Tuesday, August 25, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 1

அது ஒரு ஜனவரி மாதத்தின் மாலை பொழுது. சூர்யன் தன் கோபத்தை குறைத்து கொண்டு, தூங்க போகலாமா என்று யோசித்து கொண்டே மேற்கில் மறைந்து கொண்டு இருந்தான். 

இடம் சேலம் மாநகரம். சிவராம கிருஷ்ணன் தனது ஹீரோ ஹோண்டா பைக்கில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டு இருந்தவனை அவனது செல் போன் அழைக்க, வண்டியை ஓரம கட்டி விட்டு பேச ஆரம்பித்தான்.

அவன் போன் பேசி முடிப்பதற்குள் அவனை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.சிவராம கிருஷ்ணன் - ஒரு சிறிய அறிமுகம்

பெயர்சிவராம கிருஷ்ணன்.வயது: 26. படிப்பு-திருச்சி பிஷப் ஹீபரில் பி காம், பாரதிதாசன் பல்கலை கழக MBA

நிறம் மாநிறம், உயரம ஐந்தடி ஒன்பது அங்குலம். எடை எழுபத்து ஐந்து கிலோ. தினமும் ஜிம செய்து ஏற்றிய உடல்.

கொஞ்சம் கோவக்காரன். பாசக்காரன். அன்புக்காக தன் உயிரையும் கொடுப்பவன்.

அப்பா கந்தசாமிகடந்த இரண்டு வருடங்களாக உடல்நலம் சரி இல்லாமல் படுத்த படுக்கை. குறிப்பாக சொன்னால் அவர் மனைவி பாக்ய லக்ஷ்மி மறைந்த பிறகு.

சொந்த ஊர் சேலம். இப்போதைக்கு அப்பாவுக்கு இருக்கும் "சுபம் சூப்பர் மார்க்கெட்"டின் பத்து கிளைகளை கவனித்து கொள்வது.

ஒரே அக்கா வசந்தி. அத்தான் கோவர்த்தன். அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை. ப்ரியா. வயது பதினாறு. பதினோராவது படித்து வருகிறாள்.

அக்காவுக்கு தனது தந்தையின் சொத்து வெளியே போககூடாது என்ற ஆசை. வயசு வித்யாசம் அதிகமாக இருந்தாலும் தனது பெண்ணைதம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் சொத்து வெளியே போகாது என்ற எண்ணம். சிவாக்கு அதில் விருப்பம் இல்லை.

'உன் நண்பர்களை பற்றி சொல், உன்னை பற்றி சொல்லி விடலாம்' என்று பொன் மொழி உண்டு. அவனுக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் தீபக், சந்தோஷ். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பார்கள். பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து அவன் நெருங்கிய நண்பர்கள்.

அவன் பிஷப் ஹீபரில் படிக்க போகிறான் என்பதற்காக அவர்கள் பெற்றோர்களிடம் சண்டை போட்டு அவனுடன் கல்லூரியில் சேர்ந்தனர்.

பி காம் படித்த பின் சந்தோஷ் தனது மாமன் பெண்ணை கல்யாணம் செய்து விட்டு அவரின் மாளிகை கடையை கவனித்து கொள்ளும் வேலை. வீட்டோடு மாப்பிள்ளை.

தீபக் வேலை பார்ப்பது பேரரசு கலை கல்லூரியில், அக்கௌன்டன்ட் உத்தியோகம். அவன் தங்கை சாந்தி படிப்பது அதே காலேஜில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டில்.

இனி சிவராம கிருஷ்ணனை நாம் 'சிவா' என்றே அழைப்போம். இப்போது சிவா போனில் பேசுவதை நாம் கொஞ்சம் ஒட்டு கேட்போம்


"சொல்லுடா சந்தோஷ்,"

"தியேட்டர் வந்திட்டியா."

"என்ன தீபக் இன்னும் வரலையா"

"டிக்கெட் எடுத்துட்டியா"

"சரி நீ வெயிட் பண்ணு. இன்னும் அஞ்சு நிமிஷத்ல அங்கே வந்துடுறேன்."

சிவா புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த அந்த தியேட்டர் காம்ப்ளெக்ஸ் வந்து சேர்ந்த போது மணி ஆறு பத்து.

தியேட்டர்வாசலில் சந்தோஷ் நின்று கொண்டு இருக்க அவனை பார்த்து கை அசைத்தான். 

"வா சிவா. நீ வந்திட்ட, தீபக்தான் இன்னும் வரலை"

"படம் ஆரம்பிக்க இன்னும் இருவது நிமிஷம் இருக்கு அவன் வந்துடுவான்."

தொட்டி ஜெயா படத்துக்கு தன் கையில் மூன்று டிக்கெட் வைத்து கொண்டு இருந்த சந்தோஷை பார்த்து"ஏண்டா வேற படம் கிடைக்கலையா" என்று கேட்க, 

"கோவப்படாதே சிவா, மத்த படம் எல்லாம் பழைய படம் அதுனாலதான் இதுக்கு டிக்கெட் வாங்கினேன்".

சரி போஸ்டரை வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்து வெளியே சென்று வேடிக்கை பார்த்தபடி இருந்த சிவா திடீரென்று ஆச்சர்யமானான்.
தியேட்டருக்குள் நுழைந்த சாந்தி அவளுடன் கூட வந்த பத்துக்கும் மேற்பட்ட அவளின் தோழிகளை பார்த்து

"சாந்தி என்னம்மா சினிமாவுக்கு வந்துருக்க, அண்ணனுக்கு தெரியுமா?" என்று கேட்டபடி அவளை நெருங்கி வந்தான்.

"சிவா அண்ணா, தீபக் அண்ணாகிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இவங்க எல்லாம் என் கிளாஸ்மேட் இன்னைக்கு தான் செமஸ்டர் முடிஞ்சுது.அதுனால அண்ணன் கிட்ட சொல்லிட்டு இங்கே வந்துட்டோம். அண்ணனும் உங்ககூட இந்த சினிமா வரதா சொல்லி இருந்துச்சு. திரும்பி போறப்ப எங்களை ஆட்டோல ஏத்தி விட்டு போங்கண்ணா", என்று உரிமையுடன் கேட்க

"சரி தங்கச்சி, கட்டாயம்" என்று சொல்லி விட்டு திரும்ப, தீபக்கும் வந்து சேர்ந்தான்.

சாந்தி சிவா, சந்தோஷ், தீபக் மூவருக்கும் பை சொல்லி விட்டு தியேட்டருக்குள் நுழைய, நண்பர்கள் மூவரும் தம் அடித்து விட்டு படம் போடுவதற்கான மணி ஒலித்த உடன் உள்ளே சென்றனர்.

படத்தில் சிம்பு வரும் இடத்தில எல்லாம் ஏதோ கமெண்ட் அடித்தபடி சிவா சிரிக்க, நண்பர்கள் இருவரும் அவனோடு ஆமோதித்து சிரித்தனர். 

படம் இடைவேளை விட, வெளியே வந்த நண்பர்கள் பாத்ரூம் போய் விட்டு வந்து தியேட்டர் கான்டீன் அருகே நின்று என்ன வாங்கலாம் என்று யோசித்த போது, சாந்தி அவள் நண்பர்களுடன் வந்தாள்.


"என்ன சாந்தி, பாப் கான், பப்ஸ் ஏதாவது வேணுமா?" என்று கேட்டபடி தீபக் தன் அன்பு தங்கைக்கும் அவள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுக்க, எல்லோரும் சாப்பிட்டு விட்டு திரும்ப சாந்தி மட்டும் பெண்கள் டாய்லெட் சென்றாள். 

நண்பர்கள் இருவரும் படம் போட போகிறார்கள் என்று தியேட்டருக்குள் நுழைய, சிவா மட்டும் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட மனம் இல்லாமல், கடைசி வரை உறிஞ்சி கொண்டு இருந்தான். சடக்கென்று திரும்பி பார்த்த அவன் மிரண்டு போனான்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சாந்தி ஓடி கொண்டு வர அவள் கண்களில் கண்ணீர். பதறி போனான் சிவா. "என்ன ஆச்சு சாந்தி"என்று கேட்க, "சிவா அண்ணா பாத்ரூம்ல யாரோ காமெரா வச்சு இருக்காங்கன்னு சந்தேகப்படுகிறேன். எனக்கு பயமா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து விசாரிக்கிறீகளா?" என்று அவன் தோளில் சாய்ந்து அழுக, உடனே அங்கே இருந்த கான்டீன் கடைக்காரனிடம்"தியேட்டர் மேனஜர் ரூம் எங்க இருக்கு" என்று கோபத்துடன் கேட்க, அவன் கையை காண்பித்த திசையில் சாந்தியை அழைத்து கொண்டு வேகமாக சென்றான்.

அறையில் இருந்த மேனஜரை அழைக்க, அவர் சிவாவை பார்த்து "என்ன விஷயம்" என்று விசாரித்தார்."என் கூட வாங்க அவசரம்"என்று அவரை அழைக்க அவரோ 'எதுக்காக இப்போ கூப்பிடுற' என்பது போல் பார்த்தார்.

கோபம் தலைக்கு ஏற"யோவ் உன்னைதான்யா, இப்போ வர்றியா இல்லை போலிசை கூப்பிடட்டுமா?" என்று குரல் உயர்த்த, அருகில் இருந்த சாந்தியை பார்த்த உடன் ஏதோ பெண்கள் சம்பந்தபட்ட பிரச்சனை என்று அவருக்கு புரிந்தது."சார் கோபப்படாதிங்க, இதோ வரேன்" என்று உடனே கிளம்பி சிவா, சாந்தியை தொடர, அதற்குள் உள்ளே சென்ற தீபக் சந்தோஷ் இருவரும் திரும்பி வந்து பார்த்தனர்.

சிவா, அவனை தொடர்ந்து கண் கலங்கியபடி சாந்தி, பின்னாலே ஒருவர் வர, தீபக் பதட்டமானான். "என்னடா சிவா, என்ன ஆச்சு சாந்தி எதுக்கு அழுகுற" என்று கேட்டபடி பின் தொடர, அவனை பார்த்து பேசாமல் தொடர்ந்து வருமாறு கண் ஜாடை செய்தான் சிவா.

மேனஜர்"சார் இப்போவாது சொல்லுங்க என்ன பிரச்சனை"ன்னு என்று கேட்டபடி வர, அதற்குள் பெண்கள் பாத்ரூம் சென்று கதவை திறந்து க்ளோஸ் செட் அருகில் சாந்தி காண்பிக்க, அந்த சிறிய கருப்பு புள்ளி போல் இருந்த இடத்தை கூர்ந்து கவனித்தான். 

பின்னால் வந்த மேனஜரும் தனது பங்குக்கு அதை என்ன என்று ஆராய்ச்சி செய்ய அவர்முகம் வெளிறி போனது."சார் வந்து" என்று அவர் இழுக்க, கோபத்தின் உச்சகட்டத்துக்கு போனான் சிவா, 

"இங்க பாருங்க மேனஜர், நீங்க உடனே யாரு இதை செஞ்சதுன்னு கண்டு பிடிச்சு என்கிட்ட ஒப்படைங்க, இல்லைனா நான் என்னோட மெதட்ல விசாரிக்க வேண்டியது இருக்கும்" என்று சொல்லி விட்டு, "டேய் தீபக், சந்தோஷ் இங்க வாங்க" என்று அழைத்து நடந்ததை விளக்க இருவரும் முகமும் இருண்டு போனது.

அருகில் இருந்த சாந்தி கண்ணில் நீர் பெருக நிற்க, தீபக் அவளை அழைத்து அருகில் நிறுத்தி கொண்டான்.

அதற்குள் தோழிகள் பதினோரு பேரும் தியேட்டரில் இருந்து சாந்தியை காணாமல் தேடி வெளியே வந்து, சாந்திக்கு அருகில் நின்று கொண்டனர்.

மேனஜர் அதற்குள் தன் ஊழியர்கள் அனைவரையும் அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். சிவா தன் பொறுமை இழந்து கத்த ஆரம்பித்தான். 




இப்படி பொறுமையா விசாரிச்சா கண்டு பிடிக்க முடியாது. தீபக் நீ முதல்ல அவசர போலிஸ் 100 போடு" என்று சொல்ல, அவன் சொன்ன யோசனைக்கு தலை ஆட்டி போன் போட்டான்.

அதை கேட்ட மேனஜர் "சார் அவசரப்படாதிங்க. நான் யார் செஞ்சதுன்னு உடனே கண்டு பிடிக்கிறேன்" என்று சொல்ல, தீபக் சிவாவை கேள்வி குறியுடன் பார்த்தான்.

"அதல்லாம் ஒத்துக்க முடியாது. தீபக் நீ முதல்ல போலிசை கூப்பிடு" என்று சொல்ல, மேனஜருக்கு 'இனி நாம் சொன்னால் கேட்க மாட்டான்' என்று தெரிந்ததால் தனது விசாரணையை துரிதப்படுத்தினார்.

சந்தேகம் வந்து கான்டீன் உள்ளே சென்று பரிசோதிக்க அங்கே கம்ப்யூட்டர் உடன் காமெரா கனெக்சன் இருக்க அதிர்ந்து போனார்.

பின்னால் வந்த சிவா, உள்ளே இருந்த கம்ப்யூட்டரை பரிசோதித்து அருகே இருந்த இரண்டு CD களை போட்டு பார்க்க மனம் பதற ஆரம்பித்தது. 

"எவண்டா பண்ணினது" என்று சீற்றத்துடன் கத்த, கான்டீன் உள்ளே இருந்த நான்கு பேரில் ஒருவன் வெளிய ஓட முயல, அவனை துரத்தி சென்று கீழே தள்ளி விட்டு அவன் மேல் உட்கார்ந்து அவனை நெஞ்சில் குத்தி, கன்னத்தில் பளார் பளார்ரென்று அறைய ஆரம்பித்தான்.

"ஏண்டா இப்படி செஞ்ச, உனக்கு அக்கா, தங்கச்சி இருந்தா இப்படிதான் செய்வியா. உன் அம்மாவை இப்படி படம் எடுக்க வேண்டியதுதான", என்று அவனை போட்டு புரட்டி எடுக்க தொடங்கினான். தீபக், சந்தோஷ் அவனை பிடித்து இழுக்க சிவா திமிறி கொண்டு அவனை அடித்த அடியில் சட்டை கிழிந்து போனது.

அதற்குள் போலிஸ் உள்ளே வந்து விட, தியேட்டரில் சினிமா நிறுத்தபட்டதால் வெளியில் வந்த கூட்டமும் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தது. 

இன்ஸ்பெக்டர் ராமகோபாலன் சிவாவை விலக்கி, கீழே கிடந்தவனை காப்பாற்றினார். 

சாந்தி அருகில் இருந்த தோழி கேட்டாள். "என்னடி அந்த தியேட்டர்காரனைபுரட்டி அடிக்கிறாரே அவர் உன் அண்ணாதானே."

"இல்லைடி அவர் என் அண்ணாவோட பிரெண்ட். சிவா. அவர் பக்கத்தில இருக்கிற ஆள்தான் என் அண்ணா தீபக் "

கேள்வி கேட்ட தோழி வாயடைத்து போனாள், "என்னது உன் அண்ணாவோட பிரெண்டா. உன் அண்ணாவே பேசாம இருக்கிறாரு இவர் எதுக்கு இப்படி கோபப்படுராறு".

"எனக்கு அஞ்சு வயசில இருந்து தெரியும். என் அண்ணா தீபக்கை விட, இந்த சிவா அண்ணாவுக்கு என்மேல பாசம் ஜாஸ்திடி. அது மட்டும் இல்லை, நான் என்ன கேட்க நினைச்சாலும் அவர் கிட்ட தான் கேட்பேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்."

நீ கொடுத்து வச்சவ. உனக்கு ஒண்னுக்கு ரெண்டு அண்ணா. உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. சிவா மாதிரி இப்படி ஒரு அண்ணா எனக்கு இல்லையே" என்று ஏக்கத்துடன் தெரிவித்தாள் தோழி.

ராமகோபாலன் தனது விசாரணையை முடித்து இருக்க, அந்த தியேட்டர் ஊழியன் சுரேசை கைது செய்து சிவாவிடம், "சார் மேற்கொண்டு விசாரனைல எதாவது தேவைனா நீங்களோ இல்லை உங்க தங்கையோ வந்து பேச வேண்டி இருக்கும்" என்று சொல்ல "சரி" என்று தலை அசைத்தான் சிவா.

அதற்கு மேல் திரைபடம் பார்க்க விருப்பம் இல்லாததால் சிவா, சந்தோஷ், தீபக் மூவரும் சாந்தி அவள் தோழிகள் அனைவரையும் ஆட்டோவில் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.





No comments:

Post a Comment