Monday, August 31, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 13



"உன்னோட வாழ்க்கைல நடந்த எல்லா தவறுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீ சொன்னதை கேட்ட பின்னே எனக்கு தூக்கம் போச்சு. உன்னோட வாழ்கையை சீராக்க வேண்டியது என் பொறுப்பு. நான் உனக்கு என்ன உதவி செய்யணும்."

அனிதா பதில் பேசாமல் இருந்ததால் துணுக்குற்ற சிவா, வண்டியை ஓரமாக நிறுத்தி அவள் தாடையை தூக்கி முகம் பார்க்க அதிர்ந்து போனான்.

அனிதா கண்களில் இருந்து வழிந்த அந்த கண்ணீர் கன்னங்கள் வழியாக வழிந்து அவள் மார்பில் இறங்க, சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

"அனிதா, என்ன ஆச்சு."

"இன்னும் என்ன ஆகணும். உங்களோட பேசினா என் மனசு என் கிட்ட இருக்க மாட்டேங்கிறது. உங்க கூடவே பேசிகிட்ட்டே இருக்கணும் போல இருக்கு. என் மனசை என்னால கட்டுபடுத்த முடியலை."

"முன்னாலயாவது நீங்க இல்லை அப்படின்னு நினைச்சு என் மனசை ஆத்திக்குவேன். இப்போ நீங்க இவ்வளவு பக்கத்தில இருக்கிறது எனக்கு ஒரு விதத்தில மகிழ்ச்சியா இருக்கு, உங்க தோளில் சாய்ந்து அழ வேண்டும் போல இருக்கு.ஆனா இன்னொரு விதத்தில பார்த்தா எனக்கு பயமா இருக்கு. அதனால தான் உங்களை சந்திப்பதை தவிர்த்தேன்."

"

அனிதா
" என்று சிவா அழைக்க அவனை பார்க்க அவன் கண்களில் தெரிந்தது காதலா இல்லை அனுதாபமா என்று தெரியவில்லை.

"சாரி சிவா நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு இறங்க, சிவா அப்படியே சிந்தித்தபடி உட்கார்ந்து இருந்தான்.

சிவாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அனிதாவின் காதல் தன்னை நாளுக்கு நாள் அவள் பக்கம் இழுத்து கொண்டே செல்கிறது என்று.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் அனிதாவிடம் இருந்து போன் வந்தது. சிவா எடுத்து பேசினான்.

"சொல்லு அனிதா"

"சிவா, நாங்க சேலம்ல என்னோட கல்யாணத்துக்கு வாங்கின கடனை கேட்டுட்டு அந்த கந்து வட்டிகாரன் வெள்ளைசாமி இன்னைக்கு காலைல வீட்டுக்கு வந்துட்டான். நான் ஸ்கூலுக்கு வந்ததால அம்மாவை மிரட்டிட்டு போய் இருக்கான். சாயந்தரம் வரேன்னு சொல்லி இருக்கான். நீங்க கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா" என்று கேட்க, சிவா யோசித்து விட்டு "சரி அனிதா நான் வரேன்" என்றான்.

"சிவா நீங்க மதியம் வந்தால் நல்லது. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு."

"சரி அனிதா நீ கவலை படாதே."

அனிதா பயப்படுவதற்கு காரணம் இருந்தது. வீட்டில் இருப்பது இரண்டு பெண்கள் மட்டுமே. அவனோ கந்து வட்டிக்காரன். அடியாட்கள் வேறு இருப்பார்கள். கொஞ்சம் இதை கவனமாக கையாள வேண்டும் என்று முடிவு செய்தான்.

மதியம் இரண்டு மணி அளவில் அனிதா வீட்டுக்கு செல்ல, வாசலில் அவனுக்காக காத்து இருந்த அனிதா முகத்தில் சந்தோஷம்.உள்ளே அவனை உட்கார சொல்லி விட்டு "அம்மா" என்று கூப்பிட, அனிதா அம்மா பக்கத்துக்கு அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.

"வாங்க தம்பி" முகத்தில் பதட்டம் தெரிந்தது.


"கவலைப்படாதிங்க. நான் வந்துட்டேன்ல. என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லுங்க."

"நாலு வருஷத்துக்கு முன்னால அனிதா கல்யாணத்துக்கு அஞ்சு லட்சம் கடன் வாங்கினேன். வீட்டை விற்று மீதி இருந்த மூணு லட்ச ரூபாவை கட்டி விட்டேன். இன்னும் ரெண்டு லட்சம் கட்ட வேண்டியது உள்ளது. மாசம் வட்டி கட்ட முடியாததால, அதுவும் சேர்த்து இப்போ அஞ்சு லட்சத்துக்கு மேல வந்துடுச்சு."

"நாங்க எற்காடில் இருக்கிற விஷயத்தை தெரிஞ்சுட்டு இங்கே வந்துட்டான். வந்தவன் கன்னாபின்னான்னு பேசினான். அதனால எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை. அனிதாவை கூப்பிட்டு சொன்னேன். அவள் உங்களை கூப்பிட்டா."

"நீங்க கவலைபடாதிங்க. நான் பாத்துக்கிறேன்."

அனிதா கொடுத்த சில கதை புத்தகங்களை படித்து கொண்டு இருந்த, சிவா நாலு மணி அளவில் வீட்டு வாசலில் ஏதோ வண்டி நிற்கும் சத்தம் கேட்டு தனது சேரில் இருந்து எழுந்தான். கதவை தட்டும் ஓசை.

சிவா அனிதாவை கை காண்பித்து ஒதுங்க சொல்லி விட்டு தானே கதவை திறந்தான்.

வாசலில் இருந்தவன் சிவாவை பார்த்து 'யார் இவன்' என்று ஆச்சர்யபட்டான்.

"நீ தான் வெள்ளை சாமியா" என்று சிவா கேட்க, ஆறடி உயரமும் முரட்டு தோற்றத்துடன் இருந்த வெள்ளை சாமி 

"ஆமாம். நான் தான். நீ யாருயா. இந்த அம்மாவுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான. நீ யாரு இவங்களோட சொந்தமா" என்று கேட்க "இல்லை. எனக்கு வேண்டப்பட்டவங்க."

"வேண்டப்பட்டவங்களா" என்று இழுத்து பேசி, "டேய் இங்கே பாருடா. இந்த அம்மாவுக்கு வேண்டியவனா" என்று கை கொட்டி சிரிக்க, அவனோடு வந்த அவனது ஐந்து அடியாட்களும் கை கொட்டி சிரித்தார்கள். குரலை தாழ்த்தி, "அந்த அம்மாவுக்கு மட்டும் தானா இல்லை அந்த பொண்ணுக்குமா"

அவன் வார்த்தைகளில் இருந்த கிண்டல் புரிந்த சிவா, கோபம் தலைக்கு ஏற, கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கி கொண்டான். 

"வெள்ளை சாமி உனக்கு என்ன வேண்டும்".

"எனக்கு என்னோட அஞ்சு லட்ச ரூபா பணம் வேணும்.அதுக்கு வழியை சொல்லு".

உள்ளே இருந்து வந்த அனிதா அம்மா "என்ன வெள்ளை சாமி, நாங்க எங்க ஓடிட போறேம். கொஞ்ச கொஞ்சமா கட்டிடுறோம்."

வெள்ளை சாமி சிரிக்க ஆரம்பித்தான்"இங்க பாருமா, உங்க பொண்ணு பார்க்கிற டீச்சர் வேலைல இருந்து சம்பாதிச்சு கட்டனும்னா இப்போதைக்கு கட்ட முடியாது. ஒண்ணு செய். உன்னோட பொண்ணை எனக்கு கட்டி வச்சுடு, உன் கடனை தள்ளுபடி பண்ணுறேன்."

சிவாவுக்கு அதற்க்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை"வெள்ளை சாமி உனக்கு பணம் தானே வேணும். நாளைக்கு இதே இடத்துக்கு உன்னோட பத்திரத்தோட வா. நாலு பெரிய மனுசங்க முன்னால வச்சு உன்னோட கடனை அடைக்கிறோம்."




வெள்ளை சாமி முகம் மாறியது. "இங்கே பாருப்பா. நீ சொன்னதால போறேன். நாளைக்கு திரும்பி வருவேன் மொத்த பணம் அஞ்சு லட்சத்து நாற்பதாயிரம் எடுத்து வைக்கணும்" சொல்லி விட்டு தனது அடியாட்களுடன்சுமோ காரில் சென்று விட்டான்.

அதற்குள் செல்போன் எடுத்து தனது அக்கௌன்டன்ட் உடன் பேசினான் சிவா.

உள்ளே இருந்து வெளியே வந்த அனிதாவுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

போன் பேசி விட்டு சிவா, அனிதா அவள் அம்மா இருவரையும் உள்ளே அழைத்து பேச ஆரம்பித்தான்.

"இங்கே பாருங்க, வெள்ளைசாமியை பார்த்தாமோசமான ஆளு மாதிரி தெரியுது. விட்டா என்ன வேணா பண்ணுவான்னு நினைக்கிறேன்.நான் என்னோட ஆபீஸ்ல பேசி பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு காலைல பணத்தோட வரேன்."

அனிதா சிவாவை பார்த்து சிவா, "நீங்க எதுக்கு இப்போ எங்களுக்காககஷ்டப்பட்டு அடைக்கனும். நாங்க கொஞ்சம் கொஞ்சமா அடைக்கலாம்னு நினைக்கிறோம்."

"புரியாம பேசாத அனிதா. உனக்கு என்கிட்ட இருந்து வாங்க கஷ்டமா இருந்தா, கடனா நினைச்சுக்கோ. உன்னால எப்போ முடியுமோ அப்போ கொடு. சரியா"என்று கேட்க

அனிதா சிவாவின் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்து, "சரி சிவா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். அம்மா நீ என்னமா சொல்றிங்க."

அனிதா அம்மா, "நன்றி சிவா தம்பி, சரியான நேரத்தில வந்து எங்க மானத்தை காப்பாதிட்டிங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை" கை கூப்ப, 

"என்னம்மா உங்க வயசு என்ன, எனக்கு போய் எதுக்கு நன்றி சொல்லிட்டு. உங்களுக்கு உதவி செய்ய முடியாத பணம் இருந்து எனக்கு என்ன லாபம். அனிதா, நான் நாளைக்கு பத்திரம் கொண்டு வரேன். சைன் பண்ணனும் சரியா" என்று கேட்க, "சரி" என்று தலை அசைத்தாள்.

அடுத்த நாள் சொன்னபடி பணத்தை சிவா கொடுக்க, பெரிய மனிதர்கள் நால்வரின் முன்னிலையில் வெள்ளைச்சாமி பத்திரத்தை கிழித்து போட்டான். அனிதா, அவள் அம்மா இருவர் முகத்திலும் நிம்மதி. 

ஆனால் அவன் முகத்தில் இருந்த குரூரத்தை கண்ட சிவாவுக்கு ஏதோ விரும்பதகாத ஒன்று நடக்க போவதாக மனசாட்சி கூறியது.


அனிதாவுக்கு அப்போதான் நினைவுக்கு வந்தது. 

"சிவா நீங்க பத்திரத்தை கொண்டு வந்து இருக்கிங்களா? "

பதிலுக்கு சிரித்தான் சிவா. "இல்லை அனிதா நான் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்".
அனிதாவுக்கு முகம் மாறியது. "இல்லைனா நான் உங்ககிட்ட பைசா வாங்க மாட்டேன்"

சிவா வேறு வழி இல்லாமல் தன் பாக்கில் வைத்து இருந்த இருவது ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத்தை எடுத்து அவளிடம் கொடுக்க அவள் பத்திரத்தில் கையெழுத்திட்டு சிவாவிடம் கொடுத்தாள்.

"சிவா உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க என்ன வேணாம் பில் அப் பண்ணிக்கலாம்."

சிவா அனிதாவை கிண்டல் செய்தான். "அனிதா நீ பாட்டுக்கு பிளாங்க் பத்திரத்தில கையெழுத்து போட்டுட்ட, பின்னால வருத்தபடபோறே" என்று சொல்ல, 

"பரவாயில்லை" என்றாள் அனிதா.

அனிதா அம்மாவுக்கு திருப்தி. 'அப்பாடி பிரச்சனை தீர்ந்தது. சிவா தம்பிக்கு எப்போ வேண்டுமானாலும் திருப்பி கொடுக்கலாம்.ஒண்ணும் சொல்ல மாட்டார்'.
அடுத்த சில நாட்கள் கழித்துஅனிதா ஸ்கூலுக்கு கிளம்பிய பிறகு வீட்டுக்கு வந்து வெள்ளை சாமி பேசினான். "இங்க பாருங்க.எவ்வளவுநாள்தான் உங்க பொண்ணை தனியா இருக்க சொல்ல போறீங்க. நீங்க வாழ போறது சில நாட்கள் தான். நீங்க போனதுக்கு பிறகு உங்க பொண்ணோட நிலைமைய நினச்சு பாருங்க."

அனிதா அம்மா முகம் வாடி போனது. அவன் சொன்னது மனதுக்கு பிடிக்காத போதும் உண்மைதான் என்பதை உணர்ந்தாள். இன்று அனிதா வீட்டுக்கு வந்தவுடன் சிவாவை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அவள் யோசிப்பதை புரிந்து கொண்ட வெள்ளை சாமி, சரிங்க நான் கிளம்புறேன் என்று விடை பெற்றான்.

ஸ்கூல் முடிந்தவுடன் வழக்கம் போல் அனிதா சிவா வீட்டுக்கு டியுசன் விஷயமாக சென்றாள். டியுசன் முடிந்தவுடன் சிவா அனிதாவை அழைத்தான்."அனிதா உன்கிட்டகொஞ்சம் தனியா பேசணும்."

"சொல்லுங்க சிவா."

"இன்னும் எவ்வளவு நாள் தான் தனியா இருப்பே. நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே."

"ஏன் நீங்களும் ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே."

"இல்லை அனிதா.வர்ற போற பொண்ணு பிரபாவை எந்த அளவுக்கு பார்துக்குவான்னு தெரியலை. அது மட்டும் இல்லை. வீணாவோட இடத்தில இன்னொரு பெண்ணை நினைத்து பார்க்க என்னால முடியலை"


அனிதா முகம் வாடி போனது.

"நீங்க கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு காரணம் இருக்கிற மாதிரி எனக்கும் காரணம் இருக்கு. தயவு செய்து என் கல்யாண பேச்சை மீண்டும் எடுக்காதிங்க. அப்படி எடுத்தா, நான் உங்கவீட்டுக்கு வருவதை நிப்பாட்டி விடுவேன்."

சிவாவுக்கு மனசு திக்கென்று இருந்தது. அவனுக்கு அனிதாவை தினமும் பார்க்காவிட்டால் மனது தவிக்க ஆரம்பித்து விடுகிறது. 'ஒரு சமயம் அவளுக்கு உடல்நலம் சரி இல்லாமல் ஒரு நாள் டியுசன் வரவில்லை என்பதற்காக அவளை அவள் வீட்டிற்கு சென்று சந்தித்து வந்தது' நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு திரும்பிய அனிதாவை அவள் அம்மா வெள்ளைசாமி வந்து பேசிய விபரத்தை சொல்ல, "அம்மா அவன் சொல்வதை நம்பாதிங்க. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத மாதிரி. இப்போ அவன் எதுக்கு இந்த மாதிரி பேசிட்டு போறான்."

"அனிதா அவன் சொன்னதில உண்மை இருக்கா சொல்லு. சீக்கிரம் சிவா கிட்ட பேசும்மா"

"அம்மா நீ நல்லாதான இருக்க. எனக்கு சிவா கிட்ட பேசும்போது கேட்கணும்னு தோணும். ஆனால் இன்னைக்கு பேசினதை வச்சு பார்த்தாஅவர் மனசில இன்னும் வீணாதான் இருக்கா. நான் இல்லை அம்மா" விசும்பி அழுதாள்.

அனிதா அம்மாவுக்கு மனம் சங்கடப்பட்டு போனது. 'இதற்கு என்னதான் தீர்வு'

அடுத்த சில நாட்கள் திரும்ப வந்து வெள்ளைசாமி பேசிவிட்டு போக, அனிதா அம்மா மனது அலைபாய ஆரம்பித்தது.

ஒரு தடவை வெள்ளைசாமி 'எனக்கு அனிதாவை கல்யாணம் செய்து வையுங்க' என்று சொல்ல, கோபம் தலைக்கு ஏற, 'நான் உயிரோட இருக்கும் வரை உனக்கு என் பொண்ணை கட்டி தர மாட்டேன்' என்று சத்தம் போட, 'நீ உயிரோட இருந்தா தானே' என்று மனதுக்குள் கருவினான் வெள்ளை சாமி.

அடுத்த நாள் காய்கறி வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்ப வந்துபோது அனிதா அம்மாவை ஒரு பழைய மண் லாரி பிரேக் பிடிக்காமல் இடித்து தள்ள தலை காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

டிரைவரை பிடித்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போது அது வெள்ளைசாமி செய்த சதி என்று தெரிய வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த மூன்றாவது நாள் அனிதா அம்மா மரணத்தை தழுவினார்.

அம்மா இறந்தபோது அனிதா அழுததை கண்டால் எந்த கல்மனமும் கரைந்து விடும்.அம்மா இறந்த காரியங்கள் முடிய, அந்த வீட்டில் இருந்தால் அம்மா ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் என்று தனது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் சிவா.

தினமும் தன் அம்மாவை நினைத்து அனிதா அழஅவளின் அழுகையை பார்த்து குழந்தை பிரபா அழ, குழந்தைக்காக தனது அழுகையை குறைத்து கொண்டாள் அனிதா. 

'வேலைக்கு போனால் மன மாற்றத்துக்கு வழிவகுக்கும்' என்று சிவா சொல்ல, தினமும் ஸ்கூல் சென்று வந்தாள்.

இதற்கு இடையில்வெள்ளைசாமியை போலிஸ் கைது செய்தபோதும் பெயிலில் வெளி வந்து விட்டான் என்ற செய்தி சிவாவுக்கு தெரிய வந்தது.


அம்மா இறந்து ஒரு மாதம் கழிந்த ஒரு நாளில் அனிதா வீட்டுக்கு வந்து பிரபாவுடன் பேசி கொண்டு இருந்தாள். 

"மிஸ் நான் ஒண்ணு கேட்கலாமா. தப்பா நினைக்க மாட்டிங்களே?"

"சொல்லு கண்ணம்மா."

"நீங்க எனக்கு குளிக்க வைக்கிறிங்க, சாப்பாடு கொடுக்குரிங்க, படிப்பு சொல்லி தரிங்க, ராத்திரி கதை சொல்லி தூங்க வைக்கிறிங்க.என்னோட பிரெண்ட்ஸ்கிட்ட பேசினப்போ, இதல்லாம் அம்மா செய்றதுன்னு சொல்றாங்க. அப்படின்னாநான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா"

பிரபாவை கட்டி அணைத்து கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தாள் அனிதா."கண்மணி, நீ என்னை அம்மான்னு கூப்பிட நான் புண்ணியம் பண்ணி இருக்கணும். உனக்கு என்ன தோணுதோ அந்த மாதிரி கூப்பிடு" என்று சொல்ல, 

அடுத்த அறையில் இருந்த சிவா காதில் இந்த வார்த்தைகள் விழ, அவனை அறியாமல் கண் கலங்கினான். இன்னும் இந்த பூமியில் தாய்மை உள்ளம சாகவில்லை.

வாசலில் யாரோ சத்தம் போடும் ஓசை கேட்க வெளியே வந்து பார்த்தான். 

அவனை தொடர்ந்து பெரிய நாயகி, அனிதா, குழந்தை பிரபாவும் வர, வாசலில் வெள்ளை சாமி சத்தம் போட்டு கொண்டு இருந்தான்.

"என்ன வெள்ளை சாமி என்ன பிரச்சனை. ஏற்கனவே அனிதா அம்மாவை கொலை பண்ணிட்ட. இப்போ எந்த முகத்தோடு இங்கே வந்தே".
"சிவா, நீ முதல்ல வெட்டி பேச்சை நிறுத்து.கொலை கேசு கோர்ட்ல நடக்குது. அதை அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு. நீயோ கல்யாணம் ஆகி மனைவியை இழந்தவன். அவளோ புருசனை உதறிகிட்டு வந்துட்டா. அவ அம்மா செத்து போனா ஆறுதல் சொல்லி விட்டு போவியா. அதை விட்டு எதுக்கு அவளை உன் கூட கூட்டி வச்சு இருக்க".
"வெள்ளை சாமி இது உனக்கு தேவை இல்லாத பேச்சு. ஏற்கனவே அம்மா இறந்த துக்கதில அனிதா மனசு உடைஞ்சு போய் இருக்கா. நீ பாட்டுக்கு ஏதேதோ வாய்க்கு வந்ததைபேசாதே" என்று சொல்ல,வெள்ளை சாமி முகத்தில் கிண்டல் பாவனை.

அதற்குள் பல பேர் கூட, வெள்ளைச்சாமிக்கு கொண்டாட்டம் ஆனது."இங்கே பாரு சிவா, உனக்கு அனிதா வை பிடிச்சு இருக்கு அவளை வைப்பாட்டியா வச்சு இருக்கேன்னு சொல்லு நான் இப்பவே கிளம்பி போயிடுறேன். அதை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்க.".
சிவா முகம் சிவந்தது. "என்னடா பேசிகிட்டே போற. ஒரு பொண்ணு தனியா இருந்தா இப்படியா அசிங்கமா பேசுறது".
அனிதா அழ ஆரம்பிக்க, சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
வேகமாக ஓடி சென்று வெள்ளைசாமியை பளாரென்று அறைந்தான். அவன் யோசிப்பதற்கு முன்னே, வெள்ளைசாமியை கீழே தள்ளி அவன் மீது ஏறி உட்கார்ந்து இரண்டு கன்னங்களிலும் அறைந்து, நெஞ்சில் கையை மடக்கி குத்த ஆரம்பித்தான். 

மூக்கில் கைபட்டு வெள்ளைசாமிக்கு ரத்தம் கொட்ட தொடங்க, அனிதா ஓடி வந்து சிவா கையை பிடித்து, "சிவா ப்ளீஸ் வேணாம் எல்லாரும் பாக்குறாங்க"

 என்று கெஞ்ச ஆரம்பித்தாள். அதற்குள் சில பேர் வெள்ளைசாமியை தூக்கி விட்டு வெளியே அழைத்து சென்றனர்.



No comments:

Post a Comment