Thursday, August 13, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 2

சத்யனின் அறையிலிருந்து அனிதா வெளியேறியதும் சட்டென்று திரும்பிய சத்யன் மூடியிருந்த கதவையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தான்,, இன்னும் கொஞ்சம் பொருமையாக பேசியிருக்கலாமோ என்று நினைத்தான்,, அடுத்த நிமிடமே அதை மறந்துவிட்டு கேன்வாஸ்ல டிசைனை வரைய ஆரம்பித்தான்

அன்று மதிய உணவு இடைவெளியின் போது சத்யன் அறைக்கு கார்த்திக் வந்தான்,, “ பாஸ் சாப்பிட போகலையா டைம் ஆச்சு” என்று கார்த்திக் கேட்க

" இனிமேல்தான் போகனும் கார்த்திக்,, இன்னிக்கு வீட்டுலேர்ந்து சாப்பாடு வராது,, பாட்டி ஊருக்கு போய்ட்டாங்க,, துணைக்கு சமையல்காரம்மாவும் போயிருக்காங்க,, நாலு நாளைக்கு நானும் கேன்டீன்ல தான் சாப்பிடனும்,” என்ற சத்யன் தனது சேரில் இருந்து எழுந்து மேசையை சுற்றி கார்த்திக் அருகில் வந்து தோளில் கைபோட்டு “ வா போகலாம்” என்று கதவை திறந்து கொண்டு வெளியேறி கேன்டீனுக்கு போகும் வராண்டாவில் நடந்தான்



சத்யனும் கார்த்திக்கும் கல்லூரி தோழர்கள்,, இந்த மில்லின் பொருப்பை சத்யன் ஏற்றதுமே,, வேலை தேடிக்கொண்டிருந்த கார்த்திக்கை தன்னுடைய மேனேஜராக்கிக் கொண்டான்,, சத்யன் கார்த்திக்கை எப்போதுமே தோழனாக நினைத்தாலும்,, கார்த்திக் அலுவல் அல்லாது மற்ற நேரங்களில் கூட சத்யனை ஒரு முதலாளியாகத்தான் நினைப்பான்,, எப்போதாவது மாலை வேலைகளில் இருவரும் அரட்டையடித்து பேசிக்கொள்வதோடு சரி,, மத்தபடி இருவரும் தங்கள் நட்பை நாகரீகமாக மெயின்டெய்ன் செய்தார்கள்

கேன்டீன் செல்லும் பாதையில் திரும்பிய சத்யன் “ என்ன கார்த்திக் காலையில அனிதா என் ரூமிலிருந்து அழுதுகிட்டே நேரா உன் கேபினுக்கு தான் வந்தா போலருக்கு” என்று சத்யன் கேட்க

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தடுமாறிய கார்த்திக் “ அதெல்லாம் ஒன்னுமில்ல பாஸ் புதுசா வேலையில் ஜாயின் பண்ண மான்சியை கவனமா பார்த்துக்க சொல்றதுக்காக வந்தாங்க, அவ்வளவுதான்” என்று கார்த்திக் தடுமாறியபடி சொன்னான்

“ ஏன்டா மறைக்கிற, அதான் உன் சட்டையில் இருக்கிற கண்ணீர் கரையே சொல்லுதே,, என்ன நடந்துச்சுன்னு,, கார்த்திக் நான் எதுவுமே அவளை திட்டலை,, அவ வீட்டை பத்தி பேசினா அது எனக்கு பிடிக்கலை,, அதனால நீ கிளம்பலையான்னு கேட்டேன் அதுக்கு அப்படி அழுவுறா” என்று சத்யன் தன் மீது தப்பில்லை என்பது போல விளக்கம் சொன்னான்

தன் சட்டையில் இருந்த அனிதாவின் கண்ணீர் கரையை குனிந்து பார்த்த கார்த்திக் ,, ச்சே இதை கவனிக்காம விட்டுட்டமே,, என்று மனதுக்குள் தன்னை கடிந்துகொண்டு “ புரியுது பாஸ்,, விடுங்க எல்லாம் சரியாயிடும்” என்று கார்த்திக் சொல்ல,, இருவரும் கேன்டீனுக்குள் நுழைந்தார்கள்

முதலாளியை பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரும் வணக்கம் சொல்ல,, எல்லாரையும் கையசைத்து சாப்பிட சொல்லிவிட்டு காலியாக இருந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தனர் ,,

சர்வர் தண்ணீர் டம்ளரை எடுத்துவந்து வைக்க,, சத்யன் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு “ என்ன கார்த்திக் அனிதாவோட படிப்புதான் முடிஞ்சு போச்சே,, வீட்டுல சொல்லி சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணவேண்டியது தானே” என்று மூன்றாவது மனிதனைப் போல தங்கையின் திருமணத்தை பற்றி சத்யன் பேசினான்

ஆனால் கார்த்திக் அதைப்பற்றி வருந்தியதாக தெரியவில்லை,, அவனுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக சத்யனின் குணம் தெரியும் “ எங்கவீட்டுல எல்லாருக்கும் ஓகே பாஸ்,, ஆனா அனிதா தான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருக்கா” என்றான்

டேபிளில் விழுந்த நீர்த்துளியை விரலால் இழுத்து பெருக்கல் குறியாக போட்டபடி “ ஏனாம்” என்றான் சத்யன்

“ ம் அவளைவிட நீங்க ஓன்பது வயசு பெரியவனாம்,, உங்களுக்கு கல்யாணம் ஆனப்புறம் தான் எங்களுக்கு கல்யாணம்னு அனிதா தீர்த்து சொல்லிட்டா” என்று கார்த்திக்கும் தீர்மானமான குரலில் சொன்னான்

அதை கேட்டதும் கோபமான சத்யன் முஷ்டியை மடக்கி சத்தம் வராமல் மேசையில் குத்திவிட்டு “ ஏன்டா உங்க ரெண்டு பேருக்கும் என்ன லூசா புடிச்சிருக்கு,, நான்தான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லைன்னு பல தடவை சொல்லிட்டேன்,, அப்புறம் ஏன்டா என்னை காரணம் காட்டி உங்க கல்யாணத்தை தள்ளிப்போடுறீங்க,, முட்டாள்த்தனமாக எதுவும் செய்யாமல் சீக்கிரமா கல்யாண தேதியை பிக்ஸ் பண்ணுங்க” என்று கோபம் உச்சத்தில் இருந்தாலும் குரலை அடக்கிக்கொண்டு பேசினான் சத்யன்

அவனது கோபம் கார்த்திக்குக்கு பழகி விட்டபடியால் “ சரிங்க பாஸ்,, அனிதாகிட்ட இதைப்பற்றி பேசுறேன்,, இப்போ சாப்பாடு வந்துருச்சு அதை மொதல்ல கவனிப்போம்” என்று கார்த்திக் சமாதானம் செய்யவும், சர்வர் சாப்பாடு எடுத்து வரவும் சரியாக இருந்தது

அதன்பிறகு இருவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர்,, முதலில் சத்யன் சாப்பிட்டுவிட்டு எழுந்து கைகழுவ போனான்,, கையை கழுவிவிட்டு பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து கையை துடைத்தவாறே திரும்பியவன்,, தனக்கு பின்னால் நின்ற மான்சியை பார்த்ததும் நகராமல் அப்படியே நின்றுவிட்டான்

அவனை பார்த்ததும் அவளும் ஆச்சர்யத்தில் விழிவிரித்து அப்படியே நின்றாள்,, நிறைய ஆட்கள் கைகழுவ வந்துவிட,, முதலில் சுதாரித்தது சத்யன்தான் “ வழிவிட்டு ஓரமா நில்லுங்க மான்சி” என்று சொன்னதும்..

“ ஓ ஸாரி” என்று சொல்லிவிட்டு மான்சி வேகமாக போய் கைகழுவிவிட்டு வந்தாள்,, அவள் முகத்தில் அளவுகடந்த சங்கடம் இருந்தது,,

ஏனோ அவளின் சங்கடமான முகம் சத்யனின் மனதை என்னவோ செய்ய,, அதை போக்கும் வகையில் “ என்னாச்சு என்னை பார்த்ததும் அப்படியே ஷாக்காகி நின்னுட்டீங்க,, நானெல்லாம் கேன்டீன்ல சாப்பிட வந்ததாலா?” என்று இலகுவான குரலில் இயல்பாக கேட்டான்

தன் மனதில் தோன்றியதை அப்படியே கேட்டதால் மான்சிக்கு ஆச்சரியமாக இருந்தாலும்,, இயல்பான சத்யனின் பேச்சு அவளையும் இயல்பாக்கியது என்னவோ உண்மை,, ஒரு அழகு புன்னகையை இதழ்களில் தவழவிட்டு “ ஆமாம் சார் நீங்களும் கேன்டீன்ல சாப்பிடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை,, அதான் கொஞ்சம் ஷாக்காகி நின்னுட்டேன்,, நான் வர்றேன் சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்

அவளின் அழகு புன்னகை சத்யனை நகரவிடாமல் அங்கேயே கட்டிப்போட்டு வைத்திருந்தது,, ஒரு பெண்ணின் புன்னகை இவ்வளவு அழகா? இவளின் குரலில் தேனை குலைத்தது யார்? மான்சி அவனிடம் பேசிவிட்டு கிளம்பியதும்,, இந்த இரண்டு கேள்வியும் தான் சத்யன் மனதில் தோன்றியது

கைகழுவ வந்த ஊழியர்கள் அனைவரும் வணக்கம் சொன்னதும் தான் ,, அந்த இடத்தில் வெகுநேரம் நிற்க்கின்றோம் என்ற எண்ணமே சத்யனுக்கு வந்தது,, அவசரமாக அங்கிருந்து நகர்ந்து அவன் சாப்பிட்ட டேபிளுக்கு வந்தான்,, கார்த்திக் சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு இவனுக்காக காத்திருந்தான்

“ நீ எப்போ கைகழுவ வந்த கார்த்திக்” என்று கேட்டான் சத்யன்

சிறு குறும்பு சிரிப்புடன், சத்யனின் முகத்தை பார்த்த கார்த்திக் “ நீங்களும் மான்சியும் பேசிகிட்டு இருக்கும்போதே நான் வந்து கைகழுவிவிட்டு வந்துட்டேன்,, நீங்கதான் கவனிக்கலை” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்

இருவரும் வெளியே வந்து வராண்டாவில் நடக்க,, கார்த்திக்கு என்ன பதில் சொல்வது என்று குழம்பியவாறே சத்யன் அமைதியா வந்தான்,, ஏற்கனவே இன்று காலை மான்சியை ரயில்நிலையத்தில் பார்த்ததையும்,, அவளையும் அவள் அண்ணனையும் தவறாக நினைத்தது பற்றி கார்த்திக்கிடம் சொல்லலாமா, என்று நினைத்தவன், அடுத்த நிமிடமே அந்த முடிவை மாற்றிக்கொண்டான்,, அதை சொன்னால் கார்த்திக் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று சத்யனுக்கு சங்கடமாக இருந்தது

கார்த்திக் முகத்தில் இன்னும் மாறாத குறும்பு சிரிப்புடன் வந்தான் “ ஏன் பாஸ் அக்கம்பக்கம் நிற்கும் ஆளைக்கூட கவனிக்காம அப்படியென்ன பாஸ் பேசினீங்க” என்று துறுவியவனை நிமிர்ந்து பார்த்து செல்லமாய் முறைத்தான் சத்யன்

தனது அறைக்குள் நுழைவதற்கு முன் “ கார்த்திக் ஈவினிங் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி மான்சியை என்னை வந்து பார்த்துட்டு போகச்சொல்லு” என்று கூற

சட்டென்று நின்ற கார்த்திக் வாய்கொள்ளா சிரிப்புடன் “ எஸ் பாஸ்,, இப்பவே மேடம்கிட்ட தகவல் சொல்லிர்றேன்” என்றான்

“டேய் கார்த்திக் உன் கற்பனை குதிரையை பறக்கவிடாதே ,, இழுத்து கட்டு,, சும்மா புது ஜாப் எப்படியிருக்குன்னு கேட்கத்தான் வரச்சொன்னேன்,, போய் வேலையை பாருடா” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டான் சத்யன்,

தன் கேபினுக்குள் நுழைந்த கார்த்திக்,, எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொன்ன சத்யனின் சபதம் கொஞ்சநேரத்தில் ஆட்டம் கண்டுவிட்டதாக எண்ணினான்,, உடனே இன்டர்காமில் மான்சியிடம் தொடர்பு கொண்டு ஈவினிங் பாஸ் வந்து உங்களை பார்த்துட்டு போகச்சொன்னார்’’ என்று தகவல் சொன்னான்

தன் அறையில் சீட்டில் அமர்ந்த சத்யன்,, கைகளை தலைக்கு பின்னால் கட்டிக்கொண்டு பின்புறமாய் சாய்ந்துகொண்டு கண்களை மூடினான்,, மூடிய கண்களில் மான்சி வந்தாள்,, ‘இவள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாள்’ என்று நினைத்தான், ஆனால் உடல் ஒல்லியாக இருந்தாலும் அழகை வஞ்சனையில்லாமல் வாரிவழங்கி இருக்கிறான் ஆண்டவன் என்று நினைத்தான்,,

இடையைத் தொடும் நீளக் கூந்தல்,, ஐந்தாம் பிறையைப் போன்ற நெற்றி,, அதன் நடுவில் இருந்த சிறிய சிவப்பு நிற பொட்டு,, திருத்தப்படாத அளவான புருவங்கள்,, சிப்பிப் போன்ற இமைகள்,, அதில் வரிசையாய் அடர்த்தியான இமை மயிர்கள்,, யப்பா எவ்வளவு அழகான பெரிய கண்கள்,, மீன் விழியாள் என்ற சொல் இவளுக்குத்தான் பொருந்தும்,, கூறிய நேர் நாசி, அதற்கு கீழே கொவ்வைச் செவ்வாய் இதழ்கள்,, சிரிக்கும்போது கூடவே மற்றவர்களையும் சிரிக்கத் தூண்டும் முத்துப் பற்கள்,, வெல்வெட்டைப் போன்ற வளவளப்பான கன்னங்கள்,, குவளை காதுகளில் குட்டியாய் ஆடிய ஜிமிக்கிகள்,, வெண்சங்கு கழுத்தும் அதில் கிரிஸ்டல் டாலர் கோர்த்த மெல்லியதாய் ஒரு செயின் கழுத்தை ஒட்டிக்கிடந்தது,,

அவள் போட்டிருந்த ஆலிவ் பச்சை நிற சுடிதார் அவளுக்கு எடுப்பாக இல்லை என்று சத்யனுக்கு தோன்றியது,, அவளின் பாலாடை போன்ற நிறத்துக்கு அடர்த்தியான நிறங்களில் உடையணிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான் சத்யன்

சுடிதாரில் மறைந்திருந்த அவளின் எழில் வளைவுகளைப் பற்றி கற்பனை செய்து ரசிக்கும் அளவிற்கு அவளை கவனிக்க தவறிவிட்டோமே என்று ஒரு ஏக்கம் வந்தது சத்யன் மனதில்,,

‘’ச்சே என்ன மனுஷன்டா நீ, தனிமையில் ஒரு பெண்ணைப் பற்றி சிந்திப்பதே தவறு இந்த லட்சனத்தில் அவளின் உடலைப் பற்றி சிந்திப்பது அதைவிட தவறு என்று அவன் அறிவு அவனுக்கு அறிவுரை சொன்னது

தலையை உதறிக்கொண்டு கண்விழித்த சத்யன்,, தன்னை நினைத்து வெட்கப்பட்டு சிரித்தபடி அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தான்,,

அன்று மாலை அவனது அறைக்கதவைத் தட்டிய மான்சி “ மே ஐ கமின் சார்” என்றாள்

அது மான்சியின் குரல் என்று உடனே அடையாளம் கண்ட அவனது செவிகள்,, உடனே உதடுகளுக்கு உத்தரவிட,, அவனுடைய அனுமதி இல்லாமலேயே “ வாங்க மான்சி” என்று அவளை உள்ளே அழைத்தது அவன் உதடுகள்

கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ குட்ஈவினிங் சார்” என்று புன்னகை செய்ய

சத்யன் மறுபடியும் அந்த புன்னகையில் மயங்கிப்போனான்,, பதிலுக்கு புன்னகை செய்யவேண்டும் என்றுகூட தோன்றாமல், புன்னகை சிந்தும் அவளின் சிவந்த இதழ்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்

அவனின் பார்வை மான்சியை கூர் அம்புகள் கொண்டு தாக்க,, சங்கடமாக தலைகுனிந்து “ ஈவினிங் உங்களை வந்து பார்த்துட்டு போகச் சொன்னீங்களாம் சார்” என்றாள் மெல்லிய குரலில்

இப்போது அவளின் தேன் குலைத்த குரல் அவனை மயக்கியது,, ஆனாலும் அவளுக்கு பதில் சொல்லவேண்டும் என்று அறிவு அறிவுருத்த,, “ வேலை பிடிச்சிருக்கான்னு கேட்கத்தான் வரச்சொன்னேன்” என்றான் சத்யன்

சட்டென்று முகம் மலர “ ம் பிடிச்சிருக்கு சார்,, சூப்பர்வைசர்னதும் முதல்ல பயமா இருந்துச்சு,, ஆனா எல்லா ஸ்டாப்ஸ்ம் நல்லா பழகுறாங்க,, சுகன்யா மேடம் வேலை பத்தி நல்லா சொல்லிக் குடுத்தாங்க,, இன்னும் ரெண்டு நாள்ல ஓரளவுக்கு கத்துக்குவேன் சார்” என்று மான்சி உற்ச்சாகமாக பேசினாள்

சத்யன் பேசும் அவள் செவ்வாய்யையே பார்த்தான்,, அப்போதுதான் இரண்டு விஷயங்களை அவன் கண்டுபிடித்தான்,, ஒன்று அவள் மேலுதட்டில் வலதுபக்கம் ஒரு நூலின் நுனியளவு சிறு மச்சம் இருந்தது,, இரண்டாவது ,, அவள் பேசும் போது தெரிந்த இடைவெளியில் அவள் பற்களில் ஒன்று சிங்கப்பல் என்று தெரிந்தது




அவன் தன் முகத்தையே உற்று பார்த்தது மான்சிக்கு சங்கோஜமாக இருந்தது,, மெல்ல தலைகுனிந்து “ சார் நான் கிளம்பட்டுமா?” என்றாள் மெல்ல

‘ச்சே இப்படி நாகரீகமற்று அவளை வெறிக்கிறோமே என்று எண்ணி “ மான்சி நான் உங்ககிட்ட ஒரு மன்னிப்பு கேட்கனும் அதற்காகத்தான் வரச்சொன்னேன்” என்றான் சத்யன் தலைகவிழ்ந்து

மான்சியின் முகத்தில் குழப்பம் வந்து சட்டென்று அமர “ என்கிட்ட மன்னிப்பா,, ஏன் சார், என்னாச்சு” என்று திகைப்பும் குழப்பமுமாக மான்சி கேட்டால்

சத்யன் சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அமைதியா இருந்தான்,, பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக நிமிர்ந்து அவள் முகத்தை நேரடியாக பார்த்து “ மான்சி நான் இயல்பிலேயே முதல் பார்வையில் ஒரு பெண்னை தவறாக நினைப்பவன் இல்லை,, ஆனால் உங்களை ஏன் அப்படி நெனைச்சேன்னு எனக்கே தெரியலை,, உங்களை காலையில ஆபிஸ்ல பார்க்கறதுக்கு முன்னாடியே விடியற்காலம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன்,, உங்ககூட இருந்தது உங்க அண்ணண் என்று தெரியாம,, வீட்டை வீட்டு ஓடி வந்த காதல் ஜோடின்னு தப்பா நெனைச்சுட்டுடேன்,, உங்க ரெண்டு பேரோட நடவடிக்கையும் என்னை தப்பா நெனைக்க வச்சது,, ஆனா அவர் உங்க அண்ணன்னு அனிதா சொன்னதும் எனக்கு ரொம்ப வேதனையா ஆயிருச்சு,, காலையிலேர்ந்து மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு,, அதான் மன்னிப்பு கேட்கனும்னு வரச்சொன்னேன்” என்ற சத்யன் சேரில் இருந்து எழுந்து நின்று தனது கைகளை கூப்பி “ ஒரு அண்ணன் தங்கச்சியை தவறாக நினைச்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க மான்சி” என்றான் மெல்லிய குரலில் ஆனால் அதில் ஒரு உறுதி இருந்தது

அவன் எழுந்தாலும் மான்சி எழுந்திருக்கவில்லை,, அவள் முகத்தில் அதிர்ச்சி,, அந்த அதிர்ச்சியை மீறி கண்களில் தாரைத்தாரையாக வழிந்த கண்ணீர்,, சத்யனுக்கு ஏதோ பதில் சொல்ல அவள் உதடுகள் துடித்தன , ஆனால் வார்த்தைகள் வரவில்லை, பதிலாக கண்ணீர் வழிந்தது

தனது வார்த்தைகள் அவளை இவ்வளவு பாதிக்கும் என்று எதிர்பார்க்காத சத்யன்,, திகைப்புடன் அவளை நெருங்கி “ ப்ளீஸ் மான்சி கன்ட்ரோல் யுவர் செல்ப்,, நான்தான் மன்னிப்பு கேட்டுட்டேனே,, ப்ளீஸ் கண்ணை தொடைங்க மான்சி” என்று சங்கடமாக தவிப்புடன் சொன்னாலும் அவளை தொட பயந்து தள்ளி நின்றே சொன்னான் சத்யன்

சிறிதுநேரம் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் விட்ட மான்சி தன்னை ஒருநிலை படுத்திக்கொண்டு தனது கைப்பையைத் திறந்து கைகுட்டையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள்

சத்யன் அவசரமாக மேசையில் இருந்த தண்ணீர் நிறம்பிய கண்ணாடி டம்ளரை எடுத்து அவளிடம் நீட்டினான் “ ப்ளீஸ் கொஞ்சம் தண்ணி குடிங்க மான்சி” என்று கூற

தலையசைத்து மறுத்த மான்சி வெளியே போவதற்காக கதவை நெருங்கினாள்,,
அவள் முன்னே வந்து குறுக்கே நின்ற சத்யன் “ எதுவுமே சொல்லாம போன எப்படி,, நான்தான் மன்னிப்பு கேட்டேனே,, நான் யாரையுமே அப்படி நினைச்சதில்லை,, இந்த மில்லுல மொத்தம் ஐநூற்று இருபது பெண்கள் வேலை செய்றாங்க, இவ்வளவு பேர்கிட்டயும் நான் ஒரு நல்ல நண்பனாய் பெயர் வாங்கியிருக்கேன்,, உன்னை உன் அண்ணனையும் ஏன் அப்படி நெனைச்சேன்னு எனக்கே தெரியலை மான்சி,, ப்ளீஸ் மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயேன்” என்று சத்யன் இறைஞ்சினான்

சத்யன் அவளை அழைப்பதை பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவி விட்டதை இருவருமே உணரவில்லை

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மான்சி “ எந்த பெண்களையும் அப்படி நினைக்காதவர் என்ன மட்டும் ஏன் அப்படி நெனைச்சீங்க,, உங்களோட பார்வையில் நான் கண்ணியமானவளா தெரியலையா?,, உங்கப் பார்வையில் எது தவறாகப் பட்டது, நான் என் அண்ணன் தோளில் சாய்ந்ததா? அல்லது என் அண்ணன் என் நெற்றியை பிடிச்சுவிட்டதா? எங்க ஊர்லேர்ந்து கிளம்பும் போதே எங்கம்மா அப்பாவை நெனைச்சு ரொம்ப நேரம் அழுததால எனக்கு கடுமையான தலைவலி,, இங்கே வந்தபிறகும் அது தீரவில்லை அதனாலதான் எங்க அண்ணன் பிடிச்சுவிட்டான்,, இதைப்போய் தப்பா நெனைச்சீங்களே,, எங்கம்மா அப்பா இருந்தா எனக்கு இந்த மாதிரி நிலைமை வருமா,, எல்லாம் எங்க விதி” என்று சொல்லிவிட்டு சிறு குழந்தையை போல விசும்பி விசும்பி அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் தவித்தான் சத்யன்

அவளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் சத்யனின் நெஞ்சில் ஊசியாய் இறங்கியது,, குமுறும் அவளின் முகத்தையே பார்த்த சத்யன் மறு யோசனை ஏதுமின்றி சட்டென்று அவளை நெருங்கி இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான்,

எது அவளை அணைத்து ஆறுதல்படுத்த சொன்னது என்று அவனுக்கு புரியவில்லை,, அதைப்பற்றி யோசிக்கவும் அவன் தயாரில்லை,, அவனைப்பொறுத்தமட்டில் மான்சியின் கண்ணீர் தரையில் விழக்கூடாது அது அவன் நெஞ்சில் விழவேண்டும் என்று மட்டுமே நினைத்தான்

மான்சிக்கு எங்கு இருக்கிறோம் என்று முதலில் புரியவில்லை போல,, அவன் தோளில் தனது கண்ணீரை கொட்டியவள் சுயநிலை உணர்ந்து திகைத்து விரைத்து விலக முயன்றாள்

ஆனால் சத்யன் அவளை விடவில்லை,, “ ஸ் கொஞ்சநேரம் அப்படியே இரு மான்சி எல்லாம் சரியாயிடும்” என்று உரிமையான குரலால் அவளை அடக்கினான்,, ஆனால் அந்த “ எல்லாம் சரியாயிடும்” என்றது அவனுக்கா? இல்லை அவளுக்கா? என்றுதான் புரியவில்லை,


மான்சி திமிறி விலகியதும், சத்யனும் வேறு வழியில்லாமல் அவளை விடுவித்தான், ஆனால் நெருக்கத்தை விலக்காமல் அவளை தோளைத் தொட்டு திருப்பி “ இந்தா,, இந்த தண்ணிய குடி” என்று அவள் உதட்டருகில் தண்ணீர் க்ளாஸை எடுத்துச்செல்ல......

எங்கே அவனே அதை புகட்டி விடுவானோ என்று பயந்தவள் போல,, மான்சி சட்டென்று க்ளாஸை கையில் வாங்கிக்கொண்டாள்,, அவள் தண்ணீரை குடிக்க சத்யன் அந்த அழகை பார்வையால் குடித்தான்,, மான்சி அதை கவனித்துவிட்டு தனது கண்களை மூடிக்கொண்டு தண்ணீர் குடித்தாள்

உதட்டில் சிரிப்பு நெளிய அவளிடமிருந்து டம்ளரை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு,, அவள் தோளில் தட்டி “ அதோ அங்க பாத்ரூம் இருக்கு போய் முகத்தை கழுவிட்டு வா” என்றான் குரலில் அன்பை குலைத்து!

மறுபேச்சில்லாமல் மான்சி அவனிடமிருந்து விலகி பாத்ரூம் நோக்கி போனாள்,,
சத்யன் அவளையே பார்த்தான்,, இவ்வளவு பூஞ்சையானவள் எப்படி தனியாக இந்த கோவையில் இருந்து சமாளிக்கப் போகிறாளோ, என்ற கவலை புதிதாக அவன் மனதில் தோன்றியது,

திடீரென அவளை இழுத்து அணைத்தது சத்யனுக்கு அவள் என்ன நினைப்பாளோ என்று சங்கடமாக இருந்தாலும்,, மனதுக்குள் கரைகாணா உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

முகம் கழுவிவிட்டு வெளியே வந்த மான்சியின் கண்களில் இருந்த சிவப்பைத் தவிர, புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவைப் போல பளிச்சென்று இருந்தாள்
கைகுட்டையால் முகத்தை துடைத்தபடி வந்தவள்,, சத்யன் அருகே வந்து “ நான் கிளம்புறேன் சார் நேரமாகுது” என்றாள்

அவள் சார் என்றது சிரிப்பை வரவழைத்தாலும் “ ம் கிளம்பு,, ஆனா நான் மன்னிப்பு கேட்டேனே அதுக்கு பதிலே சொல்லலை நீ” என்றான் சத்யன்

அமைதியாக நின்றாள் மான்சி

அவளருகே வந்த சத்யன் “ ம்ம் அப்போ என்னை மன்னிக்கவே மாட்டியா மான்சி ” என்று சத்யன் உறுக்கமாக கேட்க

தனது தயக்கத்தை உடைத்து “ நான் மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தப்பும் செய்யலை,, ஆனா இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்தும் நீங்க எதையுமே முதல் பார்வையில் எடை போட்டு தீர்மானம் பண்ணாதீங்க சார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை கைபிடித்து நிறுத்தினான் சத்யன்

“ ஆனா நீ என்னை மன்னிக்கலைன்னாலும் எனக்கு கவலையில்லை தெரியுமா?,, ஏன்னா நான் ஏன் அப்படி நினைத்தேன் என்பதற்கான அர்த்தம் எனக்கே இப்போத்தான் புரிஞ்சுது” என்றவன் தனது பிடியை தளர்த்தி “ ம் இப்போ போ,, ஆனா இனிமேல் என் பார்வை உன்மீதுதான்” என்று சொல்லிவிட்டு போய் தனது இருக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்தான்

அவள் போகாமல் நின்று அவனையே திகைப்புடன் பார்த்தாள்,, அவன் சொன்னதன் அர்த்தம் புரியாத குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது

அப்போது “ எஸ் கியூஸ் மீ ,, மே ஜ கமின் பாஸ்” என்ற கார்த்திக்கின் குரல் கேட்க

“ உள்ளே வாடா கார்த்திக்” என்றான் சத்யன், அவன் குரலில் உற்சாகம் வழிந்தது
கார்த்திக் கதவை திறந்து உள்ளே வர,,

“ நான் வர்றேன் சார்” என்று கூறிவிட்டு மான்சி வெளியேறினாள்

உள்ளே வந்த கார்த்திக் சத்யனின் முகத்தில் எதைக்கண்டானோ “ கங்ராட்ஸ் பாஸ்” என்றான்


சட்டென்று புருவம் உயர்த்தி அவனைப் பார்த்த சத்யன் “ எதுக்குடா வாழ்த்து சொல்ற” என்று கேட்டான், ஒன்றும் தெரியாதவன் போல...

கார்த்திக்கும் அவனை புரிந்துகொண்டு “ என்னன்னு தெரியலை பாஸ் , ஏதோ சொல்லனும்னு தோனுச்சு அதான்” என்றான், அசடு வழிய,

இதற்கு சத்யன் எதுவும் பதில் சொல்லவில்லை “ சரி கிளம்பலாமா கார்த்திக் நேரமாச்சு” என்று எழுந்துகொண்டான்

“ நானும் அதுக்குத்தான் வந்தேன், இவ்வளவு நேரமாச்சே பாஸ் இன்னும் கிளம்பலையே என்னாச்சுன்னு கேட்கலாம்னு வந்தேன்” என்று தான் வந்ததற்கான காரணத்தை சொல்லியவன் சத்யனின் டேபிளில் இருந்தவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு “ வாங்க பாஸ் போகலாம்” என்றான்

அவன் பேச்சில் சூட்சுமம் இருப்பது போல் சத்யனுக்கு தோன்றினாலும்,, எதுவும் கேட்காமல் கிளம்பினான்

காரில் சென்று கார்த்திக்கை அவன் வீட்டில் இறக்கியவன் “ டேய் கார்த்திக் அனிதாகிட்ட எதையாவது உளறி வைக்காத,, எனக்கே என்னன்னு இன்னும் புரியலை, அதனால யார்கிட்டயும் எதையும் சொல்லி வைக்காத புரியுதாடா” என்று தன் மனதை ஓரளவுக்கு மறைக்காமல் வெளிப்படுத்தினான் 





No comments:

Post a Comment