Friday, August 28, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 9

மாடிப்படியில் இருந்து அடிக்கடி கீழே வருவது கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டதாலும், சிவா தினமும் மதியம் சாப்பிட வருவதாலும் வீணாவுக்கு வசந்தி அதிக வேலை கொடுப்பது குறைந்து விட்டன.

அது மட்டும் இல்லாமல் சாந்தி அடிக்கடி வந்து வீணாவை பார்த்து விட்டு செல்வது வழக்கமானதால் எதற்கு தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டும் என்று வசந்தி சும்மா இருந்தாள்.

அடுத்த மாதம் டெலிவரி ஆதலால் டாக்டர் சொல்லியபடி வீணாவை அதிக வேலை செய்ய வேண்டாம் என்று சிவாசொல்லி விட்டான்.இருவது வயது என்பது குழந்தை பெற்று கொள்ளும் வயது அல்ல என்பதால் எச்சரிக்கையாக இருக்க சொல்லி விட்டார் அந்த பெண் டாக்டர்.

வீணாவுக்கு உதவி செய்கிறேன் என்று கோதுமை மாவுக்கு பதில் கேழ்வரகு மாவில் சப்பாத்தி செய்து அவன் அடித்த கூத்தை பார்த்து வீணாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை. இனிமே நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று சொன்னாலும் சிவா கேட்பதாக இல்லை.

காலையில் அவள் கூட எழுந்து, சில உதவி செய்து வந்தாலும், அவனுக்கு சமைத்து பழக்கம் இல்லாததால் வீணாவுக்கு அவன் நினைத்த அளவுக்கு உதவி செய்ய முடியவில்லை. 

ஒன்பதாவது மாதம் முடிந்து பத்தாவது மாதம் ஆரம்பித்து விட்டது.

டாக்டரிடம் சென்றபோது இன்னும் ஒரு வாரத்தில் டெலிவரி ஆகும் என்றும் வீணாவை அதிகம் நடக்க வைக்க வேண்டாம் என்றும் சிவாவிடம் சொல்லி விட்டார்.

இன்னும் சில நாட்களில் டெலிவரி இருப்பதால், சிவா சூப்பர் மார்கெட் போவது குறைந்து விட்டது. அத்தானிடம் சொல்லி விட்டு, மதியம் மூன்று மணிக்கு சென்று மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டான்.ஒரு நாள் வழக்கம் போல் சிவா சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற பின், வசந்தி மேலே வந்தாள்.

"வீணா, எங்க கிராமத்தில இருந்து குறி பார்க்கிற கிழவி வந்து இருக்கா. அவள் சரியா குறி சொல்லுவா. குழந்தையை பற்றி விசாரிக்கலாமா?" என்று கேட்க, முதலில் 'எதற்கு' என்று யோசித்த வீணா, பிறகு 'சரி' என்று சொல்லி விட்டாள்.'

மாடிப்படி ஏறிமேலே வந்த கிழவிக்கு எழுவது வயதுக்கு மேல் இருக்கும், தலை நரைக்க, காதில் இரண்டு தொங்கட்டானுடன், வாயில் வெற்றிலை போட்டு மென்று கொண்டு வந்தாள்.

வீணாவை பார்த்தவுடன், "இந்த பொண்ணுதான் நீ சொன்ன பொண்ணா?" என்று வசந்தியை கேட்க, 'ஆமா' என்று சொல்லி விட்டு,வசந்தி வீணாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"அம்மா வீணா, இந்த அம்மா பேரு, பொன்னம்மா. எங்க சொந்த ஊரு ஓமலூர்ல பேர் பெற்ற ஜோசியக்கார அம்மா இதுதான். இது சொன்னா சரியா நடக்கும்.கொஞ்சம் கையை காமிக்கிறியா?" என்று கேட்க, 

சந்தோசமாக வீணா தன் இடது கையை காண்பிக்க கிழவி தன் கையில் இருந்த வெள்ளி கவசமிட்ட அந்த சிறிய கம்பை எடுத்து கையில் வைத்து ரேகைகளை உற்று பார்க்க ஆரம்பித்தாள்.

பிறகு, கண்களை மூடி யோசித்து, "அம்மா கருமாரி, மகமாயி தாயே, என் வாக்கில வந்து சொல்லம்மா" என்று கையை உயர்த்தி கூப்பியபடி, சோழிகளை எடுத்து தரையில் உருட்டினாள்.

வீணா அவள் செய்வதையே கண்ணிசைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

வசந்தி கிழவியை பார்த்து கண்ணசைத்தபடி "பொன்னம்மா என்னன்னு சொல்லு" என்று கேட்க, 

"எல்லாம் நல்லபடியாதான் சொல்லுது. இந்த அழகான பொண்ணு வயித்தில ஒரு மகா லட்சுமி வந்து பிறக்க போறா. அவள் வர்ற நேரம் இந்த வீட்டில, செல்வம் கொட்ட போகுது"என்று சொல்லியபடி, "ஆனால் ஒரே ஒரு பிரச்சனை இருக்கு" என்று ஆரம்பிக்க,

சந்தோசமாக கேட்டு கொண்டு இருந்த வீணா முகம் இருண்டது.

அவள் முகத்தை கவனித்த வசந்தி, "என்ன பொன்னம்மா இழுக்கிற"என்று கேட்க

"ஒண்ணும் இல்லை தாயி,அந்த குழந்தை பிறக்கிற நேரத்தில அதோட தகப்பனுக்கு கண்டம் இருக்கு.""என்ன கண்டமா?" என்று வசந்தி அவசரமாக கேட்க, வீணா அதிர்ச்சியில் வாயடைத்து போனாள்.

"என்ன பொன்னம்மா, என் தம்பிக்கு ஆபத்தா?"'இந்த ஊமை கோட்டான் வந்த நேரம் சரி இல்லை. அது வயித்தில குழந்தை வந்த நேரமும் சரி இல்லை' என்று முனக, வீணா கண்களில் கண்ணீர் தளும்பியது.

"பொன்னம்மா, ஏதும் பரிகாரம் இல்லையா?" என்று வசந்தி கேட்க, "இரு தாயி நான் யோசிச்சு சொல்லுறேன்" என்றாள்.

அவள் யோசிக்கும் அந்த சில நிமிடங்கள் பதட்டங்கள் தர வீணா அவளை கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்து கொண்டு இருந்தாள்.

'தெய்வமே, என்னோட புருஷன் தான் எனக்கு எல்லாம்.அவருக்கு ஒண்ணும் ஆக கூடாது.காப்பாத்து' என்று கண்களை மூடிக்கொண்டு வேண்டி கொள்ள ஆரம்பித்தாள்.

"ஒரே ஒரு பரிகாரம் இருக்கு, கோட்டை பெரியமாரியம்மன் கோவிலுக்கு நடந்து போய் மாவிளக்கு போட்டு வந்தா, அந்த அம்மாவோட கருணை உங்க தம்பியோட உயிரை காப்பாத்தும். இதை அவரோட மனைவி தான் செய்யனும். அப்போதான் கர்ப்பிணி பெண்ணை பார்த்து, அம்மனோட மனம் இறங்கும்" என்று சொல்ல, வசந்தி கடும் கோபம் ஆனாள். 

"நீ என்ன லூசா.இவளுக்கு எப்போ வேணும்னாலும் டெலிவரி ஆகும்னு இருக்கு. அது மட்டும் இல்லை, என் தம்பிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா கொன்னே போட்டுடுவான். நீ முதல்ல கிளம்பு" என்று அவளை கிளப்பி கீழே சென்று விட்டாள்.

வீணாவுக்கு அழுது அழுது கண்கள் சிவந்து போக, மாலை ஏழு மணி போல் வீட்டு வந்த சிவா, வீட்டில் வெளிச்சம் இல்லாததால்,லைட்டை போட்டு விட்டு வீணாவை தேட, அங்கே கட்டிலில் சுருண்டு படுத்து கிடந்த வீணாவை பார்த்து அரண்டு போனான்.

"வீணா என்னம்மா ஆச்சு?"என்று கேட்டபடி அவளை பிடித்து உலுக்க, கண்ணயர்ந்து கிடந்த வீணா கண்களை விழித்து சிவாவை பார்த்தவுடன் 'ஓ' என்று அவன் மார்பில் சாய்ந்து அழ தொடங்கினாள்.

பதைத்து போன, சிவா, "வீணா என்ன ஆச்சு, ஏன் உன் கண் சிவந்து போய் இருக்கு, முகமும் வாடி இருக்கு" என்று அவளை அணைத்து கொண்டே கேட்க, வீணாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.


'இன்று நடந்த விஷயத்தை சொன்னால் கட்டாயம் திட்டுவான். அது மட்டும் இல்லை, எந்த சாமி உன்னை கோவிலுக்கு நடந்து வர சொன்னது' என்று கிண்டல் செய்ய தொடங்கி விடுவான், அதனால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

கண்களை துடைத்தபடி"ஒண்ணும் இல்லை, எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்து விட்டது" என்று சொல்ல, கண் கலங்கினான் சிவா. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

கட்டிலில் ஓரத்தில் அமர்ந்து இருந்த சிவா அவள் அருகில் நெருங்கி வந்து அணைத்து கொண்டு"வீணா அம்மாவுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. அதை நினைத்து வருத்தபடாதே".

"இங்கே பாரு", அவள் முகத்தை அவனிடம் திருப்பி, "நீ எனக்கு அம்மா, நாம் உனக்கு அம்மா" என்று அவள் கண்களை துடைத்தபடி சொல்ல, அவன் முகத்தை ஏக்கமாக பார்த்தபடி அவன் உதட்டில் முத்தம் கொடுத்து, இறுக்க அணைத்து கொள்ள, சிவா சிரித்து கொண்டே, வீணா பார்த்து, "பார்த்து, வயித்தில இருக்கிற என் பொண்ணுக்கு வலிக்க போகுது" என்று கிண்டல் செய்தான்.

"ஏன் பொண்ணாதான் இருக்கணுமா. ஏன் பையன் பிறந்தா கசக்குமா?" என்று வீணா கேட்க, 

சிரித்து கொண்டே, "எனக்கு என்னமோ பொண்ணாதான் இருக்கும்னு தோணுது,"

அவன் மடியில் தலை வைத்து படுத்து கொண்டே'என்ன இவரும் பொண்ணாதான் இருக்கும்னு சொல்றாரு. ஒரு வேளைஅந்த கிழவி சொன்னது, உண்மைலே நடக்குமோ?"என்று கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் மதியம் சிவா கடைக்கு சென்ற பின் வசந்தி மேலே வந்து"வீணா நீ அந்த கிழவி சொன்னதை எல்லாம் மறந்துடு அது ஏதோ உளறிட்டு போயிடுச்சுன்னு வச்சுக்கோ. உன் புருஷன் கிட்ட சொல்லி வைக்காதே. என்னை கன்னா பின்னான்னு திட்டுவான்.அப்ப நான் வரட்டா" என்று கேட்க, வாணி 'இல்லை' என்று தலை அசைத்து, "நான் கட்டாயம் நடந்து போறேன்" என்று சொல்ல,வசந்தி பதறி போனது போல் நடித்தாள். 

"வேணாம் வீணா, உன் புருஷனுக்கு தெரிஞ்சா பிரச்சனை.""இல்லை, நான் அவருக்கு சொல்ல போறது இல்லை. நான் கோவிலுக்கு போறேன். நீங்களும் என் கூட வர முடியுமா.?"

"என்னால முடியாது. நீ வேணாம் ப்ரியாவை கூட்டி போயிட்டு வா" என்று சொல்ல 'சரி' என்று தலை அசைத்தாள்.

பேர் லாண்ட்ஸில் இருந்து கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் நாலு கிலோ மீட்டர் தூரம் எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகி விடும் என்று கணக்கு போட்ட வீணா, ப்ரியாவுக்காக காத்து இருக்க ஆரம்பித்தாள்.ஸ்கூலில் இருந்து நாலு மணி அளவில்ப்ரியா வர,வசந்தி அழைத்து விஷயத்தை சொல்லப்ரியா வருத்தத்தோடு கேட்டாள். 

"அம்மா அக்கா கோவிலுக்கு போறதுன்னா மாமாவை வர சொல்லட்டுமா" என்று கேட்க "இல்லைடி ஏதோ வேண்டுதல்னு சொன்னா.நான் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நிறைவேத்த கூடாதான்னு கேட்டேன். பிடிவாதமா இருக்கா. தெய்வ குத்தம் ஆயடும்னு நினைக்கிறா. கொஞ்சம் மெதுவா நடக்க வச்சு கூட்டி போயிட்டு வா." சொல்ல, ப்ரியா குழப்பமாக தலை அசைத்தாள்.

வீணா, தளிர் நடையுடன் மெதுவாக நடந்து சொல்ல, ஒரு கிலோ மீட்டர் கடக்க ஒரு மணி நேரம் ஆனது. மணி ஐந்து ஆகி விட்டதால், 'இன்னும் மூன்று கிலோ மீட்டர் போக வேண்டுமே, சிவா வீட்டுக்கு வருவதற்குள் வந்து விட வேண்டுமே' என்று பதட்டத்தோடு நடக்க அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டாவது கிலோ மீட்டர் தாண்டி விட்டாள். அதே வேகத்துடன் நடந்த வீணாவுக்கு அவள் உடல் ஒத்துழைக்கவில்லை.


கால் வலியோடு வயிற்று வலியும் சேர்ந்து கொள்ள, அதற்குள் மேல் நடக்க முடியாமல் தலை சுற்ற தடுமாறி அருகில் இருந்த மின் விளக்கு கம்பத்தை பிடித்து கொள்ள, ப்ரியா பதறி போனாள். 

பொறுக்க முடியாத வலியால் வீணா கண்ணீர் விட கலங்கி போன ப்ரியா வசந்திக்கு போன் போட்டு, "அம்மா அக்காவுக்கு முடியலை,எனக்கு பயமா இருக்கு. உடனே வரியா" என்று கேட்க, நான் "சொன்னா எங்கே கேக்குறா இந்த பொண்ணு" என்று புலம்பியபடி," இதோ கிளம்பி வரேன்" என்று சொல்லிஆட்டோவில் வர அதற்குள் வீணா வலியால் துடிக்க ஆரம்பித்தாள். 

வசந்தி வந்த ஆட்டோவிலே ஏறி மூவரும் ஹாஸ்பிடல் வந்து அவளை அட்மிட் செய்தாள் வசந்தி. அதற்குள் சிவாவுக்கு போன் செய்த ப்ரியா, வயிற்று வலி அதிகமாக இருந்ததால் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டதாக' தெரிவிக்க, அடுத்த பத்து நிமிடத்தில் பதட்டத்தோடு சிவா வந்து சேர்ந்தான்.

"என்ன ப்ரியா, என்ன அக்கா என்ன ஆச்சு""உன் பொண்டாட்டி என் பேச்சை என்னைக்கு கேட்டு இருக்கா, நீயே போய் பாரு" என்று சொல்ல,புரியாமல் அவசரமாக உள்ளே செல்ல,எதிரில் வந்த டாக்டர் "என்ன சார், நீங்க படிச்சவர் தானே.உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?" என்று திட்ட ஆரம்பிக்க என்ன சொல்வது என்று தெரியாமல் சிவா விழித்தான்.

"யார் சொன்ன பேச்சையும் கேட்காம உங்க மனைவி மூணு கிலோ மீட்டர் நடந்து இருக்காங்க.

அதனால இப்போ வலி அதிகமாகி ஐசியூல இருக்காங்க. போய் பாருங்க" என்று சொல்ல, அடுத்த நிமிடத்தில் புயல் வேகத்தில் சென்றடைந்தான்.

வீணாவுக்கு முகத்தில் பொருத்தி இருந்த ஆக்சிஜன்மாஸ்க் கண்டு கண் கலங்கி அவள் அருகில் நெருங்கி, "என்ன வீணா. ஏம்மா இப்படி பண்ணுனே" என்று கேட்க, வீணா பதில் சொல்லாமல் கண் கலங்கினாள்."சரி,ஒண்ணும் மனசை போட்டு அலட்டிக்காத. நான் இங்கயே வெயிட் பண்ணுறேன். கவலைபடாதே" என்று சொல்ல, வீணா மெளனமாக தலை அசைத்தாள்.

அதற்குள் டாக்டர் அழைப்பதாக சிவாவை நர்ஸ் அழைத்தாள்."சிவா, ரெண்டு நாளைக்கு முன்னாலே சரியான நிலைல இருந்த குழந்தை இப்போ மாறி போய் இருக்கு. உடனே ஆபரசன் செஞ்சு ஆகணும். இல்லைனா குழந்தை உயிருக்கு ஆபத்து" என்று சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைய ஆரம்பித்தான். 

அதற்குள் விஷயம் தெரிந்து ஹாஸ்பிடல் வந்த அவன் அத்தான் "சிவா, கவலை படாதே. உன் பொண்டாட்டியோட நல்ல மனசுக்கு,ஒண்ணும் ஆகாது. ஆண்டவன் ரெண்டு உயிரையும் காப்பாத்துவான். தைர்யமா இரு" என்று அவன் தோளை தொட்டு ஆறுதல் சொல்ல,அவரின் இரு கைகளையும் பிடித்து கண்ணீர் விட ஆரம்பித்தான் சிவா.

"அத்தான் இவளுக்கு மட்டும் ஏன் அத்தான் இப்படி ஆகுது. சின்ன வயசில இருந்து எவ்வளவு கஷ்டபட்டு இருக்கா, எவ்வளவு ஏச்சை கேட்டு இருப்பா. அவளை இந்த நிலைல பார்க்க, எனக்கு பயமா இருக்கு அத்தான்" என்று கதறினான்.

அவனிடம் கையெழுத்து வாங்கி விட்டு டாக்டர் நகர, பிரசவ வார்டுக்கு வெளியே இருவரும் காத்து இருந்தனர். 

வசந்தி, ப்ரியாவை அழைத்து "அங்கே தாத்தா தனியா இருப்பார். நீ வீட்டுக்கு போ" என்று அனுப்பி விட்டு, சிவா அருகில் நின்று பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.

சுவற்றில் இருந்த காலெண்டர் நவம்பர் ஒன்றாம் தேதியை காண்பித்தது.


இரண்டு மணி நேரம் கழித்து வந்த டாக்டர், "கொஞ்சம் காம்ப்ளிகேடட் கேஸ் ஆக இருக்கு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லி விட, கடிகாரத்தில் மணி இரவு பத்து.
பதினோரு மணி அளவில் உள்ளே குழந்தை அழும சத்தம் கேட்க, வசந்தி, கோவர்த்தன் முகம் மலர, சிவா முகத்தில் புன்னகை இல்லை.

'வீணாவுக்கு ஏன்ன ஆயிற்றோ' என்று பதட்டத்துடன் இருக்க, கதவை திறந்த அந்த குழந்தை மருத்துவர், "சார் இங்கே வாங்க" என்று அழைக்க, சிவா, கோவர்த்தன், வசந்தி அருகில் செல்ல, "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு" என்று சொல்லி விட்டு,குழந்தையை சிவாவிடம் கொடுக்க, அந்த பெண் குழந்தையை கையில் வாங்கி விட்டு "வீணாவுக்கு என்ன ஆச்சு" என்று கேட்க, அதற்குள் டாக்டர் திரும்ப உள்ளே சென்று விட்டார்.

கையில் இருந்த மகளை பார்த்த சிவா அசந்து போனான். அப்படியே வீணாவை உரித்து வைத்தது போல் இருந்த அந்த குழந்தை வீரிட்டு அழ, வசந்தி குழந்தையை வாங்கி கொண்டு, "இவ அம்மா பேச முடியாததுக்கு இவ கத்தியே சரி பண்ணிடுவான்னு நினைக்கிறேன்"என்று கிண்டல் செய்தபடி. "வாடி என் மருமகளே" என்று கொஞ்ச தொடங்கினாள்.

நிமிடங்கள் யுகங்களாக கழிய, சிவா தவிப்போடு காத்து கொண்டு இருந்தான். கதவு திறந்து டாக்டர் வந்து அவனை அழைக்க, ஓடி அருகில் சென்றான்."சிவா, உங்க மனைவிக்கு இப்போ பரவாயில்லை. ஆனால் இன்னும் முழுக்க மயக்கம் தெளியலை. நீங்க அவங்களை போய் ஒரு தடவை பார்த்து விட்டு வரலாம். நாளைக்கு காலைல அவங்களை தனி ரூமுக்கு மாத்தி விடுவோம்" என்று சொல்ல, "நன்றி டாக்டர்" என்று நாதழுதழுக்கசொல்லி, உள்ளே வேகமாக விரைந்து சென்றான்.

அங்கே பெட்டில் வாடி இருந்த வீணாவை பார்த்து கலங்கி போன சிவா அவள் முகத்தை பார்த்து ஆறுதல் அடைந்தான். இன்னும் வீணா கண் திறக்காததால் வேறு வழி இல்லாமல் திரும்பி வந்த சிவாவை பார்த்து வசந்தி "என்னடா டாக்டர் என்ன சொன்னார்" என்று கேட்க,"ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்க அக்கா. ஆனால் நாளைக்கி காலைல தனி ரூமுக்கு மாத்துவேன்னு சொல்லி இருக்காங்க."

"அப்படின்னா ஒண்ணும் பிரச்சனை இல்லைடா."

"டேய் சிவா, பாருடா என் மருமகளை. என்ன பார்த்து சிரிக்கிறா" என்று பெருமையோடு சொல்ல, அப்போதுதான் தன் மகளை சரியாக கவனித்தான். அந்த இளம் தளிரின்பொக்கை வாய் சிரிப்பில் மயங்கி போனான்.

சிவா அங்கேயே தங்கி இருக்க, வசந்தி, கோவர்த்தன் இருவரும் வீட்டுக்கு போய் விட்டு காலை வருவதாக சென்று விட்டனர்.

அதற்குள் சிவா தன் மாமனாருக்கு போன் செய்து தெரிவிக்க அவரும் சந்தோசத்துடன் வந்து தன் பேத்தியை பார்த்து விட்டு ஆச்சர்யப்பட்டார். "ஒன்னை கவனிச்சிங்களா மாப்பிளை. என் பேத்தி அப்படியே என் பொண்ணு மாதிரியே இருக்கா. உங்களுக்கு ரெட்டை அதிஷ்டம் தான்" சொல்லி விட்டு "வீணா கண் முழிச்ச உடனே சொல்லி அனுப்புங்க. நான் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

தொட்டிலில் விட்ட குழந்தையை அவ்வப்போது நர்ஸ் வந்து பார்த்து விட்டு சொல்ல, கொஞ்ச நேரம் சிவா கண்ணயர்ந்தான்.

காலை ஐந்து மணி அளவில் வசந்தி வந்து, "சிவா அப்பாகிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோசம் ஆய்ட்டார். நம்ம அம்மாதான் பிறந்து இருக்காங்கன்னு புலம்புறார். சீக்கிரம் பேத்தியை பார்க்கணுமாம்" என்று சொல்லி விட்டு, "பாவம் அவரால வர முடியலை" என்று வருத்தத்தோடு கூறினாள்.


காலை எட்டு மணி அளவில் வீணா தனி அறைக்கு மாற்றப்பட, சிவா அவள் அருகில் நின்று அவள் முகத்தையே கண் கலங்கபார்த்து கொண்டு இருந்தான்.ஒன்பது மணி அளவில் வீணா கண்ணை திறக்க, சிவாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. 

அவளின் இரண்டு கன்னங்களையும் தன் இரு கைகளால் தாங்கியபடி, "என்ன கண்ணா என்ன ஆச்சு, எதுக்கு நீ நடந்த" ஒண்ணும் சொல்லாமல் புன்னகைத்தபடி கையை நீட்ட, புரிந்து கொண்ட சிவா, வசந்தி கையில் இருந்த மகளை வாங்கி அணைத்தபடி அவளிடம் காண்பித்தான்.

"இப்போ பாத்தியா. நான் சொன்னது மாதிரி நமக்கு பெண்தான் பிறந்து இருக்கு" என்று சிவா சிரிக்க, அவள் அவனை கீழே குனிய சொன்னாள். 

அவன் பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து, குழந்தைக்கு சிவா அம்மா பெயரை தான் வைக்க வேண்டும் என்று எழுதி காண்பிக்க,முகம் மலர்ந்து போனான்.

அம்மா பெயரில் இருந்த லட்ச்மியை எடுத்து இணைத்து சில பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி காண்பிக்க, அதில் அவள் தேர்ந்தெடுத்த பெயர் லக்ஷ்மி பிரபா.அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக நகர, டாக்டர் "நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம்" என்று சொன்னார்.

அன்றைய நாள்இரவு வாணி உடல் நிலையில் மாற்றம். அவளுக்கு ஜன்னி கண்டது போல் பிதற்ற ஆரம்பிக்க, சிவா நடுங்கி போனான்.வீட்டுக்கு போன டாக்டர் ருக்கு போன் போட்டு விஷயத்தை தெரிவிக்கஅவர் உடனே கிளம்பி வந்து வீணாவை திரும்ப ஐசியூ எடுத்து சென்றனர். 

சிவாவுக்கு பயம் அதிகமானது. இரவு ஒரு மணி ஆக, ஐசியூ-வில் இருந்துவெளியே வந்த டாக்டர் "சாரி சிவா, ஜன்னி அதிகமாகி உங்க மனைவி நினைவு தப்பிட்டாங்க. அவங்க இனிமே பிழைக்க வாய்ப்பு இல்லை. நீங்க வேணாம் அவங்களை ஒரு தடவை போய் பார்த்து விட்டு வாங்க" என்று சொல்ல, சிவா பைத்தியம் பிடித்தது போல் உள்ளே ஓடினான்.

வீணாவை பார்த்தவுடன் 'ஓ' என்று அழ, வீணா பரிதாபமாக சிரித்தாள். அந்த ஜீவனின் உடலில் இருந்த கொஞ்ச நஞ்ச உயிரும் சிவாக்காக காத்து கொண்டு இருந்தது. 

அவள் கன்னங்களை தன் இரு கைகளால் பிடித்து கொண்டு சிவா கதறி அழ வீணா கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. அவனை அழைத்து உதடு அசைக்க, அவள் சொல்வது புரிந்தது.

"சிவா, நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்க. உங்களுக்கு ஒரு மனைவி, நம்ம பொண்ணுக்கு ஒரு நல்ல அம்மா வேணும். இது என்னோட கடைசி ஆசை, கட்டாயம் நிறைவேத்தனும்.உங்க கோபத்தை மட்டும் குறைச்சுகங்க"

அதற்க்கு மேல் அவள் பேச முடியாமல் மூச்சு இழுக்க டாக்டர் டாக்டர் என்று சிவா பதட்டத்தோடு அழைக்கசடக்கென்று தலை வெட்டி கொள்ள, இரண்டு கைகளும் கீழே விழ, அவள் கண்கள் மேல் நோக்கி நிலைத்து நின்றது.

"வீணா, வீணா"என்று அவள் கன்னங்களை தட்ட பதில் இல்லாமல் போனது. டாக்டர் நாடி துடிப்பை சோதித்து விட்டு வேதனையோடு தலை அசைக்கஉண்மை அவனுக்கு உறைத்தது. 

"வீணா நம்ம குழந்தைய சரியா பார்க்காம கூட போயிட்டியேடா. நீ இல்லாம நாம் எப்படிடா இருப்பேன்" என்று கதற, டாக்டர், "சிவா உங்களை கட்டுபடுதிக்கங்க. நாங்க முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினோம். ஆனா..." என்று கை விரிக்க, தனது அழுகையை அடக்கியபடி வெளியே ஓடி வந்தான். 

கையில் குழந்தையை வாங்கி கொண்டு திரும்ப உள்ளே சென்று, "வீணா நம்ம குழந்தைய பாருடா. இவளை இப்படி விட்டுட்டு போக எப்படிடா மனசு வந்தது"
பின்னாலே ஓடி வந்த வசந்தி நடந்ததை புரிந்து கொண்டு, அவன் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தாள்.



குழந்தையை அவனிடம் இருந்து பிடுங்கி, கோவர்தனிடம் "முதலில் இவனை கவனிங்க, வீணா போய்ட்ட அதிர்ச்சில பைத்தியம் மாதிரி புலம்பிகிட்டு இருக்கான்" என்று சொல்ல, கோவர்த்தன் அதிர்ச்சில் உறைந்து போனார்.

சுதாரித்து கொண்டு சிவாவை அழைத்து வெளியே போக, புலம்பி கொண்டே வந்தான் சிவா.

அதற்குள் வீணாவை பார்த்து விட்டு போகலாம் என்று வந்த அவன் மாமனார் சதாசிவம் நடந்ததை அறிந்து அழ ஆரம்பித்தார். 

தனியே உட்கார்ந்து புலம்பி கொண்டு இருந்த சிவாவை பார்த்து, "என்ன மாப்பிளை வீணா உங்களையும், குழந்தையையும் தனியா தவிக்க விட்டு போயிட்டாளே."

அவர் பேசுவது புரியாமல் மாமா "அவள் எங்கயும் போகலை. நம்மளோட தான் இருக்கா. நான் அவளை சாக விட மாட்டேன்" என்று முகத்தை இறுக்கமாக வைத்து கொள்ள, சதாசிவம் "மாப்பிளைக்கு மூளை கலங்கி விட்டதோ" என்று சிந்திக்கதொடங்கினார்.

சிவா "என்ன மாமா மூளை குழம்பிடுச்சோன்னு பார்க்கிறீங்களா. இல்லை மாமா, நான் நல்லாதான் இருக்கேன். அவ தான் என்னை பிடிக்கலைன்னு போய்ட்டா. சொல்லுங்க மாமா இருவது வயசு சாகிற வயசா. அவளுக்கு என்னன்னவோ ஆசைகள் இருந்துருக்கும் அது எல்லாம் நிறைவேறாம போச்சே" திரும்ப அழ ஆரம்பித்த சிவாவை சமாதானபடுத்த முடியாமல் திணறினார்.

மகளை இழந்த அவர் மனைவியை இழந்த தன் மருமகனுக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார்.

வீட்டுக்கு வந்த சிவா அப்பாவின் அருகில் சென்று உட்கார அவரோ அவனை திட்ட ஆரம்பித்தார். 

"உன் மேல அளவுக்கு அதிகமா அன்பு வச்சு இருந்த பொண்டாட்டியை கொன்னுட்ட பாவி நீ.அவளை உன் அக்கா எத்தனை கேவலமா பேசி இருப்பா தெரியுமா? ஒரு தடவை கூட வீணா அதை பத்தி உன் கிட்ட பேசி இருப்பாளா?. நான் பேசுறேன்னு சொன்னப்ப கூட என்னை பேச விடலை. குடும்பம்னா இதல்லாம் சகஜம் மாமான்னு சொல்லி என் வாயை அடைச்சுட்டா.அவ கூட பத்துநீ மாசம்குடும்பம் நடத்தினாலும் நீ அவளை சரியா புரிஞ்சுக்களைடா. அவளை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் பொண்டாட்டியா வர மாட்டா. போடா போ, உன் அக்காவை கட்டிக்கிட்டு அழு. இன்னும் எத்தனை நாள் தான் அவளை நம்பி ஏமாற போறியோ."

குழந்தையை ப்ரியா பார்த்து கொண்டாலும், சிவாவுக்கு மனநிம்மதி இல்லை. தினம் இரவு தனது படுக்கையில் இருந்த தலையணையை கட்டி கொண்டு 'வீணா வீணா' என்று அழுவான். உடல் களைத்து எப்போது உறங்குவான் என்று அவனுக்கு தெரியாது.

திடீரென்று விழித்து குழந்தையை தூக்கி கொண்டு கொஞ்சுவான். 

வேலைக்காவது வா மாப்ளை என்று சொன்ன கோவர்தன் சொன்னதற்கு தலை ஆட்டுவான். பிறகு மறந்து போவான்.நண்பர்கள் சந்தோஷ், தீபக் அவனுக்காக மாறி மாறி கூட இருந்து ஆறுதல்சொன்னார்கள்.

காலேஜ் டூர் சென்று திரும்பி வந்த சாந்தி தனது தோழியின் மறைவுக்கு கதறி அழுதாள். "

அண்ணா எப்போ பார்த்தாலும் உங்களை பத்தியே பேசிகிட்டு, நினைச்சு கிட்டு இருப்பா. வசந்தி அக்கா பத்தி இது வரைக்கும் ஒரு வார்த்தை தப்பா சொன்னது இல்லை. அவள் அளவுக்கு மீறி நல்லவளா இருந்துட்டா."

ஏற்கனவே டயாலிசிஸ் செய்வதானால் உடல் பலகீனம் அடைந்த அவன் அப்பா உடல் அடுத்த சில நாட்களில் மோசமானது.

வீணா இறந்த இருவதாவது நாளில், சிவா தனது தந்தையை பறி கொடுத்தான்.

டயாலிசிஸ் செய்து சில நாட்கள் உயிர் வாழ வேண்டிய அவன் அப்பா கந்தசாமி, மனமொடிந்து சீக்கிரம் உடல் நலம் குன்றி உயிர் விட்டார். 

சாகும் நேரத்திலும் "நீ தப்பு பண்ணிட்ட சிவா. தனி குடித்தனம் போய் இருக்கணும்" என்று மருகி கொண்டே இருந்தார். 

சிவாவுக்கு அப்பாவின் பாசம் புரிந்தாலும் அக்காவை எதற்காக சொல்கிறார் என்று சரியாக புரியவில்லை.


தன் மீது அன்பு வைத்து இருந்த அந்த இரண்டு ஜீவன்களும் போன பின்பு சிவாவுக்கு தன் குழந்தை லட்சுமி பிரபாவே வாழ்க்கை ஆனது.

ஒரு நாள் வீணாவின் துணி பெட்டியை எடுக்க, உள்ளே இருந்த 2006 டைரி அவன் கண்ணில் பட்டது.

கண்கள் கலங்க அதை புரட்டியவன் முதல் பக்கத்தில் இருந்த அவர்களது கல்யாண போட்டோவை கண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 

ஒவ்வொரு பக்கமாக புரட்ட அவள் அவன் மீது வைத்து இருந்த அளவுக்கு அதிகமான அன்பு அவனுக்கு புரிந்தது.'கணவன், காதலன்,தோழன, அம்மா இவை அனைத்தும் கலந்த கலவை தான் என் சிவா' என்று திருமண தினத்தன்று எழுதி இருக்க, மனம் சிலிர்த்து போனான்.

அக்கா அவளை பற்றி சொன்னது, அதை அவன் தந்தை கந்தசாமி கேட்டது, ப்ரியா சிவாவிடம் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுவது என்று பல விஷயங்கள் பதுங்கி இருக்க அவனுக்கு அவன் அக்காவை பற்றி மெல்ல மெல்ல புரிபட்டது.

அவள் இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு பொன்னம்மாள் வந்தது பற்றி அவள் எழுதி இருக்க, முகம் கோபத்தால் சிவந்தது.

'எப்படி ஏமாத்தி இருக்கா இந்த கிழவி'படித்து விட்டு தன் பைக்கை எடுத்து கொண்டு ஓமலூரில் இருந்த பொன்னம்மாவை பார்க்க சென்றான்.

அவள் வீட்டுக்குள்ளே நுழைந்து கிழவியை கண்டபடி திட்டி, "கெழவி உனக்கு சரியா ஜோசியம் சொல்ல தெரியாது. நீ எதுக்கு வீணாகிட்டஎனக்கு தோஷம இருக்கு. கோவிலுக்கு நடந்து போகனும்னு சொன்ன" என்று அடிக்க போக, அவள் கணவர் வந்து தடுத்தார்.

"தம்பி கோவப்படாதிங்க. அவ சொன்னது தப்புதான். ஆனால் அவளை அப்படி சொல்ல சொல்லி ஐயாயிரம் ருபாய் பணம் கொடுத்தது யாரு? உன்னோட அக்கா தான்."

தலை சுழன்றது போல் உணர்வு. அக்கா பணத்தாசை பிடித்தவள் தான். அதற்காக தம்பி மனைவியை இப்படி திட்டம் போட்டு கழுத்தருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை.

உள்ளம கொதிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே இருந்து வெளியே வந்து பைக்கை தள்ளி கொண்டு நடந்தான்.

நீண்ட யோசனைக்கு பின் வக்கீல் உலகநாதனை கூப்பிட்டான். "அங்கிள் நீங்க கொஞ்சம் ப்ரீயா இருந்தா வீட்டுக்கு ஒரு அரை மணி நேரத்தில வர முடியுமா?" என்று சொல்லி விட்டு மேலும் சில விஷயங்களை பேசினான்.

ஏற்கனவே அக்கா செய்த காரியங்களை நினைத்தபடி மனம் நொந்து, பைக்கை எடுத்து கொண்டு, தொடர்ந்து போனில் சந்தோஷ் உடன் பேசி கொண்டே அடுத்த இருவதாவது நிமிடத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வண்டியை வாசலில் நிறுத்தி விட்டு, வேகமாக உள்ளே நுழைந்த சிவா, "அக்கா அக்கா நீ எங்க இருக்க" என்று கத்தியபடி சமையல் அறையில் நுழைய, ப்ரியா மட்டும் குழந்தையுடன் இருந்தாள். 

"அம்மா எங்கே" என்று கேட்க, "பக்கத்துக்கு வீட்டுக்கு போய் இருக்காங்க."

"சீக்கிரம் கூட்டி வா" என்று கத்த, பயத்துடன் ப்ரியா குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு ஓடி சென்றாள்.

அவன் போட்ட சத்தத்தை கேட்டு தனது அறையில் இருந்து வெளி வந்த கோவர்த்தன் "என்ன மாப்ளை என்ன ப்ரோப்லம்" என்று கேட்க,"இருங்க அத்தான். முதல்ல அக்கா வரட்டும். அவள் நாக்கை புடுங்கிற மாதிரி சில கேள்வி கேட்கணும்".


உள்ளே பதட்டத்துடன் வந்தவசந்தி வந்து "என்ன சிவா" என்று கேட்க, 

"நீயெல்லாம் ஒரு அக்காவா, ஏன் இப்படி கொலை வெறி பிடிச்சு அலையற."

"என்ன சிவா, இப்படி அசிங்கமா பேசுற."

குழந்தையை ப்ரியாவிடம் கொடுத்து விட்டு, "இதை விட அசிங்கமா பேசி இருக்கணும். அக்காவா போய்ட்டன்னு பாக்கிறேன்."

"என்ன சிவா" என்று கோவர்த்தன் கேட்க, சிவா நடந்ததை விவரித்தான். 

"அத்தான் இப்போ சொல்லுங்க இப்படி பணத்து ஆசை பிடிச்சு அலையற அக்கா எனக்கு தேவையா."

"அக்கா உனக்கு பணம்தானே வேணும்.5 நிமிஷம் பொறு."

அதே நேரத்தில் வக்கீல் வர" வாங்க சார் நான் சொன்ன மாதிரி எழுதிட்டிங்களா."

"எழுதிட்டேன் தம்பி. இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க"
"இல்லை அங்கிள், இனிமே யோசிக்கிறதா இல்லை."

அவர் கொடுத்த பத்திரத்தில் இருந்த அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து போட்டு, "அக்கா இந்தா" என்று அவள் முகத்தில் தூக்கி எறிந்தான்.

"அப்பா, என் பேர்ல எழுதி வச்ச பாதி சொத்து. இதை எடுத்துக்க. இதுக்காத தானே என் மனைவி வீணா வை கொன்ன."

""எடுத்துக்கோ, என் வீணாவை திருப்பி கொடு."

வசந்தி முகம் இருண்டு போனது. "என்ன தம்பி சொல்லுற."

"புரியாத மாதிரி நடிக்காதே. நீ பிளான் பண்ணி அவளை செண்டிமெண்ட்டால அட்டாக் பண்ணி அவளை சாக வச்சிட்ட. நீ பண்ணினது கொலை இல்லையா. இனிமே என்னை தம்பின்னு கூப்பிட்டதே. உனக்கும் எனக்கும் இருந்த ஒரே சொந்தமும் இப்போ அறுபட்டு போச்சு."

"அத்தான், நீங்க கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துக்கங்க. உங்க பொண்டாட்டி பணத்தாசைல என்ன பன்னுரோம்னு தெரியாம உங்க தலைல கல்லை போட்டு கொன்னாலும் கொன்னுடுவாங்க".
கடகடவென்று மாடிப்படியில் ஏறி, வீணாவின் உடமைகள், தனது உடமைகள், எடுத்து கொண்டு கீழே வந்து ப்ரியாவிடம் குழந்தையை பிடுங்கி கொண்டான்.

வெளியே வந்த சிவாவின் பின்னாலே கோவர்த்தன் வந்து "என்ன சிவா இப்படி அவசரபடுற" என்று கேட்க, "அத்தான் உங்களுக்கு அக்கா வேணும், ஆனா எனக்கு பணத்தாசை பிடித்த அக்கா தேவை இல்லை. என்னை தப்பா நினைசுக்காதிங்க". 

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி விட்டு குழந்தை மற்றும் பெட்டிகளுடன் ஏறி கொள்ள, ஆட்டோ ரயில்வே ஸ்டேசன் நோக்கி விரைந்தது.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் சிவா குழந்தையோடு இறங்க, ஏற்கனவே தீபக்கும் சந்தோஷும் காத்து கொண்டு இருந்தனர்.

நண்பர்களை கண்ட சிவா கண்கலங்க, இருவரும் அவனை கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினர். 

தீபக் குழந்தையை வாங்கி, கொஞ்சி கொண்டு இருக்க சந்தோஷ் பேச ஆரம்பித்தான்

"சிவா, ஆவடில என் மாமனாரோட நண்பர் நடத்துற பாக்டரில சூப்பர்வைசர் போஸ்ட் காலியா இருக்கு. சம்பளம் முப்பதாயிரம் தருவாங்க. கொஞ்ச நாள் அங்கே வேலைல இரு. அங்கே இருந்துட்டு வேற வேலை தேடிக்கலாம்."

தீபக் தொடர்ந்தான். "சிவா என்னோட அத்தை ஆவடில இருக்காங்க. அவங்க வீட்டில மாடி போர்ஷன் காலியா இருக்கு. நான் அவங்க கிட்ட பேசி இருக்கேன். வாடகை ஏழாயிரம்.அட்வான்ஸ் எதுவும் கொடுக்க வேண்டாம். வீட்டு வேலைக்கு அவங்களே ஆள் ஏற்பாடு பண்ணுவாங்க. கவலை படாதே."

சிவா கண்கலங்கினான். "உங்களை மாதிரி நண்பர்கள் கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் செய்யிற உதவிக்கு நான் என்ன கை மாறு செய்யபோறேன்னு தெரியலை."



"டேய் நாங்க அதெல்லாம் எதிர் பார்க்கல. நண்பனுக்காக இது கூட பண்ணலைனா எப்படி. நீ எதை பத்தியும் கவலை படாதே. என்ன உதவி வேணும்னாலும் எங்களுக்கு போன் பண்ணு. இட மாற்றம் உன்னோட காயங்களை ஆற்றும்" தீபக் சொல்ல, சிவா தலை ஆட்டினான்.


கோவை சென்னை இன்டர்சிட்டி வர, அதில் அவனை ஏற்றி விட்டு நண்பர்கள் இருவரும் கை அசைத்து வழி அனுப்பி வைக்க, சிவா, அவன் குழந்தை லக்ஷ்மி பிரபாவை சுமந்து கொண்டு அந்த ட்ரெயின் சென்னையை நோக்கி விரைந்தது.



No comments:

Post a Comment