட்ல உனக்கு வச்சு இருக்கிறதா யார் சாப்பிடுவா?"

"அதுக்கு ஏன் அக்கா கவலைபடுற. நம்ம ஜானி நல்லா சாப்பிடுவான்" என்று சிரித்தபடி சொல்ல, உள்ளே இருந்து

"இல்லை மாமா, ஜானிக்கு போட வேண்டாம் அவன் பாவம்" என்று ப்ரியா வக்காலத்து வாங்க

"ஆமா நம்ம பொழப்பு அந்த நாய் பொழப்பை விட மோசமாதான் இருக்கு" என்று முனகினான்.

"டேய் ஜானியை நாய்னு சொல்லாதே, அதுவும் எனக்கு புள்ளை மாதிரிதான்" என்று வசந்தி சொல்ல ஆமோதித்து, வாசலில் இருந்த ஜானி'லொள்' என்று கத்தி பதில் சொன்னான்.

உள்ளே சென்று உறங்கும் அப்பாவை ஒரு நிமிஷம் கண் கலங்க பார்த்து விட்டு, மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்று இருக்க சாத்தி விட்டு உறங்கினான்.


காலைசூர்ய வெளிச்சம் முகத்தில்பட கண் விழித்தான் சிவா.

தன் கை கெடிகாரத்தை பார்க்க மணி ஏழு. 

'எட்டு மணிக்கு சூப்பர் மார்கெட் திறக்க வேண்டுமே' என்று நினைத்து கொண்டே, எழுந்து பல்விளக்கி வந்து பார்த்தால் அவன் டேபிளில் காபி தயாராக இருந்தது. 

'அக்கான்னா சூப்பர் தான்' என்று மெச்சியபடி, டவல் எடுத்து குளித்து விட்டு அடுத்த பத்து நிமிடத்தில் வெளி வர மணி 7.30

உடை மாற்றி, தயார் ஆகி கீழே வர, அக்கா டைனிங் டேபிளில் இட்லிகளை அடுக்கி வைத்து இருந்தாள். 

"என்ன அக்கா நாம வீட்ல அஞ்சு பேர்தான இருக்கோம் எதுக்கு பத்து பேருக்கு இட்லி பண்ணு இருக்க" என்று தனது சட்டை கையை மடித்து விட்டபடி கேட்க, 

"இல்லைடா இது நாம அஞ்சு பேருக்கு தான். பத்துமான்னு தெரியலை. இதை தவிர தோசை ஊத்தலாமன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்"என்று சொல்ல,

"அக்கா உனக்கு புண்ணியமா போகும். நான் முதல்ல நாலு இட்லி சாப்பிட்டு ஓடி போயிடறேன். அத்தான் பின்னால வராரு அவருக்கு மீதி எல்லாத்தையும் கொடு" என்று சிரித்து கொண்டே சாப்பிட்டு விட்டு, அப்பாவை போய் பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினான்.

Fair Landல வீடு இருந்தாலும், சூப்பர் மார்கெட் இருப்பது Five roads-ல் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் கடை வாசலில் இருந்தான்.

காலை எட்டு மணிக்கு வந்து கடை திறந்து அத்தான் பத்து மணிக்கு வந்த பின் மற்ற கடைகளுக்கு போய் ஒரு ரவுண்டு அடித்து வருவது சிவா வழக்கம். திரும்ப வரும்போது மதியம் இரண்டு மணி.

அத்தான் கோவர்த்தன் "என்ன மாப்ள, உங்க அக்கா சாப்பாடு அனுப்பி வச்சுருக்கா, கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அப்புறம் வெளியே போறிங்களா" என்று அன்புடன் கேட்க,

"சரி அத்தான்" என்று தலை அசைத்தான்.

அந்த ஏழு அடுக்கு பெரிய ஸ்டீல் கார்ரியரில் ஒரே ஒரு தட்டை மட்டும் எடுத்து அவன் சாப்பிட மற்ற ஆறு தட்டுகளையும் கலந்து சாப்பிட்டு ஏப்பமிட்டார் கோவர்த்தன். மாமிச மலை போல இருந்த அவர் குணத்தில் கொஞ்சம் குழந்தை மாதிரி. சாப்பாடு மட்டும் சரியாக போட்டு விட்டால் தான் உண்டு தன் கடை வேலை உண்டு என்று இருப்பார்.

அவரை ஓர கண்ணால் பார்த்து மெல்லிதாக சிரித்தபடி கை கழுவினான் சிவா.

"சரி அத்தான் லேன்ட் விஷயமா நான் சந்தோஷை பாத்துட்டு வரேன்" என்று சொல்ல, சரி என்று தலை அசைத்தார்.

சந்தோஷ் நடத்தும் மளிகை கடை சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருப்பதால் அவன் அங்கே அடைய 30 நிமிடம் பிடித்தது. 

கடை வாசலில் சிவாவை கண்ட உடன் சந்தோஷுக்கு ஒரே சந்தோஷம். ஓடி வந்து அவனை கட்டி கொண்டு, 


"டேய் சிவா, சாப்பாடு வீட்ல இருந்து வந்து இருக்கு. நீயும் கொஞ்சம் சாப்பிடுறியா" என்று கேட்க, 

"நான் இப்போ தான் சாப்பிட்டு வரேன். நீ சாப்பிடு. நான் வெயிட் பண்ணுறேன்" என்று சொல்லி விட்டு, வாசலில் இருந்து பக்கத்துக்கு கடைகளை வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான்.




தூரத்தில் வருவது சாந்தி போல தெரிய கூர்ந்து கவனித்தான்.

கொஞ்சம் பக்கத்தில் வர 'அது சாந்திதான். அது யார் பக்கத்தில? அவளோட பிரெண்ட்டா இருக்குமோ. என்ன இந்தநேரத்ல இங்கே சுத்திகிட்டு இருக்காங்க"

அருகில் வந்த உடன் அவனை அடையாளம் கண்டு கொண்ட சாந்தி "ஹாய் சிவா அண்ணா என்ன இந்த நேரத்ல உங்க கடைல இருக்காம இங்க வந்து இருக்கீங்க."

"நான் உன்னை கேக்கனும்னு நினைச்ச கேள்வியை நீ கேட்டுட்ட. இது சந்தோஷ் கடை. நான் அவனை பார்த்து ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். உன்னை பார்த்த உடனே அப்படியே நின்னுட்டேன். ஏன் காலேஜ் போகலையா."

"இல்லை அண்ணா, என் பிரெண்ட் ஒருத்தியோட கல்யாணம் நாளைக்கு, அதால கிப்ட் வாங்கலாம்னு நானும் இவளும் வந்தோம்" என்று சொல்லி

"இவர் சிவா அண்ணா."

"அண்ணா இவ என்னோட கிளாஸ்மேட் பெயர் ...." அருகில் வந்த லாரி ஹாரன் சத்தத்தில் 'பெயர் என்ன' என்பது கரைந்து போனது.

சாந்தி தோழியை பார்த்தான். சுடிதாரில் அழகான, அதே சமயத்தில் இயல்பான தோற்றத்துடன் இருந்த அந்த பெண்ணோ "இவரை தான் நல்லா தெரியுமே. நேத்து சினிமா தியேட்டர்ல புரட்டி எடுத்தாரே" என்று சொல்ல, சிவா அசடு வழிய சிரித்து நின்றான். 

அதற்குள் உள்ளே இருந்து வந்த சந்தோசை பார்த்து விட்டு சாந்தி கை அசைக்க, அவனும் வந்து பேசி விட்டு, "என்ன சாந்தி கார்ல ட்ராப் பண்ணட்டுமா" என்று கேட்க, "இல்லை சந்தோஷ் அண்ணா நாங்க ஆட்டோல போய்க்கிறோம்" என்று சொல்லி விட்டு, சாந்தி தன் தோழியுடன் விடை பெற்றாள்.

சென்ற சாந்தியை பார்த்து கொண்டே, "சந்தோஷ் நீ நேத்து ஏதோ கொண்டலாம்பட்டி Bye passல ரெண்டு கிரௌண்ட் இடம் இருக்கிறதா சொன்னே, போய் பார்க்கலாமா?அத்தான் கிட்ட நேத்து பேசினப்போ அவர் அந்த இடம் வசதியா இருந்தா நாம காம்ப்ளெக்ஸ் கட்டி கிரௌண்ட் ப்ளோர்ல சூப்பர் மார்கெட் வச்சு, மத்த ப்ளோர்ல வாடைகைக்கு விடலாம்னு சொன்னார்என்று கேட்க

"இரு சிவா, இதோ வந்துடுறேன்"என்று சொல்லி கடைபையனிடம் கடையைபார்த்து கொள்ள சொல்லி விட்டு சிவாவின் பைக்கில் தொத்தி கொள்ள இருவரும் கொண்டலாம் பட்டி Bye pass அடைந்தனர்.

பஸ் ஸ்டாப்க்கு அருகில் நூறு மீட்டர் தூரத்தில் இருந்த அந்த இடத்தில், காம்ப்ளெக்ஸ் கட்டினால் சரி வரும் என்பதை உணர்ந்த சிவா,அத்தானை கூப்பிட்டு பேச, அவரோ சந்தோஷிடம் பேசினார்.

"டேய் சிவா, அத்தான் இடத்தோட ஓனர்கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்காரு" என்று சொல்ல "சரி நாம அப்ப கிளம்பலாம்" என்றான் சிவா.

சந்தோஷை அவன் கடையில் இறக்கி விட்டு சிவா திரும்ப, கடையில் அவனுக்காக காத்திருந்த அவன் அத்தான், "என்ன மாப்ளை அந்த இடம் நமக்கு தோதுபட்டு வருமா" என்று கேட்க, 

"நல்ல இடமாதான் தெரியுது. விலை என்ன சொல்றாங்க" என்று கேட்க, அதை தொடர்ந்து இருவரும் பேசி கொண்டு இருக்க வாசலில்'சிவா' என்று அவனை ஒரு குரல் அழைத்தது. 

வெளியே வந்தான் சிவா.வாசலில் தீபக் தன் பைக்கை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தான்.

"என்னடா தீபக் என்ன அவசரம். திடீர்னு வந்து இருக்க. போன் பண்ண வேண்டியது தானே,"


"இல்லைடா, அம்மா அப்பா கல்யாணத்துக்கு திருச்சிக்கு போக வேண்டியது. அப்பாவுக்கு காலைல இருந்து வயிறு சரி இல்லை.அதனால அம்மாவும் தனியா போக விருப்பம் இல்லை. இது பெரியப்பா சம்பந்தி வீட்டு கல்யாணம். வீட்ல யாராவது ஒருத்தர் கட்டாயம் போகணும். காலைல ஏழு மணிக்கு முகூர்த்தம்.அதனால நாளைக்கு லீவ் போட்டு நான் கிளம்பிட்டேன். என்னைய பஸ் ஸ்டாண்ட்ல drop பண்ணு" என்று சொல்ல, 

தீபக் வண்டியை பார்கிங் இடத்தில் நிறுத்தி விட்டு சிவா பஸ் ஸ்டாண்ட் வந்தான்.

வரும் வழியில் "சிவா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். சாந்தி காலைல ஏதோ பிரெண்ட் கல்யாணம், ஏழு மணிக்கு முகூர்த்தம்னு சொன்னா, ஒரு அஞ்சரை மணிக்கு அவளை கல்யாண மண்டபம் கூட்டி போயிட்டு, இருந்து திரும்ப கூட்டி வரணும்.நான் அவ கூட போறதா தான் பிளான். இப்போ நான் திருச்சி போக வேண்டி இருப்பதால நீ அவ கூட கல்யாணம் போயிட்டு வந்தா நல்லது. உன்னால முடியுமா?" என்று கேட்க,

'காலைல அதுவும் அஞ்சு மணிக்கே எழுந்துரிக்கனுமே' என்று யோசித்து, "சரிடா. ஒண்ணும் ப்ரோப்லம் இல்லை. நான்போய் dropபண்ணிக்கிறேன்" என்று சொல்ல, "சரி நான் சாந்தி கிட்ட நீ வந்து பிக் அப் பண்ண போற விஷயத்தை சொல்லிடுறேன்" என்றான்.

தீபக்கை வழி அனுப்பி விட்டு மற்ற இரண்டு சூப்பர் மார்கெட் கிளைகளுக்கு போய் விட்டு வீடு திரும்ப இரவு மணி எட்டு.
காம்பௌண்ட் உள்ளே ஜானி உடன் ப்ரியா விளையாடி கொண்டு இருக்க'ஹாய்' சொல்லி விட்டு உள்ளே நுழைந்தான்.

அக்கா வசந்தி அவனை பார்த்த உடன் சந்தோஷமாகி "என்னடா சீக்கிரம் வந்துட்ட" என்று கேட்க, "என்ன பண்றது அக்கா வேலை முடிஞ்சு போச்சு. என்ன அத்தான் வந்துட்டாரா.?"

"இப்பதாண்டா வந்தார். குளிக்க போயிருக்கார்."

"என்ன சாப்பாடு பண்ணி இருக்க."

"இடியாப்பமும், ஆட்டு கால் பாயாவும் பண்ணி இருக்கேன்."

"சூப்பர் சாப்பாடு தான், அப்படியே முட்டை மாஸ் போட்டா அருமையா இருக்கும்ல".

"எப்போ பாத்தாலும் திங்கவே அலையிறான் பாரு என்று தலையில் செல்லமாக கொட்டினாள்.
தலை துவட்டி கொண்டே பாத்ரூமில் இருந்து வெளி வந்த கோவர்த்தன்"அக்கா தம்பி பாச காட்சி அருமையா இருக்கு" என்று சிரித்தபடி சொல்ல,"முதல்ல தலைய துவட்டிட்டு சாப்பிட உட்காருங்க, தம்பிக்கு பசிக்குது" என்றாள் வசந்தி.

"சரிடி" என்று அப்படியே டைனிங் டேபிள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

வசந்தி சிவாவை ஓர கண்ணால் பார்த்து கொண்டே "என்னங்க, நேத்து கூட ஆத்தூர்ல இருந்து பெரிய மாமா கூப்பிட்டு இருந்தாங்க,சிவாவுக்கு எப்போ கல்யாணம் செஞ்சு வைக்க போறேன்னு கேட்டாங்க. அவனுக்கு என்ன 26 வயசுதானே ஆகுது. மெதுவா பண்ணிக்கலாம்னு சொன்னேன். என் கூட சண்டை போட ஆரம்பிச்சுட்டாரு. 'என்ன வீட்டோட பொண்ணை வச்சு அவனை அப்படியே வீட்டோட மாப்ளையா ஆக்கிடலாம்னு பாக்குரியான்னு கேட்டார்'."

"என் தம்பியை பத்தி பேச இவர் யாரு, எனக்கு கோபம் வந்துடுச்சு. 'என் தம்பிக்கு அப்படி ஒண்ணும் வயசாகலை. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுதான். பார்க்கலாம்னு' சொன்னேன். கோவமா போனை வச்சிட்டார்."




No comments:

Post a Comment