Monday, August 17, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 7

அன்று மதிய உணவு இடைவெளியின் போது சத்யன் கார்த்திக் கேபினுக்கு போய் அவனை அழைத்துக்கொண்டு கேன்டீன்க்கு போனான்,, போகும் வழியில் காலை மான்சிக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதத்தை மேலோட்டமாக சொல்லிக்கொண்டே போனான்,, அப்படியா என்று மட்டும் கார்த்திக் கேட்டானே தவிர,, சத்யனை வேறு எதுவும் தோண்டித் துருவவில்லை

இருவரும் கேன்டீனுக்குள் நுழைந்ததும் சத்யனின் கண்கள் மான்சியைத்தான் தேடியது,, ஒரு ஓரமாய் இருந்த டேபிளில் மான்சி உட்கார்ந்திருக்க அவளருகில் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தாள்,, இருவரும் ஏதோ பேசிக்கொண்டே சாப்பிட்டனர்

“பாஸ் அந்த பொண்ணை வேனும்னா வேற சீட்ல உட்காரச்சொல்லவா?” என்றான் கார்த்திக் ரகசியமாக

“அதெல்லாம் வேனாம்டா, இன்னிக்கு காலையில நடந்ததே கொஞ்சம் ஓவர்தான் இப்பவும் போய் அந்த பொண்ணு முன்னால அவளை சங்கடப்படுத்த வேண்டாம், வா நாம தனியா போய் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு தனியா ஒரு டேபிளை நோக்கி போய் இருவரும் அமர்ந்தனர்


அன்று மாலை நாலரைக்கு கதவை தட்டிவிட்டு அவனது அறைக்கு வந்த மான்சி “ தினமும் ரிப்போர்ட் எல்லாம் எழுதி கார்த்திக் சார் கிட்ட குடுக்க சொல்லி சுகன்யா மேடம் சொன்னாங்க,, ஆனா கார்த்திக் சார் உங்ககிட்ட குடுக்கச்சொன்னார்” என்று ஒரு கவரை எடுத்து சத்யனின் மேசையில் வைத்துவிட்டு “ நான் இன்னிக்கு சீக்கிரமாவே கிளம்பனும் சார் உங்க பர்மிஷன் வேனும்” என்றாள்

கவரை பிரித்தபடி “ ஏன் எதாவது வேலையிருக்கா, ஷாப்பிங் போகனுமா,” என்று அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான் சத்யன்

“ ஷாப்பிங் போற வேலையில்லை,, இன்னிக்கு என் ப்ரண்ட் அனிதாவோட சிஸ்டர்க்கு ஒரு பங்ஷன் இருக்கு அதுக்கு போகனும்” என்று அவன் கண்களை பார்த்தபடி மான்சி சொல்ல

சத்யனால் இப்போது அவளை நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை,, கவரில் இருந்த ரிப்போர்ட்டை ரொம்ப கவனமாக பார்த்தான்

“ என்ன சார் நான் போகலாமா” என்றாள் மான்சி

“ம்ம் கிளம்பு மான்சி” என்றான் அவள் முகத்தை பார்க்காமலேயே

“ தாங்க்யூ சார்” என்று கூறிவிட்டு மான்சி கதவை நோக்கி போனாள்

“ அவ்வளவு தூரம் எப்படி மான்சி போவ,, ஆட்டோக்கு ரொம்ப பணம் கேட்ப்பானே,, வேனும்னா நம்ம ஆபிஸ் கார் இருக்கு அதுல உன்னை ட்ராப் பண்ணச்சொல்றேன்” என்று சத்யன் குரலில் அளவு கடந்த அக்கரையுடன் கேட்டான்

நின்று திரும்பி பார்த்த மான்சி “ வேனாம் சார் நான் பஸ்லயே போய்க்கிறேன்” என்று கூறினாள்

அவள் பேச்சில் காலையில் இருந்த இணக்கம் இப்போது இல்லை,, திடீரென்று இருவருக்கும் இடையே ஒரு தடுப்புச்சுவர் உண்டானது போல் சத்யனுக்கு தோன்றியது,, அவளின் ஒட்டாத பேச்சு அவன் மனதை வாட்டியது,, ஏன் இப்படி என்று கேள்வி கேட்ட மனதுக்கு பதில் சொல்ல தெரியாமல் “ஏய் மான்சி நில்லு” என்று குரல் கொடுத்தான்

கதவை திறந்து வெளி கால் வைத்த மான்சி மீண்டும் உள்ளே வந்தாள், அவனை பார்த்து “ என்ன சார்” என்றாள்

வேகமாய் எழுந்து அவனருகில் வந்தவன் அவன் தோளைத் தொட்டு தன்புறம் இழுத்து “ ஏய் ஏன் இப்படி தெரியாதவங்க கிட்ட பேசுற மாதிரி பேசுற,,காலையில அவ்வளவு ஆசையா இருந்துட்டு இப்போ இப்புடி முகத்தை கூட பார்க்காம பேசுற,, ஏன் என்னாச்சு” என்று சீறினான் சத்யன்

தனது தோளில் இருந்த அவன் கையை தட்டிவிட்ட மான்சி “ காலையிலே நடந்தது ஒரு பிழை சார்,, நீங்க உணர்ச்சி வேகத்துல அந்த மாதிரி நடந்துக்கிட்டீங்க,, நானும் உங்க மேல இருந்த அன்பால அதுக்கு ஈடு குடுத்துட்டேன்,, இனிமேல் அதுபோல வேண்டாம் சார்,, மூடின கதவுக்குள்ள ஒரு முதலாளி கூட நான் தனியா கொஞ்சநேரம் இருந்தா வெளியே பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கன்னு எனக்கு இப்பத்தான் உரைச்சது,, அதனால இனிமேல் நான் உங்க ரூமுக்கு வரமாட்டேன் ரிப்போர்ட்டை பியூன் கிட்டத்தான் குடுத்தனுப்புவேன்” என்றாள் மான்சி

அவளை கூர்மையாக பார்த்த சத்யன் “ ஓ இது காலையிலேர்ந்து யோசிச்சு எடுத்த முடிவா? இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா என்னப் பண்ணுவே மான்சி” என்று ஏளனமாய் கேட்டான்

“ இந்த வேலைக்கு இத்தனை வருஷம்னு நான் கான்ட்ராக்ட் எதுவும் உங்ககிட்ட போடலையே? அதனால எனக்கு இஷ்டம் இல்லாததை வற்புறுத்தினால் உடனே வேலையை விட்டு போய்டுவேன்” என்று மான்சி தீர்க்கமாக சொன்னாள்

சட்டென்று சத்யன் அவளைவிட்டு ஓரடி தள்ளி நின்றான்,, அவளின் பேச்சு அவனை காயப்படுத்திவிட்டது என்பது அவன் கண்களில் தெரிந்தது,, கோபத்தில் சிவந்ததா,, அல்லது காயம்பட்ட வேதனையில் என்று தெரியவில்லை,, “ அப்போ நமக்குள்ள காலையில் நடந்ததை அசிங்கம்னு நெனைக்கிற,, இதுக்கு மேலே நான் ஏதாவது சொன்னா நீ வேலையை விட்டு போய்டுவ,, இது என்னை எதுக்கோ ப்ளாக்மெயில் பண்ற மாதிரி இருக்கே மான்சி” என்று சத்யன் கேட்க

அலட்சியமாக தனது தோளை குலுக்கிய மான்சி “ நான் யாரையும் ப்ளாக்மெயில் பண்ணலை,, காலையில நடந்த மாதிரி மறுபடியும் நடக்காமல் ஒரு சுய பாதுகாப்பு அவ்வளவுதான்,, அதை நீங்க இப்படி நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை,, எனக்கு நேரமாச்சு நான் வர்றேன்” என்று அலட்சியமாக பேசி கதவை திறந்துகொண்டு வெளியேறினாள்

சத்யன் மூடிய கதவையே வெறித்து நோக்கினான்,, வசுவின் விசேஷத்திற்கு நான் வரவில்லை என்ற கோபத்தை இப்படி காட்டிவிட்டு போகிறாள் என்று தெளிவாக சத்யனுக்கு புரிந்தது,, இருபது வருஷமாக என் மனதோடு பதிந்து போன ஒரு விஷயத்தை நேத்து வந்த இவளுக்காக விட்டுக்கொடுக்க நான் என்ன பொண்ணுங்களுக்கு மயங்கி சுயத்தை தொலைப்பவனா? ம்ஹூம் நடக்கவே நடக்காது,, இவளுக்காக நான் ஏன் மாறவேண்டும்,, முடியவே முடியாது,, சிறுவயதில் நான் பட்ட அவமானங்கள் இவளுக்கு எப்படி தெரியும்,, அனிதா இவளோட ப்ரண்ட் என்றால் அவளுக்காக இவள் மாறட்டும்,, என்னை மாறச்சொல்வது எந்த வகையில் நியாயம்,, நானே இவளிடம் வழிந்துகொண்டு போனதால் என்னை இளக்காரமா நெனைச்சுட்டா போலருக்கு,, ஆனா நான் எப்பேர்ப்பட்ட வைராக்கியம் பிடிச்சவன்னு இவளுக்கு தெரியாது,, ம்ம் இத்தோட இவளா என்னை தேடும் வரை நான் இவளை சந்திக்கப்போறதில்லை, இது உறுதி” என்று தனக்குள் சபதமெடுத்தான் சத்யன்

தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்த சத்யன், அடுத்து எந்த வேலையும் செய்யத் தோனாமல், உடனே கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்,,

சத்யன் அறையில் இருந்து வெளியே வந்த மான்சி முகத்தையும்,, கோபமாய் கண்கள் சிவக்க மில்லில் இருந்து வெளியேறும் இவன் முகத்தையும் பார்த்த கார்த்திக் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று புரிந்தாலும், மேற்கொண்டு எதுவும் கேட்காமல் “ ஓகே பாஸ் நீங்க கிளம்புங்க,, நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அனுப்பி வைத்தான் கார்த்திக்

வீட்டுக்கு வந்த சத்யன் வேலைக்காரன் கொடுத்த காபியை மறுத்து தனது அறைக்கு வந்து உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்,, மான்சியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் அறைவது போல் இருந்தது,,

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது, அவள் முடிவுக்கு என்னை இழுக்கிறாள்,, ம்ஹூம் அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்,, அவளாகவே என்னிடம் வரவேண்டும் இல்லையென்றால் எவ்வளவு நாளானாலும் இப்படியே இருப்பேன் என்று நினைத்தபடியே படுத்திருந்த சத்யனை வெளியே இருந்து வேலைக்காரன் அழைக்கும் குரல் கேட்டது

அதான் எதுவும் வேனாம்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் கதவைத்தட்டுறான்,, என்று முனங்கியபடி எழுந்து கதவை திறந்த சத்யன் திட்டுவதற்கு முன் வேலைக்காரன் முந்திக்கொண்டான்

“ சின்னய்யா நம்ம அனிதா பாப்பாவும்,, வசந்தி பாப்பாவும் வந்திருக்காங்க” என்றான் மூச்சுவாங்க

“ என்னது வசு வந்திருக்காளா,, இப்போ ஏன் வந்த,, இந்தநேரத்திலயா?” என்று வேகமாக கீழே இறங்கிய சத்யன் ஹாலுக்கு வந்தான்



சோபாவில் அமர்ந்திருந்தனர் அனிதாவும் வசுவும், வசு ஒரு கல்யாணப் பொண்ணைப் போல முழு அலங்காரத்தில் ஜொலித்தாள்,பட்டுப்புடவையில் அவளை பார்த்த சத்யன் அதிசயத்தில் அப்படியே நிற்க்க,, வேகமாக எழுந்து வந்த வசு சட்டென்று சத்யன் காலில் விழுந்து “ என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கண்ணா” என்றாள்

சத்யனுக்கு உணர்ச்சி வேகத்தில் வயிறு தடதடத்தது,, என்மேல் எவ்வளவு அன்பு இருந்தால் விசேஷம் முடிந்த கொஞ்சநேரத்தில் என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பாள்,, என்று எண்ணி லேசாக கலங்கினான்

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றவனை “ அவளை ஆசிர்வாதம் பண்ணு அண்ணா,, பங்ஷன் முடிஞ்சதும் ஓரே அழ, நான் உடனே அண்ணனை பார்க்கனும்னு அதான் கூட்டிவந்தேன்” என்ற அனிதாவின் வார்த்தைகள் கலைத்தது

வேகமாக குனிந்து வசவை தூக்கிய சத்யன் “ இந்த நேரத்தில் வரலாமா வசு,, நீ எங்க இருந்தாலும் என்னோட ஆசிர்வாதம் உனக்கு உண்டு” என்றவன் வசுவை அழைத்துக்கொண்டு தனது தாயின் படத்தருகே போனான்

“ அம்மாவை கும்பிட்டுக்க வசு” என்றவன் அங்கே கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து வசுவின் நெற்றியில் பூசி “ இனிமேலாவது குறும்புத்தனத்தை எல்லாம் குறைச்சு,, நல்லப் பொண்ணா நெறைய படிக்கனும்” என்றான் சத்யன்

அனிதாவும் அவனருகில் வந்து “ எனக்கும் விபூதி பூசுங்கண்ணா” என்றாள்

சத்யன் அவளுக்கும் விபூதி பூசிவிட்டு “ சீக்கிரமா கார்த்திக்கை மேரேஜ் பண்ணி லைப்ல செட்டில் ஆகு அனிதா” என்று வாழ்த்தினான்

அனிதா கலங்கிய கண்களை மறைக்க வேறு புறமாக திரும்பிக்கொண்டாள்,, சத்யன் இதுபோலெல்லாம் பேசி அவள் பார்த்ததேயில்லை,, வசு அதிர்ஷ்டசாலி தான் அண்ணன் மனம் திறந்து ஆசிர்வாதம் பண்ணிட்டாரு,, என்று நினைத்தாள்

வேலைக்காரன் எடுத்து வந்த காபியை இருவரிடமும் எடுத்து கொடுத்த சத்யன், சோபாவில் வசுவின் பக்கத்தில் அமர்ந்தவன் “ இந்த நேரத்தில் போய் வரலாமா வசு,, உங்க கூட யார் வந்திருக்கறது” என்று கேட்டான்

டிரைவர் கூட கார்ல வந்தோம் அண்ணா,, எங்ககூட மான்சியும் வந்திருக்கா,, கார்லயே இருக்கா,, நான் எவ்வளவோ கூப்பிட்டும் வரமாட்டேன்னுட்டா,, நாங்க போகும்போது அவளை, அவ வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போகனும் அண்ணா” என்று அனிதா கூறியதும்

மான்சி என்ற பெயரை கேட்டதுமே உள்ளுக்குள் ஒரு ஜில்லிப்பு பரவ " ஓ மான்சி வந்திருக்காளா?" என்று கேட்ட சத்யன்,, அவளுக்கு இவ்வளவு பிடிவாதம் இருந்தா வீடுவரைக்கும் வந்துட்டு உள்ளே வராம கார்லேயே இருப்பா,, நானே போய் இவ கால்ல விழனும்னு நெனைக்கற போலருக்கு என்று கோபமாய் எண்ணினான்

" சரி நேரமாயிருச்சு நாங்க கிளம்புறோம் அண்ணா" என்று அனிதாவும் வசுவும் எழுந்துகொண்டனர்

" சரி பார்த்து போங்க,, வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுங்க" என்று வாசல்வரை வந்து சத்யன் வழியனுப்பி விட வந்தவன் காரில் அமர்ந்திருந்த மான்சியின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்ததும் தயங்கி நின்றான்

அவ வந்து வாழப்போகும் வீடு,, அவளுக்கு இந்த வீட்டை பார்க்கும் ஆர்வம் இல்லாதபோது நான் ஏன் கூப்பிடனும் எனறு பிடிவாதமாக எண்ணிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டான்,,

வெளியே கார் கிளம்பி செல்லும் ஓசை கேட்டது



கார் கிளம்பியதும் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மான்சியின் முகத்தை பார்க்க,, அவள் உதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு இருந்தாள்,, அதையும் மீறி வெளிப்பட்ட கண்ணீர் விழியோரம் எட்டிப்பார்த்தது

மான்சியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அனிதா அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள் “ நீ வீட்டுக்குள்ளே வந்திருக்கலாம் மான்சி,, நீ எங்ககூட வந்துருக்கேன்னு சொன்னதும் அண்ணன் முகத்தில் எவ்வளவு ஆர்வத்தோட வாசலைப் பார்த்தார் தெரியுமா?,, ஆனா அடுத்த செகண்ட்டே மாறிட்டார்,, நீயும் உள்ளே வந்து அவரை பார்க்காம இப்போ கண்ணீர் விடுற,, எங்களுக்காக உன் காதலை பணயமாக வைக்க வேனாம் மான்சி,, எங்க விதிப்படி நடக்கட்டும் விடு,, அண்ணன் எங்க மேல இவ்வளவு அன்பு காட்டுறதே போதும்” என்று அனிதா விரக்த்தியாக பேசினாலும் அவள் கண்களும் கலங்கி இருந்ததன,,,

“ அழாதீங்க மான்சி அக்கா,, என்னாலதானே நீங்க அண்ணா கூட பேசலை,, ஸாரிக்கா” என்று வருத்தமாக வசு கூறியதும்..

சட்டென்று தன் கண்களை துடைத்துக் கொண்ட மான்சி “ ஏய் செல்லக்குட்டி இன்னிக்கு நீ எதற்க்காகவும் வருத்தப்படக்கூடாது,, நான் இனிமேல் அழமாட்டேன் வசு,, ஆனா உன்னால ஒன்னும் நான் உங்கண்ணனை அவாய்ட் பண்ணலை,, அவருக்கு பாசமானவங்களை பிரிஞ்சா எவ்வளவு வலிக்கும்னு தெரியனும் அதனால்தான் இந்த பரிட்சை” என்று மான்சி கண்களில் தீவிரத்துடன் பேச..

“ அதெல்லாம் சரி மான்சி,, ஆனா உனக்கு எங்கண்ணனோட பிடிவாதம் தெரியாது,, பனிரெண்டு வயசுலேயே எங்கம்மா எங்க வீட்டுக்கு வந்தபோது,, ரூமை விட்டு வெளியே வராமல் ரெண்டு மூனுநாள் அவரோட துணிகளை அவரே துவைச்சாராம்,, வேலைக்காரங்க குடுத்த சாப்பாட்டை திருப்பி அனுப்பிட்டு பாட்டினா இருப்பாராம்,, வேலைக்காரங்களே அழுது கெஞ்சி சாப்பிடச் சொன்னதும்தான் சாப்பிடுவாராம்,, அப்புறம் பாட்டிதான் எதேதோ சொல்லி அவரை சமாதானம் பண்ணி ரூமை விட்டு வெளியே கூட்டிவந்து டைனிங் டேபிளில் சாப்பிட வச்சாங்களாம்,, அதுக்கப்புறம் நம்ம அபி பிறக்கறதுக்கு பத்துநாளைக்கு முன்னாடி பாட்டியை கூட்டிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்துட்டார்,, அண்ணா ரொம்ப வைராக்கியமானவர் மான்சி,, அதனாலதான் நாங்க அவர்கிட்ட அதிகமா அன்பை எதிர்பார்க்கறது கிடையாது,, கிடைச்சதே கடவுள் கிருபைன்னு சந்தோஷப்பட்டுக்குவோம்” என்று அனிதா தனது அண்ணனை பற்றி சிறு உரை நிகழ்த்தினாள்

அவள் சொன்னதையெல்லாம் எப்பவும் போல் கவனமாக கேட்டு வழக்கம்போல மனதின் ஆழத்தில் பதியவைத்த மான்சி “ அனிதா உங்களுக்கெல்லாம் அண்ணன் இவ்வளவு பாசம் காட்டினா போதும்னு நெனைக்கிறீங்க, சரிதான்,, ஆனா கிருபா அங்கிளும் ரஞ்சனா ஆன்டியையும் நெனைச்சுத்தான் நான் இந்த மாதிரி பண்ணதே,, நீங்க அடுத்தடுத்து மேரேஜ் ஆகிப்போனதும் அவங்களை யாரு கவனிச்சுக்குவாங்க,,

" அனிதா அவரை பிரிஞ்சு இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம்தான் என்றாலும்,, மூனு வருஷமா அவரோட நினைவே சொர்க்கம்னு வாழ்ந்தவ தான் நான்,, அதனால இந்த தற்காலிக பிரிவு என்னை அவ்வளவாக பாதிக்காது,, ஆனா உங்க அண்ணனுக்கு இந்த இரண்டு நாளும் ஒரு புது உலகத்தையே காமிச்சிருக்கேன்,, நிச்சயமா அவரால என்னை பார்க்காமல் இருக்க முடியாது,, நீங்க ரெண்டு பேரும் கவலையே படாதீங்க கூடிய சீக்கிரம் உங்க அண்ணனோடு அங்கிள் ஆன்டியை பார்க்க வருவேன்” என்று மான்சி உறுதியோடு கூறினாள்

மான்சியை அணைத்துக்கொண்ட வசு “ நீங்க எங்களுக்கு அண்ணியா கிடைச்சதுக்கு கடவுளுக்கு தாங்க்ஸ் சொல்லனும் மான்சி அக்கா,, எப்படியாவது நீங்க எங்கண்ணனை எங்க வீட்டுக்கு கூட்டி வந்துடுங்க,, அப்புறமா எங்க வீட்டுல எல்லாரும் உங்களை தெய்வமா பார்ப்பாங்க” என்று வசு உணர்ச்சி வசப்பட்டு பேச,,...

சட்டென்று அவள் வாயைப்பொத்திய மான்சி “ ஏய் ச்சீ பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே வசு,, இதுல என்னோட சுயநலமும் அடங்கியிருக்கு,, அப்பா அம்மாவை ஒரே சமயத்தில் விபத்தில் இழந்த எனக்கு, எதிர்காலத்தில் எல்லா உறவுகளும் வேனும்னு நினைச்சேன்,, ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழனும்னு ஆசைப்பட்டேன்,, இத்தனை நாளா அவரை பார்க்காமலேயே மனசுக்குள்ள விரும்பின எனக்கு இவர் பணக்காரர்னு ஒரு பயம் இருந்தது,, ஆனா வேலைக்கு வந்த அன்னிக்கே அவருக்கும் என்னை பிடிக்குதுன்னு தெரிஞ்சதும் மூனு வருஷமா செடியா வளர்ந்த என் காதல் ஒரே இரவில் வளர்ந்து பெரிய மரமாயிருச்சு,, அந்த காதல் மரத்தின் வேர்கள் ரொம்ப ஆழத்தில் இறங்கி இருக்கு அனிதா,, அந்த மரத்தை யாராலும் பிடுங்க முடியாது,, ஏன் அசைச்சுக் கூட பார்க்கமுடியாது” என மான்சி தன் காதல் தந்த நம்பிக்கையில் உறுதியுடன் பேசினாள்

“ நீ பண்ணது எல்லாம் சரிதான்,, நீ அண்ணனை அவாய்ட் பண்றதுக்காக சொன்னியே ஒரு காரணம் அவரும் அதையே நம்பிட்டார்னா என்னப் பண்ணுவ மான்சி” என்று அனிதா கேட்க,,
அவளை புரியாமல் பார்த்தாள் மான்சி

“ அதான் மான்சி மூடிய ரூமுக்குள்ள இருந்தா வெளியே பார்க்கிறவங்க நம்மளை தப்பா நினைப்பாங்கன்னு சொன்னியே,, அதையே உண்மைன்னு அண்ணன் நம்பிட்டா என்ன பண்ணுவ,, அதாவது ஆபிஸ்ல இருக்கிற யாரோ தப்பா பேசினதால தான் நீ அவரை வெறுத்து ஒதுக்குறேன்னு அண்ணன் நினைச்சுட்டா என்ன பண்றது மான்சி” என்றாள் அனிதா

முகம் சற்று நிம்மதியை தாங்க “ ஸ் யப்பா நான் என்னவோ ஏதோன்னு நெனைச்சேன்,, அனிதா நான் சொல்றதை எல்லாத்தையும் நம்பும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை,, வேலைக்கு சேர்ந்து ஒருநாள்தான் ஆச்சு என்னை யாருன்னு ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்,, அப்படியிருக்க நான் யாரு,, அவரோட ரூம்ல எவ்வளவு நேரம் இருந்தேன்,, என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது,, குடும்பத்தோட ஒன்னா சேர்க்கத்தான் நான் இந்த மாதிரி பேசினேன்னு அவருக்கு நல்லாவே தெரியும் அனிதா,, ரெண்டு பேரும் ஒரு விஷயத்தில் எதிர் எதிர் விவாதிகளாக இருக்கிறோம்,, ம்ம் யார் யாரோட சேர்வாங்கன்னு பார்க்கலாமே” என மான்சி கூறினாள்


அதற்க்குள் மான்சி தங்கியிருக்கும் வீடு வந்துவிட கார் அங்கே நின்றதும் மான்சி இறங்க தயாரானாள்,, அவளுடைய கையை பற்றிய அனிதா “ ஆனாலும் இதை நீ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணியிருக்கலாமே மான்சி,, அவரை நீ சந்திச்சு ஒரு நாளில் விலகி இருக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு,, எல்லாம் எங்களாலதானே” என்று அனிதா சங்கடமாக சொல்ல,,,

தன் தோளில் இருந்த அனிதாவின் கையை ஆறுதலாக தட்டிய மான்சி “ இன்னும் ஒருநாள் தள்ளிப்போட்டுருந்தாலும் நான் அவரோட காலடியில் கிடந்திருப்பேன் அனிதா,, என்னால் அவரை விட்டு விலகி இருந்திருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி திரும்பி பார்க்காமல் மாடிப்படிகளில் ஏறி தனது அறைக்கு போனாள்

அவள் போகும்வரை பார்த்துக்கொண்டிருந்த அனிதா,, கவலையுடன் ஒரு பெருமூச்சு விட்டு “ கிளம்புங்க அண்ணே” என்றாள் டிரைவரிடம்
அறைக்குள் வந்து மாற்று உடைகள் எடுத்துக்கொண்டு பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்த மான்சி,, அங்கே ஜக்கில் இருந்த தண்ணீரை மடமடவென்று குடித்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்

அவள் மனம் முழுவதும் சத்யன் நினைவுகளை தவிர வேறு எதுவுமில்லை,, நான் வீட்டுக்குள் வரவில்லை என்றதும் வருந்தியிருப்பானா? அல்லது மனதுக்குள் கோபமாக திட்டியிருப்பானா? எது எப்படியே அவன் மனதில் சந்தோஷம் மட்டும் நிச்சயம் இருந்திருக்காது,, அவன் பிடிவாதம் தளரும் வரையில் அவனை பார்க்காமல் தன்னால் இருக்கமுடியுமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தலையனையில் சாய்ந்தாள் மான்சி

அன்று முழுவதும் நடந்ததை மனதில் அசைபோட்டவாறு கண்ணயர்ந்தவளை மொபைலின் ஒலி தட்டி எழுப்பியது,, எடுத்து யாரென்று பார்த்தாள்,, அனிதாதான் அழைத்திருந்தாள்

உடனே ஆன் செய்து “ என்ன அனிதா,, வீட்டுக்கு போயாச்சா?” என்று மான்சி கேட்க

“ நான் அனிதாவோட அம்மா பேசுறேன் மான்சி” என்று ரஞ்சனாவின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் கேட்டது

இந்த நேரத்தில் இவங்க ஏன் போன் பண்ணாங்க என்று எண்ணி குழம்பியபடி “ என்னாச்சு ஆன்ட்டி சொல்லுங்க,, அனிதா வசு வீட்டுக்கு வந்துட்டாங்க தானே” என்று மான்சி பதட்டமாக கேட்டாள்

“ அதெல்லாம் வந்துட்டாங்கம்மா, நான் உன்கூட பேசனும்னு தான் போன் பண்ணேன் ” என்று ரஞ்சனா கூறியதும்

“ சொல்லுங்க ஆன்ட்டி,, என்ன விஷயம்” என்றாள் மான்சி

“ என்னம்மா இப்படி பண்ணிட்ட,, இப்பத்தான் அனிதா சொன்னா,, எங்களுக்காக நீ சத்யாவை ஒதுக்காத மான்சி,, அவன் ரொம்ப பிடிவாதக்காரன்,, அப்புறம் எங்களுக்கு நீ சப்போர்ட் பண்றேன்னு உன்னையும் வெறுத்துட போறான்,, தயவுசெஞ்சு நீயாவது அவன்கூட சேர்ந்து இரும்மா,, அவனோட தனிமைக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்” என்று ரஞ்சனா சொல்லும்போதே குரல் கம்மி அழுகை வெடித்தது

மான்சிக்கு ரஞ்சனாவின் நிலை புரிந்து சங்கடமாக இருந்தது, “ அய்யோ ஆன்ட்டி ப்ளீஸ் அழாதீங்க,, நான் உங்களுக்காக ஒன்னும் இதெல்லாம் பண்ணலை,, எனக்கு வரும் புருஷனுக்கு அம்மா, அப்பா, தங்கைகள்னு ஒரு குடும்பம் இருக்கனும்னு நான் நெனைக்கிறேன்,, அவரோடு சேர்ந்து நானும் தனிமையோடு போராட முடியாது ஆன்ட்டி,, என் மனசு உங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன்” என்று மான்சி தெளிவாக கூறினாள்

எதிர்முனையில் சிறிதுநேர விசும்பலுக்கு பிறகு “ அதை நீ சத்யாவை கல்யாணம் பண்ண பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையா எடுத்து சொல்லி புரியவைக்கலாமே கண்ணு,, இப்பவேன்னா அவன் மனசு வெறுத்துடப் போறான் மான்சி” என்று ரஞ்சனா வருத்தத்துடன் கூற...

“ இல்லைங்க ஆன்ட்டி இப்போ என் காதலை பணையம் வைக்க என்னால் முடியும்,, திருமணத்திற்கு பிறகு என்னோட தாலியை பணையம் வைக்கமுடியாது,, நீங்க பொறுமையா இருங்க ஆன்ட்டி எல்லாம் நன்மையில் முடியும்” என்று மான்சி தன் நிலையை சொன்னாள்

“ நீ சொல்றது புரியுதுமா,, ஆனா காதலுக்கு இருக்கும் சக்தியைவிட,, கல்யாண வாழ்க்கைக்கு சக்தி அதிகம்,, சரிம்மா உன் இஷ்டப்படி செய்,, எப்படியோ எங்க பிள்ளை எங்ககிட்ட வந்துட்டா போதும்,, உன்னோட முயற்சி வெற்றியடைய அந்த ஓம்சக்தி தாயை மனசார வேண்டிக்கிறேன் மான்சி,, முடிஞ்சா நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வாம்மா,, சரி நான் வச்சிர்றேன், நேரமாகுது நீ தூங்கும்மா” என்று கூறி போன் காலை கட் செய்தாள் ரஞ்சனா

மான்சி தனது கையிலிருந்த மொபைலையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்,, அன்று முழுவதும் ஏற்பட்ட அலைச்சலும்,, மன உளைச்சலும் சேர்ந்து மான்சியை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச்சென்றது


மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விடிந்தாலும்.. மான்சிக்கு சோர்வாக இருந்தது,, இன்று சத்யனை பார்க்கமுடியாதே என்று மனம் ஏங்கியது,, ஆனால் முன் வைத்த காலை பின்வைக்கவும் மனசில்லை,, எப்படியாவது சத்யனுடன் ஜோடியாக கிருபா ரஞ்சனா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்ற ஆசை மற்ற எல்லாவற்றுக்கும் தடை விதித்தது

மான்சிக்கு ஒன்று மட்டும் இன்னும் தெளிவாகவே இல்லை,, அதாவது கிருபானந்தன் இவ்வளவு நல்லவராக இருந்தும், மனைவி உயிருடன் இருக்கும் போது ஏன் இன்னொரு பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டார்,, என்ற விஷயம் மட்டும் மான்சிக்கு இன்னும் தெரியாது,, இதை யாரிடமும் கேட்டும் தெரிந்துகொள்ள முடியாது,,

எவ்வளவோ விஷயங்களை பேசியுள்ள அனிதாகூட தனது பெற்றோரின் உறவுமுறை எப்படி ஏற்ப்பட்டது என்று மான்சியிடம் சொன்னதில்லை,, ரஞ்சனாவின் முகத்தோற்றமும்,, நடத்தையும் அவங்க தப்பானவங்க அல்ல என்று மட்டும் உணர்த்தியது

ஆனால் இந்த விஷயம் தெளிவானால் மட்டுமே சத்யனின் மனதை மாற்ற முடியும்,, அவன் மனதில் ரஞ்சனா இன்னும் ஒரு வில்லியாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறது,, அது மாறவேண்டும் என்றால், ரஞ்சனா கிருபா இவர்களுக்குள் இருக்கும் உண்மைகள் வெளிவரவேண்டும்,,

சத்யன் நினைப்பதுபோல தனது அம்மா உயிருடன் இருக்கும்போது இன்னோரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்பது உண்மையாக இருந்தால் சத்யனை யாராலும் மாற்றமுடியாது,, எனது முயற்ச்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரைப் போல் பயனில்லாமல் போய்விடும்,, என்று மான்சியின் மனது வருந்தியது

அவளுக்கும் இப்போது சந்தேகமாக இருந்தது,, ரஞ்சனாவின் கண்ணீரை வைத்து நடந்தது என்ன என்று தெரியாமலேயே இப்படியொரு முடிவெடுத்தது தவறா?,, சத்யனின் நிலையில் இருந்து பார்த்தால் அவன் செய்தது முழுக்க முழுக்க நியாயமானது,, கிருபா ரஞ்சனா இவர்களின் நடத்தைக்கு காரணம் தெரிந்தால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்

கிருபா ரஞ்சனா இவர்களின் நடவடிக்கைக்கு காரணம் வெறும் உடல் இச்சை தான் காரணம் என்றால் நானேகூட அவர்களை ஒதுக்கிவிடுவேன் என்று மான்சி மனதுக்குள் உறுதியாக எண்ணினாள்

அன்று ஆபிஸில் எந்த மாறுதலும் இல்லாமல் அமைதியாக போனது,, மான்சி சொன்ன சொல் மாறாமல் ரிப்போர்ட்டை பியூன் வசம் கொடுத்தனுப்பினாள்,, அவர்களின் நிலை கார்த்திக்கு தர்மசங்கடமாக இருந்தாலும் இருவரையும் எதுவும் கேட்க்கவில்லை,,

டிசைனிங் சம்மந்தமாக இரண்டு முறை மான்சியை பார்க்க அவள் பகுதிக்கு சென்றபோது கூட மான்சியிடம் எதுவும் கேட்கவில்லை

முதல்முறை வேலை சம்மந்தமாக மட்டுமே பேசிய மான்சி, இரண்டாவது முறை இரண்டு மூன்று கார்த்திக்கை சங்கடமாக பார்த்தாள்,,

அவள் ஏதோ சொல்ல தவிக்கிறாள் என்று புரிந்துகொண்ட கார்த்திக் “ என்ன சொல்லனும் சொல்லுங்க மான்சி” என்று ஆதரவாக கேட்டான்

அவனுடைய அன்பான பேச்சு தனது அண்ணன் ஜெகனை ஞாபகப்படுத்த,, மான்சிக்கு கண் கலங்கியது,, விழி நீரை வழியாமல் உள்ளிழுத்தபடி “ அவர் எப்படியிருக்கார் சார்,, மதியம் கேன்டீனுக்கு கூட வரலை,, என்ன சாப்பிட்டாரு?” என்று கவலை தோய்ந்த குரலில் மான்சி கேட்க

சத்யன் மீதான அவளின் அக்கறை கார்த்திக்கை நெகிழச் செய்தது,, “ பாட்டி இன்னிக்கு காலையிலே வந்துட்டாங்க மான்சி,, பாட்டி வந்ததும் சாப்பாடு வீட்டுலேர்ந்து வந்துருச்சு,, அதான் பாஸ் கேன்டீன் வரலை” என்ற தகவலை மான்சிக்கு கூறினான் கார்த்திக்




No comments:

Post a Comment