Saturday, August 22, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 20

மான்சியின் மாமா வேகமாக வந்து கிருபாவின் கையைப்பிடித்து “ சம்மந்தி என்னை மன்னிச்சுடுங்க, ஊர்ல இருக்குற நாலு தறுதலைங்க பேச்ச கேட்டு நானும் ரொம்ப ஆடிட்டேன், கூடப்பிறந்த தங்கச்சி மகளை சொத்துக்காக என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன், ஆனா நீங்க எங்கருந்தோ வந்து என் தங்கச்சியோட சொத்து வேனாம் பொண்ணு மட்டும் போதும்னு சொல்றீங்க, உங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை எனக்கு இல்லாம போச்சே சம்மந்தி, அந்த காலத்துல போருக்கு போகும் வீரன் கூட தன் மனைவி பிள்ளைகளை பொண்டாட்டியோட சகோதரன் கிட்டதான் ஒப்படைச்சுட்டு போவாங்களாம், அந்தளவுக்கு தகப்பனுக்கு பிறகு தாய்மாமன் உறவுதான் ஒரு பொண்ணுக்கு முக்கியமான உறவா இருந்தது, இதெல்லாம் புரியாம நான் தப்பு பண்ணிட்டேன் சம்மந்தி என்னை மன்னிச்சிடுங்க, என் தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் பண்ணேனோ அதைவிட அமர்க்களமா அவ மகளுக்கு பண்ணப்போறேன், நீங்க சீக்கிரமே தேதி வச்சுட்டு சொல்லியனுப்புங்க சம்மந்தி நான் சீர் வரிசையோட வர்றேன்,, என்ன என் மகன் கொஞ்சம் தகராறு பண்ணுவான்,, அவனை நான் சமாளிச்சுக்கறேன்” என்று உருக்கமாக நீளமாக பேசினார்



கிருபாவுக்கு ஆச்சரியமாக இருந்தது, எவ்வளவு பெரிய பிரச்சனை ஒரே இரவில் தீர்ந்துபோனதை நினைத்து சந்தோஷமாக இருந்தது, தேவையில்லாத ஒரு பிரச்சனையை சம்மந்தமேயில்லாமல் இத்தனை இழுத்துவிட்டு இப்போது ஒரே இரவில் முடிப்பதென்றால் அது கிராமத்தில் தான் முடியும், இவர்களின் மனம் எவ்வளவு முரட்டுத்தனமாக இருந்தாலும் சட்டென்று இளகிவிடகூடியது போலருக்கு என்று நினைத்துக்கொண்டார்

கார்த்திக் மூலமாக சத்யனுக்கு எல்லாம் தெரியப்படுத்தப்பட்டது, சத்யனும் அங்கேயே தாம்பூலம் மாற்றி திருமணத்திற்கு நாள் குறிக்கும்படி கூறிவிட அடுத்து வரும் ஞாயிறன்று சுவாமிமலையில் திருமணம் செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது,

திருமண நிச்சயம் முடிந்த, கிருபா வீட்டினர் எல்லோரும் கோவை கிளம்பினார்கள், இனி மான்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்றதும் எல்லோரும் நிம்மதியாக கிளம்பினார்கள்

ஆனால் இன்னும் ஒரு வாரத்துக்கு சத்யனை பார்க்கமுடியாதே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது, ரொம்பவே சோகமாக இருந்தாள் மான்சி, அனிதாவும் கார்த்திக்கும் கிளம்பும் கடைசி நிமிடம் வரை அவளை சமாதானம் செய்தனர்

அவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடமே சத்யனிடம் இருந்து மான்சி போன் வந்தது, மான்சி மனதுக்குள் பூத்த காதல் மலர்கள் வாசம் வீச மொபலை ஆன்செய்து காதில் வைத்து “ சொல்லுங்க” என்றாள்

ஆனால் எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை, சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு வெறும் முத்தமிடும் சத்தம் மட்டும் அவள் காதினை நிறைத்தது, சத்யன் எவ்வளவு ஏங்கிப்போயிருக்கிறான் என்பதை அவன் முத்தங்களின் எண்ணிக்கை சொன்னது

மான்சிக்கு விழிகள் குளமானது அவனுடைய மனதை புரிந்துகொள்ள முடிந்தது, அவள் தொண்டை அடைக்க “ என்னாச்சுபா இன்னும் ஒரு வாரம் தானே, அப்புறம் உங்களைவிட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டேன், இங்கே எனக்கு அழுகையா வருதுங்க” என்று கூறிவிட்டு மான்சி விசும்பினாள்,

“ அழாதடா கண்மணி என்ன செய்றது நம்ம அவசரம் பெரியவங்களுக்கு புரியலையே,, பேசாம நான் வேனும்னா கிளம்பி அங்க வந்துரவா, கல்யாணம் வரைக்கும் அங்கேயே இருக்குறேன்” என்று கேட்டான் சத்யன்

“ ம்ஹூம் அதெல்லாம் வேனாம் இங்க இருக்கிறவங்க தப்பா நெனைப்பாங்க,, தினமும் அடிக்கடி போன் பண்ணுங்க அது போதும்” என்றாள் மான்சி

அதன்பிறகு திருமணநாள் வரை இருவரும் பேசியதில் செல்போன் பேட்டரிகள் நான்கைந்து உருகிவிட்டது, காதலை பேசிப்பேசி கைபேசி சூடானது, எவ்வளவு நேரம் பேசினாலும் இணைப்பை துண்டித்ததும் என்ன பேசினோம் என்று இருவருக்குமே ஞாபகம் இருக்காது, பரிமாறிக்கொண்ட முத்தங்களின் எண்ணிக்கையையும் கூட மறந்துவிட்டு இருவரும் எத்தனை வெட்டவெளியில் காற்றி விரலால் எண்களை வரைந்து எண்ணிப்பார்த்தனர், 



" அன்பே உன்னைப்பற்றி ஒரு காதல் கவிதை எழுதினேன்"

" அது வெறும் காகிதம் தானே?'

" என் உணர்வுகளை எப்படி உனக்கு சொல்லும்"

" உயிருள்ள கவிதையாக நான் இருக்கும் போது"

" காகித கவிதை உனக்கெதற்கு!

சத்யன் மான்சி இருவருக்கும்,, குறிப்பிட்ட சிலர் முன்னிலையில், சுவாமிமலை திருக்கோயிலில், நாத்தனார் முறையில் அனிதா அம்மன் விளக்கை ஏந்த, சத்யன் மான்சியின் கழுத்தில் தாலி கட்டினான், எந்தவித பிரச்சனையும் இன்றி திருமணம் அமைதியாக அழகாக நடந்தது, கிருபாவும் ரஞ்சனாவும் எல்லாவற்றையும் முன்னின்று செய்தாலும் சத்யன் அவர்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

மான்சி சத்யனை கவனித்ததை விட அவனுடைய செயல்களை அதிகமாக கவனித்தாள்,, சத்யன், திரும்பிப் பார்க்காதது போல் நடித்தாலும், அவன் பார்வை அடிக்கடி கிருபா மீதும் ரஞ்சனா மீதும் படிந்து மீண்டது, குறிப்பாக ரஞ்சனாவின் மீது சற்று அதிகமாகவே படிந்து மீண்டதை கவனித்தாள், ரஞ்சனா மனம் சங்கடப்படும் படி ஏதாவது பேசிவிடுவானோ என்று ரொம்பவே பயந்தாள் மான்சி, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை,

ஐயரின் சொல்படி திருமண சம்பிரதாயங்களை சரியாக செய்தாலும் அவன் சற்று இறுக்கத்துடனேயே இருப்பது போல் இருந்தான்,, மான்சியின் குடும்பத்தாரின் முன்பு எதுவும் பேசக்கூடாது என்று அமைதிகாக்கிறானோ என்று மான்சி நினைத்தாள், தாலிகட்டி முடித்து அவள் கையைப்பிடித்து அக்னியை வலம்வரும் போதுகூட அவன் முகத்தில் சிரிப்பு இல்லை அவள் கையை எதற்காகவோ பயந்து பற்றியிருப்பவன் போல அழுத்தமாகப் பற்றியிருந்தான்

மறுபடியும் மணவறையில் அமர்ந்தனர், மான்சிக்கு அவன் என்ன மனநிலையில் இருக்கிறானோ என்று புரியவில்லை,, குனிந்து மாலையை சரிசெய்யும் சாக்கில் “ என்னாச்சுங்க, ரிலாக்ஸா இருங்க ப்ளீஸ்” என்றாள் மெல்லிய குரலில்,

உடனே அவளை திரும்பி பார்த்த சத்யன், அவள் முகத்தில் இருந்த கவலையை பார்த்து “ ஒன்னுமில்லடா,, அம்மாவோட ஞாபகம் வந்துருச்சு அவ்வளவுதான், நீ கவலைப்படாதே” என்று சிறு புன்னகையுடன் கூறினான்

அம்மாவோட ஞாபகம் என்று அவன் சொன்னதும் அவனை அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் அலைபோல் எழுந்தது, ஆனால் சுற்றியிருந்தவர்களை மனதில் கொண்டு அமைதியானாள், மாலையின் மறைவில் அவனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினாள், அவள் கொடுத்த அழுத்தமான ஸ்பரிசம் அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் போல, அதன்பிறகு கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பதுபோல் மான்சிக்கு தோன்றியது,

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சாமி தரிசனம் செய்த பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும்படி ஐயர் சொல்ல, சத்யன் தன் மனைவியுடன் பாட்டியின் காலில் விழுந்து எழுந்தான், அமிர்தம்மாள் கண்கலங்க இருவரையும் ஆசிர்வதித்தார்,

“ அடுத்து மாப்பிள்ளையோட அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ” என்றார் ஐயர்

அவர் சொல்லி முடித்ததும் சத்யன் உடல் சட்டென்று விரைத்து நிமிர்ந்தது, பற்றியிருந்த மான்சியின் கைவிரல்களை நெறித்தான், மான்சிக்கு வலித்தது ஆனாலும் அமைதிகாத்து அவன் பக்கம் திரும்பி “ சத்யன் எனக்காக ப்ளீஸ், எங்க மாமா நம்மளையே பார்த்துக்கிட்டு இருக்காருங்க, ப்ளீஸ் எல்லார் முன்னாடியும் உங்கப்பாவை தலைகுனிய வச்சிடாதீங்க, வாங்க ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” அவன் விரல்களை பற்றி இழுத்தாள்

சத்யன் அப்போதுதான் மான்சியின் தாய்மாமனை பார்த்தான், அவர்,, தயங்கி நின்ற இவர்களையே குழப்பமான முகத்துடன் கவனித்துக்கொண்டு இருந்தார்,,

“ ம் வாங்க அவர் நம்மளையே பார்க்கிறார்” என்று ரகசியமாக சொல்லி மான்சி அவன் கையைப்பிடித்து இழுக்க, சத்யன் அரை மனதோடு அவளுடன் போனான்

கிருபாவும் ரஞ்சனாவும் இணைந்து நிற்க்க சத்யனும் மான்சியும் அவர்களின் கால்களில் விழுந்தனர், ஐயர் கொடுத்த அட்சதையை மணமக்கள் மீது தூவி அவர்களை மனதார வாழ்த்தினார்கள் கிருபாவும் ரஞ்சனாவும்

கிருபா கட்டுபாட்டில் இருந்தாலும், ரஞ்சனா தனது மகனும் மருமகளும் காலில் விழுந்ததும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு கண்ணில் நீர்மல்க மான்சியை தூக்கி அணைத்துக்கொண்டு குலுங்கினாள்,

சத்யன் எழுந்து நின்று இருவரையும் பார்த்தான், அவனுக்கு ரஞ்சனாவின் கண்ணீரைப் பார்த்து சங்கடமாக இருந்தது, அவளின் குமுறலும் கண்ணில் வழிந்த கண்ணீரும் நடிப்பு கிடையாது என்று புரிந்தது, மனதுக்குள் ஏதோ புரண்டது, சத்யன் சட்டென்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,

கிருபா தன் மனைவியின் தோளில் தட்டி ஆறுதல் சொல்ல, ரஞ்சனா சூழ்நிலையை உணர்ந்து நிதானித்தாள்,, எல்லோரும் ஹோட்டலில் சாப்பிட்டு வெளியே வந்தபோது, முதன்முதலில் மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு போய், மான்சி விளக்கேற்றிய பிறகு இருவரும் பாழும் பழமும் சாப்பிட்டுவிட்டு, மறுவீடு நடத்த மான்சியின் ஊருக்கு போகவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதும், சத்யன் தனது வீட்டுக்குத்தான் போகவேண்டும் என்று சொன்னான்

ஆனால் அங்கிருந்த அத்தனை பேரும் அவன் அம்மா வாழ்ந்து மறைந்த கிருபாவின் வீட்டில்தான் மான்சி விளக்கேற்ற வேண்டும் என்றார்கள்,,

சத்யனுக்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டு இருக்கிறோமோ என்ற எண்ணம் மனதுக்குள் உருவானது , ஆனாலும் தன் தாயை அனைவரும் முன்நிறுத்தி பேசியதால் அவனால் மறுக்கமுடியவில்லை, திரும்பி மான்சியை பார்த்தான்,, அவள் பார்வையால் கெஞ்சினாள்,,

அந்த பார்வைக்கு அவனால் மறுப்பு சொல்லமுடியவில்லை,, அதன்பிறகு சத்யன் எதுவுமே பேசவில்லை அவளின் கையைப்பற்றிக் கொண்டு காரில் ஏறியமர்ந்தான்,, மூன்று கார்களில் அனைவரும் கிருபாவின் வீட்டுக்கு கிளம்ப,, ரஞ்சனா எல்லாருக்கும் முன்பே போய் மணமக்களுக்கு தேவையானதை தயார்செய்தாள்

காரில் சத்யன் ரொம்ப இறுக்கமாகவே அமர்ந்திருந்தான்,, மான்சியிடம் கூட பேசவில்லை,, முன் சீட்டில் டிரைவருக்கு பக்கத்தில் அமர்திருந்த கார்த்திக்கு சத்யனின் இந்த அமைதி ரொம்ப சங்கடமாக இருந்தது,,

அங்கிருந்த சூழல் கல்யாணம் முடித்து காரில் போவது போல் இல்லை,, ஏதோ நடக்ககூடாதது நடந்துவிட்டது போல் மூவருமே அமைதியாக இருந்தனர், மான்சி சத்யனை பார்த்தாள், அவன் விஷயத்தை விழுங்குவது போல முகத்தை வைத்திருந்தான்,,

அவன் முகத்தை பார்க்க மான்சிக்கு பயமாக இருந்தது,, ஆனால் தனது பயத்தை வெளிக்காட்டினாள் காரியம் கெட்டுவிடும் என்று புரிந்ததால் இதழ்களில் வரவழைத்த புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்

மான்சி தன் தோளில் சாய்ந்ததும், அதுவரை இறுகிப்போய் அமர்ந்திருந்த சத்யன் இலகுவாகி சற்று சரிந்து அமர்ந்து அவள் தோளில் கைப் போட்டு வளைத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான், அவன் நெஞ்சின் துடிப்பை அவள் கன்னத்தில் உணர்ந்தாள்,

அவள் சத்யனின் கைக்குள் வந்ததும் அவன் அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் குறைந்து நிம்மதியாக சீட்டில் சாய்ந்து கொண்டான்,, அவனுடைய காதல் தேவதை மட்டும் தன் அருகிலேயே இருந்தால் எதையும் சுலபமாக சமாளித்து விடலாம் என்று மனசுக்குள் ஒரு நிம்மதி வந்தது

அதற்குள் கிருபாவின் வீடு வந்துவிட்டது, டிரைவர் ஒரு பக்கமும் கார்த்திக் மறுபக்கமும் காரின் கதவை திறந்துவிட்டு இவர்கள் இறங்குவதற்காக காத்திருக்க, மான்சி இறங்கினாள், சத்யன் காரிலிருந்து இறங்கவில்லை, கார்த்திக் மான்சியின் முகத்தை கவலையுடன் பார்க்க, மான்சி காரின் மறுபக்கம் போய் குனிந்து உள்ளே இருந்த சத்யனை நோக்கி தனது வலதுகையை நீட்டினாள்

சத்யன் முகத்தில் இனம் காணமுடியாத பல உணர்ச்சிகள் தோன்றி மறைந்தது,, தன்னை மீறிய பெருமூச்சுடன் மான்சியின் கையைப் பற்றியவாறு காரில் இருந்து இறங்கினான்,



பின்னால் வந்த கார்களில் இருந்து மான்சி வீட்டாரும், சத்யனின் தங்கைகளும் பாட்டியும் இறங்கினார்கள், சத்யன் பாட்டியைப் பார்த்தான்,, அமிர்தம்மாள் வேகமாக வந்து அவன் கையை பற்றிக்கொண்டு “ எல்லாமே உன் அம்மாவோட ஆசைன்னு நெனைச்சுக்கிட்டு உள்ள போ சத்யா, நல்லதே நடக்கும்” என்றார்

சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு மான்சி கிருபாவின் வீட்டு வாசலில் நிற்க்க, சுமங்கலிப் பெண் ஒருவர் ஆரத்தி தட்டுடன் வந்தாள்

பின்னாலிருந்த மான்சியின் தாய்மாமன் மனைவி “ மொதமொதல்ல வீட்டுக்கு வர்ற மருமகளுக்கு மாமியார்தான் ஆரத்தி சுத்தனும், நீங்க வாங்கி சுத்துங்க” என்று ரஞ்சனாவை பார்த்து சத்தமாக கூற,,

ரஞ்சனா மிரண்டு போய் பாட்டியை பார்த்தாள், பாட்டி கண்ணசைவில் ம்ம் என்று உத்தரவிட, நடுங்கும் கைகளுடன் ஆரத்தி தட்டை வாங்கி மணமக்களுக்கு சுற்றினாள் ரஞ்சனா,, ஆரத்தி நீரை விரலில் தொட்டு மான்சியின் நெற்றியில் வைத்தவள், மறுமுறை நீரைத் தொட்டு சத்யனின் நெற்றியை நெருங்க அவள் கை நடுங்கியது சத்யனின் கண்முன்னே தெரிந்தது,, சத்யன் மான்சியின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டான்,,

விரல் தொட்ட நீரை சத்யனின் நெற்றியில் வைத்த ரஞ்சனாவின் மனதில் ஆயிரமாயிரம் வேண்டுதல்கள், மகனை வீட்டுக்கு வரவழைத்த கடவுளுக்கு இருந்த இடத்திலிருந்தே நன்றி சொன்னாள்

வீட்டுக்குள் போன மணமக்களை பூஜை அறைக்கு அழைத்து சென்றார் பாட்டி, தெய்வலோகம் போல் இருந்த பூஜையறையில் தனது தாயின் பிரமாண்டமான படத்தை பார்த்ததும் சத்யனின் வயறு தடதடவென்று உதறியது, நெஞ்சை அடைக்க கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது, உதட்டை கடித்து கண்ணீரை அடக்கினான்,

அந்த பூஜையறையில் தாயின் படத்துக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரமும் பூஜைகளும் அவன் அம்மாவுக்கு இன்னும் அந்த வீட்டில் சகல மரியாதையும் இருக்கிறது என்று சத்யனுக்கு புரிந்தது

மான்சி பூஜையறையில் விளக்கேற்றி வைக்க இருவரும் விழுந்து வணங்கினார்கள், பிறகு வெளியே வந்து சோபாவில் அமர்ந்தனர், அவர்களின் இருபுறமும் அபிநயாவும் வசுவும் உரிமையுடன் அமர்ந்துகொண்டனர், சத்யன் தன்னருகே இருந்த அபியை கையைப் பற்றிக்கொண்டு அமைதியாக இருந்தான்,

அபிநயாவுக்கும் அவனது மனசு புரிந்திருக்க வேண்டும், அவன் தோளில் சாய்ந்து “ மறுக்காம இங்கே வந்ததுக்கு தாங்க்ஸ் அண்ணா,, என்றாள்

சத்யன் “ ம்ம்” என்றது தவிர வேறு எதுவும் சொல்லவில்லை,,

சத்யன் மான்சி இருவருக்கும் பாலும் பழமும் தரப்பட்டது, அதன்பிறகு கொஞ்சநேரம் இருந்துவிட்டு எல்லோரும் கிளம்ப ஆயத்தமான போது ரஞ்சனா ஒரு மரப் பெட்டியை எடுத்துவந்து மான்சியிடம் கொடுத்து “ இதுல வசந்தி அக்காவோட நகைகள் எல்லாம் இருக்கு, எல்லாமே உனக்கு சேரவேண்டியது, நீ போட்டுக்க மான்சி” என்றாள்

“ வேனாம் அத்தை இங்கயே இருக்கட்டும்” என்று மான்சி கூற,,

அவள் வாயை தன் விரல்களால் பொத்திய ரஞ்சனா “ ம்ஹூம் வேண்டாம்னு சொல்லாதே,, இதெல்லாம் உனக்கு சேரவேண்டியது எடுத்துட்டு போ” என்று வற்புறுத்தினாள்,, ரஞ்சனாவுடன் பாட்டியும் சேர்ந்து கொள்ள, மான்சி வேறு வழியின்றி பெற்றுக்கொண்டாள்

சத்யன் அவளுக்காக வெளியே காரில் காத்திருக்க, மான்சி வந்து காரில் அமர்ந்தாள்,, சத்யன் அவள் கையில் இருந்த பெட்டியை பார்த்து “ என்ன பெட்டி இது மான்சி” என்றான்

“ வசந்தி அத்தையோட நகைகளாம், ரஞ்சனா அத்தை கொடுத்தாங்க, இதெல்லாம் இனிமேல் எனக்குத்தான் சேரனுமாம்” என்ற மான்சி தன் மடியில் இருந்த பெட்டியை திறந்தாள்

“ நீ ஏன் இதையெல்லாம் வாங்கிட்டு வந்த, அவங்களையும், தங்கச்சிங்களையும் போட்டுக்க சொல்றது தானே?” என்றான் சத்யன்,

அவனுக்கு மனசுக்குள் கோபம் இருந்தது, எவ்வளவு வசதியும் பணத்தையும் வைத்துக்கொண்டு, ரஞ்சனா எந்த நகையும் பட்டுப்புடவையும் இல்லாமல் சாதரண குடும்பத்து பெண்போல் வெறும் தாலிச்செயினும் கைத்தறி புடவையுமாக கல்யாணத்துக்கு வந்திருந்தது சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது, எல்லாம் வேஷம் என்று எண்ணினான்,

பெட்டியில் இருந்த நகைகளை பார்த்துக்கொண்டிருந்த மான்சி, அவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்து “ உங்களுக்கு ரஞ்சனா அத்தையைப் பத்தி தெரியாதா?, அவங்க எப்பவுமே எந்த நகையும் போட்டுக்க மாட்டாங்க, அதேபோல எப்பவுமே கைத்தறி சேலைதான் கட்டிப்பாங்க, அத்தை ரொம்ப சிம்பிளாதான் இருப்பாங்க, அதேபோல அனிதா அபி ரெண்டு பேருக்கும் கூட எதுவுமே வாங்கித் தரமாட்டாங்க, வசுதான் உங்க செல்லமாச்சே அதனால உங்கிட்ட பாட்டிகிட்ட கேட்டு வாங்கிக்குவா” என்று மான்சி சத்யனுக்கு தெரியாத விஷயங்களை கூறினாள்

சத்யன் எதுவுமே பேசவில்லை அமைதியாக இருந்தான், இதற்க்கு முன்பு ரஞ்சனாவை சந்தித்த ஒரு சில நாட்களை நினைவில் கொண்டு வந்தான், அவன் கவணத்தில் ரஞ்சனா ஒருமுறை கூட படாடோபமாக இருந்ததில்லை, எப்பவுமே கழுத்தில் இதே செயின், உடலில் காட்டன் புடவையில் தான் பார்த்திருக்கிறான், ஆனால் அன்று உரைக்காத அவளது எளிமை இன்று மான்சி கூறியதும் பொட்டில் அடித்தாற்போல் உரைத்தது,

இவ்வளவு நாட்களாக பணம் நகை படாடோபமான வாழ்க்கை இதற்க்காகத்தான் ரஞ்சனா தனது அப்பாவை வலைவீசி பிடித்து விட்டதாக சத்யன் நினைத்துக்கொண்டு இருந்தான் எளிமையை விரும்பும் இவங்க ஏன் என் அப்பாவை வலைவீசி பிடிக்கனும்?, தான் பெற்ற பெண்களுக்கு கூட வசதியான வாழ்க்கையை அறிமுகம் செய்யாத இவங்க ஏன் அப்பாவுக்கு இரண்டாவது மனைவியாக வந்தாங்க?, எல்லாவற்றுக்கும் பணம் காரணம் இல்லையென்றால் வேறு என்னதான் காரணம்? என் அப்பா மீது கொண்ட காதலா? சத்யனுக்கு மனம் குழம்பியது

திருமணம் முடிந்தவர் மீது எப்படி காதல் வரும்? அப்படியே வந்தாலும்கூட என் அம்மாவோட நினைவு ஏன் அப்பாவுக்கு இல்லாமல் போனது? என்று சத்யன் யோசிக்கும் போதே வசந்தி இறந்த சிலநாட்கள் கழித்து இரவில் எழுந்து அமர்ந்து அழுதுகொண்டிருந்த கிருபாவின் ஞாபகம் வந்தது, நிச்சயமாக அந்த கண்ணீர் பொய்யில்லை, அப்படியானால் ஒரே சமயத்தில் இரண்டு பேரை ஒருவரால் காதலிக்க முடியுமா? என்று இறுதியாக இந்த கேள்வி சத்யன் மனதில் தொக்கி நின்றது

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக “ ஏங்க இந்த நகைகளில் முக்கியமான சிலதை மட்டும் எடுத்து வச்சுட்டு, மீதி நகைகளை அழிச்சு புது மாடலாக செய்து அனிதா, அபி, வசு, மூனுபேர் கல்யாணத்துக்கும் போடலாம், பெரியத்தையின் ஞாபகமாக இருக்கும்” என்று மான்சி சொல்ல..

“ ம் சரி மான்சி செய்யலாம்” என்றான்

அவன் முகத்தில் இருந்த சிந்தனை கோடுகளை கவனித்து “ என்னாச்சும்மா காலையிலேருந்து உங்க முகமே சரியில்லை, இன்னிக்கு எல்லாமே உங்களுக்கு பிடிக்காத விஷயங்களே நடந்தது,, அதனால வருத்தமா இருக்கீங்களா?” என்று மான்சி கேட்க...

இல்லையென்று தலையசைத்த சத்யன் “ வருத்தமெல்லாம் இல்லை மான்சி, ஆனா ஒரு விஷயம் எனக்கு குழப்பமா இருக்கு,, அதாவது ஒரே சமயத்தில் ஒரு ஆண் இரண்டு பேரை காதலிக்கமுடியுமா?” என்று கேட்டான் 





No comments:

Post a Comment