Saturday, August 8, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 8

"இப்போ புரியுதா அண்ணி. அண்ணா உங்களை பார்த்து ஒரு மணி நேரம் இருக்குமா? அதுக்குள்ள போன் பண்ணிட்டாரு பாருங்க.அம்மா கிட்ட நான் இந்த விஷயத்தை சொல்ல போறேன்."

ஸ்வேதா என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்

"கலா நீ ஹரியை டாவடிக்கிற விஷயத்தை நான் ஆன்டி கிட்ட சொல்ல போறேன்" என்று மிரட்ட,
"சரி அண்ணி நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஒரு deal. நீங்க என்னை பத்தி சொல்ல கூடாது. நான் உங்களை பத்தி சொல்ல மாட்டேன்" என்று சொல்ல, ஓகே என்று தலை அசைத்தாள் ஸ்வேதா.

வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டு விட்டு பேசி கொண்டு இருந்தனர்.
தேவகி KK சின்ன வயசில் செய்த குறும்புகளை சொல்ல,ஸ்வேதா புன்முறுவலுடன் கேட்டு கொண்டு இருந்தாள்.

வாசுதேவன் ஸ்வேதாவை "அம்மா உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்று அடுத்த அறைக்கு அழைத்து சென்றார்.

"உனக்கு கிருஷ்ணா நல்ல பழக்கமா?" என்று கேட்க, எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் "நல்ல பழக்கம்" என்றாள் .



"அவன் வீட்டுக்கு சரியாவே வருவதில்லை. இந்த விஷயம் உனக்கு தெரியுமா?"
தலை குனிந்து கொண்டே, "அங்கிள் அந்த விஷயம் எல்லாத்தையும் என் கிட்ட நேத்துதான் ட்ரெயின்ல சொன்னாரு"

"ஓ. இந்த விஷயத்தை சொல்ற அளவுக்கு உங்க ரெண்டு பேர் கிட்டயும் நல்ல பழக்கம் இருக்கு. சரி. உன் கிட்ட ஒரு உதவி கேட்டால் செய்வியா?"

ஸ்வேதா மனமோ தடக் தடக் என்று அடித்து கொண்டது. 
"சொல்லுங்க அங்கிள்"

"நான் அன்னைக்கு செஞ்ச தவற உணர்ந்துட்டேன். ஆனா கிருஷ்ணாதான் என்கிட்ட பேச மாட்டேங்கிறான். நீ தான்மா அவன் கிட்ட நான் பேச உதவி செய்யணும். செய்வியா?" என்று கேட்டு கண்கலங்க, 

"கவலைபடாதிங்க அங்கிள், என்னால முடிஞ்ச உதவி நான் செய்றேன்" என்று உறுதி அளித்தாள்.

'இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த KK-க்கு என் மேல கோபம். எனக்கு மட்டும் தன்மானம் கிடையாதா. நான் ஒண்ணும் யாருக்கும் அலைய மாட்டேன்' என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு கை கட்டி கண்களை மூடி கொஞ்சம் நேரம் உறங்க ஆரம்பித்தாள்.

பஸ் இரவு ஒன்பது மணிக்கு திருநெல்வேலி பஸ்ஸ்டாண்ட் அருகில் இருந்த, ஜானகிராம் ஹோட்டல் முன்னால் நின்றது. ஏற்கனவே சொல்லியபடி இருபது டபுள் ரூம்கள் புக் ஆகி இருக்க, 'காலை ஒன்பது மணி அளவில் கிளம்பி எல்லோரும் பாளையம்கோட்டை மெடிக்கல் காலேஜ் கிரௌண்ட் செல்ல வேண்டும் என்றும், எட்டரை மணிக்கு காலை உணவு முடித்து ரிசப்சன் வந்து அனைவரும் காத்திருக்க வேண்டும்' என்றும் ஹரி உத்தரவு கொடுக்க, அனைவரும் தலை ஆட்டி விட்டு கீழே ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டு விட்டு ரூம் சென்ற போது மணி பத்து. 

ஸ்வேதா தன் ரூமுக்கு செல்லும் முன் கிருஷ்ணாவை ஒரு கணம் பார்க்க அவளை திரும்பி கூட பார்க்காமல் அதே தளத்தில் அமைந்து இருந்த தன் அறைக்கு ஹரியுடன் சென்று விட்டான். ஹரி படுத்த உடன் உறங்கி விட, புரண்டு படுத்த கிருஷ்ணாவுக்கு தூக்கம் வரவில்லை. தனது black berry -யில் SMS வர யார் என்று பார்த்தான். ஸ்வேதா " கே கே தூங்கியாச்சா? என் மேல இன்னும் கோபம் போகலையா? Sweet Dreams. Good night" என்று இருக்க, பதில் அளிக்காமல் போனை வைத்தான். 

அவனுக்கு தூக்கம் வரவில்லை. சரி கொஞ்ச நேரம் வெளியில நடக்கலாம் என்று நினைத்து சிகரட்டை எடுத்து பத்த வைத்து கொண்டு வராண்டா வந்து கண்ணாடி வழியாக வெளியே பார்த்து கொண்டு இருந்தான். ஒரு இழுப்பு இழுத்து விட்டு ஒத்து கொள்ளாமல் இருமி விட்டு சிகரட்டை கீழே போட்டு அணைக்க
"எதுக்கு பழக்கம் இல்லாத வேலைய பண்ணனும்." குரலை கேட்ட KK திடுக்கென்று நிமிர்ந்து பார்க்க, கொஞ்ச தூரத்தில் ஸ்வேதா புன்சிரிப்புடன் அவன் அருகில் நெருங்கி வந்தாள்.

"என்ன KK தூக்கம் வரலையா? என்ன திடீர்னு இந்த சிகரட் பழக்கம்."

"பழக்கம்லாம் இல்லை. தூக்கம் வரலை. சிகரட் அடிச்சு ரொம்ப நாள் ஆய்டுச்சு. அதுதான்."

"ஓகே அப்படியா? அப்புறம் எதுக்கு கீழ போட்டிங்க. "

"ஒத்துக்கலை"

சிரித்து கொண்டே"ஒத்துக்குற வேலை மட்டும் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு, அவன் அருகில் வந்து நிற்க இதற்கு மேல் இருந்தால் தன் ஆண்மைக்கு ஆபத்து என்று உணர்ந்த KK"சாரி ஸ்வேதா எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. நான் கிளம்புறேன்"என்று சொல்லி விட்டு அவளை பார்க்காமல் தலையை தாழ்த்தி கொண்டே தனது ரூம் திரும்பி விட்டான்.

ஸ்வேதா முகத்தில் ஏமாற்றம். தன்னை வேண்டும் என்றே தவிர்ப்பதாக தோன்றியது. சரி நாமும் சென்று படுக்கலாம் என்று அவள் ரூமுக்கு திரும்பினாள்.

அவரவர் ரூமுக்கு திரும்பிய இரண்டு பேருக்கும் தூக்கம் வரவில்லை. நெடுநேரம் தூங்காமல் புரண்டு படுத்த இருவரும், தூங்கிய போது நடு இரவை தாண்டி விட்டது. 

காலையில் ஹரி எழுப்ப எழுந்த KK ரெடி ஆக, வேறு அறையில் இருந்த காவிரியும், ஸ்வேதாவும் ரெடி ஆகி கீழே வந்தனர்.அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி தயாராக இருந்த Volvo பஸ்ஸில்ஏறி ஒன்பது மணிக்கு மெடிக்கல் காலேஜ் கிரௌண்ட் வந்து,ஏற்கனவே ஏற்பாடு செய்த பந்தலில் அனைவரும் ஸ்டால் ready செய்ய மணி பத்து ஆனது. 

மதுரை மற்றும் திருச்சி தின தந்தி, தின மலர் பதிப்புகளில் ஏற்கனவே Sun Solar Systems பற்றி கவர் செய்யப்பட்டதால், நிறைய பேருக்கு கண்காட்சி தெரிந்து இருந்தது.
மாலை நான்கு மணிக்கு கலை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற, ஆறு மணிக்கு முடிந்தது.

எல்லோரும் திருச்செந்தூர் போகலாம் என்று ஹரி ஏற்கனவே செய்த முடிவின்படி, கிளம்ப ஏழரை மணி அளவில் கடற்கரை ஓரத்தில் நடந்து திருச்செந்தூர் முருகன் சன்னதி அடைந்தனர்.

அங்கே இருந்த வாசலில் குருக்களிடம் பேசி, அவர்களின் உதவியுடன்அனைவரும் உள்ளே சென்று முருகனை தரிசனம் செய்து திரும்பி வந்தனர்.

இரவு எட்டு மணி அளவில் கடற்கரையில் எல்லோரும் கடல் அலையுடன்விளையாடி வந்தனர். அமாவாசை நாள் ஆதலால் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தபடி ஹரி வலம் வந்தான். 

கடல் அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனைவரும் ஓரத்தில் எச்சரிக்கையோடு விளையாடி மகிழ, ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். ஸ்வேதா காவேரி இருவருக்கும் கடற்கரையை விட்டு வர மனமில்லை. 

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் என்று சொல்லி நேரத்தை கடத்தஹரி, கிருஷ் இருவரும்அவர்களை வேகமாக கிளம்ப சொன்னார்கள். 

கண்ணிமைக்கும் நேரத்தில் பெரிய அலை ஒன்று வந்து கால்களை இழுக்க ஸ்வேதா, காவேரி இருவரும் தடுமாறி கீழேவிழுந்தனர்.சுதாரித்து எழுவதற்குள் தொடர்ந்து வந்த மற்றும் ஒரு பெரிய அலை இருவரையும் கடலுக்குள்ளே இழுத்தது.

"காப்பாத்துங்க, காப்பாத்துங்க" என்று இருவரும் போட்ட கூச்சல்கள் கடல் அலைகளின் சத்தத்தில் கரைந்து போயின.தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ஹரிக்கு மட்டும் இவர்கள் இருவரும் கை அசைப்பதை பார்த்து ஏதோ ஒரு ஆபத்து என்று புரிந்தது. KKவை உடனேஅழைத்து கொண்டு கடலை நோக்கி ஓட,அதற்குள் ஸ்வேதா காவேரி இருவரும் கடலுக்குள் இழுக்கபட்டனர். தாமதிக்காமல் கிருஷ், ஹரி இருவரும் கடலுக்குள் குதித்து நீந்தினர்.

நல்லவேளையாக காவேரியின் தலை முடி முதலில் அகப்பட ஹரி அவளை இழுத்து கரையை நோக்கி செல்ல, அவனை தொடர்ந்து கிருஷ் கடல் நீரில் ஸ்வேதாவை தேட கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவளை காணவில்லை.

"கிருஷ் நீ ரொம்ப ஆழத்துக்கு போயிடாதே. அலைகள் அதிகமா இருக்கு" என்று ஹரி கத்த, அவனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கடலுக்குள் முன்னேறினான்.

எங்கு தேடியும் ஸ்வேதா கிடைக்கவில்லை. கிருஷ் மனது ஓலம் இட்டது, மனம் கலங்கி போனது. "முருகா உன்னை பார்க்க வந்த எங்களை இப்படி சோதனை செய்யலாமா?" என்று மனதுக்குள் கதறினான். நீச்சல் அடித்து கொண்டே கைக்கு எட்டும் தூரத்தில் மீண்டும் துழாவ, ஏதோ தலைமுடி போல் கிடைக்க, அவன் மனம் அது ஸ்வேதாவாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லியது.மூச்சை நன்றாக உள்ளுக்குள் இழுத்து தன் முழு பலத்தை பிரயோகித்து அந்த முடியை வலது கையால் கொத்தாக இழுத்தான்.இடது கையை உபயோகித்து நீந்தி கொண்டே கரைக்கு வர அதற்குள் தகவல் தெரிந்து கூட வந்த அனைவரும் திரும்பி வந்தனர். 

ஸ்வேதாவை இழுத்து வந்து கரைக்கு தள்ள, பெண்கள் கூட்டம் ஸ்வேதாவை சூழ்ந்து கொண்டது. 

அடுத்த இரு நிமிடங்கள் கிருஷ்ணாவுக்கு மணி நேரங்களாகஉருண்டன. அங்கே இருந்த பெண்கள் துரிதகதியில் செயல்பட்டு ஸ்வேதாவின் வயிற்றை அமுக்கி முதல் உதவி செய்ய மெல்ல மெல்ல சுயஉணர்வு பெற்றாள் ஸ்வேதா. அதற்குள் காவேரி முழுநினைவு பெற்று எழுந்து நிற்க, பெண்கள் கூட்டம் ஆனந்தத்துடன் 'ஸ்வேதாவுக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை, காவேரியும் எழுந்துட்டா' என்று பேசி கொண்டது. 

இந்த செய்தி காதில் விழுந்தவுடன் கிருஷ்ணா கண்களில் இருந்து அடக்க முடியாமல் கண்ணீர். விறு விறு என்று அவன் கோவிலை நோக்கி நடந்தான். அவனை இரு கண்கள் மட்டும் கவனித்தன.

இரவு ஒன்பது மணியை நெருங்கி கொண்டு இருந்த நேரம், கோவிலில் கூட்டம் குறைவாக இருக்க சுலபமாக உள்ளே நுழைந்து,சுப்ரமணிய சுவாமி சன்னதி முன்பு அமர்ந்தான். அவன் கண்களில் இருந்து அவனை அறியாமல் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து ஓடியது.

கடற்கரையில் கண் விழித்த ஸ்வேதா "என்ன ஆச்சு" என்று விழிக்க, அருகில் இருந்த காவேரி "ஒண்ணும் இல்லை. நம்ம ரெண்டு பேரையும் கடல் அலைகளில் இருந்து ஹரி, கிருஷ் காப்பாத்திட்டாங்க"

அருகில் வந்த ஹரியிடம், "தேங்க்ஸ் ஹரி" என்றாள் ஸ்வேதா. "இல்லை ஸ்வேதா. உன்னை காப்பாத்தினது நான் இல்லை.கிருஷ்ணாதான்"

"KK வா." என்று ஸ்வேதா ஆச்சர்யத்துடன் கேட்க

"ஆமா நான் 'அவனை வேணாம், கடலுக்குள்ள போகாதே. ரொம்ப ஆழமா இருக்கு. அலையும் அதிகமா இருக்கு'ன்னு சொன்னேன்.அவன்தான் கேக்கலை. உன்னை காப்பாத்தி தீரனும்கிற வெறியோட தன் உயிர் பத்தி கவலை படாமல் கடலுக்குள் உன்னை தேடி பிடிச்சு இழுத்து வந்தான்."

கண்கள் பனிக்க, "இப்போ KK எங்க" என்று கேட்க ஹரி "இங்கதான இருந்தான்" என்று தேட ஆரம்பித்தான்.அருகில் இருந்த காவேரி"சார், அவர் கோவிலுக்கு உள்ளே போறத பார்த்தேன்."

"சரி நீங்க எல்லாம் பஸ்ஸுக்கு போங்க. நான் போய் கிருஷ்ணாவைகூப்பிட்டு வரேன்"என்று சொல்லி விட்டு அனைவரையும் விட்டு தனியாக கிளம்பினான் ஹரி.

கோவிலுக்குள் கூட்டம் இல்லாததால் சீக்கிரமே உள்ளே நுழைந்த ஹரியின் கண்கள் கிருஷ்ணாவை தேடின.ஒரு வழியாக சுவாமி சன்னதியில் அவனை கண்ட ஹரி பெருமூச்சு விட்டபடி நெருங்கி அவன் தோளில் கை வைத்து "கிருஷ் நீ இங்க என்ன பண்ணுற?" என்று கேட்க, மெல்ல திரும்பிய தன் உயிர் நண்பன் முகம் பார்த்து மனம்பதைத்தான் ஹரி. கண்கள் சிவந்து இருக்க, கன்னங்கள் வீங்கி இருக்க, "என்னடா ஆச்சு" என்று கேட்டான்.

"டேய் ஹரி, என்னோட ஸ்வேதாவுக்கு ஒண்ணும் ஆகலைடா. அதுக்கு நன்றி சொல்லதாண்டா வந்தேன். கடல்லஒரு நிமிஷம் அவளை காணாம திகைத்து போயிட்டேன். ஆண்டவன்தான் அவளை எனக்கு காண்பித்தான். அவளுக்கு ஏதாவது ஆய்டுந்தா என்னால தாங்க முடியாதுடா" என்று சொல்லி விட்டு கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டான். 

"அதுதான் ஒண்ணும் ஆகலையே. கவலைபடாதே" என்று ஹரி ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருவரும் பிரகாரத்தை சுற்றி பஸ் நிற்கும் இடத்துக்கு வந்தனர். ஏற்கனவே ஜானகிராம் ஹோட்டலில இருந்து கொண்டு வந்த உணவு பொட்டலங்கள் எல்லோருடைய பசியை தணித்து கொண்டுருந்தது.கடல் நீரில் நனைந்த தனது மாற்றி மாற்றுடைகளை அணிந்து கொண்டு ஸ்வேதா சாப்பிட்டு கொண்டு இருக்க,ஹரியை தொடர்ந்து வந்த கிருஷ்ணாவை கண்ட அவள் முகம் மலர்ந்தது.

ஓடி வந்து "KK எங்க போயிட்டிங்க. உங்களைத்தான் ரொம்ப நேரமா நான் தேடிகிட்டு இருந்தேன். என்னை காப்பாத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் எங்களோட சாப்பிடுரிங்களா என்று கேட்டாள். அவள் முகத்தை சிறிது நேரம் உற்று பார்த்து விட்டு பதில் சொல்லாமல்பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான். ஸ்வேதா முகம் வாடி போனது. அவளுக்கு மேலும் சாப்பிட பிடிக்கவில்லை. கையில் இருந்த சாப்பாடை கீழேவைத்து விட்டு கை கழுவினாள். 

கிருஷ்ணாவை தொடர்ந்து பஸ்ஸில் ஏறிய ஹரி அவனுக்கு இரண்டு இட்லி பொட்டலங்கள் கொடுக்க, "இல்லை மாம்ஸ் எனக்கு பசி இல்லை. கொஞ்சம் தலைவலியா இருக்கு" என்று சொல்லி விட்டு "கொஞ்சம் saridon இருந்தா கொடு" என்று கேட்க, "என் கிட்ட இல்லையேடா. நான் செக் பண்ணி சொல்றேன்" என்று சொல்லி விட்டு கீழே இறங்கி அங்கே இருந்தவர்களிடம் கேட்க, ஸ்வேதா முன்னுக்கு வந்து அவள் பாக்-கில் இருந்து ஒரு சாரிடான் எடுத்து கொடுத்தாள். 

"என்ன ஹரி உங்களுக்கு தலைவலியா?" என்று கேட்க, "எனக்கு இல்லை. கிருஷ்ணாவுக்கு" என்று சொல்லி, பஸ்ஸுக்குல் திரும்பஏறினான். கொஞ்ச நேரத்தில்எல்லோரும் பஸ்ஸில் ஏற, பஸ் கிளம்பியது.கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அனைவரும் உறங்கி விட,கிருஷ்ணாவுக்கு தூக்கம் வரவில்லை.

கடலில் குதித்து ஸ்வேதாவை காப்பாற்றிய பிறகு உடை மாற்றததால் இன்னும் காயாத அவன் உடைகள்,Volvo பஸ் AC குளிரை அதிகப்படுத்த, உடல் நடுங்க உட்கார்ந்திருந்தான் கிருஷ்.




இரவு பதினோரு மணிக்கு Volvo பஸ்ஜானகிராம் ஹோட்டல் அடைய, எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றனர். ஹரி, கிருஷ்ணா இருவரும் உடை மாற்றி படுத்து கொள்ள, கதவு தட்டப்பட்டது. 

எழ முயன்ற கிருஷ்ணாவை உட்கார சொல்லி விட்டு, ஹரி கதவை திறந்தான். வெளியே வெள்ளை நிற சுடிதாரில் ஸ்வேதா.

"அவருக்கு தலைவலி எப்படி இருக்கு. நான் கொஞ்சம் அவரை பார்க்கலாமா?" என்று கேட்க, "ஸ்வேதா என் கிட்ட எதுக்கு permissionகேக்குற. உனக்கு கிருஷ்ணா கிட்ட இல்லாத உரிமையா? நீ கொஞ்சம் அவன் கிட்ட பேசிகிட்டு இரு. நான் ஒரு பத்து நிமிஷத்தில வந்துடுறேன்" என்று நாசுக்காக சொல்லி விட்டு வெளியேறினான்.

உள்ளே நுழைந்த ஸ்வேதா, கிருஷ்ணா அருகில் செல்ல, கிருஷ் தீவிர யோசனையில்கண்களை மூடி கொண்டு இருந்தான்.

"KK" என்று மெல்லிய குரலில் ஸ்வேதாஅழைக்க, திடும் என்று கண்களை திறந்தான். முதலில் மலர்ந்த அவன் முகம், தொடர்ந்து வாடியது.

அவளைஅருகில் இருந்த சோபாவில் அமர சொல்ல, ஸ்வேதா அமர்ந்து "இப்போ தலைவலிஎப்படி இருக்கு KK" என்று கேட்க "இப்போ கொஞ்சம் பரவாயில்லைஸ்வேதா. saridon கொடுத்ததுக்கு தேங்க்ஸ்" என்று சொல்ல, "என்னால தானே உங்களுக்கு உடம்பு சரி இல்லாம போச்சு. I am sorry" என்று நெகிழ, ஒண்ணும் பதில் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தான். 

"KK ஒரு விஷயம் கேட்கணும். ஒரு வேளை நீங்க தேடியும் நான் கிடைக்காம போயிருந்தா?"


"ஏன் இந்த மாதிரி பேசுற ஸ்வேதா. நான் என்ன பாவம் பண்ணினேன். என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்ணுற " உதடுகளை கடித்து ஓட வந்த கண்ணீரை அடக்கி கொண்டான் 


"இல்லை KK ஒரு வேளை நான் கடல் அலைல சிக்கி செத்து போயிருந்தா?"

மூக்கு சிவக்க, உதடுகள் துடிக்க "போடி போ, நானும் உன் பின்னாலேயே கடல்ல விழுந்து செத்து போயிருப்பேன்" என்று கதறி அழ ஆரம்பித்தான்.

ஸ்வேதா பதறி போனாள். "Cool down KK" சொல்லி விட்டு அவன் கையை தொட, கை அனலாய் கொதித்தது. 

"என்ன KK. உங்க உடம்பு இப்படி கொதிக்குது. டாக்டர் கிட்ட போகலாம் வாங்க" என்று சொல்ல, "நான் க்ரோசின் வாங்கி போட்டுக்கிறேன்.கவலைபடாம தூங்க போ. காலைல எனக்கு சரி ஆய்டும்"

என்று சொல்ல, அவனை விட்டு போக மனம் இல்லாமல், திரும்பி திரும்பி பார்த்தபடி கதவை திறந்து வெளியே வந்தாள்.

வாசலில் இருந்த ஹரியை பார்த்து "அவருக்கு இப்படி கொதிக்குதே" என்று கேட்க "க்ரோசின் வாங்கி வந்துருக்கேன். இப்போ அவன் போட்டுக்கட்டும். சரி ஆகலைனா நாளைக்கு காலைல டாக்டரை பார்க்கலாம்" என்று சொல்ல, மன நிம்மதியோடு படுக்க சென்றாள்.காலை வழக்கம் போல் எல்லோரும் எழுந்து ரெடி ஆக, எட்டு மணி அளவில் ஸ்வேதாகிருஷ்ணா தங்கி இருந்த அறைக்கதவை தட்டினாள். 


கதவை திறந்த ஹரியை பார்த்து "இப்போ KK க்குஎப்படி இருக்கு" என்று கேட்க, 

"இன்னும் Fever குறையலை. பக்கத்தில இருக்கிற Super Speciality ஹாஸ்பிடல்லடாக்டர் ஒன்பது மணிக்கு appointment கொடுத்து இருக்கார்.மெடிக்கல் காலேஜ் கிரௌண்டுக்கு வேற போகணும். இவன் வேற தனியா இருப்பான்.யார் கிட்ட இவனை பாத்துக்க சொல்றதுன்னு புரியலை" என்று தயங்க, 

"என்ன ஹரி நான் இல்லையா? நான் இவரை பாத்துக்கிறேன்.அதை தவிர எனக்கு வேற என்ன வேலை.நீங்க எதுக்கும் கவலைபடாமகிளம்புங்க. ஏதாவது உதவி வேணும்னா நான் உங்களைகூப்பிடுறேன்" என்று சொல்ல, ஹரிக்கு முகத்தில் நிம்மதி பரவியது. 

"அப்போ ஒண்ணு பண்ணு. அவன் இப்போ தூங்கிகிட்டு இருக்கான். ஹாஸ்பிடல் பக்கத்தில தான். பத்து நிமிஷத்துக்கு முன்னால போனா போதும். நீ ஒரு எட்டரை மணிக்கு கிருஷ்ணாவைஎழுப்பி பல் விளக்க சொல்லி, ரெண்டு இட்லி மட்டும் சாப்பிட வச்சு பிறகு, கிளம்பி டாக்டரை பார்த்துட்டு வரலாம்" என்று சொல்ல, சரி என்று தலை அசைத்தாள். 

ஹரி கிளம்ப, கிருஷ் அருகில் உட்கார்ந்து அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.


'முன்பு தன்னை சினிமா தியேட்டரில் மானத்தை காப்பாற்றினார். இன்று திருசெந்தூரில் என் உயிரை காப்பாற்றினார். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்' என்று கலங்கினாள்.

எட்டரை மணிக்கு எழுப்பலாம் என்று நினைத்தபோது கிருஷ்ணாவே கண் திறந்து பார்த்தான். தன் அருகில் சேரில் உட்கார்ந்து இருந்த ஸ்வேதாவை கண்டு அவனுக்கு ஆச்சர்யம். 

"ஸ்வேதா நீ எப்படி இங்கே". சுற்று முற்றும் பார்த்து விட்டு 

"ஹரி எங்கே?. என்னை டாக்டர் கிட்டே கூட்டி போறேன்னு சொன்னான்" என்று கேட்க

"Stop, stop, நீங்க பாட்டுக்கு இப்படி மூச்சு முட்டாம கேள்வி கேட்டா, நான் எப்படி பதில் சொல்றது.

"உங்களுக்கு இன்னும் உடல் நிலை முழுக்க சரி ஆகாததால என்னை உங்களை நல்லா பார்த்துக்க சொல்லிட்டு போய்ட்டார்". 

"ஏன் கிட்ட ஏன் சொல்லாம போனான்."

"இங்க பாருங்க KK நீங்க அப்போ தூங்கிகிட்டு இருந்திங்க.அது மட்டுமில்லஅவர் முதல்ல இந்த டூர் வேலைகளை முடிக்கணும்.உங்களை எப்படி விட்டு போறதுன்னு தயங்கினப்போ, நாந்தான் உங்களை பார்துக்கிறேன்னு சொன்னேன். அவர் சாயங்காலம் வந்துடுவார். கவலைபடாதிங்க. ஆமா எப்போ பார்த்தாலும் பிரெண்ட் அப்படின்னு சொல்லிட்டு அவரையே தொல்லை பண்ணிட்டு இருந்தா அவர் வேலைய யார் பார்ப்பாங்க. உங்களுக்கு என்னன்னாலும் இனிமேஎன்னைய கூப்பிடுங்க". 

"என்னஉங்க அம்மா அளவுக்கு பாத்துக்கலைனாலும் அட்லீஸ்ட் என்னால முடிஞ்சா அளவுக்கு பார்த்துக்குவேன்.இப்போ நீங்க பல் விளக்க போறிங்களா, இல்லை நான் தேச்சு விடட்டுமா" என்று மிரட்டலுடன் கேட்க, 

"அம்மா தாயே ஆளை விடு, விட்டா முதுகு கூடதேச்சு விடுவேன்னு சொல்லுவா போலிருக்கு" என்று கிண்டலுடன் கேட்க, 

"நான் ரெடி நீங்க ரெடியா?" என்று திருப்பி கேட்டாள் ஸ்வேதா.

அவளின் குறும்புகளை ரசித்தபடி பாத்ரூம் சென்று KK தயாராகி வர, அதற்குள் ஸ்வேதா ரூம் சர்வீஸ் மூலம் ஆர்டர் செய்து வரவழைத்த இட்லியை சாப்பிட்டான்.

சிறிது நேரத்தில் ரெடி ஆகி இருவரும் செல்ல, டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, "பயப்பட தேவை இல்லை. வெறும் viral fever தான்,3 நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்" என்று சொல்லி மருந்து எழுதி கொடுக்க, அருகே இருந்த பார்மசியில் வாங்கி கொண்டு இருவரும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். 

அவனை படுக்க வைத்து போர்த்தி விட்டு அருகில் உட்கார்ந்து கொண்டு,அவன் முகம் பார்த்து கொண்டு இருந்தாள்.

உடல் அயர்ச்சியில் கிருஷ் கண்களை மூடி ரெஸ்ட் எடுக்க, போனை எடுத்து ஹரியிடம் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டாள் ஸ்வேதா. 

மாலை திரும்பி வந்த ஹரி'டாக்டர் சொன்னபடி அவன் ரெஸ்ட் எடுத்தால் அவன் அருகில் யார் இருப்பது' என்று யோசித்து,ஸ்வேதாவிடம் 'கிருஷ்ணா வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டா அவன் அப்பா அம்மா பாத்துக்குவாங்க. நாம tour continueபண்ணலாம்' என்று சொல்ல, ஸ்வேதா உடனடியாக மறுத்தாள். 

"ஹரி உங்களுக்கு தெரியாதா, அவர் தான் வீட்ல யார் கூடயும் சரியா பேசுறது இல்லை.அதோட கே கே க்கு அது பிடிக்குமானு தெரியலை. ஒண்ணு பண்ணலாம். இவர் உடல் நலம் ஓரளவு தேறிய பிறகு இங்கே இருந்து நேரடியாக நாலாம் நாள், நாலாவது நாள் பெங்களூர் வந்துடுறோம். நீங்க கோவை, சேலம் ப்ரோக்ராம் முடிச்சுட்டு பெங்களூர் வந்துடுங்க" என்று சொல்ல, ஹரி தயங்கினான். 

"நீ எப்படி ஸ்வேதா இவன் கூட ஒரே ரூம்ல" என்று தயங்கியபடி கேட்க, "சரி எனக்கு ஒரு ரூம் விட்டுட்டு போங்க. அவர் தூங்கினதுக்கு அப்புறம் நான் போகிறேன்" என்று சொல்ல, சரி என்று அரை மனசாக தலை அசைத்து, மாலை ட்ரெயினில் கோவைக்கு அனைவரும் கிளம்ப ஜானகிராம் ஹோட்டலில் கிருஷ்ணாவின் அறையில் ஸ்வேதா.

அடுத்த நாள்பகல் முழுக்க கட்டுபாட்டில் இருந்த viral fever இரவு தனது முழு வீச்சை காண்பித்தது. அதிகமான காய்ச்சலில் கிருஷ்ணாவுக்கு உடல் அனலாக கொதித்தது. 

ஸ்வேதா கர்சீப் எடுத்து ஈர துணியில் நனைத்து இரவு முழுக்க அவன் நெற்றியில், மார்பில், முதுகில், காலில் வைத்து எடுக்க, அவன் உடல் சூட்டில் கர்சீப் உடனடியாக காய்ந்து போனது. இரவு 2 மணிக்கு மேல் கொஞ்சம் காய்ச்சல் குறைய, கிருஷ்ணா நிம்மதியாக உறங்க ஆரம்பிக்க, நாள் முழுக்க வேலை பார்த்த களைப்பில் இருந்த ஸ்வேதா சேரில் இருந்து சரிந்தவாறுஅவன் படுக்கையில் தலை வைத்தபடி தூங்கி விட்டாள்.

காலை ஆறு மணி அளவில் பாத்ரூம் போக எழுந்த கிருஷ், ஹரியை தேடி பார்க்க காணவில்லை, "ஹரி ஹரி" என்று அவன் அழைதத குரல் கேட்டு விழித்த ஸ்வேதா "KK ஹரி கோவை கிளம்பி போய்ட்டார். நான்தான் உங்களோட இருக்கேன். என்ன வேணும். பாத்ரூம் போகணுமா? சரி வாங்க நான் கூட்டி போறேன்" என்று சொல்ல ஒன்றும் பதில் சொல்லாமல் தடுமாறி எழுந்தவனால் நடக்க முடியவில்லை. அவன் கைகளை எடுத்து தன் தோளில் போட்டு மெதுவாக அணைத்தவாறே பாத்ரூம் அழைத்து சென்றாள். வாசலில் அவள் நின்று கொள்ள, சில நிமிடங்களில் வெளியே வந்து அவனை திரும்ப அழைத்து கொண்டு வந்து படுக்கையில் அமர வைத்தாள்.

"ஸ்வேதா நீ எப்போ இந்த ரூம் வந்த"

"நேத்து ராத்திரி."

"நீ இன்னும் உன் ரூமுக்கு திரும்பி போகலை"

"ஆமாம்"

தீவிரமாக யோசித்த கிருஷ்ணா "ஸ்வேதா நீ முதல்ல கிளம்பு"

"எதுக்கு நான் இப்போ கிளம்பனும்"

"புரியாம பேசாதே. நீ கன்னி பொண்ணு . என் கூட இப்படி ராத்திரி முழுக்க இருந்தேன்னு தெரிஞ்சா நிறைய பிரச்சனை வரும்.உன்னோட கல்யாணம் பாதிக்கப்படும்.."

"உங்ககிட்ட நான் என்னோட கல்யாணத்தை பத்தி பேசினேனா. ஒரு வேளை அப்படி கல்யாணம் நடக்கும் போது இதை பத்தி பேசலாம்".

"புரியாம பேசாத.முதல்ல இந்த ஹரி பயலை ஒதைக்கணும்"போனை எடுத்து ஹரி நம்பரை அடிக்க முயற்சி செய்ய அவனிடம் இருந்து போனை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்தாள்.

"ஸ்வேதா நீ பண்றது தப்பு. சொன்னா கேளு. அந்த போனை கொடு.என் கோபத்தை கிளராதே."

"முடியாது கேட்க மாட்டேன்" என்று சொல்ல, அவள் கன்னத்தில் அறைந்தான்.

அவள் கண்கள் கலங்க அவனை பார்த்து விட்டு மெதுவாக திரும்பி சேரில் அமர்ந்தாள்.




No comments:

Post a Comment