Monday, August 31, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 14

வெள்ளைசாமி "டேய் சிவா, இந்த பொண்ணை தூக்குறேன் பாரு. அப்போ தெரியும் நான் யாருன்னு" என்று கத்தி கொண்டே செல்ல,சிவா கையை மடக்கி குத்துவது போல் சைகை செய்தான்.

அதை கண்ட வெள்ளைசாமி முகம் மாறி, வேகமாக வெளியேறினான்.

வீட்டுக்கு உள்ளே வந்த சிவாவை தொடர்ந்து அனிதா வர, குழந்தை பிரபாவை பெரிய நாயகியிடம் ஒப்படைத்து விட்டு அனிதா சிவாவின் அறைக்கு வந்தாள்.



"என்ன சிவா, எதுக்கு அவன் கிட்ட போய் சண்டை போடுறிங்க. நாய் குலைக்குதுன்னு சொல்லி நாமளும் திரும்பி குலைச்சா நமக்கும் நாய்க்கும் என்ன வித்யாசம் இருக்கு".
கசங்கிய தன் சட்டையை கழட்டி பெட்டில் போட்டு விட்டு வாஸ்பேசினில் முகத்தை கழுவியபடி அனிதா சொன்னதை கேட்ட சிவா,"அனிதா இந்த வெள்ளைசாமி நாய் பேசுன பேச்சுக்கு அவனை கொல்லாம விட்டதே பெருசு."

"சிவா இந்த அவமானம் எனக்குதானே தவிர உங்களுக்கு இல்லையே. எதுக்கு இப்படி சண்டை போடணும்."

சடாரென்று திரும்பி அவளை பார்த்து முறைத்தான். அவன் பார்வையை பார்த்து நடுங்கி போனாள் அனிதா.

"அனிதா, நான் வேற நீ வேறன்னு நினைக்கலை. அதுனாலதான் அப்படி பண்ணினேன். உனக்கு நான் செஞ்சது தப்புன்னு பட்டுச்சுன்னா, ஐ ஆம் ரியல்லி சாரி".சொல்லி விட்டு கோபத்தோடு மொட்டை மாடி படி ஏறி சென்றான்.

அனிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கோபத்தில் இருக்கும் சிவாவை சமாதானபடுத்தலாம் என்று முடிவு செய்து பின்னாலே சென்றாள். 

சிவா மொட்டை மாடியில் நின்று கொண்டு நிலாவை பார்த்து நின்றான். "சிவா" என்று அழைக்க பதில் இல்லை. அவன் அருகில் சென்று அவனை தொட, திரும்பி பார்த்து புன்னகைத்தான்.

"சாரி சிவா. உங்க மேல எனக்கு கோவம் ஒண்ணும் கிடையாது. என் மேல இந்த அளவுக்கு அக்கறையோட இருக்கிங்கன்னு நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு.ஆனால் இன்னைக்கு வெள்ளைசாமி கேட்ட கேள்வியை நாளைக்கு வேற யாராவது கேட்க மாட்டேங்கன்னு என்ன நிச்சயம். அதனால ..." என்று பேச்சை நிறுத்த,

சிவா புருவத்தை உயர்த்தி, "அதனால ...." என்று கேட்க

"நீங்க என்னை ஹாஸ்டல்ல விட்டுடுங்க."சிவா தனது கோபத்தை அடக்க கஷ்டபடுவது அனிதாவுக்கு புரிந்தது.

"அனிதா முடியாது. என்னை வற்புறுத்தாதே. ப்ளீஸ்"

"எதுக்கு சிவா"அவள் கண்களை கூர்ந்து பார்த்தான்.

"அப்படின்னா பிரபாகிட்ட அம்மாவா இருக்கேன்னு நீ சொன்னது பொய்யா?"


பதில் சொல்ல தெரியாமல் வாயடைத்து நின்றாள்.

இரவு உணவு சாப்பிடும்போது அனிதா அவன் முகத்தை அவன் ஒரு வார்த்தையாவது பேச மாட்டானா என்று ஏக்கத்தோடு பார்க்க கொண்டே இருக்க, சிவா அவளிடம் பேசவில்லை.

தினமும் இரவு பால் சாப்பிடுவது சிவா வழக்கம். வழக்கம் போல் பனங்கல்கண்டு போட்ட பாலை பெரிய நாயகி கொண்டு வர, குடித்து விட்டு டம்ப்ளரை திருப்பி கொடுக்க, பெரிய நாயகி பேச ஆரம்பித்தார்.

"சிவா தம்பி, அனிதா சொல்றதில்லையும் உண்மை இருக்கு. யோசிச்சு பாருப்பா. பாவம் அந்த பொண்ணு அம்மாவை இழந்து தவிக்கிறா.அவளுக்கு உன் மேல அளவுக்கு அதிகமான அன்பு, நீ மட்டும் சரின்னு சொன்னா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிக்கலாம்.பிரபாவுக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பா, உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பா."

அடுத்த ரூமுக்குள் பிரபாவுடன் நுழைந்த அனிதாவின் காதில் இந்த வார்த்தைகள் விழ, சிவா என்ன பதில் சொல்லபோகிறான் என்று காதை கூர்மையாக்கி கொண்டாள்.

"பெரியம்மா, நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் எனக்கு வீணாவோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுன்னு தோணுது."

அனிதா அதற்க்கு மேல் கேட்க விருப்பம் இல்லாமல் ஓடி சென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள். அழுகை ஓசை வராவிட்டாலும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.

அங்கே பெரிய நாயகி பதில் சொன்னாள். "தம்பி, புரியாம பேசாதிங்க. வீணாவோட வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அவளை பத்தி நினைச்சுகிட்டே உங்க வாழ்கையை பாழாக்க போறீங்களா? அது மட்டும் இல்லை. அனிதா மாதிரி உங்களோட குழந்தையை தன்னோட குழந்தையா பாத்துக்கிறதுக்கு யார் இருக்கா சொல்லுங்க. அந்த பெண் உங்களுக்கு கிடைச்ச மாணிக்கம் தம்பி, இப்போ இழந்தா பின்னால ரொம்ப வருததபடுவீங்க. அப்புறம் உங்கள் இஷ்டம்."

பெரிய நாயகி சென்று விட்ட பிறகு, சிவாவுக்கு தூக்கம் பறி போனது. அனிதாவை நிராகரிக்க அவனுக்கு ஒரு காரணமும் கிடைக்கவில்லை. வீணாவின் போட்டோவை பார்த்து கண்கலங்கி, நான் அனிதாவை கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்க,வீணா ஆமாம் என்று பதில் சொல்வது போல் அவனுக்கு பிரமை.

அடுத்த நாள் காலை அனிதா ஸ்கூலுக்கு போகவில்லை. அழுது அழுது முகம் வீங்கி இருந்ததால், ஸ்கூலுக்கு போக விருப்பம் இல்லை.

பிரபாவும் அனிதா கழுத்தை கட்டியபடி ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவளை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தாள்.

சிவா அனிதாவிடம் திருமண விஷயம் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தான். எப்போது பேசலாம் என்று யோசித்து கொண்டே வர எதிரே அனிதா வந்தாள். அவளை பார்த்து புன்னகைக்க, அவளோ சோகசிரிப்பை உதிர்த்தாள். சிவாவுக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. அதற்குள் அவனுக்கு போன் வர எடுத்தான். 

அடுத்த முனையில் ரமேஷ். "என்ன சார், பார்த்து பல நாள் ஆயடுசுன்னு ஆஷா சொன்னா. என்ன சார் இன்னைக்கு அரேஞ் பண்ணிடலாமா."

"ரமேஷ், சாரி இப்போ வேணாம்"

"சார் கவலைபடாதிங்க. இன்னொரு சின்ன பொண்ணு வந்துருக்கு, காலேஜ் பொண்ணுதான். நான் அரேஞ் பண்ணிட்டு கூப்பிடுறேன்."




சிவா பதில் பேசுவதற்குள் போனை வைத்து விட்டான்.போய் வரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சிவா. போனை வைத்து விட்டு குளிக்க சொல்ல, ரமேஷ் போன் திரும்ப வந்தது. இரண்டு முறை அடித்து ஓய்ந்து மூன்றாவது முறை வந்தபோது, அந்த வழி வந்த அனிதா போனை எடுத்தாள்.

போனை எடுத்த உடனே ரமேஷ் "சார் ஏற்பாடு பண்ணிட்டேன். பொண்ணு பேரு கவிதா. சாயந்தரம் ஏழு மணிக்கு வந்துடுங்க"பதிலுக்காக காத்து இராமல் போனை வைத்தான்.

போனை காதில் வைத்தபடி அதிர்ச்சியில் சிலையாக நின்றாள் அனிதா.

'என் சிவா இந்த அளவு மோசமானவனா. கண்ட பொண்ணுங்களோட தொடர்பு வச்சுட்டு உத்தமன் மாதிரி பேசுறான். சீ'அவள் மனம் வெறுத்து போனது.

அவளின் உள் மனமோ, 'அவசரபடாதே அனிதா. யோசிச்சு பார்.தன்னோட ஆசைகளை அடக்க கூடிய வயசா இது.அப்படி தான் போய் வந்தாலும் என்ன தப்பு' அவனுக்கு வக்காலத்து வாங்கியது அவள் உள் மனம்.

கடந்த மூன்று மாதங்கள் அவனை கவனித்து பார்த்ததில் இந்த பழக்கம் இல்லாமல் இருந்தது அனிதாவுக்கு புரிந்தது.இப்போது அந்த பழக்கம் திரும்ப ஆரம்பிக்க போகிறது. 'எல்லாத்துக்கும் அந்த மாமா பய ரமேஷ் தான் காரணம்' பல்லை கடித்தாள்.

இதை எப்படி தடுப்பது. குழப்பம் அதிகமானது.

குளித்து விட்டு வந்த சிவா, செல் போனை எடுத்து மிஸ்டு கால்ஸ் பார்த்து, ரமேஷ்சை கூப்பிட, "சார் மறக்காம ஏழு மணிக்கு வந்துடுங்க. ராத்திரி முழுக்க கச்சேரி வச்சுக்கலாம்" என்று ரமேஷ் சொல்ல, சிவா மனம் மீண்டும்ஊசலாட தொடங்கியது.

உள் அறையில் இருந்து சிவாவின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தாள் அனிதா.'எப்படியும் இவனை வெளியே போகவிடாமல் தடுக்க வேண்டும். என்ன செய்யலாம்' என்று யோசித்து அவள் மூளை குழம்பி போனது.

மாலை ஸ்கூலில் இருந்து பிரபா திரும்பிவந்த உடன்அனிதாவிடம் 'அம்மா' என்று கழுத்தை கட்டி கொண்டு கொஞ்ச, அனிதா திரும்ப கொஞ்சி விட்டு, பெரிய நாயகியை அழைத்து "அம்மா நீங்க கொஞ்சம் பிரபாவை பார்த்துக்கங்க. எனக்கு ஒரு அவசரவேலை இருக்கு"என்று சொல்லி விட்டு சிவாவை தொடர்ந்துகண்காணிக்க ஆரம்பித்தாள்.

சிவா மாலை மணி ஆறை நெருங்க அனிதாவை கூப்பிட்டு பேச ஆரம்பித்தான். அவள் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பியபடி,"அனிதா எனக்கு சேலம்ல கொஞ்சம் அவசர வேலை இருக்கு. கிளம்பனும். வர்ற லேட் ஆகும். ஒரு வேளை நான் அங்கேயே தங்க நேரிடலாம்" என்று சொல்ல, அனிதாவுக்கு புரிந்து போனது.

என்ன செய்வது என்ற பதட்டத்தில் "சிவா நீங்க கட்டாயம் போகணுமா"என்று கேட்க, சிவா மனம் குழம்பியது. ரோட்டரி கிளப் கூட்டம் முடிந்த பின்னே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பார்ம் ஹவுஸ் போக வேண்டும்.

"இல்லை அனிதா ஒரு ரோட்டரி கிளப் மீட்டிங் அதை தொடர்ந்து நண்பர்கள் சில பேரை பிசினஸ் விஷயமா மீட் பண்ணுறோம். கொஞ்சம் டிரிங்க்ஸ் இருக்கும்.கட்டாயம் போயே ஆகணும்."

அனிதாவிடம் இருந்து பதில் வராததை கண்டு திருப்தி அடைந்து தனது அறைக்கு சென்று பேக் எடுத்து கொண்டு வெளியே வர,அனிதாவை காணவில்லை.



சரி, அவள் அறையில் இருப்பாள். தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்தபடி, வெளியே வந்து காரில் அமர்ந்து நிமிர்ந்து பார்க்க கார் எதிரே அனிதா கைகளை கட்டியபடி நின்று கொண்டு இருந்தாள்.

'அனிதா எதற்கு இங்கே நிற்கிறாள். அவளுக்கு உண்மை தெரிஞ்சு இருக்குமோ'பதட்டத்தில் நகம கடிக்க ஆரம்பித்தான் சிவா.

அவனை கூர்ந்து கவனித்தபடி, முன் கதவை திறந்து சீட்டில் அமர்ந்தாள். 

"சிவா, பிசினஸ் மீட்டிங் தானே போறீங்க. நானும் வரேன்."என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் சிவா. 

"இல்லை. ஆமா" என்று உளற, "சிவா நானும் உங்களோட வரேன்".கை கட்டி பிடிவாதமாக உட்கார கலங்கி போனான் சிவா.

தலை கவிழ்ந்தபடி யோசிக்க, "சிவா என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறீங்க அப்படி தானே.உங்களுக்கு வந்த காலை நான் எடுத்தேன். உங்க நண்பர், ரமேஷ் சொன்னதை கேட்டேன். ஏன் சிவா உங்களுக்கு இந்த நிலைமை."என்ன பதில் சொல்வது என்று புரியாத சிவா அவமானத்தில் தலை குனிந்தான்.

குரலை தாழ்த்தி "கொஞ்சம் உள்ளே மாடி ரூமுக்கு வாங்க. உங்க கிட்ட பேசணும்".
மாடியில் இருக்கும் கெஸ்ட் ரூமுக்கு அனிதா செல்ல அவள் பின்னாலே சிவா.உள்ளே இருந்த பெட்டில் அனிதா உட்கார, பக்கத்தில் இருந்த சேரில் சிவா அமர்ந்தான்."சிவா என்னை பாருங்க"அவளை பார்க்க, "உங்களுக்கு என்ன தேவை சிவா. எதுக்கு இப்படி அலையுரிங்க".

சிவாவின் கோபத்தில் வெடித்தான்."அனிதா என்னை பார்த்தா அப்படி சொன்ன. உனக்கு அந்த கஷ்டம் தெரியுமா. வீணாவோட வாழ்ந்த வாழ்க்கைல முழுக்க முழுக்க தாம்பத்தியத்தை அனுபவித்தேன்.அவள் இறந்த பின்னால் வந்த அந்த தனிமை இரவுகள் விரக தாபத்தை அதிகபடுத்தின.மூணு வருஷம் என் ஆசைகளை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன். இனிமேலும் அடக்க முடியாதுன்னு தான் நான் அங்கே போனேன். அதுவும் உன்னை பார்க்கும் வரைதான். உன்னோட நட்பு, அன்பு, மனம் விட்டு உன் கிட்ட பேசினது இது எல்லாம் என்னோட அந்த நினைப்பை குறைத்து விட்டன. உண்மைய சொல்லணும்னா கடந்த மூணு மாசமா நான் அங்கே போகவே இல்லை."

"வெட்கத்தை விட்டு சொல்லணும்னா, கடந்த சில நாட்களா உன்னை பார்த்து என் மனசு தடுமாற ஆரம்பிச்சுடுச்சு. அதனால தான் இன்னைக்கு ரமேஷ் போன் பண்ணினபோது நான் வரேன்னு சொல்லிட்டேன்.



"ஒரு நிமிஷம் "உங்க போனை கொடுங்க"எதுக்கு என்று கேள்வியோடு சிவா அவளை பார்க்க, கையை விட்டு அவன் சட்டை பையில் இருந்த செல் போனை எடுத்து பேட்டரியை உருவி கழட்டி வைத்தாள். 

"இனிமே உங்களுக்கு யாரோட காலும் வராது."



No comments:

Post a Comment